Siva adoration of Tandi rishi! | Anusasana-Parva-Section-16 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 16)
பதிவின் சுருக்கம் : தண்டி முனிவர் பரமசிவனைப் புகழ்ந்து செய்த துதியை கிருஷ்ணனுக்குச் சொன்ன உபமன்யு...
உபமன்யு {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஐயா, கிருத யுகத்தில் தண்டி என்ற பெயரில் கொண்டாடப்பட்ட முனிவர் ஒருவர் இருந்தார். இதயத்தில் பெரும் அர்ப்பணிப்புடன் கூடிய அவர், தியான யோகத்தின் துணையுடன் பத்தாயிரம் {10000} வருடங்கள் அந்தப் பெருந்தேவனைத் துதித்தார். அத்தகைய இயல்புக்கு மீறிய அர்ப்பணிப்பின் மூலம் அவர் பெற்ற கனி அல்லது வெகுமதியை நான் உனக்குச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக. மஹாதேவனைக் காண்பதில் வென்ற அவர், சில பாடல்களைப் பாடி அவனைப் புகழ்ந்தார்.(1,2) மாற்றமில்லாதவனும், சிதைவில்லாதவனுமான அந்தப் பரமாத்மாவை தவங்களின் துணையுடன் சிந்தித்து, ஆச்சரியத்தில் நிறைந்த தண்டி இந்த வார்த்தைகளைச் சொன்னார்,(3) "உயர்ந்தவனாகச் சாங்கியர்களால் விளக்கப்படுபவனும், யோகியரால் நினைக்கப்படுபவனும், முதன்மையானவனும், அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், இருப்பிலுள்ளவை அனைத்தின் ஆசானும், அண்டத்தின் படைப்புக்கும், அழிவுக்கும் காரணன் என்று கல்விமான்களால் சொல்லப்படுபவனும், தேவர்கள், அசுரர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரைக் காட்டிலும் மேன்மையானவனும், அனைத்தையும் விட உயர்ந்தவனும், பிறப்பற்றவனும், அனைத்துப் பொருட்களின் தலைவனும், தொடக்கமும், முடிவும் அற்றவனும், உயரந்த பலத்தைக் கொண்டவனும், உயர்ந்த இன்பநிலையில் இருப்பவனும், பிரகாசமானவனும், பாவமற்றவனுமான புருஷனின் பாதுகாப்பை நான் நாடுகிறேன்" என்றார்.(4-6)
தண்டி இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, தவப் பெருங்கடலும், மாற்றமில்லாதவனும், சிதைவில்லாதவனும், ஒப்பில்லாதவனும், புரிந்துகொள்ளப்பட முடியாதவனும், நித்தியமானவனும், எந்த மாற்றமும் இல்லாதவனும், பகுபடாதவனும், முழுமையானவனும், பிரம்மமே ஆனவனும், குணங்கள் அனைத்தையும் கடந்தவனும், குணங்களுடன் கூடியவனும், யோகிகளின் உயர்ந்த மகிழ்ச்சியும், சிதைவற்றவனும், விடுதலை {மோக்ஷம் / முக்தி} என்றழைக்கப்படுபவனும், மனம், இந்திரன், காற்று தேவன், மொத்த அண்டம், பெரும்பாட்டனான பிரம்மன் ஆகியோரின் புகலிடமும், மனத்தால் புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், எவ்வகை