The penance of Vasudeva! | Anusasana-Parva-Section-139 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 139)
பதிவின் சுருக்கம் : முகத்திலுண்டான நெருப்பால் மலையை எரித்த கிருஷ்ணன்; அம்மலையைச் செழிக்கச் செய்தது; அதன் காரணத்தை முனிவர்களுக்குச் சொன்னது; தவசிகளை நல்லுரை வழங்கும்படி கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்; தவசிகள் அப்பணிக்கு நாரதரைத் தேர்ந்தெடுத்தது...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, நீர் பெரும் ஞானத்தைக் கொண்டிருக்கிறீர். உண்மையில், கல்வியின் அனைத்து வகைகளையும் நீர் முழுமையாக அறிந்திருக்கிறீர். நமது பெருங்குலத்தில் நீர் மட்டுமே அனைத்து அறிவியல்களுடனும் பெருகியிருக்கிறீர்.(1) அறம் மற்றும் பொருள் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்ததும், மறுமையில் இன்பத்திற்கு வழிவகுப்பதும், அனைத்து உயிரினங்களுக்கும் ஆச்சரியம் நிறைந்ததுமான உரையை உம்மிடம் இருந்து நான் கேட்க விரும்புகிறேன்.(2) வந்திருக்கும் காலமானது துன்பம் நிறைந்ததாகும். நமக்குச் சுற்றத்தாரும், நண்பரும் இருப்பதை அது விரும்பவில்லை. உண்மையில், ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, நம்மிடம் உம்மைத் தவிரப் போதகராக இருக்கத்தகுந்த வேறு எவரும் இல்லை.(3) ஓ! பாவமற்றவரே, நானும், என் தம்பிகளும் உமது உதவியைப் பெறத் தகுந்தவர்களாக இருந்தால், நான் உம்மைக் கேட்க விரும்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதே உமக்குத் தகும்.(4) இவன் அனைத்து வகைச் செழிப்பைக் கொண்டவனும், மன்னர்கள் அனைவராலும் கௌரவிக்கப்படுபவனுமான நாராயணன் ஆவான். இவனும் உம்மைப் பெரிதும் மதித்து, உமக்காகக் காத்திருக்கிறான்.(5) வாசுதேவன் மற்றும் இந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் எனக்கும் என் தம்பிகளுக்குமான நன்மைக்காக நீர் அன்புடன் என்னோடு உரையாடுவதே உமக்குத் தகும்" என்றான்".(6)
வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், "மன்னன் யுதிஷ்டிரனின் இச்சொற்களைக் கேட்டவரும், பகீரதனின் பெயரால் அழைக்கப்பட்ட ஆற்றின் மகனுமான பீஷ்மர், அந்த ஏகாதிபதியிடமும், அவனது தம்பிகளிடமும் கொண்ட அன்பின் விளைவால் மகிழ்ச்சியால் நிறைந்து பின் வருவனவற்றைச் சொன்னார்[1].(7)
[1]" ஸம்ப்ரமம் என்பது ஒரு வேளை மகிழ்ச்சியாகவோ, மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் நிறைவாகவோ பொருள் தர வேண்டும். ஆர்வம், துடிப்பு என்ற பொருளையும் அது தரக்கூடும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவருடைய சொல்லைக் கேட்டு அன்பினால் நெகிழ்ச்சியுற்ற பீஷ்மர் அவரைக் கண்ணினால் குடிப்பவர் போலப் பார்த்து" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, இனிமை நிறைந்ததும், பழங்காலத்தில் வெளிப்படுத்தப்பட்டதுமான இந்த விஷ்ணுவின் மகிமை குறித்து (நான் என் ஆசான்களிடம் இருந்து) கேட்டவாறு நிச்சயம் உனக்குச் சொல்வேன். மேலும், காளைமாட்டைத் தன் அடையாளமாகக் கொண்ட பெருந்தேவனின் பலத்தையும் {மகிமையையும்} நான் விளக்கிச் சொல்வேன் கேட்பாயாக. ருத்திரன் மற்றும் ருத்திரனுடைய மனைவியின் மனங்களில் நிறைந்திருந்த ஐயத்தையும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(9)
