The promise of Vyasa! | Asramavasika-Parva-Section-28 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 28)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனின் நலம் விசாரித்த வியாசர்; விதுரனின் உண்மை வடிவம் முதலியவற்றைக் கூறியது; மற்ற முனிவர்களால் செய்ய முடியாத திருதராஷ்டிரனுடைய விருப்பத்தைச் செய்வதாக உறுதிமொழி அளித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "உயர் ஆன்ம பாண்டவர்கள் அனைவரும் அமர்ந்ததும், சத்தியவதியின் மைந்தனான வியாசர்,(1) "ஓ! வலிய கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, உன்னால் தவங்கள் செய்ய முடிந்ததா? ஓ! மன்னா, காட்டில் வசிப்பதில் உன் மனம் நிறைவடைகிறதா?(2) போரில் உன் மகன்கள் கொல்லப்பட்டதில் பிறந்த உன் துயரம் உன் இதயத்தில் இருந்து மறைந்ததா? ஓ! பாவமற்றவனே, உன் கருத்துகள் அனைத்தும் இப்போது தெளிவடைந்துள்ளனவா?(3) உன் இதயத்தை உறுதியாகச் செய்து கொண்டு காட்டு வாழ்வுக்கான விதிமுறைகளை நீ பின்பற்றுகிறாயா? என் மருமகளான காந்தாரி, துயரில் மூழ்கத் தன்னை அனுமதித்துக் கொள்கிறாளா?(4) அவள் பெரும் ஞானம் கொண்டவளாவாள். புத்தியுள்ள அந்த ராணி {காந்தாரி}, அறம், பொருள் ஆகிய இரண்டையும் புரிந்து கொண்டவளாவாள். செழிப்பு மற்றும் வறுமை ஆகிய இரண்டுக்கும் தொடர்புடைய உண்மைகளை அவள் நன்கறிந்தவளாவாள். அவள் இன்னும் வருந்துகிறாளா?(5)
ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, பெரியோருக்குத் தொண்டாற்றுவதில் உள்ள அர்ப்பணிப்பின் விளைவால் தன் பிள்ளைகளை விட்டகன்ற குந்தி, உன் தேவைகளைக் கவனித்துப் பணிவுடன் உனக்குத் தொண்டாற்றுகிறாளா?(6) உயர்ந்த மனம் கொண்டவனும், உயர் ஆன்மாவும், தர்மனின் மகனுமான மன்னன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்கள் போதுமான அளவுக்குத் தேற்றப்பட்டனரா?(7) இவர்களைக் கண்டதில் நீ மகிழ்ச்சியடைகிறாயா? அனைத்துக் களங்கங்களில் இருந்தும் உன் மனம் விடுபட்டிருக்கிறதா? ஓ! மன்னா, ஞானம் பெருகியதன் விளைவால் உன் மனோநிலை தூய்மையடைந்ததா?(8) ஓ! மன்னா, ஓ! பாரதா, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமை, வாய்மை மற்றும் கோபத்தில் இருந்து விடுதலை என்ற இந்த முத்தொகை காரியங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(9) உன்னுடைய இந்தக் காட்டு வாழ்க்கை இன்னும் உனக்குத் துன்பத்தைத் தருகிறதா? காட்டின் விளைச்சலில் இருந்து உன் சொந்த முயற்சியின் மூலமே உனக்கான உணவை உன்னால் ஈட்டிக் கொள்ள முடிகிறதா? உண்ணா நோன்புகள் இப்போது உனக்குத் துன்பத்தைத் தருகின்றனவா?(10)
ஓ! மன்னா, தர்மனின் சுயமாக இருந்த உயர் ஆன்ம விதுரன் எவ்வாறு இவ்வுலகிவிட்டு அகன்றான் என்பதை நீ அறிந்தாயா?(11) மாண்டவ்யரின் {ஆணிமாண்டவ்யரின்} சாபத்தின் மூலம் அறத்தேவன் விதுரனாகப் பிறந்திருந்தான். அவன் {விதுரன்} பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாக இருந்தான். உயர்ந்த தவங்களையும், உயர்ந்த ஆன்மாவையும், உயர்ந்த மனத்தையும் கொண்டவனாக அவன் இருந்தான்.(12) தேவர்களுக்கு மத்தியில் பிருஹஸ்பதியும், அசுரர்களுக்கு மத்தியில் சுக்ரனும் கூட இந்த முதன்மையான மனிதனைப் போல இத்தகைய நுண்ணறிவைக் கொண்டிருந்ததில்லை.(13) முனிவர் மாண்டவ்யர் நெடுங்காலம் ஈட்டிய தன் தவச் சக்தியை அழித்து அறத்தின் நித்திய தேவனை {தர்மதேவனை} கலங்கடித்தார் {சபித்தார்}[1].(14) பெரும்பாட்டனின் ஆணையின் பேரிலும், என் சொந்த சக்தியின் மூலமும், விசித்ரவீரியனுக்கு உரிய நிலத்தில் பெரும் நுண்ணறிவுமிக்க விதுரன் என்னால் உண்டாக்கப்பட்டான்.(15)
[1] "ஒரு பிராமணர் மற்றொருவரைச் சபிக்கும்போதெல்லாம் அவருடைய தவங்கள் அழிவை அடைகின்றனர். பொறுமையே பிராமணனின் உயர்ந்த பண்பு. அவனுடைய பலமே பொறுமையில்தான் அடங்கியிருக்கிறது. எனவே, மாண்டவ்யர் தர்மனை சபித்தபோது கடினமாக ஈட்டப்பட்ட தவங்களின் ஒரு பகுதியை அவர் அழிக்க வேண்டியிருந்தது. முன்பு தர்மனின் அவையில் சிறுவர்களின் வேண்டுதல் கேட்கப்பட முடியாது. மாண்டவ்யர் குற்றங்களுக்கான தண்டனைகளின் காரியத்தில் அந்த வேண்டுதலை அனுமதிக்கத் தர்மனைக் கட்டாயப்படுத்தினார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். ஆணி மாண்டவ்யரின் கதை ஆதிபர்வம் பகுதில் சொல்லப்பட்டுள்ளது.
