Highly sacred Kurukshetra! | Shalya-Parva-Section-53 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 22)
பதிவின் சுருக்கம் : பலராமனுக்குக் குருக்ஷேத்திரத்தின் வரலாற்றைச் சொன்ன முனிவர்கள்; மண்ணை உழுது கொண்டிருந்த குரு மன்னன்; குரு மன்னனை மீண்டும் மீண்டும் கேலி செய்த இந்திரன்; விடாமுயற்சியுடன் களத்தை உழுத குரு; குருக்ஷேத்திரத்தில் இறப்பவர்கள் பாவிகளாயிருப்பினும் சொர்க்கத்தை அடைவார்கள் என்ற வரத்தை அளித்த இந்திரன்; அவ்வரத்தை அங்கீகரித்த பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவன்...
அம்முனிவர்கள், "ஓ! ராமா {பலராமா}, உயிரினங்கள் அனைத்தின் தலைவனான பிரம்மனின் அழிவிலா வடவேள்விப்பீடம் {உத்தரவேதி} என்று சமந்தபஞ்சகம் சொல்லப்படுகிறது. பெரும் வரங்களை அளிப்பவர்களான சொர்க்கவாசிகள் பழங்காலத்தில் அங்கே பெரும் வேள்வி ஒன்றைச் செய்தனர்.(1) அரசமுனிகளில் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவும், அளவிலா சக்தியும் கொண்டவனான உயர் ஆன்ம குரு, இந்தக் களத்தில் பல வருடங்கள் உழுதான் {களத்தைச் சமப்படுத்தினான்}. எனவே இது குருக்ஷேத்திரம் (குருவின் களம்) என்று அழைக்கப்படுகிறது" என்றனர்.(2)
ராமன் {பலராமன்}, "அந்த உயர் ஆன்ம குரு இந்தக் களத்தை என்ன காரணத்திற்காக உழுதான்? தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களே இஃது உங்களால் உரைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கேட்டான்.(3)
அதற்கு அம்முனிவர்கள் {பலராமனிடம்}, "பழங்காலத்தில், ஓ! ராமா {பலராமா}, குருவானவன் இந்தக் களத்தின் மண்ணை விடாமுயற்சியுடன் உழுதுகொண்டிருந்தான். சொர்க்கத்தில் இருந்து கீழே இறங்கி வந்த சக்ரன், அவனிடம் அதன் காரணத்தைக் கேட்கும் வகையில்,(4) "ஓ! மன்னா {குருவே}, இத்தகு விடாமுயற்சியில் நீ ஏன் ஈடுபடுகிறாய்? ஓ! அரசமுனியே, எதை அடையும் நோக்கிற்காக நீ மண்ணை உழுதுகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டான்.(5) அதற்குக் குரு, "ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, இந்தச் சமவெளியில் இறப்பவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவர்களாக அருள் உலகங்களை அடைய வேண்டும்" என்று மறுமொழி கூறினான்.(6) தலைவன் சக்ரனோ, அதைக் கேலி செய்து விட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான். எனினும், அரசமுனியான குரு, எந்தத் தளர்வையும் அடையாமல், தொடர்ந்து மண்ணை உழுது கொண்டிருந்தான்.(7)
அவனிடம் மீண்டும் திரும்பி வந்த சக்ரன், மீண்டும் மீண்டும் அவனைக் கேலி செய்துவிட்டுச் சென்றான். எனினும் குரு அக்காரியத்தில் எந்தத் தளர்ச்சியையும் உணரவில்லை.(8) தளராத விடாமுயற்சியுடன் மன்னன் {குரு} மண்ணை உழுவதைக் கண்ட சக்ரன் {இந்திரன்}, தேவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த ஏகாதிபதியின் தொழிலைக் குறித்துச் சொன்னான். இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், ஆயிரங்கண்களைக் கொண்ட தங்கள் தலைவனிடம், "ஓ! சக்ரா, உன்னால் முடியுமாகையால் அந்த அரசமுனி கேட்கும் வரத்தை அளித்து அவனை நிறுத்துவாயாக.(10) நமக்கான வேள்விகளைச் செய்யாமல், அங்கே இறப்பதால் மட்டுமே மனிதர்கள் சொர்க்கத்தை அடையமுடியுமென்றால், நம் இருப்பே ஆபத்துக்குள்ளாக நேரிடும்" என்றனர்.(11)
