Nara and Narayana! | Anusasana-Parva-Section-148 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 148)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் மகிமையையும், அர்ஜுனனின் திறமையையும் சொல்லி துரியோதனனுக்காக வருந்திய பீஷ்மர்...
நாரதர், "மஹாதேவனின் பேச்சு நிறைவடைந்ததும் ஆகாயத்தில் பெருமுழக்கங்கள் கேட்டன. மின்னல் கீற்றுகளுடன் கூடிய இடிகள் பெரு முழக்கம் செய்தன. ஆகாயம் அடர்த்தியான கருமேகங்களால் மூடப்பட்டது.(1) மேகங்களின் தேவன் மழைக்காலங்களில் செய்வதைப் போலவே தூய நீரைப் பொழிந்தான். அடர்த்தியான இருள் கவ்வியது. திசைப்புள்ளிகளை அதற்கு மேலும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(2) பிறகு அந்த இனிமை நிறைந்த, புனிதமான தெய்வீக மலையின் நித்திச் சாரலில் கூடியிருந்த முனிவர்களால் மஹாதேவனுடன் இருந்த அவனது துணைவர்களான பூத கணக் கூட்டங்களைப் பார்க்க முடியவில்லை.(2) எனினும், விரைவில் ஆகாயம் தெளிவடைந்தது. முனிவர்களில் சிலர், புனித நீர்நிலைகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர். வேறு சிலர் தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்.(4)
உண்மையில், காண்பதற்கரிய அந்த அற்புதக் காட்சியைக் கண்ட அவர்கள் வியப்பில் நிறைந்தனர். சங்கரனுக்கும், உமைக்கும் இடையில் நடந்த உரையாடலும் அதே உணர்வுடனே கேட்கப்பட்டது.(5) அனைத்திலும் முதன்மையானவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான சங்கரன் அந்த மலையில் வைத்து எங்களிடம் சொன்னது உன்னைத் தான். உண்மையில், நீ நித்திய பிரம்மமாவாய் {பரப்பிரம்மமாவாய்}.(6) சில காலத்திற்கு முன்பு மஹாதேவன் தன் சக்தியால் இமயத்தை எரித்தான். நீயும் அதே போன்ற அற்புதக் காட்சியை எங்களுக்குக் காட்டினாய். உண்மையில், நாங்கள் இன்று கண்டதை வைத்து அந்தப் பழங்கால நிகழ்வு நினைவுகூர்ந்தோம்.(7) ஓ! வலிய கரங்களைக் கொண்ட ஜனார்த்தனா, ஓ! பலமிக்கவனே, இவ்வாறே கபர்தின், அல்லது கிரீசன் என்றழைக்கப்படும் அந்தத் தேவர்களுக்குத் தேவனின் மகிமையை நான் உனக்கு உரைத்தேன்[1]" என்றார் {நாரதர்}.(8)
[1] கும்பகோணம் பதிப்பில், "ஜனார்த்தனரே! ஜடாதாரியான ஈசுவரரால் தேவருக்கும் தேவரான உமது மகிமை இவ்வாறு சொல்லப்பட்டுது என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இப்பகுதி முழுவதும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்தத் தபோவனத்தில் வசித்தவர்களால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், தேவகியை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவனுமான கிருஷ்ணன், அந்த முனிவர்கள் அனைவருக்கும் உரிய கௌரவத்தைச் செலுத்தினான்.