All objects within Lanka became capable of being aimed! | Vana Parva - Section 282 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
ராமனுடைய சொல்லை அங்கதன் ராவணனிடம் சொன்னது; ராமனின் கட்டளையின் பேரில் குரங்குகள் இலங்கையைச் சூறையாடி ராட்சசர்களோடு போர் புரிந்தது; நகரத்தில் இருந்த அனைத்தும் தங்கள் படைக்கு இலக்காகத் தெரியும்படி செய்த பிறகு ராமன் குரங்குகளைப் பின்வாங்கும்படி சொன்னது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பழங்கள், கிழங்குகள் என உணவும், நீரும் நிறைந்திருந்த அந்தத் தோப்புகளில் தனது படையை நிறுத்திய பிறகு, காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்} அவர்களைக் கவனத்துடன் பார்த்துக் கொள்ளத் தொடங்கினான். மறுபுறம் ராவணன், இராணுவ அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு தனது நகரத்தில் பல கருவிகளைப் பொருத்தினான். அவனது நகரம் {இலங்கை}, பலம் வாய்ந்த மதில்களாலும், வாயில்களாலும் இயற்கையாகவே தாக்குதல்களுக்கு அசைந்து கொடுக்காததாக இருந்தது. ஆழமான, விளிம்பு நிறைந்த நீர் கொண்ட ஏழு அகழிகளில் மீன்களும், சுறாக்களும், முதலைகளும் குவிந்திருந்தாலும் கூரிய கருங்காலி முளைகளை {Stakes of Khadira woods} {அவ்வகழிகளில்} நிறைத்து மேலும் {தன் நகரத்தை} அசைந்து கொடுக்காததாக்கினான் {ராவணன்}. கற்கள் குவிக்கப்பட்டிருந்த மதில்களில் கவண் பொருத்தி {அம்மதில்களை} மேலும் அசைந்து கொடுக்காததாக்கினான். (சுவர்களைக் காத்த) போர்வீரர்கள் நஞ்சுகொண்ட பாம்புகள் நிறைந்த மண்குடங்களையும், பலவகையான விஷப்பொடிகளையும் வைத்திருந்தனர். அவர்கள் தண்டம், எரிகொள்ளி, கணைகள், சூலங்கள், வாள்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றையும் ஏந்தியிருந்தனர். மேலும் அவர்கள் சதாக்னிகளையும் [1], மெழுகில் ஊறிய தடித்த கதாயுதங்களையும் [2] வைத்திருந்தனர்.
[1] சரியாகச் சொன்னால் நூறு பேரைக் கொல்லும் இயந்திரம். ஒருவேளை, முரட்டு பீரங்கி வகையைச் சார்ந்ததாக இருக்கலாம் என்கிறார் கங்குலி.
[2] கொள்ளிகளையும், பந்தங்களையும் மெழுகில் ஊற வைப்பது, எரியும் நிலையில் அவற்றை எதிரிகளுக்கு மத்தியில் வீச வேண்டும் என்பதே நோக்கம்.
