The glory of Vasudeva! | Anusasana-Parva-Section-147 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 147)
பதிவின் சுருக்கம் : வாசுதேவனின் மகிமையையும், பலராமனின் பெருமையையும் முனிவர்களுக்குச் சொன்ன சிவன்...
முனிவர்கள் {மஹேஸ்வரனிடம்}, "ஓ! பிநாகம் தரிப்பவனே, ஓ! பகனின் கண்களைக் கிழித்தவனே, ஓ! அண்டமனைத்தாலும் வழிபடப்படுபவனே, நாங்கள் வாசுதேவனின் மகிமையைக் கேட்க விரும்புகிறோம்" என்றனர்.(1)
மஹேஸ்வரன், "ஹரியானவன் பெரும்பாட்டனுக்கே {பிரம்மனுக்கே} மேற்பட்டவனாவான். அவனே நித்திய புருஷனாவான். கிருஷ்ணன் என்றும் அழைக்கப்படும் அவன் தங்கத்தின் காந்தியைக் கொண்டவனாகவும், இரண்டாவது சூரியனைப் போலப் பிரகாசத்தில் ஒளிர்பவனாகவும் இருக்கிறான்.(2) பத்துக் கரங்களைக் கொண்டவனான அவன் பெருஞ்சக்தி கொண்டவனாகவும், தேவர்களின் பகைவர்களைக் கொல்பவனாகவும் இருக்கிறான். அவன் தன் மார்பில் ஒரு சுழியை {ஸ்ரீவத்சம் என்ற மச்சத்தைக்} கொண்டிருக்கிறான், தன் தலையில் சுருள் முடியைக் கொண்டிருக்கிறான். அவன் தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுகிறான்.(3) பிரம்மன் அவனுடைய வயிற்றுப் பகுதியில் இருந்து எழுந்தான். நான் அவனுடைய தலையில் இருந்து உண்டானேன். ஆகாயத்தில் உள்ள ஒளிக்கோள்கள் அனைத்தும் அவனுடைய தலைமயிரிலிருந்து உண்டானவை. அவனது உடல் மயிரிலிருந்து தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் உண்டாகினர்.(4) அவனுடைய உடலிலிருந்தே முனிவர்களும், நித்திய உலகங்கள் அனைத்தும் உண்டாகின. அவனே பெரும்பாட்டனின் முழுவசிப்பிடமாகவும், தேவர்களின் வசிப்பிடமாகவும் இருக்கிறான்.(5)
மொத்த பூமியின் படைப்பாளன் அவனே, மேலும் மூன்று உலகங்களின் தலைவனும் அவனே. அசையும், அசையாத உயிரினங்கள் அனைத்தையும் அழிப்பவன் அவனே.(6) உண்மையில் தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் அவனே. அவர்களின் ஆசானும் அவனே. பகைவர்கள் அனைவரையும் தண்டிப்பவன் அவனே. அனைத்தையும் அறிந்தவன் அவனே. அனைத்திலும் இருப்பவன் அவனே. எங்கும் செல்ல வல்லவன் அவனே. அண்டத்தின் எல்லையாக (அனைத்திலும் நீக்கமற) நிறைந்திருப்பவன் அவனே.(7) பரமாத்மா அவனே. புலன்கள் அனைத்தையும் தூண்டுபவன் அவனே. அண்டத்தை மறைப்பவன் அவனே. பரமத்தலைவன் அவனே. மூவுலகிலும் தனக்கு மேன்மையானவன் எவனும் இல்லாதவன் அவனே.(8) நித்தியமானவன் அவனே. கோவிந்தன் என்றும் அழைக்கப்படும் மதுசூதனன் அவனே. கௌரவங்களை அளிப்பவனான அவனே, மனித வடிவில் பிறந்து தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரையும் போரில் கொல்லச் செய்கிறான். அவனால் கைவிடப்பட்ட தேவர்கள், பூமியில் உள்ள தங்கள் காரியங்களை நிறைவேற்ற இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவனைத் தலைவனாக அடையாமல் அவர்களால் எதையும் செய்ய முடியாது. உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், தேவர்கள் அனைவராலும் துதிக்கப்படுபவனும் அவனே.(10,11)
தேவர்களின் காரியங்களை நிறைவேற்றுவதில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், பிரம்மத்தோடு அடையளங்காணப் படுபவனும், மறுபிறப்பாளர்களான முனிவர்களின் புகலிடமாக எப்போதும் இருப்பவனுமான தேவர்களுடைய இந்த ஆசானின் வயிற்றுக்குள்ளே (பெரும்பாட்டன்) பிரம்மன் வசிக்கிறான். உண்மையில் பிரம்மன், ஹரியின் உடலான தன் வசிப்பிடத்திற்குள் மகிழ்ச்சியாக வசிக்கிறான். சர்வன் {சர்வேஸ்வரன்} என்றழைக்கப்படும் நானும் என்னுடைய வசிப்பிடமாக இருக்கும் அதனுள் மகிழ்ச்சியாக வசிக்கிறேன்.(12,13) அவனுடைய உடலில் தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வசிக்கின்றனர். பெரும் பிரகாசம் கொண்ட அவனது கண்கள் தாமரை இதழ்களுக்கு ஒப்பானவையாகும். ஸ்ரீதேவி அவனுக்குள்ளேயே வசிக்கிறாள். அவனும் அவளுடனேயே எப்போதும வசிக்கிறான்.(14) வாளுடன் சேர்த்துச் சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லும் (சுதர்சனம் என்றழைக்கப்படும்) சக்கரமும் அவனது ஆயுதங்களாகும். அவன் பாம்புகள் அனைத்தின் தலைவனை (கருடனைத்) தன் கொடிமரத்தில் அமரச் செய்திருக்கிறான். அவன் சிறந்த ஒழுக்கத்தால், (உடல் மற்றும் மனத்) தூய்மையால், தற்கட்டுப்பாட்டால், ஆற்றலால், சக்தியால், அழகிய வடிவத்தால், நெடும் உயரத்தால், நல்ல அளவுகளில் உள்ள அங்கங்களால், வடிவச்சிறப்பால், வலிமையால் தனித்துவமாக {புகழ்பெற்றவனாக} இருக்கிறான். அற்புத வடிவம் மற்றும் தயாரிப்பாலான தெய்வீக ஆயுதங்களுடன் கூடியவனாக அவன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(15-17)
யோகத்தைத் தன் மாயையாகக் கொண்டவன் அவனே. ஆயிரம் கண்களைக் கொண்டவன் அவனே. அனைத்துக் களங்கங்கள் அல்லது குற்றங்களில் இருந்து விடுபட்டவன் அவனே. உயர்ந்த மனம் படைத்தவன் அவனே. வீரமிக்கவன் அவனே. தன் நண்பர்கள் அனைவரின் மத்தியில் செருக்கிற்குத் தகுந்த பொருளாக இருப்பவன் அவனே. உற்றார் உறவினர் மற்றும் தன்னிடம் அன்புடை அனைவரிடமும் அன்பாயிருப்பவன் அவனே.(18) மன்னிக்கும் தன்மையுடன் கூடியவன் அவனே. செருக்கு மற்றும் தற்பெருமையில் இருந்து விடுபட்டவன் அவனே. பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அவர்களுக்குத் தலைவனும் அவனே. அச்சத்தால் பீடிக்கப்பட்ட மனிதர்கள் அனைவரின் அச்சங்களை விலக்குபவன் அவனே. தன் நண்பர்கள் அனைவரின் இன்பத்தைப் பெருக்குபவன் அவனே.(19) அனைத்து உயிரினங்களின் புகலிடம் அவனே. துன்பமடைந்தோரைப் பாதுகாப்பதிலும், பேணி வளர்ப்பதிலும் எப்போதும் ஈடுபடுபவன் அவனே. சாத்திரங்கள் அனைத்தையும், அனைத்து வகைச் செல்வத்தையும் கொண்டிருப்பதன் மூலம் அனைவராலும் வழிபடப்படுபவன் அவனே.(20)
அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனான அவன், தன் பாதுகாப்பை நாடும்போது எதிரிகளுக்கும் பெரும் நண்மைகளைச் செய்பவனாவான். கொள்கையை அறிந்து, கொள்கையுடன் கூடிய அவன் பிரம்மத்தைச் சொல்பவனாகவும், தன் புலன்களை முற்றிலும் கட்டுப்படுத்தியவனாகவும் இருக்கிறான்.(21) தேவர்களுக்கு நன்மை செய்வதற்காகக் கோவிந்தன் உயர் ஆன்ம மனு குலத்தில் பிறப்பெட்டுப்பான். உண்மையில் உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அவன் மங்கலமிக்க, அறம் சார்ந்த பிரஜாபதியின் குலத்தில் தன் பிறப்பை எடுப்பான். மனு, அங்கன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொள்வான். அதன் பிறகு அங்கனுக்கு அந்தர்த்தாமன் வருவான்.(22,23) அந்தர்த்தாமனிலிருந்து அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனும், அனைத்துக் களங்கங்களில் இருந்து விடுபட்டவனுமான ஹவிர்த்தாமன் உண்டாவான். ஹவிர்த்தாமன் பழைய-பர்ஹி {பிராசீனபர்ஹி} என்ற பெயரில் ஒரு சிறப்புமிக்க மகனைப் பெறுவான்.(24) அவனுக்குப் பிரசேதஸ் முதலான பத்து மகன்கள் உண்டாவார்கள். பிரசேதஸ், தக்ஷன் என்ற பெயரில் பிரஜாபதியாகக் கருதத்தகுந்த ஒரு மகனைப் பெறுவன். தக்ஷன் தாக்ஷாயிணி என்ற பெயரில் ஒரு மகளைப் பெறுவான்.(25) தாக்ஷாயினியிடம் ஆதித்தன் உண்டாவான், அதித்தனுக்கு {வைவஸ்வத} மனு உண்டாவான். மனுவுக்கு ஸுத்யும்னன் என்ற பெயரில் மகனாகப் போகும் இளை என்ற பெயரில் ஒரு மகள் பிறந்தாள்.(26) இளை புதனைத் தன் கணவனாகக் கொள்வாள், புதனிடம் இருந்து புரூரவன் உண்டாவான். புரூரவஸிலிருந்து ஆயு எழுவான். ஆயுவிடம் இருந்து நஹுஷனும் உண்டாவான், அந்தம நஹுஷன் யயாதி என்ற பெயரில் ஒரு மகனைப் பெறுவான்.(27)
யயாதி யது என்ற பெயரில் ஒரு வலிமைமிக்க மகனைப் பெறுவான். யது க்ரோஷ்டிரியை {கிரோஷ்டாவைப்} பெறுவான். கிரோஷ்டிரி விருஜினீவான் என்ற பெயரில் ஒரு வலிமைமிக்க மகனைப் பெறுவான்.(28) விருஜினீவானிடமிருந்து வெல்லப்பட முடியாதவனான உஷத்கு {உஷங்கு} பிறப்பான். உஷத்கு சித்திரரதன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெறுவான்.(29) சித்திரரதன், சூரன் என்ற பெயரில் ஓர் இளைய மகளைப் பெறுவான். உண்மையில், உலகம் அனைத்திலும் கொண்டாடப்படும் சக்தியைக் கொண்டவர்களும், சிறந்த ஒழுக்கம் மற்றும் பல்வேறு சாதனைகளைக் கொண்டவர்களும்,(30) வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவர்களும், தூய நடத்தை கொண்டவர்களுமான இந்த வலிமைமிக்க மனிதர்கள் பிறந்த குலத்தில் பிராமணர்களால் கௌரவிக்கப்படும் அந்தத் தூய குலத்தில், சூரன் தன் பிறப்பை எடுப்பான். அவன் {சூரன்} க்ஷத்திரியரில் முதன்மையானவனாகவும், பெருஞ்சக்தி கொண்டவனாகவும், பெரும்புகழைக்கொண்டவனாகவும் இருப்பான்.(31) கௌரங்களை அளிப்பவனான சூரன், தன் குலத்தைப் பெருகச் செய்பவனும், ஆனகதுந்துபி என்றும் அழைக்கப்படுபவனான வசுதேவன் என்ற பெயரைக் கொண்ட ஒரு மகனைப் பெறுவான்.(32) வசுதேவன், வாசுதேவன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெறுவான். அவன் நான்கு கரங்களைக் கொண்டிருப்பான். அவன் அதீத தயாளனாகவும், பிராமணர்களைப் பெரிதும் மதிப்பவனாகவும் இருப்பான். பிரம்மத்துடன் அடையாளங்காணப்படும் அவன் பிராமணர்களிடம் அன்பு கொண்டவனாக அவர்களை விரும்புகிறான், பிராமணர்களும் அவனை விரும்பி அன்பு செலுத்துகின்றனர்.(33)
அந்த யதுகுலக் கொழுந்து {கிருஷ்ணன்}, மலைகளுக்கு மத்தியில் புதைந்திருக்கும் தலைநகரைக் கொண்டவனும், ஜராசந்தன் என்ற பெயருடையவனுமான ஆட்சியாளனை வென்ற பிறகு, அந்த மகதர்களின் ஆட்சியாளனுடைய சிறையில் அடைபட்டிருக்கும் மன்னர்கள் பலரை விடுவிப்பான்.(34) பெருஞ்சக்தி கொண்ட அவன் தங்கம், ரத்தினங்கள் கொண்ட பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரிலும் வளமிக்கவனாக இருப்பான்.(35) பேராற்றலைக் கொண்ட அவன் பூமியில் மன்னர்களுக்கு மன்னனாக இருப்பான். சூரசேனர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக இருக்கும் அந்தப் பலமிக்கவன், துவாரகையில் வசித்துக் கொண்டு,(36) அரசியல் அறிந்தவனாக மொத்த பூமியின் ஆட்சியாளர்களையும் வென்று அவளைப் {பூமியைப்} பாதுகாத்து ஆள்வான். நீங்கள் அனைவரும் ஒன்று கூடி, நித்திய பிரம்மனைத் துதிப்பது போல, வாக்கு, மலர்மாலைகள், நறுமணப் பொருட்கள் மற்றும் சிறந்த தூபங்களுடன் அவனைத் துதிப்பீராக.
என்னையோ, பெரும்பாட்டன் பிரம்மனையோ காண விரும்பும் ஒருவன்,(37,38) பெரும்பலமிக்கவனும், சிறப்புமிக்கவனுமான வாசுதேவனை முதலில் காண வேண்டும். அவன் காணப்பட்டால், நானும், தேவர்கள் அனைவரிலும் முதன்மையான பிரம்மனும் காணப்பட்டோம்.(39) இதில் எந்த வேறுபாடும் இருப்பதாக நான் கருதவில்லை. தவச் செல்வத்தைக் கொண்ட முனிவர்களே இதை அறிவீராக. தாமரைக் கண்ணனான வாசுதேவன் எவனிடம் நிறைவடைவானோ,(40) அவனிடம் பிரம்மனும், தேவர்கள் அனைவரும் நிறைவடைகிறார்கள். கேசவனின் பாதுகாப்பை நாடும் மனிதன்,(41) பெருஞ்சாதனைகளையும், வெற்றியையும், சொர்க்கத்தையும் ஈட்டுவதில் வெல்வான். அறம் மற்றும் கடமைகளைப் பயிற்றுவிப்பவனாக இருக்கும் அவன் பெரும் அறப்பலன்களை ஈட்டுவான்.(42) அறம் மற்றும் கடமைகளை அறிந்த மனிதர்கள அனைவரும், பெரும் சுறுசுறுப்புடன் தேவர்கள் அனைவரின் தலைவனான அவனுக்குத் தலைவணங்க வேண்டும்.(43)
பெருஞ்சக்தியைக் கொண்ட அந்தத் தேவன், உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்ய விரும்பி அறநோக்கத்தில் கோடிக்கணக்கான முனிவர்களைப் படைத்தான்.(44) அந்தப் பேராணையாளனால் இவ்வாறு உண்டாக்கப்பட்ட கோடிக்கணக்கான முனிவர்கள், சனத்குமாரர் தலைமையில் கந்தமாதன மலைகளில் வசித்துக் கொண்டு இப்போது தவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.(45) எனவே, மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, நாநயமிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், அறவோனுமான வாசுதேவன் அனைவராலும் துதிக்கப்பட வேண்டும். அந்தச் சிறப்புமிக்க ஹரி, பலமிக்க நாராயணன், உண்மையில் சொர்க்கத்தில் உள்ள அனைவரிலும் முதன்மையானவன் ஆவான்.(46) அவன், தன்னைத் துதிப்பவனைத் துதிப்பான், கௌரவித்தவனைக் கௌரவிப்பான், காணிக்கையளிப்பவர்களுக்குப் பதில்காணிக்கைகள் அளிப்பான். அவன் தன்னை வழிபடுபவனைப் பதிலுக்கு வழிபடுவான்.(47) எப்போதும் தன்னைக் காண்போரை, எப்போதும் தானும் காண்பான். அவனது புகலிடத்தையும், பாதுகாப்பையும் நாடும் ஒருவனைத் தானே புகலிடமாகக் கொள்வான். அறவோர் அனைவரிலும் முதன்மையானவர்களே, துதிக்கப்பட்டு, வழிபடப்பட்டால், அவன் பதிலுக்குத் துதித்து வழிபடுவான்.(48)
இதுவே குற்றமற்ற விஷ்ணுவின் உயர்ந்த நடைமுறை. இதுவே தேவர்கள் அனைவரிலும் முதல்வனும், உயிரினங்கள் அனைத்தின் பலமிக்கத் தலைவனுமான அவனுக்காக அறவோர் அனைவராலும் பின்பற்றப்படும் நோன்பாகும்.(49) அவன் எப்போதும் உலகத்தால் வழிபடப்படுகிறான். உண்மையில் அந்த நித்தியமானவன் தேவர்களாலும் வழிபடப்படுகிறான். அவனிடம் நிலையான பக்தி கொண்ட மனிதர்கள் தங்கள் பக்திக்குத் தக்க வகையில் துன்பங்களில் இருந்தும், அச்சங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள்.(50) மறுபிறப்பாளர்கள் எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றில் எப்போதும் அவனை வழிபட வேண்டும். தேவகியின் மகன் அவர்களால் மதிப்புடன் காணப்பட வேண்டும். அவனை மதிப்புடன் காண அவர்கள் தவங்களைச் செய்ய வேண்டும்.(51) தவசிகளில் முதன்மையானோரே, இதுவே நான் உங்களுக்குக் காட்டும் பாதையாகும். அவனைக் காண்பதன் மூலம், நீங்கள் தேவர்களில் முதன்மையானோர் அனைவரையும் காண்பீர்கள்.(52) அண்டத்தின் தலைவனும், வலிமைமிக்கப் பெரும்பன்றியும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனுமான அவனுக்கு நானும் தலைவணங்குகிறேன்.(53)
அவனைக் காண்பதன் மூலம் ஒருவன் மும்மூர்த்திகளையும் காண்கிறான். தேவர்களான நாங்கள் அனைவரும் அவனுக்குள் வசிக்கிறோம்.(54) உலகம் முழுவதிலும் பலன் {பலராமன்} என்ற பெயரில் அறியப்பட்ட ஓர் அண்ணனை அவன் பெற்றிருப்பான். கலப்பையையே ஆயுதமாகக் கொள்ளும் அவன் வடிவத்தில் ஒரு வெண்மலையைப் போல இருப்பான். உண்மையில் அவன் மொத்த பூமியையும் உயர்த்தவல்ல வலிமையைப் பெற்றிருப்பான்.(55) அந்தத் தெய்வீகமானவனின் தேரில், மூன்று தலை கொண்டதும், தங்கத்தாலானதுமான நெடும் பனைமரம் செருக்குடன் அவனது {பலராமனது} கொடிமரமாக அமைந்திருக்கும்.(56) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், உலகங்கள் அனைத்தின் தலைவனுமான அவனுடைய தலையானது உயர் ஆன்மப் பாம்புகள் பலவற்றின் பேருடல்களின் நிழலால் மறைக்கப்பட்டிருக்கும். தாக்குவதற்கும், தற்காப்பதற்கும் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் நினைத்த மாத்திரத்தில் அவனிடம் வந்து சேரும்.(78) அவன் அனந்தன் (முடிவற்றவன்) என்றழைக்கப்படுகிறான். உண்மையில், அந்தச் சிறப்புமிக்கவன், மாற்றமற்றவனான ஹரியோடு அடையாளங்காணப் படக்கூடியவனாவான்.
ஒரு காலத்தில் கசியபரின் மகனான வலிமைமிக்கக் கருடனிடம் தேவர்கள் இந்தச் சொற்களைச் சொன்னார்கள், "ஓ! பலமிக்கவனே, இவனுக்கு எல்லையேதும் இருக்கிறதா என்பதைப் பார்ப்பாயாக" என்றனர். கருடன் பெரும் சக்தி கொண்டவனாகவும், வலிமைமிக்கவனாகவும் இருப்பினும், பரமாத்மாவுடன் அடையாளங்காணப்படும் இந்தச் சிறப்புமிக்கவனின் எல்லையைக் காணத் தவறினான்.(58,59) மொத்த உலகத்தையும் தன் தலையில் தாங்கும் இவன், பாதாள லோகங்களில் வசிக்கிறான். அவன் பெரும் மகிழ்ச்சியால் நிறைந்த சேஷனாக அண்டம் முழுவதும் உலவித் திரிகிறான்.(60) விஷ்ணு அவனே, சிறப்புமிக்க அனந்தன் அவனே, பூதியை ஆதரிப்பவனும் அவனே. ரிஷிகேசனே {கிருஷ்ணனே} ராமன் {பலராமன்}. அச்யுதனே {கிருஷ்ணனே} உலகத்தைத் தாங்கும் அனந்தன் {பலராமன்}.(61) உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான அவ்விருவரும் தெய்வீகமானவர்களும், தெய்வீக ஆற்றலுடன் கூடியவர்களும் ஆவர். அவர்களில் ஒருவன் சக்கரத்தையும், மற்றொருவன் கலப்பையையும் தரித்திருக்கிறான். அனைத்து கௌரவங்களுக்கும் தகுந்தவர்களாகவே அவர்கள் காணப்பட வேண்டும்.(61) நான் உங்களிடம் கொண்ட அன்பினால், வாசுதேவனின் இயல்பை உங்களுக்கு இவ்வாறு அறிவித்தேன். தவங்களையே செல்வமாகக் கொண்ட தவசிகளே, அறம் இதுவே.(62) நீங்கள் யது குலத்தில் முதன்மையான கிருஷ்ணனை மதித்துக் கவனத்துடன் வழிபட வேண்டும் என்பதற்காகவே நான் இவையனைத்தையும் உங்களுக்குச் சொன்னேன்" என்றான் {சிவன்}.(63)
அநுசாஸனபர்வம் பகுதி – 147ல் உள்ள சுலோகங்கள் : 63
ஆங்கிலத்தில் | In English |