அற ஆன்மா கொண்டவனான கிருஷ்ணன், ஒரு காலத்தில் பனிரெண்டு வருடங்கள் நீண்ட ஒரு நோன்பை நோற்றுக் கொண்டிருந்தான். அந்தப் பெரும் நோன்பை நோற்பதற்கான தொடக்கச் சடங்குகளைச் செய்திருந்த அவனைக் காண[2] நாரதர், பர்வதர், தீவில் பிறந்தவரான கிருஷ்ணர் {வியாசர்}, அமைதியாகப் பேசுபவர்களில் முதன்மையான தௌம்யர், தேவலர், காஸ்யபர், ஹஸ்திகாஸ்யபர் ஆகியோர் அந்த இடத்திற்கு வந்தனர்.(10,11) தீக்ஷையுடன் கூடியவர்களும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களுமான பிற முனிவர்கள், தங்கள் சீடர்களால் பின்தொடரப்பட்டும், பல சித்தர்கள் மற்றும் பெருந்தகுதியைக் கொண்ட தவசிகள் பலரின் துணையுடனும் அங்கே வந்தனர்.(12) தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, உயர்ந்த புகழுக்குத் தகுந்ததும், தேவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவதுமான விருந்தோம்பல் கௌரவங்களை அவர்களுக்கு அளித்தான்.(13) பச்சை நிறத்தில் இருந்தவையும், தங்க நிறத்தில் இருந்தவையும், மயிலின் தோக வண்ணத்தில் இருந்தவையும், முற்றிலும் புதியவையாக இருந்தவையுமான இருக்கைகளில் அந்தப் பெரும் முனிவர்கள் அமர்ந்தனர்.(14) இவ்வாறு அமர்ந்த அவர்கள் அறம் மற்றும் கடமை தொடர்பான காரியங்களைக் குறித்து அரச முனிகள் பலருடனும், தேவர்களுடனும் சேர்ந்து இனிமையாக உரையாடத் தொடங்கினர்.(15)
[2] பிபேக்திப்ராயின் பதிப்பிலும் மேற்கண்டவாறு இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "இந்த நாராயணராகிய கிருஷ்ணபகவான் முன்னர்ப் புத்திரனுக்காக வ்ரதம் செய்யக்கருதி பன்னிரெண்டு வருஷம் தீக்ஷை எடுத்துக் கொண்டார். வரதீக்ஷை பெற்றுக் கொண்டவரான கேசவரைப் பார்ப்பதற்காக மஹரிஷிகள் வந்தனர்" என்றிருக்கிறது.
அந்நேரத்தில், கடும் நோன்புகளெனும் விறகில் எழுந்த நெருப்பின் வடிவிலான நாராயணனின் சக்தியானது, அற்புதச் சாதனைகள் கொண்ட கிருஷ்ணனின் வாயிலிருந்து வெளிப்பட்டது.(16) மரங்கள், செடிகொடிகள், பறவைகள், மான்கள், இரைதேடும் விலங்குகள், ஊர்வன ஆகியவற்றுடன் கூடிய மலைகளை அந்நெருப்பு எரிக்கத் தொடங்கியது.(17) விரைவிலேயே அந்த மலையின் சிகரம் துன்பம் நிறைந்த பரிதாபகரமான தோற்றத்தை அளித்தது. அந்தச் சிகரத்தில் வசித்து வந்த பல்வேறு வகை விலங்குகள் துன்பத்தால் அலறி ஓலமிட்டன. விரைவில் அச்சிகரம் அனைத்து உயிரினங்களும் இல்லாததானது.(18) வலிமைமிக்கத் தழல்களைக் கொண்ட அந்நெருப்பு எஞ்ச ஏதுமில்லாமல் அனைத்தையும் எரித்துவிட்டு இறுதியாகப் பணிவான சீடனைப் போல விஷ்ணுவிடம் திரும்பி வந்து, அவனது பாதங்களைத தீண்டியது.(19) பகைவர்களை நொறுக்குபவனான கிருஷ்ணன், அம்மலை எரிந்ததைக் கண்டு நலம்பயக்கும் அருள்பார்வையை அதில் செலுத்தி, மீண்டும் அதைப் பழைய நிலைக்கே கொண்டு வந்தான்.