மாற்றமும் இல்லாதவனும், தூயனும், புத்தியால் மட்டுமே புரிந்து கொள்ளப்படக்கூடியவனும், மனத்தைப் போலப் பருப்பொருளற்றவனும்;(7-9) புரிந்து கொள்ளக் கடினமானவனும், அளவிடப்பட முடியாதவனும், தூய்மையற்ற ஆன்மா கொண்டோரால் அடைதற்கரியவனும், அண்டத்தின் தோற்றுவாயும், அண்டம் மற்றும் இருள் குணம் {தமஸ் குணம்} ஆகிய இரண்டையும் கடந்தவனும், புராதனமானவனும், புருஷனும், பிரகாசமிக்கவனும், உயர்ந்தவற்றில் உயர்ந்தவனுமான அந்தப் பெருந்தேவனை அவர் தம்முன் கண்டார்.(10) அவனைக் காண விரும்பி, உயிர் மூச்சுகளுடன் தன்னை அமைத்துக் கொண்டு ஜீவனில் இருந்து விளைவதில் மனம் என்றழைக்கப்படும் பிரகாசத்தின் வடிவில் வசித்து, கடுந்தவங்களைப் பயில்வதில் பல வருடங்களைக் கடத்திய முனிவர் தண்டி, அத்தவங்களின் வெகுமதியாக அவனைக் காண்பதில் வென்றதும் , பின்வரும் வார்த்தைகளால் அந்தப் பெருந்தேவனைத் துதித்தார்.(11)
தண்டி {மஹாதேவனிடம்}, "புனிதங்கள் அனைத்திலும் புனிதமானவன் நீயே, ஓ! புத்தியுள்ளோர் அனைவரிலும் முதன்மையானவனே, அனைத்தின் புகலிடமும் நீயே. அனைத்து வகைச் சக்திகளிலும் கடுஞ்சக்தி நீயே. தவங்கள் அனைத்திலும் கடுந்தவம் நீயே.(12) ஓ! பலமிக்கவனே, அருள்களை வழங்கும் தயாளன் நீயே. உயர்ந்த வாய்மை நீயே. உன்னை வணங்குகிறேன்.(13) ஓ! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே, ஓ! அனைத்து இன்பங்களின் புகலிடமே, உன்னை வணங்குகிறேன். ஓ! பலமிக்கவனே, பிறப்பிறப்புக்கு அஞ்சி மிகக் கடுமையாக முயல்பவர்களுக்கு நிர்வாணத்தைக் கொடுப்பவன் நீயே.(14) பெரும்பாட்டனான பிரம்மன், நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்), விஷ்ணு, விஸ்வேதேவர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோரே கூட உனது உண்மை இயல்பைப் புரிந்து கொள்ள வல்லவர்களல்ல. அவ்வாறிருக்கையில் எங்களைப் போன்ற மனிதர்களால் எவ்வாறு உன்னைப் புரிந்து கொள்ள முடியும்?(15)
காலன் என்றழைக்கப்படுபவன் நீயே, புருஷன் என்றழைக்கப்படுபவன் நீயே, பிரம்மன் என்றுமழைக்கப்படுபவன் நீயே. புராணங்களை அறிந்த தெய்வீக முனிவர்கள் மூவுடலைக் கொண்டவன் {மூன்று மூர்த்திகள் - பிரம்மா, விஷ்ணு, சிவன்} நீ என்று சொல்கின்றனர்.(16) அதிபுருஷன் {அதிபௌருஷம்-ஆத்மாவிலுள்ளவன்}, அத்யாத்மம் {உடலில் உள்ளவன்}, அதிபூதம் {ஐம்பூதங்களில் உள்ளவன்}, அதிதைவதம் {அதிதெய்வம்-தேவர்களில் உள்ளவன்}, அதிலோகம் {உலகங்களில் உள்ளவன்}, அதிவிஜ்ஞானம் {ஞானத்தில் உள்ளவன்}, அதியஜ்ஞம் {யாகத்தில் இருப்பவன்} நீயே.(17) ஞானிகள், தங்களில் வசிப்பவனும், தேவர்களாலேயே அறியப்பட முடியாதவனுமான உன்னை அறிவதில் வெல்லும்போது, பந்தங்களில் இருந்து விடுபட்டு, கவலைகள் அனைத்தையும் கடந்த இருப்பு நிலையை அடைகின்றனர்.(18) ஓ! பெரும்பலம் கொண்டவனே, உன்னை அறிய விரும்பாதவர்கள், எண்ணற்ற பிறப்பிறப்புகளை அடைகின்றனர். சொர்க்கம் மற்றும் விடுதலையின் {முக்தியின்} வாயிலாக இருப்பவன் நீயே. அனைத்துப் பொருட்களையும் இருப்பில் இருக்கச் செய்பவனும், மீண்டும் தன்னுள்ளேயே ஈர்த்துக் கொள்பவனும் நீயே. பெருங்கொடையாளன் நீயே.(19) சொர்க்கம் நீயே, விடுதலை {முக்தி} நீயே, (செயல்பாட்டின் வித்தாக விளங்கும்) ஆசை நீயே. உயிரினங்களை ஈர்க்கும் கோபம் நீயே. சத்வம் நீயே, ரஜஸ் நீயே, தமஸ் நீயே, கீழுலகங்கள் {பாதாளம் முதலான உலகங்கள்} நீயே, மேலுலகங்கள் நீயே.(20)
பெரும்பாட்டனான பிரம்மன் நீயே, பவன் நீயே, விஷ்ணு நீயே, ஸ்கந்தன் நீயே, இந்திரன் நீயே, சாவித்ரி நீயே, யமன் நீயே, வருணன் நீயே, சோமன் நீயே, தாத்ரி நீயே, மனு நீயே, விதாத்ரி நீயே, கருவூலத் தலைவனான குபேரன் நீயே.(21) பூமி நீயே, காற்று நீயே, நீர் நீயே, அக்னி நீயே, வெளி நீயே, வாக்கு நீயே, புத்தி நீயே, நிலைமாறாவுறுதி நீயே, நுண்ணறிவு நீயே, உயிரினங்கள் செய்யும் செயல்கள் நீயே, மெய் நீயே, பொய் நீயே, இருப்பு நீயே, இன்மை {இல்லாமை} நீயே.(22) புலன்கள் நீயே, பிரகிருதியைக் கடந்திருப்பவன் நீயே, மாற்றமில்லாதவன் நீயே. அண்டத்திலுள்ளவை அனைத்திலும் மேன்மையானவன் நீயே, அண்டத்தில்லாதவை அனைத்திலும் மேன்மையானவன் நீயே, சிந்தைக்கு எட்டுபவன் நீயே, சிந்தைக்கு எட்டாதவன் நீயே.(23) பரப்பிரம்மமும், உயர்ந்த தனிவடிவ உட்பொருள் நீயே, சாங்கியர்கள் மற்றும் உன்னைப் போன்ற யோகியர்கள் இருவரும் அடையும் கதி நிச்சயம் நீயே. (24) உண்மையில், உன் வடிவைக் காண அருள் செய்த விளைவால் நீ எனக்கு இன்று வெகுமதியளித்திருக்கிறாய். அறவோர் மட்டுமே எட்டும் கதியை நான் அடைந்திருக்கிறேன். அறிவால் தூய்மையடைந்த புத்தியைக் கொண்டோரால் வேண்டப்படும் கதியையே நான் வெகுமதியாக அடைந்திருக்கிறேன்.(25)
ஐயோ, இவ்வளவு காலம் நான் அறியாமையில் இருந்தேனே; ஞானிகள் அனைவராலும் அறியப்படும் நித்திய உட்பொருளும், உயர்ந்த தேவனுமான உன்னைக் குறித்த அறிவில்லாமல் இவ்வளவு நீண்ட காலம் உணர்வற்ற மூடனாக இருந்தேனே.(26) ஓ! அர்ப்பணிப்பு கொண்டருக்கு அருள் வழங்குபவனே, எண்ணற்ற பிறவிகளின் போக்கில் நீ காட்டிய கருணையின் விளைவால் இறுதியாக உன்னிடம் அர்ப்பணிப்புக் கொள்வதில் வென்றேன். உன்னை அறிவதில் வெல்வபன் அழிவின்மையை அனுபவிக்கத் தகுந்தவனாகிறான்.