Monday, February 12, 2018

மஹாபாரதத்திற்கான இன்றைய தேவை


சென்னை அண்ணா நாற்றாண்டு நூலகத்தில் 10.2.2018 அன்று உரையாற்றி, கலந்துரையாடலில் ஈடுபட ஒரு வாய்ப்புக் கிடைத்தது.


உரையாற்றுவது நமக்குக் குதிரைக் கொம்பு. அதுவும் ஒரே நாளைக்குள் தயாராக வேண்டும். எனவே, வேண்டாம் இந்த வீர விளையாட்டு. கவிப்பேரரசர்களே எழுதி வைத்துப் படிக்கிறார்கள், வெறும் பெயரில் மட்டுமே பேரரசன் ஏன் அவ்வாறு படிக்கக்கூடாது. நாமும் எழுதியே எடுத்துச் சென்றுவிடுவோமே என்று ஐந்து பக்கங்களுக்கு உரையைத் தட்டெழுதி அச்செடுத்தும்விட்டேன்.

நிகழ்ச்சிக்கும் சென்றுவிட்டேன். மைக்கின் முன் நின்று பேப்பரை மேஜையில் வைத்து ஒரு சில வரிகளைப் படித்தபோதுதான் தெரிந்தது, எழுதி வைத்துப் படிப்பதும் அவ்வளவு சாதாரணமான காரியமல்ல என்பது. பேப்பரை மூடி வைத்துவிட்டேன். மனத்தில் இருந்த சில செய்திகளை இயல்பான நடையிலேயே பேசினேன். தொடர்ந்த சீரான பேச்சாக அஃது அமையவில்லையென்றாலும். என் மனத்துக்கு நிறைவாகத்தான் இருந்தது. ஆனால் நான் குறித்து வைத்திருந்த பலவற்றைப் பேச மறந்தே போனேன். இருப்பினும் என்ன? நான் தயாரித்திருந்த அந்த உரையை இப்போது பதிந்தாலும் தவறில்லை என்று நமது முழுமஹாபாரதம் வலைப்பூவில் பதிகிறேன்.


******

மஹாபாரதத்திற்கான இன்றைய தேவை

மஹாபாரதத்திற்கான இன்றைய தேவை என்ற தலைப்பைப் பார்க்கும்போதே மஹாபாரதம் இன்று தேவையா? இல்லையா? என்ற கேள்வி எழுவது இயல்பு. அந்த விவாதத்திற்குள் புகும் முன், மஹாபாரதம் என்றால் என்ன, அதை நாம் இதுவரை எப்படிப் பார்த்துக் வந்திருக்கிறோம் என்பதைப் பார்ப்போம்.

மஹாபாரதம் ஐந்தாம் வேதம் என்று சொல்லப்படுகிறது. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் செல்யூகஸ் நிகேடரால், சந்திரகுப்த மௌரியனின் அவைக்கு அனுப்பப்பட்ட கிரேக்க பயணி மெகஸ்தனீஸ் மகாபாரதப் பாத்திரமான கிருஷ்ணனைக் குறித்துச் சொல்கிறார். தமிழில் சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து 14:5-7, சிறுபாணாற்றுப்படை 238-241, கலித்தொகை 25, 52, 101, 104, 108 ஆகியவற்றில் மஹாபாரதத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. நளவெண்பா, அல்லி அரசாணி மாலை போன்றவை மஹாபாரதத்தின் துணைக்கதைகளே. மஹாபாரதத்தின் மிகப் பழமையான உரை கி.மு.400 காலக்கட்டத்தைச் சார்ந்தது. குப்தர்கள் காலத்தில் அது நிறைவை எட்டியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஒன்றுசேர்ந்த இலியட் மற்றும் ஒடிசியின் அளவைவிட மஹாபாரதம் பத்து மடங்கு பெரியது. உலகத்தில் அளவிலும், பொருளிலும் பெரிய இலக்கிய படைப்பு மகாபாரதமே.

ஒரு பருந்து மேலே உயரத்தில் அமர்ந்து கொண்டு நிலத்தை நோக்குவது போல நாம் மஹாபாரதத்தை நோக்கினால் நம் கண்களுக்கும் அப்பால் அதன் வீச்சு பரந்திருப்பதை நம்மால் உணர முடியும். அதன் பிரம்மாண்டம் வியக்க வைக்கும்.