(20) அதன் பேரில், அந்த மலையானது, மலர்ந்திருக்கும் மரஞ்செடிகொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, மீண்டும் பறவைகள், மான்கள், இரைதேடும் விலங்குகள் மற்றும் ஊர்வனவற்றின் இனிய ஒலிகள் மற்றும் முழக்கங்களை எதிரொலித்தது.(21) நினைத்தற்கரிய, அற்புதம் நிறைந்த அந்தக் காட்சியைக் கண்ட தவசிகள் அனைவரும் வியப்படைந்தனர். பார்வை கண்ணீரால் தடைபட்டு, மயிர்ச்சிலிர்ப்புடன் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர்.(22)
பேசுபவர்களில் முதன்மையான நாராயணன், இவ்வாறு ஆச்சரியத்தில் நிறைந்த முனிவர்களைக் கண்டு புத்துணர்ச்சியை அளிக்கும் இந்த இனிய சொற்களைச் சொன்னான்:(23) "உண்மையில், அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவர்களும், மமதையற்றவர்களும், புனித அறிவியல் அனைத்தையும் முழுமையாக அறிந்தவர்களுமான இந்தத் தவசிகளும், முனிவர்க்கூட்டங்களும் ஏன் இதயம் நிறைந்த ஆச்சரியத்துடன் இருக்கிறார்கள்?(24) தவங்களைச் செல்வமாகக் கொண்டவர்களும், அனைத்து வகைக் களங்கங்களிருந்தும் விடுபட்டவர்களுமான இந்த முனிவர்கள், என் மனத்தில் எழுந்திருக்கும் இந்த ஐயத்திற்கு உண்மையில் விளக்கம் அளிப்பதே தகும்" என்றான்.(25)
முனிவர்கள், "உலகங்கள் அனைத்தையும் படைப்பவனும், அழிப்பவனும் நீயே. குளிர் காலமாகவும், கோடைக்காலமாகவும், மழைக்காலமாகவும் இருப்பவன் நீயே.(26) உலகில் தோன்றும் அசைவன, அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்திற்கும், தந்தையும், தாயும், ஆசானும், தோற்றமும் நீயே.(27) ஓ! மதுசூதனா, எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதும், ஐயங்கொள்ள வைப்பதும் இதுவே. ஓ! மங்கலங்கள் அனைத்தின் பிறப்பிடமே, உன் வாயில் வெளிப்பட்ட நெருப்பு குறித்த எங்கள் ஐயத்தை விலகச் செய்வதே உனக்குத் தகும்.(28) ஓ! ஹரியே, எங்கள் அச்சம் விலகியதும் நாங்கள் கேட்டதையும் கண்டதையும் உனக்கு உரைக்கின்றோம்" என்றனர்.(29)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, "காந்தியில் அனைத்தையும் எரிக்கும் யுகநெருப்புக்கு ஒப்பானதும், இந்த மலையை நொறுக்கி, எரித்ததும், என் வாயில் இருந்து வெளிப்பட்டதுமான அந்த நெருப்பு விஷ்ணுவின் சக்தியேயன்றி வேறேதுமில்லை.(30) முனிவர்களே, நீங்கள் கோபத்தை அடக்கியவர்களும், புலன்களை முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவந்தவர்களும், தவமென்ற செல்வத்துடன் கூடியவர்களும், தேவ பலம் கொண்டவர்களாக இருப்பவர்களாவீர். இருப்பினும் நீங்கள் கலக்கத்தையும், துன்பத்தையும் அனுபவத்திருக்கிறீர்கள்.(31) நான் இப்போது ஒரு கடும் நோன்பு தொடர்பான நியமங்களில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறேன். உண்மையில் ஒரு தவசியின் நோன்புகளை நான் நோற்பதன் விளைவாலேயே நெருப்பானது என் வாயில் இருந்து வெளிப்பட்டது. இதற்காக நீங்கள் கலங்குவது உங்களுக்குத் தகாது.(32) கடும் நோன்பை நோற்கவே இனிமைநிறைந்த இந்த மங்கலமான மலைக்கு நான் வந்தேன். தவத்தின் உதவியால் சக்தியில் எனக்கு இணையான ஒரு மகனைப் பெறும் நோக்கமே என்னை இங்கே கொண்டு வந்தது.(33) என் தவங்களின் விளைவால், என் உடலில் உள்ள ஆன்மாவானது நெருப்பாக மாறி என் வாயில் வெளிப்பட்டது. அந்த நெருப்பானது, வரமளிப்பவரான அண்டமனைத்திற்கும் பெரும்பாட்டனை {பிரம்மனைக்} காணச் சென்றது.(34)
