The uncomparable Pandya king Malaydhwaja! | Karna-Parva-Section-20 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : மலயத்வஜப் பாண்டியனின் பெருமையைக் கேட்ட திருதராஷ்டிரனும் அஃதை உரைத்த சஞ்சயனும்; தனக்கு இணையாக எவரையும் கருதாத பாண்டியன்; கர்ணனின் படையைக் கலங்கடித்தது; பாண்டியனின் ஆற்றலைக் கண்டு வியந்து, அவனைப் பாராட்டி, அவனைப் போருக்கு அழைத்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் நாண்கயிற்றை அறுத்து, அவனது குதிரைகளையும், பாதுகாவலர்கள் இருவரையும் கொன்ற பாண்டியன் மலயத்வஜன்; பாண்டியன் மலயத்வஜனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று, அவனது தேரைச் சுக்கநூறாக நொறுக்கிய அஸ்வத்தாமன்; தன்னைத் தேடி வந்த யானையில் ஏறிக் கொண்ட மலயத்வஜப் பாண்டியன்; பாண்டியனின் கரங்களையும், சிரத்தையும் அறுத்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனை வழிபட்ட துரியோதனன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, உலகம் பரந்த புகழைக் கொண்ட பாண்டியனின் பெயரை ஏற்கனவே நீ எனக்குச் சொன்னாய். ஆனால், போரில் அவனது சாதனைகள் உன்னால் உரைக்கப்படவே இல்லை.(1) அந்தப் பெரும் வீரனின் ஆற்றல், ஊக்கம், சக்தி, வலிமையின் அளவு மற்றும் செருக்கை இன்று எனக்கு விபரமாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஆயுத அறிவியலின் முழு அறிவைக் கொண்ட தலைவர்களான பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன், அர்ஜுனன், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகியோர் உம்மால் தேர்வீரர்களில் முதன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனினும், இந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவருக்கும் சக்தியில் மேம்பட்டவனாக, அந்தப் பாண்டியன் தன்னையே கருதினான் என்பதை அறிவீராக. உண்மையில் அவன், மன்னர்களில் எவரையும் தனக்கு நிகராகக் கருதியதே இல்லை.(3,4) கர்ணன் மற்றும் பீஷ்மரையும் அவன் தனக்கு இணையாக ஒருபோதும் ஏற்றதில்லை. வாசுதேவன் {கிருஷ்ணன்}, அல்லது அர்ஜுனனுக்கு எவ்விதத்திலும் குறைந்தவனாகத் தன் இதயத்தால் ஒருபோதும் அவன் ஏற்றதுமில்லை.(5) மன்னர்களில் முதன்மையானவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பாண்டியன் இவ்வாறே இருந்தான். அந்தகனைப் போலச் சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டியன், அந்நேரத்தில் கர்ணனின் படையைக் கொன்று கொண்டிருந்தான்.(6)
தேர்கள், குதிரைகள் ஆகியவற்றால் பெருகியிருந்ததும், காலாட்படைவீரர்களில் முதன்மையானோர் நிறைந்ததுமான அந்தப் படையானது, பாண்டியனால் தாக்கப்பட்டு, குயவனின் சக்கரத்தைப் போலச் சுழலத் தொடங்கியது.(7) மேகக்கூட்டங்களின் திரளை விலக்கும் காற்றைப் போல அந்தப் பாண்டியன், தன்னால் நன்கு ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு, குதிரைகளையும், சாரதிகளையும், கொடிமரங்களையும், தேர்களையும் அழித்து, அதன் ஆயுதங்களையும், குதிரைகளையும் விழச் செய்து, அந்தப் படையைக் கலைக்கத் தொடங்கினான்.