மஹாபாரதம் எவற்றையெல்லாம் தன்னுள் கொண்டுள்ளது? ஒரு கதையையா? பல கதைகளையா? கதைத் தொகுப்புகளையா? துதிகளையா? ஆன்ம விளக்கங்களையா? ஒரு தத்துவத்தையா? பல தத்துவங்களையா? நில வவரிப்புகளையா? நீதிகளையா? இன்றுவரை நாம், ஒரு யானையை உணர்ந்து குருடர்கள் விவரிப்பதைப் போலத் தான் மஹாபாரதத்தை விவரித்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் பருந்து பார்வையாகப் பார்க்க நம் கைகளில் எப்போதும் முழுமையான பாரதம் இருந்ததில்லை.

அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தவர்களும் கூட அதன் பிரம்மாண்டத்தை உணர்ந்தாலும் பருந்தைப் போலவே நிலத்தில் இறைச்சியைத் தேடுவதைப் போல, தங்களுக்குத் தேவையான விஷயங்களை மட்டுமே மஹாபாரதத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். திறந்த மனத்துடன் மஹாபாரதத்தில் உள்ளவற்றை உள்ளபடியே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டோர் சொற்பமான வெகு சிலரே. மொத்த மக்கட்தொகையில் ஏதோ ஒரு சிலர் மட்டுமே முழுமையாக இல்லையெனினும், கிட்டத்தட்ட என்ற அளவுக்காவது மஹாபாரதத்தை அறிந்திருக்கிறோம். அஃது இன்றைய நிலைமட்டுமல்ல; என்றைக்கும் எப்போதும் உள்ள நிலைதான்.

ஆறுகளைச் சொல்லும்போது, அவை உயிரோட்டமுள்ளவை, ஜீவனுள்ளவை என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போலவே மஹாபாரதமும் உயிரோட்டமுள்ளதுதான். சாகாவரம் பெற்ற உயிரைக் கொண்ட படைப்பு அது. காலத்திற்கேற்ப அது பல்வேறு வடிவங்களையெடுக்கிறது. மொழியால் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. காலந்தோறும் மஹாபாரதத்தைக் கொண்டு செய்யப்பட்டிருக்கும் கதைகள், நாடகங்கள், தெருக்கூத்துகள், நாவல்கள், திரைப்படங்கள், இன்னும் பிற கலைப்படைப்புகள் எண்ணற்றவை. அதைத் தொகுக்கும் ஒரு முயற்சியைச் செய்தாலே அதுவே ஒரு பெரிய ஆய்வுக்கான படைப்பாக மாறிவிடும். அப்படிப்பட்ட ஒரு முயற்சி தமிழ் இந்து வலைத்தளத்தில் ஆர்வி அவர்களால் செய்யப்பட்டது.

இப்படிப் பல்வேறு வகையில் வளர்ந்து வரும் இந்த மஹாபாரத ஆக்கங்களின் வரிசை இன்று எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கைவண்ணத்தால் உருவாகும் வெண்முரசாக மாறி நிற்கிறது. வெண்முரசு உலகச் சாதனை செய்யப்போகும் படைப்பு என்றால் அது மிகையல்ல. இப்படிப்பட்ட ஒரு படைப்பை அளிக்க எத்தனை வருட உழைப்பு தேவை என்பதை மஹாபாரதத்தை அறிந்தவர்களால் மட்டுமே உணர முடியும். பிறப்பு முதலே மஹாபாரதத்திலேயே ஊறி வந்த ஒரு மனிதனால் மட்டுமே இந்தக் காரியத்தைச் செய்ய முடியும். அஃது இன்றைக்கு "எழுத்து அசுரன்" என்று சொல்லப்படும் ஜெயமோகன் அவர்களால் மட்டுமே சாத்தியமாக முடியும். எழுத்துக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அந்த மாபெரும் படைப்பாளி தமிழுக்குக் கிடைத்தது, இயற்கையின் ஆகச் சிறந்த கொடையென்றால் அது மிகையல்ல.

சரி மஹாபாரதத்தின் கதைதான் என்ன?