இவ்வாறு உற்சாகமளிக்கப்பட்ட சக்ரன், அந்த அரசமுனியிடம் திரும்பி வந்து, "மேலும் உழாதே. என் வார்த்தைகளின்படி செயல்படுவாயாக. ஓ! மன்னா {குரு மன்னா}, தங்கள் புலன்கள் அனைத்தும் விழிப்புடன் இருக்கையில் உணவைத் துறந்து இங்கே இறப்பவர்களும், இங்கே போரில் அழிவடைவோரும் சொர்க்கத்திற்குச் செல்வார்கள். ஓ! பேரான்மா கொண்டவனே, ஓ! ஏகாதிபதி, அவர்கள் சொர்க்கத்தின் அருளை அனுபவிப்பார்கள்" என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் குரு, "அப்படியே ஆகட்டும்" என்று சக்ரனுக்குப் பதிலளித்தான்.(14) பலனைக் கொன்றவனான சக்ரன், குருவிடம் விடைபெற்றுக் கொண்டு இதயம்நிறைந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் விரைவாகச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(15)
ஓ! யது குலத்தில் முதன்மையானவனே {பலராமா}, இவ்வாறே அந்த அரசமுனியானவன் {குரு} பழங்காலத்தில் நிலத்தை உழுததால், இங்கே தங்கள் உயிர் மூச்சை விடுபவர்களுக்குச் சக்ரன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} உறுதியளித்தான்.(16) உண்மையில், பிரம்மனின் தலைமையிலான தேவர்களில் முதன்மையானோர் அனைவராலும், புனிதமான முனிவர்களாலும், பூமியில் இதைவிடப் புண்ணியத்தலம் வேறில்லை என்று {குருக்ஷேத்திரம்} அங்கீகரிக்கப்பட்டது.(17) இங்கே கடுந்தவங்களைச் செய்வோர், தங்கள் உடல்களைக் கைவிட்ட பிறகு பிரம்மனின் வசிப்பிடத்திற்குச் செல்கின்றனர்.(18) மேலும் இங்கே தங்கள் செல்வத்தைத் தானமளிக்கும் தகுதிவாய்ந்த மனிதர்கள் {புண்ணியவான்கள்}, விரைவில் தங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வார்கள்.(19) மேலும் நன்மையை எதிர்பார்த்து இங்கேயே நிரந்தரமாக வசிப்போர் யமலோகத்தை எப்போதும் காணமாட்டார்கள்.(20)
இங்கே பெரும் வேள்விகளைச் செய்யும் மன்னர்கள், இந்தப் பூமி நீடித்திருக்கும் வரை சொர்க்கத்தில் வசித்திருப்பார்கள்.(21) தேவர்களின் தலைவனான சக்ரனே இது குறித்து ஒரு வரியை இங்கே தொகுத்துப் பாடியிருக்கிறான். ஓ! பலதேவா, அதைக் கேட்பாயாக. {இந்திரன்},(22) "குருக்ஷேத்திரத்தில் இருந்து காற்றால் சுமந்து செல்லப்படும் புழுதியும் கூடத் தீச்செயல் புரிவோரையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து, அவர்களைச் சொர்க்கத்திற்குச் சுமந்து செல்லும்" {என்று பாடியுள்ளான்}.(23) தேவர்களில் முதன்மையானோரும், பிராமணர்களில் முதன்மையானோரும், நிருகனைப் போன்ற பூமியின் மன்னர்களில் முதன்மையானோர் பலரும், பிறரும், விலைமதிப்புமிக்க வேள்விகளை இங்கே செய்து, தங்கள் உடல்களைக் கைவிட்டபிறகு சொர்க்கத்திற்குச் சென்றனர்.(24)
தரந்துகை, அரந்துகை {என்ற இரு நதிகள்}, {பரசு}ராமத் தடாகங்களுக்கும், சமசக்ரம் {மசக்ருக தீர்த்தம்} ஆகியவற்றுக்கு இடைப்பட்ட வெளியே குருக்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது. சமந்தபஞ்சகமானது, அனைத்துயிர்களின் தலைவனான பிரம்மனின் வட (வேள்விப்) பீடம் என்றழைக்கப்படுகிறது.(25) மங்கலமான, மிகப் புனிதமான, சொர்க்கவாசிகளாலும் மிகவும் மதிக்கப்பட்ட இந்த இடமானது {சொர்க்கத்திற்குரிய} அனைத்து குணநலன்களையும் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இங்கே போரில் கொல்லப்படும் க்ஷத்திரியர்கள் அழிவிலா அருளைக் கொண்ட புனிதமான உலகங்களை அடைகின்றனர்.(26) குருக்ஷேத்திரத்தின் உயர்ந்த அருளைக் குறித்த இதுவும் சக்ரனாலேயே சொல்லப்பட்டது. சக்ரனால் சொல்லப்பட்டதனைத்தும், பிரம்மன், விஷ்ணு மற்றும் மஹேஸ்வரனாலும் அங்கீகரிக்கப்பட்டது" {என்றனர் அம்முனிவர்கள்}.(27)
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 53 ல் உள்ள சுலோகங்கள் : 27-------------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் | In English |