The heir of Jayathrada! | Aswamedha-Parva-Section-78 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 63)
பதிவின் சுருக்கம் : மீண்டும் திரண்டு அர்ஜுனனைத தாக்கிய சைந்தவர்கள்; அர்ஜுனன் செய்த பெரும்போர்; அர்ஜுனனைச் சந்தித்த துச்சலை; சமாதானத்துக்கு மன்றாடியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "போரிட்டுக் கொண்டிருந்தவனும், தடுக்கப்பட முடியாதவனுமான அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, போர்க்களத்தில் இமயத்தைப் போல அசைக்க முடியாதவனாக நின்றான்.(1) மீண்டும் அணிதிரண்ட சைந்தவப் போர்வீரர்கள், பெரும் கோபத்துடன் மீண்டும் மீண்டும் அவன் மீது கணைமாரியைப் பொழிந்தனர்.(2) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன், மீண்டும் அணிதிரண்டு வந்திருப்பவர்களும், மரணத்தின் விளிம்பில் நிற்பவர்களுமான தன் பகைவர்களைக் கண்டு சிரித்து, அவர்களிடம் மென்மையான சொற்களில்,(3) "உங்கள் சக்திக்கு முடிந்த அளவில் என்னுடன் போரிட்டு என்னை வெல்ல முயற்சிப்பீர். எனினும், உங்கள் அனைவருக்கும் பேராபத்துக் காத்திருப்பதால், அவசியமான செயல்கள் அனைத்தையும் செய்துவிடுவீராக.(4) உங்கள் கணை மேகங்கள் அனைத்தையும் கலங்கடித்து நான் உங்கள் அனைவருடன் போரிடுவதைக் காண்பீர். போரில் விருப்பம் உள்ள நீங்கள் சற்றே பொறுப்பீராக. நான் விரைவில் உங்கள் செருக்கைத் தணிப்பேன்" என்றான்.(5)
காண்டீவதாரி {அர்ஜுனன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, கோபத்தில் இச்சொற்களைச் சொன்னாலும், தன் அண்ணனின் {யுதிஷ்டிரனின்} சொற்களை நினைவுகூர்ந்தான்.(6) அச்சொற்கள், "ஓ! குழந்தாய் {அர்ஜுனா}, போரில் உன்னை எதிர்த்து வரும் க்ஷத்திரியர்களை நீ கொல்லாதே. எனினும் அவர்கள் உன்னால் வெல்லப்பட வேண்டும்" என்பனவாகும். மனிதர்களில் முதன்மையான பல்குனன் {அர்ஜுனன்}, பேரான்மாவும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறே சொல்லி அனுப்பப்பட்டான். எனவே அவன் தனக்குள், "என் அண்ணனால் இவ்வாறே நான் சொல்லி அனுப்பப்பட்டேன். என்னை எதிர்த்து வரும் போர்வீரர்களைக் கொல்லக்கூடாது.(7,8) நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் சொற்களைப் பொய்யாக்கும் வகையில் நான் செயல்படக்கூடாது" எனச் சிந்திக்கத் தொடங்கினான்.(9)
இத்தீர்மானத்திற்கு வந்தவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான பல்குனன் {அர்ஜுனன்}, போரில் சீற்றத்துடன் இருந்த சைந்தவர்கள் அனைவரிடமும், இந்தச் சொற்களில்,(10) "நான் உங்களுக்கு நன்மையானதைச் சொல்லப் போகிறேன். நீங்கள் எனக்கு எதிரில் நின்றாலும், நான் உங்களைக் கொல்ல விரும்பவில்லை. உங்களில் எவன் என்னிடம் என்னால் வெல்லப்பட்டதாகவும், அவன் என்னுடையவன் என்றும் சொல்கிறானோ, அவன் என்னால் விடப்படுவான்.(11) என்னுடைய இந்தச் சொற்களைக் கேட்டு, உங்கள் நன்மைக்கு எது சிறந்ததோ அவ்வகையில் என்னிடம் செயல்படுவீராக. வேறு வகையில் செயல்படுவதன் மூலம் நீங்கள் உங்களைப் பேராபத்தான நிலையில் நிறுத்திக் கொள்வீர்[1]" என்றான்.(12)