தன் கண் முன்னே பிறந்து, வளர்ந்து, உயர்ந்த கதியை அடைந்த தன் பேரப்பிள்ளைகளின் கதையை ஒரு தாத்தா சொல்கிறார். அந்தத் தாத்தாவின் பெயர் வியாசர். அந்தப் படைப்பை ஜயம் என்றும் அழைக்கிறார். ஜெயம் என்றால் வெற்றி அல்லது வெற்றி முழக்கம் என்பது பொருள்.

அர்ஜுனனின் பேரப்பிள்ளையான ஜனமேஜயன் ஒரு வேள்வி நடத்துகிறான். அதற்கு வருகைதரும் தன் முப்பாட்டனான வியாசரிடம் பாண்டவ கௌரவக் கதையை உரைக்குமாறு கேட்கிறான். அவர் தன் சீடரான வைசம்பாயனரைச் சொல்லச் சொல்கிறார். வைசம்பாயனர் அதைப் பாரதம் என்றழைக்கிறார். அந்தப் பாரதத்தில் ஒரு லட்சம் சுலோகங்கள் உண்டு எனவும், அதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறும் ஜனமேஜயனிடம் வேண்டுகிறார். அந்தக் காலத்தில் வேள்வியின் இடைவேளைகளின் போது சில புராணக் கதைகளைப் பேசுவது வழக்கம். ஆனால் இதுவோ பெரும்படைப்பு, அதனால் வேள்வியின் முடிவில் இந்தப் பாரதம் சொல்லப்படுகிறது.

அங்கே அமர்ந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த சௌதி எனும் சூதர், நைமிசாரண்யத்தில் சௌனகரின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த 12 வருட வேள்விக்குச் செல்கிறார். ஹஸ்தினாபுரத்தில் வைசம்பாயனர் சொன்ன மஹாபாரதத்தைக் கேட்டு வந்ததாக அங்கே இருப்பவர்களிடம் சொல்கிறார். அங்கு அமர்ந்திருந்த முனிவர் பெருமக்களுக்குச் சௌதி சொன்னதே இன்று நம்மிடம் இருக்கும் மஹாபாரதம் ஆகும்.

வியாசர் செய்த ஜயம் 24,000 சுலோகங்களைக் கொண்டதெனவும், அதில் 8,000 சுலோகங்கள் மறைபொருட்கள் பலவற்றைக் கொண்ட கடினமான சுலோகங்கள் என்றும் சொல்கிறார் சௌதி. அந்த 8000 சுலோகங்களை ஜனமேஜயனுக்கு விளக்கிச் சொல்ல வைசம்பாயனருக்குப் புராணங்களில் இருந்து பல கதைகளைச் சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் காரணமாக 24,000 சுலோகங்களைக் கொண்ட ஜயம், ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்ட பாரதமாக ஆனது. உண்மையில் சௌதி சொன்ன மஹாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களையும் தாண்டியதாகவே இருந்திருக்க வேண்டும். முனிவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் அவர் விடை சொல்லியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் ஆதிபர்வத்தில் சௌதி சொல்லும் கணக்கின்படியே கூட அது 96000+ சுலோகங்களைக் கொண்டதாகவே இருக்கிறது.

இந்த மஹாபாரதம் பல இந்திய மொழிகளில் முழுமையாகக் கிடைக்கிறது. இன்று கிட்டத்தட்ட உலகமொழியாகவே இருக்கும் ஆங்கிலத்தில் எப்போது தேடினாலும் கிட்டக்கூடிய படைப்பாகக் கிசாரி மோகன் கங்குலியின் மஹாபாரதம் இணையத்தில் முழுமையாக, இலவசமாகக் கிடைக்கிறது. அவ்வாறு நமது மொழியில் கிடைக்கிறதா?

சங்க காலப் இலக்கியத்தில் "பாரதம் பாடிய பெருந்தேவனார்" என்ற குறிப்புக் கிடைக்கிறது. எனில் சங்க காலத்திலேயே பாரதம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அஃது இன்று நம்மிடையே இல்லை. கடற்கோளோ, மனிதர்கள் செய்த கோளோ அஃது இப்போது நம்மிடையே இல்லை.

