The old lady and Ashtavakra! | Anusasana-Parva-Section-19 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 19)
பதிவின் சுருக்கம் : வதான்யரின் மகளைத் திருமணம் செய்ய நினைத்த அஷ்டவக்கிரர், அவரது கட்டளையின் பேரில் வடக்குத் திசை சென்று அந்தத் திசையின் தேவனைக் கண்டு உரையாடியது; ஒரு முதிய பெண்ணுக்கும் அஷ்டவக்கிரருக்கும் இடையில் நடந்த உரையாடல்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, ஒரு மனிதன் திருமணத்தில் தன் துணைவியின் {ஸஹதர்மையின்} கரத்தை ஏற்கும் தருணத்தில், இருவரும் சேர்ந்து ஆற்றப்போகும் கடமைகள் {ஸஹதர்மங்கள்} அனைத்தையும் குறித்த உறுதிமொழியின் தோற்றுவாய் என்ன?(1) ஒன்றாகச் சேர்ந்து ஆற்றப்போகும் கடமைகள் {ஸஹதர்மங்கள்} அனைத்தின் உறுதிமொழியானது, பழங்காலத்தில் பெரும் முனிவர்களால் விதிக்கப்பட்டவையா? அஃது அறநோக்கங்களில் வாரிசுகளைப் பெறும் கடமையைக் குறிக்குமா? அல்லது பாலினக் கலவியால் ஏற்படும் உடலின்பத்தை மட்டுமே குறிக்குமா?(2) இது குறித்து என் மனத்தில் நிறையும் ஐயம் பெரியதாகும். நான் குறிப்பிடும் உறுதிமொழியானது, உண்மையில் பாலினக் கலவிக்கு வழிவகுக்கும் இயற்கையான தூண்டல்களுக்கு முரணாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இவ்வுலகத்தில் அனைத்துக் கடமைகளையும் சேர்ந்தே ஆற்றுவதற்காக ஏற்படும் சேர்க்கையானது, மறுமையில் நீடிக்காமல் மரணத்தோடு முடிந்துவிடுவதே காணப்படுகிறது.(3) அனைத்துக் கடமைகளையும் சேர்ந்தே ஆற்றுவதற்கான இந்தச் சேர்க்கை சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறது. ஆனால், ஓ! பாட்டா, சொர்க்கமானது இறந்து போன மனிதர்களாலேயே அடையப்படுகிறது. திருமணம் செய்து கொண்ட இணையில் ஒரு நேரத்தில் ஒருவர் இறப்பதே காணப்படுகிறது. மற்றொருவர் எங்கே இருப்பார்? எனக்கு இதைச் சொல்வீராக.(4) பல்வேறு வகைக் கடமைகளைப் பயில்வதன் மூலம் மனிதர்கள் பல்வேறு வகைக் கனிகளை {பலன்களை} அடைகின்றனர். மேலும் மனிதர்கள் பல்வேறு வகைத் தொழில்களைச் செய்கின்றனர். மாறுபட்ட இத்தகைய கடமைகள் மற்றும் செயல்களின் விளைவால் அவர்கள் செல்லும் நரகங்களும் மாறுபட்டவையாக இருக்கின்றன.(5)
குறிப்பாகப் பெண்கள் போலி நடத்தை கொண்டவர்கள் {பொய்யர்கள்} என்று முனிவர்கள் சொல்கிறார்கள். மனிதர்கள் இவ்வாறு இருக்கும்போது, குறிப்பாகப் பெண்கள் பொய்யர்கள் என்று விதிகளில் அறிவிக்கப்படும்போது, ஓ! ஐயா, கடமைகள் அனைத்தையும் சேர்ந்தே செய்வதற்கான நோக்கத்தில் பாலினங்களுக்கிடையில் எவ்வாறு சேர்க்கை ஏற்பட முடியும்?(6) பெண்கள் பொய்யர்கள் என்பதை ஒருவன் வேதங்களிலிலேயே படிக்கலாம். கடமை {தர்மம்} என்ற சொல்லானது, வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள படி, முதலில் பொதுவான பயன்பாட்டுக்காக (தகுதியேதும் இல்லாத நடைமுறைகளில் பயன்படுத்துவதற்காக) அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, திருமணச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் அந்தச் சொல்லானது, சரியானதாக இருப்பதற்குப் பதில், பயன்பாடு ஏதும் இல்லாதவற்றில் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படும் பேச்சின் வடிவமாக மட்டுமே இருக்கிறது.(7) இக்காரியம் குறித்து இடையறாமல் சிந்தித்தாலும், எனக்கு விளக்க முடியாததாக இருக்கிறது. ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானியே, ஸ்ருதியில் விதிக்கப்பட்டுள்ளபடி தெளிவாகவும், விரிவாகவும் எனக்கு இதை விளக்குவதே உமக்குத் தகும். உண்மையில், அஃது என்ன? அதன் தன்மைகள் என்னென்ன? அதை நடைமுறைப்படுத்தும் வழியென்ன? என்பதை எனக்கு விளக்கிச் சொல்வீராக"[1].(8,9)