[1] கும்பகோணம் பதிப்பில், "புருஷஸ்ரேஷ்டனும் தர்மத்தை அறிந்தவனுமான அந்த அர்ஜுனன் அப்பொழுது இவ்விதம் ஆலோசித்து யுத்தத்தில் அடங்காத மதங்கொண்டவர்களும் (யுத்தத்திற்கு) ஆயத்தர்களாக இருப்பவர்களுமான ஸைந்தவர்களை நோக்கி, ‘உங்களுடைய பாலர்களையும், ஸ்திரீகளையும், "யுத்தத்தில் (உம்மால்) ஜயிக்கப்பட்டேன். உம்முடையவனாக இருக்கிறேன்" என்று சொல்பவனையும் கொல்ல மாட்டேன். என்னுடைய இந்த வார்த்தையைக் கேட்டு உங்களுக்கு நன்மையைச் செய்து கொள்ளுங்கள். இதற்கு மாறுதலாகச் செய்தால் என்னால் பீடிக்கப்பட்டுக் கஷ்டத்தை அடைந்தவர்களாவீர்கள்’ என்ற வாக்கியத்தைச் சொன்னான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தர்மத்தை அறிந்தவனான அவன், போரில் அடங்காமல் இருந்த சைந்தவர்களிடம், "இந்தப் போரில், உங்களில் "நான் ஒரு குழந்தை, நான் ஒரு பெண். என்னைக் கொல்லாதீர். நான் உம்மால் வெல்லப்பட்டேன்" என்று சொல்பவர்களை நான் கொல்ல மாட்டேன். நான் சொல்லும் இந்தச் சொற்களைக் கேட்டு, உங்களுக்குச் சிறந்ததைச் செய்து கொள்வீராக. மாறாகச் செய்தால் அச்சத்தால் பீடிக்கப்பட்டு, பெரும் கடினங்களைச் சந்திப்பீர்கள்" என்றான்" என்றிருக்கிறது.
அந்தக் குருக்களின் தலைவன் {அர்ஜுனன்}, வீரமிக்கப் போர்வீரர்களிடம் இச்சொற்களைச் சொல்லிவிட்டு, அவர்களுடன் போரிடத் தொடங்கினான். அர்ஜுனன் கோபத்தால் தூண்டப்பட்டான். வெற்றியை விரும்பிய அவனது பகைவர்களும் இணையாகச் சினமூண்டிருந்தார்கள்.(13) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சைந்தவர்கள் காண்டீவதாரியின் மீது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நேர்க்கணைகளைத் தொடுத்தனர்.(14) தனஞ்சயன், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், பயங்கரமான கூர்முனைகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகள் தன்னிடம் வருவதற்கு முன்பே கூர்த்தீட்டப்பட்ட தன் கணைகளைக் கொண்டு அவற்றை வெட்டி வீழ்த்தினான்.(15) கங்க இறகுகளைக் கொண்ட அந்தக் கூரிய கணைகளை வெட்டி வீழ்த்திய அர்ஜுனன், தன்னை எதிர்த்த ஒவ்வொரு வீரனையும் கூர்த்தீட்டப்பட்ட ஒரு கணையால் துளைத்தான்.(16) தனஞ்சயனே {அர்ஜுனனே} தங்கள் மன்னன் ஜயத்ரதனைக் கொன்றான் என்பதை நினைவுகூர்ந்த அந்தச் சைந்தவ க்ஷத்திரியர்கள், அவன் மீது பராஸங்களையும், ஈட்டிகளையும் பெரும் சக்தியுடன் ஏவினர்.(17)
