Wednesday, December 19, 2018

பிரதாப் சந்திர ராய் அவர்களின் அறிக்கை


கங்குலியின் மஹாபாரதம் பகுதிகளாக {சஞ்சிகைகளாக} வெளிவந்த போது, ஒரு கரத்தால் நிச்சயம் இப்படைப்பை நிறைவு செய்ய முடியாது என்ற தயக்கத்தால் தமது பெயரை ஆசிரியரின் இடத்தில் வெளியிடத் தயங்கினார். எனவே, புத்தகத்தைப் பதிப்பித்த பிரதாப் சந்திர ராய் அவர்களே முதல் இரண்டு பதிப்புகளில் ஆசிரியராகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார். கங்குலியின் பணி மிகக் கடுமையானது என்றால், இவரது பணி அதனினும் கடினமானது. அநுசாஸன பர்வத்தின் இறுதியில் வரும் அவரது அறிக்கை கண்ணீரை வரவழைக்கும். பொருளாதார அடிப்படையிலும், உடல் நோயினாலும் நொடிந்து போயிருந்தாலும் எடுத்துக் கொண்ட பணியை முடிக்க வேண்டுமே என்ற ஆதங்கம் நிச்சயம் நமக்கு மெய் சிலிர்ப்பை ஏற்படுத்தும். கீழ்காணும் பகுதி சாந்தி பர்வத்தின் இறுதியில், அநுசாஸன பர்வத்தின் தொடக்கத்தில் வரும் பிரதாப் சந்திர ராய் அவர்களின் அறிக்கையாகும்.
*******************


நாடுகடத்தப்பட்டு, காடுகளில் இருந்தபோது ஆயிரக்கணக்கான ஆபத்துகளை வெல்லவும், துரியோதனனுடைய ஒற்றர்களால் கண்டுபிடிக்கப்படாமல் விராடனின் சபையில் தலைமறைவாக ஒரு வருடத்தைக் கழிக்கவும், குருக்ஷேத்திரப் போரில் கூட்டங்கூட்டமாக எதிர்த்து வந்தவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான போர்வீரர்களை வீழ்த்தவும், அந்தக் கடும்போரை வெற்றிகரமாகச் சந்திக்கவும், கோழைத்தனமானதும், அழிவை உண்டாக்கக்கூடியதுமான அஸ்வத்தாமனின் இரவுத்தாக்குதலில் இருந்து தப்பிக்கவும், சம்சப்தகப் போர்வீரர்களுடைய ஆயிரக்கணக்கான படைகளின் தலைமையில் இருந்த ஓராயிரம் பீஷ்மர்களைவிடப் பேராபத்தைத் தரக்கூடியவளும், {மகன்களின் மரணத்தால்} துன்பத்தில் இருந்தவளுமான காந்தாரியின் சாபத்தில் இருந்து தப்பிக்கவும், இறுதியாகத் தங்கள் பரம்பரை அரியணையை மீட்கவும் பாண்டவர்களைத் தகுந்தவர்களாக்கிய ஹரியுடைய அருளின் மூலமும், அந்த அண்டத் தலைவனுடைய கருணையின் அடையாளமாகவும், மஹாபாரத ஆசிரியரால் {வியாசரால்} 18 பர்வங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் மஹாபாரதத்தில் மிகப்பெரியதும், மிகக் கடினமானதுமான சாந்தி பர்வத்தை இறுதியாக என்னால் நிறைவு செய்ய முடிந்திருக்கிறது. மகுடம் சூட்டும் இக்கருணைக்காக லக்ஷ்மியின் தலைவனை {நாராயணனைப்} பணிவுடன் வணங்குகிறேன்.

