Asita-Devala and Jaigishavya! | Shalya-Parva-Section-50 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 19)
பதிவின் சுருக்கம் : தேவலர் மற்றும் ஜைகிஷவ்யர் வரலாறு; இல்லறம் நோற்ற அசிததேவலர்; யாசகம் கேட்டு வந்த ஜைகிஷவ்யர்; ஐயமிட்டு நிறைவையடைந்த தேவலர்; ஜைகிஷவ்யர் அடைந்த தகுதிகளை எண்ணி பொறாமை கொண்ட தேவலர்; தேவலருக்கு யோகம் போதித்த ஜைகிஷவ்யர்; இருவரும் முக்தியை அடைந்தது; சோமதீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பழங்காலத்தில், அறஆன்மா கொண்டவரும், இல்லறம் சார்ந்த கடமைகளை நோற்பவரும், அசிததேவலர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு முனிவர் அந்தத் தீர்த்தத்தில் {ஆதித்திய தீர்த்தத்தில்} வாழ்ந்து வந்தார்.(1) அவர், அறத்திற்குத் தம்மை அர்ப்பணித்து, சுயக்கட்டுப்பாடுடைய தூய்மையான வாழ்வை மேற்கொண்டார். பெரும் தவத் தகுதியை உடைய அவர் {அசிததேவலர்}, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவராகவும், எவருக்கும் தீங்கிழைக்காதவராகவும் இருந்தார். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சொல், செயல், எண்ணம் ஆகியவற்றில் அனைத்து உயிரினங்களிடமும் அவர் {அசிததேவலர்} சமமாகவே நடந்து கொண்டார்.(2) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, கோபமற்றிருந்த அவருக்கு, நிந்தனையும், புகழும் சமமாகவே இருந்தன. ஏற்புடையவை {இனியவை} மற்றும் ஏற்பில்லாதவையிடம் சமமான மனப்பாங்கைக் கொண்டிருந்த அவர், யமனைப் போலவே முற்றிலும் பாரபட்சமற்றவராக {நடுநிலைமை கொண்டவராக} இருந்தார்.(3) அந்தப் பெரும் தவசி, தங்கத்தையும், கூழாங்கற்களின் குவியலையும் சமமான கண்களுடனேயே கண்டார். அவர் தினமும், தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் (தம்மிடம் வரும்) பிராமணர்கள் ஆகியோரை வழிபட்டார். அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்த அவர், எப்போதும் பிரம்மச்சரிய நோன்பையே நோற்றுவந்தார்.(4)
ஒரு காலத்தில், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, யோகத்திற்குத் தம்மை அர்ப்பணித்திருந்தவரும், ஆழ்ந்த தியானத்தைக் கொண்டவரும், பிச்சைக்காரர்களின் வாழ்வை வாழ்பவருமான {சந்நியாசியுமான} ஜைகிஷவ்யர் என்ற பெயரையுடைய நுண்ணறிவுமிக்க ஒரு தவசியானவர், தேவலரின் ஆசிரமத்திற்கு வந்தார்.(5) யோகத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவரும், பெருங்காந்தியைக் கொண்டவருமான அந்தப் பெருந்தவசி {ஜைகிஷவ்யர்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தேவலரின் ஆசிரமத்தில் வசித்து வந்தபோது, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார்.(6) உண்மையில் அந்தப் பெரும் முனிவரான ஜைகிஷவ்யர் அங்கே வசித்து வந்தபோது, தேவலர், எந்தக் காலத்திலும், ஒருபோதும் அவரைப் புறக்கணிக்காமல் அவர் மீதும் தம் கண்களை நிலைக்கச் செய்திருந்தார்.(7) ஓ! ஏகாதிபதி, இவ்வாறு பழங்காலத்தில் இந்த இருவரும் நீண்ட காலத்தைக் கழித்தனர். ஒரு சந்தர்ப்பத்தில், தவசிகளில் முதன்மையானவரான அந்த ஜைகிஷவ்யரைத் தேவலரால் காண முடியவில்லை.(8) எனினும், ஓ! ஜனமேஜயா, அறம் சார்ந்தவரும், பிட்சாடன {பிச்சை எடுத்து வாழும்} வாழ்வை நோற்பவருமான அந்த நுண்ணறிவுமிக்கத் தவசி {ஜைகிஷவ்யர்}, இரவுணவுக்கான நேரத்தில் ஐயம்வேண்டி {யாசகம் வேண்டி} தேவலரை அணுகினார்.(9) அந்தப் பெரும் தவசி {ஜைகிஷவ்யர்}, ஆண்டியின் கோலத்தில் மீண்டும் தோன்றியதைக் கண்ட தேவலர், அவருக்குப் பெரும் கௌரவங்களை அளித்து, மிகுந்த மனநிறைவைக் கொண்டார்.(10)
