Siva gave boon! | Karna-Parva-Section-34c | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : சல்லியனுக்குப் பரசுராமர் மற்றும் சிவனின் கதையைச் சொன்ன துரியோதனன்; தெய்வீக ஆயுதங்கள் வேண்டி தவமிருந்த பரசுராமர்; தூய்மையடையப் பணித்த சிவன்; தைத்தியர்களை வெல்ல முடியாத தேவர்கள் சிவனிடம் பணிந்து வேண்டியது; தைத்தியர்களை அழிக்க பரசுராமரை ஏவிய சிவன்; தைத்தியர்களை அழித்த பரசுராமர்; ஆயுதங்களை அளித்த சிவன்; பரசுராமரிடம் இருந்து அவ்வாயுதங்களைப் பெற்றான் கர்ணன் எனத் துரியோதனன் சொல்வது...
{துரியோதனன் சல்லியனிடம் தொடர்ந்தான்}, “நான் சொல்லப்போகும் மற்றுமொரு கதையைக் கேட்பீராக. அறமொழுகும் அந்தணர் {பிராமணர்} ஒருவர் என் தந்தையிடம் என் முன்னிலையில் இதைச் சொன்னார்.(123) ஓ! சல்லியரே, செயல்களின் காரணங்களும், நோக்கங்களும் நிறைந்த அந்த இனிமையான வார்த்தைகளைக் கேட்ட பிறகு, எவ்வித ஐயுணர்வும் இன்றி நீர் தீர்மானிப்பதையே செய்வீராக.(124)
பிருகு குலத்தவரில் கடும் தவநோன்புகளைக் கொண்டவராக ஜமதக்னி இருந்தார். அவருக்கு, அனைத்து அறங்களையும், சக்தியையும் கொண்டவரும், ராமர் {பரசுராமர்} என்ற பெயரில் கொண்டாடப்படுபவருமான ஒரு மகன் இருந்தார்.(125) உற்சாகமிக்க ஆன்மாவுடன் மிகக் கடினமான தவத்தைப் பயின்று, நோன்புகளுக்கும், விரதங்களுக்கும் கட்டுப்பட்டு, தன் புலன்களைக் கட்டுப்படுத்திய அவர் {பரசுராமர்}, ஆயுதங்களை அடைவதற்காகத் பவதேவனை {சிவனை} நிறைவுறச் செய்தார்.(126) அவரது அர்ப்பணிப்பு மற்றும் இதயத்தின் அமைதிநிலை ஆகியவற்றின் விளைவால் மஹாதேவன் {சிவன்} அவரிடம் {பரசுராமரிடம்} மனநிறைவு கொண்டான். ராமரது {பரசுராமரின்} இதயத்தில் பேணப்பட்ட விருப்பத்தைப் புரிந்து கொண்ட சங்கரன் {சிவன்}, தன்னை அவரிடம் {பரசுராமரிடம்} வெளிக்காட்டினான்.(127)
மஹாதேவன் {சிவன்}, “ஓ! ராமா {பரசுராமா}, நான் உன்னிடம் நிறைவைக் கொண்டேன். நீ அருளப்பட்டிருப்பாயாக, உன் விருப்பத்தை நான் அறிவேன். உன் ஆன்மாவைத் தூய்மையாக்குவாயாக. அப்போது உன் விருப்பங்கள் அனைத்தையும் நீ அடைவாய்.(128) நீ தூய்மையானதும் {பரிசுத்தமடைந்ததும்} ஆயுதங்கள் அனைத்தையும் நான் உனக்குத் தருவேன். ஓ! பிருகுவின் மகனே, திறனற்றவனையும், அவ்வாயுதங்களுக்குத் தகாதவனையும் அவை {அவ்வாயுதங்கள்} எரித்துவிடும்” என்றான் {சிவன்}.(129) தேவதேவனும், திரிசூலபாணியுமான அந்தத் தேவனால் {சிவனால்} இவ்வாறு சொல்லப்பட்ட அந்த ஜமதக்னி மகன் {பரசுராமர்}, பலம்வாய்ந்த அந்த உயர்ந்தவனிடம் {சிவனிடம்} சிரம் தாழ்த்தி,(130) “ஓ! தேவதேவா, அவற்றை ஏந்த நான் தகுந்தவன் என உண்மையில் எப்போது நீ கருதுகிறாயோ, எப்போதும் உன் பணியில் அர்ப்பணிப்புடன் இருக்கும் எனக்கு அவ்வாயுதங்களை அப்போது கொடுப்பதே உனக்குத் தகும்” என்றார்.(131)