15ம் நாற்றாண்டில் செய்யப்பட்ட வில்லி பாரதம் நமக்குக் கிடைக்கிறது. அதன் தொடர்ச்சியான நல்லாப்பிள்ளை பாரதமும் கிடைக்கிறது. ஆனால் அவற்றின் மொழியைப் புரிந்து கொள்ளும் நிலையில் இன்று நாம் இல்லை. செய்யுள் நடையில் உள்ள அவற்றைத் தமிழில் பெரும்புலமை படைத்தவர்களே உணர்ந்து கொள்ள முடியும். மேலும் வியாசரின் படைப்புக்கும் இவற்றுக்கும் சில பல வேறுபாடுகள் உண்டு.

1903 முதல் 1928 வரை கும்பகோணம் ம.வீ.இராமானுஜாசாரியாரால் பெருமுயற்சி செய்யப்பட்டு, தி.ஈ.ஸ்ரீநிவாஸாசாரியார், அ.வேங்கடேசாசார்யர், பைங்காடு கணபதி சாஸ்திரிகள், கருங்குளம் கிருஷ்ணா சாஸ்திரிகள் ஆகியோரால் கும்பகோணம் அத்வைத சபை பண்டிதர்களின் துணை கொண்டு மொழிபெயர்க்கப்பட்டு ம.வீ.ரா அவர்களால் அது தொகுக்கப்பட்டது.

ஆனால் அதுவும் இப்போது நம்மிடையே அச்சில் இல்லை. மீண்டும் அச்சிடுவதற்கான முயற்சி நடந்து கொண்டிருப்பதாகக் கேள்விப்படுகிறோம். நாம் ம.வீ.ரா.வின் முன்னுரைகளைப் படிக்க வேண்டும். இந்த மொழிபெயர்ப்பை சாத்தியமாக்க அவருக்கு நேர்ந்த துன்பங்களை எழுத்தால் வடித்திருக்கிறார். படிக்கப்படிக்கக் கண்ணீரைத் தவிர்க்க முடியாது. இது இதுவரை தமிழில் நேர்ந்தவை.

இனி ஆங்கிலத்தில் என்னவென்று காண்போம். மஹாபாரதம் சம்பந்தமாக நாடு முழுவதும் பல சுவடிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. 1919ல் பண்டார்க்கர் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் என்ற நிறுவனம் 1300 அத்தகு சுவடிகளை ஆராய்ந்து, ஒரு பொதுவான தொகுப்பைத் தொகுக்கத் தொடங்கினர். அப்பணி 1966ல் தான் நிறைவடைந்த்து.

காஷ்மீரி, நேபாலி, மைதிலி {பீஹாரி}, வங்கம், தேவநாகிரி பதிப்புகள் வடக்கே கிடைத்ததெனவும், தெலுங்கு, கிரந்தம், மலையாளம் ஆகிய பதிப்புகள் தெற்கே திடைத்தனவெனவும், இதில் தெலுங்கு மற்றும் கிரந்தப் பதிப்புகள் அனைத்தும் நமது தஞ்சாவூரின் சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருந்தே பெறப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது. கிரந்தம் என்பது தமிழ் பிரம்மி எழுத்தின் பரிணாம வளர்ச்சியே. தமிழ் மற்றும் மலையாள மக்களிடம், சம்ஸ்கிருதம் எழுதவும், மணிபிரவாளம் எழுதவும் பயன்பட்டது. சாந்திநிகேதன் விஸ்வபாரதி நூலகத்தில் இருந்து வங்கப்பதிப்புகள் பெறப்பட்டன. பம்பாய் அரசு நூலகத்தில் இருந்து காஷ்மிரி, தேவநாகிரியும், நேபாலி போன்ற வட இந்திய பதிப்புகள் கொள்ளப்பட்டன. அதனால் பொதுவாக வங்கம் தவிர்த்த மற்ற வட பதிப்புகளின் தொகை பம்பாய் பதிப்பு என்று சொல்லப்படுகிறது.

மஹாபாரத ஆக்கத்திற்கான நூலகங்களின் பங்கு இதில் தெள்ளெனத் தெரியும். இவையாவும் போரியில் {பண்டார்க்கர் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில்} தொகுக்கப்பட்டன. ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆளும் அரசுகளின் பேராதரவும் தேவைப்பட்டது. இவ்வளவு இருந்தும் 50 ஆண்டுகள் அதற்குத் தேவைப்பட்டது.