அந்தத் தேவலர், முனிவர்களால் விதிக்கப்பட்ட சடங்குகளுடனும், பெருங்கவனத்துடனும் தம்மால் இயன்ற அளவுக்குத் தமது விருந்தினரைப் பல வருடங்களாக வழிபட்டார்.(11) எனினும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு நாள் உயர் ஆன்ம தேவலரின் இதயத்தில், அந்தப் பெரும் முனிவரைக் கண்டு பெருங்கவலை உண்டானது.(12) அவர் {அசிததேவலர்} தனக்குள்ளேயே, "நான் இந்தத் தவசியைப் {ஜைகிஷவ்யரைப்} பல வருடங்களாக வழிபட்டு வருகிறேன். எனினும், அலட்சியமாக இருக்கும் இந்த ஆண்டி என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லையே" என்று நினைத்தார்.(13) அருள்நிறைந்த தேவலர், இவ்வாறு நினைத்துக் கொண்டு, கையில் மண்குடத்துடன் ஆகாயமார்க்கமாகப் பெருங்கடலின் கரைக்குச் சென்றார்.(14) ஆறுகளின் தலைவனான பெருங்கடலின் கரையை அடைந்த உயர் ஆன்ம தேவலர், ஓ! பாரதா, அங்கே தனக்கு முன்பே வந்திருந்த ஜைகிஷவ்யரைக் கண்டார்.(15)
இதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்த தலைவர் அசிதர், தனக்குள்ளேயே, "எனக்கு முன்பே பெருங்கடலை அடைந்து, தூய்மைச் சடங்குகளைச் செய்ய இந்த ஆண்டியால் எவ்வாறு முடிந்தது" என்று நினைத்தார்.(16) இவ்வாறே அந்தப் பெருமுனிவரான அசிதர் நினைத்தார். தூய்மைச் சடங்குகளை முறையாகச் செய்து, அதன்மூலம் தூய்மையடைந்த அவர் {அசிததேவலர்}, அமைதியாகப் புனிதமான மந்திரங்களை உரைக்கத் தொடங்கினார்.(17) தூய்மைச்சடங்குகளையும், மௌன வேண்டுதல்களையும் நிறைவு செய்த அந்த அருளப்பட்ட தேவலர், தமது மண் குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு தமது ஆசிரமத்திற்குச் சென்றார். அந்தத் தவசி தமது ஆசிரமத்திற்குள் நுழைந்தபோதே அங்கே அமர்ந்திருந்த ஜைகிஷவ்யரைக் கண்டார்.(18,19) தேவலரிடம் ஒரு வார்த்தையும் பேசாத பெரும் தவசியான ஜைகிஷவ்யர், அவரது ஆசிரமத்தில் ஒரு மரக்கட்டையைப் போல வாழ்ந்து வந்தார்.(20)
தவங்களின் பெருங்கடலான அந்தத் தவசி {ஜைகிஷவ்யர்} (தான் செல்வதற்கு முன்பாகவே) கடலுக்குச் சென்று நீராடியதைக் கண்ட அசிதர், இப்போது தாம் வருவதற்கு முன்பாகவே அவர் அசிரமத்திற்கும் வந்துவிட்டதைக் கண்டார்.(21) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான அசிததேவலர், ஜைகிஷவ்யரின் தவங்களால் யோகத்தின் மூலமாக அடையப்பட்ட இந்தச் சக்தியைக் கண்டு, அக்காரியம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(22) உண்மையில், அந்தச் சிறந்த தவசி {தேவலர்}, "எவ்வாறு இவர் எனக்கு முன்பே பெருங்கடலிலும், மீண்டும் என் ஆசிரமத்திலும் காணப்பட்டார்?" என்று மிகவும் ஆச்சரியமடைந்தார்.(23) மந்திரங்களை அறிந்தவரும், தவசியுமான அந்தத் தேவலர், இவ்வாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, ஓ! ஏகாதிபதி, ஆண்டியின் வாழ்வை வாழும் இந்த ஜைகிஷவ்யர் உண்மையில் யார் என்பதை அறிய தமது ஆசிரமத்தில் இருந்து எழுந்து வானத்தில் உயர்ந்தார்.(24) தேவலர், வானத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சித்தர்களின் கூட்டத்தையும், அந்தச் சித்தர்களால் மரியாதையுடன் வழிபடப்படும் ஜைகிஷவ்யரையும் கண்டார்.(25)
