The goal said by Vyasa! | Mausala-Parva-Section-8 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : வியாசரைக் கண்டு துவாரகையின் அழிவைக் கூறிய அர்ஜுனன்; பாண்டவர்களும் சொர்க்கமடைவர் என்று சொன்ன வியாசர்; துவாரகையின் செய்தியை யுதிஷ்டிரனிடம் சொன்ன அர்ஜுனன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "வாய்மை நிறைந்த முனிவரின் {வியாசரின்} ஆசிரமத்திற்குள் நுழைந்த அர்ஜுனன், ஒரு தனிப்பட்ட இடத்தில் சத்யவதியின் மகன் {வியாசர்} அமர்ந்திருப்பதைக் கண்டான்.(1) உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தின் அறிவைக் கொண்டவருமான அந்த முனிவரை அணுகிய அவன், "நான் அர்ஜுனன் வந்திருக்கிறேன்" என்று சொல்லி அவருக்காகக் காத்திருந்தான்.(2)
உயர்ந்த தவங்களுடன் கூடிய சத்யவதியின் மகன் {வியாசர்} "நல்வரவு" என்று பதிலளித்தார். அமைதியான ஆன்மாவைக் கொண்ட அந்தப் பெருமுனிவர், மேலும், "இருக்கையில் அமர்வாயாக" என்று சொன்னார்.(3) பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, பெரிதும் உற்சாசகம் இழந்தவனாகவும், மீண்டும் மீண்டும் பெருமூச்சுகளை விடுபவனாகவும், கவலை நிறைந்தவனாகவும் இருப்பதைக் கண்ட வியாசர், அவனிடம்,(4) "வேறு எவரின் நகங்கள் அல்லது முடியிலிருந்தோ, வேறு எவரின் துணியின் முனையில் இருந்தோ, குடுவையின் {குடத்தின்} வாயிலிருந்தோ உன் மீது நீர் தெளிக்கப்பட்டதா? மாதவிடாய் காலம் முடிவடைவதற்கு முன்பே எந்தப் பெண்ணுடனும் கலவியில் ஈடுபட்டாயா? பிராமணனைக் கொன்றாயா?(5) போரில் வெல்லப்பட்டாயா? நீ செழிப்பை இழந்தவனைப் போலக் காணப்படுகிறாய். நீ எவராலும் வீழ்த்தப்பட்டாயா என்பதை நான் அறியேன். ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, நீ ஏன் பெரிதும் நொந்து போன தன்மையுடன் இருக்கிறாய்? ஓ! பிருதையின் மகனே, இவற்றைச் சொல்வதில் உண்மையில் எத்தீங்கும் இல்லையெனில் அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்" என்றார் {வியாசர்}.(6)
அர்ஜுனன் {வியாசரிடம்}, "(புதிதாய் எழுந்த) மேகம் போன்ற நிறத்தைக் கொண்டவனும், இரு தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக் கொண்டவனுமான கிருஷ்ணன், ராமருடன் {பலராமருடன்} சேர்ந்து தன் உடலைக் கைவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(7) பிரபாஸத்தில், பிராமணர்களால் இடப்பட்ட சாபத்தில் உண்டான இரும்பு உலக்கைகளின் {முசலங்களின்} மூலம் விருஷ்ணி வீரர்களுக்கு அழிவேற்பட்டது. அந்தப் பேரழிவு பயங்கரமானதாக இருந்தது, ஒரேயொரு வீரன் கூட அதில் தப்பவில்லை.(8) ஓ! பிராமணரே, உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், சிங்கம் போன்ற செருக்குடையவர்களுமான போஜ, அந்தக, விருஷ்ணி குலத்து வீரர்கள் போரில் ஒருவரையொருவர் கொன்றனர்.(9) இரும்பு கதாயுதங்கள் போலத் தெரியும் கரங்களைக் கொண்டவர்களும், கனத்த தண்டங்கள், ஈட்டிகளின் தாக்குதலையும் தாங்கவல்லவர்களுமான அவர்கள் அனைவரும், ஐயோ, ஏரகப் புற்களினால் கொல்லப்பட்டனர். காலவோட்டத்தின் முரணைக் காண்பீராக.(10)
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரர்கள் ஐநூறாயிரம் {ஐந்து லட்சம் 5.00.000} பேர் இவ்வாறு வீழ்த்தப்பட்டனர். ஒருவரோடொருவர் மோதி அவர்கள் அழிவை அடைந்தனர்.(11) அளவிலா சக்தி கொண்ட யாதவ வீரர்களுக்கு நேர்ந்த இந்தப் பேரழிவையும், சிறப்புமிக்கக் கிருஷ்ணனுக்கு நேர்ந்த அழிவையும் மீண்டும் மீண்டும் நினைத்து மனத்தில் அமைதியைப் பெறத் தவறுகிறேன்.(12) சாரங்கபாணியின் {கிருஷ்ணனின்} மரணம், பெருங்கடல் வற்றியதைப் போல, மலை நகர்ந்ததைப் போல, சொர்க்கம் விழுந்ததைப் போல, நெருப்பு குளிர்ந்ததைப் போல நம்ப முடியாததாக இருக்கிறது.(13) விருஷ்ணி வீரர்களின் துணையை இழந்த நான் இவ்வுலகில் வாழ விரும்பவில்லை.(14)
