The glory of Lord Shiva! | Anusasana-Parva-Section-18 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 18)
பதிவின் சுருக்கம் : வியாசர், கபிலர், சாருசீர்ஷர், வால்மீகி, பரசுராமர், விஷ்வாமித்ரர், அசிததேவலர், கிருத்ஸமதர், ஜைகீஷவ்யர், கர்க்கர், பராசரர், மாண்டவ்யர், காலவர் உள்ளிட்ட முனிவர்களும், கிருஷ்ணனும், உபமன்யுவும் பரமசிவனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "வாசுதேவன் {கிருஷ்ணர்} பேசுவதை நிறுத்தியதும், பெரும் யோகியும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்}, யுதிஷ்டிரனிடம், "ஓ! மகனே, மஹாதேவனின் ஆயிரத்தெட்டுப் பெயர்களைக் கொண்ட இந்தத் துதியைச் சொல்வாயாக, மஹேஸ்வரன் உன்னிடம் நிறைவை அடைவானாக.(1) ஓ! மகனே, பழங்காலத்தில், நான் ஒரு மகனை அடைய விரும்பி மேரு மலைகளின் சாரலில் கடுந்தவம் பயின்றேன். அப்போது இதே துதியைச் சொல்லித்தான் நான் துதித்தேன்.(2) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அதற்கான வெகுமதியாகத் தான் என் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை நான் அடைந்தேன். நீயும் இதே துதியைச் சொல்வதன் மூலம், உன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அந்தச் சர்வனிடம் இருந்து அடைவாய்" என்றார்.(3)
அதன்பிறகு, சாங்கியம் என்ற பெயரில் வரும் கோட்பாடுகளைச் செய்தவரும், தேவர்களாலேயே மதிக்கப்படும் முனிவருமான கபிலர், "பல பிறவிகளாகப் பெரும் அர்ப்பணிப்புடன் நான் பவனைத் துதித்தேன். இறுதியாக அந்தச் சிறப்புமிக்கத் தேவன் என்னிடம் நிறைவை அடைந்து, மறுபிறவியைக் கடக்கும் அறிவை எனக்குக் கொடுத்தான்" என்றார்.(4)
அதன்பிறகு, சக்ரனின் நண்பரும், ஆலம்பனன் மகன் {ஆலம்பாயனர்} என்று வேறு பெயர் கொண்டவரும், கருணை நிறைந்தவருமான முனிவர் சாருசீர்ஷர்,(5) "நான் பழங்காலத்தில் கோகர்ண மலைகளுக்குச் சென்று நூறு வருடக் கடும் தவப்பயிற்சியில் அமர்ந்தேன். ஓ! மன்னன் பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அத்தவத்திற்கு வெகுமதியாக, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் கூடியவர்களாக, அறமறிந்தவர்களாக, பெருங்காந்தி கொண்டவர்களாக, நோய் மற்றும் கவலையில் இருந்து விடுபட்டவர்களாக, ஒரு லட்சம் வருடங்கள் வாழும் வாழ்நாட்களைக் கொண்டவர்களாக, எந்தப் பெண் தொடர்பும் இல்லாமல் பிறந்தவர்களாக நூறு மகன்களை அந்தச் சர்வனிடம் இருந்து அடைந்தேன்" என்றார்.(6,7)
அதன்பிறகு, சிறப்புமிக்க வால்மீகி- யுதிஷ்டிரனிடம், "ஒரு காலத்தில், ஒரு மெய்மை முரண் குறித்த ஒரு சர்ச்சையின் போது, ஹோம நெருப்பைக் கொண்ட தவசிகள் சிலர், பிராமணக்கொலை செய்த {பிரம்மஹத்தி எனும்} குற்றமிழைத்தவனாக என்னைப் பழித்து ஒதுக்கினர்.(8) ஓ! பாரதா, இவ்வாறு அவர்கள் என்னை ஒதுக்கிய பிறகு, பிராமணக்கொலை செய்தது போன்ற பாவம் என்னைப் பீடித்தது.[1] அப்போது என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக, பாவமற்றவனும், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டவனுமான ஈசானனின் பாதுகாப்பை நான் நாடினேன்.(9) என் பாவங்கள் அனைத்தில் இருந்தும் நான் தூய்மையடைந்தேன். கவலைகள் அனைத்தையும் விலக்குபவனும், அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} அழித்தவனுமான அவன் என்னிடம், "உலகில் உன் புகழ் பெரிதாக இருக்கும்" என்றான் {சிவன்}" என்றார் {வால்மீகி}.(10)
[1] கும்பகோணம் பதிப்பில், "பாரதனே, நான் வேதவிரோதமான வாதம் சொன்ன போது, திரேதாக்கினிகளாலும் முனிவர்களாலும் ’நீ பிரம்மஹத்தி செய்தவனாவாய்’ என்று சொல்லப்பட்டு, ஒரு நிமிஷத்திற்கெல்லாம் அந்தப் பாவத்தினால் பற்றப்பட்டேன்" என்று இருக்கிறது.
