Krishna’s description of the battlefield! | Karna-Parva-Section-19 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; அவர்களை விரைவாகக் கொல்லும்படி சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனனின் வேகத்தை வியந்த கிருஷ்ணன், அவனிடம் போர்க்களத்தை வர்ணித்தது; பாண்டியனால் திருதராஷ்டிரப்படைக் கலங்கடிக்கப்படுவதைக் கண்டு வியந்த கிருஷ்ணன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “புதன் கோளானது அதன் சுற்றுப்பாதையில் சுழன்று செல்வதைப் போலச் சுழன்ற ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மீண்டும் பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களைக் கொன்றான்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவையும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} நடுங்கியபடியே திரிந்து நிறம் மங்கிக் கீழே விழுந்து இறந்தன.(2) தன்னுடன் போரில் ஈடுபட்ட பகை வீரர்களின் நுகத்தில் பூட்டப்பட்ட விலங்குகளில் முதன்மையானவை பலவற்றையும், சாரதிகள், கொடிமரங்கள், விற்கள், கணைகள், கரங்கள், அதன் பிடியில் இருந்த ஆயுதங்கள், தோள்கள், தலைகள் ஆகியவற்றையும், அகன்ற தலை கொண்டவை {பல்லங்கள்}, கத்தி போன்ற தலைகளைக் கொண்டவை {க்ஷுரங்கள்}, பிறைவடிவத்திலானவை {அர்த்தச்சந்திரக் கணைகள்}, கன்றின் பல் போன்ற தலை கொண்டவை {வத்சதந்தங்கள்} எனச் சில பல கணைகளால் அந்தப் போரில் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அறுத்தான்.(3,4) பருவ காலத்தில் பசுவுக்காகச் சண்டையிடும் காளைகளைப் போல நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் அர்ஜுனனை நெருங்கி வந்தார்கள்.(5) அப்போது அவர்களுக்கும், அவனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, மூவுலகங்களை வெற்றி கொள்வதற்காகத் தைத்தியர்களுக்கும், வஜ்ரதாரிக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலைப் போல மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.(6)
அப்போது உக்ராயுதனின் [1] மகன், நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான மூன்று கணைகளால் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான். எனினும் பார்த்தன், தன் எதிரியின் உடலிலிருந்து அவனது தலையை அறுத்தான்.(7) பிறகு சினத்தால் நிறைந்த அவ்வீரர்கள், கோடையின் நெருக்கத்தில் மருத்தர்களால் {காற்றுகளால்} தூண்டப்பட்ட மேகங்கள், இமயத்தை மறைப்பதைப் போல, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் மறைத்தனர்.(8) அனைத்துப் பக்கங்களிலும் இருந்த தன் எதிரிகளைத் தன் ஆயுதங்களால் தடுத்த அர்ஜுனன், நன்கு ஏவப்பட்ட கணைகளால் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைக் கொன்றான்.(9) பிறகு அர்ஜுனன், தன் கணைகளால், தேர்கள் பலவற்றின் திரிவேணுக்கள், குதிரைகள் ஆகியவற்றையும் பார்ஷினி சாரதிகளையும் வெட்டி, {அ தேர்களில்} பலவற்றின் ஆயுதங்களையும், அம்பறாத்தூணிகளையும் புரட்டி, அவற்றில் பெரும்பாலானவற்றின் சக்கரங்கள், கொடிமரங்கள் ஆகியவற்றை இழக்கச் செய்து, பலவற்றின் நாண்கயிறுகள், கடிவாளங்கள், அச்சுகளைப் பிளந்து, பிறவற்றின் கீழ்த்தட்டுகளையும், நுகத்தடிகளையும் அழித்து, பலவற்றின் உபகரணங்கள் அனைத்தையும் அதனதன் இடங்களில் இருந்து விழ வைக்கவும் செய்தான்.(10,11)
[1] உக்கிராயுதன் என்ற பெயரில் திருதராஷ்டிரனின் மகன் ஒருவன் உண்டு. ஆனால் இங்குக் குறிப்பிடப்படுபவன் திருதராஷ்டிரனின் பேரனல்லன் என்று வேறு நூல்களில் விளக்கங்கள் இருக்கின்றன.