இதற்கெல்லாம் முன்பே மூல மஹாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கிசாரி மோகன் கங்குலி பெரும்பான்மையாக வங்கப்பதிப்புகளையே பயன்படுத்தினார். இறுதியில் ஒப்புநோக்க பம்பாய் பதிப்பையும் எடுத்துக் கொண்டார். அவர் பெரிதும் கவனத்தில் கொள்ளாதது தென்னக பதிப்பை. ஆனால் அவர் ஒப்பிட்ட நீலகண்டரின் உரை தென்னக பதிப்பையும் ஒப்புநோக்கி எழுதப்பட்டதே. கங்குலியின் படைப்பு 1896ல் வெளியிடப்பட்டதாகும்.

போரியின் வலைத்தளத்தில் மஹாபாரதத்தின் செம்மையான பதிப்பு எவ்வாறு தொகுக்கப்பட்டது என்பதற்கான விபரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆதிபர்வத்திற்கு மட்டுமே பொடி எழுத்துருவில் 130 பக்கங்களுக்கு அந்தத் தொகுப்பு இருக்கிறது. இப்படிப் போரியில் தொகுக்கப்பட்ட பதிப்பை பிபேக்திப்ராய் என்பவர் 2005ம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

இவ்வளவெல்லாம் சிரமப்பட்டு இந்தப் படைப்பே ஏன் மீண்டும் தொகுக்க வேண்டும்? இதற்கு எத்தனை பேரின் உழைப்புத் தேவைப்பட்டிருக்கிறது? எவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கிறது? எவ்வளவு பணம் தேவைப்பட்டிருக்கிறது? எத்தனை நூலகங்கள் எத்தனை தொல்படிமங்களை ஒப்புநோக்க வேண்டியிருக்கிறது? இவையெல்லாம் ஏன் செய்யப்பட வேண்டும்?

எனென்றால், இவை நம் பாரதப் பெருநிலத்தின் பெரும்நினைவுகள் ஆகும். காலங்காலமாக நம் முன்னோர்கள் ஒவ்வொருவரின் நினைவில் இருந்து வந்தவை, தலைமுறை தலைமுறையாகக் அடுத்தத் தலைமுறைக்குக் கொடுக்கப்பட்டு வருபவை. நம் தலைமுறை வரை நம் முன்னோர்கள் பெரும் சிரமமெல்லாம் படாமலேயே, இயல்பாகவே அதைச் செய்து வந்திருக்கின்றனர்.

பொறாமையில் உந்தப்பட்டுத் தவறு செய்யும் சிறுவனைத் திருத்த ஒரு பெரியவர் துரியோதனனின் கதையைச் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோமே. சகோதரர் ஒற்றுமையை எடுத்துச் சொல்ல பாண்டவர்களை உதாரணம் காட்டக் கண்டிருக்கிறோமே. பெண்களின் மேன்மை, அறிவு, வானியல், நிலப்பரப்புகள், உயிரினங்கள், உயிரினங்கள் தோற்றம் என எத்துறையைக் குறித்துப் பேசினாலும் அது சம்பந்தமாக மகாபாரதத்தில் இருந்து நம் பெரியோர்கள் எடுத்துச் சொல்லும் எவ்வளவு கதைகளை நாம் இதுவரை கேட்டிருப்போம்?

ஆனால் இப்படிக் கதை சொல்லும் பண்பு நம் தாத்தா பாட்டியோடு முடிந்துவிட்டதையும் நாம் கண் கூடாகவே கண்டிருக்கிறோம். என் தாயார் எனக்கு நிறைய மகாபாரதக் கதைகளைச் சொல்லியிருக்கிறார். என் நண்பர்களைக் கேட்டால் ஒருவருக்கும் அவ்வாறான வாய்ப்பு அமையவில்லை என்று தெரிகிறது. நம் தலைமுறையே இப்படி வளர்ந்திருக்கிறது. இப்போது அதற்கு அடுத்தத் தலைமுறையும், அதற்கு அடுத்தத் தலைமுறையும் கூடத் தோன்றிவிட்டன. இன்று நாம் நம் தாத்தா பாட்டியின் நிலையில் இல்லை. கதைகள் நமக்குத் தேவை. நீதிகள் தேவை. தத்துவங்கள், புவியியல், வானியல் என நம் முன்னோர்கள் கொண்டிருந்த நினைவுகள் அனைத்தும் நமக்குத் தேவை. இவை அனைத்தின் கொள்ளிடம்தான் மஹாபாரதம். அப்படிப்பட்ட பொக்கிஷமான ஒரு படைப்பு இன்றைக்கு மட்டும் அல்ல என்றென்றைக்கும் தேவைதான்.

