Arjuna Kidnapped Subhadra! | Adi Parva - Section 222 | Mahabharata In Tamil
(சுபத்திரா ஹரணப் பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : ரைவதக மலையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சுபத்திரை அர்ஜுனன் கடத்திக் கொண்டு செல்வது; இதை அறிந்த யாதவர்கள் கோபம் கொள்வது; பலராமன் கிருஷ்ணனைக் கேட்பது; அர்ஜுனன் குறித்த தனது எண்ணத்தை பலராமன் சொல்வது…
வைசம்பாயனர் சொன்னார், "யுதிஷ்டிரனின் சம்மதத்தைக் கேள்விப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த மங்கை ரைவதக மலைக்குச் சென்றிருப்பதை உறுதி செய்து கொண்டு, வாசுதேவனின் சம்மதத்தையும், அனைத்து ஆலோசனைகளையும் செய்து ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.(1) மனிதர்களில் முதன்மையான அந்தப் பாரதக் குலத்தின் காளை {அர்ஜுனன்}, கிருஷ்ணனின் சம்மதத்துடன், நன்றாக உருவாக்கப்பட்டிருந்த தங்கத் தேரில் பயணித்தான்.(2) அந்த தேரில் சிறு மணிகள் வரிசையாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. அனைத்து வித ஆயுதங்களும் அதற்குள் இருந்தன. தேர்ச் சக்கரங்களின் ஓசை மேகத்தின் முழக்கத்திற்கு ஒப்பாக இருந்தது. அந்தத் தேர் சுடர்விட்டு எரியும் நெருப்புப் போலப் பிரகாசமாக இருந்தது. பகைவர்கள் கண்டால் அஞ்சி நடுங்கும் அந்த தேரில் சைவியம் மற்றும் சுக்ரீவம் என்ற இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. அர்ஜுனன் கவசம் பூண்டு, கையில் வாள் தாங்கி, விரல்களுக்குத் தோல் கையுறை அணிந்து, வேட்டைக்குக் கிளம்புவது போலச் சென்று கொண்டிருந்தான்.(3-5)