துரியோதனன் {சல்லியனிடம்} தொடர்ந்தான், “பிறகு அந்த ராமர், தவங்கள், புலன்களில் தற்கட்டுப்பாடு, நோன்புகள் நோற்பு, வழிபாடு, காணிக்கைகள், மந்திரங்களுடன் கூடிய வேள்விகள் மற்றும் ஹோமங்கள் ஆகியவற்றால் நீண்ட பல ஆண்டுகளாக சர்வனை {சிவனைத்} துதித்தார்.(132) இறுதியாக அந்த உயர் ஆன்ம பிருகு குல மகனிடம் {பரசுராமரிடம்} மனம் நிறைவடைந்த மகாதேவன், அறங்கள் பலவற்றைக் கொண்ட தன் தெய்வீகத் துணைவியின் {உமாதேவியின்} முன்னிலையில்:(133) “நோன்புகளில் உறுதியான இந்த ராமன் {பரசுராமன்}, என்னிடம் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவனாவான்” என்று சொன்னான். அவனிடம் மனம் நிறைந்த அந்தத் தலைவன் சங்கரன், ஓ! எதிரிகளைக் கொல்பவரே {சல்லியரே}, தேவர்கள் மற்றும் முனிவர்களின் முன்னிலையில் அவரது நற்பண்புகளை மீண்டும் மீண்டும் அறிவித்தார்.(134)
அதே வேளையில் தைத்தியர்கள் மிகவும் வலிமைமிக்கவர்களாக ஆகிவிட்டார்கள். செருக்கு மற்றும் மடமையால் குருடான அவர்கள் {தைத்தியர்கள்}, சொர்க்கவாசிகளைப் பீடிக்கத் தொடங்கினர். அப்போது தேவர்கள் ஒன்றுகூடி, அவர்களைக் கொல்ல உறுதியாகத் தீர்மானித்து, தங்கள் எதிரிகளின் அழிவுக்காக மிக ஊக்கமாக முயன்றனர். எனினும், அவர்களை வெல்லத் தவறினர்.(136) பிறகு தேவர்கள், உமையின் தலைவனான மஹேஸ்வரனிடம் சென்று, “எங்கள் எதிரிகளைக் கொல்வீராக” என்று சொல்லி அர்ப்பணிப்புடன் அவனை நிறைவு கொள்ளச் செய்யத் தொடங்கினர்.(137) தேவர்களின் எதிரிகளை அழிப்பதாக அவர்களிடம் உறுதியளித்த அந்தத் தேவன், பிருகுவின் வழித்தோன்றலான ராமரை அழைத்தான். ராமரிடம் {பரசுராமரிடம்} அந்த சங்கரன்,(138) “ஓ! பிருகுவின் வழித்தோன்றலே {பரசுராமா}, உலகம் அனைத்திற்கும் நன்மை செய்யவும், என்னை நிறைவு கொள்ளச்செய்யவும் விரும்பி, கூடியிருக்கும் தேவஎதிரிகள் அனைவரையும் கொல்வாயாக” என்றான்.(139)
இப்படிச் சொல்லப்பட்ட ராமர் {பரசுராமர்}, முக்கண்களைக் கொண்ட அந்த வரமளிக்கும் தேவனிடம் {சிவனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, ஆயுதங்களற்றவனாக நான் இருக்கிறேன், போரில் வெல்லப்பட முடியாதவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான தானவர்கள் கூட்டத்தைக் கொல்ல என்னிடம் என்ன பலத்தைக்கொண்டிருக்கிறேன்?” என்று கேட்டார்.(140) அதற்கு அந்த மஹேஸ்வரன், “என் ஆணையின் படி சென்று அந்த எதிரிகளை நீ கொல்வாயாக. அந்த எதிரிகள் அனைவரையும் வென்ற பிறகு, எண்ணிலா தகுதிகளை நீ அடைவாய்” என்றான்.(141) இவ்வார்த்தைகளைக் கேட்டு அவை அனைத்தையும் ஏற்ற ராமர் {பரசுராமர்}, தமது வெற்றிக்காக தீர்திற {பரிகாரச்} சடங்குகளைச் செய்யச் செய்து, தானவர்களை எதிர்த்துச் சென்றார்.(142)
வலிமை, மடமை, செருக்கு ஆகியவற்றைக் கொண்ட அந்தத் தேவ எதிரிகளிடம் பேசிய அவர், “போரில் மூர்க்கர்களான தைத்தியர்களே, போரை எனக்கு அளிப்பீராக {என்னுடன் போரிடுவீராக}.(143) உங்களை வெல்வதற்காகத் தேவதேவனால் நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார். அப்போது, அந்தப் பிருகுவின் வழித்தோன்றலால் {பரசுராமரால்} இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் தைத்தியர்கள் போரிடத் தொடங்கினர்.(144) எனினும், பார்கவர்களை இன்புறச் செய்யும் அவர் {பரசுராமர்}, இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட வீச்சுகளால் போரில் தைத்தியர்களைக் கொன்று,(145) மஹாதேவனிடம் {சிவனிடம்} திரும்பி வந்தார். பிராமணர்களில் முதன்மையான அந்த ஜமதக்னி மகன் {பரசுராமர்}, தானவர்களால் தன் மேனியில் ஏற்பட்ட காயங்கள் பலவற்றுடனே திரும்பினார். எனினும், ஸ்தாணுவால் {சிவனால்} தீண்டப்பட்டதும் அவரது காயங்கள் குணமடைந்தன.