எனக்கு நானே விதித்துக் கொண்ட இப்பணியில் ஐந்தில் நான்கு பாகம் நிறைவடைந்திருக்கிறது. நிறைவடைய வேண்டியதில் மொத்தத்தில் ஐந்தில் ஒரு பாகம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. 62ம் தொகுதியில் வந்த என் அறிக்கையில் சாந்தி பர்வத்தின் கடினங்களைக் குறித்துச் சில கருத்துகளை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். வட்டார மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் அதிக எண்ணிக்கையில் அனைத்து வகைப் பிழைகளையும் செய்திருக்கிறார்கள். இப்பணியில் உள்ள கடினங்களை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே இவற்றைச் சொல்கிறேனேயன்றி, சாந்தி பர்வத்திற்கு எனக்கு முன்பு பொருள் கொண்டோரின் உழைப்பைக் குறைத்துக் காட்டும் நோக்கில் சொல்லவில்லை.
சாந்தி பர்வமானது சிறப்பிலும், மகத்துவத்திலும் எப்போதும் ஒப்பற்ற படைப்பாகவே நீடித்திருக்கிறது. ராஜதர்ம பகுதிகளில் உள்ள அரசியல் நீதிகள், இதே காரியம் குறித்து அமைந்த எந்த நாவின் படைப்புக்கும் {எந்த மொழியில் செய்யப்பட்ட படைப்புகளுக்கும்} எவ்வகையிலும் சளைக்காத ஒப்பற்றவையே. யு.எஸ்.ஏ. மேரிலேண்ட், வெஸ்மின்ஸ்டரைச் சேர்ந்த பேராசிரியர் ஜெ.டபிள்யு.ரீஸ் {Professor J.W.Reese, of Westminster, Maryland, U. S. A.,} இந்தப் பகுதிகளைக் கவனமாகப் படித்து, "சாந்தி பர்வத்தின் இந்தப் பகுதிகளில் வரும் அரசநீதிகளைப் போன்று வேறு எந்த இலக்கியத்திலும் ஒரு முழுமையான ஆய்வை நம்மால் காணமுடியாது" என்று எனக்கு எழுதியிருந்தார். இஃது ஆர்வமிகுதி கொண்ட ஒருவரால் வெளிப்படுத்தப்படும் கருத்தல்ல, தகுதி வாய்ந்த ஓர் அறிஞரின் திட்டவட்டமான கருத்தாகும். ராஜதர்ம அத்தியாயங்களில் வரும் சில பகுதிகள் மிகச்சிறந்த அரசியல் கோட்பாடுகளை உள்ளடக்கியவையாகும். மிக உயர்ந்தவனின் அறம் சார்ந்த கட்டளைகளில் இருந்தே அனைத்து அதிகாரங்களும் உண்டாகின்றன எனவே, எது தனிப்பட்டவர்களின் பேராசையை நிறைவு செய்வதற்காக இல்லாமல் பிறரின் நன்மைக்காகச் செய்யப்பட வேண்டுமோ, அதுவே உண்மையில் ஈர்க்கும் வகையில் காணப்படும் மொழியில் முனிவர்களால் இவ்வாறு விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், மோக்ஷம், அல்லது விடுதலை {முக்தி} அறம் தொடர்பான பகுதிகள், எந்நாட்டு மேதைகளாலும் படைக்கப்பட்ட எதனோடும் ஒப்பிடுகையில் இணையில்லாதவையாக இருக்கின்றன. முனிவர்கள், முடிவிலா நித்திய தன்மை எனும் அச்சந்தரும் கருத்தைக் கற்பிக்கவே எப்போதும் முயல்கின்றனர். அண்டத்தில் படைக்கப்பட்ட அனைத்தும் மாறுதலுக்கு உட்படுபவை. திரள்வது நிச்சயம் கலைவதிலேயே முடியும், அதே போலக் கலைந்திருப்பது மீண்டும் ஒன்று திரளும். அறியப்பட முடியாத பன்மையும், பரப்பும் கொண்ட அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் மத்தியில் ஒன்றாகவும், மாற்றமில்லாததாகவும் பரப்பிரம்மம் இருக்கிறது. ஜீவாத்மாவானது, புறக்கூடுகளில் இருப்பதால் மாற்றத்திற்குரியதாக இருந்தாலும், அஃது அழியக்கூடியதல்ல. பரப்பிரம்மத்தில் இருந்து வெளிப்படும் ஜீவன், முடிவிலா திருப்பங்களுடன் கூடிய இன்ப துன்பங்களை உணர்ந்து கடப்பதாக இருந்தாலும், அது {அந்த ஜீவன்} முடிவிலா நித்தியத்துடன் வாழ விதிக்கப்பட்ட ஒன்றாகும். இருப்பு என்பதே முடிவிலா நித்திய தன்மைக்குத்தான் என்பது திகைக்கச் செய்வதாக இருந்தாலும், இத்தகைய கால அளவைக் கருத்தில் கொள்ளும்போது, சாதாரண இன்பமே கூட ஏற்றுக்கொள்ள முடியாத சலிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். சொர்க்கத்தில் மேன்மையும், கீழ்மையும் உண்டு என்பதால் அங்கே இதய எரிச்சல் {மனநிறைவின்மை} நிச்சயம் இருக்கும். இதய எரிச்சல் சாத்தியமற்றது என்று எடுத்துக் கொண்டாலும், பிறரின் துன்பங்களைச் சிந்திக்கும்போது மகிழ்ச்சியே துன்பமாக மாறக்கூடும். இது தவிர, அறிந்து கொள்ள முடியாத முடிவிலா காலத்தின் முடிவிலாத் தன்மையைக் கருத்தில் கொண்டால், எந்த மாற்றமும் ஏற்படாமல் இருக்க முடியுமா? மாற்றங்கள் அனைத்தும் சிறப்புக்கோ, இழிவுக்கோ வழிவகுக்க வேண்டும். அது சிறப்புக்கு வழிவகுக்கிறது என்று கொண்டால், அதற்கு முன்பு முற்றான மகிழ்ச்சியில்லை என்றாகும். மாறாக இழிவுக்கு வழிவகுக்கிறது என்று கொண்டால், அதற்குப் பிறகு முற்றான மகிழ்ச்சி இருக்காது என்றாகும். முற்றான இன்பமே இலட்சியமாக இருக்கும்போது, தடுக்கப்பட முடியாத மாற்றத்திற்கான அந்தத் திருப்பங்களை எவ்வாறு தடுக்க முடியும்? மாற்றமில்லாத பரப்பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படுவது மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும். அத்தகைய ஈர்க்கப்படும் நிலையை அடைவதற்கு மிக உன்னதமான ஒழுக்க நடைமுறை அவசியமாகும். அவ்வொழுக்கமே "நிஷ்காம தர்மமாகும்", அல்லது பலன் விரும்பாமல் செய்யப்படும் செயல்களாகும். அகங்காரத்தின் தனி இருப்புக்கு நேரும் அழிவைக் குறிக்கும் இத்தகைய பரப்பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படும் நிலையே முனிவர்களின் விடுதலை அல்லது மோக்ஷமாக இருக்கிறது. மேலும் இந்த மோக்ஷ பகுதிகள் தத்துவ ஊகங்களின் வற்றாத சுரங்கங்களாக இருக்கின்றன. மனிதத்தைச் சுற்றியெழும் பெருங்கேள்விகளில் பழங்காலத்து, அல்லது நவீன தத்துவஞானிகளால் ஊக்கப்படுத்தப்படும் ஒவ்வொரு கருத்தின் சாயலும், இந்தச் சாந்தி என்ற பகுதியில் நுண்ணுயிரிகளாகத் தென்படுகின்றன.
மேலும், இந்தப் பெரும்பர்வத்தின் ஆபத்தர்ம பகுதிகள், ஒவ்வொரு இந்துவுக்கும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. வெளிநாட்டினருக்கும் கூட இது திறன்குறைந்ததாக அமையாது. சாத்திரங்களில் ஒருவருக்கு விதிக்கப்படும் கடமைகளின் போக்கில் திண்ணமான இணக்கத்தைத் தவிர்க்கச் செய்யக்கூடிய நெருக்கடிகளின் தன்மைகளைக் கற்பது யாருக்கும் ஒருபோதும் விருப்பமற்றதாக இருக்காது. மொத்தமாகப் பழங்கால ஆரிய மேதைமையின் நினைவுச்சின்னமாகத் திகழும் சாந்தி பர்வமானது, இதே காரியம் குறித்துப் பேசும் எந்தப் படைப்பையும்விட மதிப்புமிக்கதாகவே இருக்கும்.

சாந்தி பர்வம் {சாந்தி பர்வ மொழிபெயர்ப்புப் பணி}, இரு வருடங்களுக்கும் அதிகக் காலத்தை எடுத்துக் கொண்டாலும் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பின் சந்தாதாரர், அல்லது இதைப் பெறுபவர் எவரும் இதைக் குறை சொல்ல மாட்டார்கள் என நான் நம்புகிறேன். ஒவ்வொரு ஸ்லோகமும் சரியாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்று கொள்வது சாத்தியமற்றது. சாந்தி பர்வம் சிக்கல்கள் நிறைந்ததாகும். சாந்தி பர்வத்தை விளக்குவதில் நீலகண்டர் காட்டியிருக்கும் தொழிற்திறன், பொறுமை, புத்திக்கூர்மை ஆகியவை குறிப்பிடத்தகுந்தவையாகும். சாந்தி பர்வத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் நீலகண்டருடைய விளக்கத்தின் மதிப்பை அறிவார்கள். முதல் தருணத்தில் பொருள் கொள்வதில் நம்பிக்கையை இழக்கச் செய்யும் ஸ்லோகங்கள், நீலகண்டரின் விளக்கத்தைப் படித்ததும், ஒவ்வொன்றாக விளங்கத் தொடங்கும்.
என் பணியைப் பொறுத்தவரையில், நீலகண்டரின் விளக்கத்துடன் கூடிய சாந்தி பர்வத்தின் நல்ல உரையை என்னால் அடைய முடியாததன் விளைவால் எனக்குச் சிரமங்கள் மேலும் அதிகரித்தன. இந்த "அரண்மனைகளின் நகரத்தில்" {கல்கத்தா} மிகக் குறைந்த நூலகங்களே இருக்கின்றன. மஹாராஜாக்கள், ராஜாக்கள், ராய் பஹதூர்கள், பண்டிட்கள் என அனைவருக்கும் நான் கோரிக்கை வைத்தேன். எனினும், நீலகண்டர் விளக்கத்துடன் கூடிய சாந்தி பர்வத்தின் கையெழுத்துப்படியை என்னால் எங்கும் அடையமுடியவில்லை. இறுதியாக, உச்சநிலையில், கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நன்கறியப்பட்ட வழக்கறிஞரான திரு.ஸ்வின்ஹோ {Mr.Swinhoe, Attorney of the Calcutta High court} என்னை மீட்க வந்தார். அவருடைய சிறு நூலகத்தில் உள்ள சில மதிப்புமிக்கச் சம்ஸ்க்ருத நூல்களுக்கு மத்தியில் விளக்கத்துடன் கூடிய அச்சடிக்கப்பட்ட பம்பாய் உரையின் ஒரு நகல் இருந்தது. அவர் மிகுந்த கருணையுடன் அந்த நகலை என் பார்வைக்குக் கொடுத்தார். மேலும் குறிப்புகளுக்காகவும், ஒப்பீட்டுக்காகவும், உரை மற்றும் விளக்கத்துடன் கூடிய நல்ல வங்கக் கையெழுத்தப்படியும் எனக்குத் தேவைப்பட்டது. பெரும் சிரமத்திற்குப் பிறகு நான் அறிந்த ஓர் இளம் அறிஞரிடம் இருந்து ஒன்றை அடைந்தேன். இந்து மதத்தில் செருக்குக் கொண்டிருக்கும் வங்கக் கோடீஸ்வரர்கள், மிகப் புனிதமானவையாகக் கருதப்படக்கூடிய இத்தகைய படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகள் அல்லது அச்சடித்த பதிப்புகளைத் திரட்ட முனையாமல், தங்கள் சொந்த சாத்திரங்களை இவ்வளவு அலட்சியம் செய்து வந்திருப்பது வருத்தத்தையே அளிக்கிறது.