(27) தேவர்கள், அசுரர்கள் மற்றும் தவசிகளுக்கு எப்போதும் புதிராக இருப்பவன் நீயே. பிரம்மம் குகைக்குள் மறைந்திருக்கிறது. தவசிகளாலேயே கூட அதைக் காணவோ, அறியவோ முடியவில்லை[1].(28) அனைத்தையும் படைத்தவனும், அனைத்துத் திசைகளிலும் முகத்தைக் கொண்டவனுமான பலமிக்கத் தேவன் நீயே. அனைத்துப் பொருட்களின் ஆன்மா நீயே, அனைத்துப் பொருட்களையும் காண்பவன் நீயே, அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் நீயே. அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் நீயே.(29) உனக்கான உடலை உண்டாக்குபவன் நீயே. அவ்வுடலைச் சுமப்பவன் நீயே. உடல்படைத்தவன் நீயே. உடலை அனுபவிப்பவன் நீயே, உடல் படைத்த உயிரினங்கள் அனைத்தின் புகலிடமும் நீயே. உயிர் மூச்சுகளைப் படைத்தவன் நீயே, உயிர்மூச்சுகளைக் கொண்டவன் நீயே, உயிர்மூச்சுகளோடு கூடியவன் நீயே, உயிர் மூச்சுகளுடன் கூடிய அனைத்தின் புகலிடமும் நீயே.(30)
[1] "ஒவ்வொரு உயிரினத்தின் இதயமே இங்குக் குகை என்று சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தேவர்களுக்கும் அஸுரர்களுக்கும், முனிவர்களுக்கும் தெரியாமல் குகையில் வைக்கப்பட்டதும், வேதத்தால் அறியக்கூடாததுமான பரப்ரம்மம் எதுவோ அஃது இந்தப் பகவனான ஈஸ்வரர்தாம்" என்றிருக்கிறது.
தியான யோகத்தில் அர்ப்பணிப்பு மிக்கவர்களும், ஆன்மாவை அறிந்தவர்களும், மறுபிறவி தவிர்க்க வேண்டுபவர்களுமான அறவோர் அனைவரின் புகலிடமான அந்த அத்யாத்மம் நீயே. உண்மையில், அந்தப் புகலிடத்துடன் அடையாளம் காணப்படும் உயர்ந்த தலைவன் நீயே.(31) உயிரினங்கள் அனைத்திற்கும் இன்ப துன்பம் நிறைந்த கதிகளைக் கொடுப்பவன் நீயே. படைக்கப்பட்டவை அனைத்தின் பிறப்பிறப்பை விதிப்பவன் நீயே.(32) விருப்பங்கள் கனிவதில் வெற்றியால் மகுடம் சூட்டப்படும் முனிவர்களுக்கு வெற்றியை அருளும் பலமிக்கத் தலைவன் நீயே. பூலோகம் தொடங்கிச் சொர்க்கவாசிகள் அனைவருடன் சேர்ந்து அனைத்து உலகங்களையும் படைத்து அவை அனைத்தையும் பேணித் தாங்குபவனான நீ, நன்கறியப்பட்ட எட்டு வடிவங்களில் உன்னைப் பகுத்துக் கொள்கிறாய்.(33) உன்னில் இருந்தே அனைத்தும் உண்டாகின்றன. உன்னையே அனைத்தும் சார்ந்திருக்கின்றன. மேலும் அனைத்துப் பொருட்களும் உன்னிலையே மறைகின்றன. நித்தியமான ஒரே பொருள் நீயே.(34) அறவோரால் வேண்டப்படுவதும், அவர்களால் உயர்ந்ததாகக் கருதப்படுவதுமான வாய்மை உலகம் {சத்தியலோகம்} நீயே. யோகியர் வேண்டும் தனிப்பட்ட இருப்பு முறித்துக் கொள்ளும் நிலையாக இருப்பவன் நீயே. ஆன்மாவை ஆறிந்தோரால் நாடப்படும் விடுதலை {முக்தி} நீயே.(35)
தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் உன்னைக் காணாதிருக்க வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிரம்மன் முதலானவர்களால் குகையில் மறைத்து வைக்கப்பட்டவன் நீயே.(36) இதயத்தில் வசிப்பவனாக இருந்தாலும் மறைக்கப்பட்டிருப்பவன் நீயே. எனவே, ஓ! பவா, உன்னால் திகைப்படைந்த தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் விபரங்கள் அனைத்துடன் உன்னைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாகின்றனர்.(37) ஓ! அனைவரின் இதயங்களிலும் வசிப்பவனே, அர்ப்பணிப்பால் இதயத் தூய்மை அடைவதில் வெல்லும் மனிதர்களுக்கு உன் விருப்பத்தின் பேரில் நீ காட்சியளிக்கிறாய்.(38) உன்னை அறிவதால் ஒருவன் இறப்பையும், மறுபிறப்பையும் தவிர்க்கலாம். உயர்ந்த அறிவுப்பொருள் {ஞானப்பொருள்} நீயே. உன்னை அறிவதால் ஒருவன் அறிய வேண்டிய உயர்ந்த பொருள் வேறேதும் இல்லை.(39) அடையத்தக்க உயர்ந்த பொருள் நீயே. உண்மையில் ஞானியாக இருப்பவன், உன்னை அடைந்ததும், அடையத்தக்க உயர்ந்த பொருள் வேறேதும் இல்லை என்று நினைக்கிறான். மிக நுட்பமானவனும், அடையத்தக்க உயர்ந்த பொருளுமான உன்னை அடைவதன் மூலம் ஒரு ஞானியானவன் அழிவற்றவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் ஆகிறான்.(40)
தத்துவம் அறிந்தவர்களும், (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) குணங்களின் அறிவைப் பெற்றவர்களும், நுட்பமான அல்லது அழிவற்ற அறிவை அடைவதன் மூலம் அழிவுநிலையைக் கடப்பவர்களும், கல்விமான்களுமான சாங்கிய அமைப்பின் தொண்டர்கள், அனைத்துப் பந்தங்களில் இருந்தும் தங்களை விடுவித்துக் கொள்வதில் உன்னை அறிந்து வெற்றி அடைகிறார்கள்.(41) வேதங்களை அறிந்தவர்கள், வேதாந்தங்களில் விளக்கப்பட்டிருக்கும் அறிவுப்பொருள் என உன்னையே கருதுகிறார்கள். மூச்சுப்பயிற்சியில் அர்ப்பணிப்புமிக்க இம்மனிதர்கள் எப்போதும் உன்னை நோக்கியே தியானித்து இறுதியாக உயர்ந்த கதியை அடைவதன் மூலம் உன்னில் நுழைகிறார்கள்.(42) அம்மனிதர்கள், ஓங்காரத்தால் அமைக்கப்பட்ட தேரைச் செலுத்திக் கொண்டு மஹேஸ்வரனுக்குள் நுழைகிறார்கள். தேவ பாதை என்றழைக்கப்படும் பாதையில் ஆத்தியம் என்றழைக்கப்படும் வாயில் நீயே.(43) பித்ரு பாதை என்றழைக்கப்படும் பாதையில் சந்திரமாஸ் {சந்திரன்} என்றழைக்கப்படும் வாயில் நீயே. காஷ்டை நீயே, திசைப்புள்ளிகள் நீயே, ஆண்டு நீயே, யுகங்களும் நீயே.(44) சொர்க்கங்களின் அரசு நீயே, பூமியின் அரசும் நீயே, வட மற்றும் தென் அயனங்களும் நீயே. ஓ! நீலம் மற்றும் சிவப்பு {நீலலோகிதன்} என்றழைக்கப்படுபவனே, பழங்காலத்தில் உன் புகழைப் பல்வேறு பாடல்களில் பாடி உயிரினங்களைப் படைக்குமாறுப் பெரும்பாட்டனான பிரம்மன் உன்னைத் தூண்டினான்.(45)