அதன்பிறகு, அறவோர் அனைவரிலும் முதன்மையானவரும், முனிவர்களின் கூட்டத்திற்கு மத்தியில் சுடர்மிக்கக் காந்தியுடன் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தவருமான ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்},(11) "ஓ! பாண்டுவின் மூத்த மகனே, கற்றறிந்த பிராமணர்களாக இருந்த என் சகோதரர்களை {தமையன்களைக்} கொன்றதால் நான் பிராமணக் கொலை செய்த பாவத்தால் பீடிக்கப்பட்டிருந்தேன். ஓ! மன்னா, என்னைத் தூய்மை செய்து கொண்டு நான் மஹாதேவனின் பாதுகாப்பை நாடினேன்.(12) அந்தப் பெருந்தேவனின் பெயர்களைச் சொல்லி நான் அவனைத் துதித்தேன். இதனால் என்னிடம் நிறைவை அடைந்த பவன், எனக்கு ஒரு போர்க்கோடரியையும், இன்னும் பிற தெய்வீக அயுதங்களையும் கொடுத்தான்.(13) பிறகு அவன் என்னிடம், "நீ பாவத்தில் இருந்து விடுபட்டுப் போரில் வெல்லப்பட முடியாதவனாவாய். நோயில் இருந்து விடுபட்டவனாக இருப்பதால் உன்னைக் காலனாலும் வெல்ல முடியாது" என்றான்.(14) சிறப்புமிக்கவனும், {சடா} மகுடம் தரித்தவனும், மங்கல வடிவைக் கொண்டவனுமான அந்தத் தேவன் என்னிடம் இவ்வாறே சொன்னான். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அந்தத் தேவனின் {ஸர்வஜ்ஞனின்} கருணையால் அவன் சொன்னதனைத்தையும் அடைந்தேன்" என்றார் {பரசுராமர்}.(15)
அதன்பிறகு விஷ்வாமித்ரர், "முன் நான் க்ஷத்திரியனாக இருந்தேன். பிராமணனாக விரும்பிய நான் என் துதிகளைப் பவனுக்குச் செலுத்தினேன். அந்தப் பெருந்தேவனின் கருணையால் அடைதற்கு மிக அரிதான உயர்ந்த பிராமண நிலையை நான் அடைந்தேன்" என்றார் {விஷ்வாமித்ரர்}.(16)
அதன்பிறகு, முனிவர் அசித-தேவலர், பாண்டுவின் அரச மகனிடம், "ஓ! குந்தியின் மகனே, பழங்காலத்தில், நான் செய்த அறச்செயல்கள் மூலம் பெற்றிருந்த தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தும் சக்ரனுடைய சாபத்தினால் அழிவடைந்தன. அந்தத் தகுதிகளுடன் சேர்த்து, பெரும் புகழையும், நெடும் வாழ்நாளையும் அந்தப் பலமிக்க மஹாதேவனே அன்புடன் எனக்குத் திருப்பிக் கொடுத்தான்" என்று சொன்னார்.(18)
சக்ரனின் அன்புக்குரிய நண்பரும், தெய்வீக ஆசானான காந்திமிக்கப் பிருஹஸ்பதிக்கு ஒப்பானவரும், சிறப்புமிக்கவருமான முனிவர் கிருத்ஸமதர், ஆஜமீட குலத்தைச் சார்ந்த யுதிஷ்டிரனிடம்,(19) "சிந்தைக்கெட்டாதவனான சக்ரன், பழங்காலத்தில் ஆயிரம் வருடங்களுக்கு நீண்ட ஒரு வேள்வியை {ஸத்ரயாகத்தைச்} செய்தான். அந்த வேள்வி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, {ரதந்தரமென்னும்} சாமங்கள் உரைக்கச் சக்ரனால் நான் ஈடுபடுத்தப்பட்டேன். பிரம்மனின் கண்களில் பிறந்தவரான மனுவின் மகன் வரிஷ்டர் அந்த வேள்விக்கு வந்து, என்னிடம், "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, ரததந்தரங்களை நீர் முறையாகச் சொல்லவில்லை.