[1] "யுதிஷ்டிரன் சொல்லும் காரியம் இதுதான்: திருமணம் என்பது அறக்கடமைகள் அனைத்தையும் சேர்ந்தே செய்வதற்காகப் பாலினங்களுக்கு இடையில் ஏற்படும் சேர்க்கை என எப்போதும் சொல்லப்படுகிறது. இஃது எவ்வாறு இருக்க முடியும். என்னைப் பொறுத்தவரையில் இன்பத்திற்கான சேர்க்கையாகவே இது தெரிகிறது. தனிப்பட்ட இருவர் அறக்கடமைகளைச் சேர்ந்தே செய்வதற்காகத் திருமணம் செய்யப்படுகிறிது என்று சொன்னால், அத்தகைய நடைமுறை மரணத்தால் நிறுத்தப்படுகிறதே. மனிதர்கள் வெவ்வேறு வகைகளில் செயல்பட்டு, வெவ்வேறு கதிகளை அடைகிறார்கள். எனவே, மரணத்திற்குப் பிறகு மீண்டும் சேரும் வாய்ப்பேதும் இல்லை. மேலும் அவர்களில் ஒருவர் இறக்கும்போது, சேர்ந்தே செய்யும் கடமைகள் நடைபெறுவதில்லை. அறக்கடமைகளைச் சேர்ந்து செய்வதற்காக மட்டுமே ஏற்படும் பாலினச் சேர்க்கை என்ற திருமணக் கோட்பாடு வெறுமையானது என்பது யுதிஷ்டிரனின் மறுப்பு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக அஷ்டவக்கிரருக்கும், திசை என்ற பெயரில் அறியப்படும் பெண்ணுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது.(10) பழங்காலத்தில் கடுந்தவங்களைச் செய்த அஷ்டவக்கிரர், திருமணம் செய்து கொள்ளவிரும்பி, உயர் ஆன்ம முனிவரான வதான்யரின் மகளை இரந்து கேட்டார்.(11) அந்தக் கன்னிகை சுப்பிரபை என்ற பெயரில் அறியப்பட்டிருந்தாள். பூமியில் ஒப்பிலா அழகுடையவளாக அவள் இருந்தாள். குணம், கண்ணியம், ஒழுக்கம் மற்றும் நடைமுறைகளில் அவள் அனைத்துப் பெண்களைவிட மேன்மையானவளாக இருந்தாள். (12) மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வசந்த காலத்தில் பார்வையாளரின் இதயத்தைக் களவாடும் இனிய தோட்டத்தை {மலர்வனத்தைப்} போலவே, அழகிய கண்களைக் கொண்ட அந்தப் பெண் ஒற்றைப் பார்வையிலேயே அவரது இதயத்தைக் களவாடினாள்.(13)
அந்த முனிவர் {வதான்யர்} அஷ்டவக்கிரரிடம், "சரி. நான் என் மகளை உனக்கு அளிக்கிறேன். எனினும், நான் சொல்வதைக் கேட்பாயாக. புனிதமான வடதிசை நோக்கிப் பயணிப்பாயாக. அங்கே நீ பலவற்றைக் காண்பாய்" என்றார்[2].(14)
[2] "அஃதாவது, அந்தப் பகுதிக்குப் பயணித்துத் திரும்பிய பிறகு நீ விரும்பும் மணப்பெண்ணை என்னிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பயணம் நான் உனக்கு வைக்கும் ஒரு சோதனையாகும் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் வதான்யரின் பேச்சு நீண்டதாக இருக்கிறது. அது பின்வருமாறு: "உமக்கு என் பெண்ணைக் கொடுக்க வேண்டுமானால் நான் சொல்வதைக் கேளும். வேறு ஸ்திரீயில்லாதவனும், தெரிந்தவனும், ஊரைவிட்டுப் போகாதவனும், இனிமையாயப் பேசுகிறவனும், அழகுள்ளவனும், வீரனும், விநயமுள்ளவனும், ஸுகத்தை அனுபவிக்கத் திறமையுள்ளவனும், பரிசுத்தனுமான புருஷன்தான் பெண்ணுக்கு விருப்பமானவன். மனைவியுடன் ஒத்து யாகம் செய்கிறவன் நல்ல நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்ள வேண்டும். அவன் இவ்வுலகத்தில் வேலைக்காரரோடும், பந்துக்களோடும் சந்தோஷமடைகிறான்; மறுமையிலும் ஸுகமாயிருக்கிறான். நீர் முதலில் புண்ணியமான வடதிசைக்குச் செல்லும்; அங்கே பார்ப்பீர்" என்றிருக்கிறது.
அஷ்டவக்கிரர் {வதான்யரிடம்}, "அந்தப் பகுதியில் நான் என்ன காண்பேன் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். உண்மையில் உம்மால் விதிக்கப்படும் எக்கட்டளையையும் செயல்படுத்த நான் ஆயத்தமாக இருக்கிறேன்" என்றார்.(15)
வதான்யர் {அஷ்டவக்கிரரிடம்}, "நீ கருவூலத்தலைவனின் {குபேரனின்} ஆட்சிப்பகுதிகளைக் கடந்து, இமய மலைகளையும் கடந்து செல்ல வேண்டும். அப்போது ருத்திரன் வசிக்கும் மேட்டு நிலத்தைக் காண்பாய். அது சித்தர்களும், சாரணர்களும் வசிக்கும் இடமாகும்.(16) ஆட விரும்பி துள்ளிக் குதிப்பவர்களும், பல்வேறு வடிவங்களிலான முகங்களைக் கொண்டவர்களுமான மஹாதேவனின் கணங்கள் அங்கே நிறைந்திருக்கின்றனர். ஓ! முதன்மையானவனே, பல்வேறு வண்ணங்களிலான நறுமணப்பொடிகளைப் பூசிக் கொண்டவர்களும், வெங்கலத்தாலான பல வகை இசைக்கருவிகளின் துணையுடனும், இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் ஆடிக்கொண்டிருக்கும் பல்வேறு வடிவங்களிலான பிசாசங்கள் பலவும் நிறைந்திருக்கின்றன. மின்னல் வேகத்தில் ஆடிக் கொண்டிருப்பவர்களும், முன்னே, பின்னே, குறுக்கே என அனைத்து வகை அசைவுகளையும் செய்பவர்களுமான இவை சூழவே அங்கே மஹாதேவன் வசித்து வருகிறான்.