ஆங்கில வாசகர்கள் கொடுத்துவைத்தவர்கள். உலகின் எந்த உன்னதப் படைப்பும் விரலின் அசைவில் இலவசமாகவே இணையத்தில் கிடைக்கப் பெறுகிறார்கள். தமிழில் அவ்வாறில்லையே. குறைந்தது மஹாபாரதமாவது இணையத்தில் இலவசமாக, முழுமையாக இருக்க வேண்டாமா? இஃது உலகத்தின் மிக நீண்ட படைப்பாயிற்றே. அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்கள் நாம், நம் மொழியில் படிக்க முடியாதவர்களாக இருக்கிறோமே. நாளை என் பிள்ளை, அல்லது பேரப்பிள்ளை எவ்வாறு நம் மண்ணின் தொல்நினைவுகளை, நம் பாட்டனும், பூட்டனும் போற்றி வளர்த்த தொல்நினைவுகளை அறியப்போகிறார்கள்? அல்லது அடுத்தத் தலைமுறைக்குக் எடுத்துச் சொல்லப் போகிறார்கள்?

இந்த நினைவு எனக்கு ஏற்பட்டதற்கு என் நண்பர்களைத் தான் சொல்ல வேண்டும். எனக்கு அமைந்த நண்பர்கள் கிட்டத்தட்ட அனைவருமே நவீன பொதுவுடைமைவாதிகளும், நவீன முற்போக்காளர்களும்தான். மஹாபாரதம் மற்றும் இராமாயணம் சம்பந்தமான விமர்சனங்களையும், விமர்சனப்புத்தகங்களையும் எனக்கு அளித்துக் கொண்டே இருப்பவர்கள் அவர்கள்தான். சில விமர்சனங்கள் வெகு அபத்தமாக இருக்கும். மகாபாரதத்தில் இல்லாதவற்றைச் சொல்லியிருப்பார்கள். அதற்கு வேறு ஒரு பதிப்பை மேற்கோள் காட்டியிருப்பார்கள். அந்த மேற்கோள் புத்தகத்தைப் பார்த்தால் அது வேறு ஒரு புத்தகத்தையே மேற்கோள் காட்டும்.

மஹாபாரதத்தைப் பொறுத்தவரையில் கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு அவர்களோடு வாதிட எனக்குப்  பேருதவி புரிந்தது. அவர்களால் என்னையும் நம்ப முடியவில்லை. நான் சொல்லும் கிசாரி மோகனையும் நம்ப முடியவில்லை. அவர்கள் புத்தகங்களைத்தான் நம்புவார்கள். அவர்களுக்காகவே மஹாபாரதத்தில் முதலில் உள்ள ஒரு சில அத்தியாயங்களை மட்டும் மொழிபெயர்த்து, தட்டெழுதி, அச்செடுத்து வைத்துக் கொண்டேன். முதல் நான்கு அத்தியாயங்களுக்குள்ளாகவே மகாபாரதத்தின் மொத்த கதையும் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கும். அவர்களோடு வாதிட அது பயன்பட்டு வந்தது.

இந்த இடத்தில் சோ அவர்களின் மஹாபாரதம் பேசுகிறது புத்தகத்தையும், ராஜாஜி அவர்களின் மஹாபாரதத்தையும் குறிப்பிட வேண்டும். என் தாயாரோ, என் தாத்தாவோ கதை சொல்லும்போது எனக்கு ஏற்பட்ட சலிப்பு இவர்களிடம் ஏற்படவில்லை. அவை மஹாபாரதத்தைக் குறித்து மேலும் அறியவே தூண்டின. அவர்கள் அளித்த அந்தத் தேடலில்தான் நான் கிசாரி மோகனைக் கண்டடைந்தேன்.