அர்ஜுனனால் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் அடித்து நொறுக்கப்பட்ட அந்தத் தேர்கள், நெருப்பு, காற்று மற்றும் மழையால் அழிக்கப்பட்ட செல்வந்தர்களின் ஆடம்பர மாளிகைகளைப் போலத் தெரிந்தன.(12) மூர்க்கத்தில் இடிக்கு ஒப்பான கணைகளால், தங்கள் முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்ட யானைகள், மின்னலின் வெடிப்புகளால் மலைமுகடுகளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாளிகைகளைப் போலக் கீழே விழுந்தன.(13) பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், அர்ஜுனனால் தாக்கப்பட்டுத் தங்கள் பலத்தையெல்லாம் இழந்து, குருதியில் குளித்துத் தங்கள் நாக்குகளும், உள்ளுறுப்புகளும் வெளியே பிதுங்கத் தங்கள் சாரதிகளுடன் பூமியில் விழுந்து பயங்கரமாகக் காட்சியளித்தன.(14) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கணைகளால் துளைக்கப்பட்ட மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகளும் தள்ளாடியபடித் திரிந்து, கீழே விழுந்து வலியால் கதறி நிறம் மங்கியவைகளாகத் தெரிந்தன.(15) தானவர்களைத் தாக்கும் மகேந்திரனை {இந்திரனைப்} போலப் பார்த்தன், கல்லில் கூராக்கப்பட்டவையும், இடிக்கு ஒப்பானவையும், நஞ்சு போன்ற பயங்கரமானவையுமான கணைகளால் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைத் தாக்கினான்.(16)
விலையுயர்ந்த கவசங்களைப் பூண்டவர்களும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்திருந்தவர்களுமான துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், பார்த்தனால் கொல்லப்பட்டுத் தங்கள் தேர்கள் மற்றும் கொடிமரங்களுடன் களத்தில் கிடந்தனர்.(17) உயர்ந்த குடியில் பிறந்தவர்களும், பெரும் அறிவைக் கொண்டவர்களும், அறச் செயல்களைச் செய்தவர்களுமான மனிதர்கள், வெல்லப்பட்டு (உயிரை இழந்த) அவர்களது உடல்கள் பூமியில் கிடந்தாலும், தங்கள் மகத்தான செயல்களின் விளைவாக அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றனர்.(18) பிறகு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உமது படையின் தலைவர்கள், சினத்தால் நிறைந்து, தங்களைப் பின்தொடர்பவர்களின் துணையுடன் தேர்வீரர்களில் முதன்மையான அந்த அர்ஜுனனை எதிர்த்து விரைந்தனர்.(19) தங்கள் தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றில் சென்ற போர்வீரர்களும், காலாட்படை வீரர்களும், (அர்ஜுனனைக்) கொல்ல விரும்பிய அனைவரும், பல்வேறு ஆயுதங்களைப் பெரும் வேகத்துடன் ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர்.(20) பிறகு, அந்த அர்ஜுனக் காற்றானது, மேகக்கூட்டங்களின் திரளைப் போன்ற போர்வீரர்களால் பொழியப்பட்ட அந்த அடர்த்தியான கணைமாரியைக் கூரிய கணைகளால் அழித்தது.(22)
அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்}, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ!பாவமற்றவனே, ஏன் நீ இவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கிறாய்? சம்சப்தகர்களை விரைவாகக் கலங்கடித்து, கர்ணனின் படுகொலைக்காக விரைவாயாக” என்றான்.(23) “அப்படியே ஆகட்டும்” என்று கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன், எஞ்சிய சம்சப்தகர்களைத் தன் ஆயுதங்களால் பலமாகத் தாக்கி, தைத்தியர்களை அழிக்கும் இந்திரனைப் போல அவர்களை அழிக்கத் தொடங்கினான்.