Savitri Mantra! | Anusasana-Parva-Section-150 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 150)
பதிவின் சுருக்கம் : தேவர்கள், முனிவர்கள், மன்னர்கள் மற்றும் பலரின் பெயர்கள் அடங்கிய சாவித்திரி மந்திரத்தை {காயத்ரியை} யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பெரும்ஞானியே, ஓ! ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரே, ஒவ்வொரு நாளும் சொல்வதன் மூலம் ஒருவன் பெருமளவு அறத்தகுதிக்குரிய பலன்களை ஈட்டச் செய்யும் மந்திரம் எது?(1) பயணம் புறப்படும்போதோ, புதிய கட்டடத்திற்குள் நுழையும்போதோ, எந்தச் செயலையும் செய்யும்போதோ, தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகளின் போதோ சொன்னால் வெற்றியை உண்டாகும் மந்திரம் எது?(2) உண்மையில் வேதங்களுக்கு இணக்கமாக, தீய ஆதிக்கங்கள் அனைத்தையும் தணிக்கவோ, செழிப்பு, அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்கவோ, தீமையிலிருந்து பாதுகாக்கவோ, பகைவர்களை அழிக்கவோ, அச்சங்களை விலக்கவோ உரிய மந்திரம் எது?" என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, வியாசரால் அறிவிக்கப்பட்ட அந்த மந்திரத்தைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. சாவித்ரியால் {சூரியனால்} விதிக்கப்பட்டிருக்கும் அது பெருஞ்சிறப்பு வாய்ந்ததாகும். அஃது ஒரு மனிதனிடம் இருக்கும் பாவங்கள் அனைத்தையும் உடனே தூய்மையாக்கவல்லதாகும்.(4) ஓ! பாவமற்றவனே, அந்த மந்திரத்தின் விதிகளைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்மையில், ஓ! பாண்டு மகன்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்த விதிகளைக் கேட்பதன் மூலம் ஒருவன் தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைகிறான்.(5) அம்மந்திரத்தைப் பகலும், இரவும் உரைப்பவன் பாவத்தால் ஒருபோதும் களங்கமடையமாட்டான். அந்த மந்திரத்தை உனக்கு இப்போது உரைக்கப்போகிறேன். குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(6) உண்மையில், ஓ! இளவரசே, இதைக் கேட்கும் மனிதன் நீண்ட வாழ்நாளை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்து, இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தில் திளைப்பான்.(7) ஓ! மன்னா, க்ஷத்திரியக் கடமைகளின் நடைமுறையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வாய்மை நோன்பை {சத்திய விரதத்தை} நிலையாக நோற்றவர்களுமான அரசமுனிகளில் முதன்மையானவர்களால் ஒவ்வொரு நாளும் இம்மந்திரம் உரைக்கப்பட்டது.(8) உண்மையில், ஓ! மன்னர்களில் புலியே, புலனடக்கத்துடனும், ஆன்ம அமைதியுடனும் ஒவ்வொரு நாளும் இந்த மந்திரத்தைச் சொல்லும் ஏகாதிபதிகள் ஒப்பற்ற செழிப்பை அடைவதில் வெல்வார்கள்.(9)
உயர்ந்த நோன்புகளைக் கொண்ட வசிஷ்டரையும், வேதப்பெருங்கடலான பராசரரையும் மதிப்புடன் வணங்குகிறேன். பெரும் நாகனான அனந்தனை வணங்குகிறேன். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் மற்றும் மங்கா மகிமை கொண்ட அனைவரையும் வணங்குகிறேன்.(10) முனிவர்களையும், உயர்ந்தவற்றில் உயர்ந்தவனும், முதன்மையானோர் அனைவருக்கும் வரங்களை அளிப்பவனுமான தேவதேவனை வணங்குகிறேன். ஆயிரந்தலைகளைக் கொண்டவனும், மங்கலமிக்கவனும், ஆயிரம் பெயர்களைக் கொண்டவனுமான ஜனார்த்தனனை வணங்குகிறேன்.(11)
அஜன் ஏகபாத் {அஜைகபாத்}, அஹிர்ப்புத்நியன், வெல்லப்பட இயலாத பிநாகி, ருதன், பித்ருரூபன், திரியம்பகன், மஹேஸ்வரன்,(12) விருஷாகபி, சம்பு, ஹவனன், ஈஸ்வரன் என எண்ணிக்கையில் பதினொருவராக {11} உள்ள இவர்கள் உலகங்கள் அனைத்தின் தலைவர்களாகக் கொண்டாடப்படும் ருத்திரர்களாவர்.(13) இந்தப் பதினோரு உயர் ஆன்மாக்களே (வேதங்களின்) சதருத்ரத்தில் நூற்றுவராகக் குறிப்பிடப்படுகின்றனர்.