(17,18) நாம் கேள்விப்பட்டிருக்கும் மலைகளில் உள்ள அந்த இனிய இடமே அந்தப் பெருந்தேவனுக்குப் பிடித்தமான வசிப்பிடமாகும். அந்தப் பெருந்தேவன் தன் தோழர்களுடன் {கணங்களுடன்} எப்போதும் அங்கே இருக்கிறான் எனச் சொல்லப்படுகிறது.(19) முக்கண் தேவனின் (அவனைத் தன் தலைவனாக அடையும்) நிமித்தமாக உமாதேவி அங்கேதான் கடுந்தவங்களைச் செய்தாள். எனவே, மஹாதேவன் மற்றும் உமை ஆகிய இருவராலும் மிகவும் விரும்பப்படும் இடம் எனச் சொல்லப்படுகிறது.(20)
பழங்காலத்தில், மஹாதேவனின் புனித மலைகளுக்கு வடக்கே அமைந்திருக்கும் மஹாபார்ஷ்வ மலைகளின் உச்சியில், பருவகாலங்கள், இறுதி இரவு, தேவர்கள் பலர், (முதன்மையான வகையைச் சேர்ந்த) மனிதர்கள் பலர்,(21) தங்கள் உடல் கொண்ட வடிவங்களோடு மஹாதேவனைத் துதித்துக் கொண்டிருக்கின்றனர்[3]. வடக்கு நோக்கிய உன் பயணத்தில் நீ அந்தப் பகுதியையும் கடந்து செல்ல வேண்டும். பிறகு, மேகத்திரளுக்கு ஒப்பானதும், நீலவண்ணம் கொண்டதுமான ஓர் அழகிய காட்டை நீ காண்பாய். அங்கே, அந்தக் காட்டில், ஸ்ரீயை {லட்சுமியைப்} போலத் தெரியும் ஓர் அழகிய பெண் தவசியை நீ காண்பாய்.(23) வயதின் காரணமாக மதிக்கப்படுபவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளுமான அவள், தீக்ஷை நோற்றுக் கொண்டிருக்கிறாள். அங்கே அவளைக் கண்டு மதிப்புடன் நீ அவளை வழிபட வேண்டும்.(24) அவளைக் கண்ட பிறகு இவ்விடம் திரும்பியதும், என் மகளின் கரத்தைத் திருமணத்தில் பற்றுவாயாக. உன்னால் இந்த உடன்பாட்டை ஏற்க முடிந்தால், பயணம் சென்று நான் ஆணையிட்டதைச் செய்வாயாக" என்றார் {வதான்யர்}.(25)
[3] "இங்கே சொல்லப்படும் இரவு "காலராத்ரி" என்றழைக்கப்படுகிறது. அஃது அண்ட அழிவுக்கும் முன்பு நேர்வதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அஷ்டவக்கிரர் {வதான்யரிடம்}, "அப்படியே ஆகட்டும். நான் உமதாணையைச் செய்வேன். ஓ! அற ஆன்மாவே, நீர் சொல்லும் பகுதிக்கு நிச்சயம் நான் செல்வேன். உமது தரப்பில், நீர் உமது வார்த்தைகளை வாய்மைக்கு இணக்கமானதாகச் செய்வீராக" என்றார்".(26)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சிறப்புமிக்க அஷ்டவக்கிரர் புறப்பட்டுச் சென்று பயணம் மேற்கொண்டார். அவன் மேன்மேலும் வடக்குநோக்கிச் சென்று இறுதியாகச் சித்தர்களும், சாரணர்களும் நிறைந்த இமய மலைகளை அடைந்தார்.(27) இமய மலைகளை அடைந்த பிறகு, அந்த முதன்மையான பிராமணர், பெரும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கும் பாஹுதை என்ற புனித ஆற்றுக்குச் சென்றார்.(28) அவர், சேறற்றவையும் {தெளிந்த நீரைக் கொண்டவையும்}, இனிமை நிறைந்தவையுமான அந்த ஆற்றின் தீர்த்தங்களில் நீராடி, நீர்க்காணிக்கைகளால் தேவர்களை நிறைவடையச் செய்தார். அவரது தூய்மைச் சடங்குகள் நிறைவடைந்ததும், குசப்புற்களை {தர்ப்பங்களைப்} பரப்பிச் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காகத் தம்மைக் கீழே கிடத்திக் கொண்டார்.(29) இவ்வகையில் அந்தப் பிராமணர் இரவைக் கழித்துப் பகலில் எழுந்தார். பாஹுதையின் புனித நீர்களில் மீண்டும் தமது தூய்மைச் சடங்குகளைச் செய்து கொண்டு, தமது ஹோம நெருப்பை மூட்டி, முதன்மையான வேத மந்திரங்கள் பலவற்றின் துணையுடன் அதை வழிபட்டார்.(30)
பிறகு அவர், ருத்திரன் மற்றும் அவனது மனைவியான உமை ஆகிய இருவரையும் முறையான சடங்குகளுடன் வழிபட்டு, அந்தப் பாஹுதையின் போக்கில் உள்ள ஒரு தடாகத்தின் அருகில் மேலும் சிறிது நேரம் ஓய்ந்திருந்தார். இத்தகைய ஓய்வினால் புத்துணர்ச்சியடைந்த அவர், அந்தப் பகுதியில் இருந்து கைலாசத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.(31) அப்போது அவர் அழகில் சுடர்விடுவதாகத் தெரிந்த ஒரு தங்க வாயிலைக் கண்டார். மேலும் அவர் மந்தாகினியையும், கருவூலங்களின் தலைவனான உயர் ஆன்ம குபேரனின் நளினியையும் கண்டார்[4].(32) அழகிய தாமரைகள் நிறைந்த அந்தத் தடாகத்தைப் பாதுகாப்பவர்களும், மாணிபத்ரனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களுமான ராட்சசர்கள் அனைவரும், அங்கே வந்த முனிவரைக் கண்டு, சிறப்புமிக்க அந்தப் பயணியை வரவேற்றுக் கௌரவிப்பதற்காக வெளியே வந்தனர்.(33) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ராட்சசர்களைப் பதிலுக்கு வழிபட்ட அம்முனிவர், தமது வருகையைக் கருவூலங்களின் தலைவனுக்குத் தாமதமில்லாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.(34) இதைச் செய்ய அவரால் வேண்டப்பட்ட ராட்சசர்கள், அவரிடம், "மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்}, புலனாய்வுக்காகக் காத்திராமல் தமது விருப்பப்படியே உமது முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்.(35) சிறப்புமிக்கவரான கருவூலங்களின் தலைவன் {குபேரன்}, உமது பயணத்தின் நோக்கத்தை நன்கறிந்திருக்கிறார். சக்தியால் தாமே ஒளிர்பவரான அந்த அருளப்பட்ட தலைவரை இதோ காண்பீராக" என்றனர்.(36)
[4] "கைலாசத்தின் வழியாகப் பாயும் மந்தாகினி ஆறு கங்கை ஆற்றின் ஒரு கிளையாகும்; அதே வேளையில், நளினி என்பது, யக்ஷர்களின் மன்னனுக்குச் சொந்தமானதும், கொண்டாடப்படுவதுமான ஒரு தடாகமாகும். அங்கே தாமரைகள் அதிகம் வளர்வதால் அவ்வாறு அஃது அழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அந்தப் பிராமணர் அவ்விரவு கடந்து விடியற்காலத்திலெழுந்து ஸ்நாநம் செய்து அக்கினியையுண்டாக்கிச் சாஸ்திரப்படி அதில் ஹோமம் செய்து ருத்திராணிகூபமென்னும் மடுவுக்குச் சென்று அம்மடுவில் (ஸ்நாநம் செய்து) சிரமத்தைத் தீர்த்துக் கொண்டார்; களைப்புத் தீர்ந்தபின்பு எழுந்து கைலாஸத்தை நோக்கிச் சென்றார்; ஒளியினால் ஜ்வலிப்பது போன்ற மஹாத்மாவான குபேரனது பொன்னாலாகிய வாயிலையும், மந்தாகினியென்னும் தாமரையோடையையும் பார்த்தார்" என்றிருக்கிறது.
அப்போது மன்னன் வைஸ்ரவணன், களங்கமற்ற அஷ்டவக்கிரரை அணுகி, முறையாக நலம்விசாரித்தான். மதிப்பு நிமித்தமான வழக்கமான விசாரிப்புகளைச் செய்த பிறகு, அந்தக் கருவூலங்களின் தலைவன், அந்த மறுபிறப்பாள முனிவரிடம்,(37) "இங்கே வந்த உமக்கு நல்வரவு. என்னிடம் இருந்து என்ன வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக. ஓ! மறுபிறப்பாளரே, நீர் நிறைவேற்றச் சொல்லும் எதையும் நான் நிறைவேற்றுவேன்.(38) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, விருப்பத்துடன் என் வசிப்பிடத்திற்குள் நுழைவீராக. என்னால் முறையாக உபசரிக்கப்பட்டு, உமது காரியம் நிறைவடைந்த பிறகு, உமது வழியில் எத்தடையுமின்றி நீர் செல்லலாம்" என்றான் {குபேரன்}.(39)
குபேரன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அந்த முதன்மையான பிராமணரிடம் இருந்து தன் கரத்தை எடுத்து, தன் அரண்மனைக்கு அவரை வழிநடத்திச் சென்றான். தன் இருக்கையையே அவருக்கு அளித்து, கால் கழுவ நீர்கொடுத்து, வழக்கமான பொருட்களுடன் கூடிய அர்க்கியத்தையும் கொடுத்தான். அவர்கள் இருவரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, மாணிபத்ரனின் தலைமையிலான குபேரனின் யக்ஷர்களும், கந்தர்வர்கள் மற்றும் கிண்ணரர்கள் பலரும் அவர்களுக்கு முன்னிலையில் அமர்ந்தார்கள்.(41)
அவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, கருவூலனங்களின் தலைவன் {குபேரன்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், "எது உமக்குப் இன்பமெனப் புரிந்த பிறகு {உமது கருத்தை அறிந்த பிறகு}, அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் இங்கே தங்கள் ஆடலைத் தொடங்குவார்கள்.(42) நான் உம்மை விருந்தோம்பலுடன் உபசரிக்க வேண்டும், முறையான உதவிகளுடன் உமக்குத் தொண்டாற்றவும் வேண்டும்" என்றான்.
இவ்வாறு சொல்லப்பட்டதும், தவசியான அஷ்டவக்கிரர் இனிய குரலில், "ஆடல் தொடங்கட்டும்" என்றார்.(43)
அப்போது, உர்வரை, மிச்ரகேசி, ரம்பை, ஊர்வசி, அலம்புஸை, கிருதாசி, சித்ரை, சித்ராங்கதை, ருசி,(44) மனோஹரை, ஸுகேசி, ஸுமுகி, ஹாஸினி, ப்ரபை, வித்யுதை, ப்ரசமி, தாந்தை, வித்யோதை, ரதி ஆகியோரும்,(45) இன்னும் அழகிய பல அப்சரஸ்களும் ஆடத் தொடங்கினர். கந்தர்வர்கள் பல்வேறு வகையான இசைக்கருவிகளை இசைத்தனர்.(46) இத்தகைய சிறப்பான இசையும், ஆடலும் தொடங்கிய பிறகு, கடுந்தவங்களைக் கொண்ட முனிவர் அஷ்டவக்கிரர், தன்னினைவில்லாமலேயே மன்னன் வைஸ்ரவணனின் வசிப்பிடத்தில் முழுமையாக ஒரு தேவ வருடத்தைக் கழித்தார்.(47) பிறகு, மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்}, அந்த முனிவரிடம், "ஓ! கற்றறிந்த பிராமணரே, நீர் இங்கே வந்து ஒரு வருடத்திற்கும் சற்று அதிகமான காலம் கடந்திருப்பதைக் காண்பீராக. குறிப்பாகக் கந்தர்வம் என்ற பெயரில் அறியப்படும் இந்த இசையும், ஆடலும், இதயத்தை (காலத்தைக்) களவாடுபவையாகும். உமது விருப்பப்படி செயல்படுவீராக, அல்லது இதுவே உமது இன்பமென்றால் {உமக்கு விருப்பமென்றால்} இது தொடரட்டும். நீர் என் விருந்தினர், எனவே, துதிக்கத்தகுந்தவராவீர். இஃது உமது இல்லமாகும். ஆணையிடுவீராக. நாங்கள் அனைவரும் உமக்குக் கட்டுப்படுகிறோம்" என்றான்.(50)
சிறப்புமிக்க அஷ்டவக்கிரர், மன்னன் வைஸ்ரவணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அவனிடம், "நான் உன்னால் முறையாகக் கௌரவிக்கப்பட்டேன். ஓ! கருவூலங்களின் தலைவா, நான் இப்போது இங்கிருந்து செல்ல விரும்புகிறேன்.(51) உண்மையில் நான் உயர்வான மகிழ்ச்சியை அடைந்தேன். ஓ! கருவூலங்களின் தலைவா, இவை அனைத்தும் உனக்குத் தகும். ஓ! சிறப்புமிக்கவனே, உன் அருளாலும், உயர் ஆன்ம முனிவர் வதான்யரின் ஆணைக்கு ஏற்புடைய வகையிலும்,(52) என் பயணத்தின் எல்லைக்கு இப்போது புறப்படப் போகிறேன். வளர்ச்சியும், செழிப்பும் உனதாகட்டும்" என்றார். அந்தச் சிறப்புமிக்க முனிவர் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, குபேரனின் வசிப்பிடத்தில் இருந்து புறப்பட்டு, வடக்கு நோக்கிச்சென்றார்.(53)
கைலாசம், மந்தரம் மற்றும் தங்க மலைகளையும் அவர் கடந்து சென்றார். எங்கே மஹாதேவன் எளிய தவசியாக உடுத்திக் கொண்டு தன் வசிப்பிடத்தை அமைத்திருக்கிறானோ, அஃது உயர்ந்தவையும், பெரியவையுமான அந்த மலைகளைக் கடந்து அமைந்திருக்கிறது.(54) அவர், குவிந்த மனத்துடனும், மதிப்புடன் தலைவணங்கியபடியும் அந்த இடத்தை வலம் வந்தார். பிறகு பூமிக்கு வந்த அவர், மஹாதேவனின் வசிப்பிடமான அந்தப் புனிதமான இடத்தைக் கண்டதால் புனிதமடைந்ததாகத் தம்மைக் கருதினார்.(55) அம்மலையை மும்முறை வலம் வந்த அந்த முனிவர், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் {மேலும்} வடக்கு நோக்கிப் புறப்பட்டார்.(56)
பிறகு அவர் இனிமை நிறைந்த மற்றொரு காட்டைக் கண்டார். அஃது அனைத்துக் காலத்திற்குமுரிய கனிகளாலும், கிழங்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் அது சிறகு படைத்த ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்களையும் {பறவைகளின் ஒலிகளையும்} எதிரொலித்துக் கொண்டிருந்தது.(57) அந்தக் காடு முழுவதும் இனிமைநிறைந்த சோலைகள் ஏராளம் இருந்தன. அப்போது அந்தச் சிறப்புமிக்க முனிவர் ஓர் அழகிய ஆசிரமத்தைக் கண்டார்.(58) அம்முனிவர், ரத்தினங்கள் நிறைந்தவையும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவையுமான பல தங்க மலைகளையும் கண்டார். ரத்தினங்கள் நிறைந்த அந்த மண்ணில் அவர் பல தடாகங்களையும், குளங்களையும் கூடக் கண்டார்.(59) மேலும் அவர் பெரும் இனிமைநிறைந்த பல்வேறு பொருட்களையும் கண்டார். இப்பொருட்களையெல்லாம் கண்டதும், தூய ஆன்மாகக் கொண்ட அந்த முனிவரின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.(60)
அப்போது அவர் தங்கத்தாலானதும், பல வகை ரத்திரனங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஓர் அழகிய மாளிகையைக் கண்டார். அற்புதம் நிறைந்த வடிவமைப்புடன் கூடிய அம்மாளிகை, அனைத்து வகையிலும் குபேரனின் அரண்மையையும் விட மேம்பட்டிருந்தது.(61) அதைச் சுற்றிலும் பல மலைகளும், ரத்தினக் குவியல்களும் இருந்தன. அந்த இடத்தில் அழகிய பல தேர்களும், பல்வேறு வகைகளிலான ரத்தினக்குவியல்களும் காணப்பட்டன.(62) அங்கே அம்முனிவர் மந்தார மலர்கள் விரவிக்கிடக்கும் நீரைக் கொண்ட மந்தாகினி ஆற்றைக் கண்டார். தன்னொளி கொண்ட ரத்தினங்கள் பலவும் அங்கே காணப்பட்டன, சுற்றிலுமிருந்த மண்ணும் பல்வேறு வகை வைரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(63) முனிவர் கண்ட மாட மாளிகையில் பல்வேறு வகைக் கற்களால் அழகூட்டப்பட்ட வளைவுகளைக் கொண்ட அறைகள் பலவற்றைக் கொண்டிருந்தது. மேலும் அந்த அறைகள், இடையிடையே பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(64) இதயத்தையும், கண்ணையும் களவாடவல்ல பல்வேறு வகை அழகிய பொருட்கள் அந்த அரண்மனையில் இருந்தன. இனிமைநிறைந்த ஆசிரமத்தில் எண்ணற்ற முனிவர்கள் வசித்தனர்.(65)
சுற்றிலுமுள்ள இந்த அழகிய காட்சிகளைக் கண்ட முனிவர், தாம் எங்கே தங்குவது என நினைக்கத் தொடங்கினார். அந்த மாளிகையின் வாயிலுக்குச் சென்ற அவர்,(66) "(உறைவிடம் விரும்பி) ஒரு விருந்தாளி வந்திருக்கிறான் என இங்கே வாழ்பவர்கள் அறியட்டும்" என்ற வார்த்தைகளைச் சொன்னார். முனிவரின் குரலைக் கேட்டதும், அம்மாளிகையில் இருந்து கன்னிகைகள் பலர் வெளியே வந்தனர்.(67) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எண்ணிக்கையில் அவர்கள் எழுவராக இருந்தனர். அழகின் பல்வேறு வகைப் பாணிகளைக் கொண்ட அவர்கள் அனைவரும் பெருங்கவர்ச்சியுடன் இருந்தனர். முனிவர் தமது கண்களைச் செலுத்திய கன்னிகையர் ஒவ்வொருவரும் அவரது இதயத்தைக் களவாடினர்.(68) எவ்வளவு சிறப்பாக முயன்றாலும் அந்தத் தவசியால் தமது மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. உண்மையில், மிக மேன்மையான அழகைக் கொண்ட அந்தக் கன்னிகையரைக் கண்ட மாத்திரமே அவர் தமது இதயத்தின் அமைதி முழுமையையும் இழந்தார். இத்தகைய ஆதிக்கங்களுக்குத் தாம் வசப்படுவதைக் கண்ட முனிவர், பெரும் ஞானியாக இருந்ததால் கடுமுயற்சி செய்து இறுதியில் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் வென்றார்.(69)
அப்போது அந்த வனிதையர் அம்முனிவரிடம், "சிறப்புமிக்கவரே, நீர் உள்ளே நுழையலாம்" என்றனர்.