இப்படி விவாதிப்பதற்காகத் தொடங்கப்பட்ட அந்தச் சிறு முயற்சி மெல்ல மெல்ல வளர்ந்து இன்று 12ம் புத்தகமான சாந்திபர்வத்தின் 80வது அத்தியாயத்தை மொழிபெயர்க்கும் வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது. இதை நான் செய்யவில்லை, மஹாபாரதம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. மஹாபாரதம் மொத்தம் 18 பர்வங்களைக் கொண்டதாகும். அதில் 12வது பர்வத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை மஹாபாரதத்தை முழுமையாக மொழிபெயர்த்தவர்கள் எனில் ஆங்கிலத்தில் அது கிசாரி மோஹன் கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக் திப்ராய் ஆகியோர் மட்டுமே. தமிழில் முழுமையான மஹாபாரதமெனில் அது கும்பகோணம் ம.வீ.ராமானுஜாச்சாரியரின் தொகுப்பே. அத்தொகுப்பு நான்கு [அ] ஐந்து அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டதாகும்.

நான் மேற்கொண்டிருக்கும் பணி நிறைவு பெற்றால், தமிழுக்கு நாமும் நம்மால் முடிந்த சிறு தொண்டைச் செய்திருக்கிறோம் என்ற நிறைவு எனக்கு ஏற்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. என் பணியில் எப்போதும் உதவியாய் இருக்கும் சில முக்கிய நபர்களை இங்கே சொல்ல வேண்டும். என் நண்பர் ஜெயவேலன் அவர்கள், 2012ல் நான் மொழிபெயர்க்கத்தொடங்கிய தொடக்க நாட்களில் இருந்து பொருள் உதவி செய்து, ஒவ்வொரு அத்தியாயத்தையும் திருத்தி, அதற்குத் தேவையான துணைச் சுட்டிகளைக் கொடுத்து எனக்கு எப்போதும் பக்கபலமாக இருந்து வருகிறார். இப்போது அவர் வெளிநாட்டில் இருக்கிறார். இங்கிருந்திருந்தால் நிச்சயம் என்னுடன் இருந்திருப்பார். அவரது மனைவி திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்கள் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் குரல் கொடுத்து ஒலிவடிவமாக மாற்றி வருகிறார். நான் எங்குச் சென்றாலும், என்ன செய்தாலும், என்னுடன் பக்கபலமாக நிற்பது சீனிவாசன், கமலக்கண்ணன், சார்லஸ் ஆகிய நண்பர்கள். அவர்கள் இப்போதும் என் உடன் வந்திருக்கிறார்கள். மூலத்தில் ஏதாவதொரு சந்தேகமேற்படும் போது, நான் நாடுவது தமிழ் இந்து வலைத்தளத்தைச் சேர்ந்த திரு.ஜடாயு அவர்களை. எப்போதும் மறுக்காமல் உதவி வருகிறார். அனைத்திற்கும் மேலாக இந்த மொழிபெயர்ப்புப் பணி வெளியே தெரிவதற்குப் பேருதவி புரிபவர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள். இந்தப் பணியை என்னால் செய்ய முடிவதற்கு, இவர்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன்பட்டவனாக இருக்கிறேன்.

இவர்கள் அனைவரின் முயற்சிக்கும் ஓர் அர்த்தம் வாய்க்க, முழு மஹாபாரத மொழிபெயர்ப்பை விரைவில் செம்மையாக நிறைவு செய்வதே என் கடமை ஆகும். எக்காலத்திற்கும் தேவையாக இருக்கும் மஹாபாரதத்தை முழுமையாக மொழிபெயர்த்து நிறைவு செய்யும்படி பரமன் எனக்கு அருள்புரிவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. நன்றி நண்பர்களே.

******

இப்படித்தான் நிறைவு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இடையில் தடம் மாறி எங்கெங்கோ சென்று இறுதியில் நன்றி சொல்ல வேண்டிய எவருக்கும் நன்றி சொல்லவில்லை. இதுதான் என் முதல் உரை {பேச்சு}, அதனால் நண்பர்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.


அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
11.01.2018


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top