அநுசாஸன பர்வம் இவ்வளவு கடினமானதாக இருக்காது என்றாலும், முக்கியத்துவத்தைப் பொறுத்தவரையில் சாந்தி பர்வத்திற்குச் சற்றும் சளைத்ததல்ல. அதில் அனைத்து வகை ஆன்ம உரையாடல்களும் நிறைந்திருக்கிறது. அளவில் சற்று சாந்தி பர்வத்தைவிடக் குறைந்ததாக இருப்பினும், வன பர்வம் என்ற ஒரே விலக்கைத் தவிர மற்ற பர்வங்கள் அனைத்தையும் விடப் பெரியதாகும். அநுசாஸனத்தையும் சேர்த்து இன்னும் மஹாபாரதத்தில் நிறைவடையாமல் எஞ்சியிருப்பது இன்னும் ஐந்தில் ஒரு பகுதியாகும். அதற்கு இன்னும் தேவைப்படும் தொகை ரூ.20,000/- ஆகும். இந்திய அரசின் தலைமைச் செயலர், பல்வேறு வட்டார அரசுகள், இந்தியத் தலைவர்கள் பலர், பல்வேறு ஜமீந்தார்கள், உன்னத மனிதர்கள் ஆகியோர் எனக்குத் தாராளமாக உதவி செய்திருக்கிறார்கள். எனினும், அந்தத் தாராள உதவியும், இதை நிறைவு செய்ய எனக்குப் போதுமானதாக இல்லை என்பது வருத்தத்தையே அளிக்கிறது.

ஒரு வருடத்திற்கு முன்பு, மேலும் பங்களிப்பு கேட்டு வங்க அரசுக்கு விண்ணப்பித்திருந்தேன். என் கரங்களுக்குப் பணம் வரும் வழி, பணத்தின் இருப்பு, மேலும் உதவிக்கான உண்மையான தேவை ஆகியவற்றைக் குறித்துப் பொது ஆணைய இயக்குனர் மூலம் பெரும் விசாரணை நடத்தப்பட்டது. பாரதிய கார்யாலயத்தின் ஒவ்வொரு துறையிலும் என் ஏற்பாடுகளுக்கான பொருளாதாரத்தை நிரூபிக்கத்தக்கதாக அமைந்ததால், மிக நுட்பமான முறையில் ஆராயப்பட்டு, அறிக்கைகள் கோரப்பட்டது எனக்கு மிகுந்த நிறைவையே தந்தன. சர் ஏ.கிராஃப்ட் {Sir A.Croft} என் பொருளாதார அறிக்கையில் நிறைவடைந்து, தம் அறிக்கையைச் சமர்ப்பித்தது, வங்க அரசை மேலும் ரூ.1,000 வழங்கச் செய்தது. எனினும், பணி நிறைவடையும் வரை அந்தத் தொகையை எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இவ்வகையில் வங்க அரசு எனக்காக இல்லாமல் என் வாரிசுகளுக்கே அதிகக் கருணை காட்டியது என்பதைச் சொல்வதில் வருத்தமடைகிறேன்.