ரிக்குகளை அறிந்த பிராமணர்கள், அனைத்துப் பொருட்களிலும் பற்றற்றவனாகவும், வடிவங்களேதும் அற்றவனாகவும் உன்னைக் கருதி ரிக்குகளை ஓதி உன்னைப் புகழ்கிறார்கள். வேள்விகளில் அதர்யுக்கள், ஒரே ஞானப்பொருளான உன்னை மதிக்கும் வகையில் நன்கறியப்பட்ட மூன்று வழிகளில் யஜுஸ்களைப் பாடுகிறார்கள்.(46) தூய்மையடைந்த புத்தியைக் கொண்டவர்களும், சாமங்களை அறிந்தவர்களுமான மனிதர்கள், சாமங்களின் துணையுடன் உன்னைப் பாடுகிறார்கள். மேலும், அதர்வணங்களை அறிந்த மறுபிறப்பாளர்கள், ரிதன் என்றும், வாய்மை என்றும், மேன்மை என்றும், பிரம்மம் என்றும் உன்னைக் குறித்துப் பாடுகிறார்கள். வேள்வி நடைபெறும் இடங்களில் உயர்ந்த காரணமாக இருப்பவன் நீயே. தலைவனும், பரமனும் நீயே.(47) இரவும், பகலும் உன் கேள்விப் புலனாகவும், பார்வைப்புலனாகவும் இருக்கின்றன. பிறை நாட்களும், மாதங்களும் உன் தலையாகவும், கரங்களாகவும் இருக்கின்றன. பருவகாலங்கள் உன் சக்தியாகும், தவங்கள் உன் பொறுமையாகும் {தைரியமாகும்}, வருடம் உன் குதமும், தொடைகளும் பாதங்களுமாகும்.(48) மிருத்யு நீயே, யமன் நீயே, ஹுதாஸன் நீயே, காலன் நீயே, அழிவைத் தருவதில் வேகமாகச் செயல்படுபவன் நீயே, காலத்தின் மூலக் காரணம் நீயே, நித்திய காலம் நீயே.(49) ஆகாயத்தை நிறைத்திருக்கும் வெளி, கோள்கள் மற்றும் விண்மீன்களுடன் சேர்ந்த சந்திரமாஸும் {சந்திரனும்}, ஆதித்தியனும் நீயே. துருவ நட்சத்திரம் நீயே, சப்தமுனிவக் கூட்டம் நீயே, பூலோகம் முதலான ஏழு உலகங்கள் நீயே.(50)
பிரதானனும் {முக்கிய முதல்வனும்}, மஹத்தும் நீயே, வெளிப்படாதவன் நீயே, இவ்வுலகமும் நீயே. பிரம்மன் முதல் தாழ்ந்த செடி வடிவங்கள் வரையான அண்டம் நீயே. அனைத்து உயிரினங்களின் தொடக்கம் அல்லது மூலக் காரணன் நீயே. இருப்பு நீயே, இல்லாமையும் நீயே.(51) எட்டுப் பிரகிருதிகள் நீயே. அந்த எட்டு பிரகிருதிகளுக்கும் மேலானவன் நீயே. இருப்பில் உள்ள அனைத்தும் தெய்வீகமான உன் சுயத்தின் ஒரு பகுதியையே பிரதிபலிக்கின்றன.(52) நித்தியமான உயர்ந்த இன்ப நிலை {பரமானந்தம்} நீயே. அனைத்துப் பொருட்களாலும் அடையப்படும் கதி நீயே. அறவோரால் வேண்டப்படும் உயர்ந்த இருப்புநிலை நீயே.