Gandhari cursed Krishna! | Stri-Parva-Section-25 | Mahabharata In Tamil
(ஸ்திரீவிலாப பர்வம் - 10) [ஸ்திரீ பர்வம் - 11]
பதிவின் சுருக்கம் : காம்போஜ மன்னன் சுதக்ஷிணன், கலிங்க மன்னன் சுருதாயுஷ், மகத மன்னன் ஜயத்சேனன், கோசல மன்னன் பிருஹத்பலன் திருஷ்டத்யும்னனின் மகன்கள், கேகேயச் சகோதரர்கள் ஐவர், பாஞ்சால மன்னன் துருபதன், சேதி நாட்டு மன்னன் திருஷ்டகேது, திருஷ்டகேதுவின் மகன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; தன் மகன்கள் எரிக்கப்படப் போவதை நினைத்து மயக்கமடைந்து கீழே விழுந்தது; பேரழிவைத் தடுக்காமல் அலட்சியமாக இருந்ததற்காகக் கிருஷ்ணனைச் சபித்த காந்தாரி; சாபத்தை மயக்கப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட கிருஷ்ணன்...
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "ஓ! மாதவா, காம்போஜ படுக்கைவிரிப்பில் சுகமாகக் கிடக்கத்தகுந்தவனும், காம்போஜர்களின் தடுக்கப்பட முடியாத ஆட்சியாளனும், காளையின் கழுத்தைக் கொண்டவனுமான இந்த வீரன் {காம்போஜ மன்னன் சுதக்ஷிணன்}, புழுதிக்கு மத்தியில் கிடப்பதைப் பார்.(1) பெரும் துயரில் பீடிக்கப்பட்டிருக்கும் அவனது மனைவி, முன்பு சந்தனக்குழம்பால் பூசப்பட்டதும், இப்போது குருதி படிந்திருப்பதுமான அவனது கரத்தைக் கண்டு அழுது கொண்டிருக்கிறாள்.(2)
உண்மையில் அந்த அழகி, "அழகிய உள்ளங்கைகளாலும், அருள்நிறைந்த விரல்களாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பவையும், அணைக்கையில் ஒருபோதும் ஒரு கணமும் இன்பம் என்னைவிட்டு விலகாதபடி செய்தவையுமான இந்த உமது இரு கரங்களும், இப்போதும் இரு பரிகங்களுக்கு ஒப்பானவையாகவே இருக்கின்றன.(3) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {சுதஷிணரே}, உம்மை இழந்திருக்கும் நான் என்ன கதியை அடையப்போகிறேன்" என்று சொல்கிறாள். இனிய மெல்லிய குரலைக் கொண்ட அந்தக் காம்போஜ ராணி, உணர்ச்சிகளுடன் நடுங்கியவாறே ஆதரவற்றவளாக அழுது கொண்டிருக்கிறாள்.(4) அங்கே இருக்கும் அழகிய பெண்களின் கூட்டத்தைப் பார். தேவர்களால் அணியப்படும் மாலைகள் சூரியனுக்கு வெளிப்பட்டாலும் அழகாக இருப்பது போலத் துன்பத்தால் களைப்படைந்தாலும், வெப்பத்தால் வாட்டப்பட்டாலும் அவர்களது வடிவங்களின் அழகு குலையவில்லை.(5)
ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இரண்டு அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வலிமைமிக்கக் கரங்களுடன் கூடிய கலிங்கர்களின் வீர ஆட்சியாளன் {சுருதாயுஷ்} தரையில் கிடப்பதைப் பார்.(6)
ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மகத ஆட்சியாளனான ஜயத்சேனனைச் சுற்றி நின்று அழும் அந்த மகதப் பெண்களைப் பார்.(7) அகன்ற விழிகளையும், இனிய குரலையும் கொண்ட அந்தப் பெண்களின் அழகான மற்றும் மென்மையான ஓலங்கள் என் இதயத்தை அதிகம் திகைப்படைச் செய்கின்றன.(8) ஆபரணங்கள் அனைத்தும் தளர்ந்த நிலையில் துயரால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருப்பவர்களும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகளில் ஓய்வெடுக்கத் தகுந்தவர்களுமான அந்த மகதப் பெண்கள், ஐயோ, இப்போது வெறுந்தரையில் கிடக்கின்றனர்.(9)
