The funeral of the kings! | Stri-Parva-Section-26 | Mahabharata In Tamil
(ஸ்திரீவிலாப பர்வம் - 11) [ஸ்ராத்த பர்வம் - 01]
பதிவின் சுருக்கம் : காந்தாரிக்குப் பதிலுரைத்த கிருஷ்ணன்; போரில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையையும்; அவர்கள் அடைந்த கதியையும் யுதிஷ்டிரனிடம் விசாரித்த திருதராஷ்டிரன்; போரில் வீழ்ந்த வீரர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்யுமாறு ஆணையிட்ட யுதிஷ்டிரன்; ஈமக் காரியங்களைச் செய்த விதுரன்...
"அப்போது அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, "எழு, ஓ! காந்தாரி, உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாமல் எழுவாயாக. உன் குற்றத்தாலேயே இந்தப் பரந்த பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.(1) உன் மகன் துரியோதனன், தீய ஆன்மாக் கொண்டவனாகவும், பொறாமைக் குணம் கொண்டவனாகவும், ஆணவம் நிறைந்தவனாகவும் இருந்தான். அவனது {துரியோதனனது} தீச்செயல்களை மெச்சிக் கொண்டு, அவற்றை நல்லவையாக நீ கருதுகிறாய்.(2) பகைமைகளின் உடல்வடிவமான அவன், மிகக் கொடூரனாகவும், பெரியோரின் சொல்லுக்குக் கீழ்ப்படியாதவனாகவும் இருந்தான். உன் குற்றங்கள் அனைத்தையும் என் மேல் ஏன் நீ சுமத்துகிறாய்?(3) இறந்தவனுக்காகவோ, தொலைந்தவனுக்காகவோ, ஏற்கனவே நேர்ந்துவிட்ட எதற்காகவோ வருந்தும் ஒருவன் மேலும் துயரத்தையே அடைகிறான். துயரத்தில் ஈடுபடுவதால் அஃது இருமடங்காகப் பெருகுகிறது.(4) மறுபிறப்பாள {பிராமண} வகையைச் சேர்ந்த ஒரு பெண், தவப்பயிற்சிகளுக்கான வாரிசைப் பெறுகிறாள்; மாடு சுமையைக் சுமப்பதற்கான {காளையை} வாரிசைப் பெறுகிறது. பெண்குதிரையானது வேகமாக ஓடும் வாரிசை {குதிரையைப்} பெறுகிறது, சூத்திரப் பெண்ணானவள், பணிவிடை செய்பவர்களை வாரிசாகப் பெறுகிறாள், வைசியப் பெண்ணானவள், கால்நடை காப்பவர்களை வாரிசாகப் பெறுகிறாள். எனினும், உன்னைப் போன்ற இளவரசியோ, கொல்லப்படுவதற்காகவே மகன்களைப் பெறுகிறாள் {மரணத்தை விரும்பும் க்ஷத்திரியனை வாரிசாகப் பெறுகிறாள்}" என்றான் {கிருஷ்ணன்}".(5)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தனக்கு ஏற்பில்லாத வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட காந்தாரியின் இதயம் துயரால் மிகவும் கலக்கமடைந்தாலும் அமைதியாகவே அவள் இருந்தாள்.(6)
எனினும் அரசமுனியான திருதராஷ்டிரன், மடமையினால் எழும் துயரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நீதிமானான யுதிஷ்டிரனிடம் விசாரிக்கும் வகையில்,(7) "ஓ! பாண்டுவின் மகனே, இந்தப் போரில் வீழ்ந்தவர்களின் எண்ணிக்கையையும், உயிரோடு தப்பியவர்களின் எண்ணிக்கையையும் நீ அறிந்திருந்தால் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(8)
யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, "இந்தப் போரில் நூற்று அறுபத்தாறு கோடியே, இருபதாயிரம் {166,00,20,000} பேர் [1] கொல்லப்பட்டனர்.(9) தப்பிய வீரர்கள், இருபத்துநாலாயிரத்து நூற்று அறுபத்தைந்து {24,165} பேராவர்" என்றான்.(10)
[1] கங்குலியில் ‘One billion six hundred and sixty millions and twenty thousand men" என்று இருக்கிறது. அதாவது மேற்கத்திய எண்முறையின் படி 1,660,020,000 ஆகும். இந்திய எண்முறையின் படி, 166,00,20,000 ஆகும். கும்பகோணம் பதிப்பில், "அரசரே, இந்த யுத்தத்தில் பத்துகோடி வீரர்களும், இருபதினாயிரம் வீரர்களும், அறுபத்தாறு கோடி வீரர்களும் கொல்லப்பட்டார்கள், ராஜேந்திரரே, பாரதரே, காணாமற்போன வீரர்களின் தொகை பதினாலாயிரமும் வேறு பதினாலாயிரமும் நூறாயிரமும் அறுபதினாயிரமுமாம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் "One billion, twenty thousand and sixty-six crore.. The total is thus 1,660,020,000" என்றிருக்கிறது. ஒருவேளை இது குதிரைகள், யானைகள், பிற விலங்குகள் அடங்கிய தொகையாகவும் இருக்கலாம். இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை 134,35,65,000 ஆகும்.
திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, நீ அனைத்தையும் அறிந்தவனாக இருப்பதால், மனிதர்களில் முதன்மையானோரான அவர்கள் என்ன கதியை அடைந்தார்கள் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(11)
யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, "உண்மை ஆற்றலைக் கொண்ட அந்தப் போர்வீரர்கள், அந்தக் கடும் போர்க்களத்தில் தங்கள் உடல்களை உற்சாகமாகக் கைவிட்டு, இந்திரலோகத்தை அடைந்தனர்.(12) மரணம் தவிர்க்க முடியாதது என்பதை அறிந்த அவர்களில், உற்சாகமாக அதை {மரணத்தைச்} சந்தித்தவர்கள், கந்தர்வர்களின் தோழமையை அடைந்தனர்.(13) போர்க்களத்தில் இருந்து புறமுதுகிடும்போதோ, இடத்தை {உயிர்வாழ} இரந்து கேட்ட போதோ ஆயுத முனைகளில் வீழ்ந்த போர்வீரர்கள் குஹ்யர்களின் உலகை அடைந்தனர்.(14) க்ஷத்திரியத்தன்மையின் கடமைகளை நோற்று, போரில் இருந்து தப்புவது இழுக்கெனக் கருதி, எதிரிகளை எதிர்த்துச் செல்லும்போது கூரிய ஆயுதங்களால் சிதைக்கப்பட்டு வீழ்ந்தவர்கள் அனைவரும் பிரகாசமான வடிவை ஏற்றுப் பிரம்மலோகத்தை அடைந்தனர்.(15,16) எஞ்சிய போர்வீரர்கள், புறப்போர்க்களத்தில் எவ்வாறோ இறந்தவர்கள் உத்தரக் குருக்களின் உலகை அடைந்தனர்" என்றான்.(17)
திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மகனே, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனைப் போலவே, அறிவின் எந்தச் சக்தியைக் கொண்டு நீ இவற்றையெல்லாம் காண்கிறாய்? ஓ! வலிய கரங்கொண்டோனே, நான் கேட்கத்தகுந்தவன் என நினைத்தால் நீ எனக்கு இதைச் சொல்வாயாக" என்று கேட்டான்.(18)
யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, "உமது கட்டளையின் பேரில் நான் காட்டில் திரிந்து கொண்டிருக்கையில், புனிதமான இடங்களுக்குப் பயணப்பட்ட நிகழ்வின்போது {தீர்த்தயாத்திரை செய்த போது}, நான் இந்த வரத்தை அடைந்தேன். லோமசர் என்ற தெய்வீக முனிவரைச் சந்தித்து, அவரிடம் இருந்து ஆன்மப் பார்வை என்ற வரத்தை அடைந்தேன்.(19) மேலும் மற்றொரு பழைய நிகழ்வின் போது, நான் அறிவின் சக்தியால் இரண்டாம் பார்வையை நான் அடைந்தேன்" என்றான்.(20)
திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, "நண்பர்களற்றவர்கள் உடையதும், நண்பர்கள் உள்ளவர்களுடையதுமான உடல்களை முறையான சடங்குகளுடன் நமது மக்கள் எரிப்பது அவசியம் இல்லையா?(21) கவனிக்க யாருமற்றவர்களையும், புனித நெருப்பற்றவர்களையும் நாம் என்ன செய்வது? நமக்காகப் பல கடமைகள் காத்திருக்கின்றன. நாம் யாருடைய (இறுதிச்) சடங்குகளைச் செய்ய வேண்டும்?(22) ஓ! யுதிஷ்டிரா, இப்போது கழுகுகளாலும், பறவைகளாலும் இழுத்து உடல் கிழிக்கப்படுபவர்கள், தங்கள் செயல்களின் தகுதியால் {புண்ணியத்தால்} அடைய வேண்டிய அருள் உலகங்களை அடைய வேண்டாமா?" என்று கேட்டான்".(23)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்ட பெரும் ஞானியான யுதிஷ்டிரன், (கௌரவர்களின் புரோகிதரான) சுதர்மன், தௌமியர், சூத வகையைச் சேர்ந்த சஞ்சயன்,(24) பெரும் ஞானியான விதுரன், குரு குலத்தின் யுயுத்சு, இந்திரசேனன் தலைமையிலான தன் அனைத்துப் பணியாட்கள், தன்னோடிருந்த அனைத்துச் சூதர்கள் ஆகியோரை அழைத்து,(25) "கவனித்துக் கொள்ள ஆளில்லாமல் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் அழிவடையாமல் இருக்க {அழுகாமல் இருக்க}, அவர்களுக்கான ஈமச் சடங்குகளை முறையாக நடத்தச் செய்யுங்கள்.