(9) மகிழ்ச்சியில் நிறைந்த அந்த முனிவர்கள் மீண்டும் கிருஷ்ணனிடம், "ஓ! மதுசூதனா, அடிக்கடி எங்களுக்குக் காட்சியளிப்பாயாக.(10) ஓ! பலமிக்கவனே, உன்னைக் காண்பதைவிட மகிழ்ச்சியான சொர்க்கம் எங்களுக்கு வேறேதும் இல்லை. சிறப்புமிக்கப் பவனால் (உன்னைக் குறித்துச்) சொல்லப்பட்டது அனைத்தும் உண்மையே.(11) ஓ! பகைவர்களை நொறுக்குபவனே, அந்தப் புதிர் குறித்த அனைத்தையும் நாங்கள் உனக்குச் சொன்னோம். நீயே அனைத்து உண்மைகளையும் அறிந்தவனாவாய். எனினும், எங்களால் கேட்கப்பட்டு, பதிலுக்கு உன்னால் நாங்கள் கேட்கப்பட்ட காரணத்தால் (பவனுக்கும் உமைக்கும் இடையில் நடந்த உரையாடல் குறித்த) அனைத்தையும் உங்களுக்குச் சொன்னோம். மூவுலகங்களிலும் நீ அறியாதது ஏதுமில்லை.(12,13)
அனைத்துப்பொருட்களின் பிறப்பு மற்றும் தோற்றம் குறித்த அனைத்தையும், உண்மையில் (வேறு பொருட்களை உண்டாக்குவதற்குக்) காரணமாக இயங்கும் அனைத்தையும் முழுமையாக நீ அறிவாய். எங்கள் மென்மையான குணத்தின் விளைவால், எந்தப் புதிரையும் தாங்கிக் கொள்ள இயலாதவர்களாக இருக்கிறோம் (எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்தமால் எங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள இயலாதவர்களாக இருக்கிறோம்)[2].(14) உண்மையில், ஓ! பலமிக்கவனே, எங்கள் இதய மென்மையிலிருந்து தொடர்பில்லாதவற்றில் ஈடுபடுகிறோம். நீ அறியாத அற்புதப் பொருள் ஏதும் கிடையாது.(15) பூமியில் உள்ள யாவையும், சொர்க்கத்தில் உள்ள யாவும் நீ அறிந்தவையே. ஓ! கிருஷ்ணா, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்புகிறோம் எங்களுக்கு விடைகொடுப்பாயாக. புத்தியிலும், செழிப்பிலும் நீ பெருகுவாயாக. ஓ! ஐயா, உன்னைப் போன்றவனும், உன்னைவிடப் புகழ்மிக்கவனுமான மகன் ஒருவனை நீ விரைவில் பெறுவாய்.(16) அவன் சக்தியும், காந்தியும் கொண்டவனாக இருப்பான். பெரும் சாதனைகளைச் செய்யும் அவன், உன்னைப் போன்றே பெரும்பலம் கொண்டவனாக இருப்பான்" என்றனர் {முனிவர்கள்}".(17)
[2] "ரகசியங்கள் அனைத்தையும் அறிந்தவன் நீ, இருப்பினும் ஞானங்கள் அனைத்தையும் உனக்குள்ளேயே தாங்கிக் கொள்ள இயன்றவனாக இருக்கிறாய். எனினும், மென்மையான மனம் கொண்ட நாங்களோ, எந்த ரகசியத்தின் ஞானத்தையும் தாங்கிக் கொள்ள இயலாதவர்களாக இருக்கிறோம். மஹாதேவனிடம் இருந்து அந்த ஞானத்தைப் பெற்றதும், அதை வெளியிடும் விருப்பத்தை உணர்ந்தோம். உண்மையில், உன் வேண்டுதலுக்கு இணங்க அதைச் சொல்லியும் விட்டோம். அதுவும் யாருக்கு வெளியிட்டோம்? காணத்தக்க {அனைத்தையும் அறிந்தவனுக்குச் சொல்லப்போகிறோம் என்ற அறிவில்லாதவர்களான} எங்கள் செருக்கைக் கண்டு ரகசியமாகச் சிரிக்கும் ஒருவனிடம் வெளியிட்டிருக்கிறோம் என்று முனிவர்கள் சொல்வதே இங்குப் பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அதன்பிறகு, தேவர்களுக்குத் தேவனும், அனைத்திலும் முதன்மையானவனுமான அந்த யது குலக் கொழுந்துக்கு அந்தப் பெரும் முனிவர்கள் தலைவணங்கினர். பிறகு அவனை வலம் வந்த அவர்கள், அவனது அனுமதியைப் பெற்றுக் கொண்டு சென்றனர்.