லக்னோவில் இருக்கும் பிரிட்டிஷ் இந்திய சங்கம் உடனே ரூ.1,000/- அனுப்பி வைத்து என் கோரிக்கைக்குச் செவிசாய்த்தது. இந்திய அரசு செயலாளரும், கலோனிய அரசின் அறிக்கைகளுக்காகக் காத்திராமல் தலைவரின் ஆணையின் பேரில் உடனே மேலும் ரூ.1,000/- அளித்தார். நான் இன்னும் பலரிடம் கோரியிருக்கிறேன் என்றாலும் சாதகமான மறுமொழிகள் ஏதும் இன்னும் வரவில்லை. உதவி, ஆலோசனை மற்றும் அனுதாபத்தின் மூலம் என் பணியைச் சாத்தியமாக்கியதில் முக்கிய நபர்கள் பலருக்கு என் ஆழமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு அறச்செயலின் வெற்றிக்கும் அரசின் ஆதரவே காரணம் என்பதால் அனைத்திலும் முதன்மையாக, இந்திய ராணியின் அருள் நிறைந்த மதிப்புமிக்க அரசுக்கு வணக்கத்துடன் கூடியவனாக நான் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மக்களின் நிலையில் மேன்மையையும், மகிழ்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் அரசின் பாதுகாப்பையே சார்ந்திருக்க வேண்டும் என்ற கருத்தை இந்து சாத்திரங்கள் கற்பிக்கின்றன. என் காரியத்தில், இரக்கமும், மகிமையும் கொண்ட ராணியின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு என்பதையும் தாண்டி மேன்மையானவற்றை நான் அனுபவித்திருக்கிறேன், மகிமை கொண்ட ராணியின் உதவியை எதிர்பார்த்து வணக்கத்துடன் காத்திருக்கும் கோடிக்கணக்கான பிறருடன் சேர்ந்து இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்னர், மகிமை பொருந்திய ராணியின் முன்பு கருணையுள்ள அவருடைய ஏற்புக்காக ஆங்கில மொழிபெயர்ப்பின் ஒரு நகலை வைக்கும் அனுமதியை நான் பெற்றேன். அந்த அருள் நிறைந்த ஏற்பை உடனடி வெகுமதியாகவும், நற்சகுனமாகவும் எப்போதும் நான் கருதி வந்திருக்கிறேன்.

என் அரசுக்கு அடுத்தபடியாக, கிழக்கத்திய அறிஞர்கள் மற்றும் கற்றறிஞர்களின் மத்தியில், ஒரு மொழிபெயர்ப்பைக் கொண்டு வர ஆரம்ப ஏற்பாடுகளைச் செய்ததற்காகப் பேராசிரியர் மேக்ஸ் முல்லருக்கு நான் பெரிதும் கடன்பட்டிருக்கிறேன் என்பதைச் சொல்ல வேண்டும். தம் கைப்பட எழுதி, எதிர்காலப் பயன்பாட்டுக்காக வைத்திருந்த ஒரு மாதிரி மொழிபெயர்ப்பை அவர் எனக்குக் கொடுத்து உதவினார். அந்த மாதிரி எனக்குப் பெரும் பயனைத் தந்தது. எளிமை மற்றும் நேர்த்திக்கான கூறுகளை மறக்காமல் ஒரு நேரடி மொழிபெயர்ப்பைச் செய்வதற்கான வழியைச் சுட்டிக்காட்டுவதில் அஃது உதவியது.

பேராசிரியர் மேக்ஸ் முல்லருக்கு அடுத்தபடியாக, கல்விமானும், இந்திய அலுவலகத்தின் நூலகருமான டாக்டர் ரோஸ்ட் {Dr. Rost}-க்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்திய அரசின் செயலாளர், ஹார்டிங்டனைச் சேர்ந்த மார்க்கிஸ் {Secretary of State for India, Viz., the Marquis of Hatington} அவர்களின் ஆணைப்படி எனக்கெழுதப்பட்ட கடிதத்தில், மஹாபாரதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான கருத்தை முதலில் முன் வைத்திருந்தார். தொடக்கத்திலிருந்தே டாக்டர் ரோஸ்ட் அவர்கள் என் நண்பர்களில் மிகுந்த அன்புக்குரியவராக இருந்திருக்கிறார். கடந்த பத்து வருடங்களில் முக்கியத் தருணங்களில் அவரது பரிவும், ஆலோசனைகளும் மதிப்புமிக்கவையாக இருந்திருக்கின்றன. தளர்ந்து போகும் தருணங்களில் இதயப்பூர்வமான ஊக்கத்துடனும், அன்புடனும், மூச்சைக் கொடுக்கும் வார்த்தைகளைச் சுமந்தபடியும் வரும் டாக்டர் ரோஸ்டின் ஒரு கடிதமே கூட, என் கண்களுக்கு முன்பு தெரிந்த துன்பத்தின் இருளையும், ஐயங்கள் எனும் பனியையும் விலக்கி உடனடியாக என்னை நம்பிக்கையில் நிறைத்துவிடும்.

