Don't Fight alone with the Pandavas! | Shalya-Parva-Section-08 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : எவரும் தனியொருவராகப் பாண்டவர்களுடன் நேருக்கு நேராகப் போரிட வேண்டாம் என்று தீர்மானித்த கௌரவர்கள்; இரு தரப்பிலும் அமைக்கப்பட்ட வியூகங்கள்; எஞ்சியிருந்த கௌரவ மற்றும் பாண்டவப் படைகளின் எண்ணிக்கை; அப்போதும் கௌரவர்களே எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது; பதினெட்டாம் நாள் போர் தொடங்கியது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த இரவு கழிந்ததும், துரியோதனன், உமது படைவீரர்கள் அனைவரிடமும், "வலிமைமிக்கத் தேர்வீரர்களே, ஆயுதம் தரிப்பீராக" என்றான்.(1) மன்னனின் ஆணையைக் கேட்ட அந்தப் போர்வீரர்கள் தங்கள் கவசங்களைப் பூட்டத் தொடங்கினர். சிலர் தங்கள் தேர்களில் வேகமாகத் தங்கள் குதிரைகளைப் பூட்டினர், வேறு சிலர் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(2) யானைகளை ஆயத்தம் செய்வது தொடங்கப்பட்டது. காலாட்படைவீரர்கள் ஆயுதங்களைத் தரிக்கத் தொடங்கினர். ஆயிரக்கணக்கான வேறு சிலர், தேர்த்தட்டுகளில் தரைவிரிப்புகளைப் பரப்பத் தொடங்கினர்.(3) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, படைவீரர்களின் உற்சாகத்தை அதிகரிக்க இசைக்கருவிகளின் ஒலி அங்கே எழுந்தது.(4) அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சரியான நிலைகளில் நிறுத்தப்பட்ட துருப்பினர் அனைவரும், கவசமணிந்து கொண்டு, மரணத்தையே தங்கள் இலக்காகத் தீர்மானித்து நிற்பதாகத் தெரிந்தது.(5)
மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தங்கள் தலைவனாக்கிக் கொண்ட கௌரவர்களின் பெரும் தேர்வீரர்கள், தங்கள் துருப்புகளைப் பிரித்துப் படைப்பிரிவுகளாக அணிவகுத்து நின்றனர்.(6) பிறகு, கிருபர், கிருதவர்மன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சல்லியன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரோடு கூடிய உமது போர்வீரர்கள் அனைவரும், இன்னும் உயிரோடு எஞ்சியிருக்கும் பிற மன்னர்களும், உமது மகனை {துரியோதனனைச்} சந்தித்து, அவர்களில் எவரும் தனி நபராகவோ, துணையின்றியோ பாண்டவர்களுடன் போரிடுவதில்லை என்ற தீர்மானத்தை எட்டினர்.(7,8) அவர்கள், "பாண்டவர்களுடன் எவன் எந்த ஆதரவுமின்றித் தனியாகப் போரிடுவானோ, எவன் போரிட்டுக் கொண்டிருக்கும் தன் தோழனைக் கைவிடுவானோ, அவன் ஐந்து முக்கியப் பாவங்களையும் {பஞ்சமாபாதகங்களால் விளையும் பாவங்களையும்}, சிறு பாவங்கள் {உபபாதகங்களால் விளையும் பாவங்கள்} அனைத்தையும் அடைவான்" என்றனர். மேலும் அவர்கள், "நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து {ஒருவரையொருவர் காத்துக் கொண்டு} எதிரியுடன் போரிடுவோமாக" என்றனர்.(9) ஒருவருக்கொருவர் இவ்வாறு ஒரு தீர்மானத்தை எட்டிய அந்தப் பெரும் தேர்வீரர்கள், மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தங்கள் தலைமையில் கொண்டு, தங்கள் எதிரிகளை எதிர்த்து விரைந்து சென்றனர்.(10)