(20,21) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, குறையுடன் படிப்பதன் மூலம் தகுதியிழப்பை ஈட்டாமல், உமது புத்தியின் துணையுடன் சாமங்களைச் சரியாகப் படிப்பீராக. ஓ! தீய புத்தி கொண்டவரே, வேள்வியை அழிக்கும் இத்தகைய பாவத்தை ஏன் நீர் செய்கிறீர்? என்று கேட்டார்.(22) பெரும் கோபக்காரரான முனிவர் வரிஷ்டர், இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, கோபவசப்பட்டு மீண்டும் என்னிடம், "காற்றும், நீரும் இல்லாதவையும், வேறு விலங்குகளால் புறக்கணிக்கப்பட்டவையும், பாதைகளற்றவையுமான காடுகளில் அச்சத்தால் நிறைந்ததும், துயரத்துடன் கூடியதும், புத்தியற்றதுமான ஒரு விலங்காவீராக. இவ்வாறு பதினோராயிரத்து எண்ணூறு ஆண்டுகள் காலத்தை நீர் கழிப்பீராக.(23,24) இக்காலத்தை நீர் கழிக்கப்போகும் காடானது, புனித மரங்கள் ஏதும் இல்லாததாகவும், ருருக்களும் {புள்ளிமான்களும்}, சிங்கங்களும் நிறைந்ததாக இருக்கும். உண்மையில், பெருந்துயரத்தில் மூழ்கிய ஒரு கொடும் மானாவீராக" என்று சொன்னார்.(25) ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, அவர் இவ்வார்த்தைகளைச் சொன்னவுடனேயே நான் ஒரு மானாக மாறினேன். பிறகு நான் மஹேஸ்வரனின் பாதுகாப்பை நாடினேன். அந்தப் பெருந்தேவன் என்னிடம்,(26) "அனைத்துவகை நோய்களில் இருந்தும் விடுபடுவதுடன் அழிவற்றவனாகவும் {மரணமற்றவனாகவும்} நீ இருப்பாயாக. துயரம் ஒருபோதும் உன்னைப் பீடிக்காதிருக்கட்டும். சக்ரனுடன் உன் நட்பு மாறாதிருக்கட்டும், இந்திரனுடைய மற்றும் உன்னுடைய வேள்விகள் பெருகட்டும்" என்றான்.(27) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனுமான மஹாதேவன் இவ்வழியிலேயே அனைத்து உயிரினங்களுக்கும் உதவி செய்கிறான். அனைத்து உயிரினங்களின் இன்ப துன்பங்களை விதிப்பவனாகவும், விலக்குபவனாகவும் எப்போதும் அவனே இருக்கிறான்.(28) அந்தச் சிறப்புமிக்கத் தேவன், எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ புரிந்துகொள்ளப்பட இயலாதவனாவான். ஓ! மகனே, ஓ! போர்வீரர்களில் சிறந்தவனே, (மஹாதேவனின் கருணையால்) கல்வியில் இணையற்றவனாக நான் இருக்கிறேன்" என்றார் {கிருத்ஸமதர்}.(29)
அதன்பிறகு, புத்திசாலி மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான வாசுதேவன் {கிருஷ்ணன்}, மீண்டும் ஒருமுறை, "தங்கக் கண்களைக் கொண்ட மஹாதேவன் என் தவங்களால் என்னிடம் நிறைவை அடைந்தான்.(30) ஓ! யுதிஷ்டிரரே, நிறைவை அடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் என்னிடம், "ஓ! கிருஷ்ணா, அனைவரும் ஆசைப்படும் செல்வத்தைவிட என் அருளால் அனைத்து மனிதர்களின் அன்புக்குரியவனாவாய்.(31) போரில் நீ வெல்லப்பட முடியாதவனாவாய். நீ நெருப்பு நிகரான சக்தியுடையவனாவாய்" என்றான். அச்சந்தர்ப்பத்தில் மஹாதேவன் ஆயிரக்கணக்கான வேறு வரங்களையும் எனக்களித்தான்.