(146) அவரது அந்த அருஞ்செயலால் நிறைவை அடைந்த அந்தச் சிறப்புமிக்க தேவன், அந்த உயர் ஆன்ம பிருகு மகனுக்கு {பரசுராமருக்கு} பல்வேறு வகைகளிலான வரங்களை அளித்தான்.(147) இதயம் நிறைந்தவனும், திரிசூலபாணியுமான அந்தத் தேவதேவன், “ஓ! பிருகு குலத்தவரை இன்புறச் செய்பவனே {பரசுராமா}, உன் உடலில் ஆயுதங்கள் பாய்ந்ததன் விளைவால் நீ அடைந்த துன்ப வலி, மனிதசக்திக்கு அப்பாற்பட்ட வகையில் நீ செய்த அருஞ்செயலுக்குச் சாட்சி பகர்கிறது. நீ விருப்பப்பட்டவாறே, இந்தத் தெய்வீக ஆயுதங்களை என்னிடம் இருந்து பெறுவாயாக” என்றான் {சிவன்}.(148,149)
துரியோதனன் தொடர்ந்தான், “பிறகு அந்த ராமர் {பரசுராமர்}, தெய்வீக ஆயுதங்களையும், தாம் விரும்பிய வரங்களையும் அடைந்து, சிவனுக்குத் தலைவணங்கினார்.(150) பிறகு அந்தப் பெரும் தவசி {பரசுராமர்}, தேவர்களின் தலைவனிடம் {சிவனிடம்} விடைபெற்றுச் சென்றார். அந்த முனிவர் சொன்ன அந்தப் பழங்கதை இதுவே.(151) அந்தப் பிருகுவின் வழித்தோன்றல் {பரசுராமர்}, ஓ! மன்னர்களில் புலியே {சல்லியரே}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், உயர் ஆன்ம கர்ணனுக்குத் தமது ஆயுத அறிவியல் அனைத்தையும் கொடுத்தார்.(152) கர்ணனிடம் எக்களங்கமாவது இருந்திருப்பின், ஓ! பூமியின் தலைவா {சல்லியரே}, அந்தப் பிருகு குலத்தை இன்புறச் செய்வபவர் {பரசுராமர்}, தமது தெய்வீக ஆயுதங்களை அவனுக்கு ஒருபோதும் கொடுத்திருக்க மாட்டார்.(153)
கர்ணனைச் சூத குலத்தில் பிறந்தவன் என்று என்னால் நினைக்க முடியவில்லை. க்ஷத்திரிய வகையில் ஒரு தேவனுக்குப் பிறந்த மகனாகவே இவன் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.(154) இவன் பிறந்த குலத்தை உறுதி செய்ய முடியாத வகையில், (குழந்தை பருவத்திலேயே) அவன் கைவிடப்பட்டிருக்க வேண்டும் எனவும் நான் நினைக்கிறேன். இந்தக் கர்ணன், ஓ! சல்லியரே, சூத வகையில் எவ்வழியிலும் பிறந்திருக்க முடியாது.(155) பெண்மான் ஒன்றால் ஒருபோதும் ஒரு புலியைப் பெற முடியாததைப் போலத் தனது (இயற்கையான) காதுகுண்டலங்கள் மற்றும் (இயற்கையான) கவசம் ஆகியவற்றைக் கொண்டவனும், நீண்ட கரங்களையும் கொண்டவனும், சூரியனுக்கே ஒப்பானவனுமான இந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {கர்ணன்}, ஒரு சாதாரணப் பெண்ணுக்குப் பிறந்திருக்கவே முடியாது.(156) யானைகளின் இளவரசனுடைய துதிக்கைக்கு ஒப்பாக இவனது கரங்கள் ஒவ்வொன்றும் பருத்திருக்கின்றன. அனைத்து எதிரிகளையும் தடுக்க வல்ல இவனது இந்த அகன்ற மார்பைப் பார்ப்பீராக.(157) ஓ! மன்னா {சல்லியரே}, வைகர்த்தனன் {சூரியன் மகன்} என்றும் வேறு பெயரில் அழைக்கப்படும் இந்தக் கர்ணன், ஒரு சாதாரண மனிதனாக இருக்கவே முடியாது. பெரும் வீரத்தைக் கொண்ட இந்த ராமரின் {பரசுராமரின்} சீடன் {கர்ணன்}, ஓ! மன்னர்களின் மன்னா {சல்லியரே}, மிக உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனாவான்” {என்றன் துரியோதனன்}.(158)
ஆங்கிலத்தில் | In English |