எரியும் நிலையில் உள்ள, எண்ணையில் ஊறியப் பஞ்சுப் பொதியை, முன்னேறி வரும் ஆங்கிலப்படையை நோக்கி, நகரத்தின் மதில்களில் இருந்து உருளச் செய்து, பாரத்பூரில் இருந்து லேக் துரை எப்படி விரட்டப்பட்டான் என்பதை இந்திய வரலாற்றை வாசித்தறிந்தவர்கள் அறிவார்கள் என்கிறார் கங்குலி
நகரத்தின் {இலங்கையின்} அனைத்து வாயில்களிலும், எண்ணற்ற யானைகளாலும், குதிரைகளாலும் தாங்கப்படும் பெரும் எண்ணிக்கையிலான காலாட்படையைக் கொண்ட, அசையும் மற்றும் அசையாத முகாம்கள் {ஸ்தாவர குல்மங்களும் ஜங்கமகுல்மங்களும்[3]} அமைக்கப்பட்டன. நகரத்தின் வாயில்களை அடைந்த அங்கதன் தன்னை ராட்சசர்கள் அறியச் செய்தான். சந்தேகமோ, அச்சமோ இல்லாமல் அவன் அந்நகரத்திற்குள் நுழைந்தான். கணக்கற்ற ராட்சசர்கள் சூழ சென்ற அந்த வீரன் {அங்கதன்} மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போல அழகாகத் தெரிந்தான். தனது ஆலோசகர்களுக்கு மத்தியில் இருந்த புலஸ்திய குல வீரனை {ராவணனை} அணுகிய நாவன்மை மிக்க அங்கதன் அம்மன்னனை வணங்கி, ராமனின் செய்தியை வழங்கத் தொடங்கினான். அவன் {அங்கதன்}, "ஓ! மன்னா {ராவணா}, கோசலத்தை ஆள்பவனும், முழு உலகம் பரந்த புகழைக் கொண்டவனுமான ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, இச்சூழலுக்குத் தகுந்த வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினான். அந்தச் செய்தியை ஏற்று, அதன்படி செயல்படு. {அது இதுதான்}, "தங்கள் ஆன்மாக்களைக் கட்டப்படுத்த திறனற்ற பாவி மன்னர்களின் தொடர்பின் விளைவால் மாநிலங்களும் {நாடுகளும்}, நகரங்களும் மாசடைந்து அழிவைச் சந்திக்கின்றன. சீதையைப் பலவந்தமாக அபகரித்ததால் நீ மட்டுமே என்னைக் காயப்படுத்தினாய்! எனினும், பல குற்றமற்ற மனிதர்களின் மரணத்திற்கு நீ காரணமாகிறாய். அதிகாரத்தாலும், கர்வத்தாலும், முன்பு நீ, காட்டில் வாழும் பல முனிவர்களைக் கொன்றாய்; தேவர்களையும் அவமதித்தாய். நீ பெரும் மன்னர்கள் பலரையும், அழுது கொண்டிருந்த பல பெண்களையும் கொன்றாய். அந்த உனது வரம்புமீறல்களுக்கான தண்டனை உன்னை மூழ்கடிக்கப்போகிறது! நான் உன்னை உனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} சேர்த்துக் கொல்வேன். போரிட்டு உனது வீரத்தைக் காட்டு [4]. ஓ இரவு உலாவியே, நான் அற்ப மனிதனாக இருப்பினும் எனது வில்லின் சக்தியைப் பார்! ஜனகனின் மகளான சீதையை விடுவி! நீ அவளை விடுவிக்கவில்லையெனில், நான் எனது கூரிய கணைகளால் இந்தப் பூமியை ராட்சசர்களற்றதாகச் செய்வேன்!” {என்று ராமன் சொன்னான்}” என்றான் {அங்கதன்}.
[3] {} என்ற அடைப்புக்குறிக்குள் இருப்பவையான இவை கங்குலியின் மொழி பெயர்ப்பில் இல்லாதவை. கும்பகோணம் பதிப்பில் உள்ளது. குல்மம் என்பது நகரைக் காப்பதற்காக எதிரிகள் அறியாமல் மறைந்திருக்கும் இடம் ஆகும். ஸ்தாவரகுல்மங்கள் என்பது பெரும் மதலைகள் {தூண் போன்ற அமைப்பு} ஆகும். ஜங்கமகுல்மங்கள் என்பது படையணி முதலியவை ஆகும். கோட்டைக் கொத்தளம் என்றும் சொல்லப்படும். இவ்விளக்கம் இன்றைய நடையில் மாற்றப்பட்டுள்ளது.
[4] ஆணாக {புருஷத்தனத்தோடு} நடந்து கொள் என்பது பொருள்! ஆண்மை என்பது ஒரு ராட்சசன் தொடர்பாகப் பொருத்தமானதாக இருக்காது என்கிறார் கங்குலி.