(32) முந்தைய அவதாரமொன்றில், மணிமந்தம் என்ற மலையில் கோடிக்கணக்கான வருடங்கள் {ஒரு கோடியே ஆயிரத்து நூறு வருடங்கள்} மஹாதேவனை நான் துதித்தேன்.(33) நிறைவையடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் என்னிடம் இந்த வார்த்தைகளில், "நீ அருளப்பட்டிருப்பாயாக, நீ விரும்பும் வரங்களை வேண்டுவாயாக" என்று சொன்னான்.(34) அவனுக்குத் தலைவணங்கிய நான் அவனிடம் இவ்வார்த்தைகளில், "பலமிக்க மஹாதேவன் என்னிடம் நிறைவை அடைந்திருந்தால்,(35) ஓ! ஈசானனே, நான் அவனிடம் கொண்ட அர்ப்பணிப்பு மாறாதிருக்கட்டும். இதுவே நான் வேண்டும் வரமாகும்" என்றேன். அந்தப் பெருந்தேவன் என்னிடம், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி அங்கேயே அப்போதே மறைந்து போனான்" என்று சொன்னான் {கிருஷ்ணன்}.(36)
ஜைகீஷவ்யர், "ஓ! யுதிஷ்டிரா, முன்பு வாராணசி {காசி} நகரத்தில் என்னைத் தேடி வந்த அந்தப் பலமிக்க மஹாதேவன், இறையாண்மையின் எட்டுக் குணங்களை {அணிமா முதலிய எண்குணங்களோடு கூடிய ஸித்தியை} எனக்கு அளித்தான்" என்றார்.(37)
கர்க்கர், "ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, சரஸ்வதி ஆற்றங்கரையில், நான் செய்த மனோவேள்வியின் விளைவால் என்னிடம் நிறைவை அடைந்த அந்தப் பெருந்தேவன், அற்புத அறிவியலும், அறுபத்துநான்கு அங்கங்களுடன் கூடியதுமான காலஞானத்தை {அறுபத்து நான்கு கலைகளிலும் அற்புத ஞானத்தை} எனக்குக் கொடுத்தான்.(38) வேதங்களை முழுமையாக அறிந்தவர்களும், இணையான தகுதிகளை உடையவர்களுமான ஓராயிரம் மகன்களையும் எனக்குக் கொடுத்தான். அவனது கருணையின் மூலம், அவர்களுடைய வாழ்நாளும், என்னுடைய வாழ்நாளும் பத்து லட்சம் ஆண்டுகளென நீண்டிருக்கின்றன" என்றார் {கர்க்கர்}.(39)
பராசரர், "ஓ! மன்னா, பழங்காலத்தில் நான் சர்வனை நிறைவடையச் செய்தேன். பிறகு நான், பெருந்தவத்தகுதியை உடையவனும், மேன்மையான சக்தியைக் கொண்டவனும், உயர்ந்த யோகத்தை அறிந்தவனும், பார்பரவும் புகழை ஈட்டுபவனும்,(40) வேதங்களைத் தொகுப்பவனும், செழிப்பின் இல்லமாக இருப்பவனும், வேதங்கள் மற்றும் பிராமணர்களிடம் அர்ப்பணிப்புள்ளவனும், கருணைக்காகப் புகழ்பெறக் கூடியவனுமான ஒரு மகனை அடைய விரும்பினேன். அத்தகைய ஒரு மகனையே நான் மஹேஸ்வரனிடமிருந்து பெற விரும்பினேன்.(41) என் இதய விருப்பம் இதுதான் என்பதை அறிந்து கொண்ட அந்த முதன்மையான தேவன், என்னிடம், "நீ என்னிடம் அடைய விரும்பும் உன் நோக்கம் கனிவதன் மூலம், கிருஷ்ணன் {கருப்பன்} என்ற பெயரில் நீ ஒரு மகனை அடைவாய். ஸாவர்ணி-மனு என்ற பெயரில் அறியப்படும் படைப்பில், உன்னுடைய மகன் ஏழு முனிவர்களில் ஒருவனாகக் கருதப்படுவான். அவன் வேதங்களைத் தொகுத்து, குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனாக இருப்பான். இது தவிர அவன் பழைய வரலாறுகளின் ஆசானாக இருந்து, அண்டத்திற்கு நன்மை செய்வான். கடுந்தவங்களுடன் கூடிய அவன், சக்ரனின் அன்புக்குரிய நண்பனாக