மஹாபாரதத்தின் பதினெட்டுப் பர்வங்களில், பதினோரு பர்வங்கள் நிறைவடைந்திருக்கின்றன. மீதம் எஞ்சியிருக்கும் பர்வங்கள் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கே இருக்கும். விளையாட்டாகத் தொடங்கிய இப்பணி இவ்வளவு தொலைவுக்கு இடைவெளியேதுமின்றிச் சீராக நடந்து கொண்டிருப்பது பரமன் செயலே.
இந்தப் பயணம் தொடங்கிய காலத்திலிருந்து நடந்து வந்த சுவடுகளைத் திரும்பிப் பார்க்கிறேன். இந்த மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் என் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கையில் அப்போது வருத்தத்தை அளித்தவை இப்போது மகிழ்ச்சியைத் தருகின்றன. "இந்தக் காலத்தில் இதுவெல்லாம் தேவையா?", "இதைச் செய்யும் காலத்தில் வேறு ஏதாவது உருப்படியான வேலையைச் செய்யலாமே", "பைத்தியக்காரனைப் போல, செய்யும் தொழிலைக் கெடுத்துக் கொள்ளாதே", "வயதான பிறகு செய்ய வேண்டிய வேலைகளை ஏன் இப்போது செய்து கொண்டிருக்கிறாய்?", "எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன, இதற்கென்ன அவசியம்?" என்பது போன்ற கேள்விகளுடன் சிலர், "மதம் அபினைப் போன்றது, மதத்திற்குத் துணை போவன இதுபோன்ற இதிகாசங்கள். இஃது உனக்குத் தேவையில்லாத வேலை. உன்னைப் போன்றோர்தான் சமூகத்தின் முதல் எதிரிகள்" என்று அந்நிய சித்தாந்த அடிப்படையில் பேசியவர்கள், "இதனால் உனக்கு என்ன லாபம் கிடைக்கிறது? நேரத்தை விரயம் செய்து, குப்பைகளைப் பெருக்கிக் கொண்டிருக்கிறாய்." என்று பொருளாதாரம் பேசியவர்கள், எந்த அடிப்படையும் புரியாமல், "நீ இவ்வளவு பெரிய மதவாதி என்று தெரியாமல் போயிற்றே" என்று அங்கலாய்த்தவர்கள் என இதுபோன்றவர்களை எதிர்கொண்டதை நினைத்தால் இன்று எள்ளற்சிரிப்பும், மகிழ்ச்சியுமே எஞ்சுகிறது. அவர்கள் ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டு, அதே பல்லவியைத் தான் இன்னும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். எனினும், இவர்களையும் எதிர்கொண்டு, என் தினசரி அலுவல்களையும் கவனித்துக் கொண்டு, இரவில் மட்டுமே, அதுவும் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் மட்டுமே மொழிபெயர்ப்புப் பணியைச் செய்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குள் பதினோரு பர்வங்களின் மொழிபெயர்ப்பை நிறைவு செய்திருப்பது எனக்கே ஆச்சரியத்தை அளிக்கிறது. இதில் பரமன் துணையை அப்பட்டமாக என்னால் உணர முடிகிறது. நெஞ்சம் நிறைகிறது.
அடுத்துப் பனிரெண்டாம் பர்வமான சாந்தி பர்வத்தின் மொழிபெயர்ப்பைத் தீபாவளி அன்று தொடங்கிவிட வேண்டும் என்ற ஆவலில் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பதிவுகள் என மொத்தம் பதினெட்டு நாட்களில் நாற்பத்தைந்து {45} பகுதிகளைக் கொண்ட சௌப்திக{18} மற்றும் ஸ்திரீ{27} பர்வங்களின் மொழிபெயர்ப்பை வெகு விரைவாக நிறைவு செய்திருக்கிறேன். என் ஆசைப்படி தீபாவளியன்று "சாந்தி பர்வத்தின்" முதல் பகுதியை மொழிபெயர்க்கப் போவதைப் பெறற்கரிய பேறாகவே கருதுகிறேன். விஜய தசமி அன்று தொடங்கியதும், பதினெட்டு பகுதிகளைக் கொண்டதுமான சௌப்திக பர்வத்தின் மொழிபெயர்ப்பை பத்து நாட்களிலும், அதற்கடுத்ததும், இருபத்தேழு பகுதிகளைக் கொண்டதுமான ஸ்திரீ பர்வத்தின் மொழிபெயர்ப்பை எட்டு நாட்களிலும் நிறைவு செய்ய முடிந்தது மனநிறைவைத் தருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் நண்பர் ஜெயவேலன் அவர்கள் அலுவல் காரியமாகச் சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்தது. "ஏங்க, நான் ஊருக்குப் போறதுக்குள்ள சௌப்திக பர்வம் முடிச்சிடுவீங்க இல்ல" என்று கேட்டார். "ஆமாம் முடிஞ்சிடும்னுதான் நினைக்கிறேன்" என்றேன். வெகு