ஓ! தவங்களையே செல்வமாகக் கொண்டவரே, இதைவிட அதிகத் துன்பம் நிறைந்த மற்றொரு நிகழ்ச்சி நடந்தது. அதை மீண்டும் மீண்டும் நினைத்தே என் இதயம் பிளக்கிறது.(15) ஓ! பிராமணரே, ஐந்து நீர்நிலைகள் உள்ள நாட்டில் {பஞ்சநதத்தில் / பஞ்சாபில்} நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆயிரக்கணக்கான விருஷ்ணி பெண்கள் ஆபிரர்களால் அபகரிக்கப்பட்டனர்.(16) என் வில்லை நான் எடுத்தபோது அதில் நாண்பூட்டவதற்கு இணையானவனாக நான் இல்லை. என் கரங்களில் இருந்த வலிமை அந்தச் சந்தர்ப்பத்தில் மறைந்தவிட்டதாகத் தெரிந்தது.(17) ஓ! பெரும் தவசியே {வியாசரே}, என்னுடைய பல்வேறு வகை ஆயுதங்கள் வெளிப்படத் தவறின. மேலும் என் கணைகள் விரைவில் தீர்ந்த போயின.(18)
அளவிலா ஆன்மா கொண்டவனும், நான்கு கரங்களைக் கொண்டவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் தரித்தவனும், மஞ்சள் ஆடை உடுத்தியவனும், கரிய நிறத்தவனும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களையும் கொண்டவனை இப்போது என்னால் காணமுடியவில்லை. ஐயோ, கோவிந்தன் {கிருஷ்ணன்} இல்லாமல் என் வாழ்வை துயரில் இழுத்துக் கொண்டு நான் எதற்காக வாழ வேண்டும்?(19) என் தேருக்கு முன் செல்பவனும், பெருங்காந்தியும் மங்காத பலமும் கொண்டவனும், செல்லும் போதே பகை போர்வீரர்களை எரிப்பவனுமான அந்தத் தெய்வீக வடிவத்தை இப்போது என்னால் காண முடியவில்லை.(20) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, முதலில் எவனுடைய சக்தியால் பகை துருப்புகள் அனைத்தையும் எரித்து, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் அதன்பிறகு அவர்களைக் கொன்றேனோ அவனை இப்போது என்னால் காணமுடியாமல் நான் துயரால் நிறைகிறேன் என் தலை கிறுகிறுக்கிறது. உற்சாகமின்மை மற்றும் கவலையால் துளைக்கப்பட்டிருக்கும் நான் என் மனத்தில் அமைதியை அடையத் தவறுகிறேன்.(21,22) வீர ஜனார்த்தனன் இல்லாமல் நான் வாழத் துணியேன். எப்போது விஷ்ணு இந்தப் பூமியை விட்டுச் சென்று விட்டான் என்பதைக் கேட்டேனோ அப்போது என் கண்கள் மங்கின, அனைத்தும் என் பார்வையில் இருந்து மறைந்தன.(23) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உற்றார், உறவினரும், ஆற்றலும் கொள்ளைபோனவனான எனக்கு இப்போது நன்மையெது என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான் {அர்ஜுனன்}.(24)
வியாசர் {அர்ஜுனனிடம்}, "விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் பிராமணர்களின் சாபத்தால் எரிக்கப்பட்டனர். ஓ! குருகுலத்தின் தலைவா, அவர்களின் அழிவுக்காக நீ வருந்துவது தகாது.(25) விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. அந்த உயர் ஆன்மப் போர்வீரர்களின் விதி இதுவே. கிருஷ்ணன் இதைக் கலங்கடிக்க முழுவதும் தகுந்தவெனினும், அது நடைபெற வேண்டுமென்றே அவன் அதை அனுபவித்தான்.(26) கோவிந்தன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய அண்டத்தின் போக்கையே மாற்ற இயன்றவனாக இருந்தான். உயர் ஆன்ம பிராமணர்களின் சாபத்தைக் குறித்துச் சொல்ல வேறென்ன இருக்கிறது?(27) எவன் உன் மீது கொண்ட அன்பின் மூலம் சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்துக் கொண்டு உன் முன்பு செல்வானோ, அவன் நான்கு கரம் கொண்ட புராதன முனிவனான வாசுதேவன் ஆவான்.(28) அகன்ற விழிகளைக் கொண்ட கிருஷ்ணன், பூமியின் கனத்தைக் குறைத்து, தன்னுடைய (மனித) உடலைக் கைவிட்டு, தன்னுடைய உயர்ந்த இருக்கையை {கதியை} அடைந்திருக்கிறான்.(29) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, பீமனையும், இரட்டையர்களையும் {நகுல் சகாதேவனையும்} உதவியாகக் கொண்ட உன்னாலும் தேவர்களின் பெரும்பணி நிறைவேறியிருக்கிறது.(30)
ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {அர்ஜுனனே}, நீயும், உன் சகோதரர்களும் உங்களுடைய வாழ்வின் பெரும் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டதால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களென நான் உங்களைக் கருதுகிறேன். நீங்கள் இவ்வுலகத்தில் இருந்து செல்வதற்கான வேளை வந்துவிட்டது. ஓ! பலமிக்கவனே, இதுவே இப்போது உங்களுக்கு நன்மையானது.(31) ஓ! பாரதா, செழிப்பின் நாட்கள் மீறாமல் இருக்கும்போது, புத்தியும், ஆற்றலும், தொலைநோக்குப் பார்வையும் இவ்வாறே எழுகிறது. எதிர்மறையான காலம் வரும்போது இதே உடைமைகள் மறைந்துபோகும்[1].(32) இவை அனைத்தும் காலத்தையே தங்கள் வேராகக் கொண்டுள்ளன. ஓ! தனஞ்சயா, உண்மையில், காலமே அண்டத்தின் வித்தாகும். மேலும், காலமே தன் விருப்பபடி அனைத்தையும் ஈர்க்கிறது[2].(33) ஒருவன் வலிமையடைகிறான், மேலும் வலிமையை இழுந்து பலவீனமாகிறான். ஒருவன் தேர்ந்தவனாகி பிறரை ஆட்சி செய்கிறான், பிறகு அந்நிலையை இழந்து, பிறரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியும் ஒரு பணியாளனாகிறான்.(34) உன் ஆயுதங்கள் வெற்றியை அடைந்து தாம் வந்த இடத்திற்கே சென்றுவிட்டன. மேலும் அவற்றுக்கான காலம் வரும்போது அவை மீண்டும் உன் கரங்களில் வரும்.(35) ஓ! பாரதா, நீங்கள் அனைவரும் உயர்ந்த கதியை அடைவதற்கான காலம் வந்துவிட்டது. ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, இதுவே உங்கள் அனைவருக்குமான உயர்ந்த நன்மையென நான் கருதுகிறேன்" என்றார் {வியாசர்}".(36)
[1] "இங்கே சொல்லப்படும் புத்தி என்பது, நிலைமையைக் கருத்தில் கொண்டு என்ன செய்யப்பட வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்கும் இயல்பு என்றும், பிராப்தி என்பது ஏற்பில்லாத விளைவுகளைத் தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயல்பு என்றும் நீலகண்டர் இங்கே விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பலமும், புத்தியும், தேஜஸும், பிரதிபத்தியும், செல்வம் உண்டாகும் காலங்களில் உண்டாகின்றன; செல்வம் நசிக்கும் காலத்தில் நசிகின்றன" என்றிருக்கிறது. புத்தி என்பதன் அடிக்குறிப்பில், "நேர்ந்திருக்கும் காரியத்தை நிச்சயம் செய்வது என்பது பழைய உரை" என்றும், தேஜஸ் என்பதன் அடிக்குறிப்பில், "மேன்மேலும் தோற்றும் புத்தி என்பது பழைய உரை" என்றும், பிரதிபத்தி என்பதன் அடிக்குறிப்பில், "வரப்போகிற காரியத்தை அறிதல் என்பது பழைய உரை" என்றும் இருக்கின்றன.[2] "இத்தகைய தொடர்பில் காலம் என்பது அண்டத்தின் தலைவன் அல்லது பரம தேவனின் மாற்று அகங்காரமாகக் கருதப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உலகங்களுக்குக் காரணமான இவையெல்லாம் காலத்தை மூலமாகக் கொண்டவை. காலமே (இவற்றைத்) தற்செயலாக மறுபடியும் ஸம்ஹரிக்கிறது" என்றிருக்கிறது. காலம் என்பதன் அடிக்குறிப்பில், "ஈஸ்வரனென்பது பழைய உரை" என்றிருக்கிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அளவிலா சக்தி கொண்ட வியாசரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினான்.(37) அதற்குள் நுழைந்த அந்த வீரன் {அர்ஜுனன்} யுதிஷ்டிரனை அணுகி அவனிடம் விருஷ்ணிகள் குறித்து நடந்தது அனைத்தையும் சொன்னான்" {என்றார் வைசம்பாயனர்}.(38)
*********மௌஸல பர்வம் முற்றும்*********
*********அடுத்தது மஹாப்ரஸ்தானிக பர்வம்*********
மௌஸலபர்வம் பகுதி – 8ல் உள்ள சுலோகங்கள் : 38
![]() |
ஆங்கிலத்தில் | In English | ![]() |