(24) அந்த நேரத்தில் நெருக்கத்தில் இருந்து கவனித்தும் கூட, அர்ஜுனன் எப்போது தன் கணைகளை வெளியே எடுத்தான், எப்போது அவற்றைக் குறிபார்த்தான், எப்போது அவற்றை வேகமாக விடுத்தான் என்பதை மனிதர்களால் குறிப்பிட முடியவில்லை.(25) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அதைக் கோவிந்தனேகூட ஆச்சரியமாகக் கருதினான். தடாகத்தைப் பிளந்து செல்லும் அன்னங்களைப் போல, அன்னங்களின் வெண்மையையும், வேகத்தையும் கொண்ட அர்ஜுனனின் கணைகள் பகைவரின் படைக்குள் ஊடுருவின.(26)
அப்போது கோவிந்தன் {கிருஷ்ணன்}, போர்க்களத்தில் நடக்கும் அந்தப் பேரழிவைக் கண்டு சவ்யசச்சினிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(27) “ஓ! பார்த்தா, பாரதர்களுக்கும், பூமியின் பிற மன்னர்களுக்கும் நேரும் இந்தப் பயங்கரமான பேரழிவு துரியோதனனுக்காகவே இங்கே நடைபெறுகிறது.(28) ஓ! பரதனின் மகனே {அர்ஜுனனே}, வலிமைமிக்க வில்லாளிகள் பலருடையவையும், தங்கப் பின்புறம் கொண்டவையுமான இந்த விற்களையும், அவர்களது உடல்களில் இருந்து தளர்ந்து விழுந்த இந்த இடைக்கச்சைகளையும், அம்பறாத்தூணிகளையும் பார்.(29) தங்கச் சிறகுகளைக் கொண்ட இந்த நேரான கணைகளையும், தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளைப் போலத் தெரிபவையும், எண்ணெயில் நனைக்கபட்டவையுமான இந்த நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்} பார்.(30) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த அழகிய வேல்கள் சிதறிக் கிடப்பதையும், ஓ! பாரதா {அர்ஜுனா}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், போர்வீரர்களின் உடல்களில் இருந்து விழுந்தவையுமான இந்தக் கவசங்களையும் பார்.(31) தங்கத்தால் பளபளபாக்கப்பட்ட இந்தச் சூலங்களையும், அதே உலோகத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஈட்டிகளையும், தங்க இழைகளாலும், சணல் நாராலும் {பொற்பட்டங்களால்} கட்டப்பட்ட கனத்த கதாயுதங்களையும் பார்.(32)
பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த வாள்களையும், அஃதாலேயே அலங்கரிக்கப்பட்ட இந்தக் கோடரிகளையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடிகளைக் கொண்ட இந்தப் போர்க்கோடரிகளையும் பார்.(33) சுற்றிலும் சிதறிக்கிடப்பவையான இந்த முள்பதித்த தண்டங்களையும் {பரிகங்களையும்}, இந்தக் குறுங்கணைகளையும் {பிண்டிபாலங்களையும்}, இந்தப் புசுண்டிகளையும், இந்தக் கணபங்களையும், இரும்பாலான இந்தக் குந்தங்களையும், இந்தக் கனத்த முசலங்களையும் {உலக்கைகளையும்} பார்[2].(34) வெற்றியை வேண்டுபவர்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருப்பவர்களுமான இந்தப் போர்வீரர்கள், இறந்து விட்டாலும், இன்னும் உயிருடன் கூடியவர்களாகவே தெரிவதைப் பார்.(35) கதாயுதங்களால் நொறுக்கப்பட்ட அங்கங்களுடனும், முசலங்களால் தலைகள் பிளக்கப்பட்டும், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களால் நொறுக்கிக் கிழிக்கப்பட்டும் கிடக்கும் இந்த ஆயிரக்கணக்கான போர்வீரர்களைப் பார்.(36)
[2] புசுண்டி என்பது கையால் எறியப்படும் ஆயுதமாகவோ, கவணாகவோ, நெருப்பை வீசும் ஆயுதமாகவோ, ஏதோ ஒரு வகையான தண்டமாக இருக்கலாம் என்று ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. கணபங்களும், குந்தங்களும் ஏதோ ஒரு வகைச் சூலங்களாகவோ, ஈட்டிகளாகவோ இருக்கக்கூடும். முசலங்கள் என்பன இரும்பு உலக்கைகளாகும்.
ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனனே}, கணைகள், ஈட்டிகள், வாள்கள், வேல்கள், ரிஷ்டிகள், கோடரிகள், சூலங்கள், நக்கரங்கள்[3] மற்றும் தடிகளால் பயங்கரமாகச் சிதைக்கப்பட்டு, குருதியோடையில் குளித்து உயிரையிழந்த மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களால் இந்தப் போர்களம் விரவிக் கிடக்கிறது.(37,38) ஓ! பாரதா, சந்தனக்குழும்பு பூசி அங்கதங்களால் அலங்கரிக்கபட்டு, மங்கலக் குறிகளால் அருளப்பட்டு, தோலுறைகளில் மறைக்கப்பட்டு, கேயூரங்களால் அலங்கரிக்கப்பட்ட தோள்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமி பிரகாசமாகத் தெரிகிறது.(39) பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட வீரர்களின் உறைகளில் மறைக்கப்பட்ட விரல்களுடன் கூடியவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான கரங்களும், துண்டிக்கப்பட்ட தோள்களும், யானைகளின் துதிக்கைகளைப் போலத் தெரியும் அறுக்கப்பட்ட தொடைகளும், காதுகுண்டலங்கள் மற்றும் ரத்தினங்களைக் கொண்ட தலைப்பாகைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தலைகளும் (பூமியை மிகவும் அழகாக்கியபடி) விரவிக் கிடக்கின்றன.(40)
[3] நக்கரங்கள் என்பன ஒருவகை வளைந்த முனை கொண்ட சூலங்களாகும்.
தங்க மணிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்டவையுமான அந்த அழகான தேர்களைப் பார். குருதியில் குளித்த கணக்கற்றக் குதிரைகளையும், அந்தத் தேர்த்தட்டுகளையும், நீண்ட அம்பறாத்தூணிகளையும், பல்வேறு வகைகளிலான கொடிமரங்களையும், கொடிகளையும்,(41) போராளிகளின் அந்தப் பெரும் சங்குகளையும், முற்றிலும் வெண்மையான அந்தச் சாமரங்களையும், வெளியே பிதுங்கிய நாவுகளுடன் மலைகளைப் போலக் களத்தில் கிடக்கும் அந்த யானைகளையும்,(42) அந்த அழகிய வெற்றிக் கொடிகளையும், கொல்லப்பட்ட அந்த யானைவீரர்களையும், அந்தப் பெரும் விலங்குகளின் முதுகில் ஒரே துண்டாக விரிக்கப்படும் அந்த விலையுயர்ந்த கம்பளங்களையும்,(43) வைடூரியங்கள் பதித்த கைப்பிடிகளுடன் பூமியில் விழுந்து கிடக்கும் அந்த அங்குசங்களையும், குதிரைகளின் அந்தத் தங்கமயமான நுகங்களையும், அவற்றின் மார்புக்கான வைரங்கள் பதித்த கவசங்களையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, குதிரைவீரர்களால் சுமக்கப்படும் கொடிமரங்களின் நுனியில் கட்டப்பட்ட அந்த விலையுயர்ந்த துணிகளையும்,(45) குதிரைகளின் முதுகில் விரிக்கத் தங்கத்தால் இழைக்கப்பட்டுத் தரையில் விழுந்து கிடக்கும் பலவண்ணங்களிலான அந்தக் கம்பளங்களையும், கூடுகளையும், ரங்குத் தோல்களையும்,(46) மன்னர்களின் தலைப்பாகைகளை அலங்கரிக்கும் அந்தப் பெரிய வைரக் கற்களையும், தங்கத்தாலான அந்த அழகிய ஆரங்களையும், நிலைகளில் இருந்து புரண்ட அந்தக் குடைகளையும், அந்தச் சாமரங்களையும், விசிறிகளையும் பார்.(47)
காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்திரன் அல்லது விண்மீன்களின் பிரகாசத்தைக் கொண்டவையும், நன்கு வெட்டப்பட்ட தாடிகளால் அழகூட்டப்பட்டவையும், முழு நிலவைப் போலத் தெரிபவையுமான முகங்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியைப் பார்.(48) அல்லி மற்றும் தாமரை மலர்களைப் போலத் தெரியும் அந்த முகங்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியானது, அல்லி மற்றும் தாமரை மலர்களின் அடர்த்தியான கூட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தடாகத்திற்கு ஒப்பாகத் தெரிகிறது.(49) பிரகாசமான நிலவின் ஒளியைக் கொண்டதும், விரிந்து கிடக்கும் விண்மீன் கூட்டங்களின் நட்சத்திரவொளிகளால் ஒளிரும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போலத் தெரிவதுமான இந்தப் பூமியைப் பார்.(50) ஓ! அர்ஜுனா, இன்றைய பெரும்போரில் உன்னால் அடையப்பட்ட இந்தச் சாதனைகள் உண்மையில் உனக்கே தகும், அல்லது சொர்க்கத்திலிருக்கும் தேவர்களின் தலைவனுக்கே {இந்திரனுக்கே} தகும்” என்றான் {கிருஷ்ணன்}.(51)
இப்படியே கிருஷ்ணன், அர்ஜுனனுக்குப் போர்க்களத்தைக் காட்டினான். (களத்தில் இருந்து தங்கள் முகாமிற்குத் திரும்புகையில்) அவர்கள் துரியோதனனின் படையில் இருந்து பேரொலியைக் கேட்டனர்.(52) உண்மையில், அந்த ஆரவாரம், சங்குகளின் முழக்கங்களாலும், துந்துபிகள், பேரிகைகள், படகங்கள், தேர்ச்சக்கரங்களில் சடசடப்பொலிகள், குதிரைகளின் கனைப்பொலிகள், யானைகளின் பிளிறல்கள் மற்றும் ஆயுதங்களில் கடும் மோதல்களால் ஆனதாக இருந்தது.(53) காற்றின் வேகத்தைக் கொண்ட தன் குதிரைகளின் துணையுடன் அந்தப் படைக்குள் ஊடுருவிய கிருஷ்ணன், பாண்டியனால் உமது படைக் கலங்கடிக்கப்படுவதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான்.(54) உயிர்வாழும் காலம் தீர்ந்துவிட்ட உயிரினங்களைக் கொல்லும் யமனைப் போலவே, கணைகள் மற்றும் ஆயுதங்களில் திறம்பெற்ற போர்வீரர்களில் முதன்மையானவனான அந்தப் பாண்டியன், பல்வேறு வகைகளிலான கணைகளால் பகைவர்க்கூட்டத்தை அழித்துக் கொண்டிருந்தான்.(55) யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் உடல்களைக் கூரிய கணைகளால் துளைத்தவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அவன் {பாண்டியன்}, அவர்களை வீழ்த்தி, அவர்களை உயிரை இழக்கச் செய்தான். பகைவர்களில் முதன்மையான பலரால் தன் மீது வீசப்பட்ட பல்வேறு ஆயுதங்களைத் தன் கணைகளால் வெட்டிய அந்தப் பாண்டியன், தானவர்களை அழிக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலத் தன் எதிரிகளைக் கொன்றான்” {என்றான் சஞ்சயன்}.(57)
ஆங்கிலத்தில் | In English |