இருப்பான். உன் மகன் அனைத்து வகை நோய்களில் இருந்து விடுபட்டவனாக இருப்பதுடன், மரணமற்றவனாகவும் இருப்பான்" என்றான். அந்தப் பெருந்தேவன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அங்கேயே அப்போது மறைந்து போனான். ஓ! யுதிஷ்டிரா, அழிவற்றவனும், மாற்றமற்றவனும், உயர்ந்த தவங்கள் மற்றும் பரமசக்தியுடன் கூடியவனுமான அந்தத் தேவனிடம் இருந்து இத்தகைய நன்மையையே நான் அடைந்தேன்" என்றார் {பராசரர்}.(45)
மாண்டவ்யர், "பழங்காலத்தில், கள்வனாக இல்லாவிட்டாலும், கள்வனென்ற ஐயப்பாட்டினால் (மன்னனின் ஆணைகளின் பேரில்) நான் சூலத்தின் மேல் ஏற்றப்பட்டேன். அப்போது சிறப்புமிக்க மஹாதேவனை நான் துதித்தபோது அவன் என்னிடம்,(46) "சூலத்தில் இருந்து விரைவில் விடுபட்டு கோடிக்கணக்கான {நூறு கோடி} வருட காலம் வாழ்ந்திருப்பாய். சூலத்தினாலுண்டாகும் நோய் உனதாகாது.(47) அனைத்துவகைத் துயரங்கள் மற்றும் நோய்களில் இருந்து நீ விடுபடுவாய். ஓ! தவசியே, உன்னுடல் தர்மத்தின் (வாய்மையின்) நான்காவது காலில் இருந்து உண்டானதால்,(48) பூமியில் நீ ஒப்பற்றவனாக இருப்பாய். உன் வாழ்வைக் கனிநிறைந்ததாக்குவாயாக. பூமியின் புனித நீர்நிலைகள் அனைத்திலும் எத்தடையுமின்றி நீராட இயன்றவனாயிருப்பாய்.(49) ஓ! கற்றறிந்த பிராமணா, உன்னுடல் அழிவடைந்ததும், நீ சொர்க்கத்தின் இன்பநிலையை எல்லையில்லா காலத்திற்கு அனுபவிக்குமாறு நான் செய்வேன்" என்றான். காளையைத் தன் வாகனமாகக் கொண்டவனும், ஒப்பற்ற காந்தியைக் கொண்டவனும், விலங்குத் தோலை உடுத்தியவனும், துதிக்கத்தக்க தேவனுமான மஹேஸ்வரன் இவ்வார்த்தைகளை என்னிடம் சொல்லிவிட்டு அங்கேயே, அப்போதே மறைந்து போனான்" என்றார் {மாண்டவ்யர்}.(50, 51)
காலவர், "முற்காலத்தில் நான் என் ஆசானான விஷ்வாமித்ரரின் பாதத்தில் கல்வி கற்று வந்தேன். என் தந்தையைக் காணும் நோக்கத்தோடு அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு என் இல்லத்திற்குப் புறப்பட்டேன். (விதவையாகியிருந்த) என் தாயார் கவலையால் நிறைந்து, அழுதுகொண்டே என்னிடம்,(52) "ஐயோ, வேத ஞானத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், இல்லம் திரும்ப ஆசானால் விடுவிக்கப்பட்டவனும், இளமையின் அருள்கள் அனைத்தையும் கொண்டவனும், தற்கட்டுப்பாடுடையவனுமான தமது மகனை உன் தந்தை ஒரு போதும் காணமாட்டார்" என்றாள்.(53) என் தாயாரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, என் தந்தையைக் காண முடியாத வருத்தத்தால் நான் நிறைந்தேன். பிறகு குவிந்த ஆன்மாவுடன் நான் மஹேஸ்வரனுக்கு என் துதிகளைச் செலுத்தியபோது, அவன் என்னிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு,(54) "ஓ! மகனே, உன் தந்தை, உன் தாய் மற்றும் நீ ஆகியோர் அனைவரும் மரணத்தில் இருந்து விடுபட்டவர்களாவீர்கள். விரைவாகச் சென்று உன் வசிப்பிடத்திற்குள் நுழைவாக; அங்கே நீ உன் தந்தையைக் காண்பாய்" என்றான்.