The boons acquired by Krishna! | Anusasana-Parva-Section-15 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 09)
பதிவின் சுருக்கம் : பார்வதியும், பரமேஸ்வரனும் தனக்குக் கொடுத்த வரங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
அருள்நிறைந்த கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, "அந்தச் சக்திமிக்க ஒளித்திரளுக்கு {சிவனுக்கு}, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் தலைவணங்கி, அவனிடம் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நான் இந்த வார்த்தைகளைச் சொன்னேன்,(1) "அறத்தில் உறுதி, போரில் பகைவரைக் கொல்லும் ஆற்றல், உயர்ந்த புகழ், பெரும் வலிமை, யோகத்தில் அர்ப்பணிப்பு, {அனைவருடனும் அன்பாக இருத்தல்}, உன் அருகாமை, நூறு நூறாகப் {பத்தாயிரம்} பிள்ளைகள் ஆகியனவே நான் உன்னிடம் கேட்கும் வரங்களாகும்" என்றேன்.(2) சங்கரன் நான் சொன்ன வார்த்தைகளை மீண்டும் சொல்லி "அப்படியே ஆகட்டும்" என்றான்.
அதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் தாங்குபவளும், அனைத்துப் பொருட்களையும் தூய்மையாக்குபவளும்,(3) சர்வனின் மனைவியும், தவங்களின் கொள்ளிடமுமான அண்டத்தின் அன்னை {பராசக்தி}, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னாள், "ஓ! பாவமற்றவரே, சாம்பன் என்று பெயர் சூட்டப்படும் மகன் ஒருவனைப் பலமிக்க மஹாதேவன் உமக்கு அருளியிருக்கிறார்.(4) நீர் என்னிடம் இருந்தும் எட்டு வரங்களைக் கேட்பீராக. நான் அவற்றை உமக்கு நிச்சயம் தருவேன்" என்றாள்.
ஓ! பாண்டுவின் மகனே, அவளுக்குத் தலைவணங்கிய நான், அவளிடம், "பிராமணர்களிடம் மாறாப் பற்று, என் தந்தையின் அருள், நூறு மகன்கள், உயர்ந்த இன்பங்கள், என் குடும்பத்தில் அன்பு, என் அன்னையின் அருள், அமைதி நிலையை அடைந்தல், ஒவ்வொரு செயலையும் புத்திசாலித்தனமாகச் செய்தல் ஆகியவற்றை நான் உன்னிடம் வேண்டுகிறேன்" என்றேன்.(5,6)
உமை {கிருஷ்ணனிடம்}, "ஓ தேவனுக்கு இணையான ஆற்றலையும், பலத்தையும் கொண்டவரே, உண்மையற்றதை {பொய்யை} நான் ஒருபோதும் சொன்னதில்லை. உமக்குப் பதினாறாயிரம் {16000} மனைவியர் வாய்ப்பர். அவர்களிடம் நீர் கொள்ளும் அன்பும், உம்மிடம் அவர்கள் கொள்ளும் அன்பும் அளவற்றதாக இருக்கும்.(7) உமது உற்றார் உறவினர் அனைவரிடம் இருந்தும் உயர்ந்த பாசத்தை நீர் பெறுவீர். உமது உடல் பேரழகு வாய்ந்ததாக இருக்கும். நீர் உம் அரண்மனையில் தினமும் ஏழாயிரம் விருந்தினர்களுக்கு உணவூட்டுவீர்" என்றாள்".(8)
வாசுதேவன் தொடர்ந்தான், "ஓ! பாரதரே, ஓ! பீமரின் அண்ணனே, எனக்கு இவ்வாறு வரங்களை அருளிய தேவனும் தேவியும், பூத கணங்களுடன் அங்கேயே அப்போதே மறைந்தனர்.(9) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, (மஹாதேவனைத் துதிக்க நான் யாரிடம் தீக்ஷை பெற்றேனோ அந்தப்) பெருஞ்சக்தி கொண்ட பிராமணரான உபமன்யு குறித்து நான் உமக்குச் சொன்ன செய்திகள் முழுமையும் அற்புதம் நிறைந்தவையாகும்.
உபமன்யு, அந்தப் பெருந்தேவனை வணங்கிவிட்டு, என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(10) உபமன்யு, "சர்வனைப் போன்று வேறு தேவனில்லை. சர்வனைப் போன்றொரு கதியோ, புகலிடமோ வேறில்லை. இவ்வளவு உயர்ந்த வரங்களை வேறு எவனாலும் கொடுக்க முடியாது. போரில் அவனுக்கு இணையானவன் வேறு எவனும் கிடையாது" என்றார்.(11)
அநுசாஸனபர்வம் பகுதி – 15ல் உள்ள சுலோகங்கள் : 11
ஆங்கிலத்தில் | In English |