எதிரியின் இந்த இணக்கமற்ற வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ராவணன், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபத்தால் உணர்வற்றவனான். தங்கள் ஆசானின் அனைத்து குறிப்புகளையும் படிப்பதில் நிபுணர்களான நான்கு ராட்சசர்கள், நான்கு பருந்துகள் புலியைப் பிடிப்பது போலப் அங்கதனைப் பிடித்தனர். எனினும் தன்னை உறுதியாகப் பிடித்திருந்த அந்த ராட்சசர்களுடன் மேலே குதித்து அரண்மனையின் மொட்டைமாடியில் இறங்கினான். அப்படி அவன் பெரும் சக்தியுடன் குதித்த போது, அந்த இரவு உலாவிகள் {ராட்சசர்கள்} பூமியில் விழுந்து, அப்படிக் கடுமையாக விழுந்ததால் காயம்பட்டு, தங்கள் விலாக்களை {விலா எலும்புப் பகுதிகளை} உடைத்துக் கொண்டனர். பிறகு அவன் ஏறிய அந்தத் தங்க உப்பரிகையில் இருந்து கீழே குதித்தான். இலங்கையின் சுவர்களைத் தாண்டி குதித்து, தனது தோழர்கள் இருந்த இடத்தில் {சுவேல மலைக்கு அருகில்} இறங்கினான். பிறகு கோசலத் தலைவனின் {ராமனின்} முன்னிலையை அடைந்து, அவனிடம் அனைத்தையும் சொன்ன பெரும் சக்தியுடைய குரங்கான அங்கதன், உரிய மரியாதையுடன் ராமன் விடை கொடுத்ததும், ஓய்வெடுத்துப் புத்துணர்ச்சி பெறச் சென்றான்.
பிறகு, ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, காற்றின் வேகம் கொண்ட அந்தக் குரங்குகளை ஒருங்கிணைந்து தாக்குதல் மூலம் இலங்கையின் மதில்களை உடைக்கச் செய்தான். பிறகு விபீஷணனுடனும், கரடிகளின் மன்னனுடனும் {ஜாம்பவானுடனும்} கூடிய லட்சுமணன், படையின் முன்னணியில் இருந்து, தாக்குதலுக்கு அசைந்து கொடுக்காத அந்நகரத்தின் தென்வாயிலைத் தகர்த்தெறிந்தான். பிறகு ராமன், போர்க்களத்தில் பெரும் நிபுணத்துவம் கொண்டவையும், இளம் ஒட்டகங்களைப் {கரபம் = இளம் ஒட்டகம்} போன்ற சிவந்த நிறம் கொண்டவையுமான நூறாயிரம் கோடி {100000,00,00,000} குரங்குகளுடன் இலங்கையைத் தாக்கினான். பொதுவாகத் தங்கள் அகன்ற இடுப்பின் மூலமே தங்களைத் தாங்கிக் கொண்டு, நீண்ட கரங்களும், கால்களும், பெரும் பாதங்களும் கொண்ட கோடிக்கணக்கான {3 கோடி என்கிறது கும்பகோணம் பதிப்பு} சாம்பல் நிற கரடிகள், அத்தாக்குதலுக்கு உதவியாக இருந்தன. அந்தக் குரங்குகள் மேலும் கீழுமாகவும், குறுக்கும் நெடுக்குமாகவும் குதித்தன் விளைவாக எழுந்த தூசியால், சூரியனின் பிரகாசமான வட்டு முழுவதும் நிழலால் கவ்வப்பட்டு மறைந்து போனது.
