A Sudra possessed of the status of a Brahmana! | Anusasana-Parva-Section-143 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 143)
பதிவின் சுருக்கம் : ஒருவன் தன் நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு மேன்மையுறவோ, தாழ்ந்த நிலைக்கு வீழ்வதோ நேரும் சூழ்நிலைகளை உமைக்குச் சொன்ன சிவன்...
உமை {மஹேஸ்வரனிடம்}, "ஓ! புனிதமானவரே, ஓ! பகனின் கண்களையும், பூஷனின் பற்களையும் கிழித்தெறிந்தவரே, ஓ! தக்ஷனின் வேள்வியை அழித்தவரே, ஓ! முக்கண் தேவா, எனக்கோர் ஐயம் இருக்கிறது.(1) பழங்காலத்தில் சிறப்புமிக்கச் சுயம்புவே நான்கு வகைகளை {வர்ணங்களைப்} படைத்தார். ஒரு வைசியன் செய்யும் எந்தச் செயல்களின் தீய விளைவால் அவன் ஒரு சூத்திரனாகிறான்?(2) எந்தச் செயல்களினால் ஒரு க்ஷத்திரியன் வைசியானாகவும், ஒரு மறுபிறப்பாளன் (பிராமணன்) க்ஷத்திரியனாகவும் ஆகின்றனர்? வகைகளின் தரம் குறைவதை எவ்வழிமுறைகளினால் தடுக்க வேண்டும்?(3) எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு பிராமணன் தன் மறுபிறவியில் சூத்திர வகையில் பிறக்கிறான்? ஓ! பலமிக்கத் தேவா, எந்தச் செயல்களைச் செய்தன் மூலம் ஒரு க்ஷத்திரியன் சூத்திர நிலையை அடைகிறான்?(4) ஓ! பாவமற்றவரே, ஓ! அனைத்து உயிரினங்களில் தலைவரே, ஓ! சிறப்புமிக்கவரே, எனக்கிருக்கும் இந்த ஐயத்தை விலக்குவீராக. மேலும் மற்ற மூன்று வகையினரும் இயல்பாகவே பிராமணத்தன்மையை அடைவது எவ்வாறு என்பதையும் சொல்வீராக?" என்று கேட்டாள்.(5)
அந்தச் சிறப்புமிக்கவன், "ஓ! தேவி, பிராமணத்தன்மை அடைவதற்கு மிக அரிதானதாகும். ஓ! மங்கலமங்கையே, ஒருவன் அசல் படைப்பின் மூலமோ, பிறப்பின் மூலமோ பிராமணனாகிறான். அதே போலவே, க்ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகியோர் அனைவரும் மூலப்படைப்பின் மூலமே அவ்வாறாகிறார்கள். இதுவே என் கருத்தாகும்[1].(6) எனினும், பிராமணனாகப் பிறந்த ஒருவன் தன் தீச்செயல்களின் மூலம் தன் நிலையில் இருந்து வீழ்கிறான். எனவே, முதல் வகை நிலையை அடைந்த பிராமணன், (தன் செயல்களின் மூலம்) அதை எப்போதும் பாதுகாக்க வேண்டும்.(7) ஒரு க்ஷத்திரியனோ, வைசியனோ ஒரு பிராமணனைப் போலவே பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளைப் பயின்று வாழ்ந்தால், அவன் (தன் அடுத்தப் பிறவியில்) ஒரு பிராமணனாகிறான்.(8) ஒரு பிராமணன் தன் வகைக்கான கடமைகளைக் கைவிட்டு, க்ஷத்திரியனுக்குரிய கடமைகளைப் பின்பற்றினால் அவன் தன் பிராமணன நிலையில் இருந்து விழுந்து க்ஷத்திரியனாகிவிட்டதாகக் கருதப்பட வேண்டும்.(9)
