Arjuna drove Aswathama away! | Karna-Parva-Section-17 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; அர்ஜுனனால் களத்தைவிட்டு விரட்டப்பட்ட அஸ்வத்தாமன் கர்ணனின் படைக்குள் தஞ்சமடைந்தது; சம்சப்தகர்களை மீண்டும் எதிர்த்துச் சென்ற அர்ஜுனனும், கிருஷ்ணனும்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஆகாயத்தில் ஒரே நட்சத்திரக்கூட்டத்திற்குள் நுழையும் போது சுக்ரனுக்கும், பிருஹஸ்பதிக்கும் இடையில் நடைபெறும் போரைப் போலவே, கோள்களான சுக்ரன் மற்றும் பிருஹஸ்பதியின் காந்திக்கு ஒப்பான அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் அந்தப் போர் நடந்தது.(1) உலகத்தை அச்சுறுத்துபவர்களான அவர்கள், சுடர்மிக்கக் கணைகளையே தங்கள் கதிர்களாகக் கொண்டு ஒருவரையொருவர் பீடித்து, தங்கள் சுற்றுப்பாதையில் இருந்து விலகிய இரு கோள்களைப் போல நின்றனர்.(2) அப்போது அர்ஜுனன், அஸ்வத்தாமனின் புருவ மத்தியைத் தன் கணையொன்றால் ஆழத்துளைத்தான். {நெற்றியில்} அந்தக் கணையுடன் கூடிய துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மேல்நோக்கிய கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(3) அஸ்வத்தாமனின் நூற்றுக்கணக்கான கணைகளால் ஆழமாகப் பீடிக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களும் கூட, யுக முடிவில் கதிர்களுடன் கூடிய இரு சூரியன்களைப் போலவே தெரிந்தனர்.(4)
பிறகு கிருஷ்ணனை மயக்கத்தில் கண்ட அர்ஜுனன், அனைத்துப் பக்கங்களிலும் கணைத்தாரைகளை வெளியிடும் ஓர் ஆயுதத்தை ஏவினான். பிறகு அவன் {அர்ஜுனன்}, இடி, அல்லது நெருப்பு, அல்லது மரணக்கோலுக்கு ஒப்பான எண்ணற்ற கணைகளால் துரோணர் மகனைத் தாக்கினான்.(5)
வலிமையும் சக்தியும் கொண்ட அந்தக் கடுஞ்சாதனையாளன் (அஸ்வத்தாமன்), பெரும் வேகம் கொண்டவையும், தாக்கப்பட்டால் காலனையும் வலியை உணரச் செய்பவையும், நன்கு ஏவப்பட்டவையுமான கணைகளால் கேசவன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரையும் துளைத்தான்.(6) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அந்தக் கணைகளைத் தடுத்த அர்ஜுனன், நல்ல சிறகுகளைக் கொண்ட இரு மடங்கு கணைகளால் அவனை மறைத்து, அந்த முதன்மையான வீரனையும் {அஸ்வத்தாமனையும்}, அவனது குதிரைகள், சாரதி மற்றும் கொடிமரத்தையும் மறைத்துச் சம்சப்தகர்களைத் தாக்கத் தொடங்கினான்.(7)
பார்த்தன் {அர்ஜுனன்}, பின்வாங்காதவர்களான தன் எதிரிகளின் விற்கள், கணைகள், அம்பறாத்தூணிகள், வில்லின் நாண்கயிறுகள், கரங்கள், தோள்கள், இறுக்கப்பிடிக்கப்பட்ட ஆயுதங்கள், குடைகள், கொடிமரங்கள், குதிரைகள், தேர் அச்சுகள், ஆடைகள், மலர்மாலைகள், ஆபரணங்கள், கவசங்கள், அழகிய கேடயங்கள் மற்றும் அழகான தலைகள் ஆகியவற்றை நன்கு ஏவப்பட்ட தன் கணைகளால் பெரும் எண்ணிக்கையில் அறுத்தான்.