நெற்கதிர்கள் போன்ற மஞ்சள் நிறத்திலும், வாகைப்பூக்களைப் {Shirisha flowers = சீரிதம்} போன்ற சாம்பல் நிறத்திலும், உதயசூரியனைப் போன்ற செந்நிறத்திலும், சணலைப் போல வெள்ளை நிறத்திலும் இருந்த குரங்குகளால் மூடப்பட்ட தங்கள் நகரத்தின் சுவர்கள் பழுப்பு நிறத்தை அடைந்திருப்பதை இலங்கையின் குடிமக்கள் கண்டனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் மனைவியரோடும் மூத்தவர்களோடும் இருந்த ராட்சசர்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்தனர். பிறகு அந்தக் குரங்குப் போர்வீரர்கள், விலையுயர்ந்த கற்களாலும் செய்யப்பட்ட தூண்களையும், உப்பரிகைகளையும், அரண்மனைகளின் உச்சிகளையும் இழுத்துப் போட தொடங்கினர். கவண்கள் மற்றும் பிற இயந்திரங்களின் விசைகளையும் சுக்குநூறாக உடைத்த அவர்கள், அவற்றை அனைத்துப் புறங்களிலும் தூக்கி வீசினர். வட்டுகள், தண்டங்கள், கற்களோடு கூடிய சதாக்னிகளைப் பெருத்த ஒலியுடனும், பெரும் சக்தியுடனும் கீழே இருந்த நகரத்தில் தூக்கி எறிந்தனர். அவற்றைப் பாதுகாப்பதற்காகச் சுவர்களில் இருந்த ராட்சசர்கள், அந்தக் குரங்குகளால் தாக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் சடுதியில் தப்பி ஓடினர்.
பிறகு கடும் முகத்தோற்றமும், நினைத்த உருவை அடைய வல்லவர்களுமான நூறாயிரம் ராட்சசர்கள் மன்னனின் {ராவணனின்} உத்தரவின் பேரில் வெளியே வந்தனர். சரியான கணை மழையைப் பொழிந்து, காட்டுவாசிகளை {குரங்குகளை} ஓட்டிய அந்தப் போர்வீரர்கள், தங்கள் பெரும் பராக்கிரமத்தைக் காட்டியபடி, மதில்களை அலங்கரித்தனர். விரைவில், சதைப் பிண்டமாக இருக்கும் அந்தக் கடும் முகம் படைத்த இரவு உலாவிகள் {ராட்சசர்கள்}, அக்குரங்குகளைச் சுவர்களில் இருந்து பலவந்தமாக விரட்டினர். எதிரிகளின் சூலங்களால் சிதைக்கப்பட்ட எண்ணற்ற குரங்குத் தலைவர்கள் மதில்களில் இருந்து கீழே விழுந்தனர். அப்படி அவர்கள் விழுவதால் நடுக்கப்பட்ட தூண்களும், வாயில்களும், எண்ணற்ற ராட்சசர்களும் கூட மீண்டும் எழாத படிக்கு கீழே விழுந்தனர்.
அந்தக் குரங்குகளும், எதிரியைத் தின்ன வந்த வீரமிக்க ராட்சசர்களும் தலைமுடிகளைப் பற்றி ஒருவரை ஒருவர் சிதைத்து, ஒருவரை ஒருவர் தங்கள் நகங்களாலும் பற்களாலும் கிழித்தெறிந்தனர். அந்தக் குரங்குகளும் ராட்சசர்கள் பயங்கரமாகக் கதறவும், கர்ஜிக்கவும் செய்தனர். இருதரப்பிலும் பலர் மீண்டும் எழாதபடிக்கு கீழே விழுந்து கொல்லப்பட்டாலும், எந்தத் தரப்பும் போட்டியைக் கைவிடவில்லை. அதே வேளையில் ராமன், மேகங்களைப் போல, தனது கணைகளை மழையாகப் பொழிந்து கொண்டிருந்தான். இலங்கையை மூழ்கடிக்கும்படி அவன் அடித்த கணைகள் ராட்சசர்களைப் பெரும் எண்ணிக்கையில் கொன்றன. போர்க்களத்தில் களைப்படையாத பலம் மிக்க வில்லாளியான சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, மதில்களில் நின்று கொண்டிருந்த குறிப்பிட்ட ராட்சசர்களைப் பெயர் சொல்லி அழைத்து, தன் துணிக்கோல் கணைகளைக் {clothyard shafts} கொண்டு அவர்களைக் கொன்றான். இலங்கையின் கோட்டைகளை உடைத்து, அந்த நகரத்திற்குள் இருக்கும் அனைத்துப் பொருட்களும் முற்றுகையிட்டிருந்த படைக்கு இலக்காகத் தெரியும்படி செய்த பிறகு, வெற்றி அடைந்த அந்தக் குரங்குக் கூட்டம் ராமனின் கட்டளையின் பேரில் பின்வாங்கியது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.