(18) செழிப்பையும், சுடர்மிக்கப் பிரகாசத்தையும் கொண்ட நாராயணன், தன் நோன்பை முறையாக நோற்று துவாரகைக்குத் திரும்பினான்.(19) கருவுற்ற அவனுடைய மனைவி ருக்மிணிக்கு, பத்தாம் மாதம் முடிந்ததும், பெரும் வீரத்தையும், அற்பத சாதனைகளுக்காக அனைவரும் தரும் மதிப்பையும் கொண்ட ஒரு மகன் பிறந்தான்.(20) அவன், ஒவ்வொரு உயிரினத்திலும் இருப்பதும், இருப்பிலுள்ள ஒவ்வொரு நிலையையும் ஊடுருவவல்லதுமான காமத்துடன் (ஆசையுடன் / காமனுடன் / மன்மதனுடன்) அடையாளம் காணப்படுபவனாக இருந்தான். உண்மையில் அவன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதயங்களில் உலவிக் கொண்டிருக்கிறான்.(21)
இந்தக் கிருஷ்ணனே அனைவரிலும் முதன்மையானவன். மேகவண்ணம் கொண்ட இவனே நான்கு கரங்களைக் கொண்ட வாசுதேவனாவான். அன்பின் மூலம் அவன் பாண்டவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டான். பாண்டவர்களான நீங்களும் அவ்வாறே அவனுடன் இணைந்தீர்கள்.(22) சாதனைகள், செழிப்பு, புத்தி, சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பாதை ஆகிய அனைத்தும், மூன்று அடிகளை வைத்த சிறப்புமிக்க விஷ்ணுவான இவன் இருக்கும் இடங்களில் இருக்கும்.(23) இந்திரனைத் தலைமையில் கொண்ட முப்பத்துமூன்று தேவர்கள் இவனே. இதில் ஐயமேதும் இல்லை. இவன் ஒரு புராதன தேவனாவான். இவன் தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான். இவன் அனைத்து உயிரினங்களுக்கும் புகலிடமாவான்.(24) இவன் தொடக்கமும், அழிவும் இல்லாதவனாவான். இவன் வெளிப்படாதவனாவான் {அறிவுக்கு எட்டாதவன் ஆவான்}. இவனே உயர் ஆன்ம மதுசூதனனாவான். வலிமையும், சக்தியும் கொண்ட இவன், தேவர்களின் காரியங்களை நிறைவேற்றுவதற்காக (மனிதர்களின் மத்தியில்) பிறந்திருக்கிறான்.(25)
உண்மையில் இந்த மாதவன், செல்வம் தொடர்புடைய மிகக் கடினமான உண்மைகளை விளக்குபவனும், அஃதை அடைபவனுமாவான். ஓ!பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரனே}, நீ உன் பகைவர்களிடம் அடைந்திருக்கும் வெற்றி, ஒப்பற்றவையாக இருக்கும் உன் சாதனைகள்,(26) மொத்த பூமியிலும் நீ அடைந்திருக்கும் ஆட்சிப் பகுதிகள் ஆகிய அனைத்தும் நாராயணன் உன் தரப்பை அடைந்ததாலேயே கிடைத்தன.(27) எண்ணிப்பார்க்கமுடியாத நாராயணனையே உன் பாதுகாவலனாகவும், புகலிடமாகவும் அடைந்தாயே, போரெனும் சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளாகப் பெரும் மன்னர்கள் கூட்டத்தை ஊற்றும் அதர்யுவாக உன்னால் இயன்றது. இந்தக் கிருஷ்ணனே, யுகத்தின் முடிவில் தோற்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்புக்கு ஒப்பான பெரும் வேள்விக் கரண்டியானான்.