(8) மலைகளைப் பிளப்பவன் {இந்திரன்} தன் வஜ்ரத்தால் மலைகளைத் தாக்கி வீழ்த்துவதைப் போலவே பாண்டியனும், கொடிமரங்கள், கொடிகள், ஆயுதங்கள் ஆகியவற்றை வெட்டி, அவற்றைத் தரித்திருந்த யானைகளை அதன் சாரதிகளோடும், அவ்விலங்கைப் பாதுகாத்த காலாட்படை வீரர்களோடும் வீழ்த்தினான்.(9) மேலும் அவன், குதிரைகளையும், ஈட்டிகள், வேல்கள் மற்றும் அம்பறாத்தூணிகளுடன் கூடிய குதிரைவீரர்களையும் வெட்டி வீழ்த்தினான். பெரும் துணிவைக் கொண்டவர்களும், போரில் தளராதவர்களும், பிடிவாதம் கொண்டவர்களுமான புளிந்தர்கள், கஸர்கள், பாஹ்லீகர்கள், நிஷாதர்கள், அந்தகர்கள், தங்கணர்கள், தெற்கத்தியர்கள், போஜர்கள் ஆகியோர் அனைவரையும் தன் கணைகளால் சிதைத்த பாண்டியன், அவர்களது ஆயுதங்களையும், கவசங்களையும் இழக்கச் செய்து, அவர்களது உயிரையும் இழக்கச் செய்தான்.(10,11) போரில் நான்கு வகைச் சக்திகளையும் கொண்ட அந்தப் படையைத் தன் கணைகளால் அழித்துக் கொண்டிருந்த பாண்டியனைக் கண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த அச்சமற்ற போர்வீரனை நோக்கி அச்சமில்லாமல் சென்றான்.(12)
அப்போது புன்னகையுடன் கூடியவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தேரில் நர்த்தனமாடிக்கொண்டிருப்பவனைப் போலத் தெரிந்த அந்தப் போர்வீரனிடம் {பாண்டியனிடம்} அச்சமற்ற வகையில் இனிமையாகப் பேசியழைத்து அவனிடம்,(13) “ஓ! மன்னா {பாண்டிய மன்னா}, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவனே, உன் பிறவி உன்னதமானதாகவும், கல்வி பெரியதாகவும் இருக்கிறது. கொண்டாடப்படும் வலிமையையும், ஆற்றலையும் கொண்ட நீ இந்திரனுக்கே ஒப்பானவனாக இருக்கிறாய்.(14) பருத்த உன்னிரு கரங்களில் உன்னால் பிடிக்கப்பட்டிருப்பதும், உன் பிடியில் இணைக்கப்பட்ட பெரிய நாண்கயிற்றைக் கொண்டதுமான அந்த வில்லை வளைத்து, வேகமான கணைகளாலான அடர்த்தியான மழையை உன் எதிரிகள் மீது பொழியும்போது, மேகக்கூட்டங்களின் திரளைப் போல நீ அழகாகத் தெரிகிறாய். போரில் என்னைத் தவிர உனக்கு நிகரான வேறு எவரையும் நான் காணவில்லை.(15,16) பயங்கர வலிமையைக் கொண்ட அச்சமற்ற சிங்கமானது, காட்டில் மான் கூட்டங்களை நொறுக்குவதைப் போல, எண்ணற்ற தேர்களையும், யானைகளையும், காலாட்படை வீரர்களையும், குதிரைகளையும் தனியனாகவே நீ நொறுக்குகிறாய்.(17) ஆகாயத்தையும், பூமியையும் உன் தேர்ச்சக்கரங்களின் உரத்த சடசடப்பொலியால் எதிரொலிக்கச் செய்யும் நீ, உரத்த முழக்கங்களைச் செய்து பயிரை அழிக்கும் கூதிர்கால மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிகிறாய்.(18) உன் அம்பறாத்தூணியை வெளியே எடுத்து, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான உன் கூரிய கணைகளை ஏவி, முக்கண் தேவனுடன் போரிடும் (அசுரன்) அந்தகனைப் போல என்னோடு மட்டுமே நீ போரிடுவாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.(19)