மேலும், கோசலர்களின் ஆட்சியாளனும், தங்கள் தலைவனுமான இளவரசன் பிருஹத்பலனைச் சுற்றியிருக்கும் வேறு சில பெண்கள், உரத்த ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.(10) அபிமன்யுவால், கரங்களின் முழு வலிமையுடன் துளைக்கப்பட்ட கணைகளை, அவனது {பிருஹத்பலனின்} உடலில் இருந்து பிடுங்கும் அந்தப் பெண்கள், மீண்டும் மீண்டும் மயங்கி விழுங்கின்றனர்.(11) ஓ! மாதவா, களைப்பாலும், சூரியனின் கதிர்களாலும் பீடிக்கப்படும் அந்த அழகிய பெண்களின் முகங்கள் இப்போது ஒளிமங்கிய தாமரைகளைப் போலத் தெரிகின்றன.(12)
இளம்வயதுடையவர்களும், தங்க மாலைகள் மற்றும் அழகிய அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும் துணிச்சல்மிக்கவர்களுமான திருஷ்டத்யும்னனின் மகன்கள், துரோணரால் கொல்லப்பட்டு அங்கே கிடக்கின்றனர்.(13) சுடர்மிக்க நெருப்பில் விழும் பூச்சிகளைப் போல அவர்கள் அனைவரும், நெருப்பறையைப் போன்ற தேரையும், தழல்களேயான விற்களையும், விறகுகளேயான கணைகள், ஈட்டிகள் மற்றும் கதாயுதங்களையும் கொண்ட துரோணரின் மேல் பாய்ந்து எரிக்கப்பட்டனர்.(14)
அதே போலவே, பெரும் துணிவைக் கொண்டவர்களும், அழகிய அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஐந்து கேகேய சகோதரர்களும், துரோணரை நோக்கித் திரும்பிய அவர்களின் முகங்களுடன் அவரால் {துரோணரால்} கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கின்றர்.(15) புடம்போட்ட தங்கத்தின் காந்தியைக் கொண்டவையும், தங்கத்தாலானவையுமான கவசங்கள், கொடிமரங்கள், தேர்கள், மாலைகள் சுடர்மிக்கப் பல நெருப்புகளைப் போலப் பூமியில் பிரகாசமான ஒளியைச் சிந்துகின்றன.(16)
ஓ! மாதவா {கிருஷ்ணன்}, துரோணரால் வீழ்த்தப்பட்ட மன்னன் துருபதன், ஒரு பெருஞ்சிங்கத்தால் கொல்லப்பட்டுக் காட்டில் கிடக்கும் வலிமைமிக்க யானையைப் போல அங்கே கிடப்பதைப் பார்.(17) ஓ! தாமரைக்கண்ணா, வெண்மையான நிறம் கொண்ட பாஞ்சாலர்களின் மன்னனுடைய பிரகாசமான குடையானது, கூதிர்கால ஆகாயத்தின் சந்திரனைப் போல இருக்கிறது.(18) அந்த முதிய மன்னனின் மனைவியரும், மருமகள்களும், துயரால் பீடிக்கப்பட்டு, ஈமச்சிதையில் அவனது {துருபதனது} உடலை எரித்துவிட்டு, அந்தச் சிதையைத் தங்கள் வலப்பக்கம் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.(19)
அதோ அங்கே, உணர்வுகளை இழந்தவர்களான அந்தப் பெண்கள், துரோணரால் கொல்லப்பட்டவனும், பெரும் வில்லாளியும், துணிச்சல்மிக்கவனும், சேதிகளில் காளையுமான திருஷ்டகேதுவை அகற்றிக் கொண்டிருக்கின்றனர்.(20) ஓ! மதுசூதனா, எதிரிகளை நொறுக்குபவனான இந்தப் பெரும் வில்லாளி {திருஷ்டகேது}, துரோணரின் பல ஆயுதங்களைக் கலங்கடித்துவிட்டு, காற்றால் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தைப் போல உயிரை இழந்து இங்கே கிடக்கிறான்.(21) ஐயோ, துணிச்சல்மிக்கச் சேதிகளின் ஆட்சியாளனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான இந்தத் திருஷ்டகேது, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்றுவிட்டு, தானே உயிரையிழந்து இங்கே கிடக்கிறான்.(22) ஓ! ரிஷிகேசா, சேதிகளின் ஆட்சியாளனுடைய உடல் ஊனுண்ணும் பறவைகளால் கிழிக்கப்பட்டாலும், இன்னும் அழகிய குழல்களுடனும், அழகிய காது குண்டலங்களுடனும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அதை {அந்த உடலைச்} சுற்றி அவனுடைய மனைவியர் அமர்ந்திருக்கின்றனர்.(23) அந்தப் பெண்களில் முதன்மையானோர், தசார்ஹ குலத்தில் பிறந்த அந்த வீர திருஷ்டகேதுவின் நெடிய உடலைத் தங்கள் மடியில் கிடத்திக் கொண்டு, சோகத்தால் அழுது கொண்டிருக்கின்றனர்.(24)
ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, அழகிய குழல்களையும், சிறந்த காது குண்டலங்களையும் கொண்டவனும், துரோணரின் கணைகளால் போரில் கொல்லப்பட்ட திருஷ்டகேதுவின் மகனைப் பார்.(25) அவன், தன் தந்தை எதிரிகளுடன் போரிட்ட போது ஒருபோதும் அவனை விட்டு அகவில்லை. ஓ! மதுசூதனா, மரணத்தில்கூட அவன் தன் வீரத் தந்தையை விட்டு அகலவில்லை பார்.(26)
அதே போலவே, பகைவர்களைக் கொல்பவனான எனது மகனின் {துரியோதனின்} மகனும் {பேரனும்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான லக்ஷ்மணனும் அவனது தந்தையான துரியோதனனைப் பின்தொடர்ந்து சென்றுவிட்டான்.(27)
ஓ! கேசவா {கிருஷ்ணா}, இளவேனில் காலத்தில் பூத்துக் குலுங்கும் இரு சால மரங்கள் புயலால் வீழ்த்தப்பட்டதைப் போல அவந்தியின் இரு சகோதரர்களான விந்தனும் அனுவிந்தனும் போரக்களத்தில் கிடப்பதைப் பார்.(28) தங்கக் கவசம் பூண்டவர்களும், தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், வாள்கள் மற்றும் விற்களை இன்னும் தரித்திருப்பவர்களுமாக அவர்கள் கிடக்கிறார்கள். காளை போன்ற கண்களைக் கொண்டவர்களும், பிரகாசமான மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அவர்கள் இருவரும் போர்க்களத்தில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறார்கள்.(29)
பாண்டவர்களும், நீயும், துரோணர், பீஷ்மர், விகர்த்தனன் மகன் கர்ணன், கிருபர்,(30) துரியோதனன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான ஜெயத்ரதன், சோமதத்தன், விகர்ணன், துணிச்சல்மிக்கவனான கிருதவர்மன் ஆகியோரிடமிருந்து தப்பியிருப்பதால் நீங்கள் நிச்சயம் கொல்லப்பட முடியாதவர்களே.(31) காலத்தால் கொண்டுவரப்பட்ட மறுபாடுகளைப் பார். ஆயுதபலத்தால் தேவர்களையே கொல்லவல்லவர்களான அந்த மனிதர்களில் காளையர், இறுதியில் அவர்களே கொல்லப்பட்டவர்கள் ஆனார்கள்.(32) ஓ! மாதவா, மனிதர்களில் காளையரான இந்த வீரர்கள் க்ஷத்திரியப் போர்வீரர்களால் கொல்லப்பட்டதால், விதியால் கொண்டு வர முடியாத எதுவும் இல்லை என்பதில் ஐயமில்லை.(33) ஓ! கிருஷ்ணா, உபப்லாவ்யத்தில் இருந்து நீ தூது வெல்லாமல் சென்ற போதே, பெருஞ்சுறுசுறுப்பைக் கொண்டவர்களான என் மகன்கள் கொல்லப்பட்டார்கள் (என நான் கருதினேன்).(34) சந்தனுவின் மகனும் {பீஷ்மரும்}, விதுரனும், "உன் பிள்ளைகளிடம் பாசங்கொள்வதை நிறுத்துவாயாக" என்றனர்.(35) அம்மனிதர்கள் சொன்ன எதுவும் நடக்காமல் போகாது. ஓ! ஜனார்த்தனா, என் மகன்கள் விரைவில் சாம்பலாக எரிக்கப்படப் போகிறார்கள்" என்றாள் {காந்தாரி}".(36)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்த வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, துயரால் தன் உணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தாள். தன் உறுதியைக் கைவிட்ட அவள், துயரால் தன் உணர்வுகளை இழந்தவளானாள்.(37) தன் மகன்களின் மரணத்தால் கவலையாலும், கோபத்தாலும் நிறைந்த அவள் {காந்தாரி}, கலங்கிய இதயத்துடன் கிருஷ்ணனே அனைத்துக் குற்றத்திற்கும் காரணமென்றாள்.