பாரிஸைச் சார்ந்த திருவாளர்கள் எ.பார்த் மற்றும் செயின்ட் ஹிலைர் {Monsrs. A.Barth and St.Hilaire of Paris}, ஜெர்மனியைச் சார்ந்த பேராசிரியர் ஜேக்கபி {Professor Jacobi of Germany} ஆகியோருக்கும் நான் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர்களும் தங்கள் பரிவின் மூலம் என்னை ஆதரித்து, தங்கள் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் இந்தப் படைப்பை ஐரோப்பிய அறிஞர்களின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். பிரெஞ்சு அரசு, வெளிநாட்டு நூல் வெளியீடுகளுக்குப் பணம் அளிப்பதில்லை, குறிப்பாக அவை நிறைவடையும் முன்பே அளிப்பதில்லை என்றிருந்தாலும், திருவாளர்கள் பார்த் மற்றும் செயின்ட் ஹிலைர் அவர்களின் முயற்சியால் அவ்வரசு 900 ஃபிராங்குகளை எனக்களிக்க ஆணையிட்டது. இதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

அமெரிக்காவில் நான் நன்றிக்கடன் பட்டிருக்கும் நண்பர்கள் கூட்டத்தில் முதன்மையானவர்களாகக் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த திரு.வில்லியம் E.கோல்மேன், அமெரிக்கக் கிழக்கத்திய சமூகச் சங்கத்தின் துணைத்தலைவரான பேராசிரியர் லேன்மேன், அமெரிக்காவின் மாரிலேண்டைச் சேர்ந்த பேராசிரியர் J.W.ரீஸ், ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மொரிஸ் ப்ளூம்ஃபீல்டு, கனடாவின் ஹேமில்டனைச் சார்ந்த திரு.B.விட்டன் ஆகியோரைக் கருதுகிறேன் {Mr. William E. Coleman of San-Francisco, California, Professor Lanman, the Vice-President of the American Oriental Society, Professor J. W. Reese of Maryland, America, Professor Maurice Bloomfield of Hopkins' University, and Mr.B.Witton of Hamilton, Canada}. அமெரிக்காவில் இப்படைப்பு அறியப்பட்டிருப்பதற்கு இந்தக் கனவான்களின் முயற்சிகளே முழுமையான காரணமாகும். அவர்களுடைய பரிவு எனது பெருமதிப்பிற்குரியதாகும்
.
இந்தியாவைப் பொறுத்தவரையில் சர் ஸ்டுவர்ட் பெய்லி, சர் எ.கோல்வின், ஜெனரல் ஸ்டீவர்ட், லார்ட் ராபர்ட்ஸ், சர் சார்லஸ் ஐடிச்சிசன், சர் மோர்டிமர் டுரேண்ட், டாக்டர் டபிள்யு.டபிள்யு.ஹண்டர், திரு.சி.பி.இல்பர்ட், சர் எ.ஸ்கோபிள், சர் லெப்பல் கிரிஃபின், சர் சார்லஸ் இலியட், சர் ஜான் வேர் எட்கர், ரிப்பனின் மார்கிஸ், டஃப்ரின் மற்றும் அவாவின் மார்கிஸ், சர் டொனால்டு மெக்கன்சீ வாலஸ், சர் ஆல்பிரட் கிராஃப்ட் ஆகியோருக்கு {Sir Stuart Bayley, Sir A.Colvin, General Stewart, Lord Roberts, Sir Charles Aitichison, Sir Mortimer Durand, Dr.W.W.Hunter, Mr.C.P.Ilbert, Sir A.Scoble, Sir Lepel Griffin, Sir Charles Elliott, Sir John Ware Edgar, the Marquis of Ripon, the Marquis of Dufferin and Ava, Sir Donald Mackenzie Wallace, and Sir Alfred Croft} நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இவர்களில் சர் சார்லஸ் எலியட் மற்றும் சர் ஆல்பிரட் கிராஃப்டைத் தவிர எஞ்சியோர் அனைவரும் நல்ல காரியங்களுக்காக இந்தியாவை விட்டுச் சென்று விட்டனர். இருவரின் பெயர்களைச் சொன்னால், அவர்களது மரணத்தால் நாடு அடைந்த இழப்பின் நிமித்தமாக அவர்களை நம்பியிருந்தோர் பலரின் இதயங்களில் துயரை எழச் செய்யும். அந்தப் பெயர்கள் ஜெ.கிப்ஸ் மற்றும் சி.பி.எல்.மக்காலே {J.Gibbs, and C.P.L.Macaulay} ஆகும். திருவாளர்கள் கிப்ஸ் மற்றும் மக்காலே ஆகியோர் இந்தப் படைப்பில் தனிப்பட்ட விரும்பத்துடன் பங்கு பெற்றனர். சிறந்த அதிகாரிகளான இவர்கள் அனைவரின் உதவி இல்லாமல் என்னால் இந்தப் படைப்பின் கால் பாகத்தைக் கூட நிறைவு செய்திருக்க முடியாது. நான் பெயர் குறிப்பிட்டிருக்கும் இந்த அதிகாரிகளே இந்தப் படைப்பிற்காக ஆன்மாவாகச் செயல்பட்டனர். இந்தப் படைப்பானது, அரசாங்கத்திடம் இருந்து பெற்றிருக்கும் அனைத்து உதவிகளுக்கும் சர் ஸ்டுவர்ட் பெய்லி, சர் எ.கோல்வின், சர் சார்லஸ் ஐடிச்சிசன், சர் எ.ஸ்கோபிள், டஃப்ரின் மற்றும் அவாவின் மார்கிஸ் ஆகியோரின் முயற்சிகளே காரணமாகும்.

இந்தச் சிறந்த அதிகாரிகளைத் தவிர, இந்தியாவின் இளவரசர்கள் மற்றும் தலைவர்கள் பலரிடம் இருந்தும் நான் கணிசமான உதவியை அடைந்திருக்கிறேன். மேதகு நிஜாம் மற்றும் மேதகு மைசூர் ஆட்சியாளர் ஆகியோரின் அரசு சார்ந்த நன்கொடைகளுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன். நிஜாம் ஒரு முகமதிய இளவரசராவார். மஹாபாரதம் போன்ற ஒரு படைப்புக்கு அவரிடம் இருந்து பங்களிப்பு வருவதென்பது, இலக்கியம் சொல்லும் நாடு அல்லது சமயத்தைக் கணக்கில் கொள்ளாமல் பொதுவாக இலக்கியத்திற்கான அந்த மேதகையாளரின் பரிவையே குறிப்பிட்டுக் காட்டுகிறது. மேதகு நிஜாமால் ஆளப்படும் மாகாணத்தைப் போல வேறு எந்த மாநிலமும் அறிவொளி பொருந்திய அமைச்சர்களைக் கொண்டிருக்கவில்லை. ஒரு நிர்வாகியாகச் சர் அஸ்மன் ஜா {Sir Asman Jah} அவர்கள் சர் சலார் ஜங் {Sir Salar Jung} அவர்களின் புகழுக்கு இணையானவராகத் தெரிகிறது. மேதகு நிஜாமின் அருகில், ஆலோசனை கோரப்படும்போதெல்லாம் வழங்கத் தயாராக நவாப் சையது அலிபில்கிராமி போன்ற ஓர் அதிகாரி இருக்கும் வரையில் அவரது புகழ் தொடர்ந்து ஓங்கிக் கொண்டே இருக்கும்.
இந்தப் படைப்பை நான் தொடர்வதற்குச் சீரான ஊக்கத்தைத் தந்து வந்த இந்திய செய்தித்தாள்களின் பதிப்பாசிரியர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் சொந்த நாட்டு மக்களின் மத்தியில், "ரெய்ஸ் & ராயட்"-ன் சிறந்த ஆசிரியர் டாக்டர் சம்பு சி.முகர்ஜி, "இண்டியன் மிரர்" ஆசிரியர் பாபு நரேந்திர நாத் சென், பாபு கிருஷ்ண தாஸ் பால், "ஹிந்து பேட்ரியட்"ன் பாபு ராஜ்குமார் சர்வாதிகாரி ஆகியோரின் பெரும் பரிவை அடைந்தேன் {Dr.Sambhu C.Mookerjee, the brilliant Editor of "Reis & Rayyet,"Babu Narendra Nath Sen, the Editor of the "Indian Mirror," and Babu Krishna Dass Pal and, after him, Babu Rajkumar Sarvadhikari, of the "Hindoo Patriot.". "அமிருத பஜார் பத்ரிகா"வின் பாபு சிஷிர் குமார் கோசே அவர்கள் {Babu Sishir Kumar Ghose, of the "Amrita Bazar Patrika,"} எனக்கு உற்சாகமளிப்பதற்காக அதிகம் செய்திருக்கிறார். இந்தியாவில் உள்ள ஐரோப்பிய சமூகத்தின் அங்கங்களான "இங்கிளீஷ்மேன்", "இந்தியன் டெய்லி நியூஸ்", "ஸ்டேட்ஸ்மேன் அண்ட் பிரண்ட் ஆப் இந்தியா" {"Englishman," the "Indian Daily News," and the "Statesman and Friend of India."} ஆகியவற்றின் பேராதரவைப் பெற்றிருக்கிறேன். ("ஸ்டேட்ஸ்மேன்"-ஐச் சார்ந்த) காலஞ்சென்ற திரு.ராபர்ட் நைட் {late Mr. Robert Knight} எப்போதும் இந்தப் பணியில் அதிக ஆர்வத்துடன், இந்தியா எங்கும் உள்ள எண்ணற்ற அறிஞர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். பணவகையிலான உதவியைச் செய்யக்கூடியவர்களின் கவனத்திற்கு இந்தப் படைப்பை எடுத்துச் செல்லம் எந்த வாய்ப்பையும் அவர் தவறவிட்டதில்லை. மேலும், இந்தப் படைப்பு முதன்முதலில் வங்க அரசின் கவனத்தைப் பெறச் செய்ததில் "இங்கிளீஷ்மேன்"-ஐ சார்ந்த ஜெ.ஓ.பி.சௌண்டர்ஸ் {Mr.J.O.B.Saunders}-க்குப் பெரும்பங்கு உண்டு. அதைத் தொடர்ந்து சர் ரிவர்ஸ் தாம்சன் {Sir Rivers Thompson} கணிசமான ஆதரவைத் தந்தார். பயனியர் மற்றும் சிவில் & மிலிட்டரி கெஜட் {The Pioneer and the Civil & Military Gazette} ஆகியவையும் பேருதவி செய்திருக்கின்றன.

ஒரு முயற்சியின் இறுதி நிலைகள், அதிலும் குறிப்பாக நான் செய்வது போன்ற இலக்கியம் சார்ந்த முயற்சியின் இறுதிநிலைகள், தொடக்க நிலைகளைவிட மிகக் கடினமானவையாகவே பொதுவாக இருக்கும். பிற சிரமங்கள் அனைத்தும் மறைந்து போனாலும், தொகை இல்லாமல் போவதே எப்போதையும் விடப் பெரும் சிரமமாக அமைந்துவிடும். இத்தகையதே என்னுடைய சூழ்நிலையும். பெருங்கடலின் பெரும்பகுதியை நான் கடந்துவிட்டேன். இன்னும் எஞ்சியிருப்பவை அதிகமல்ல. ஏற்கனவே கரை பார்வைக்குத் தென்படுகிறது. எனினும் நான் எவ்வளவுதான் களைத்துப் போனாலும், இப்போது என் ஆதரவாளர்கள் என்னைக் கைவிட்டுவிடுவார்கள் என்று நினைக்கவில்லை. நிச்சயம் உதவிக்கரங்களால் கரைக்கு இழுத்துச் செல்லப்படுவேன் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நான் இந்த உலகத்திற்குக் கொடுப்பதற்கு எதுவுமில்லை என்பது பொதுவாக அறியப்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். நான் தொடங்கி, இவ்வளவு தொலைவு முன்னேறி வந்திருக்கும் இந்தப் பணியின் நிறைவுக்காகவே என் இறுதி விலையையும் கொடுப்பேன் என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருக்கலாம். எனினும், என்னிடம் கொடுப்பதற்கு அதிகமில்லை. என் சேமிப்புகள் அனைத்தும் இந்தப் பணியில் கரைந்துவிட்டன. பிறவழிகளில் வந்த என் வருமானங்களும் இந்த நோக்கத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டன. இதனாலெல்லாம் நான் சிறிதும் வருத்தப்படவில்லை. நான் மேற்கொண்டிருப்பதைப் போன்ற ஒரு பணியானது அதன் இயல்பிலேயே ஓர் எமிர் {இளவரசர்} அல்லது ஒரு ஃபகீருக்கு {ஆண்டிக்குப்} {an Emir or a Fakir} பொருத்தமானதாகும். நான் எமிர் அல்ல. எனினும், நான் இருக்கும் சூழ்நிலையில் நான் என்னை ஃபகீர் என்று அழைத்துக் கொள்ளலாம். ஏனெனில், உலகின் பகட்டுப் பொருட்கள் பலவற்றை நான் ஒரு ஃபகீரை {ஆண்டியைப்} போலத் துறந்திருக்கிறேன். மேலும், என் நோக்கத்தில் கொண்டுள்ள காரியத்தை நிறைவேற்றுவதற்காக வாசலுக்கு வாசல் சென்று பிச்சையெடுக்கவும் தயாராக இருக்கிறேன். என் நாட்டு மக்கள் மற்றும் உலக மக்களின் ஈகை குணத்தில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். என் தேவையை அடைவதில் மட்டும் நான் வென்றுவிட்டால், நான் கைவிடப்படவில்லை என்று உறுதியாக நம்புவேன். எனக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர், அரசு கொடுத்திருக்கும் சி.ஐ.இ. {C.I.E. - Companion of Indian Empire} என்ற கௌரவமே ஒரு செயற்கையான சிரமத்தை உண்டாக்குவதாகக் கற்பனை செய்கிறார்கள். ஆனால் நான் அவ்வாறு கருதவில்லை, அவ்வாறும் இல்லை. என் பணியை நிறைவு செய்யும் வரை உண்மையில் நான் உயிர் பிழைத்திருந்தால் எனக்குக் கௌரவமளித்த அரசு நான் பட்டினி கிடப்பதைக் காணாது என உண்மையில் நான் நம்புகிறேன். நாடு முழுவதும் மீண்டும் மீண்டும் நான் மேற்கொண்ட பயணங்களின் விளைவால் என் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்வுகளையும் நடத்தும் எல்லாம் வல்லவன் என் பணிகள் நிறைவடையும்வரை என்னை விட்டு வைப்பான் என்றும், அவை முடிந்ததும் என்னை இவ்வுலகில் இருந்து அழைத்துக் கொள்வான் என்றும் முன்னுணர்வுகள் எனக்கு உண்டு. எனவே, அருள் நிறைந்த என் இந்திய அரசு தன் ஆணைகளின் மூலம் எனக்களித்திருக்கும் கௌரவத்திற்கான கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று நான் நினைக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை.

1, ராஜா குரு தாஸ் தெரு, கல்கத்தா,
ஜூன் 30, 1893
- பிரதாப் சந்திர ராய், சி.ஐ.இ.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்