அதேபோல, பாண்டவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும்போரில் தங்கள் துருப்புகளை அணிவகுத்துக் கொண்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கௌரவர்களோடு போரிடுவதற்காக அவர்களை எதிர்த்துச் சென்றனர்.(11) ஓ! பாரதர்களின் தலைவரே, கலங்கும் பெருங்கடலுக்கு ஒப்பான ஒலியுடன் கூடியதும், தேர்கள் மற்றும் யானைகளின் விளைவால் அற்புதமாகத் தெரிந்ததுமான அந்தப் படையானது அலைகள் பெருகிய ஆழமான பெருங்கடலின் தன்மையை விரைவில் அடைந்தது" {என்றான் சஞ்சயன்}.(12)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "துரோணர், பீஷ்மர் மற்றும் ராதையின் மகன் {கர்ணன்} ஆகியோரின் வீழ்ச்சியை நான் கேட்டிருக்கிறேன். இப்போது சல்லியன் மற்றும் என் மகனின் {துரியோதனனின்} வீழ்ச்சியை எனக்குச் சொல்வாயாக.(13) ஓ! சஞ்சயா, உண்மையில் சல்லியன் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் எவ்வாறு கொல்லப்பட்டான்? மேலும் எனது மகன் துரியோதனன், பெரும் வலிமை கொண்ட பீமசேனனால் எவ்வாறு கொல்லப்பட்டான்?" என்று கேட்டான்.(17)
சஞ்சயன் {திடுதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் போரை (உமக்கு) விவரிக்கும்போதே, மனித உடல்களின் அழிவையும், யானைகள் மற்றும் குதிரைகள் இழப்பையும் {மனவுறுதியுடன்} பொறுமையாகக் கேட்பீராக.(15) ஓ! மன்னா, துரோணர், பீஷ்மர் மற்றும் சூதன் மகன் {கர்ணன்} ஆகியோர் வீழ்த்தப்பட்ட பிறகு, ஓ! ஐயா, போரில் பார்த்தர்கள் அனைவரையும் சல்லியன் கொன்றுவிடுவான் என்ற நம்பிக்கை உமது மகன்களின் இதயத்தில் பலமடைந்தது.(16) அந்நம்பிக்கையைத் தன் இதயத்தில் வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் ஆறுதலை அடைந்த உமது மகன் துரியோதனன், ஓ! பாரதரே, போரில் வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நம்பி, தன்னைப் பாதுகாவலனுள்ளவனாகக் கருதிக் கொண்டான்.(17) கர்ணனின் வீழ்ச்சியில் பார்த்தர்கள் சிங்க முழக்கங்கள் செய்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தார்தராஷ்டிரர்களின் இதயங்களைப் பேரச்சம் பீடித்திருந்தது.(18) முறையாக அவனுக்கு உறுதி கூறிய, மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, ஓ! ஏகாதிபதி, அனைத்து வகையிலும் மங்கலகரமான ஏற்பாடுகளுடன் கூடிய ஒரு பெரும் வியூகத்தை அமைத்து,(19) போரில் பார்த்தர்களை எதிர்த்துச் சென்றான். மத்ரர்களின் அந்த வீர மன்னன் {சல்லியன்}, மிகப் பலமானதும், பெரும் வேகத்தில் கணைகளை ஏவவல்லதுமான தன் அழகிய வில்லை அசைத்துக் கொண்டே சென்றான்.(20)
அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சல்லியன்}, சிந்துவில் பிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட முதன்மையான வாகனத்தில் ஏறிச் சென்றான். அவனது தேரை ஓட்டிய சாரதி, அவ்வாகனத்தினை பிரகாசமாகத் தெரியும்படி செய்தான்.(21) எதிரிகளை நொறுக்கும் துணிச்சல்மிக்கவனான அந்த வீரன் (சல்லியன்), ஓ! ஏகாதிபதி, உமது மகன்களின் அச்சங்களை விலக்கியபடி, அத்தேரால் பாதுகாக்கப்பட்டு நின்றான்.