அந்தக் காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் எரிக்கப்பட்டுவிட்டனர். ஓ! ஜனார்த்தனா, அவர்கள் இவ்வாறு நிர்மூலத்தையடைந்தபோது, நீ ஏன் அவர்களிடம் அக்கறையற்றவனாக இருந்தாய்?(39) பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களையும், பெரும் படையையும் கொண்டவனான நீ, இந்தப் படுகொலையைத் தடுக்க வல்லவனாக இருந்தாய். நீ நாநலமிக்கவனாகவும் {பேச்சுச் சாமர்த்தியம் கொண்டவனாகவும்}, (அமைதியைக் கொண்டு வரும்) சக்தி படைத்தவனாகவும் இருந்தாய்.(40) ஓ! மதுசூதனா, ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, இந்த அண்டப்பேரழிவின் {மொத்த அழிவின்} போது, வேண்டுமென்றே நீ அலட்சியமாக இருந்ததால், இந்தச் செயலின் கனியை நீ அறுவடை செய்ய வேண்டும்.(41) ஓ! சக்கரத்தையும், கதாயுதத்தையும் தரிப்பவனே, என் கணவரிடம் கடமையுணர்வுடன் காத்திருந்ததால் {பணிவிடை செய்ததால்}, நான் அடைந்திருப்பதும், அடைவதற்கரிதானதுமான அந்த சிறு தகுதியை {புண்ணியத்தைக்} கொண்டு, நான் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(42) ஓ! கோவிந்தா, குருக்களும், பாண்டவர்களும் ஒருவரையொருவர் கொன்ற போது, நீ அகற்றையற்றவனாக இருந்ததால், நீயே உன் சொந்த உறவினர்களைக் கொல்பவனாவாய்.(43) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இன்றிலிருந்து முப்பத்தாறு {36} வருடங்களில், உன் உறவினர்களையும், நண்பர்களையும், மகன்களையும் நீயே கொல்லச் செய்த பிறகு, காட்டிற்குள், அருவருப்பான முறையில் நீ அழிவையடைவாய்.(44) மகன்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் இழந்த இந்தப் பாரதக் குலப் பெண்களைப் போலவே, உன் குலத்தின் பெண்களும் அழுது புலம்புவார்கள்" என்று சபித்தாள் {காந்தாரி}".(45)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட உயரான்ம வாசுதேவன் {கிருஷ்ணன்}, மதிப்புக்குரிய காந்தாரியிடம் பேசும் வகையில், மயக்கப் புன்னகையுடன் இந்த வார்த்தைகளை அவளிடம் சொன்னான்,(46) "என்னைத் தவிர இவ்வுலகில் விருஷ்ணிகளை அழிக்கவல்லவர்கள் எவரும் இல்லை. இதை நான் நன்கறிவேன். அதைக் கொண்டுவரவே நான் முயற்சிப்பேன். ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவளே, இவ்வாறு சபித்ததால், அப்பணியை நிறைவேற்றவே நீ எனக்கு உதவியிருக்கிறாய்.(47) விருஷ்ணிகள், மனிதர்களாலோ, தேவர்களாலோ, தானவர்களாலோ யாராலும் கொல்லப்பட முடியாதவர்கள். எனவே, அந்த யாதவர்களே ஒருவரையொருவர் வீழ்த்துவார்கள்" என்றான்.(48) தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} இந்த வார்த்தைகளைச் சொன்னதும், பாண்டவர்கள் திகைப்படைந்தனர். கவலையால் நிறைந்த அவர்கள் அனைவரும், உயிரில் நம்பிக்கையற்றவர்களானார்கள்" {என்றார் வைசம்பாயனர்}.(49)
*********ஸ்திரீ உபபர்வம் முற்றும்*********
ஸ்திரீ பர்வம் பகுதி – 25ல் உள்ள சுலோகங்கள் : 49
ஆங்கிலத்தில் | In English |