(8,9) பெரும் கவனத்துடன் போரிடும் வீரர்களால் செலுத்தப்பட்டவையும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டவையுமான தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியன பார்த்தனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான கணைகளால் அழிக்கப்பட்டு, அவற்றைச் செலுத்திய வீரர்களுடனேயே கீழே விழுந்தன.(10) அகன்ற தலை {பல்லம்}, பிறை வடிவ {அர்த்தச்சந்திர}, கத்திமுக {க்ஷுரப்ர} கணைகளால் வெட்டப்பட்டவையும், தாமரை, சூரியன், அல்லது முழு நிலவின் அழகுக்கு ஒப்பானவையும், கிரீடங்கள், ஆரங்கள், மகுடங்கள் ஆகியவற்றால் பிரகாசித்தவையுமான மனிதத் தலைகள் இடைவிடாமல் பூமியில் விழுந்து கொண்டிருந்தன.(11)
அப்போது தானவர்களின் செருக்கைத் தணிப்பவனான அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கொல்ல விரும்பிய கலிங்க, வங்க மற்றும் நிஷாத வீரர்கள், தைத்தியர்களின் பெரும் எதிரியுடைய {இந்திரனுடைய} யானையின் {ஐராவதத்தின்} காந்திக்கு ஒப்பானதை {யானையைச்} செலுத்திக் கொண்டு, அவனை {அர்ஜுனனை} எதிர்த்து வேகமாக விரைந்தனர்[1].(12) பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த யானைகளின் கவசம், முக்கிய அங்கங்கள், துதிக்கைகள், சாரதிகள், கொடிமரங்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை வெட்டியதால், இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரங்களைப் போல அந்த விலங்குகள் கீழே விழுந்தன.(13) அந்த யானைப்படை பிளக்கப்பட்ட போது, மேகக்கூட்டங்களின் திரள்களால் உதயச் சூரியனைத் தடுக்கும் காற்றைப் போலக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான அந்த அர்ஜுனன், புதிதாக உதித்த சூரியனின் காந்தியைக் கொண்ட கணைகளால் தன் ஆசான் மகனை {அஸ்வத்தாமனைத்} தடுத்தான்.(14) தன் கணைகளால் அர்ஜுனன் கணைகளைத் தடுத்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் தன் கணைகளாலேயே மறைத்து, கோடையின் முடிவில் சூரியனையோ, சந்திரனையோ ஆகாயத்தில் மறைக்கும் மேகங்களின் திரளைப் போல உரக்க முழங்கினான்.(15) அந்தக் கணைகளால் ஆழத்துளைத்தக்கப்பட்ட அர்ஜுனன், தன் ஆயுதங்களால், அஸ்வத்தாமனையும், அவனைப் பின்பற்றும் உமது படையினரையும் நோக்கிக் குறிவைத்து, அஸ்வத்தாமனின் கணைகளால் உண்டாக்கப்பட்ட இருளை வேகமாக விலக்கி, நல்ல சிறகுகளைக் கொண்ட கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான்.(16)
[1] “இங்கே சொல்லப்படும் தைத்தியாரிபுத்வீபம் Daityaripudwipa என்பது யானையின் வடிவத்தைக் கொண்ட ஓர் அசுரன் என்று நீலகண்டரால் பொருள் கொள்ளப்படுகிறது. நான் உரையாசிரியரைப் பின்பற்றுவதற்காக அந்தக் கலவையின் {கூட்டு சொல்லின்} தெளிவான பொருளை நிராகரிக்க முடியாது. தைத்தியர்களின் எதிரியுடைய யானை என்பது யானைகளின் இளவரசனான ஐராவாதம் என்று அழைக்கப்படும் இந்திரனுடைய யானையையே குறிக்கும்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.