(22) அப்படி (போருக்கு) முன்னேறிச் செல்கையில், கவசம் பூண்டிருந்த அந்த மத்ரர்களின் மன்னன், வியூகத்தின் தலைமையில் நின்று கொண்டு, துணிச்சல் மிக்க மத்ரகர்களின் மற்றும் வெல்லப்பட முடியாத கர்ணனின் மகன்கள் ஆகியோரின் துணையுடன் சென்றான் (23) இடப்பக்கத்தில், கிருதவர்மன், திரிகர்த்தர்களால் சூழப்பட்டு நின்றான். வலப்பக்கத்தில், கௌதமர் (கிருபர்), சகர்கள் மற்றும் யவனர்களுடன் கூடி நின்றார்.(24) பின்புறத்தில், அஸ்வத்தாமன், காம்போஜர்களால் சூழப்பட்டு நின்றான். நடுவில், துரியோதனன், முதன்மையான குரு போர்வீரர்களால் சூழப்பட்டு நின்றான்.(25) சுபலனின் மகனான சகுனியும், வலிமைமிக்கத் தேர்வீரனான உலூகனும், பெரும் குதிரைப்படை மற்றும் பிற துருப்புகளுடன் முன்னேறிச் சென்றனர்.(26)
எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்களில் வலிமைமிக்க வில்லாளிகள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, உமது துருப்புகளை எதிர்த்து விரைந்தனர்.(27) திருஷ்டத்யும்னன், சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர், சல்லியனின் படையை எதிர்த்து பெரும் வேகத்தோடு சென்றனர்.(28) அப்போது தன் துருப்புகளின் துணையுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, சல்லியனைக் கொல்லும் விருப்பத்தால், அவனை மட்டுமே எதிர்த்துச் சென்றான்.(29) எதிரிகளின் பெருங்கூட்டங்களைக் கொல்பவனான அர்ஜுனன், பெரும் வில்லாளியான கிருதவர்மனையும், சம்சப்தகர்களையும் எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தான்.(30) பீமசேனன் மற்றும் சோமகர்களில் பெரும் தேர்வீரர்கள் ஆகியோர், ஓ! ஏகாதிபதி, போரில் தங்கள் எதிரிகளைக் கொல்ல விரும்பி கிருபரை எதிர்த்து விரைந்தானர்.(31) தங்கள் துருப்புகளின் துணையுடன் கூடியவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன்-சகாதேவன்} இருவரும், சகுனியையும், அவர்களது படைகளின் முன்னணியில் இருந்த பெரும் தேர்வீரனான உலூகனையும் எதிர்த்து விரைந்தனர்.(32) அதேபோலவே உமது படையைச் சேர்ந்த ஆயிரமாயிரம் போர்வீரர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றனர்" {என்றான் சஞ்சயன்}.(33)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "வலிமைமிக்க வில்லாளிகளான பீஷ்மர், துரோணர் மற்றும் பெரும் தேர்வீரனான கர்ணன் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பிறகு, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருதரப்பினரின் எண்ணிக்கையும் குறைந்த பிறகு, உண்மையில், பெரும் ஆற்றலைக் கொண்ட பார்த்தர்கள் போரில் மீண்டும் கோபமடைந்த போது, ஓ! சஞ்சயா, படைகள் ஒவ்வொன்றின் பலமும் என்னவாக இருந்தது?" என்று கேட்டான்.(34,35)
சஞ்சயன்{திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா, அந்தச் சந்தர்ப்பத்தில் நாமும், எதிரியும் போருக்காக எவ்வாறு நின்றோம்? அந்த இரண்டு படைகளின் பலமும் அப்போது என்னவாக இருந்தது என்பதைக் கேட்பீராக.(36) ஓ! பாரதக் குலத்தின் காளையே,
பதினோராயிரம் {11,000} தேர்கள், பத்தாயிரத்து எழுநூறு {10,700} யானைகள்,(37) இருநூறாயிரம் {2லட்சம்} குதிரைகள், முப்பது லட்சம் {3 Million} காலாட்படை வீரர்கள் ஆகியவையே உமது படையின் {கௌரவப்படையின்} பலமாக இருந்தது.(38)