கிரீடம் தரித்தவனும், பெரும் வலிமை கொண்டவனுமான தனஞ்சயன், அந்த ஆயுதங்கள் எவையும் தன்னை அடைவதற்கு முன்பே அவை அனைத்தையும் துண்டித்து அவர்களது நோக்கத்தைக் கலங்கடித்தான். இப்படியே நீண்ட காலமானதில் பாண்டுவின் மகன் பெருங்கோபம் கொண்டான்.(18) வெற்றியடையும் விருப்பத்தில் தன்னை நோக்கி விரைந்து வரும் போர்வீரர்களின் தலைகளை அவன் நாராசங்களாலும், பல்லங்களாலும் வீழ்த்தினான்.(19) பலர் தப்பி ஓடினர், பலர் அர்ஜுனனை நோக்கி விரைந்தனர்; பலர் அசையாமல் இருந்தனர்; எனினும் அவர்கள் அனைவரும் பெருங்கடலின் முழக்கத்திற்கு ஒப்பான பேரொலியுடன் கதறினர்.(20) அளவிலா வலிமைகொண்ட பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} தங்கள் பலத்திற்கும், ஆற்றலுக்கும் தகுந்தபடி போரிட்டுக் கொண்டிருந்த அவர்கள் அவனால் கொல்லப்பட்டனர்.(21) அந்தப் போரில் களைத்துப் போன விலங்குகள் மேலிருந்த போர்வீரர்களைத் தன் கூரிய கணைகளின் மூலம் உணர்விழக்கச் செய்வதில் பார்த்தன் {அர்ஜுனன்} வென்றான்.(22)
அப்போது, அவர்களுடைய {சைந்தவர்களின்} ராணியும், திருதராஷ்டிரன் மகளுமான துச்சலை, அர்ஜுனனால் அவர்கள் உற்சாகமிழப்பதை அறிந்து, தன் கரங்களில் தன் பேரனை எடுத்துக் கொண்டு அர்ஜுனனிடம் வந்தாள்.(23) அந்தக் குழந்தை (ஜெயத்ரதனின் மகனான) சுரதனின் {ஸுரதனின்} மகனாவான். அந்தத் துணிச்சல்மிக்க இளவரசன் {சுரதன்}, சைந்தவப் போர்வீரர்கள் அனைவரின் பாதுகாப்புக்காக, தன் தேரில் தன் தாய்மாமனிடம் {அர்ஜுனனிடம்} சென்றான்.(24) தனஞ்சயனிடம் வந்த ராணி {துச்சலை}, கவலையால் அழத் தொடங்கினாள் பலமிக்கவனான தனஞ்சயன் அவளைக் {துச்சலையைக்} கண்டதும் தன் வில்லைக் கீழே போட்டான்[2].(25) தன் வில்லைக் கைவிட்ட பார்த்தன், தன் தங்கையை {துச்சலையை} முறையாக வரவேற்று, தன்னால் அவளுக்கு என்ன செய்ய முடியும் என்பதை விசாரித்தான். அந்த ராணி {துச்சலை} அவனிடம், (26) "ஓ!பாரதர்களின் தலைவா, இந்தக் குழந்தை உன் தங்கை மகனின் மகனாவான். ஓ! பார்த்தா, இவன் உன்னை வணங்குகிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவனைப் பார்ப்பாயாக" என்றாள்.(27)
[2] கும்பகோணம் பதிப்பில், "திருதராஷ்டிரனுடைய பெண்ணான துச்சலையானவள் அவர்களெல்லாரும் மிக்க வாட்டமுற்றிருப்பதை அறிந்து (தனக்குப்) பேரனும், ஸுரதனுடைய புத்திரனும், வீரனுமான பாலனை ரதத்தில் வைத்துக் கொண்டு அப்பொழுது எல்லாப் போர்வீரர்களின் க்ஷேமத்திற்காகவும் பாண்டவனிடம் வந்தாள். அவள் அப்பொழுது, தனஞ்சயனிடம் வந்து தீனஸ்வரத்துடன் அழுதாள். பிரபுவான தனஞ்சயன் அவளைக் கண்டு வில்லைக் கீழே போட்டுவிட்டான்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பபில், "திருதராஷ்டிரன் மகளான துச்சலை, அவர்கள் அனைவரும் உற்சாகமிழுந்திருப்பதை அறிந்தாள். அவள், சிறுவனும், சுரதனின் மகனுமான தன் பேரனை அழைத்துக் கொண்டு, அந்தத் துணிச்சல் மிக்கவனின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி முன்னேறிச் சென்றாள். போர்வீரர்கள் அனைவருக்குமான சாமாதானத்தை விரும்பி அவள் அந்தப் பாண்டவனிடம் சென்றாள். தனஞ்சயனை அடைந்த அவள் பரிதாபகரமாக ஒப்பாரியிட்டாள். தலைவனான தனஞ்சயன் அவளைக் கண்டதும் தன் வில்லைத் தூக்கிப் போட்டான்" என்றிருக்கிறது.
அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட பார்த்தன், தன் மருமகனை {சுரதனைக்} குறித்து விசாரிக்கும் வகையில் "அவன் எங்கே?" என்று கேட்டான்.(28) துச்சலை, "தன் தந்தையின் படுகொலையால் துயரில் எரிந்து கொண்டிருந்தவனும், இந்தக் குழந்தையின் வீரத்தந்தையுமான அவன் {சுரதன்} பெரும் இதயத் துயரில் இறந்தான். அவன் எவ்வாறு மரணமடைந்தான் என்பதைக் கேட்பாயாக.(29) ஓ! தனஞ்சயா, ஓ! பாவமற்றவனே, அவனுடைய தந்தையான ஜெயத்ரதர் உன்னால் கொல்லப்பட்டார் என்பதை அவன் ஏற்கனவே கேட்டிருந்தான். இதனால் பெரும் துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்த அவன், வேள்விக் குதிரையைப் பின்தொடர்ந்து, அதைப் பாதுகாப்பவனாக நீ வந்திருப்பதைக் கேட்ட உடனேயே கீழே விழுந்து தன் உயிர்மூச்சை விட்டான். உண்மையில், பெருந்துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்த அவன், உன் வருகையைக் கேட்டவுடனேயே தன் உயிரை விட்டான். ஓ தலைவா, அவன் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைக் கண்டு, உன்னிடம் பாதுகாப்பை விரும்பிய நான், அவனுடைய குழந்தையை {சுரதனின் மகனை} அழைத்துக் கொண்டு உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன்" என்று பதிலளித்தாள் {துச்சலை}. இந்தச் சொற்களைச் சொன்ன திருதராஷ்டிரன் மகள் பெரும் துன்பத்தால் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.(30-33)
அர்ஜுனன், பெரிதும் உற்சாகமிழந்த இதயத்துடன் அவள் முன்பு நின்றான். உற்சாகமிழந்திருந்த அந்தத் தங்கை {துச்சலை}, உற்சமிழந்திருந்த தன் அண்ணனிடம் {அர்ஜுனனிடம்}, இந்தச் சொற்களில், "உன் தங்கையைப் பார். உன் தங்கை மகனின் குழந்தைப் பார்.(34) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஒவ்வொரு கடமையையும் முழுமையாக அறிந்தவனே, குரு இளவரசனையும் (துரியோதனனையும்), தீயவரான ஜெயத்ரதரையும் மறந்து, இந்தக் குழந்தைக்குக் கருணை காட்டுவதே உனக்குத் தகும்.(35) பகைவீரர்களைக் கொல்பவனான பரிக்ஷித் அபிமன்யுவுக்குப் பிறந்திருப்பதைப் போலவே, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், என் பேரனுமான இந்தக் குழந்தையும் சுரதனில் இருந்து பிறந்திருக்கிறான்.(36) ஓ! மனிதர்களின் தலைவா, போர்வீரர்கள் அனைவரின் பாதுகாப்பை விரும்பியே இவனை அழைத்துக் கொண்டு நான் உன்னிடம் வந்திருக்கிறேன். நான் சொல்லும் இந்தச் சொற்களைக் கேட்பாயாக.(37)
ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா {அர்ஜுனரே}, தீயவரான உன்னுடைய பகைவருடைய இந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு நான் இப்போது வந்திருக்கிறேன். எனவே, இந்தக் குழந்தையிடம் இரக்கம் காட்டுவதே உனக்குத் தகும்.(38) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, இந்தக் குழந்தை உனக்குத் தலைவணங்குவதன் மூலம் உன்னை நிறைவடையச் செய்ய விரும்புகிறான். இவன் உன்னிடம் அமைதியை {சமாதானத்தை} வேண்டுகிறான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, அமைதியை ஏற்படுத்துவாயாக.(39) ஓ! ஒவ்வொரு கடமையையும் அறிந்தவனே, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களை இழந்தவனும், என்ன நடந்தது என்ற எதையும் அறியாதவனுமான இந்தக் குழந்தையிடம் நிறைவடைவாயாக. கோபவசப்படாதே.(40) உன்னை மிகவும் புண்படுத்தியவரும், அவமதித்தவரும், கொடூரமானவரும், உங்களுக்குப் பெரும் குற்றத்தை இழைத்தவருமான இவனுடைய பாட்டாவை {ஜெயத்ரதரை} மறந்து, இந்தக் குழந்தைக்கு இரக்கம் காட்டுவதே உனக்குத் தகும்" என்றாள் {துச்சலை}.(41)
ராணி காந்தாரியையும், மன்னன் திருதராஷ்டிரனையும் நினைத்துப் பார்த்துத் துயரில் பீடிக்கப்பட்ட தனஞ்சயன், தன்னிடம் இவ்வாறு சொன்ன துச்சலையிடம் க்ஷத்திரிய நடைமுறைகளை நிந்தித்துக் கொண்டே,(42) "அற்பனும், நாட்டாசை கொண்டவனும், பகட்டு நிறைந்தவனுமான துரியோதனனுக்கு ஐயோ. ஐயோ, அவனுக்காகவே உன் உற்றார் உறவினர் அனைவரும் என்னால் யமனுலகுக்கு அனுப்பப்பட்டனர்" என்றான்.(43) இவ்வாறு சொல்லி தன் தங்கைக்கு ஆறுதலளித்த தனஞ்சயன், அமைதியை ஏற்படுத்திக் கொள்ள இணங்கினான். உற்சாகத்துடன் அவளைத் தழுவி கொண்டு, அவளிடம் அரண்மனைக்குத் திரும்பிச் செல்லுமாறு சொல்லி அவளுக்கு விடை கொடுத்தான்.(44) துச்சலைத் தன் போர்வீரர்கள் அனைவரையும் பெரும்போரில் இருந்து விலக்கி, பார்த்தனை வழிபடச் செய்தாள். அழகிய முகம் கொண்ட அவள், தன் சுவடுகளைப் பின்பற்றித் தன் வசிப்பிடத்திற்குச் சென்றாள்.(45)
இவ்வாறு அந்தச் சைந்தவ வீரர்களை வென்ற தனஞ்சயன், விரும்பியவாறு திரியத் தொடங்கிய குதிரையைப் பின்தொடர்ந்து சென்றான்.(46) ஆகாயத்தில் மானை {மானின் வடிவில் தப்பிச் சென்ற வேள்வியைப்} பின்தொடர்ந்த தெய்வீக பினாகபாணியை {சிவனைப்} போலவே வீர அர்ஜுனனும் அந்தக் குதிரையை முறையாகப் பின்தொடர்ந்தான்.(47) அந்தக் குதிரை, அர்ஜுனனின் அருஞ்செயல்களைப் பெருக்கிய வண்ணம், தன் விருப்பப்படி ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு நாடுகளில் திரிந்தது.(48) விருப்பப்படி திரிந்த அந்தக் குதிரை, ஓ! மனிதர்களின் தலைவா, பாண்டு மகனால் பின்தொடரப்பட்டுக் காலப்போக்கில் மணிப்புரத்தின் ஆட்சியாளனுடைய {பப்ருவாஹனனின்} ஆட்சிப்பகுதியை அடைந்தது" {என்றார் வைசம்பாயனர்}.(49)
அஸ்வமேதபர்வம் பகுதி – 78ல் உள்ள சுலோகங்கள் : 49
ஆங்கிலத்தில் | In English |