பனிரெண்டாவது பர்வமான சாந்தி பர்வம் நிறைவுபெறும் இவ்வேளையில் முழுமஹாபாரதத்தில் ஐந்தில் நான்கு பாகம் நிறைவு பெறுகிறது. சென்ற வருடம் தீபாவளியன்று தொடங்கப்பட்ட சாந்தி பர்வத்தின் மொழிபெயர்ப்பு இப்போது நிறைவடைகிறது. 366 பகுதிகளில் 13,682 ஸ்லோகங்களைக் கொண்ட சாந்தி பர்வத்தை நிறைவு செய்ய 422 நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இது வரை மொழிபெயர்த்திருக்கும் பர்வங்களில் ஒவ்வொரு பகுதிக்குப் சராசரியாக ஆன காலத்தை விடச் சாந்தி பர்வப் பகுதிகள் அதிகமாக எடுத்துக் கொண்டிருக்கின்றன. இஃது இப்பகுதிகளை மொழிபெயர்ப்பதில் உள்ள கடினத்தை எடுத்துக் காட்டும்.
சில இடங்களில் சொற்களுக்கான பொருள் தேடுவதிலும், சில இடங்களில் வாக்கியத்திற்கான பொருள் தேடுவதிலும் அதிகக் காலம் செலவானது. கும்பகோணம் பதிப்பை அருகில் வைத்துக் கொண்டு மொழிபெயர்க்கும்போதே இவ்வளவு காலமென்றால், அப்பதிப்பும் இல்லையென்றால் எவ்வளவு காலம் பிடித்திருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. சில இடங்களில் ஒரு பக்கம் அளவிற்கு ஒரே வாக்கியம் அமைந்துவிடும். அது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு பதிவை முடிக்கவே இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும். போதாக்குறைக்குச் சாந்தி பர்வம் கொண்டிருக்கும் கருத்துகள் மிக முதிர்ந்த மனங்களுக்கானவை. எளிமையான சொற்களில் அமைந்த வாக்கியமாக இருந்தாலும் மிகப் பொறுமையாகச் சொல்லுக்குச் சொல் கவனித்தால்தான் சரியான பொருளை உணர முடியும்.
சாந்தி பர்வம் - ராஜதர்மம், ஆபத்தர்மம், மோக்ஷதர்மம் என்ற மூன்று உப பர்வங்களைக் கொண்டதாகும். ராஜதர்மம் பகுதியில் மன்னர்களுக்குரிய நீதிகள், வரி விதிக்கும் முறை குடிகளின் கடமைகள், வர்ணங்கள், ஆசிரமங்கள், அவற்றுக்கான கடமைகள் போன்றவை விரிவாகப் பேசப்படுகின்றன. ஆபத்தர்ம உபபர்வத்தில் நெருக்கடி மிக்க ஆபத்துக் காலங்களில் அறம் பேணுவது எவ்வாறு என்பது விளக்கப்படுகிறது. மூன்றாவதாக வரும் மோக்ஷதர்ம உப பர்வம் மிக நுட்பமான கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் அறக் கருத்துகளைக் கொண்டதாகும். அண்டத்தின் தோற்றம், உயிரினத் தோற்றம், பிரளயம், மனிதன் இறுதியாக அடையக்கூடிய கதி ஆகியவற்றைக் குறித்துப் பல்வேறு முனிவர்கள் பல்வேறு வகைகளில் சொன்ன கருத்துகளைப் பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு உரைக்கிறார். சாந்தி பர்வத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்பவர்கள், அதன் பிறகு உலகை முற்றிலும் வேறு வகையில் கண்டு உணர்வார்கள் என்பதில் ஐயமில்லை. மஹாபாரதச் சுருக்கங்களில் பெரும்பாலும் சாந்தி பர்வம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுவிடும், அதிலும் குறிப்பாக மோக்ஷதர்ம உபபர்வம் முற்றிலும் தவிர்க்கப்படும். கும்பகோணம் பதிப்பில் மட்டுமே இவற்றைத் தமிழில் அறிய முடியும் என்ற நிலையில், மோக்ஷ தர்மம் முழுமையும் இணையத்தில் கிடைக்கச் செய்ததில் உள்ளம் பேருவகைக் கொள்கிறது. மோக்ஷதர்மம் படித்தாலே சந்நியாசம் கொள்வார்கள் என்பார்கள். செயல் துறப்பை வலியுறுத்தும் மோக்ஷதர்மத்தை மொழிபெயர்த்து முடித்தாலும், ஏற்றுக் கொண்ட பணிகள் அவ்வாறெல்லாம் ஒருவனை விடுமா?
மோக்ஷதர்ம உபபர்வத்தின் 100வது பகுதியை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது, செப்டம்பர் 19ம் தேதி முக்திநாத்தில் இருந்து என் மாமியின் மூலம் இல்லம் தேடி வந்த சாளக்கிராமம் உண்மையில் என்னை உடல்சிலிர்க்கச் செய்தது. உண்மையில் மோக்ஷதர்மம் மொழிபெயர்த்தபோது கிட்டிய இயல்புக்குமீறிய அனுபவங்கள் ஏராளம் எனலாம்.
மோக்ஷதர்ம உபபர்வத்தின் 100வது பகுதியை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது, செப்டம்பர் 19ம் தேதி முக்திநாத்தில் இருந்து என் மாமியின் மூலம் இல்லம் தேடி வந்த சாளக்கிராமம் உண்மையில் என்னை உடல்சிலிர்க்கச் செய்தது. உண்மையில் மோக்ஷதர்மம் மொழிபெயர்த்தபோது கிட்டிய இயல்புக்குமீறிய அனுபவங்கள் ஏராளம் எனலாம்.
சாந்தி பர்வத்தின் இறுதி பகுதியான 366ம் பகுதியை டிசம்பர் 14ந்தேதி மொழிபெயர்த்து முடிக்கும் போது இரவு 3 மணி. காலையில் எட்டு மணிக்கு எழுந்து பார்க்கும்போது பதிவும் திருத்தப்பட்டிருக்கிறது; வங்கிக் கணக்கில் ரூ.19,300/- வரவு வந்திருப்பதாகக் குறுஞ்செய்தியும் கிட்டியது. நண்பர் ஜெயவேலன் வேலை நிமித்தமாக இங்கிலாந்து சென்று வருடம் ஒன்றாகிறது. வெளிநாட்டில் இருந்தாலும், பதிவுகளை உடனுக்குடன் திருத்தி வருகிறார். சாந்தி பர்வத்தின் முதல் இரண்டு உப பர்வங்கள் முடிவடைந்ததும், ரூ.17,300/- அனுப்பி வைத்திருந்தார். ஆகச் சாந்தி பர்வத்திற்கென்று அவர் ரூ.36,600/- கொடுத்திருக்கிறார். இந்த ஆறு வருடங்களில் முழு மஹாபாரதம் மொழிபெயர்ப்புக்காக இதுவரை ஜெயவேலன் அவர்கள் ரூ.1,80,000/- கொடுத்திருக்கிறார்.
பெரிதும் அஞ்சிய சாந்தி பர்வத்தின் மொழிபெயர்ப்பு நிறைவடைந்தது மட்டற்ற மகிழ்ச்சி. இன்று வைகுண்ட ஏகாதசி அன்று பதிமூன்றாம் பர்வமான அநுசாஸன பர்வத்தை மொழிபெயர்க்கத் தொடங்குகிறேன். பரமன் துணைநிற்பான்.
நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்201812190321