இப்படிச் சொல்லப்பட்ட பாண்டியன், “அப்படியே ஆகட்டும்” என்றான். “தாக்குவாயாக” என்று அவனிடம் சொன்ன துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஆவேசத்துடன் அவனைத் தாக்கினான். பதிலுக்கு மலயத்வஜன் {மலையத்வஜன்}[1], முள்பதித்த ஒரு கணையால் {கர்ணியால்} துரோணர் மகனைத் துளைத்தான்.(20) அப்போது ஆசான்களில் சிறந்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிரித்துக் கொண்டே, முக்கிய அங்கங்களை ஊடுருவவல்லவையும், நெருப்பின் தழல்களுக்கு ஒப்பானவையுமான சில கடுங்கணைகளால் அந்தப் பாண்டியனைத் தாக்கினான்.(21) பிறகு அஸ்வத்தாமன், கூர்முனை கொண்டவையும், முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்லவையுமான பிற பெரிய கணைகள் சிலவற்றை, வேறுபட்ட பத்து வகை நகர்வுகளுடன்[2] செல்லுமாறு தன் எதிரியின் மீது மீண்டும் ஏவினான்.(22) எனினும் பாண்டியன், தன் எதிரியின் அந்தக் கணைகள் அனைத்தையும் ஒன்பது கணைகளால் வெட்டினான். மேலும் நான்கு கணைகளால் தன் எதிரியின் நான்கு குதிரைகளையும் அவன் பீடித்ததால், அவை விரைவாக இறந்தன.(23) பிறகு, தன் கூரிய கணைகளால் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளை வெட்டிய பாண்டியன், சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதும், நீட்டி வளைக்கப்பட்டதுமான அஸ்வத்தாமனுடைய வில்லின் நாண் கயிற்றையும் அறுத்தான்.(24)
[1] மதுரை மீனாட்சியம்மனின் தந்தையின் பெயரும் மலயத்வஜப் பாண்டியனே. துரோண பர்வம் பகுதி 23ல் சாரங்கத்வஜன் என்ற பாண்டிய மன்னன் இதே போன்ற பெரும் வல்லமை கொண்டவனாகக் குறிப்பிடப்படுகிறான். சாரங்கத்வஜனின் தந்தை கிருஷ்ணனால் கொல்லப்பட்டதாகவும், அந்தச் சாரங்கத்வஜனுக்குச் சாகரத்வஜன் என்ற பெயரும் உண்டு என்பதாகவும் அப்பகுதியில் குறிப்புகள் இருக்கின்றன. அந்தச் சாரங்கத்வஜனும், இந்த மலயத்வஜனும் ஒருவரா என்பது தெரியவில்லை. ஒன்றாகவே இருக்க வேண்டும்.[2] “மேல்நோக்கு, கீழ்நோக்கு, நேர், எதிர் போன்ற பத்து வகை நகர்வுகள். வெவ்வேறு அங்கங்களைத் துளைக்க, வெவ்வேறு வகையான நகர்வுகளில் கணைகளைச் செலுத்த வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். “பத்து வகைப் பாணகதிகளானவை – உன்முகி, அபிமுகி, திரியக, மந்தா, கோமூத்திரிகா, தருவா, ஸ்கலிதா, யமகா, கராந்தா, கருஷ்டா என்பனாவகும். பத்தாவது கதியானது அதிகருஷ்டா என்றும் அழைக்கப்படுகிறது. அது தலையுடன் கூடத் தூரத்தில் போய் விழக்கூடியது” என்று வேறொரு பதிப்பில் குறிப்பிருக்கிறது.
அப்போது, எதிரிகளைக் கொல்பவனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, நாண்பூட்டாத தன் வில்லில் நாணைப்பூட்டிய அதே வேளையில், தன் தேரில் வேறு சிறந்த குதிரைகளைத் தன் ஆட்கள் பூட்டிவிட்டார்களா என்பதையும் பார்த்துக் கொண்டு,(25) (தன் எதிரியின் மீது) ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான். இதனால், தன் கணைகளைக் கொண்டு அந்த மறுபிறப்பாளன் {பிராமணன்}, மொத்த ஆகாயத்தையும் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைத்தான்.(26) கணை ஏவுவதில் ஈடுபட்டுள்ள உயர்ஆன்ம துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அந்தக் கணைகள் உண்மையில் வற்றாதவை என்பதை அறிந்திருந்தாலும், மனிதர்களில் காளையான அந்தப் பாண்டியன் அவை அனைத்தையும் துண்டுகளாக வெட்டினான்.(27) அந்த அஸ்வத்தாமனின் எதிராளி, அவனால் {அஸ்வத்தாமனால்} ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் கவனமாக வெட்டி, அம்மோதலில் பின்னவனின் {அஸ்வத்தாமனின்} தேர்ச்சக்கரங்களுடைய பாதுகாவலர்கள் இருவரைத் தன் கூரிய கணைகளால் கொன்றான்.(28)