[1] "நிஸர்காதம் என்பது "படைப்பின் மூலம்", அல்லது "மூல இயல்பின் {குணத்தின்} மூலம்", அல்லது பிறப்பின் மூலம் என்று பொருள் கொள்ளலாம். ஒரு பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ, சூத்திரனோ, மூலப்படைப்பின் மூலம், அதாவது பிறப்பின் மூலம் அத்தகைய நிலையில் பிறக்கிறான் என்று சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அற்ப புத்தி கொண்ட எந்தப் பிராமணன், அடைதற்கு மிக அரிய தன் பிராமண நிலையை மறந்து, பேராசை மற்றும் மடமையால் தூண்டப்பட்டு, வைசியர்களுக்குரிய நடைமுறைகளைப் பின்பற்றுவானோ,(10) அவன் வைசியனாகவே கருதப்படுகிறான். அதே போல வைசியனாகப் பிறந்த ஒருவன், சூத்திரர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு சூத்திரனாகிறான். உண்மையில், தன் வகைக்கான கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட பிராமணன், சூத்திரனின் நிலைக்கும் தாழக்கூடும்.(11) தன் பிறப்பின் வகையில் இருந்து வீழ்ந்த அத்தகைய பிராமணன், (அவன் முறையாகத் தன் கடமைகளை நோற்றால் எது அவனுடைய இலக்காக இருக்குமோ அந்த) பிரம்ம லோகத்தை அடையாமல், நரகத்தில் மூழ்கி, தன் மறுபிறவியில் ஒரு சூத்திரனாகப் பிறக்கிறான்.(12) உயர்வாக அருளப்பட்ட க்ஷத்திரியனோ, வைசியனோ தன் வகைக்காக விதிக்கப்பட்ட கடமைகளுக்கு இணக்கமான நடைமுறைகளைக் கைவிட்டு ஒரு சூத்திரனுக்கு விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றினால்,(13) அவன் தன் வகையில் இருந்து வீழ்ந்து கலப்பு வர்ண மனிதனாகிறான். இவ்வகையிலேயே பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ சூத்திர நிலைக்குள் மூழ்குகிறார்கள்.(14) தன் வகைக்கான கடமைகளைப் பயின்று தெளிவான பார்வையை அடைந்தவனும், அறிவு மற்றும் அறிவியலுடன் கூடியவனும், (உடலிலும், மனத்திலும்) தூய்மை கொண்டவனும், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனும், தன் கடமைகள் அனைத்தையும் பயில்வதில் அர்ப்பணிப்புமிக்கவனுமான மனிதன், நிச்சயம் அறவெகுமதிகளை அனுபவிப்பான்.(15)
ஓ! தேவி, இது குறித்து (சுயம்புவான) பிரம்மனால் சொல்லப்பட்டவற்றை உனக்குச் சொல்லப் போகிறேன். பலனடைய விரும்பும் அறவோர் எப்போதும் உறுதியுடன் ஆன்மப் பண்பாட்டைத் தொடர்வார்கள்.(16) கடுமைநிறைந்த கொடூர மனிதர்களில் இருந்து வரும் உணவு நிந்திக்கத்தகுந்ததாகும். பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களுக்குக் கொடுக்கச் சமைக்கப்பட்ட உணவும் அத்தகையதே. இறந்து போன மனிதனின் முதல் சிராத்தத்திற்காகச் சமைக்கப்பட்ட உணவும் அத்தகையதே. ஒரு சூத்திரனால் கொடுக்கப்பட்டதும், வழக்கமான களங்கங்களின் விளைவால் களங்கப்பட்டதுமான உணவும் அவ்வாறானதே. இவற்றை ஒரு பிராமணன் ஒருபோதும் உண்ணக்கூடாது.(17) ஓ! தேவி, ஒரு சூத்திரனின் உணவு உயர் ஆன்ம தேவர்களால் எப்போதும் அங்கீகரிக்கப்படுவதில்லை. இதைப் பெரும்பாட்டன் தன் வாயால் அதிகாரத்துடன் சொன்னதாகவே நான் நினைக்கிறேன்.(18) புனித நெருப்பை நிறுவுபவனும், வேள்விகளைச் செய்பவனுமான ஒரு பிராமணன், ஒரு சூத்திரன் கொடுத்த உணவின் எந்தப் பகுதியும் செரிக்காமல் இறந்தால் அவன் நிச்சயம் அடுத்தப் பிறவியில் ஒரு சூத்திரனாகவே பிறப்பான்.(19) சூத்திரனின் உணவு தன் குடலில் எஞ்சியிருப்பதன் விளைவால் அவன் பிராமண நிலையில் இருந்து வீழ்கிறான். அத்தகைய பிராமணன் சூத்திர நிலையை அடைகிறான். இதில் ஐயமேதும் கிடையாது.(20)