தவசிகளில் முதன்மையானவர்களே, பெரும்பாட்டன் என் ஆன்மாவிடம், காளையைக் கொடியில் கொண்ட பெருந்தேவனின் சக்தியில் பாதியைக் கொண்ட மகன் எனக்குப் பிறப்பான என்று சொன்னார்[3].(35) தன் காரியத்தை முடித்துத் திரும்பிய அந்த நெருப்பானது, என்னிடம் வந்து, கடமையுணர்வுமிக்க ஒரு சீடனைப் போல என் பாதங்களை அணுகியிருக்கிறது. உண்மையில் தன் சீற்றத்தைக் கைவிட்டு தனக்குரிய இயல்புடனேயே அது திரும்பியிருக்கிறது.(36) தாமரையையே தன் பிறப்பிடமாகவும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவர் தொடர்பான ஒரு புதிரை உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களே, நீங்கள் அச்சத்தின் வசப்படக்கூடாது.(37) தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் நீங்கள். எத்தடையுமின்றி எந்த இடத்திற்கும் செல்பவர்கள் நீங்கள். தவசிகளால் நோற்கப்படும் நோன்புகளால் சுடர்விடும் நீங்கள் ஞானத்தாலும், அறிவியலாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறீர்கள்.(38) பூமியிலோ, சொர்க்கத்திலோ நீங்கள் கேட்ட அல்லது கண்ட அற்புதம் நிறைந்த காரியங்களை எனக்குச் சொல்ல வேண்டுமென உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.(39) உங்கள் உதடுகள் சிந்தும் உரையெனும் தேன்துளியைச் சுவைக்க ஆவலுடன் இருக்கிறேன். அமுதத் தாரை போல அந்தத் தேன் நிச்சயம் இனிமையாகவே இருக்கும்.(40)
[3] கும்பகோணம் பதிப்பில், "அது வெளிப்பட்டவுடன் ஒரு நொடியில் பிரம்மதேவரைப் பார்க்கப் போயிற்று. அனங்கனென்னப்படும் மன்மதன் பிரம்மதேவரால் எனக்குப் புத்திரனாகச் செய்யப்பட்டான். அவன் அவரால் அனுப்பப்பட்டுத் திரும்பவும் என்னிடத்திற்கே வந்தான். இவ்வாறு என் விஷ்ணு சக்தியானது என் முகத்திலிருந்து வெளிப்பட்டது" என்றிருக்கிறது.
தேவர்களைப் போலத் தெரியும் முனிவர்களே, நீங்கள் அறியாததும், இனிமை நிறைந்ததும், அற்புதம் நிறைந்ததுமான தன்மை எதையும் பூமியிலோ, சொர்க்கத்திலோ நான் கண்டிருந்தால், எதனாலும் தடுக்கப்பட இயலாத என் உயர்ந்த இயல்பின் விளைவாக அஃது இருக்கும் என நான் சொல்லிக் கொள்கிறேன். அற்புதம் நிறைந்த ஞானம் ஏதும் என்னிடம் இருந்தாலோ, என் மனவெழுச்சியினால் அடையப்பட்டிருந்தாலோ அஃது எனக்கு அற்புதம் நிறைந்ததாகவே தெரிவதில்லை.(41,42) எனினும், பக்திமான்களால் உரைக்கப்படுவதும், நல்லோரிடம் கேட்கப்படுவதுமான எதுவும் மதிப்புடனும், நம்பிக்கையுடனும் ஏற்றக்கொள்ளத் தகுந்ததாகும். பூமியில் அத்தகைய உரைகள் கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துகளாக நீண்ட காலம் நீடித்து நிலைத்து இருக்கின்றன.(43) எனவே, நம்முடைய இந்தச் சந்திப்பில், நல்லோரும், நல்லோரை உண்டாக்கத் தவறாதவர்களுமான மனிதர்களின் உதடுகள் சிந்தும் எதையும் நான் கேட்க விரும்புகிறேன்" என்றான் வாசுதேவன் {கிருஷ்ணன்}.(44)