ஆறாயிரம் {6,000} தேர்கள், ஆறாயிரம் {6,000} யானைகள், பத்தாயிரம் {10,000} குதிரைகள், பத்து லட்சம் {1 Million} காலாட்படை வீரர்கள் ஆகியவை, ஓ! பாரதரே,(39) அந்தப் போரில் எஞ்சிய பாண்டவப் படையாக இருந்தது[1]. ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவர்களே போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(40)
கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு கௌரவ பாண்டவ படைகளின் எண்ணிக்கை |
ஆறாயிரம் {6,000} தேர்கள், ஆறாயிரம் {6,000} யானைகள், பத்தாயிரம் {10,000} குதிரைகள், பத்து லட்சம் {1 Million} காலாட்படை வீரர்கள் ஆகியவை, ஓ! பாரதரே,(39) அந்தப் போரில் எஞ்சிய பாண்டவப் படையாக இருந்தது[1]. ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவர்களே போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(40)
[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "பாரதர்களுள் சிறந்தவரே! பதினோராயிரம் தேர்களும், பதினோராயிரத்தெழுநூறு யானைகளும் இருந்தன. பாரதரே! அந்த யுத்தத்தில் இரண்டு லக்ஷம் குதிரைகள் நிறைந்திருந்தன. மூன்று கோடி காலாட்களும் இருந்தார்கள். உமது சைனியம் இவ்வளவிருந்தது. பாரதரே! பாண்டவர்களுடைய சேனையில் ஆறாயிரம் தேர்களும், ஆறாயிரம் யானைகளும், பதினாயிரம் குதிரைகளும், இரண்டு கோடி காலாட்படையும் யுத்தத்தில் மிகுந்திருந்தது" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "உமது தரப்பில் பதினோராயிரம் ரதர்களும், பத்தாயிரத்தெழுநூறு யானைகளும், இருநூறாயிரம் குதரைகளும் இருந்தன. ஓ பாரதக் குலத்தின் காளையே, அதில் மூன்று கோடி மனிதர்களும் இருந்தனர். ஓ பாரதக் குலத்தவரே, பாண்டவர்களின் படையில் ஆறாயிரம் ரதர்களும், ஆறாயிரம் யானைகளும், பத்தாயிரம் குதிரைகளும் இருந்தன. ஒரு கோடி காலாட்படையினரும் இருந்தனர்" என்றிருக்கிறது. கர்ணன் இறந்த பிறகும் கூடக் கௌரவர்களே படையளவில் பெரியவர்களாக இருந்திருக்கின்றனர். கௌரவர்ப்படையை ஒப்பிடுகையில் பாண்டவர்கள் தரப்பில் குதிரைப்படையின் அளவு மிகச் சொற்பமாக இருக்கிறது.
இவ்வழியில் தங்கள் படைகளைப் பிரித்துக் கொண்ட நாங்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டும், வெற்றியடையும் விருப்பத்தாலும், எங்களை மத்ரர்களின் ஆட்சியாளனின் {சல்லியனின்} கட்டுப்பாட்டில் நிறுத்திக் கொண்டு பாண்டவர்களை எதிர்த்துச் சென்றோம்.(41) அதே போல, மனிதர்களில் புலிகளும், வெற்றியில் விருப்பம் கொண்டவர்களுமான அந்தத் துணிச்சல்மிக்கப் பாண்டவர்களும், பெரும்புகழைக் கொண்ட பாஞ்சாலர்களும் {எங்களை எதிர்த்துப்} போரிட வந்தனர்.(42) இவ்வாறே, ஓ! ஏகாதிபதி, ஓ! தலைவா, அந்த மனிதப் புலிகள் அனைவரும் தங்கள் எதிரிகளைக் கொல்லும் விருப்பத்தால், நாளின் வைகறைப் பொழுதில் {விடியற்காலையில்} ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(43) அதன் பிறகு, ஒருவரையொருவர் அடிப்பதிலும், கொல்லுவதிலும் ஈடிபட்டிருந்த உமது துருப்புகளுக்கும், எதிரிகளுக்கும் இடையில் கடுமையானதும், பயங்கரமானதுமான ஒரு போர் தொடங்கியது" {என்றான் சஞ்சயன்}.(44)
-----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 08ல் உள்ள சுலோகங்கள் : 44
ஆங்கிலத்தில் | In English |