Enter Mahadeva! | Sauptika-Parva-Section-07 | Mahabharata In Tamil
(சௌப்திக பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : அஸ்வத்தாமனின் மஹாதேவத் துதி; அவன் முன்னே தோன்றிய தங்கமயமான வேள்விப் பீடம்; அஸ்வத்தாமன் சொன்ன ஸர்வபூதோபஹாரத் துதி; இயல்புக்குமீறிய பல பூதங்கள் தோன்றியது; தன்னையே காணிக்கையாக்கிய அஸ்வத்தாமன்; அங்கே தோன்றிய மஹாதேவன் பாஞ்சாலர்களைக் காத்த காரணத்தைச் சொன்னது; அஸ்வத்தாமனுக்கு ஒரு வாளைக் கொடுத்து, அவனையும் தன் சக்தியால் நிறைத்தது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவ்வாறு சிந்தித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தேர்த்தட்டில் இருந்து கீழே இறங்கி, அந்த உயர்ந்த தலைவனுக்கு {சிவனுக்குத்} தலைவணங்கி நின்றான்.(1) அவன் {அஸ்வத்தாமன்}, "கடுமையானவன், ஸ்தாணு, சிவன், ருத்திரன், சர்வன், ஈசானன், ஈஸ்வரன், கிரிசன் என்று அழைக்கப்படுபவனும், அண்டத்தின் படைப்பாளனும், தலைவனுமான வரங்கொடுக்கும் தேவனும்;(2) நீலமிடறு கொண்டவனும், பிறப்பற்றவனும், சங்கரன் என்று அழைக்கப்படுபவனும், தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், ஹரன் என்று அழைக்கப்படுபவனும், அண்டமே வடிவானவனும், முக்கண்ணனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், உமையின் தலைவனும்;(3) சுடலைகளில் வசிப்பவனும், சக்தியில் பெருகுபவனும், பல்வேறு பூதகணங்களின் தலைவனும், அழியாத செழிப்பு மற்றும் சக்தியைக் கொண்டவனும்; மண்டையோட்டு நுனியுடன் கூடிய தண்டத்தைத் தரிப்பவனும், ருத்திரன் என்று அழைக்கப்படுபவனும், தலையில் சடாமுடி தரிப்பவனும், பிரம்மச்சாரியுமான தேவனின் {சிவனின்} பாதுகாப்பை நான் நாடுகிறேன்.(4), அற்பசக்தியே கொண்டவனான நான், தூய்மைப்படுத்த கடினமானதான என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, திரிபுரத்தை அழித்தவனைத் துதித்து என்னையே பலியாகக் காணிக்கை அளிக்கிறேன்[1].(5)