தன் எதிரியால் வெளிக்காட்டப்படும் கரநளினத்தைக் கண்ட துரோணர் மகன், தன் வில்லை வட்டமாக வளைத்து, மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்திரளைப் போலத் தன் கணைகளை ஏவத் தொடங்கினான்.(29) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஒரு நாளின் எட்டுப் பாகத்தில் ஒன்றின் அளவிலான கால இடைவெளிக்குள் {ஏழரை நாழிகை = 2 முகூர்த்தம் = 1 சாமம் = 3 மணிநேர காலத்திற்குள்}[3], அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஒவ்வொன்றிலும் எட்டு இளங்காளைகள் பூட்டப்பட்டு இழுக்கப்படும் எட்டு வண்டிகளால் சுமக்கப்படும் அளவிற்குக் கணைகள் பலவற்றை ஏவினான்.(30) அந்நேரத்தில் சினத்தில் நிறைந்த அந்தகனைப் போலவோ, அந்தகனுக்கே அந்தகனைப் போலவோ தெரிந்த அஸ்வத்தாமனைக் கண்ட மனிதர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்தனர்.(31) மலைகளுடனும், மரங்களுடனும் கூடிய பூமியைக் கோடையின் முடிவில் மழைத்தாரைகளால் நனைக்கும் மேகத் திரளைப் போல, அந்த ஆசான் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிப்படையின் மீது தன் கணைமாரியைப் பொழிந்தான்.(32)
[3] 1 நாள் = 60 நாழிகை; ஒரு நாளின் எட்டில் ஒரு பாகம் = 7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம். 1 நாழிகை = 24 நிமிடங்கள்; 7 1/2 நாழிகை = 180 நிமிடங்கள் = 3 மணி நேரம். அதாவது ஒரு சாமப் பொழுதிற்குள். பார்க்க: https://ta.wikipedia.org/wiki/நாழிகை. வேறொரு பதிப்பில் இவ்வரி, "ஐயா, எட்டு எட்டுக் காளைகள் கட்டின எட்டு வண்டிகள் சுமந்துவந்த அவ்வளவு ஆயுதங்களையும் த்ரோணபுத்திரர் மூன்றேமுக்கால் நாழிகைக்குள் பிரயோகித்துவிட்டார்" என்றிருக்கிறது. கங்குலிக்கும் இதற்கும் எண்ணிக்கையில் இரண்டு மடங்கு அளவுக்கு நாழிகையில் வேறுபாடு உள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே உள்ளது.
அஸ்வத்தாம மேகத்தால் ஏவப்பட்ட அந்தத் தாங்கிக்கொள்ளமுடியாத கணைமாரியை வாயவ்ய ஆயுதத்தால் கலங்கடித்த அந்தப் பாண்டிய காற்று, மகிழ்ச்சியால் நிறைந்து உரத்த முழக்கங்களைச் செய்தது.(33) அப்போது துரோணர் மகன், முழங்கிக் கொண்டிருந்த பாண்டியனுடையதும், மலய மலை பொறிக்கப்பட்டதும், சந்தனக் குழம்பாலும், பிற நறுமணப்பொருட்களாலும் பூசப்பட்டதுமான கொடிமரத்தை அறுத்து, பின்னவனின் நான்கு குதிரைகளையும் கொன்றான்.(34) பிறகு ஒற்றைக்கணையால் தன் எதிரியின் சாரதியைக் கொன்ற அஸ்வத்தாமன், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலி கொண்ட அந்தப் போர்வீரனின் {மலயத்வஜனின்} வில்லைப் பிறைவடிவக் கணையொன்றால் வெட்டி, தன் எதிரியின் தேரையும் நுண்ணியத் துண்டுகளாகப் பொடியாக்கினான்.(35) தன் ஆயுதங்களால் எதிரியின் ஆயுதங்களைத் தடுத்து, அவனது ஆயுதங்கள் அனைத்தையும் வெட்டிய துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் எதிரிக்குத் தீங்கால் மகுடம் சூட்ட ஒரு வாய்ப்பை அடைந்தாலும் கூட, மேலும் சிறிது நேரம் அவனோடு போரிடும் விருப்பத்தால் அவனைக் கொல்லாதிருந்தான்.(36)