கிருஷ்ணனின் இந்தச் சொற்களைக் கேட்ட தவசிகள் அனைவரும் வியப்பால் நிறைந்தனர். அவர்கள், தாமரை இதழ்களைப் போன்ற நீண்டவையும், அழகியவையுமான தங்கள் கண்களைக் கொண்டு ஜனார்த்தனனைப் பார்க்கத் தொடங்கினர்[4].(45) சிலர் அவனைப் புகழத் தொடங்கினர், சிலர் அவனை மதிப்புடன் வழிபடத் தொடங்கினர். உண்மையில் அவர்கள் அனைவரும் நித்தியமான ரிக்குகளில் அலங்கரிக்கப்பட்ட பொருள்களைக் கொண்ட சொற்களால் மதுசூதனனைப் புகழ்ந்து பாடினர்.(46) பிறகு அந்தத் தவசிகள் அனைவரும் பேச்சை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான நாரதரை, வாசுதேவனின் வேண்டுகோளை நிறைவடையச் செய்ய நியமித்தனர்.(47)
[4] இங்கே கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு: "ஜனார்த்தனர் இவ்வாறு தாம் கேட்க வேண்டுமென்று சொல்லும்போது, மஹரிஷிகள் அவரைப் பார்த்து வரிசையாகக் கரங்களைக் குவித்து வாக்கினால் பின்வருமாறு சொல்லலானார்கள். ‘வரங்கொடுப்பவரே, நீர் உமது வாக்கினால் எங்களை இவ்வாறு சொல்வது தகாது. நாங்கள் எல்லாரும் உமது கட்டளையை எதிர்பார்த்திருப்பவர்கள். எங்கள் தவமெல்லாம் உம்மால் நடப்பது. கேசவரே, எங்களை நீர் இப்படிப் பூஜிப்பதும் நியாயமன்று. உம்மை விட வேறு ஒருவனையும் நாங்கள் அறியவில்லை. ஆகாயத்திலும், பூமியிலும் எவ்வுலகத்திலும் உமதல்லாதது ஒன்றையும் நாங்கள் காணவில்லை. எல்லாம் உம்மால் வியாபிக்கப்பட்டது. தேவரே, உம்மிடத்தில் சொல்வதற்கு ஒன்றும் எங்களுக்குத் தெரியாது’ என்றனர். இவ்வாறு சொல்லப்பட்ட கேசவர், புன்னகையுடன் அவர்களைப் பார்த்து, ‘ரிஷிஸ்ரேஷ்டர்களே, நான் இப்போது மானிட ஜன்மத்திலிருப்பவன். சிறந்த தவமுள்ளவர்களே, ஆதலால், மானிடரைப் போலவே எனக்குச் சக்தியிருப்பதாக அறியுங்கள். உங்களால் சொல்லப்படுவது எனக்குப் புதிது போலவே இருக்கும்’ என்று சொன்னார். மஹாத்மாவான அவர் இவ்வாறு சொல்ல, ரிஷிகளனைவரும் அவருடைய ஆஜ்ஞைக்குள்பட்டனர். பிறகு, புத்திமான்களான ரிஷிக்கூட்டத்தாரனைவரும் திவ்யஜ்ஞானுமுள்ள நாரதரைத் தாம் கேசவர் கேள்விக்கு மறுமொழிகூறத் திறமையுள்ளவரென்று புத்தியில் நிச்சயித்தனர்" என்றிருக்கிறது.
தவசிகள், "ஓ! நாரதரே, ஓ! பலமிக்கவரே, ஓ! தவசியே, நாம் புனித நீர்நிலைகளுக்குப் புனிதப்பயணம் {தீர்த்தயாத்திரை} செல்லும்போது இமய மலைகளில் நாம் கண்ட ஆச்சரியம் நிறைந்த, நினைத்தற்கரிய நிகழ்வை, ரிஷிகேசனுக்குத் தொடக்கம் முதல் விரிவாக முழுமையாகச் சொல்வதே உமக்குத் தகும். உண்மையில், இங்கே கூடியிருக்கும் முனிவர்கள் அனைவரின் நன்மைக்காகவும் அந்த நிகழ்வை உரைப்பதே உமக்குத் தகும்" என்றனர்.(48,49) இவ்வாறு அத்தவசிகளால் சொல்லப்பட்டதும், தேவ முனிவரான தெய்வீக நாரதர், சில காலத்திற்கு முன் நிகழ்ந்த பின் வரும் கதையை உரைத்தார்" என்றார் {பீஷ்மர்}.(50)
அநுசாஸனபர்வம் பகுதி – 139ல் உள்ள சுலோகங்கள் : 50
ஆங்கிலத்தில் | In English |