தமது நோன்புகளில் உறுதியுடனும், (முயற்சிகளில்) விடாமுயற்சியுடனும் இருந்த தேவலர், அக்காட்சியைக் கண்டு கோபத்தால் நிறைந்தார். பிறகு அவர் {அசிததேவலர்} அந்த ஜைகிஷவ்யர் சொர்க்கத்திற்குப் புறப்பட்டுச் செல்வதைக் கண்டார்.(26) அடுத்ததாக அவர் பிதுருக்களின் உலகத்திற்குச் செல்வதை அவர் கண்டார். அதன் பிறகு அவர் யமலோகத்திற்குச் செல்வதையும் அவர் கண்டார்.(27) அந்தப் பெரும்தவசியான ஜைகிஷவ்யர் யமலோகத்தில் இருந்து, சோமலோகத்திற்குப் பறந்து செல்வதைக் கண்டார். பிறகு அவர் (ஒன்றன்பின் ஒன்றாக) குறிப்பிட்ட கடுமையான வேள்விகளைச் செய்தவர்கள் செல்லும் அருள் உலகங்களுக்குச் செல்வதைக் கண்டார்.(28) அங்கிருந்து அக்னிஹோத்ரிகளின் உலகத்திற்குச் சென்ற அவர், அங்கிருந்து தர்ச மற்றும் பௌர்ணமாச வேள்விகளைச் செய்தோரின் உலகத்திற்குச் சென்றார்.(29) நுண்ணறிவைக் கொண்டவரான தேவலர், தேவர்களாலேயே வழிபடப்படுவதும், விலங்குகளைக் கொன்று வேள்வி செய்தோர் அடைவதுமான தூய்மையான உலகத்திற்கு அவர் செல்வதைக் கண்டார்.(30)
அடுத்ததாக அவர், சாதுர்மாஸ்யம் என்றழைக்கப்படுவதும் மற்றும் அதே போன்ற பலவேறு வேள்விகளையும் செய்த தவசிகளின் இடத்திற்குச் செல்வதைத் தேவலர் கண்டார். அங்கிருந்து அவர், அக்னிஷ்டோம வேள்வியைச் செய்தவர்களுக்குச் சொந்தமான உலகதிற்குச் சென்றார்.(31) அடுத்ததாகத் தேவலர், அக்னிசுடம் என்றழைக்கப்படும் வேள்வியைச் செய்தோரின் உலகத்திற்கத் தமது விருந்தினர் {ஜைகிஷவ்யர்} செல்வதைக் கண்டார்.(32) உண்மையில், அவர் வாஜபேயம் என்றழைக்கப்படும் முதன்மையான வேள்வியையும், அபரிமிதமான தங்கம் தேவைப்படும் பிற வேள்விகளை {பகுஸுவர்ணகம் போன்றவற்றைச்} செய்த உயர்ந்த ஞானியரின் உலகங்களுக்குச் செல்வதைத் தேவலர் கண்டார்.(33) பிறகு அவர், ராஜசூயம் மற்றும் பௌண்டரிகம் ஆகியற்றைச் செய்தோரின் உலகத்திற்கு ஜைகிஷவ்யர் செல்வதைக் கண்டார்.(34) குதிரை வேள்வி {அஸ்வமேதம்} மற்றும் மனிதர்கள் கொல்லப்படும் வேள்வி {நரமேதம்} ஆகியவற்றைச் செய்த முதன்மையான மனிதர்களின் உலகங்களில் அவரைக் கண்டார்.(35)
உண்மையில் தேவலர், சௌத்ராமணி என்றழைக்கப்படும் வேள்வி மற்றும் அடைவதற்கு மிகக் கடினமானதும், அனைத்து விலங்குகளின் இறைச்சியும் தேவைப்படுவதுமான வேள்வியையும் {சர்வமேதம்} செய்தோரின் உலகத்தில் ஜைகிஷவ்யரைக் கண்டார்.(36) துவாதசாகம் என்றழைக்கப்படும் வேள்வி மற்றும் அதே தன்மை கொண்ட பல்வேறு வேள்விகளைச் செய்தோரின் உலகத்தில் ஜைகிஷவ்யர் காணப்பட்டார்.(37) அடுத்ததாக அசிதர், தமது விருந்தினர், மித்ராவருணன் மற்றும் ஆதித்தியர்களின் உலகங்களுக்குச் செல்வதைக் கண்டார்.(38) அடுத்ததாக அசிதர், தன் விருந்தினர் {ஜைகிஷவ்யர்} ருத்திரர்கள், வசுக்கள் மற்றும் பிருஹஸ்பதியின் உலகங்களைக் கடந்து செல்வதைக் கண்டார்.(39) கோலோகம் என்றழைக்கப்படும் அருள் உலகத்திற்குப் பறந்து சென்ற ஜைகிஷவ்யர், அடுத்ததாகப் பிரம்மசத்ரம் செய்தோரின் உலகத்தைக் கடக்கும்போது காணப்பட்டார்.(40)