(55) ஓ! யுதிஷ்டிரா, அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு நான் என் இல்லத்திற்குத் திரும்பிய போது, தமது தின வேள்வியை நிறைவுசெய்து வெளியே வரும் என் தந்தையைக் கண்டேன்.(56) அவர் தமது கையில் ஹோமத்திற்கான விறகையும், குசப் புற்களையும் {தர்ப்பங்களையும்}, உதிர்ந்த கனிகளையும் கைநிறையச் சுமந்து வந்தார். முறையாகத் தம்மைக் கழுவிக் கொண்டிருந்ததால் அவர் ஏற்கனவே தம் தின உணவை உண்டுவிட்டதாகத் தெரிந்தது. ஓ! பாண்டுவின் மகனே, (மகிழ்ச்சியால்) கண்ணீரில் குளித்த கண்களுடன், தமது கரங்களில் வைத்திருந்த அப்பொருட்களைக் கீழே வீசிவிட்ட என் தந்தை, அவரது பாதத்தில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த என்னை உயர்த்தித் தழுவிக் கொண்டு, என் தலையை முகர்ந்து {உச்சி முகர்ந்து}, என்னிடம், "ஓ! மகனே, நான் உன்னைக் காண்பது நற்பேற்றினாலேயே. உன் ஆசானிடம் ஞானத்தைப் பெற்றுக் கொண்டு நீ திரும்பியிருக்கிறாய்" என்று சொன்னார் {என் தந்தை}" என்றார் {காலவர்}".(58)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சிறப்புமிக்க மஹாதேவனின் அதிசயமிக்க, அற்புதம் நிறைந்த அருஞ்செயல்களைக் குறித்துத் தவசிகள் சொன்னது கேட்டு பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} வியப்பை அடைந்தான்.(59) அப்போது புத்திமான்கள் அனைவரிலும் முதன்மையானவனான கிருஷ்ணன், புருஹுதனிடம் பேசும் விஷ்ணுவை {இந்திரனிடம் பேசும் ஈசுவரனைப்} போல அறப்பெருங்கடலான யுதிஷ்டிரனிடம் மீண்டும் பேசினான்.(60)
வாசுதேவன், "சூரியனைப் போலச் சுடர்விட்டுப் பிரகாசிப்பவராகத் தெரிந்த உபமன்யு, என்னிடம், "மறச்செயல்களால் {நியாயமற்ற செயல்களால்} களங்கமடைந்திருக்கும் பாவிகள்,(61) ஈசானனை அடைவதில் வெற்றி அடைய மாட்டார்கள். ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களால் களங்கமடைந்த மனோநிலைகளைக் கொண்ட அவர்களால் அந்தப் பரமதேவனை ஒருபோதும் அணுக முடியாது. தூய ஆன்மாக்களைக் கொண்ட மறுபிறப்பாளர்களால் மட்டுமே அந்தப் பரமதேவனை அடைவதில் வெல்ல முடியும்.(62) ஒரு மனிதன் அனைத்து வகை இன்பங்கள் மற்றும் ஆடம்பரங்களை அனுபவித்து வாழ்ந்தாலும், அந்தப் பரமதேவனிடம் அர்ப்பணிப்புடன் இருந்தானானால், அவன் தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட காட்டுத் துறவிகளுக்கு இணையானவனாகக் கருதப்படுவான்.(63) ஒரு மனிதனிடம் ருத்திரன் நிறைவையடைந்தால், பிரம்ம நிலையையோ, கேசவ நிலையையோ {விஷ்ணுவின் நிலையையோ}, தேவர்கள் அனைவருடன் கூடிய சக்ரனின் {இந்திரனின்} நிலையையோ, மூவுலகங்களின் அரசுரிமையையோ அவனால் வழங்க முடியும்.(64) ஓ! ஐயா, பவனை மனத்தில் வழிபடும் மனிதர்கள், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டு, தேவர்கள் அனைவருடன் கூடிய சொர்க்கவாசத்தை அடைகிறார்கள்.