துரிதமாக மொழிபெயர்ப்பைச் செய்து, எட்டாம் தேதி இரவு மூன்று மணி அளவில் சௌப்திக பர்வம் மொழிபெயர்ப்பை நிறைவுசெய்தேன். காலையில் எழுந்து பார்த்தால் பிளாகரில் இறுதிப் பதிவு திருத்தப்பட்டிருக்கிறது, பணம் விழுந்திருப்பதாக மொபைலில் வங்கியின் எஸ்எம்ஸ்-ம் வந்திருக்கிறது. யார்? என்ன? என்ற விபரம் இல்லை. ரூ.1,800/- எண்களைக் கண்டவுடனேயே தெரிந்துவிட்டது அனுப்பியது யாரென்று. ஜெயவேலன் அவர்களுக்கு அன்று அதிகாலையில் தான் ஃபிளைட். அதிகாலை மூன்று மணிக்கு இட்ட பதிவை அதற்குள்ளாகத் திருத்தி, வங்கியில் பணமும் செலுத்திவிட்டு சிங்கப்பூர் சென்றிருக்கிறார் சடையப்பர். சென்னைக்குத் திரும்பியதும் என்னை அழைத்த அவர், "ஏங்க ஸ்திரீ பர்வம் 27 பகுதிகளா இருந்தாலும், மொத்தம் எண்ணூற்று மூன்று {803} சுலோங்கள்தாங்க. தீபாவளிக்குள்ள முடிச்சிடுவீங்கல்ல" என்றார். "ஆமாங்க தீபாவளிக்கு சாந்தி பர்வத்தை ஆரம்பிச்சுடனும்னுதான் நானும் நினைச்சிருக்கேன்" என்றேன். அடுத்தப் எட்டாவது தினத்திற்குள் இதோ ஸ்திரீ பர்வமும் நிறைவடைந்துவிட்டது. நேற்று குடும்பத்துடன் வெளியே செல்ல வேண்டியிருந்தது. ஜெயவேலன் அவர்களிடம் முன்பே சொல்லியிருந்தேன். அந்த நேரத்தில் அவர் வந்துவிட்டால், வெகுதூரத்தில் இருந்து வரும் அவருக்கு ஏமாற்றமாக இருக்கும் என்பதற்காகவே முன்பே சொல்லிவிட்டேன். அந்த நேரத்திற்குள் வங்கியில் ரூ.2,700/- சேர்ந்துவிட்டது. இந்த ஐந்து வருடத்தில் முழுமஹாபாரதம் மொழிபெயர்ப்புக்காக இதுவரை ஜெயவேலன் அவர்கள் ரூ.1,43,400/- கொடுத்திருக்கிறார்.
ஜெயவேலன் மட்டுமல்ல, நன்கொடையாக யார் பணமளித்தாலும் அதை ஒரு பதிவிட்டுச் சுட்டிக் காட்டுவது வெளிப்படைத் தன்மைக்காகவே. ஆனால், இதையே கொண்டுகூடச் சிலர், "உனக்குப் பணம் வருகிறது, அதனால் இதைச் செய்கிறாய். ஊர் எக்கேடுகெட்டாலென்ன உனக்குப் பணம் வர வேண்டும் என்பதற்காக நாட்டையும் கெடுக்கிறாய்" என்று ஒரு சில முகநூல் பதிவுகளில் பின்னூட்டமே இட்டிருக்கின்றனர். நான் இந்த ஐந்து வருடத்தில் இதுவரை பெற்றிருக்கும் பணத்திலேயே ஜெயவேலன் அவர்களின் பங்கு பெரியது. அதை "சுவடுகளைத் தேடி" பதிவுகளில் வெளிப்படையாகத் தெரிவித்து வந்தாலும், அப்போதைக்கப்போது யாராவது தரும் பணத்தையும் தனிப்பதிவுகளில் குறிப்பிட்டே வந்திருக்கிறேன். அந்த வகையில் இந்த ஐந்து வருடங்களில் ஜெயவேலன் அவர்கள் தந்ததையும் சேர்த்து எனக்கு ரூ.2,08,400 வந்திருக்கிறது. இதன் மூலம் நான் நாட்டைக் கெடுக்கிறேனா, வளர்க்கிறேனா என்பது நாட்டுக்கே வெளிச்சம். இப்படிச் சொல்லக்கூடியவர்கள் யார் என்பதும் நாட்டுக்கே தெரியும். அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று நான் ஒருபோதும் வருந்தியதில்லை. இப்படிப்பட்ட கேள்விகளும் வருவதால் எதையும் வெளிப்படையாகவே சொல்லி வைப்போம் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்.
இந்த மொழிபெயர்ப்பைத் தொடங்கிய காலத்திலிருந்து நான் பெரிதும் அஞ்சியது, மிகக் கடினமான சாந்தி பர்வத்தின் மொழிபெயர்ப்பை எப்படிச் செய்யப்போகிறோம் என்பதற்காகத்தான். கும்பகோணம் பதிப்பைச் செய்த ம.வீ.ராமானுஜாச்சாரியார் இந்த அச்சத்தினாலேயே முதலிலேயே சாந்தி பர்வத்தின் மொழிபெயர்ப்பைத் தொடங்கியதாக அவரது முன்னுரையில் அவரே சொல்லியிருப்பதைக் காணமுடிகிறது. இந்தப் பதினோரு பர்வங்களில் கிடைத்த மொழிபெயர்ப்பு பயிற்சியும் நிச்சயம் இந்தச் சாந்தி பர்வ மொழிபெயர்ப்பில் பெரிதும் உதவும். இதோ மொழிபெயர்ப்பைத் தொடங்கப் போகிறேன். பரமன் அருள் துணைநிற்க வேண்டும்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
201710181809