தமது சக்தியால் மேலும் மூன்று உலகங்களைக் கடந்த அவர் {ஜைகிஷ்வ்யர்}, கணவர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோரும், கற்புடையவர்களுமான பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட உலத்தில் அவர் காணப்பட்டார்.(41) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, அந்த இடத்தில், ஆழ்ந்த யோகம் கொண்டவரும், தவசிகளில் முதன்மையானவருமான ஜைகிஷவ்யர் தன் பார்வையில் இருந்து மறைந்துவிட்டதை அசிதர் கண்டார்.(42) அப்போது உயர்ந்த அருளைக் கொண்டவரான அந்தத் தேவலர், ஜைகிஷவ்யரின் சக்தி, அவரது நோன்புகளின் சிறப்பு, ஒப்பிலாத அவரது யோக வெற்றி ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்தார்.(43) பிறகு சுயக்கட்டுப்பாடு கொண்டவரான அசிதர், மரியாதையுடன் தமது கரங்களைக் குவித்து, பிரம்மசத்ரம் செய்தோரின் உலகத்தில் இருந்த முதன்மையான சித்தர்களிடம்,(44) "நான் ஜைகிஷவ்யரைக் காணவில்லை. பெரும் சக்தி கொண்ட அந்தத் தவசி எங்கே இருக்கிறார் என்பதை எனக்குச் சொல்வீராக. என் ஆவல் அதிகமாக இருப்பதால் இதை நான் கேட்க விரும்புகிறேன்" என்று விசாரித்தார்.(45)
அதற்குச் சித்தர்கள் {அசிததேவலரிடம்}, "ஓ! கடும் நோன்புகளைக் கொண்ட தேவலரே, நாங்கள் சொல்லும் உண்மையைக் கேட்பீராக. ஜைகிஷவ்யர் அழிவில்லாத பிரம்மலோகத்திற்குச் சென்றுவிட்டார்" என்றனர்".(46)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிரம்மசத்ரியின் பகுதிகளில் வசித்த சித்தர்கள் சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்ட அசிதர், உயரப் பறக்க முயற்சித்து விரைவில் கீழே விழுந்தார்.(47) அப்போது சித்தர்கள், மீண்டும் தேவலரிடம், "ஓ! தேவலரே, ஜைகிஷவ்யர் சென்றிருக்கும் பிரம்ம லோகத்திற்கு நீர் செல்லத் தகுந்தவரல்ல" என்றனர்".(48)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சித்தர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவலர், முறையான வரிசையில் ஒவ்வொரு உலகமாகத் தாண்டி கீழே வந்தார்.(49) உண்மையில், சிறகு படைத்த ஒரு பூச்சியைப் போல அவர் வேகமாகத் தனது ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார். தமது வசிப்பிடத்திற்குள் நுழையும் போதே அங்கே அமர்ந்திருக்கும் ஜைகிஷவ்யரைக் கண்டார்.(50) ஜைகிஷவ்யரின் தவ யோகத்தின் மூலம் அடையப்பட்ட சக்தியைக் கண்ட தேவலர், அதுகுறித்து நேர்மையான அறிவோடு சிந்தித்து,(51) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பணிவுடன் அந்தப் பெரும் தவசியை அணுகி, அந்த உயர் ஆன்ம ஜைகிஷவ்யரிடம், "ஓ! போற்றுதலுக்குரியவரே, மோட்ச (விடுதலையின்) அறத்தை {மோக்ஷதர்மத்தைப்} பின்பற்ற நான் விரும்புகிறேன்" என்றார்.(52) அவரது வார்த்தைகளைக் கேட்ட ஜைகிஷவ்யர், அவருக்குப் பாடங்களைக் கொடுத்தார். அவர் {ஜைகிஷவ்யர்}, யோகம் மற்றும் அழியாத உயர்ந்த கடமைகளையும், அவற்றின் நேர்மாறான தன்மைகளையும் அவருக்கு {தேவலருக்குப்} போதித்தார்.(53) அந்தப் பெருந்துறவி {ஜைகிஷவ்யர்}, உறுதியான தீர்மானத்தில் இருக்கும் அவரைக் கண்டு, (அவ்வறத்திற்குள் அவர் நுழைவதற்காக) விதிக்கப்பட்டிருக்கும் செயல்களனைத்தையும் முறையான சடங்குகளுடன் செய்தார்.(54) அப்போது பித்ருக்களுடன் சேர்ந்த உயிரினங்கள் அனைத்தும், மோட்ச அறத்தைப் பின்பற்றத் தீர்மானத்திருக்கும் தேவலரைக் கண்டு, "ஐயோ, இனி நமக்கு யார் உணவளிப்பார்?" என்று அழத் தொடங்கின.(55)