(65) குளங்கள் மற்றும் தடாகங்களை அழித்துத் தன் இல்லங்களுக்கான அடித்தளத்தை எழுப்பி உண்மையில் மொத்த அண்டத்தையே அழிப்பவனுமாக உள்ள ஒருவனும், முக்கண்களைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவனை வழிபட்டுத் துதிப்பானானால், பாவத்தால் களங்கமடையமாட்டான்.(66) மங்கலக் குறியீடுகளேதும் அற்றவனும், பாவங்கள் அனைத்தாலும் கறைபடிந்தவனுமான ஒருவனும், சிவனைத் தியானிப்பதன் மூலம் தன் பாவங்கள் அனைத்தையும் அழிக்கிறான்.(67) ஓ! கேசவா, மஹாதேவனுக்குத் தங்களை அர்ப்பணித்த புழு பூச்சிகள் மற்றும் பறவைகள் கூட முற்றிலும் அச்சமற்ற நிலையில் திரியவல்லவையாகின்றன.(68) மஹாதேவனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்கள் நிச்சயம் மறுபிறவியில் இருந்து விடுதலை அடைவார்கள் {முக்தி அடைவார்கள்} என்பது திடநம்பிக்கையுடன் கூடிய என் தீர்மானமாகும்" என்றார் {உபமன்யு}.(69) அதன் பிறகு கிருஷ்ணன், தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் மீண்டும் பின்வரும் வார்த்தைகளில் பேசினான்.(70)
அந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, "ஆதித்யன், சந்திரன், காற்று, நெருப்பு, சொர்க்கம், பூமி, வசுக்கள், விஸ்வேதேவர்கள், தாத்ரி {தாதா}, அர்யமான், சுக்கிரன், பிருஹஸ்பதி, ருத்திரர்கள், சாத்யர்கள், வருணன், கோபன்,(71) பிரம்மன், சக்ரன், மருத்துகள், பிரம்ம அறிவைக் கற்பிக்கும் உபநிஷத்கள், வாய்மை, வேதங்கள், வேள்விகள், வேள்விக் கொடைகள், வேதங்களை உரைக்கும் பிராமணர்கள், சோமம், வேள்வி செய்வபர், வேள்விக்காணிக்கைகளில் தேவர்களின் பங்குகள், வேள்விகளில் ஊற்றப்படும் தெளிந்த நெய், தீக்ஷை, நோன்பு நியமங்கள் என்ற வடிவில் உள்ள நலந்தரும் அனைத்துவகைக் கட்டுப்பாடுகள்,(72) ஸ்வாஹா, வஷட், பிராமணர்கள், தெய்வீகப் பசு, முதன்மையான அறச் செயல்கள், காலச் சக்கரம், பலம், புகழ், தற்கட்டுப்பாடு, புத்தி கொண்டோர் அனைவரின் உறுதி, நன்மை தீமைகள் அனைத்தும், ஏழு முனிவர்கள் {சப்தரிஷிகள்},(73) முதல் தரமான புத்தி, அனைத்து வகைகளைச் சார்ந்த சிறந்த தீண்டல்கள், (அறச்) செயல்கள் அனைத்தின் வெற்றி, தேவர்களின் பல்வேறு இனக்குழுக்கள், வெப்பத்தைப் பருகுபவர்கள் {ஊஷ்ம்பர்கள்}, சோமத்தைப் பருகுபவர்கள் {ஸோமபர்கள்}, லேகர்கள், ஸுயாமர்கள், துஷிதர்கள், மந்திரங்களையே தங்கள் உடல்களாகக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் {பிரம்மகாயர்கள்},(74) ஆபாஸுரர்கள், மணங்களில் மட்டுமே வாழ்பவர்கள் {கந்தபர்கள்}, பார்வையில் மட்டுமே வாழ்பவர்கள் {தூமபர்கள்}, தங்கள் பேச்சைக் கட்டுபடுத்தியவர்கள் {வாசாவிருத்தர்கள்}, தங்கள் மனங்களைக் கட்டுப்படுத்தியவர்கள் {மனோவிருத்தர்கள்}, தூய்மையானவர்கள் {சுத்தர்கள்}, யோக பலத்தின் மூலம் பல்வேறு வடிவங்களை ஏற்கவல்லவர்கள் {நிர்மாணரதர்கள்}, தீண்டலையே {தங்கள் உணவாகக்} கொண்டு வாழும் தேவர்கள் {ஸ்பர்சாசசனர்கள்}, பார்வையை உண்டு வாழும் தேவர்கள் {தர்சபர்கள்}, வேள்வியில் ஊற்றப்படும் நெய்யை உண்டு வாழும் தேவர்கள் {ஆஜ்யபர்கள்},(75) வேண்டி பொருட்களைத் தங்கள் விருப்பப்படிப் படைக்கும் வல்லமை கொண்டவர்கள் {சிந்த்யத்யோதர்கள்}, தேவர்களில் முதன்மையானவர்களாகக் கருதப்படுவோர், ஓ! ஆஜமீடரே {யுதிஷ்டிரரே}, சுபர்ணர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், தானவர்கள், யக்ஷர்கள், சாரணர்கள், பாம்புகள்,(76) திரளான அனைத்தும், மிக நுட்பமான அனைத்தும், மென்மையான அனைத்தும், நுட்பமில்லாத அனைத்தும், கவலைகள் அனைத்தும், இன்பங்கள் அனைத்தும், இன்பத்திற்குப் பின் வரும் கவலைகள் அனைத்தும், கவலைக்குப் பின் வரும் இன்பங்கள் அனைத்தும், சாங்கிய தத்துவம், யோகம், முதன்மையானவையாகவும், மிக மேன்மையானவையாகவும் கருதப்படும் பொருட்களைக் கடந்திருக்கும் துதிக்கத்தக்க பொருட்கள் யாவும், தேவர்கள் அனைவரும், அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் புராதனமான இந்தப் படைப்பைத் தாங்கி, அண்டத்தைப் பாதுகாக்கும் அனைவரும், அனைத்து உயிரினங்களையும் படைத்தவனிடம் இருந்தே பிறப்பை அடைந்தனர்.(77,78)
நான் சொன்ன இவை யாவும் தவங்களின் துணையுடன் ஞானிகள் சிந்திப்பதைவிடத் திரளானவையாகும். உண்மையில் நுட்பமான பிரம்மமே வாழ்வின் {உயிரின்} காரணமாகும். நான் மதிப்புடன் அதற்குத் தலைவணங்குகிறேன். மாற்றமற்றவனும், அழிவற்றவனும், நம்மால் எப்போதும் துதிக்கப்படுபவனுமான அந்தத் தலைவன் நாம் விரும்பிய வரங்களை நமக்கு அருளட்டும்.(79) எந்த மனிதன், தன் புலன்களை அடக்கி, தன்னைத் தூய்மை செய்து கொண்டு, இந்தத் துதியைத் தன் நோன்புக்குத் தடையில்லாமல் ஒரு மாத காலம் உரைப்பானோ, அவன் ஒரு குதிரை வேள்வி செய்ததற்கு இணையான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்வான்.(80) இத்துதியை உரைப்பதனால் ஒரு பிராமணன் வேதங்கள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்; ஓ! பிருதையின் மகனே, ஒரு க்ஷத்திரியன், வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறான்; ஒரு வைசியன் செல்வத்தையும், புத்திசாலித்தனத்தையும் அடைகிறான்; ஒரு சூத்திரன் இம்மையில் மகிழ்ச்சியையும், மறுமையில் நற்கதியையும் அடைகிறான்.(81) பெரும்புகழைக் கொண்ட மனிதர்கள், அனைத்துப் பாவங்களையும் கழுவவல்லதும், மிகப் புனிதமானதும், தூய்மையடையச் செய்வதுமான இந்தத் துதிகளின் இளவரசனை உரைப்பதால் தங்கள் இதயங்களை ருத்திரனில் நிலைக்கச் செய்கிறார்கள்.(82) இந்தத் துதிகளின் இளவரசனை உரைக்கும் மனிதன், தன் உடலில் உள்ள மயிர்க்கால்களின் அளவுக்கான வருடங்கள் சொர்க்கத்தில் வாழும் நிலையை அடைவதில் வெல்கிறான்" என்றான் {கிருஷ்ணன்}.(83)
அநுசாஸனபர்வம் பகுதி – 18ல் உள்ள சுலோகங்கள் : 83
ஆங்கிலத்தில் | In English |