அழகுமிக்கக் காரிகைகள் மற்றும் மாடமாளிகையால் ஆவலில் நிறைந்திருந்த அந்த மறுபிறப்பாள முனிவர், தாம் கேட்டுக்கொள்ளப்பட்ட படியே உள்ளே நுழைந்தார். மாளிகைக்குள் நுழைந்ததும், முதுமையின் தளர்ச்சிக் குறியீடுகளைக் கொண்டவளும், வெள்ளுடை உடுத்தியவளும், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளுமாக ஒரு முதிய பெண்மணியைக் கண்டார்.
முனிவர் {அஷ்டவக்கிரர்}, "நன்மை விளையட்டும்" என்று அவளுக்கு ஆசி கூறினார்.
அந்த முதிய பெண்மணியும் உரிய வகையில் அவருக்கான நல்வாழ்த்துகளைத் திரும்பச் செலுத்தினாள். அவள் எழுந்திருந்து முனிவருக்கு ஓர் இருக்கையைக் கொடுத்தாள்.(70-72)
தமது இருக்கையில் அமர்ந்த அஷ்டவக்கிரர், "கன்னிகையர் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லட்டும். ஒருத்தி மட்டும் இங்கே இருக்கட்டும். எவள் ஞானம் படைத்தவளோ, எவள் தன் இதயத்தில் அமைதியைக் கொண்டவளோ அவள் மட்டும் போகாமல் இருக்கட்டும். உண்மையில், மற்ற அனைவரும் தங்கள் விருப்பப்படிச் செல்லலாம்" என்றார்.(73)
இவ்வாறு சொல்லப்பட்ட அந்தக் கன்னிகையர் அனைவரும் அம்முனிவரை வலம்வந்து அந்த அறையைவிட்டு வெளியேறினர். அந்த முதிய பெண்மணி மட்டும் போகாமல் அங்கேயே இருந்தாள்.(74) பகல் விரைவாகக் கடந்ததும், இரவும் வந்தது. மிக நல்ல படுக்கையில் அமர்ந்திருந்த முனிவர் அந்த முதிய பெண்மணியிடம், "ஓ! அருளப்பட்ட மங்கையே, இரவு ஆழ்கிறது. நீ உறங்குவாயாக" என்றார்.(75)
அம்முனிவரால் தங்கள் விவாதம் இவ்வாறு நிறுதப்பட்டதும், முதிய பெண்மணி பெருங்காந்திமிக்கச் சிறந்த படுக்கை ஒன்றில் தன்னைக் கிடத்திக் கொண்டாள்.(76) விரைவில் தன் படுக்கையில் இருந்து எழுந்த அவள், குளிரில் நடுங்குவதாகப் பாசாங்கு செய்தபடியே முனிவரின் படுக்கைக்குச் சென்றாள்.(77) சிறப்புமிக்க அஷ்டவக்கிரர் மதிப்புடன் நல்வரவு கூறினார். எனினும், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அந்தப் பெண்மணி தன் கரங்களை விரித்து அம்முனிவரை மென்மையாக அணைத்தாள்.(78) முனிவர் அசைவற்றவராகவும், மரக்கட்டையைப் போல அசைவற்றவராகவும் இருப்பதைக் கண்ட அவள், மிக வருத்தமடைந்து அவருடன் பேசத் தொடங்கினாள்.(79)
{அவள்}, "ஒரு பெண்ணுக்கு எதிர் பாலினத்திடம் {ஓர் ஆணிடம்} இருந்து ஆசை {காமம்} மூலம் கிட்டக்கூடியதைவிட இன்பம் வேறேதுமில்லை. நான் இப்போது ஆசையின் {காமத்தின்} ஆதிக்கத்தின் கீழிருக்கிறேன். அக்காரணத்திற்காகவே நான் உம்மை நாடுகிறேன். பதிலுக்கு நீரும் என்னை நாடுவீராக.(80) ஓ! கற்ற முனிவரே, உற்சாகமாக என்னுடன் கலப்பீராக. ஓ! கல்விமானே, உம்மை நான் பெரிதும் விரும்புவதால் என்னைத் தழுவிக் கொள்வீராக.(81) ஓ! அற ஆன்மாவே, என்னுடன் கலப்பது நீர் மேற்கொண்ட கடுந்தவங்களுக்கான மிகச் சிறந்த, விரும்பத்தக்க வெகுமதியாகும். முதல் பார்வையிலேயே உம்மை நாடும் மனநிலையை நான் அடைந்துவிட்டேன். நீரும் என்னை நாடுவீராக.