ஒரு பிராமணன், எந்த மனிதனின் உணவை வாழ்நாள் முழுவதும் உண்டு வாழ்ந்தானோ, அல்லது தன் இறுதி மூச்சில் தன் வயிற்றில் எந்த மனிதன் கொடுத்த உணவு செரிக்காமல் இருக்கிறதோ அந்த மனிதனின் நிலையிலேயே அடுத்தப் பிறவியில் அவன் பிறக்கிறான்.(21) அடைவதற்கு மிக அரிதான பிராமணன் என்ற மங்கல நிலையை அடைந்தவன், அதை அலட்சியம் செய்து, தடை செய்யப்பட்ட உணவை உண்டால் அவன் தனது உயர்ந்த நிலையில் இருந்து வீழ்கிறான்.(22) மதுவைப் பருகுபவனும், பிராமணக் கொலை செய்த குற்றவாளியும், நடத்தையில் வஞ்சகம் நிறைந்தவனும், கள்வனும், நோன்புகளை உடைத்தவனும், தூய்மையற்றவனும், வேத கல்வியில் கவனமில்லாதவனும், பாவியும், பேராசை கொண்டவனும், வஞ்சகனும்,(23) நோன்புகளை நோற்காதவனும், சூத்திரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவனும், பிறரின் காமத்திற்குத் தரகு வேலை பார்த்து வாழ்வாதாரத்தை அடைபவனும், சோமலதையை விற்பனை செய்பவனும், தன்னிலும் தாழ்ந்த வகை மனிதனுக்குத் தொண்டாற்றுபவனுமான மனிதன் பிராமணத்தன்மை என்ற தன் நிலையில் இருந்து வீழ்கிறான்.(24) ஆசானின் படுக்கைக்குக் களங்கம் செய்பவனும், அவரிடம் வன்மத்தை வளர்த்துக் கொள்பவனும், அவரைக் குறித்துத் தவறாகப் பேசுவதில் இன்பங்காணுபவனுமான பிராமணன், பிரம்மத்தை அறிந்தவனாகவே இருப்பினும் தன் பிராமணத்தன்மையை இழக்கிறான்.(25)
ஓ! தேவி, இந்த நற்செயல்களைச் செய்வதால் ஒரு சூத்திரன், பிராமணனாகவும், வைசியன் க்ஷத்திரியனாகவும் மாறலாம். ஒரு சூத்திரன் தனக்கென விதிக்கப்பட்ட கடமைகளை யாவற்றையும் முறையாக விதிப்படி செய்ய வேண்டும். அவன் மூவகை மக்களிடமும் பணிவுடன் கீழ்ப்படிந்து பணி செய்து, கவனத்துடன் அவர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். எப்போதும் அறப்பாதையைப் பின்பற்றும் சூத்திரன் இவை யாவற்றையும் உற்சாகமாகச் செய்ய வேண்டும். அவன் தேவர்களையும், மறுபிறப்பாள வகையினரையும் மதிக்க வேண்டும். அவன் அனைத்து மனிதர்களிடமும் விருந்தோம்பல் நோன்பைப் பின்பற்ற வேண்டும்.(28) புலனடக்கத்துடன் எளிய உணவை உண்ணும் அவன் தன் மனைவியை அவளுக்குரிய காலத்தைத் தவிர ஒருபோதும் அணுகக்கூடாது. அவன் எப்போதும் புனிதமான, தூய்மையான மனிதர்களைத் தேட வேண்டும். உணவைப் பொறுத்தவரையில் அவன் அனைத்து மனிதர்களின் தேவைகளும் நிறைவடைந்த பின்னர் எஞ்சியதை உண்ண வேண்டும்.(29) உண்மையில், ஒரு சூத்திரன் (தனது மறுபிறவியில்) ஒரு வைசியனாக விரும்பினால், அவன் வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். ஒரு வைசியன் (தன் அடுத்தப் பிறவியில்) ஒரு பிராமணனாக விரும்பினால் அவன் இக்கடமைகளைப் பின்பற்ற வேண்டும். அவன் வாக்கில் வாய்மை பயில வேண்டும், செருக்கு மற்றும் ஆணவத்தில் இருந்து விடுபட வேண்டும். அவன் முரண்பட்ட இரட்டைகள் அனைத்திற்கும் மேலாக எழ வேண்டும். அவன் அமைதியாகத் தன் கடமைகளைச் செய்ய வேண்டும்.(30)
அவன் வேள்விகளில் தேவர்களைத் துதித்து, வேத கல்வியையும், வேதம் ஓதுவதையும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். அவன் புலனடக்கத்துடன் பிராமணர்களை மதித்து அனைத்து வகையினரின் நலத்தை நாட வேண்டும். அவன் இல்லறவாழ்வுமுறையைப் பின்பற்றி, பரிந்துரைக்கப்பட்ட வேளைகளில் ஒரு நாளைக்கு இரு முறை மட்டுமே உண்டு, தன் குடும்ப உறுப்பினர்கள், தன்னைச் சார்ந்திருப்பவர்கள், விருந்தினர்கள் ஆகியோர் அனைவரும் நிறைவடைந்த பின்னர் எஞ்சியிருக்கும் உணவைக் கொண்டு மட்டுமே தன் பசியை ஆற்றிக் கொள்ள வேண்டும். எளிய உணவை உண்பவனாக இருக்கும் அவன், வெகுமதி பெறும் ஆசையின் உந்துதலில்லாமல் செயல்பட வேண்டும். அவன தற்பெறுமை பேசுவதில் இருந்து விடுபட வேண்டும். அவன் அக்னிஹோத்திரத்தில் தேவர்களை வழிபட்டு விதிப்படி ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அனைத்து மனிதர்களுக்கு விருந்தோம்பல் கடமைகளைப் பின்பற்றும் அவன், சமைக்கப்பட்ட உணவை முன் சொன்ன அனைவருக்கும் கொடுத்த பிறகு எஞ்சியிருப்பதையே உண்ண வேண்டும். அவன் விதிப்படி மூன்று நெருப்புகளை வழிபட வேண்டும். அத்தகைய தூய ஒழுக்கம் கொண்ட வைசியன், அடுத்தப் பிறவியில் உயர்ந்த க்ஷத்திரியக் குடும்பத்தில் பிறப்பான்[2].(31-34) ஒரு வைசியன் க்ஷத்திரியனாகப் பிறந்த பிறகு, வழக்கமான தூய்மைச் சடங்குகளின் மூலம் புனித நூல் {பூணூல்} தரித்தவனாகி, நோன்புகளை நோற்று வந்தால் அவன் தனது அடுத்தப் பிறவியில் மதிப்புமிக்கப் பிராமணனாகிறான்.(35)
[2] "சுலோகங்கள் 30 முதல் 33 வரை குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு வைசியன் இறுதியாக ஒரு பிராமணனாகிறான். எனினும், இக்கடமைகளை நோற்பதன் உடனடி வெகுமியாக அவன் ஒரு பெரும் க்ஷத்திரியனாகிறான். அவன் பிராமணனாக என்ன செய்ய வேண்டும் என்பது அடுத்தச் சுலோகத்தில் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உண்மையில், ஒரு க்ஷத்திரியனாகப் பிறந்த பிறகு அவன் கொடைகளை அளித்து, அபரிமிதமான தக்ஷிணைகளுடன் பெரும் வேள்விகளில் தேவர்களைத் துதித்து, வேதங்கற்று, சொர்க்கத்தை அடையும் விருப்பத்துடன் மூன்று நெருப்புகளை வழிபட வேண்டும்.(36) அவன் துன்பத்தில் இருப்போரின் கவலைகளை அகற்றி அறவோரை வளர்த்து, தன் ஆட்சியின் கீழுள்ள குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். அவன் வாய்மை நிறைந்தவனாக, உண்மையிலுள்ள செயல்கள் அனைத்தையும் செய்து, இவ்வொழுக்கத்திலேயே இன்பத்தை அடைய வேண்டும்.(37) நல்லோரிடம் தண்டக்கோலைப் புறந்தள்ளி நியாயமான தண்டனைகளை அளிக்க வேண்டும். அவன் மனிதர்களை அறச்செயல்கள் செய்யுமாறு தூண்ட வேண்டும். (தன் மக்களை ஆளும் காரியத்தில்) கொள்கை கருத்துகளால் வழிநடத்தப்பட்டு, வயல்களில் விளைவதில் ஆறில் ஒரு பங்கை {வரியாக} எடுத்துக் கொள்ள வேண்டும்.