(53) கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட நிலை நீயே. நித்திய பிரம்மம் நீயே. சாத்திரங்கள் மற்றும் வேதாங்கங்களைக் கற்ற மனிதர்களின் தியானத்தில் அமையும் உயர்ந்த நிலை நீயே.(54) உயர்ந்த காஷ்டை நீயே, உயர்ந்த காலம் நீயே. உயர்ந்த வெற்றி நீயே, உயர்ந்த புகலிடமும் நீயே.(55) உயர்ந்த அமைதிநிலை நீயே. இருப்பின் உயர்ந்த முற்றுநிலை நீயே. உன்னை அடைவதால் உயர்ந்த வெற்றியை அடைவதாக யோகியர் நினைக்கின்றனர்.(56) மனநிறைவு நீயே, வெற்றி நீயே, ஸ்ருதி நீயே, ஸ்மிருதியும் நீயே. யோகிகள் முயற்சிக்கும் ஆன்மப் புகலிடம் நீயே, ஞானிகள் தொடரும் அழிவற்ற பிராப்தி நீயே.(57)
வேள்விக்கு அடிமைகளும், குறிப்பிட்ட ஆசைகளால் தூண்டப்பட்டு வேள்விகளில் ஆகுதிகளை ஊற்றுபவர்களும், அத்தகைய தருணங்களில் பெருங்கொடைகளை அளிப்பவர்களும் தங்கள் நோக்கமாகக் கொண்டிருப்பவன் நிச்சயம் நீயே.(58) இடையறாத பாராயணம், கடும் நோன்புகள், அமைதியான வாழ்வுமுறைக்கு இணங்கும் உண்ணா நோன்புகள் மற்றும் தன்னொடுக்கத்திற்கான பிற வழிமுறைகளுடனும், கடுந்தவங்களாலும் தங்கள் உடல்களை வீணாக்கும் மனிதர்களால் நாடப்படும் உயர்ந்த கதி நீயே.(59) ஓ! நித்தியமானவனே, அனைத்துச் செயல்களையும் துறந்தவர்களும், அனைத்துப் பொருட்களிலும் பற்றற்றவர்களுமாக இருக்கும் மனிதர்களின் கதி நீயே.(60) ஓ! நித்தியமானவனே, மறுபிறப்பில் இருந்து விடுதலை {முக்தி} அடைய விரும்புவோர், இன்பங்கள் அனைத்தின் தொடர்பறுந்து வாழ்வோர், பிரகிருதி பூதங்களின் அழிவை விரும்புவோர் ஆகியோரின் கதி நீயே.(61) ஓ! சிறப்புமிக்கவனே, விளக்க முடியாததும், களங்கமற்றதும், மாற்றமில்லாததும், ஞானம் மற்றும் அறிவியலில் அர்ப்பணிப்பு மிக்கோருக்குச் சொந்தமானதுமான உயர்ந்த கதி நீயே.(62) வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் புராணங்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஐந்து கதிகள் இவையே. உன் அருளின் மூலமே அம்மனிதர்கள் அக்கதிகளை அடைகிறார்கள் அல்லது அடையத் தவறுகிறார்கள், உன் அருளின் மூலமே அவை அவர்களுக்கு மறுக்கவும் படுகின்றன" என்றார் {தண்டி}.(63) தவங்களின் பெருங்குவியலான தண்டி இவ்வாறே ஈசானனைப் புகழ்ந்தார் {துதித்தார்}. மேலும் அவர், (மஹாதேவனை மகிமை படுத்தும் வகையில்) படைப்பாளனால் பழங்காலத்தில் படாடப்பட்ட உயர்ந்த பிரம்மத்தையும் பாடினார்"[2].(64)
[2] கும்பகோணம் பதிப்பில், "தவங்களுக்கெல்லாம் இருப்பிடமாகிய தண்டி மஹாமுனிவர் முன்னர் உலகம் படைத்த ப்ரம்மதேவர் எந்தப் பரப்பிரம்மத்தைத் துதித்தாரோ அந்தப் பரப்ரம்மமாகிய ஈஸ்வரரை மனமாரத் துதித்தார்" என்றிருக்கிறது.