ஓ! மன்னா, நித்தியமான தேவர்களுக்குத் தேவன் {தர்மன்} உன் தம்பியாக இருந்தான். அவனுடைய {விதுரனின்} தாரணை மற்றும் தியான பயிற்சிகளின் விளைவால் கல்விமான்கள் அவனைத் தர்மனாக அறிந்தனர்[2].(16) வாய்மை, தற்கட்டுப்பாடு, இதய அமைதி, கருணை மற்றும் கொடைகளுடன் சேர்ந்து அவன் {தர்மன்} வளர்கிறான். எப்போதும் தவங்களில் ஈடுபடும் அவன் நித்தியமானவனாவான்.(17) அந்த அறத் தேவனின் யோக பலத்தின் மூலமே குரு மன்னன் யுதிஷ்டிரனும் தன் பிறப்பை எடுத்தான். எனவே, யுதிஷ்டிரன், பெரும் ஞானமும், அளவிலா நுண்ணறிவும் கொண்ட தர்மனாக இருக்கிறான்.(18) தர்மன் இம்மையிலும், மறுமையிலும் இருக்கும் நெருப்பையோ, காற்றையோ, நீரையோ, நிலத்தையோ, வெளியையோ போன்றவனாவான்.(19) ஓ!மன்னர்களின் மன்னா, அவன் எங்கும் செல்ல வல்லவனாகவும் மொத்த அண்டத்திலும் நீக்கமற நிறைந்தவனாகவும் இருக்கிறான். முதன்மையான தேவர்கள், அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தவர்கள் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் ஆகியோரால் மட்டுமே காணப்படக்கூடியவனாக அவன் இருக்கிறான்.(20)
[2] "தாரணை மற்றும் தியானம் ஆகிய இரண்டும் யோகத்தின் நிலைகளாகும். முன்னது, ஒரு பொருளில் மனத்தை நிலைகொள்ளச் செய்வதாகும்; பின்னது, சூழ்ந்திருக்கும் பொருட்களில் இருந்து மனத்தை நுண்மமாக்கி விலக்குவதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தர்மனே விதுரனாவான்; விதுரனே பாண்டுவின் (மூத்த) மகனாவான் {யுதிஷ்டிரனாவான்}. ஓ! மன்னா, அந்தப் பாண்டுவின் மகனை உன்னால் காண முடியும். அவன் உன் முன்னிலையில் ஒரு பணியாளாக இருக்கிறான்.(21) பெரும் யோக பலம் கொண்டவனும், நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையாவனும், உயர் ஆன்மாகக் கொண்டவனுமான உன் தம்பி {விதுரன்}, குந்தியின் மகனான உயர் ஆன்ம யுதிஷ்டிரனைக் கண்டு அவனது மேனிக்குள் புகுந்துவிட்டான்.(22) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, உனக்கும் நான் பெரும் நன்மையைச் செய்வேன். ஓ! மகனே, நான் உன் ஐயங்களை விலக்கவே இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக.(23) வேறு எந்தப் பெரும் முனிவராலும் இதற்கு முன்பு செய்யப்படாத அருஞ்செயலையும், என் தவங்களின் விளைவால் ஏற்படும் சில ஆச்சரியங்களையும் நான் உனக்குக் காட்டப் போகிறேன்.(24) ஓ! மன்னா, என்னிடம் இருந்து எதை நீ அடைய விரும்புகிறாய்? எதைப் பார்க்கவோ, தீண்டவோ, கேட்கவோ விரும்புகிறாய் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! பாவமற்றவனே, நான் அதை நிறைவேற்றுவேன்" என்றார் {வியாசர்}.(25)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 28ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 28ல் உள்ள சுலோகங்கள் : 25
*********ஆஸ்ரமவாஸ உபபர்வம் முற்றும்*********
ஆங்கிலத்தில் | In English |