(38) அவன் எப்போதும் பாலியல் இன்பத்தில் ஈடுபடாமல், பொருளியல் அறிந்தவனாக உற்சாகமாக, சுதந்திரமானவனாக வாழ வேண்டும். அற ஆன்மா கொண்ட அவன் தான் மணந்து கொண்ட மனைவியை அவளுடைய பருவகாலத்திலேயே அணுக வேண்டும்.(39) அவன் உண்ணா நோன்புகளை நோற்க வேண்டும், ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்து, வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்து, மனத்திலும், உடலிலும் தூய்மையுள்ளவனாக இருக்க வேண்டும். அவன் நெருப்பறையில் விரிக்கப்பட்ட குசப் புற்களில் {தர்ப்பைகளில்} உறங்க வேண்டும்.(40)
அவன் (அறம், பொருள் மற்றும் இன்பம் என்ற) முத்தொகையைத் தேடி எப்போதும் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். உணவை விரும்பும் சூத்திரர்களிடம் அவன் எப்போதும் தயாராக இருக்கிறது என்ற பதிலையே சொல்ல வேண்டும்.(41) அவன் லாப அல்லது இன்ப நோக்கத்தில் எதையும் ஒருபோதும் விரும்பக்கூடாது. அவன் பித்ருக்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர்களை வழிபட வேண்டும்.(42) அவன் தன் இல்லத்திலேயே துறவியின் வாழ்வை வாழ வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் விதிப்படி ஆகுதிகளை ஊற்றி காலையும், நடுப்பகலிலும், மாலையிலும் தன் அக்னிஹோத்திரத்தில் தேவர்களை முறையாகத் துதிக்க வேண்டும்.(43) அவன் {க்ஷத்திரியன்} பகைவனுக்கு எதிராகத் தன் முகத்தைத் திருப்பி, பசுக்கள் மற்றும் பிராமணர்களின் நன்மைக்காகப் போர்க்களத்தில் தன் உயிர்மூச்சை விட வேண்டும். அல்லது அவன் மந்திரங்களால் புனிதப்படுப்பட்ட மூன்று நெருப்புகளுக்குள் நுழைந்து தன் உடலைக் கைவிட வேண்டும். இந்த ஒழுக்க முறையை அவன் பின்பற்றினால் அடுத்தப் பிறவியில் அவன் ஒரு பிராமணனாவான்.(44) ஞானம் கொண்டவனும், அறிவியல் அறிந்தவனும், கழிவுகள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனும், வேதங்களை முழுமையாக அறிந்தவனும், அறம்சார்ந்த ஆன்மாவைக் கொண்டவனுமான ஒரு க்ஷத்திரியன் தன் செயல்களின் மூலமே பிராமணனாக ஆவான்.(45)
ஓ! தேவி, தாழ்ந்த வகையில் சூத்திரனாகப் பிறந்த ஒரு மனிதன் இந்தச் செயல்களின் துணையால் களங்கங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து, வேத அறிவையும் அடைந்து ஒரு பிராமணனாகலாம்.(46) தீய ஒழுக்கம் கொண்டவனாகும்போதும், உணவில் எந்த வேறுபாட்டையும் காணாதபோதும் ஒரு பிராமணன் தன் பிராமணத்தன்மை என்ற நிலையில் இருந்து வீழ்ந்து சூத்திரனாகிறான்.(47) ஓ! தேவி, தூய செயல்களால் தன் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டவனும், தன் புலன்கள் அனைத்தையும் அடக்கியவனும்மான சூத்திரனும், ஒரு பிராமணனைப் போன்ற மதிப்புடன் பணிவிடை செய்யப்படவும், தொண்டாற்றப்படவும் தகுந்தவனே ஆவான்.(48) இறையுணர்வுமிக்க இயல்பும், செயல்களும் ஒரு சூத்திரனிடம் தென்படும்போது, அவன் மூன்று மறுபிறப்பாள வகையினரை விடவும் மேன்மையாகக் கருதப்பட வேண்டும் என்பது என் கருத்தாகும்.(49) பிறப்போ, தூய்மைச் சடங்குகளோ, கல்வியோ, சந்ததியோ மறுபிறப்பாளர் என்ற நிலையை அளிக்கக்கூடிய தளங்களாக ஒருபோதும் கருத முடியாதவை ஆகும். உண்மையில் ஒழுக்கம் மட்டுமே அதற்கான ஒரே தளமாகும்.(50)
இவ்வுலகில் உள்ள பிராமணர்கள் அனைவரும், ஒழுக்கத்தின் விளைவாலேயே பிராமணர்களாக இருக்கிறார்கள். ஒரு சூத்திரன் நல்லொழுக்கத்தைத் தன்னில் நிறுவிக்கொண்டால் அவன் பிராமணத்தன்மையைக் கொண்டவனாகக் கருதப்படுவான்.(51) ஓ! மங்கல மங்கையே, பிரம்ம நிலை என்பது எங்கும் சமமாகவே இருக்கிறது. இதுவே என் கருத்தாகும். உண்மையில், குணங்களற்றதும், ஒரு களங்கமும் இல்லாததுமான பிரம்ம நிலையைக் கொண்டவன் எவனும் பிராமணனே ஆவான்.(52) வரமளிக்கும் பிரம்மன், உயிரினங்கள் அனைத்தையும் படைத்தபோது, மனிதர்களை நான்கு வகையாகப் பிறவி சார்ந்து பிரித்தது அவர்கள் வகைப்படுத்தும் காரியத்திற்காக மட்டுமே ஆகும்.(53) ஒரு பிராமணன் இவ்வுலகில் பெருங்களமாவான். அவன் இடத்திற்கு இடம் நகர்ந்து செல்வதால் அவன் பாதங்களைக் கொண்ட ஒரு களமாக இருக்கிறான். ஓ! அழகிய மங்கையே, அந்தக் களத்தில் விதைகளை நடும் ஒருவன், மறுமையில் பயிரை அறுவடை செய்வான்.(54) தனக்கான நன்மையை அடைய விரும்பும் பிராமணன், தன் வீட்டில் உள்ள அனைவரின் தேவைகளும் நிறைவடைந்த பின்னர் எஞ்சும் உணவையே எப்போதும் உண்டு வாழ வேண்டும். அவன் எப்போதும் அறப்பாதையைப் பின்பற்றுபவனாக இருக்க வேண்டும். உண்மையில் அவன் பிரம்மத்தின் பாதையிலேயே பயணிக்க வேண்டும்.(55)
ஸம்ஹிதைகளைக் கற்பதில் ஈடுபட்டு, இல்லறவாசியின் கடமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தியபடி அவன் வீட்டில் இருக்க வேண்டும். அவன் வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்தாலும், ஒருபோதும் அத்தகைய கல்வியைக் கொண்ட வாழ்வாதாரங்களைப் பெறக் கூடாது.(56) அறப்பாதையைப் பின்பற்றி, தன் புனித நெருப்பை வழிபட்டு, வேத கல்வியில் ஈடுபட்டு, எப்போதும் இவ்வாறு தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளும் பிராமணன், பிரம்மமாகவே கருதப்படுகிறான்.(57) ஓ! இனிய புன்னகை கொண்டவளே, பிராமண நிலையை அடைந்த பிறகு, தாழ்ந்த வகை மனிதர்களின் தொடர்பால் ஏற்படும் களங்கங்களைத் தவிர்ப்பதன் மூலமும், கொடைகளைப் பெறுவதைத் தவிர்ப்பதன் மூலமும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வேறு செயல்களைச் செய்வதன் மூலமும் எப்போதும் அதை {தான் அடைந்த பிராமண நிலையைக்} கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.(58) ஒரு சூத்திரன் பிராமணனாகும் முறையையும், ஒரு பிராமணன் தன் தூய நிலையில் இருந்து வீழ்ந்து சூத்திரனாகும் முறையையும்கொண்ட புதிரை உனக்குச் சொன்னேன்" என்றான் {சிவன்}.(59)
அநுசாஸனபர்வம் பகுதி – 143ல் உள்ள சுலோகங்கள் : 59
ஆங்கிலத்தில் | In English |