அந்தப் போரில் சவ்யசச்சின் {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுத்தான், எப்போது அவற்றைக் குறி பார்த்தான், எப்போது அவற்றை விடுத்தான் என்பதை யாராலும் காணமுடியவில்லை. யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோர், அவனது கணைகளால் தாக்கப்பட்டு உயிரையிழந்து கீழே விழுவது மட்டுமே அங்கே காணப்பட்டது.(17) அப்போது, ஒரு கணத்தையும் இழக்காத துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, பத்து முதன்மையான கணைகளைக் குறிபார்த்து, அவை ஏதோ ஒரே கணையே என்பதைப் போல அவற்றை வேகமாக ஏவினான். பெரும் சக்தியுடன் ஏவப்பட்ட அவற்றில் ஐந்து அர்ஜுனனையும், மற்ற ஐந்து வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தன.(18) அந்தக் கணைகளால் தாக்கபட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும், குபேரனையும், இந்திரனையும் போலக் குருதியில் குளித்தனர். இப்படிப் பீடிக்கப்பட்ட அவ்விரு வீரர்களும், ஆயுதங்களின் அறிவியலில் முற்றான திறன் கொண்ட அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டனர் என்றே மக்கள் அனைவரும் கருதினர்.(19)
அப்போது அந்தத் தசார்ஹர்களின் தலைவன் {கிருஷ்ணன்} அர்ஜுனனிடம், “(இப்படி அஸ்வத்தாமனை மிதமாக விடுவதால்) ஏன் பிழை செய்கிறாய்? இந்தப் போர்வீரனைக் கொல்வாயாக. வேறுபாடின்றி மதிக்கப்பட்டால், சிகிச்சையில்லாமல் தணிக்கப்படாத நோயைப் போல இவர் பெரும் துன்பத்திற்குக் காரணமாவார்” என்றான். மங்கா மகிமை கொண்ட கேசவனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறியவனும், மறைக்கப்படாத புரிதல் கொண்டவனுமான அர்ஜுனன், துரோணர் மகனைத் தன் கணைகளால் கவனமாகச் சிதைக்கத் தொடங்கினான்.(20) அப்போது சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் இருந்து பெரும் சக்தியுடன் ஏவப்பட்டவையும், ஆடுகளின் காதுகளைப் போன்ற தலை கொண்டவையுமான கணைகளால் தன் எதிரியின் {அஸ்வத்தாமனின்}, சந்தனக்குழம்பு பூசப்பட்ட பருத்த கரங்களையும், மார்பையும், தலையையும், ஈடற்ற தொடைகளையும் வேகமாகத் துளைத்தான். பிறகு அஸ்வத்தாமனின் குதிரைகளுடைய கடிவாளங்களை வெட்டிய அர்ஜுனன், அந்தக் குதிரைகளையும் துளைக்கத் தொடங்கியதால், அவை {குதிரைகள்} அஸ்வத்தாமனைக் களத்தைவிட்டுப் பெருந்தொலைவுக்குக் கொண்டு சென்றன.(21)
காற்றின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகளால் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவனும், பார்த்தனின் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்டவனும், புத்திசாலியுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிறிது நேரம் சிந்தித்த பின், திரும்பிச் செல்லவும், பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரைப் புதுப்பிக்கவும் விரும்பவில்லை.(22) வெற்றியானது எப்போதும் விருஷ்ணிகளின் தலைவனுடனும் {கிருஷ்ணனுடனும்}, தனஞ்சயனுடனும் {அர்ஜுனனுடனும்} இருக்கும் என்பதையறிந்த அந்த முதன்மையான அங்கீரசக் குலத்தவன் {அஸ்வத்தாமன்}, நம்பிக்கை இழந்தவனாக, கணைகளும், ஆயுதங்களும் கிட்டத்தட்டத் தீர்ந்தவனுமாகக் கர்ணனின் படைக்குள் நுழைந்தான்.(23) உண்மையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தன் குதிரைகளைக் கட்டுப்படுத்திய அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சற்றே ஆறுதலடைந்து, தேர்கள், குதிரைகள் மற்றும் மனிதர்களால் நிறைந்த அந்தக் கர்ணனின் படைக்குள் நுழைந்தான்.(24) தங்கள் எதிரியான அந்த அஸ்வத்தாமன், மந்திரங்களாலும், மருந்துகளாலும், வழிமுறைகளாலும் உடலில் இருந்து விலக்கப்பட்ட நோயைப் போல, அவனது குதிரைகளால் இவ்வாறு களத்தைவிட்டு விலகிய பிறகு,(25) கேசவனும், அர்ஜுனனும், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான சடசடப்பொலி கொண்டதும், காற்றில் ஆடிய கொடியைக் கொண்டதுமான தங்கள் தேரில் சம்சப்தகர்களை எதிர்த்துச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(26)
ஆங்கிலத்தில் | In English |