(82) இந்தச் செல்வமனைத்தும், இங்கே நீர் காணும் மதிப்புமிக்க அனைத்தும் என்னுடையவையே. உண்மையில் இவை யாவற்றுக்கும், எனக்கும் என் இதயத்துக்கும் நீரே தலைவராவீராக.(83) நான் உமது விருப்பம் அனைத்தையும் நிறைவேற்றுவேன். எனவே, ஓ! பிராமணரே, அனைத்து விருப்பங்களையும் அருளவல்ல இந்த இனிமை நிறைந்த காட்டில் என்னுடன் திளைத்திருப்பீராக.(84) அனைத்துவகையிலும் நான் உமக்குக் கீழ்ப்படிந்தவளாக இருப்பேன். நீர் உமது விருப்பப்படி என்னுடன் இன்புற்றிருப்பீராக. மனித மற்றும் மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட தெய்வீக ஆசைகள் அனைத்தையும் நாம் அனுபவிப்போம்.(85) ஒரு பெண்ணுக்கு இதைவிட (எதிர்பாலினத் {ஆணின்} துணையால் கிட்டும் இன்பத்தைவிட) ஏற்புடைய இன்பம் வேறேதும் கிடையாது. உண்மையில் எதிர் பால் கலவியே நாம் அறுவடை செய்யக்கூடிய மிக இனிய இன்பக்கனியாகும்.(86) காமதேவனால் தூண்டப்படும்போது பெண்கள் கணிக்கமுடியாத பெருங்கிறுக்கர்களாகிவிடுவார்கள். அத்தகைய நேரங்களில் அவர்கள் பாலைவனச் சுடுமணலில் நடந்து சென்றாலும் எந்த வலியையும் உணரமாட்டார்கள்" என்றாள்.(87)
அஷ்டவக்கிரர், "ஓ! அருளப்பட்ட மங்கையே, மற்றவர் துணைவியை நான் ஒருபோதும் அணுகுவதில்லை. அடுத்தவர் மனைவியுடன் ஒருவன் கொல்லும் கலவியானது, அறநெறி சாத்திரமறிந்தவர்களால் கண்டிக்கப்படுகிறது.(88) அனைத்துவகை இன்பங்களுக்கும் நான் முற்றிலும் அறிமுகமற்றவனாவேன். ஓ! அருளப்பட்ட மங்கையே, சந்ததி அடைவதற்காகத் திருமணத்தில் நான் விருப்பம் கொண்டிருக்கிறேன் என்பதை அறிவாயாக. நான் வாய்மையின் மீது ஆணையாகக் கூறுகிறேன்.(89) நியாயமாக அடையப்பட்ட சந்ததியின் துணையுடன், அத்தகைய துணையில்லாமல் கிட்ட முடியாத இன்பலோகங்களுக்குச் செல்வேன். உத்தமியே, அறநெறிக்கு இணக்கமானதை அறிவாயாக, அறிந்து கொண்டு உன் முயற்சிகளில் இருந்து விலகுவாயாக" என்றார்[5].(90)
[5] கும்பகோணம் பதிப்பில் அஷ்டவக்கிரரின் பதில் சற்று நெடியதாக இருக்கிறது. அது பின்வருமாறு, "சிறந்தவளே, பிறர் பெண்டிரை நான் எவ்வகையிலும் சேரேன். பிறர் பெண்டிரைத் தொடுவது தர்மசாஸ்திரங்களில் மறுக்கப்பட்டது. பதிவிரதையான மாதினித்திற்சேருவதற்குப் பிரம்மஹத்திக்குச் சொன்ன பிராயச்சித்தமே சொல்லப்பட்டிருக்கிறது. பிராம்மணஸ்திரீ விஷயத்தில் இன்னுமதிகமாகப் பாவம் சொல்லப்பட்டதைக் காண்கிறோம். சிறந்தவளே, நான் விவாகம் செய்து கொள்ள விருப்பமுள்ளவன். அது விஷயத்தில் எனக்குப் பிரம்மசரியம் கெடும். ஆதலாம், விவாகம் செய்வதற்கு முன் பிராயச்சித்தம் பெரிதாகும். அப்படிப் பிராயச்சித்தம் செய்து கொள்ளாமல் விவாகம் செய்து கொள்பவனுக்கு வித்துச் சுத்தமாகாது. உண்மையில் தாயினாலும், தந்தையினாலுந்தான் புத்ரனைச் சுத்தனென்றறிய வேண்டும். நான் காமஸுகங்களையறியாதவன். தர்மத்திற்காக ஸந்ததியுண்டாக வேண்டியது மட்டுந்தான். ஆகையால், என்னுடைய புத்ரஸந்தானத்தினால் நான் நல்லலோகம் போக வேண்டுமென்பதுதான என்னுடைய நிச்சயம். உத்தமியே, தர்மத்தையறி. அறிந்த பின் நிவ்ருத்தித்துவிடு" என்றிருக்கிறது.