{திசைகளின்} பத்து புள்ளிகளிலும் எதிரொலித்த அவ்வுயிரினங்களின் இந்தப் புலம்பல்களைக் கேட்ட தேவலர், மோட்ச அறத்தை {துறவறத்தைக்} கைவிடுவதில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தார்.(56) ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு அனைத்து வகையிலான புனித கனிகளும், கிழங்குகளும், மலர்களும், இலையுதிர்க்கும் மூலிகைகளும், "தீய இதயம் கொண்டவனும், அற்பனுமான இந்தத் தேவலன், மீண்டும் நம்மை வெட்டிப் பிடுங்கப் போகிறான் என்பதில் ஐயமில்லை. ஐயோ, அனைத்துயிர்களுக்கும் முற்றான தீங்கிழையாமையை உறுதிசெய்துவிட்டு, அவன் செய்யப்போகும் தீங்கை அவன் அறியவில்லை" என்றன.(57,58) இதனால், அந்தச் சிறந்த தவசி, தன் அறிவின் துணையுடன் சிந்திக்கத் தொடங்கி, "மோட்ச அறம், அல்லது இல்லறம் ஆகிய இரண்டில்[1] எனக்கு எது சிறந்தது?" என்று நினைத்தார்.(59) இதுகுறித்துச் சிந்தித்த தேவலர், ஓ மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, இல்லறத்தைக் கைவிட்டு, மோட்ச அறத்தை {துறவறத்தைப்} பின்பற்றினார்.(60)
[1] "தேவர்கள் மற்றும் விருந்தினர்களின் வழிபாடு, வேள்வி செய்தல் ஆகியவை இல்லறத்தில் அவசியம் தேவை. மோட்ச அறத்திலோ {துறவறத்திலோ} இவை எவையும், அல்லது வேறு எந்தக் கடமைகளும் தேவையில்லை. உயிரினங்களுக்குத் தீங்கிழையாமை {அஹிம்சை} மற்றும் தியானமே அதன் முக்கியக் குணத்தன்மைகளாகும்" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
இவ்வாறு சிந்தித்த தேவலர், அந்தத் தீர்மானத்தின் விளைவால், ஓ! பாரதா {ஜனமேஜயா}, உயர்ந்த வெற்றியையும், உயர்ந்த யோகத்தையும் அடைந்தார்.(61) அப்போது, பிருஹஸ்பதியின் தலைமையிலான தேவர்கள், ஜைகிஷவ்யரையும், அந்தத் தவசியின் தவங்களையும் புகழ்ந்தனர்.(62) தவசிகளில் முதன்மையானவரான நாரதர், அந்தத் தேவர்களிடம், "அசிதரை ஆச்சரியத்தில் நிறைத்த ஜைகிஷவ்யரிடம் கடுந்தவம் இல்லை" என்றார்.(63) அப்போது அந்தச் சொர்க்கவாசிகள், இந்த அச்சந்தரும் வார்த்தைகளைச் சொன்ன நாரதரிடம், "பெரும் தவசியான ஜைகிஷவ்யரைக் குறித்து அவ்வாறு சொல்லாதீர்.(64) ஆற்றல், தவம் மற்றும் யோக சக்தியில் இந்த உயர் ஆன்மாவுக்கு மேன்மையான, அல்லது இணையான எவரும் இல்லை. ஜைகிஷவ்யர் மற்றும் அசிதரின் சக்தி இவ்வாறானதே. அந்த இருவரின் இடமும், அந்த உயர் ஆன்மாக்கள் இருவரின் தீர்த்தமும் இதுதான் {ஆதித்திய தீர்த்தம் தான்}.(66) உயர் ஆன்மா கொண்டவனும், உன்னதச் செயல்களைச் செய்பவனுமான அந்தக் கலப்பைதாரி {பலராமன்}, அங்கே நீராடி, பிராமணர்களுக்குச் செல்வத்தைத் தானமளித்து, பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டிய பிறகு, சோம தீர்த்தத்தை நோக்கிச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(67)
----------------------------------------------------------------------------------------------சல்லிய பர்வம் பகுதி - 50 ல் உள்ள சுலோகங்கள் : 67
ஆங்கிலத்தில் | In English |