(28) கோபத்தால் தூண்டப்பட்டு ஹரியுடனும், காண்டீவதாரியுடனும் போர் செய்த துரியோதனன், அவனுடைய மகன்கள், அவனது சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர் ஆகியோர் பரிதாபத்திற்குரியவர்களே.(29) பேருடல் படைத்தவர்களும், பெரும்பலம் கொண்டவர்களுமான திதியின் மகன்கள் பலரும், தானவர்களில் முதன்மையானோர் பலரும், காட்டு நெருப்பில் பூச்சிகளைப் போலக் கிருஷ்ணனின் சக்கர {சக்ராயுத} நெருப்பில் அழிந்து போனார்கள்.(30) ஓ! மனிதர்களில் புலியே, பலமும், வலிமையுமற்ற மனிதர்கள் கிருஷ்ணனை எதிர்த்துப் போரிட எவ்வளவு இயதாவர்களாக இருந்திருக்க வேண்டும்.(31)
ஜெயனை {அர்ஜுனனைப்} பொறுத்தவரையில் அவன் சக்தியில் அனைத்தையும் அழிக்கும் யுக நெருப்புக்கு ஒப்பான விலிமைமிக்க யோகியாவான். இரு கரத்தாலும் வில்லை இழுக்க வல்ல அவன் படையின் முன்னணியிலேயே எப்போதும் இருந்தான். ஓ! மன்னா, அவனது சக்தியாலேயே, சுயோதனனின் துருப்பினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.(32) கொடி மரச் சின்னத்தில் காளைமாட்டைக் கொண்ட மஹாதேவன் {விருஷபத்வஜன்} இமயச் சாரலில் உள்ள தவசிகளுக்குச் சொன்னதை நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. அவன் சொன்னதே ஒரு புராணமாகும்.(33) அர்ஜுனனில் உள்ள முன்னேற்றம், பெருமை, சக்தி, பலம், ஆற்றல், வலிமை, பணிவு, குலம் ஆகியன கிருஷ்ணனிடம் வசிக்கும் அக்குணங்களில் மூன்றில் ஒரு பகுதியின் அளவை எட்டும்.(34) கிருஷ்ணனின் இக்குணங்களைக் கடக்க யாரால் முடியும்? அது சாத்தியமா இல்லையா என்பதைக் கேட்பாயாக (கேட்ட பிறகு தீர்மானிப்பாயாக). எங்கே கிருஷ்ணன் இருப்பானோ அங்கே ஒப்பற்ற சிறப்புகள் {பெருமைகள்} இருக்கும்.(35)
எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அற்ப புத்தி கொண்ட மனிதர்களாக இருந்தோம். பிறரின் விருப்பங்களைச் சார்ந்திருந்த நாங்கள் பெருங்கெடுபேற்றைப் பெற்றிருந்தோம். அறிந்தே நாங்கள் நித்தியமான மரணப் பாதையில் நடந்தோம்.(36) எனினும் நீ நேர்மையான ஒழுக்கத்தில் அர்ப்பணிப்புடன் இருந்தாய். உன் நாட்டை ஏற்பதற்கு எதிராக உறுமொழியேற்ற நீ உன் உறுதிமொழியைக் காக்க விரும்பி அதை எடுக்காமலேயே இருந்தாய்[3].(37) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ போர்க்களத்தில் உன் உற்றார் உறவினரையும், நண்பர்களையும் அதிகமாகக் கொன்றுவிட்டாய் என நினைக்கிறாய் (அவ்வாறு நீ நம்புகிறாய்). எனினும், ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, உறுதிமொழியை மீறுவது தகாதது என்பதை நீ நினைவுகூர வேண்டும்[4].(38) போர்க்களத்தில் வீழ்ந்தவர் அனைவரும் காலத்தாலேயே உண்மையில் கொல்லப்பட்டனர். காலமே உண்மையில் அனைத்திலும் பலமிக்கதாகும்.(39) காலத்தின் வலிமையை நீ முழுமையாக அறிவாய். காலத்தினால் பீடிக்கப்பட்டிருப்பதால் வருந்துவது உனக்குத் தகாது. ஹரி என்று வேறு பெயரிலும் அழைக்கப்படும் இந்தக் கிருஷ்ணனே, குருதிச் சிவப்பான கண்களுடனும், கையில் தண்டத்துடனும் கூடிய காலமாக இருக்கிறான் என்பதை அறிவாயாக.(40)
[3] கும்பகோணம் பதிப்பில், "முதலில் பிரதிஜ்ஞை செய்து அந்தப் பிரதிஜ்ஞையைக் காப்பதிலேயே ஊக்கமுள்ளவனாயிருப்பதனால் ராஜ்யத்தையும் விரும்பாமலிருக்கிறாய்" என்றிருக்கிறது.[4] "இங்கே சொல்லப்படும் உறுதிமொழி, பீமனால் ஏற்கப்பட்ட உறுதிமொழியாகவும், பாண்டவர்களைக் கொல்வதாகப் பிறர் ஏற்ற உறுதிமொழிகளாகவும் இருக்கலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! குந்தியின் மகனே, இந்தக் காரணங்களினால் நீ உன் (உன்னால் கொல்லப்பட்ட) உறவினர்களுக்காக வருந்துதல் தகாது. ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நீ எப்போதும் துன்பத்தில் இருந்து விடுபட்டிருப்பாயாக.(41) நீ மாதவனின் மகிமையையும், பெருமையையும் என்னால் உரைக்கப்பட்டபடியே கேட்டாய். ஒரு நல்ல மனிதன் அவனைப் புரிந்து கொள்ள இயல இது போதுமானதாகும்.(42) வியாசர் மற்றும் பெரும் நுண்ணறிவைக் கொண்ட நாரதரின் சொற்களையும் கேட்டு கிருஷ்ணனின் துதிக்கத்தக்க தன்மையை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். நானும் என் ஞானத்திலிருந்து சிலவற்றை அந்த உரையில் சேர்த்திருக்கிறேன்.(43) உண்மையில் நான் (இமயச் சாரலில்) முனிவர்களின் கூட்டத்திடம் மஹாதேவன் உரைத்த கிருஷ்ணனின் அளவு கடந்த மகிமையையும் உனக்குச் சொல்லியிருக்கிறேன். ஓ! பாரதா, மஹேஸ்வரனுக்கும், இமயவான் மகளுக்கும் இடையில் நடந்த உரையாடலும் என்னால் உனக்குச் சொல்லப்பட்டது.(44)
ஒரு முதன்மையான மனிதனிடம் இருந்து வெளிவரும் அந்த உரையாடலை மனத்தில் தாங்கிக் கொள்பவனும், அதைக் கேட்பவனும், (வேறு மக்கள் கேட்பதற்கு) அதை மீண்டும் உரைப்பவனும், உயர்ந்த நன்மைகளை வெல்வது உறுதி.(45) அம்மனிதன் தன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவடைவதைக் காண்பான். இந்த உலகத்தில் இருந்து செல்லும் அவன் சொர்க்கத்திற்கு உயர்வான். இதில் ஐயமேதும் இல்லை.(46) தனக்கான நன்மையை அடைய விரும்பும் மனிதன் தன்னை ஜனார்த்தனனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.(47) ஓ! குருக்களின் மன்னா, கடமை மற்றும் அறம் குறித்து மஹேஸ்வரனால் அறிவிக்கப்பட்ட நிகழ்வுகளை நீ எப்போதும் மனத்தில் கொள்வாயாக.(48) இந்தப் பணிப்பாணைகளின் படி நீ உன்னை ஒழுங்கமைத்துக் கொண்டால், நீ முறையாகத் தண்டக் கோலைத் தாங்கினால், முறையாக உன் குடிமக்களைப் பாதுகாத்தால் நிச்சயம் நீ சொர்க்கத்தை அடைவாய்.(49) ஓ! மன்னா, அறத்தின் அணைகளின் படி எப்போதும் குடிமக்களைப் பாதுகாப்பதே உனக்குத் தகும். மன்னன் தாங்கும் தண்டனைக்குரிய பருத்த கோல் {தண்டக்கோல்} அறம் அல்லது பலனின் உடல்வடிவமாகச் சொல்லப்படுகிறது[5].(50)
[5] "ஒரு மன்னன் முறையாகத் தண்டக்கோலைத் தரிப்பதனால், அதாவது, தகுந்தோருக்குத் தண்டை அளிப்பதனால் பெரும் பலனை ஈட்டுகிறான். தண்டைகளைச் சரியாகக் கொடுத்தலே குடிமக்களைக் கடமைகளின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. எனவே, தண்டக்கோலே மன்னனின் அறம் அல்லது பலனின் உடல்வடிவமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மஹேசுவரர் முகத்திலிருந்து வந்தவையும், நம்மாலுரைக்கப்படவையுமாகிய தர்மச் சிறப்புகளை நீ இரவும் பகலும் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியே நடந்து கொண்டு ஸரியாகத் தண்டத்தைச் செலுத்திப் பிரஜைகளை நன்றாகக் காப்பதனால் உனக்கு ஸ்வர்க்கலோகமுண்டாகும். ராஜனே, எப்போதும் தர்மத்தினாலேயே ப்ரஜைகளைக் காப்பாற்ற வேண்டும். தண்டம் ஸரியாக வியாபித்திருப்பதுதான் ஸரியான தர்மமென்று சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.
சங்கரன் மற்றும் உமைக்கிடையிலான அறம் நிறைந்ததும், அறம்சார்ந்த கூட்டத்திற்கு முன்பு நான் உரைத்ததுமான இந்த உரையாடலைக் கேட்கும் ஒருவன், கொடியில் காளைமாட்டைத் தன் சின்னமாகக் கொண்ட தேவனை மதிப்புடன் வணங்க வேண்டும்.(51) அந்த உரையாடலைக் கேட்க விரும்பும் ஒருவனும் மதிப்புடன் மஹாதேவனை வணங்க வேண்டும். உண்மையில், தனக்கான நன்மையை அடைய விரும்பும் மனிதன், தூய இதயத்துடன் மஹாதேவனைத் துதிக்க வேண்டும்.(52) இதுவே களங்கமற்றவரும், உயர் ஆன்மா கொண்டவருமான நாரதரின் ஆணையாகும். அவரும் பெருந்தேவனை வழிபடுவது குறித்து ஆணையிட்டிருக்கிறார். ஓ! பாண்டுவின் மகனே, நாரதரின் ஆணைக்குக் கீழ்ப்படிவாயாக.(53) ஓ!பலமிக்க மன்னா, ஓ! குந்தியின் மகனே, புனிதமான இமயச் சாரலில் வாசுதேவனுக்கும், ஸ்தாணுவுக்கும் இடையில் நடந்த அற்புதம் நிறைந்த நிகழ்வுகள் இவையே ஆகும். அந்த நிகழ்வுகள் அந்த உயர் ஆன்ம தேவர்களின் இயல்பிலிருந்தே உண்டாகின.(54) காண்டீவதாரியுடன் கூடிய வாசுதேவன் பதரி ஆசிரமத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் நித்திய தவங்களைப் பயின்று வந்தான்[6].(55)
[6] "வாசுதேவனே நாராயணன், அர்ஜுனன் நரன். நரனும், நாராயணனும் இமயச் சாரலில் உள்ள பதரியில் பல்லாயிரம் ஆண்டுகள் தவம்புரிந்தனர். அதன் பிறகு வியாசர் பதரியைத் தன் ஆசிரமமாக ஆக்கிக் கொண்டார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உண்மையில், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட வாசுதேவன் மற்றும் தனஞ்செயன் ஆகிய இருவரும் மொத்தமாக மூன்று யுகங்கள் கடுந்தவமிருந்தனர். ஓ! மன்னா, நான் இதை நாரதர் மற்றும் வியாசரிடம் இருந்து அறிந்து கொண்டேன்.(56) தாமரைக் கண்ணனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான வாசுதேவன், (மனித வடிவில்) பிள்ளையாக இருக்கும்போதே தன் உறவினர்களின் விடுதலைக்காகக் கம்சனைக் கொன்ற பெருஞ்சாதனையைச் செய்திருக்கிறான்.(57) ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, புராதனமானவனும், நித்தியமானவனுமான இவனது சாதனைகளைப் பட்டியலிட நான் துணியேன்.(58) ஓ! மகனே, அனைவரிலும் முதன்மையான வாசுதேவனை உற்ற நண்பனாகக் கொண்டிருக்கும் நீ, நிச்சயம் உயர்ந்த பெரிய நன்மைகளை அறுவடை செய்வாய்.(59) தீயவனான துரியோதனன் சென்றிருக்கும் அடுத்த உலகத்தைப் பொறுத்தவரையிலும் கூட (அவன் அடைந்த மறுமையிலும்) அவனுக்காக நான் வருத்தமே அடைகிறேன். அவனுக்காகவே இந்த மொத்த பூமியும், குதிரைகளும், யானைகளுமற்றதானது.(60) உண்மையில், துரியோதனன், கர்ணன், சகுனி, நான்காவதாகத் துச்சாசனன் ஆகியோரின் குற்றத்தாலேயே குருக்கள் அழிந்தனர்" {என்றார் பீஷ்மர்}".(61)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "மனிதர்களில் முதன்மையானவரான கங்கையின் மைந்தர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, (பீஷ்மரின் உரையாடல்களைக் கேட்பதற்காகக் கூடியிருந்த) உயர் ஆன்ம மனிதர்களின் மத்தியில் குரு மன்னன் (யுதிஷ்டிரன்) முற்றான அமைதியுடன் இருந்தான்.(62) திருதராஷ்டிரனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டிருந்த மன்னர்கள் அனைவரும், குரு பாட்டனின் {பீஷ்மரின்} சொற்களைக் கேட்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் தங்கள் மனங்களில் கிருஷ்ணனை வழிபட்டு, மதிப்புடன் கரங்களைக் கூப்பியபடி அவனை நோக்கித் திரும்பினர்.(63) நாரதரைத் தங்கள் தலைமையில் கொண்டிருந்த முனிவர்களும் பீஷ்மரின் சொற்களை ஏற்று, மெச்சி, மகிழ்ச்சியுடன் அவற்றை அங்கீகரித்தனர்.(64) பாண்டுவின் மகனும் (யுதிஷ்டிரனும்), அவனுடைய தம்பிகள் அனைவரும் இன்பமாகக் கேட்ட பீஷ்மரின் அற்புத உரையாடல்கள் இவையே.(65) சிறிது நேரம் கழித்து, தாம் செய்த வேள்விகளில் பிராமணர்களுக்கு அபரிமிதமான செல்வக் கொடைகளை அளித்த கங்கையின் மைந்தன் ஓய்வெடுத்து, புத்துணர்ச்சி அடைந்திருப்பதை மன்னன் யுதிஷ்டிரன் கண்டபோது, அந்தப் புத்திசாலி மன்னன் மீண்டும் அவரிடம் பின்வருவனவற்றைக் கேட்டான்".(66)
அநுசாஸனபர்வம் பகுதி – 148ல் உள்ள சுலோகங்கள் : 66
ஆங்கிலத்தில் | In English |