உபமன்யு {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தார், "பிரம்மத்தை ஓதுபவரான தண்டியால் இவ்வாறு துதிக்கப்பட்டவனும், சிறப்புமிக்கவனும், உயர்ந்த தேவனுமான மஹாதேவன், தன் மனைவியான உமையின் துணையுடன் வந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(65) தண்டி மேலும், "பிரம்மனோ, இந்திரனோ, விஷ்ணுவோ, விஸ்வேதேவர்களோ பெரும் முனிவர்களோ உன்னை அறிய மாட்டார்கள்" என்றார். இதனால் நிறைவடைந்த சிவன் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(66)
அந்தப் புனிதமானவன் {சிவன்}, "நீ அழிவற்றவனாகவும், நித்தியமானவனாகவும் இருப்பாய். நீ கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபடுவாய். பெரும் புகழ் உனதாகும். நீ சக்தியுடனிருப்பாய். ஆன்ம அறிவு உனதாகும்.(67) முனிவர்கள் அனைவரும் உன்னை நாடுவார்கள், ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, என் அருளின் மூலம் உன் மகன் சூத்திரங்களின் ஆசானாவான்.(68) நான் இன்று உனக்கு என்ன வரங்களைத் தர வேண்டும்? ஓ! மகனே, நீ விரும்பும் பொருட்களை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான். இதன் பேரில் தண்டி, தமது கரங்களைக் கூப்பிக் கொண்டு, "ஓ! தலைவா, உன்னிடம் நான் கொண்டுள்ள அர்ப்பணிப்பு நிலையான உறுதியுடன் இருக்கட்டும்" என்று கேட்டார்".(69)
உபமன்யு தொடர்ந்தார், "அந்தப் பெருந்தேவன், தண்டிக்கு இந்த வரங்களைக் கொடுத்து, தேவர்கள் மற்றும் முனிவர்களின் துதிகளை ஏற்றுக் கொண்டு அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(70) ஓ! யாதவர்களின் தலைவா, அந்தச் சிறப்புமிக்கத் தேவன் தன் தொண்டர்களுடன் இவ்வாறு மறைந்ததும், அந்த முனிவர் {தண்டி} என் ஆசிரமத்திற்கு வந்து அவருக்கு நேர்ந்த அனைத்தையும் எனக்குச் சொன்னார்.(71) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, தண்டியால் எனக்குச் சொல்லப்பட்ட (மஹாதேவனின்) அந்தக் கொண்டாடப்படும் பெயர்கள் அனைத்தையும் உன் வெற்றிக்காகக் கேட்பாயாக.(72) பெரும்பாட்டன் {பிரம்மன்} ஒரு காலத்தில் மஹாதேவனுக்குப் பொருந்தும் பத்தாயிரம் பெயர்களைச் சொன்னான். அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் ஓராயிரம் பெயர்கள் சாத்திரங்களில் இருக்கின்றன.(73) இந்தப் பெயர்கள் அனைவராலும் அறியப்பட்டவை அல்ல. ஓ! அழிவைக் கடந்தவனே, பழங்காலத்தில் அந்த உயர் ஆன்ம தேவனைத் துதிப்பதற்காகப் பெரும்பாட்டனான பிரம்மன் இந்தப் பெயர்களைச் சொன்னார். பெரும்பாட்டனின் அருள் மூலம் அவற்றை அடைந்த தண்டி, அவற்றை எனக்குச் சொன்னார்" {என்றார் உபமன்யு}.(74)
அநுசாஸனபர்வம் பகுதி – 16ல் உள்ள சுலோகங்கள் :74
ஆங்கிலத்தில் | In English |