அதே வேளையில் கர்ணன், பாண்டவர்களின் பெரிய யானைப் படையை எதிர்த்து விரைந்து, அதை முறியடித்து அழிக்கத் தொடங்கினான்.(37) தேர்வீரர்களை அவர்களது தேர்களை இழக்கச் செய்த அவன் {கர்ணன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நேரான எண்ணற்ற கணைகளால், யானைகளையும், குதிரைகளையும், மனிதப் போர்வீரர்களையும் தாக்கினான்.(38) வலிமைமிக்க வில்லாளியான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைக் கொல்பவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான பாண்டியனைத் தேரற்றவனாகச் செய்திருந்தாலும், போரிடும் விருப்பத்தில் அவனைக் கொல்லாதிருந்தான்.(39) அந்த நேரத்தில், பெரும் தந்தங்களுடன் கூடியதும், போர் உபகரணங்கள் அனைத்தையும் கொண்டு ஆயத்தம் செய்யப்பட்டதும், வேகமாக ஓடுவதும், பெரும் வலிமையைக் கொண்டதும், அஸ்வத்தாமனின் கணைகளால் தாக்கப்பட்டதும், சாரதியற்றதுமான ஒரு பெரும் யானை, மற்றொரு பகை யானையை எதிர்த்து முழங்கிக் கொண்டே பாண்டியன் இருந்த திசையை நோக்கிப் பெரும் வேகத்துடன் சென்றது.(40) பிளவுபட்ட மலைச்சிகரம் ஒன்றைப் போலத் தெரிந்த அந்த யானைகளின் இளவரசனைக் கண்டவனும், யானையின் கழுத்தில் இருந்து போரிடும் முறையை நன்கறிந்தவனுமான அந்தப் பாண்டியன், மலைச்சிகரத்தின் உச்சியில் உரத்த முழக்கத்துடன் துள்ளிக் குதிக்கும் ஒரு சிங்கத்தைப் போல அந்த விலங்கின் கழுத்தில் விரைவாக ஏறினான்.(41)
பிறகு, மலைகளின் இளவரசனின் அந்தத் தலைவன் {மலயத்வஜன்}, அங்குசத்தால் யானையைத் தாக்கி, சினத்தால் ஈர்க்கப்பட்டு, ஆயுதங்களைப் பெரும் வேகத்துடன் வீசுவதில் (தான் வேறுபட்டுத் தனித்துவமாகத் தெரிந்த) கவனமான நிதானத்துடன், சூரியனது கதிர்களின் பிரகாசத்துடன் கூடிய ஒரு {வேல்} வேலை ஆசான் மகனின் {அஸ்வத்தாமன்} மேல் விரைவாக ஏவி உரக்க முழக்கமிட்டான்.(42) மகிழ்ச்சியால் மீண்டும் மீண்டும், “நீர் கொல்லப்பட்டீர், நீர் கொல்லப்பட்டீர்” என்று கூவிய பாண்டியன், ரத்தினங்களாலும், முதல் நீரின் வைரங்களாலும் {மிகத் தூய வைரங்களாலும்}, மிகச் சிறந்த வகைத் தங்கத்தாலும், அற்புதத் துணியாலும், முத்துச்சரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட துரோணர் மகனின் கிரீடத்தை (அந்த வேலைக் கொண்டு) துண்டுகளாக நொறுக்கினான்.(43) சூரியன், சந்திரன், கோள்கள், அல்லது நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்தக் கிரீடம், அந்தத் தாக்குதலுடைய பலத்தின் விளைவால், இந்திரனின் வஜ்ரத்தால் பிளக்கப்பட்ட ஒரு மலைச் சிகரம் பேரொலியுடன் பூமியில் விழுவதைப் போலக் கீழே விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது.(44)
