Yudhishthira consulted Krishna! | Shalya-Parva-Section-07 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்கு உறுதிகூறிய சல்லியன்; சல்லியனைப் படைத்தலைமையில் நிறுவிய துரியோதனன்; கர்ணன் கொல்லப்பட்ட துயர் மறைந்து, மகிழ்ச்சியடைந்த கௌரவர்கள் சல்லியனை வாழ்த்தியது; படைத்தலைமையில் சல்லியன் நிறுவப்பட்டதை அறிந்து கிருஷ்ணனுடன் ஆலோசித்த யுதிஷ்டிரன்; சல்லியனைப் புகழ்ந்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைத் தவிர வேறு எவராலும் சல்லியனைக் கொல்ல முடியாது என்று சொன்ன கிருஷ்ணன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "(குரு) மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த வீர ஏகாதிபதி (சல்லியன்), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனுக்கு மறுமொழியாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) "ஓ! வலிய கரங்களைக் கொண்ட துரியோதனா, ஓ! சொல்திறமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. தேரில் இருக்கும் இரு கிருஷ்ணர்களையும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களாக நீ கருதுகிறாய். எனினும், அவ்விருவரும் ஒன்றாகச் சேர்ந்தாலும்கூடக் கரங்களின் வலிமையில் எனக்கு இணையாக மாட்டார்கள்.(2) பாண்டவர்களைக் குறித்துச் சொல்ல வேறு என்ன தேவை இருக்கிறது? போரின் முன்னணியில் கோபத்துடன் போரிடும்போது, தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் அடங்கிய மொத்த உலகமும் ஆயுதங்களுடன் எதிர்த்து வந்தாலும், அவர்களுடன் என்னால் போரிட முடியும்.(3) போரில் கூடியிருக்கும் பார்த்தர்களையும், சோமகர்களையும் நான் வெல்வேன். நான் உன் துருப்புகளுக்குத் தலைவனாவேன் என்பதில் ஐயமில்லை.(4) நம் எதிரிகளால் விஞ்சமுடியாத ஒரு வியூகத்தை நான் வகுப்பேன். ஓ! துரியோதனா, இதையே நான் உனக்குச் சொல்வேன். இதில் எந்த ஐயமுமில்லை" என்றான் {சல்லியன்}.(5)
(சல்லியனால்) இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் துரியோதனன், ஓ! பாரதர்களில் சிறந்தவரே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, காலந்தாழ்த்தாமல் மகிழ்ச்சியுடன் தன் துருப்புகளுக்கு மத்தியில் வைத்து, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி மத்ரர்களின் மன்னன் {சல்லியன்} மீது புனித நீரை ஊற்றினான்[1].(6) சல்லியனுக்குத் தலைமைப் பொறுப்புக் கொடுக்கப்பட்ட பிறகு, ஓ! பாரதரே, உமது துருப்புகளுக்கு மத்தியில் உரத்த சிங்க முழக்கங்களும், பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளும் எழுந்தன.(7) கௌரவப் போர்வீரர்களும், மத்ரகர்களுக்கு மத்தியில் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து, போர்க்கள ரத்தினமான அரசன் சல்லியனை இவ்வார்த்தைகளில் புகழ்ந்தனர்.(8) அவர்கள், "ஓ! மன்னா {சல்லியா}, வெற்றி உனதாகட்டும். நீ நீடூழி வாழ்வாயாக. கூடியிருக்கும் எதிரிகள் அனைவரையும் கொல்வாயாக. உனது கரங்களின் வலிமையைப் பெற்ற பிறகு, பெரும் பலம் கொண்ட தார்தராஷ்டிரர்கள், ஓர் எதிரியுமற்ற பரந்த உலகை ஆளட்டும்.(9) தேவர்களும், அசுரர்களும் அடங்கிய மூலவுலங்கங்களையும் போரில் நீ வெல்ல வல்லவன் என்பதால், அழியக்கூடியவர்களான சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது?" என்றனர்.(10)
[1] முறைப்படி படையின் தலைமையில் அவனை நிறுவினான். தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதனின் தலை மீது புனித நீரை ஊற்றி தலைவனாக நிறுவுவதே இச்சடங்காகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவ்வாறு புகழப்பட்ட அந்த மத்ரகர்களின் வலிமைமிக்க மன்னன் {சல்லியன்} பண்படாத ஆன்மாக்களைக் கொண்டோரால் அடைய முடியாத பெருமகிழ்ச்சியை அடைந்தான்.(11) சல்லியன், "ஓ! மன்னா {துரியோதனா}, போரில் பாண்டவர்களையும், பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வேன், அல்லது அவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வேன்.(12) இன்று (போர்க்களத்தில்) அச்சமற்றுத் திரியப்போகும் என்னை இந்த உலகம் காணட்டும். இன்று, பாண்டுவின் மகன்கள் அனைவரும், வாசுதேவனும், சாத்யகியும், (13) திரௌபதியின் மகன்களும், திருஷ்டத்யும்னனும், சிகண்டியும், பிரபத்ரகர்கள் அனைவரும்(14) என் ஆற்றல், என் வில்லின் பெரும் வலிமை, எனது வேகம், என் ஆயுதங்களின் சக்தி, என் கரங்களின் பலம் ஆகியவற்றைப் போரில் காணப் போகிறார்கள்.(15) இன்று பார்த்தர்களும், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் அனைவரும், என் கரங்களின் பலத்தையும், நான் கொண்டிருக்கும் ஆயுத செல்வத்தையும் காணட்டும்.(16) இன்று என் ஆற்றலைக் காணும் பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், எதிர்நடவடிக்கை எடுக்க விரும்பி, பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றப் போகிறார்கள்.(17) இன்று நான் பாண்டவர்களின் துருப்புகளை அனைத்துப் பக்கங்களிலும் முறியடிப்பேன். ஓ! தலைவா {துரியோதனா}, துரோணர், பீஷ்மர் மற்றும் சூதன் மகன் {கர்ணன்} ஆகியோரை நான் போரில் விஞ்சுவேன். ஓ! கௌரவா {துரியோதனா}, உனக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக நான் களத்தில் திரிவேன்" என்றான் {சல்லியன்}."(18)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "சல்லியன் தலைமைப் பொறுப்பில் நிறுவப்பட்ட பிறகு, ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, அதற்கு மேலும் உமது துருப்புகளில் எவரும், கர்ணன் குறித்து எத்துயரும் அடையவில்லை.(19) உண்மையில், துருப்புகள் உற்சாகமும், மகிழ்ச்சியுமடைந்தனர். பார்த்தர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகவும், மத்ரர்களின் ஆட்சியாளனுடைய பலத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும் அவர்கள் கருதினர்.(20) பெரும் மகிழ்ச்சியை அடைந்த உமது துருப்புகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கி, பெரும் உற்சாகம் அடைந்தனர்.(21)
உமது படையின் அந்தக் கூச்சல்களைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், க்ஷத்திரியர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போது, விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(22) "ஓ! மாதவா {கிருஷ்ணா}, மத்ரர்களின் ஆட்சியாளரும், போர் வீரர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுபவரும், பெரும் வில்லாளியுமான சல்லியரை, அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, தன் படையின் தலைவராக்கியிருக்கிறான்.(23) ஓ! மாதவா, நடந்ததை அறிந்த பிறகு, எது நன்மையோ அதைச் செய்வாயாக. நீயே எங்கள் தலைவனும், பாதுகாவலனுமாவாய். அடுத்து செய்யப்பட வேண்டியதைச் செய்வாயாக" என்றான்{யுதிஷ்டிரன்}.(24)
அப்போது, வாசுதேவன் {கிருஷ்ணன்}, ஓ! ஏகாதிபதி, அம்மன்னிடம் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, ஆர்த்தாயனியை {சல்லியரை} உண்மையாக {உள்ளபடியே} நான் அறிவேன்.(25) ஆற்றலும், பெரும் சக்தியும் கொண்ட அவர், மிகவும் சிறப்புமிக்கவராவார். அவர் போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவரும், பெரும் கரநளினம் கொண்டவரும் ஆவார்(26) நான் அந்த மத்ரர்களின் ஆட்சியாளரை {சல்லியரை} பீஷ்மர், அல்லது துரோணர், அல்லது கர்ணன் ஆகியோருக்கு இணையானவர், அல்லது, ஒருவேளை அவர்களுக்கும் மேம்பட்டவர் என்றே நினைக்கிறேன்.(27) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, போரிடும் சல்லியருக்கு ஒப்பான ஒரு போர்வீரனை நன்கு சிந்தித்த பிறகும் நான் காணவில்லை.(28) போரில் அவர் {சல்லியர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிகண்டி, அர்ஜுனன், பீமர், சாத்யகி, திருஷ்டத்யும்னன் ஆகியோரைவிட வலிமைமிக்கமிக்கவராவார்.(29) ஓ! ஏகாதிபதி, சிங்கம், அல்லது யானையின் ஆற்றலைக் கொண்டவரான அந்த மத்ரர்களின் மன்னன், அண்ட அழிவின் போது உயிரினங்களுக்கு மத்தியில் கோபத்துடன் திரியும் அந்தகனைப் போலவே போரில் அச்சமில்லாமல் திரியப் போகிறார்.(30)
ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, புலிக்கு இணையான அற்றலைக் கொண்ட உம்மைத் தவிர, போரில் அவருக்கு இணையான வேறு எவரையும் நான் காணவில்லை.(31) ஓ! குரு குலத்தின் மகனே, போரில் கோபத்தால் தூண்டப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளரைக் கொல்ல இந்த மொத்த உலகத்திலோ, சொர்க்கத்திலோ கூட உம்மைத்தவிர வேறொரு மனிதன் இல்லை.(32) நாளுக்கு நாள் போரில் ஈடுபட்டு உமது துருப்புகளை அவர் கலங்கடித்து வருகிறார். இதற்காகவே, சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போல, போரில் சல்லியரைக் கொல்வீராக.(33) திருதராஷ்டிரர் மகனால் {துரியோதனனால்} மதிப்புடன் நடத்தப்படும் அந்த வீரர்கள் போரில் வெல்லப்பட முடியாதவராவார். போரில் மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியரே} வீழ்ந்த பிறகே, நீர் அடையப்போகும் வெற்றி உறுதியானதாகும். அவர் கொல்லப்பட்டால், பரந்த தார்தராஷ்டிரப் படையும் கொல்லப்படும்.(34) ஓ! ஏகாதிபதி, ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, இப்போது என் வார்த்தைகளைக் கேட்கும் நீர், வலிமைமிக்கத் தேர்வீரரான அந்த மத்ரர்களின் ஆட்சியாளரை எதிர்த்துச் செல்வீராக.(35)
ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, அசுரன் நமுசியைக் கொன்ற வாசவனை {இந்திரனைப்} போல அந்தப் போர்வீரரை நீர் கொல்வீராக. அவர் {சல்லியர்} உமது தாய்மாமன் என்பதை நினைத்து இங்கே எந்தக் கருணையும் காட்டப்பட வேண்டிய தேவை இல்லை. க்ஷத்திரியக் கடமைகளை உமக்கு முன் கொண்டு, அந்த மத்ரர்களின் ஆட்சியாளரைக் கொல்வீராக.(36) பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய அடியற்ற பெருங்கடல்களைக் கடந்துவிட்டு, மாட்டுக்குளம்படி தடமேயான {அத்தடத்தில் உள்ள நீரேயான} சல்லியரிடம் நீரும், உம்மைப் பின்தொடர்பவர்களும் மூழ்கிவிடாதீர்.(37) உமது மொத்த தவச் சக்தியையும், உமது க்ஷத்திரிய ஆற்றலையும் போரில் வெளிப்படுத்துவீராக. அந்தத் தேர்வீரரை {சல்லியரைக்} கொல்வீராக" என்றான் {கிருஷ்ணன்}.(38)
இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், பாண்டவர்களால் வழிபடப்படுபவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, அந்த மாலை வேளையில் தன் பாசறைக்குச் சென்றான்.(39) கேசவன் சென்றதும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் மற்றும் சோமகர்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பி, உடலில் இருந்து ஈட்டிகள் பிடுங்கப்பட்ட யானை ஒன்றைப் போல அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கினான்.(40) பெரும் வில்லாளிகளான பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும், கர்ணனுடைய வீழ்ச்சியின் விளைவில் திளைத்து, அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கினர்.(41) நோய் விலகியதும், வில்லாளிகள் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் நிரம்பியதுமான அந்தப் பாண்டவர்களின் படையானது, ஓ! ஐயா, கர்ணனின் படுகொலையால் கிடைத்த வெற்றியின் விளைவால் அவ்விரவில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்" {என்றான் சஞ்சயன்}.(42)
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 42
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 42
ஆங்கிலத்தில் | In English |