அம்சன், பகன், மித்ரன், வருணன், தாதா, அர்யமா, ஜயந்தன், பாஸ்கரன்,(14) த்வஷ்டா, பூஷா, இந்திரன், விஷ்ணு ஆகியோர் பன்னிருவராவர். ஸ்ருதி அறிவிப்பது போலக் கசியபரின் மகன்களான இந்தப் பன்னிருவரும் {12} ஆதித்யர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.(15)
தரன், துருவன், ஸோமன், ஸாவித்ரன், அநிலன், அநலன், பிரத்யூஷன், பிரபாஸன் ஆகியோர் சாத்திரங்களில் சொல்லப்படும் எட்டு {8} வசுக்களாவர் {அஷ்டவசுக்களாவர்}.(16)
நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அசுவினி இரட்டையராகச் {2} சொல்லப்படுகின்றனர். இவ்விருவரும் மார்த்தாண்டனின் {சூரியனின்} மகன்களாவர், அவனது மனைவியான ஸம்ஜ்ஞாதேவியின் மூக்கில் இருந்து இவர்கள் வெளிவந்தனர்.(17)
இனி இவ்வுலகில் செய்யும் அனைத்து செயல்களுக்கும் சாட்சிகளாக இருப்போரின் பெயர்களை நான் சொல்லப் போகிறேன்.(18) தேவர்களில் தலைவர்களான அவர்கள் புலப்படாத நிலையில் இருந்தாலும் அனைத்தையும் காண்கின்றனர். உண்மையில், அவர்கள் அனைத்து உயிரினங்களும் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் காண்கின்றனர். அவர்கள் மிருத்யு, காலன்,(19) விஷ்வேதேவர்கள், வடிவங்களுடன் கூடிய பித்ருக்கள், தவங்களையே செல்வமாகக் கொண்ட பெரும் முனிவர்கள், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர்கள், மற்றும் தவங்கள், முக்தி ஆகியவற்றில் அர்ப்பணிப்பு கொண்டோர் ஆகியோராவர்.(20) இவர்கள் தங்கள் பெயர்களைச் சொல்லும் மனிதர்களுக்குப் பல்வேறு வகை நன்மைகளைச் செய்கின்றனர். உண்மையில் தெய்வீக சக்தி கொண்ட அவர்கள், பெரும்பாட்டனால் உண்டாக்கப்பட்ட பல்வேறு இன்ப உலகங்களை அத்தகைய மனிதர்களுக்கு அளிக்கிறார்கள்.(21) அனைத்து உலகங்களிலும் வசித்திருக்கும் அவர்கள், அங்கு நடைபெறும் செயல்களைக் கவனமாகக் குறித்துக் கொள்கின்றனர். உயிரினங்கள் அனைத்தின் தலைவர்களான அவர்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் எப்போதும் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அபரிமிதமான அளவில் ஈட்டுபவனாகிறான்.(22) அவன் மறுமையில் அண்டத்தின் தலைவனால் உண்டாக்கப்பட்ட பல்வேறு மங்கல, இன்ப உலகங்களை அடைகிறான்.(23)
அனைத்து உயிரினங்களின் தலைவர்களான இந்த முப்பத்துமூவர்[1], பேருடல் படைத்த நந்தீஸ்வரன், காளையைத் தன் கொடிச் சின்னமாகக் கொண்ட உயர்ந்தவன், கணேஸ்வரன் என்றழைக்கப்படுபவனின் தொண்டர்கள் மற்றும் துணைவர்களாக இருக்கும் உலக ஆட்சியாளர்கள் அனைவர், சௌமியர்கள், ரௌத்திரர்கள், யோகிகள் என்றழைக்கப்படுபவர்கள், பூதங்கள் என்றறியப்படுபவர்கள்,(24,25) ஆகாயத்து