(26) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுடைய ஆணையின் பேரில், விதுரன், சஞ்சயன், சுதர்மன், தௌமியர், இந்திரசேனன் மற்றும் பிறரால்,(27) இத்தகு நிகழ்வுகளில் பயன்படும் சந்தனக்கட்டைகள், வேறு வகைக் கட்டைகள் {அகிற்கட்டைகள், காலீயகக் கட்டைகள்}, தெளிந்த நெய், எண்ணெய், நறுமணப் பொருட்கள், விலைமதிப்புமிக்கப் பட்டாடைகள், அனைத்து வகைத் துணிகள்(28), உலர்ந்த மரங்களின் {கட்டைகளின்} பெருங்குவியல்கள், முறிந்த தேர்கள், பல்வேறு ஆயுதங்கள் ஆகியவற்றைச் சேகரித்து,(29) முறையாக ஈமச்சிதைகள் அமைக்கப்பட்டு, கொல்லப்பட்ட மன்னர்களுக்குரிய சடங்குகள் அவரவர்க்கான முறையான வரிசையில் செய்யப்பட்டு, தாமதமில்லாமல் {அச்சிதை} எரியூட்டப்பட்டது.(30)
சுடர்மிக்க அந்த நெருப்புகளில், தெளிந்த நெய்த்தாரைகளை ஊற்றி, துரியோதனன், அவனது நூறு சகோதரர்கள், சல்லியன், சலன், மன்னன் பூரிஸ்ரவஸ்,(31) ஓ! பாரதா {ஜனமேஜயா} மன்னன் ஜெயத்ரதன், அபிமன்யு, துச்சாசனன் மகன், {துரியோதனனின் மகனான} லக்ஷ்மணன், மன்னன் திருஷ்டகேது, பிருஹந்தன், சோமதத்தன், நூற்றுக் கணக்கான சிருஞ்சயர்கள், மன்னன் க்ஷேமதன்வன், விராடன், துருபதன், பாஞ்சாலர்களின் இளவரசன் சிகண்டி, பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், வீர யுதாமன்யு, உத்தமௌஜஸ், கோசலர்களின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, திரௌபதியின் மகன்கள், சுபலனின் மகனான சகுனி, அசலன், விருஷகன், மன்னன் பகதத்தன், கர்ணன், பெருங்கோபம் கொண்ட அவனது {கர்ணனின்} மகன் {விருஷசேனன்}}, பெரும் வில்லாளிகளான கேகய இளவரசர்கள், வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரிகர்த்தர்கள், ராட்சசர்களின் இளவரசனான கடோத்கசன், பகனின் சகோதரன், ராட்சசர்களில் முதன்மையானவனான அலம்புசன், மன்னன் ஜலசந்தன், மற்றும் பிற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மன்னர்கள் ஆகியோரின் உடல்கள் எரியூட்டப்பட்டன.(32-38)
இறந்தோரில் சிறப்புமிக்கச் சிலருக்கு பித்ருமேத சடங்குகளும், சிலருக்கும் சாமப்பாடல்கள் {சாமவேதப் பாடல்கள்} உரைப்பும், சிலருக்கு இறந்தோரைக் குறித்த புலம்பல்களும் நடந்தன.(39) சாமங்கள் மற்றும் ரிக்குகளின் உரத்த ஒலியாலும், பெண்களின் ஓலங்களாலும் அவ்விரவில் அனைத்து உயிரினங்களும் திகைப்படைந்தன.(40) புகையற்றவையாக, பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த ஈமச்சிதை நெருப்புகள், ஆகாயத்தில் மேகங்களால் மறைக்கப்பட்ட ஒளிக்கோள்களைப் போலத் தெரிந்தன.(41) பல்வேறு மாகாணங்களில் இருந்து வந்து இறந்திருந்தோரில், முற்றிலும் நண்பர்களற்றவர்களாக இருந்தவர்களின் உடல்கள், ஆயிரக்கணக்கான குவியல்களாகக் குவிக்கப்பட்டு, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரிலும், விதுரனின் மூலமும், நல்விருப்பத்தினாலும் அன்பினாலும் உந்தப்பட்டு, வேகமாகச் செயல்படும் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களால் {தன்னார்வத் தொண்டர்களால்} உலர்ந்த விறகால் அமைக்கப்பட்ட சிதையில் எரிக்கப்பட்டன.(42,43) இறுதிச்சடங்குகளைச் செய்யச் செய்த குரு மன்னன் யுதிஷ்டிரன், திருதராஷ்டிரனைத் தன் தலைமையில் கொண்டு, கங்கையாற்றை நோக்கிச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(44)
ஸ்திரீ பர்வம் பகுதி – 26 ல் உள்ள சுலோகங்கள் : 44
ஆங்கிலத்தில் | In English |