அந்தப் பெண்மணி, "ஓ! மறுபிறப்பாளரே, காற்று {வாயு}, நெருப்பு {அக்னி}, நீர் {வருண} தேவர்களோ, பிற தேவர்களோ கூடக் காமதேவனைப் போலப் பெண்களுக்கு ஏற்புடையவர்கள் ஆகமாட்டார்கள். உண்மையில், பெண்கள் பாலினக்கலவியை மிகவும் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள்.(91) ஆயிரம், அல்லது ஒருவேளை ஒரு லட்சம் பெண்களில் ஒருத்தி மட்டுமே தன் கணவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவளாகக் காணப்படுகிறாள்.(92) ஆசையின் {காம} ஆதிக்கத்தில் இருக்கும்போது, அவர்கள் தங்கள் குடும்பத்தையோ, தந்தையையோ, தாயையோ, சகோதரனையோ, கணவனையோ, மகன்களையோ, கணவனின் சகோதரனையோ {மைத்துனனையோ} குறித்துக் கவலைப்படுவதில்லை (காமம் இழுக்கும் வழியிலேயே அவர்கள் செல்வார்கள்).(93) உண்மையில், தங்களைக் கொள்ளும் கரைகளை இடிக்கும் பேராறுகளைப் போலவே அவர்கள் தங்களுக்கு இன்பமெனக் கருதவதைத் தேடி {லீலை செய்து} (தாங்கள் பிறந்த அல்லது திருமணத்தின் மூலம் இணைந்த) குடும்பத்தை அழிக்கிறார்கள். படைப்பாளனே, பெண்களின் களங்கங்களை விரைவாகக் குறித்துக் கொண்டு இதைச் சொல்லியிருக்கிறான்" என்றாள்".(94)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பெண்களின் குறைகளை அறிந்து கொள்ள விரும்பிய அம்முனிவர் பிறகு அந்தப் பெண்ணிடம், "இவ்வகையில் என்னிடம் பேசுவதை நிறுத்துவாயாக. ஆசைகளில் {காமத்தில்} இருந்தே ஏக்கம் எழுகிறது. நான் (வேறு) என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக" என்றார் {அஷ்டவக்கிரர்}[6].(95)
[6] "வட்டார மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் இரண்டாவது வரியை முற்றிலும் தவறாகப் புரிந்திருக்கிறார்கள். அஸ்யதாம் என்பது துஷ்னிம்ஸ்தியதாம் என்று உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. ருச்சிதா-ச்சந்தம் என்பது விருப்பத்தில் (ருசியில்) இருந்து எழும் ஏக்கமாகும். முனிவர் என்ன சொல்கிறாரெனில், "உன்னை எனக்குப் பிடிக்காததால் உன் துணைக்கு நான் ஏங்கவில்லை". அஃதாவது உன்னுடன் சிறிது காலம் இருந்தால் நான் உன்னை விரும்பத் தொடங்கலாம், உனக்காக ஏங்கவும் செய்யலாம் என்ற பொருளும் வருகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உன் விருப்பப்படி உன் எண்ணம் இருக்கட்டும். நான் என்ன செய்ய வேண்டுமென்று நீ சொல்கிறாய்?" என்றிருக்கிறது.
அதற்குப் பதிலாக அந்தப் பெண்மணி, "ஓ! சிறப்புமிக்கவரே, காலம் மற்றும் இடத்திற்கு ஏற்றபடி (என்னில் ஏற்புடைய எதையும்) நீர் காண்பீர். அதுவரை (சில காலத்திற்கு) நீர் இங்கே வாழ்வீராக, ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே. போதிய வெகுமதியளிக்கப்பட்டவளாக நான் என்னைக் கருதிக் கொள்வேன்" என்றாள்.(96)
ஓ! யுதிஷ்டிரா, அவளால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த மறுபிறப்பாள முனிவர், அவளது வேண்டுகோளுக்கு இணங்கும் தீர்மானத்தை வெளிப்படுத்தும் வகையில், "உண்மையில், என்னால் முடிந்தவரை நான் இந்த இடத்தில் உன்னுடன் வசித்திருப்பேன்" என்றார்[7].(97)
[7] கும்பகோணம் பதிப்பில், "அப்படியே ஆகட்டும். உனக்கு எதுவரையில் இஷ்டமிருக்கிறதோ அதுவரையில் நான் நிச்சயமாய் இங்கு வசிப்பேன்" என்றிருக்கிறது.
பிறகு அந்த முனிவர், முதுமையில் பீடிக்கப்பட்ட அந்தப் பெண்ணைக் கண்டு, அக்காரியம் குறித்து நியாயமாகச் சிந்திக்கத் தொடங்கினார். தமது எண்ணங்களால் கொதிப்புற்றவராக அவர் காணப்பட்டார்.(98) பிராமணர்களில் முதன்மையான அவர், அந்தப் பெண்ணின் மேனியில் எந்தப் பகுதியில் தமது கண்களைச் செலுத்தினாலும், அவரது கண்கள் எந்த மகிழ்ச்சியையும் அடையத் தவறின. மறுபுறம், அவ்வுறுப்புகளைக் கண்ட அருவருப்பினால் அவரது பார்வை விலகுவதாகத் தெரிந்தது.(99)
{அவர்}, "இந்தப் பெண்மணியே நிச்சயம் இந்த அரண்மனையின் தேவியாக இருக்க வேண்டும். ஏதாவது சாபத்தின் மூலம் இவள் அருவருப்பானவளாக்கப் பட்டாளா? இந்தக் காரணத்தை விரைவாக நான் உறுதி செய்து கொள்வது முறையாகாது" {என நினைத்தார்}.(100) தமது இதயத்தில் கமுக்கமாய் நினைத்து, காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் இருந்த அம்முனிவர், அந்த நாளின் எஞ்சிய நேரத்தையும் {பகலையும்} இக்கவலையுடனே கழித்தார்.(101)
அப்போது அந்தப் பெண் அவரிடம், "ஓ! சிறப்புமிக்கவரே, மாலை மேகங்களின் மூலம் சூரியன் சிவந்திருப்பதைக் காண்பீராக. நான் உமக்குச் செய்ய வேண்டிய தொண்டு என்ன?" என்று கேட்டாள்.(102)
முனிவர் அவளிடம், "என் தூய்மைச் சடங்குகளுக்காக நீர் கொண்டு வா. நீராடி முடித்ததும், என் நாவையும், புலன்களையும் அடக்கி நான் என் மாலைத் துதிகளைச் செலுத்த வேண்டும்" என்றார்.(103)
அநுசாஸனபர்வம் பகுதி – 19ல் உள்ள சுலோகங்கள் : 103
ஆங்கிலத்தில் | In English |