ஒளிக்கோள்கள், ஆறுகள், வானம், பறவைகளின் இளவரசன் (கருடன்), தவங்களின் விளைவால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அசையும் மற்றும் அசையாத வடிவம் கொண்டிருப்பவர்கள்,(26) இமவான் {இமய மலை}, அனைத்து மலைகள், நான்கு பெருங்கடல்கள், பவனின் ஆற்றலுக்கு இணையான ஆற்றலைக் கொண்ட அவனது தொண்டர்கள்,(27) எப்போதும் வெற்றியாளனாக இருக்கும் சிறப்புமிக்க விஷ்ணு, ஸ்கந்தன், அம்பிகை ஆகிய இந்தப் பெரும் ஆன்மாக்களின் பெயர்களைப் புலனடக்கத்துடன் சொல்லும் ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(28)
[1] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "ருத்திரர்கள் பதினொருவர், ஆதித்யர்கள் பன்னிருவர்; வஸுக்கள் எண்மர்; அஸ்வினீதேவர் இருவர்" என்றிருக்கிறது.
இனி மானவர்கள் என்றறியப்படும் முதன்மையான முனிவர்களின் பெயர்களை நான் சொல்லப் போகிறேன். அவர்கள் யவக்ரீதர், ரைப்யர், அர்வாவஸு, பராவஸு;(29) ஔஷிஜர், கக்ஷீவான், அங்கிரஸின் மகனான பலர் {பலன்} ஆகியோராவர். பிறகு, மேதாதியின் மகனான கண்வரும், பரிஷதரும் வருகின்றனர்.(30) பிரம்ம சக்தி கொண்ட இவர்கள் அனைவரும் அண்டத்தைப் படைத்தவர்களாக (சாத்திரங்களில்) சொல்லப்படுகின்றனர். ருத்திரன், அநலன் மற்றும் வசுக்களில் இருந்து இவர்கள் உண்டானார்கள். இவர்களின் பெயர்களைச் சொல்வதால் மக்கள் பெரும் நன்மைகளை அடைகிறார்கள்.(31) உண்மையில், பூமியில் நற்செயல்களைச் செய்யும் மக்கள், தேவர்களுடன் சொர்க்கத்தில் இன்புற்றுத் திளைக்கிறார்கள். இம்முனிவர்களே இந்திரனின் புரோகிதர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிழக்கில் வாழ்கிறார்கள்.(32) குவிந்த கவனத்துடன் இம்முனிவர்களின் பெயர்களைச் சொல்லும் மனிதன், இந்திரலோகத்திற்கு உயர்வதிலும், அங்கே பெரும் கௌரவங்களை அடைவதிலும் வெல்கிறான்.(33)
உன்முசு, பிரமுசு, பெருஞ்சக்தி கொண்ட ஸ்வஸ்தியாத்ரேயர், திருடவ்யர், ஊர்த்தவபாஹு, திரணஸோமாங்கிரஸ்,(34) மித்ராவருணனின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவருமான அகஸ்தியர் ஆகிய எழுவரும் இறந்தோரின் மன்னனான யமனின் ரித்விஜர்களாகத் தென் பகுதியில் வசிக்கின்றனர்.(35)
திருடேயு, ருதேயு, பெரும்புகழ் கொண்ட பரிவ்யாதர், சூரியனின் காந்தியுடன் கூடியவர்களான ஏகதர், திவிதர், திரிதர் ஆகியோர்,(36) அறம் சார்ந்த அத்ரியின் மகனான ஸாரஸ்வதர் ஆகிய எழுவரும் வருணனின் பெரும் வேள்வியில் ரித்விஜர்களாகச் செயல்பட்டனர். இவர்கள் அனைவரும் மேற்குப் பகுதியில் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டுள்ளனர்.(37)
அத்ரி, சிறப்புமிக்க வசிஷ்டர், பெரும் முனிவர் கசியபர், கோதமர், பரத்வாஜர், குசிகனின் மகனான விஷ்வாமித்திரர்,(38) பெரும் சக்தி கொண்டவரும், கடுமை நிறைந்தவரும், ரிசீகரின் மகனுமான ஜமதக்னி ஆகிய இவர்கள் எழுவரும், கருவூலத்தலைவனின் {குபேரனின்} ரித்விஜர்களாக வடக்குப்பகுதியில் வசிக்கின்றனர்.(39)
எத்திசையிலும் அடைபடாமல் அனைத்துத் திசைகளிலும் வாழும் வேறு முனிவர்கள் எழுவர் இருக்கின்றனர். மனிதர்களுக்குப் புகழையும் அவர்களுக்கான நன்மைகள் யாவையும் கொடுக்கும் அவர்கள், உலகங்களைப் படைத்தவர்களாகப் பாடப்படுகின்றனர்.(40)
திருடேயு, ருதேயு, பெரும்புகழ் கொண்ட பரிவ்யாதர், சூரியனின் காந்தியுடன் கூடியவர்களான ஏகதர், திவிதர், திரிதர் ஆகியோர்,(36) அறம் சார்ந்த அத்ரியின் மகனான ஸாரஸ்வதர் ஆகிய எழுவரும் வருணனின் பெரும் வேள்வியில் ரித்விஜர்களாகச் செயல்பட்டனர். இவர்கள் அனைவரும் மேற்குப் பகுதியில் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டுள்ளனர்.(37)
அத்ரி, சிறப்புமிக்க வசிஷ்டர், பெரும் முனிவர் கசியபர், கோதமர், பரத்வாஜர், குசிகனின் மகனான விஷ்வாமித்திரர்,(38) பெரும் சக்தி கொண்டவரும், கடுமை நிறைந்தவரும், ரிசீகரின் மகனுமான ஜமதக்னி ஆகிய இவர்கள் எழுவரும், கருவூலத்தலைவனின் {குபேரனின்} ரித்விஜர்களாக வடக்குப்பகுதியில் வசிக்கின்றனர்.(39)
எத்திசையிலும் அடைபடாமல் அனைத்துத் திசைகளிலும் வாழும் வேறு முனிவர்கள் எழுவர் இருக்கின்றனர். மனிதர்களுக்குப் புகழையும் அவர்களுக்கான நன்மைகள் யாவையும் கொடுக்கும் அவர்கள், உலகங்களைப் படைத்தவர்களாகப் பாடப்படுகின்றனர்.(40)
தர்மன், காமன், காலன், வஸு, வாஸுகி, அனந்தன், கபிலன் ஆகிய இவ்வேழு பேரும் {நாகர்களும்} உலகத்தைத் தாங்குபவர்களாக இருக்கின்றனர்.(41) ராமர் {பரசுராமர்}, வியாசர், துரோணரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோரே (முதன்மையானவர்களாகக் கருதப்படும்) வேறு முனிவர்களாவர். இந்தப் பெரும் முனிவர்களே ஒவ்வொன்றிலும் ஏழேழு பேரைக் கொண்ட ஏழு கூட்டங்களாகப் பிரிந்திருக்கின்றனர்[2].(42) மனிதர்கள் அனுபவிக்கும் அமைதியையும் நன்மையையும் உண்டாக்குபவர்கள் பல்வேறு திசைப்புள்ளிகளின் ஆட்சியாளர்களாக {திக்பாலர்களாகச்} சொல்லப்படுகின்றனர். இம்முனிவர்கள் எந்தெந்தெந்த திசையில் இருக்கின்றனரோ அந்த அந்தத் திசையை நோக்கி ஒருவன் வழிபட வேண்டும்.(43)
[2] கும்பகோணம் பதிப்பில், "இவர்கள் ஒவ்வொருவரும் எவ்வேழு உருவங்களாயிருக்கின்றனர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஏழு உலகங்களுக்கும் ஏழு உருவமென்பது" என்றிருக்கிறது.
உயிரினங்களைப் படைத்தவர்களான அம்முனிவர்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்துபவர்களாகக் கருதப்படுகிறார்கள். கடுந்தவங்களைச் செய்தவர்களும், பெரும் தற்கட்டுப்பாடுடையவர்களுமான ஸம்வர்த்தர், மேருஸாவர்ணர், அறம்சார்ந்தவரான மார்க்கண்டேயர், ஸாங்கியர், யோகர், நாரதர், துர்வாஸர் ஆகியோர் மூவுலகங்களிலும் கொண்டாடப்படுபவர்களாக இருக்கிறார்கள்.(45) ருத்திரனுக்கு இணையான வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்கள் பிரம்ம லோகத்தில் வாழ்கின்றனர். அவர்களின் பெயர்களை மதிப்புடன் சொல்லும் மகனற்ற மனிதன் மகனை அடைகிறான், ஓர் ஏழை செல்வத்தை அடைகிறான்.(46) உண்மையில் அவர்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(47)
பூமி முழுவதும் ஆட்சி செய்த பேரரசனும், ஏகாதிபதிகளில் முதன்மையான பிராஜபதிக்கு இணையானவனும், வேனனின் மகனும், கொண்டாடப்பட்ட மன்னனுமான பிருவின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். (அன்பினாலும், பாசத்தினாலும்) பூமி {பூமாதேவி} அவனது மகளானாள் {எனவே, அவள் பிருத்வி என்றழைக்கப்பட்டாள்}. சூரிய குலத்தைச் சேர்ந்தவனும், ஆற்றலில் மஹேந்திரனுக்கு இணையானவனுமான புரூரவனின் பெயரும் ஒருவனால் சொல்லப்பட வேண்டும்.(48) இளையின் மகனான அவன் மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவனாக இருந்தான். உண்மையில், புதனின் அன்புக்குரிய மகனான அவனின் {புரூரவனின்} பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(49) மூவுலகங்களில் கொண்டாடப்படும் வீரனான பரதனின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். கிருத யுகத்தில் மகத்தான கோமேத வேள்வியில் {கவாமயனயாகம்} தேவர்களைத் துதித்து, மஹாதேவனுக்கு இணையானவனாக இருந்த பெரும் காந்தி கொண்ட ரந்திதேவனின் பெயரும் சொல்லப்பட வேண்டும். தவங்களுடன் கூடியவனும், மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்டவனும், உலகின் அனைத்து வகை நன்மைகளுக்கும் தோற்றுவாயாக இருந்தவனுமான அவன் அண்டத்தை வென்றவனாக இருந்தான்.(51)
பெரும்புகழைக் கொண்ட அரச முனி ஸ்வேதனின்[3] பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். மஹாதேவனை நிறைவடையச் செய்த அவனுக்காகவே அந்தகன் கொல்லப்பட்டான்.(52) சொர்க்கத்தில் பாய்ந்த புனித ஆற்றை {கங்கை ஆற்றை} மஹாதேவனுடைய அருளின் மூலம் (மனிதர்களின் பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்க பூமியில் பாயச்செய்ய {அவ்வாற்றைப்}) கீழே கொண்டு வந்தவனும், பெரும்புகழுடைய அரசமுனியுமான பகீரதனின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(53) பகீரதனே, சகரனின் அறுபதாயிரம் மகன்களின் சாம்பலைக் கங்கையின் புனித நீரில் நனையச் செய்து, அவர்களைப் பாவத்தில் இருந்து மீட்டவனாவான். உண்மையில், நெருப்பைப் போன்ற சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவர்களும், பேரெழில்வாய்ந்தவர்களும், உயர்ந்த சக்தியைக் கொண்டவர்களுமான இவர்கள் அனைவரின் பெயர்களையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(54) அவர்களில் சிலர் அச்சந்தரும் வடிவங்களைக் கொண்டவர்களாகவும், பெரும்வலிமை கொண்டவர்களாகவும் இருந்தனர். உண்மையில், ஒருவன் புகழைப் பெருக்கவல்லவர்களான தேவர்கள், முனிவர்கள், மற்றும் அண்டத்தின் தலைவர்களான மன்னர்கள் ஆகியோரின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(55) சாங்கியம், உயர்ந்ததில் உயர்வான யோகம், ஹவ்யம், கவ்யம், ஸ்ருதிகள் அனைத்தின் புகலிடமான பரப்பிரம்மம் ஆகியவை,(56) அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் நன்மைகளைச் செய்யவல்ல ஊற்றுக்கண்களாகச் சொல்லப்பட்டுள்ளன. புனிதமானவையும், பாவத்தைத் தூய்மை செய்பவையுமான இவை மிக உயர்வாகச் சொல்லப்பட்டுள்ளன. நோய்கள் அனைத்தையும் சீராக்கும் மருந்துகளாகவும், அனைத்துச் செயல்களிலும் வெற்றியைத் தருபவையாகவும் இவையே இருக்கின்றன[4].(57)
[3] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவனே பகீரதன்" என்ற குறிப்பிருக்கிறது. ஆனால் கங்குலியில் அடுத்தப் பெயராகவே பகீரதன் பெயர் குறிப்பிடப்படுகிறது.[4] 10ம் ஸ்லோகத்தில் தொடங்கி 57ம் ஸ்லோகம் வரையுள்ள பகுதியே 69ம் ஸ்லோகத்தில் சொல்லப்படும் "சாவித்ரி மந்திரமாக" இருக்க வேண்டும்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒருவன் புலனடக்கத்துடன் காலையும், மாலையும் இப்பெயர்களைச் சொல்ல வேண்டும். இவர்களே பாதுகாப்பவர்கள். இவர்களே மழையைப் பொழியச் செய்கிறார்கள். இவர்களே ஒளிர்ந்து ஒளியையும், வெப்பத்தையும் தருகிறார்கள். இவர்களே {காற்றை} வீசச் செய்கிறார்கள் . இவர்களே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறார்கள்.(58) இவர்களே அண்டத்தின் தலைவர்களாகவும், அனைத்தையும் சாதிப்பதில் உயர்ந்த புத்தியைக் கொண்டவர்களாகவும், மன்னிக்கும் தன்மை கொண்டவர்களாகவும், புலன்களை முற்றாக ஆள்பவர்களாகவும் கருதப்படுகிறார்கள். உண்மையில் இவர்களே மனிதர்களுக்கு நேரும் தீமைகள் அனைத்தையும் அகற்றுபவர்கள் என்று சொல்லப்படுகிறது.(59) நல்ல மற்ற தீய செயல்கள் அனைத்தின் சாட்சிகளாக இருப்பவர்கள் இந்த உயர் ஆன்மாக்களே. ஒருவன் தனக்கான நன்மைகள் அனைத்தையும் நிச்சயம் அடைய முடியும் என்பதால் அவன் காலையில் எழுந்ததும் இவர்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(60)
இவர்களின் பெயர்களைச் சொல்பவன் நெருப்பு மற்றும் கள்வர்களிடம் உள்ள அச்சங்களில் இருந்து விடுபடுவான். அத்தகைய மனிதன் எத்தடையாலும் தடுக்கப்படமாட்டான். இந்த உயர் ஆன்மாக்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் அனைத்து வகைத் தீய கனவுகளில் இருந்தும் விடுபடுவான்.(61) அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடும் அத்தகைய மனிதர்கள் மங்கலமான குடும்பங்களில் பிறக்கிறார்கள். புலனடக்கத்துடன் கூடிய மறுபிறப்பாளன், வேள்விகளின் தொடக்கச் சடங்குகள் செய்யப்படும்போது இந்தப் பெயர்களைச் சொல்வதன் விளைவால்,(62) அறவோனாகவும், ஆன்ம கல்வியில் அர்ப்பணிப்புள்ளவனாகவும், மன்னிக்கும் தன்மை {பொறுமை}}, தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டவனாகவும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனாகவும் ஆகிறான். நோயால் பீடிக்கப்பட்ட மனிதன் இவற்றைச் சொன்னால், நோயின் வடிவத்தில் இருக்கும் தன் பாவத்தில் இருந்து அவன் விடுபடுகிறான்.(63) ஒரு வீட்டிற்குள் இவற்றைச் சொல்வதன் மூலம், அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைத்து வகைத் தீமைகளில் இருந்தும் விடுபடுவார்கள். வயலில் இவற்றைச் சொல்வதன் மூலம், அனைத்து வகைப் பயிர்களும் செழித்து வளரும்.(64)
பயணத்திற்குப் புறப்படும் சமயத்திலோ, ஒருவன் தன் வீட்டில் இருந்து வெளியே இருக்கும் போதோ அவற்றை உரைத்தால் அவன் நற்பேற்றை அடைவான். இந்தப் பெயர்கள் ஒருவனுடைய சுயத்திற்கும், தன் பிள்ளைகள் மனைவிகள், செல்வம்,(65) அவனுடைய வித்துகள் மற்றும் செடிகளுக்கும் பாதுகாப்பைத் தரும். போரிடும் சமயத்தில் இப்பெயர்களை உரைக்கும் க்ஷத்திரியன் தன் பகைவர்கள் அழிவடைவதையும், தானும், தன் தரப்பும் நற்பேற்றால் மகுடம் சூடப்படுவதையும் காண்பான். தேவர்கள் மற்றும் பித்ருக்களை மதிக்கும் வகையில் சடங்குகளைச் செய்யும்போது இந்தப் பெயர்களை உரைக்கும் மனிதன், வேள்வியின் ஹவ்யம் மற்றும் கவ்யத்தைப் பித்ருக்களும், தேவர்களும் உண்பதற்கு உதவி செய்தவனாவான். இவற்றை உரைக்கும் மனிதன், நோய்கள், இரைதேடும் விலங்குகள், யானைகள் மற்றும் கள்வர்களிடம் கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவான்.(66-68) அவனுடைய துன்பச் சுமை குறைந்து அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுதலையடைகிறான்.
சிறப்புவாய்ந்த இந்த சாவித்ரி மந்திரத்தை {காயத்ரி மந்திரத்தை} ஓடத்திலோ, வாகனத்திலோ, மன்னர்களின் சபைகளிலோ சொல்வதன் மூலம் ஒருவன் உயர்ந்த வெற்றியை அடைகிறான். எங்கே இந்த மந்திரஙகள் உரைக்கபடுகின்றனவோ, அங்கே நெருப்பும் மரத்தை எரிக்காது.(69,70) அங்கே பிள்ளைகள் இறக்கமாட்டார்கள், பாம்புகள் வசிக்காது. உண்மையில், அத்தகைய இடங்களில் மன்னன், பிசாசங்கள், அல்லது ராட்சசர்களிடம் இருந்து எந்த அச்சமும் நேராது[5].(71) உண்மையில் இந்த மந்திரங்களைச் சொல்லும் மனிதனுக்கு, நெருப்பிடமோ, நீரிடமோ, காற்றிடமோ, இரைதேடும் விலங்குகளிடமோ எந்த அச்சமும் நேராது.(72) முறையாக உரைக்கப்படும் இந்த சாவித்திரி மந்திரங்கள் அமைதியை அளித்து, நான்கு வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} நன்மையைச் செய்யும். மதிப்புடன் அவற்றை உரைக்கும் மனிதர்கள் அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபட்டு, இறுதியாக உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(73) பிரம்மத்தின் வடிவிலான இந்த சாவித்திரி மந்திரங்களை உரைப்பதன் மூலம் அடையப்படும் விளைவுகள் இவையே. பசுக்களின் மத்தியில் வைத்து இந்த மந்திரங்களை உரைக்கும் மனிதன், அந்தப் பசுக்கள் கனிநிறைந்தவையாக இருப்பதைக் காண்பான்.(74) பயணம் புறப்பட்டாலோ, பயணத்தில் இருந்து வீடு திரும்பினாலோ ஒருவன் ஒவ்வொரு தருணத்திலும் இந்த மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.(75)
[5] "அத்தகைய இடங்களில் மரணம் நேராது; மன்னனின் ஒடுக்குதல், அல்லது சட்டத்திற்குப் புறம்பானோ தண்டனைகளினால் எந்த அச்சமும் நேராது என்பது பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
முனிவர்கள் கொண்டுள்ள பெரும் புதிரை {ரகசியத்தை} உள்ளடக்கிய இந்த மந்திரங்கள், அமைதியாக உரைக்கப்படும்போது மிக உயர்ந்தவையாகின்றன. வேள்வித்தீயில் ஆகுதி ஊற்றி முறையாக உரைப்போருக்கு இந்த மந்திரங்கள் இவ்வாறே அமைகின்றன[6].(76) நான் உனக்குச் சொன்னவை பராசரருடைய சிறந்த கருத்துகளாகும். இவை முற்காலத்தில் சக்ரனிடம் சொல்லப்பட்டன. வாய்மை, அல்லது நித்திய பிரம்மத்தைப் பிரதிபலிக்கும் அதனை நான் உனக்கு முழுமையாக உரைத்திருக்கிறேன்.(77) அனைத்து உயிரினங்களின் இதயமாக அமைந்திருக்கும் இஃது உயர்ந்த ஸ்ருதியாக இருக்கிறது. சோம குல, சூரிய குல இளவரசர்களான ராகவர்கள் மற்றும் குரவர்கள் {குரு வம்சத்துக் கௌரவர்கள்} அனைவரும்,(78) தங்களைத் தூய்மை செய்து கொண்டு ஒவ்வொரு நாளும் இந்த மந்திரங்களைச் சொல்கிறார்கள்.இவையே மனித இனத்தின் உயர்ந்த கதியாக அமைகிறது. தேவர்கள், ஏழு முனிவர்கள் மற்றும் துருவனின் பெயர்களை ஒவ்வொரு நாளும் உரைப்பதால் அனைத்து தொல்லைகளிலிருந்தும், துன்பங்களில் இருந்தும் தப்பிக்கும் வழி ஏற்படுகிறது. உண்மையில், இவ்வாறு உரைப்பது ஒருவனைத் துன்பத்தில் இருந்து விரைவாக மீட்கிறது.(79)
[6] கும்பகோணம் பதிப்பில், "எக்காலமும், ஜபஹோமங்களைச் செய்து கொண்டு மனத்தையடக்கின ரிஷிகளுக்கும் இந்த ஜபம் மிக முக்கியமும், ரகஸ்யமுமானது" என்றிருக்கிறது.
பழங்காலத்து தவசிகளான கசியபர், கோதமர், பிருகு, அங்கிரஸ், அத்ரி, சுக்ரர், அகஸ்தியர், பிருஹஸ்பதி ஆகியோரும், மறுபிறப்பாள முனிவர்கள் அனைவரும் இந்த மந்திரங்களைத் துதித்தனர். பரத்வாஜரின் மகனால் அங்கீகரிக்கப்பட்ட இம்மந்திரங்கள் ரிசீகரின் மகன்களால் அடையப்பட்டன. உண்மையில் அவற்றை வசிஷ்டரிடம் இருந்து மீண்டும் அடைந்த சக்ரனும், வசுக்களும் தானவர்களிடம் போரிடச் சென்று அவர்களை அடக்கினர்.(80) பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடிய நூறு பசுக்களைக் கல்விமானும், வேதங்களை நன்கறிந்தவனுமான ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதனும், ஒவ்வொரு நாளும் பாரதக் கதையைத் தன் வீட்டில் உரைக்கச் செய்யும் மனிதனும் ஒரே பலன்களை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(81) பிருகுவின் பெயரைச் சொல்வதன் மூலம் ஒருவனிடம் அறம் பெருகுகிறது. வசிஷ்டரை வணங்குவதன் மூலம் அவனது சக்தி பெருகுகிறது. ரகுவை வணங்குவதன் மூலம் அவன் போர்க்களங்களில் வெற்றிவாகை சூடுகிறான். அசுவினிகளின் புகழைச் சொல்வதன் மூலம் ஒருவன் நோய்களில் இருந்து விடுபடுகிறான்.(82) ஓ! மன்னா, இவ்வாறு நித்திய பிரம்மத்திற்கு ஒப்பான சாவித்திரி மந்திரங்களை நான் உனக்குச் சொன்னேன். வேறேதும் என்னிடம் கேட்ட விரும்பினால், நீ அவ்வாறே செய்வாயாக. ஓ! பாரதா நான் உனக்குப் பதிலளிப்பேன்" என்றார் {பீஷ்மர்}.(83)
அநுசாஸனபர்வம் பகுதி – 150ல் உள்ள சுலோகங்கள் : 83
ஆங்கிலத்தில் | In English |