இதனால் பெருஞ்சினத்தால் சுடர்விட்ட அஸ்வத்தாமன், காலால் மிதிபட்ட பாம்புகளின் இளவரசனைப் போல, எதிரியைப் பெரும்வலியால் பீடிக்கவல்லவையும், யமதண்டத்துக்கு ஒப்பானவையுமான பதினான்கு கணைகளை எடுத்துக் கொண்டான்.(45) அக்கணைகளில் ஐந்தால் தன் எதிராளியின் யானையுடைய நான்கு கால்களையும், துதிக்கையையும், மூன்றால் அம்மன்னனின் {மலயத்வஜனின்} இரு கரங்களையும், சிரத்தையும் {தலையையும்} வெட்டிய அவன் {அஸ்வத்தாமன்}, பெரும் பிரகாசம் கொண்டவர்களும், அந்தப் பாண்டிய மன்னனைப் பின்தொடர்ந்து சென்றவர்களுமான வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அறுவரை ஆறு கணைகளால் கொன்றான்.(46) நீண்டவையும், நன்கு பருத்தவையும், சிறந்த சந்தனக்குழம்பால் பூசப்பட்டவையும், தங்கம், முத்துக்கள், ரத்தினங்கள், வைரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையுமான அம்மன்னனின் {மலயத்வஜனின்} கரங்கள் பூமியில் விழுந்ததும், கருடனால் கொல்லப்பட்ட இரு பாம்புகளைப் போல நெளியத் தொடங்கின.(47) முழு நிலவின் பிரகாசத்துடன் அருளப்பெற்ற முகத்தைக் கொண்டதும், நேர்த்தியான மூக்கையும், சினத்தால் தாமிரமாகச் சிவந்த இரண்டு பெரிய கண்களையும் கொண்டதும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தலையும் தரையில் விழுந்து, இரண்டு பிரகாசமான நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(48)
திறன்நிறைந்த அந்தப் போர்வீரனால் {அஸ்வத்தாமனால்}, ஐந்து கணைகளைக் கொண்டு ஆறு துண்டுகளாக வெட்டப்பட்ட யானையும், மூன்று கணைகளைக் கொண்டு நான்கு துண்டுகளாக வெட்டப்பட்ட மன்னனும், மொத்தமாகப் பத்துத் துண்டுகளாகப் பிரிந்து கிடந்த போது, பத்து தேவர்களுக்காகப் பத்து பகுதிகளாகப் பிரித்துப் படைக்கபட்ட வேள்வி நெய்யைப் போல அது தெரிந்தது.(49) சுடலையில் {சுடுகாட்டில்} சுடர்விட்டெரியும் நெருப்பானது, உயிரற்ற உடலின் வடிவில் நீர்க்காணிக்கையை ஏற்ற பிறகு, நீரால் அணைக்கப்படுவதைப் போலவே, அந்தப் பாண்டிய மன்னன் {மலயத்வஜன்}, எண்ணற்ற குதிரைகளையும், மனிதர்களையும், யானைகளையும் துண்டுகளாக வெட்டி, ராட்சசர்களுக்கு அவற்றை உணவாகப் படைத்த பிறகு, இப்படியே துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளால் அமைதிப்படுத்தப்பட்டான்[4].(50) ஆயுத அறிவியலின் அந்த முழுமையான தலைவன் {அஸ்வத்தாமன்}, தான் எடுத்துக்கொண்ட பணியை நிறைவு செய்த பிறகு, அசுரன் பலி {பலிச்சக்கரவர்த்தி} அடக்கப்பட்டதும், விஷ்ணுவை மகிழ்ச்சியாக வழிபட்ட தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலத் தன் தம்பிகளுடன் கூடியவனும் உமது மகனுமான மன்னன் {துரியோதனன்}, அந்தப் போர்வீரனை {அஸ்வத்தாமனை} பெரும் மரியாதையுடன் வழிபட்டான்” {என்றான் சஞ்சயன்}.(51)
[4] வேறொரு பதிப்பில், “பிதிர்களுக்குப் பிரியனான அந்தப் பாண்டியன் அனேக குதிரைகளையும், மனிதர்களையும், யானைகளையும் கால்வேறு கைவேறாகத் துண்டாடி அரக்கர்களுக்கு உணவாக்கிச் சுடலைத்தீயானது உயிரற்றவுடலாகிற ஹவிஸைப் பெற்று மூண்டெரிந்து நீர்ப்பெருக்கால் நனைக்கப்பட்டுத் தணிவது போல ஓய்ந்தான்” என்றிருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |