The greatness of Brahmanas! | Anusasana-Parva-Section-151 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 151)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் மேன்மையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "வழிபடத்தகுந்தவர் எவர்? நாம் வணங்க வேண்டியவர் எவர்? உண்மையில், எவரிடமும் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? ஓ! பாட்டா, எந்தெந்த வகையினரிடம் எந்தெந்த ஒழுங்கு நடைமுறை களங்கமற்றதாகக் கருதப்படுகிறது?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிராமணர்களை அவமதிப்பது, தேவர்களையே அவமதிப்பதாகும். ஓ! யுதிஷ்டிரா, பிராமணர்களை வணங்குவதன் மூலம் ஒருவன் எந்தக் களங்கத்தையும் இழைப்பதில்லை.(2) உண்மையில் அவர்கள் வழிபடத்தகுந்தவர்களாவர். அவர்கள் நாம் வணங்கத்தகுந்தவர்கள் ஆவர். உன் மகன்களிடம் நடந்து கொள்வதைப் போல நீ அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். உண்மையில், பெரும் ஞானம் கொண்ட அம்மனிதர்களே உலகங்கள் அனைத்தையும் தாங்குகிறார்கள்.(3) அனைத்து உலகங்களிலும் அறத்தின் பெரும்பாலங்களாக இருப்போர் பிராமணர்களே. அனைத்து வகைச் செல்வங்களையும் துறப்பதிலேயே அவர்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. வாக்கைக் கட்டுப்படுத்தும் நோன்புக்கு அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்கள் ஆவர்.(4) உயிரினங்கள் அனைத்திற்கும் இனிமையான அவர்கள் பல்வேறு சிறந்த நோன்புகளை நோற்பவர்களாவர். அவர்கள் இந்த அண்டத்தின் உயிரினங்கள் அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவர்கள். உலகங்களை ஆளும் விதிமுறைகள் அனைத்தின் ஆசிரியர்கள் அவர்கள். பெரும் புகழைக் கொண்டவர்கள் அவர்கள்.(5)
தவங்களே எப்போதும் அவர்களின் பெருஞ்செல்வமாக இருக்கின்றன. வாக்கே அவர்களது பலமாக இருக்கிறது. அவர்கள் நோற்கும் கடமைகளிலிருந்தே அவர்களது சக்தி பாய்கிறது. அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களான அவர்கள், நுட்பமான கருத்துகளையும் அறியும் நுண்பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(6) அவர்கள் நியாயமான ஆசைகளைக் கொண்டவர்கள். கடமைகளை நன்கு செய்து வாழ்பவர்கள் அவர்கள். அறத்தின் பெரும்பாலங்கள் அவர்கள். இருப்பில் இருக்கும் நால்வகை உயிரினங்களும் அவர்களையே தங்கள் புகலிடங்களாகச் சார்ந்திருக்கின்றன.(7) அவர்களே அனைவரும் செல்ல வேண்டிய பாதையாகவோ, சாலையாகவோ இருக்கின்றனர். அவர்களே அனைவரின் வழிகாட்டிகளாக இருக்கின்றனர். அவர்களே வேள்விகள் அனைத்தையும் எப்போதும் தாங்குபவர்கள். அவர்கள் தங்கள் தந்தைமார் மற்றும் பாட்டன்களின் கனமான சுமைகளை எப்போதும் சுமப்பவர்கள்.(8) வலிமைமிக்க மாடுகளைப் போலக் கடினமான சாலைகளைக் கடக்கும்போதும் தங்கள் கனமான சுமைகளால் அவர்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை. பித்ருக்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர்களின் தேவைகளில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். ஹவ்யம் மற்றும் கவ்யத்தின் முதல் பங்கை உண்ணும் உரிமை அவர்களுக்கு உண்டு.(9) அவர்கள் உண்ணும் உணவின்மூலமே மூன்று உலகங்களையும் பேரச்சத்தில் இருந்து விடுவிக்கிறார்கள். அனைத்து உலகங்களுக்குமான தீவாக (புகலிடமாக) அவர்கள் இருக்கிறார்கள். பார்வை கொண்ட மனிதர்கள் அனைவரின் கண்களாக அவர்களே இருக்கின்றனர்.(10)
சிக்ஷை என்ற பெயரில் அறியப்படும் ஞானத்தின் அனைத்துக் கிளைகளும், ஸ்ருதிகள் அனைத்தும் அவர்களின் செல்வமாகின்றன. பெருந்திறனுடன் கூடிய அவர்கள் பொருட்களின் மிகநுட்பமான உறவுகளை அறிந்தவர்களாக இருக்கின்றனர். அனைத்துப் பொருட்களின் கதியை நன்கறிந்தவர்களாக இருக்கும் அவர்களது எண்ணங்கள் எப்போதும் ஆன்ம அறிவியலிலேயே ஈடுபட்டிருக்கின்றன.(11) அனைத்துப் பொருட்களின் தொடக்கம், நடு மற்றும் முடிவு ஆகியவற்றின் அறிவுடன் கூடியவர்களாகவும், தாங்கள் கொண்ட ஞானத்தில் உள்ள உறுதியுணர்வின் விளைவால் எந்த ஐயமும் இல்லாதவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். உயர்ந்தது எது, தாழ்ந்தது எது என்பதற்கிடையிலான வேறுபாடுகளில் முழு விழிப்புணர்வுடன் இருக்கும் அவர்களே உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(12) அவர்கள் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்து, உலகப் பொருட்கள் யாவற்றிலும் தொடர்பறுந்தவர்களாக இருக்கிறார்கள். மதிக்கத்தகுந்த அவர்கள், ஞானமும், உயர்ந்த ஆன்மாக்களையும் கொண்ட மனிதர்களால் எப்போதும் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள்.(13) சந்தனம், அழுக்கான சேறு ஆகியவற்றிலும், எது உணவு, எது உணவில்லை என்பதிலும் அவர்கள் சமமான பார்வையைச் செலுத்துவார்கள். மெல்லிய காவி ஆடைகள், நார்மடி பட்டாடைகள், விலங்கின் தோல் ஆகியவற்றில் தங்கள் கண்களைச் சமமாகச் செலுத்துகிறார்கள்.(14) அவர்கள், எந்த உணவையும் பல நாட்கள் உண்ணாமல், வாழ்வதாரங்களை விலக்குவதன் மூலம் தங்கள் அங்கங்களை வற்ற செய்து வாழ்பவர்கள். வேத கல்வி மற்றும் புலனடக்கத்தில் அவர்கள் உள்ளார்வத்துடன் தங்களை அர்ப்பணிக்கிறார்கள்.(15)
அவர்கள் தேவர்களல்லாதவர்களை தேவர்களாகவும், தேவர்களை தேவர்களல்லாதவர்களாகவும் ஆக்குபவர்கள். சினமடைந்தால் அவர்களால் வேறு உலகங்களையும், இருப்பவர்களைத் தவிர்த்து வேறு லோகபாலர்களையும் உண்டாக்க முடியும்.(16) அந்த உயர் ஆன்மாக்களுடைய சாபத்தின் மூலமே பெருங்கடலானது குடிக்க முடியாத வகையில் உப்பானது. அவர்களுடைய கோபமெனும் நெருப்பு காலத்தால் தணிவடையாமல் இன்னும் தண்டகக் காட்டில் எரிந்து கொண்டிருக்கிறது.(17) அவர்கள் தேவர்களின் தேவர்களாகவும், காரணங்கள் அனைத்தின் காரணங்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் அதிகாரங்கள் அனைத்தின் அதிகாரமாக இருக்கின்றனர். புத்தியும் ஞானமும் கொண்ட எந்த மனிதன் அவர்களை அவமதிக்க முயல்வான்?(18) அவர்களில் இளையோரும், முதியோரும் கௌரவங்களுக்குத் தகுந்தவர்களே. அவர்கள் தங்கள் (வயதின் விளைவால் அல்லாமல்) தவங்கள் மற்றும் ஞானத்தில் உள்ள தனிச்சிறப்புகளின் விளைவால் ஒருவரையொருவர் மதிக்கிறார்கள்.(19)
ஞானமற்ற பிராமணனும் தேவனாவான், பிறரைத் தூய்மைப்படுத்தும் உயர்ந்த கருவியாவான். அவர்களுக்கு மத்தியில் அறிவைப் படைத்தவன் உயர்ந்த தேவனும், முற்றாக நிறைந்த பெருங்கடலைப் போன்றவனும் ஆவான்.(20) கல்விமானாகவோ, கல்லாதவனாகவோ இருந்தாலும் பிராமணன் எப்போதும் உயர்ந்த தேவனே. (மந்திரங்களின் துணையால்) புனிதமாகவோ, புனிதமற்றோ இருந்தாலும் நெருப்பு {அக்னி} எப்போதும் பெருந்தேவனே.(21) சுடர்மிக்க நெருப்பானது சுடலையில் எரிந்தபோதும், அஃது எரியும் இடத்தினுடைய தன்மையின் விளைவால் களங்கமடைந்ததாக ஒருபோதும் கருதப்படுவதில்லை. வேள்விப்பீடத்தில் இருந்தாலும், அறையில் இருந்தாலும் தெளிந்த நெய் எப்போதும் அழகாகவே தெரியும்.(22) எனவே, ஒரு பிராமணன் எப்போதும் தீச்செயல்களில் ஈடுபடுபவனாக இருப்பினும் அவன் மதிக்கத்தகுந்தவனாகவே கருதப்பட வேண்டும். உண்மையில், பிராமணனே எப்போதும் உயர்ந்த தேவன் என்பதை அறிவாயாக" என்றார் {பீஷ்மர்}.(23)
அநுசாஸனபர்வம் பகுதி – 151ல் உள்ள சுலோகங்கள் : 23
அநுசாஸனபர்வம் பகுதி – 151ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |