Enter Mahadeva! | Sauptika-Parva-Section-07 | Mahabharata In Tamil
(சௌப்திக பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : அஸ்வத்தாமனின் மஹாதேவத் துதி; அவன் முன்னே தோன்றிய தங்கமயமான வேள்விப் பீடம்; அஸ்வத்தாமன் சொன்ன ஸர்வபூதோபஹாரத் துதி; இயல்புக்குமீறிய பல பூதங்கள் தோன்றியது; தன்னையே காணிக்கையாக்கிய அஸ்வத்தாமன்; அங்கே தோன்றிய மஹாதேவன் பாஞ்சாலர்களைக் காத்த காரணத்தைச் சொன்னது; அஸ்வத்தாமனுக்கு ஒரு வாளைக் கொடுத்து, அவனையும் தன் சக்தியால் நிறைத்தது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவ்வாறு சிந்தித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தேர்த்தட்டில் இருந்து கீழே இறங்கி, அந்த உயர்ந்த தலைவனுக்கு {சிவனுக்குத்} தலைவணங்கி நின்றான்.(1) அவன் {அஸ்வத்தாமன்}, "கடுமையானவன், ஸ்தாணு, சிவன், ருத்திரன், சர்வன், ஈசானன், ஈஸ்வரன், கிரிசன் என்று அழைக்கப்படுபவனும், அண்டத்தின் படைப்பாளனும், தலைவனுமான வரங்கொடுக்கும் தேவனும்;(2) நீலமிடறு கொண்டவனும், பிறப்பற்றவனும், சங்கரன் என்று அழைக்கப்படுபவனும், தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், ஹரன் என்று அழைக்கப்படுபவனும், அண்டமே வடிவானவனும், முக்கண்ணனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், உமையின் தலைவனும்;(3) சுடலைகளில் வசிப்பவனும், சக்தியில் பெருகுபவனும், பல்வேறு பூதகணங்களின் தலைவனும், அழியாத செழிப்பு மற்றும் சக்தியைக் கொண்டவனும்; மண்டையோட்டு நுனியுடன் கூடிய தண்டத்தைத் தரிப்பவனும், ருத்திரன் என்று அழைக்கப்படுபவனும், தலையில் சடாமுடி தரிப்பவனும், பிரம்மச்சாரியுமான தேவனின் {சிவனின்} பாதுகாப்பை நான் நாடுகிறேன்.(4), அற்பசக்தியே கொண்டவனான நான், தூய்மைப்படுத்த கடினமானதான என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, திரிபுரத்தை அழித்தவனைத் துதித்து என்னையே பலியாகக் காணிக்கை அளிக்கிறேன்[1].(5)
[1] பின்வரும் துதி ஸர்வபூதோபஹாரம் என்றழைக்கப்படுகிறது.
துதிக்கப்படும் நீ துதிகளுக்குத் தகுந்தவனே, உன் மகிமையை நான் துதிக்கிறேன்.
கலங்காத நோக்கங்கள் கொண்டவன் நீ.
தோலாடை உடுத்தியவன் நீ, செஞ்சடை கொண்டவன் நீ;
நீலத் தொண்டை கொண்டவன் நீ;
தாங்கிக்கொள்ளப்பட முடியாதவன் நீ;
தடுக்கப்பட முடியாதவன் நீ.(6)
தூய்மையானவன் நீ;
பிரம்மனைப் படைத்தவன் நீ;
பிரம்மமும் நீ;
பிரம்மச்சாரியும் நீ;
நோன்புகளை நோற்பவன் நீ;
தவத்துறவுகளில் அர்ப்பணிப்புள்ளவன் நீ;
அளவில்லாதவன் நீ;
தவசிகள் அனைவரின் புகலிடம் நீ;(7)
பல்வேறு வடிவினன் நீ;
பல்வேறு பூதகணங்களின் தலைவன் நீ;
முக்கண்ணன் நீ;
தோழர்கள் {பாரிஷதர்கள்} என்றழைக்கப்படும் பூதங்களுக்கு அன்பானவன் நீ;
பொக்கிஷத் தலைவனால் {குபேரனால்} எப்போதும் காணப்படுபவன் நீ;
கௌரியின் இதயத்துக்கு அன்பானவன் நீ;(8)
குமாரனின் {முருகனின்} தந்தை நீ;
பழுப்பானவன் நீ;
சிறந்த காளைக் கொடியைக் கொண்டவன் நீ;
நுண்ணிய ஆடை உடுத்தியவன் நீ;
மிகக் கடுமையானவன் நீ;
உமையைப் போற்றும் ஆவல் கொண்டவன் நீ;(9)
உயர்ந்தவை அனைத்திற்கும் உயர்ந்தவன் நீ;
தன்னை விட உயர்ந்தவை ஏதுமில்லாதவன் நீ;
ஆயுதங்களைத் தரித்திருப்பவன் நீ;
அளக்கமுடியாதவன் நீ,
அனைத்துப் பகுதிகளையும் பாதுகாப்பவன் நீ;(10)
தங்கக் கவசம் பூண்டவன் நீ;
தெய்வீகமானவன் நீ;
புருவத்தில் ஆபரணமாக நிலவைக் கொண்டவன் நீ.
ஓ! தேவா, குவிந்த கவனத்துடன் நான் உன்னிடம் பாதுகாப்பை நாடுகின்றேன்.(11)
கலங்காத நோக்கங்கள் கொண்டவன் நீ.
தோலாடை உடுத்தியவன் நீ, செஞ்சடை கொண்டவன் நீ;
நீலத் தொண்டை கொண்டவன் நீ;
தாங்கிக்கொள்ளப்பட முடியாதவன் நீ;
தடுக்கப்பட முடியாதவன் நீ.(6)
தூய்மையானவன் நீ;
பிரம்மனைப் படைத்தவன் நீ;
பிரம்மமும் நீ;
பிரம்மச்சாரியும் நீ;
நோன்புகளை நோற்பவன் நீ;
தவத்துறவுகளில் அர்ப்பணிப்புள்ளவன் நீ;
அளவில்லாதவன் நீ;
தவசிகள் அனைவரின் புகலிடம் நீ;(7)
பல்வேறு வடிவினன் நீ;
பல்வேறு பூதகணங்களின் தலைவன் நீ;
முக்கண்ணன் நீ;
தோழர்கள் {பாரிஷதர்கள்} என்றழைக்கப்படும் பூதங்களுக்கு அன்பானவன் நீ;
பொக்கிஷத் தலைவனால் {குபேரனால்} எப்போதும் காணப்படுபவன் நீ;
கௌரியின் இதயத்துக்கு அன்பானவன் நீ;(8)
குமாரனின் {முருகனின்} தந்தை நீ;
பழுப்பானவன் நீ;
சிறந்த காளைக் கொடியைக் கொண்டவன் நீ;
நுண்ணிய ஆடை உடுத்தியவன் நீ;
மிகக் கடுமையானவன் நீ;
உமையைப் போற்றும் ஆவல் கொண்டவன் நீ;(9)
உயர்ந்தவை அனைத்திற்கும் உயர்ந்தவன் நீ;
தன்னை விட உயர்ந்தவை ஏதுமில்லாதவன் நீ;
ஆயுதங்களைத் தரித்திருப்பவன் நீ;
அளக்கமுடியாதவன் நீ,
அனைத்துப் பகுதிகளையும் பாதுகாப்பவன் நீ;(10)
தங்கக் கவசம் பூண்டவன் நீ;
தெய்வீகமானவன் நீ;
புருவத்தில் ஆபரணமாக நிலவைக் கொண்டவன் நீ.
ஓ! தேவா, குவிந்த கவனத்துடன் நான் உன்னிடம் பாதுகாப்பை நாடுகின்றேன்.(11)
கடப்பதற்கு அரிதான இந்த அச்சந்தரும் துயரில் இருந்து வெளியேறுவதில் வெற்றிபெற, தூய்மையிலும் தூய்மையானவனான உனக்கு, (ஐம்)பூதங்களாலான என் உடலைக் காணிக்கையளிக்கிறேன்" என்றான் {என்று துதித்தான் அஸ்வத்தாமன்}.(12)
தன் நோக்கத்தை அடையும் விருப்பத்தின் விளைவால் ஏற்பட்ட அவனது இந்தத் தீர்மானத்தை அறிந்து, துரோணரின் உயர் ஆன்ம மகனின் {அஸ்வத்தாமனின்} முன்பு தங்கமயமான ஒரு வேள்விப் பீடம் தோன்றியது.(13) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வேள்விப்பீடத்தில், முக்கிய மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தபடியே பிரகாசத்துடன் சுடர்மிக்க நெருப்பு தோன்றியது.(14) சுடர்மிக்க வாய்களையும், கண்களையும் கொண்டவர்களும், பல கால்களையும், தலைகளையும், கரங்களையும் கொண்டவர்களும், ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், உயர்த்தப்பட்ட கரங்களுடன் கூடியவர்களும், யானைகளையும், மலைகளையும் போலத் தெரிந்தவர்களுமான பல்வேறு வலிமைமிக்கப் பூதகணங்கள் அங்கே தோன்றினர். அவர்களின் முகங்கள், முயல்கள், பன்றிகள், ஒட்டகங்கள், குதிரைகள், நரிகள் மற்றும் மாடுகளைப் போன்றும்,(15,16) கரடிகள், பூனைகள், புலிகள், சிறுத்தைகள், காக்கைகள், குரங்குகள் மற்றும் கிளிகளைப் போன்றும் இருந்தன.(17) சிலரின் முகங்கள் பெரும்பாம்புகளைப் போலவும், சிலரின் முகங்கள் வாத்துகளைப் போலவும் இருந்தன. ஓ! பாரதரே, சிலரின் முகங்கள் மரங்கொத்திகள், காடைகள்,(18) ஆமைகள், முதலைகள், கடற்பன்றிகள் {சிம்சுமாரங்கள்}, பெரும் சுறாக்கள், திமிங்கலங்கள்,(19) சிங்கங்கள், நாரைகள், புறாக்கள், யானைகள் மற்றும் நீர்க்காக்கைகளைப் போல இருந்தன.(20)
கருங்காக்கைகள், பருந்துகள் போன்ற முகங்களுடன் சிலரும் இருந்தனர். சிலருக்குக் கைகளில் காதுகள் இருந்தன, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிலர் ஆயிரம் கண்களைக் கொண்டிருந்தனர். சிலர் பெரும் வயிறுகளைப் படைத்தவர்களாக இருந்தனர். சிலர் சதையே இல்லாமல் இருந்தனர்.(21) ஓ! மன்னா, சிலருக்குத் தலைகள் இல்லை, ஓ! பாரதரே, சிலருக்கு கரடிகளைப் போன்ற முகங்கள் இருந்தன. சிலரின் கண்கள் நெருப்பைப் போலவும், சிலரின் நிறம் நெருப்பைப் போலவும் இருந்தன.(22) சிலரின் தலைகளிலும், உடல்களிலும் இருந்த முடிகள் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. சிலர் நான்கு கரங்களைக் கொண்டவர்களாக இருந்தனர். ஓ! மன்னா, சிலரின் முகங்கள் வெள்ளாடுகளையும், செம்மறி ஆடுகளைப் போலவும் இருந்தன.(23) சிலரின் நிறம் சங்குகளைப் போல இருந்தது, சிலரின் முகங்கள் சங்குகளைப் போல இருந்தன, சிலரின் காதுகளும் சங்குகளைப் போல இருந்தன. சங்குகளாலான மாலைகளைச் சிலர் அணிந்திருந்தனர். சிலரின் குரல்கள் சங்கொலியைப் போல இருந்தன.(24) சிலர் மெலிந்த வயிறுகளைக் கொண்டிருந்தனர்; சிலர் நான்கு பற்களைக் கொண்டிருந்தனர்; சிலர் நான்கு நாக்குகளைக் கொண்டிருந்தனர், சிலர் அம்பைகளைப் போன்ற காதுகளைக் கொண்டிருந்தனர். சிலரின் புருவங்களில் கிரீடங்கள் இருந்தன.(25)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிலர் புல்லிழைகளைத் தங்கள் உடல்களில் கொண்டிருந்தனர். சிலரின் முடி சுருள்முடியாக இருந்தது. சிலர் துணியாலான மகுடங்களை அணிந்திருந்தனர், சிலர் சிறு மகுடங்களை அணிந்திருந்தனர். சிலர் அழகான முகங்களைக் கொண்டிருந்தனர், சிலர் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.(26) தாமரைகளாலான ஆபரணங்களைச் சிலர் அணிந்திருந்தனர், மலர்களால் சிலர் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் {பூதங்கள்} நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் இருந்தனர்.(27) சிலர் சதக்னிகளையும், சிலர் வஜ்ரத்தையும், சிலர் தங்கள் கரங்களில் முசலங்களையும் கொண்டிருந்தனர். ஓ! பாரதரே, சிலர் புசுண்டிகளையும், சிலர் சுருக்குக் கயிறுகளையும், சிலர் கதாயுதங்களையும் தங்கள் கைகளில் கொண்டிருந்தனர்.(28) சிலரின் முதுகுகளில் சிறந்த கணைகளைக் கொண்ட அம்பறாத்தூணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் அனைவரும் போரில் கடுமையானவர்களாக இருந்தனர். கொடிகள் மற்றும் மணிகளுடன் கூடிய கொடிமரத்தைச் சிலர் கொண்டிருந்தனர், சிலர் போர்க்கோடரிகளைத் தரித்திருந்தனர்.(29) சிலர் உயர்த்தப்பட்ட தங்கள் கரங்களில் பெரும் சுருக்குக் கயிறுகளைக் கொண்டிருந்தனர். சிலர் தண்டாயுதங்களையும், தடிகளையும் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் கரங்களில் பருமனான கம்புகளைக் கொண்டிருந்தனர், சிலர் வாள்களைக் கொண்டிருந்தனர். சிலர், தங்கள் கிரீடங்களில் நிமிர்ந்த தலை கொண்ட பாம்புகளைக் கொண்டிருந்தனர்.(30)
சிலர், அங்கதங்களுக்குப் பதிலாக (தங்கள் தோள்களைச் சுற்றிலும்) பெரும்பாம்புகளை அணிந்திருந்தனர். சிலர் அழகிய ஆபரணங்களைத் தங்கள் மேனியில் அணிந்திருந்தனர். சிலர் புழுதி படிந்தவர்களாகவும், சிலர் சகதி பூசப்பட்டவர்களாகவும் இருந்தனர். அனைவரும் வெள்ளை உடையும், துணியும் அணிந்திருந்தனர். சிலரின் அங்கங்கள் நீல நிறத்தில் இருந்தன, வேறு சிலரின் அங்கங்களோ பழுப்பு நிறத்திலிருந்தன. அங்கே இருந்த சிலர் தாடியற்றவர்களாக இருந்தனர்.(31) தோழர்கள் {பாரிஷதர்கள்} என்றழைக்கப்பட்ட அவர்கள், தங்க நிறம் கொண்டவர்களாக, மகிழ்ச்சியில் நிறைந்தவர்களாக, பேரிகைகள், சங்கங்கள், மிருதங்கங்கள், ஜர்ஜரங்கள், ஆனகங்கள் கோமுகங்கள் ஆகியவற்றை இசைத்துக் கொண்டிருந்தனர்.(32) சிலர் பாடினர், சிலர் உரத்த ஒலிகளை வெளியிட்டவாறே ஆடிக் கொண்டிருந்தனர், சிலர் தாவினர், குறுக்கே பாய்ந்னர்.(33) பெரும் வேகம் கொண்ட அவர்கள், உரத்த முழக்கங்களைச் செய்தபடியே ஆசையால் மதங்கொண்ட பெரும் யானைகளைப் போலத் தங்கள் தலையில் இருந்த முடிகள் பறக்க மிக மூர்க்கமாக ஓடினர்.(34) அச்சந்தரும் பயங்கர முகங்களுடனும், வேல்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைத் தரித்தும் இருந்த அவர்கள், பல்வேறு வண்ணங்களில் ஆடைகள் உடுத்தியவர்களாக, அழகிய மாலைகள் மற்றும் களிம்புகளால் அலங்கரிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.(35)
ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அங்கதங்களைக் கொண்டவர்களும், உயர்த்தப்பட்ட கரங்களைக் கொண்டவர்களுமான அவர்கள், பெரும் துணிவையும் கொண்டவர்களாக இருந்தனர். எதிரிகள் அனைவரையும் பலவந்தமாகக் கொல்லவல்ல அவர்கள், ஆற்றலில் தடுக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர்.((36) இரத்தம், கொழுப்பு மற்றும் விலங்குப் பொருள் ஆகியவற்றைக் குடிப்பவர்களான அவர்கள், விலங்குகளின் இறைச்சியையும், உள்ளுறுப்புகளையும் உண்டு வாழ்ந்து வந்தனர். சிலர் தங்கள் தலைக்கு மேலே நெடு குடுமியாகத் தங்கள் சடைகளைக் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் தலைகளில் ஒற்றைக் குடுமியைக் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் காதுகளில் வளையங்களை அணிந்திருந்தனர். சிலர், சமைப்பதற்குப் பயன்படுத்தும் மண்பாண்டங்களைப் போன்ற வயிறுகளைக் கொண்டிருந்தனர்.(37) சிலர், உடற்கட்டில் மிகக் கட்டையானவர்களாகவும், சிலர் மிக உயர்ந்தவர்களாகவும் இருந்தனர். சிலர் நெடியவர்களாகவும், மூர்க்கர்களாகவும் இருந்தனர். சிலர் பயங்கரத் தன்மைகளைக் கொண்டிருந்தனர். சிலர் பெரிய உதடுகளைக் கொண்டிருந்தனர், சிலரின் பிறப்புறுப்புகள் மிக நீண்டவையாக இருந்தன.(38) சிலர், விலைமதிப்புமிக்கவையும், பல்வேறு வகைகளிலானவையுமான மகுடங்களைத் தங்கள் தலையில் சூடியிருந்தனர்; சிலர் வழுக்கைத் தலையர்களாக இருந்தனர், சிலர் சடாமுடியால் மறைக்கப்பட்ட தலையைக் கொண்டவர்களாக இருந்தனர். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை ஆகாயத்தில் இருந்து பூமிக்குக் கொண்டவர வல்லவர்களாகவும், படைக்கப்பட்ட நான்கு வகையினரையும் அழிக்கவல்லவர்களாகவும் இருந்தனர்.(39) அச்சம் என்பது என்ன என்றே அவர்கள் அறியாதவர்களாகவும், ஹரனின் கடுஞ்சினத்தைத் தாங்கிக் கொள்ள வல்லவர்களாகவும் இருந்தனர்.(40)
அவர்கள் எப்போதும் தங்கள் விருப்பப்படி செயல்படுபவர்களாகவும், மூவுலங்களின் தலைவனுக்குத் தலைவர்களாகவும் இருந்தனர். எப்போதும் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்ட அவர்கள், பேச்சில் முற்றான திறம் கொண்டவர்களாகவும், செருக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாகவும் இருந்தனர்.(41) எட்டு வகைத் தெய்வீக செல்வங்களைப் பெற்ற அவர்கள் எப்போதும் செருக்கற்றவர்களாகவே இருந்தனர். தெய்வீக ஹரன், அவர்களின் அருஞ்செயல்களால் எப்போதும் ஆச்சரியத்தில் நிறைந்தபடியே இருக்கிறான்.(42) அவர்கள் மஹாதேவனை அர்ப்பணிப்புடன் வழிபடுபவர்களாவர். மனம், சொல், மற்றும் செயல் ஆகியவற்றைக் கொண்டு அவர்களால் துதிக்கப்படும் அந்தப் பெரும் தேவன் {சிவன்}, தன்னை வழிபடுவோரை {அந்த பூதகணங்களைத்} தன் மடியில் பிறந்த பிள்ளைகளைப் போலவே கருதி மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் அவர்களைப் பாதுகாக்கிறான்.(43) சினத்தால் நிறைந்த அவர்கள், பிரம்மத்தை வெறுப்போர் அனைவரின் குருதியையும், கொழுப்பையும் எப்போதும் குடிக்கின்றனர். அவர்கள் நால் வகைச் சுவையுடன் கூடிய சோமச்சாற்றையும் எப்போதும் குடிக்கின்றனர்.(44) வேதம் ஓதி, பிரம்மச்சரியத்துடனும், தவத்துறவுகளுடனும், தன்னடக்கத்துடனும் திரிசூலபாணியான அந்தத் தேவனைத் துதிக்கும் அவர்கள், அந்தப் பவனையே {சிவனையே} தங்கள் தோழனாக அடைந்திருக்கின்றனர்.(45) கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றின் தலைவனும், பார்வதியின் தலைவனுமான அந்தத் தெய்வீக மஹேஸ்வரன், தன் இயல்பையே கொண்டவர்களும், பல்வேறு இனக்குழுக்களைச் சார்ந்தவர்களுமான அந்த வலிமைமிக்கப் பூதங்களுடனே எப்போதும் உண்கிறான்.(46)
{அப்படிப்பட்ட} அவர்கள், பல்வேறு வகை இசைக்கருவிகளின் ஒலியாலும், சிரிப்பொலியாலும், உரத்த முழக்கங்களாலும், கூச்சல்களாலும், சிங்க முழக்கங்களாலும் அண்டத்தை எதிரொலிக்கச் செய்தபடியே அஸ்வத்தாமனை அணுகினர்.(47) மஹாதேவனின் புகழைச் சொல்லியபடியும், சுற்றிலும் பிரகாசமாக ஒளியைப் பரப்பியபடியும், அஸ்வத்தாமனின் மதிப்பையும், உயர்ஆன்ம ஹரனின் மகிமையையும் பெருக்கியபடியும், அஸ்வத்தாமனின் சக்தியின் எல்லையை உறுதி செய்து கொள்ள விரும்பியும், உறங்கும் நேரத்தில் படுகொலையைக் காண விரும்பியும்,(48) அந்த விநோதமான பூதக்கூட்டம், பயங்கரமான, கடுமையான தண்டங்கள், நெருப்புச் சக்கரங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வந்தனர்.(49) தங்களைப் பார்ப்பதாலேயே மூவுலகங்களையும் அச்சங்கொள்ளச் செய்ய வல்லவர்களாக அவர்கள் இருந்தனர். எனினும், வலிமைமிக்க அஸ்வத்தாமன் அவர்களைக் கண்டும் எந்த அச்சமும் கொள்ளவில்லை.(50)
அப்போது, வில்தரித்திருந்தவனும், உடும்பின் தோலாலான விரலுறைகளை விரல்களுக்கு அணிந்திருந்தவனுமான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன்னையே மஹாதேவனுக்குக் காணிக்கையாக {பலியாக} அளித்தான்.(51) ஓ! பாரதரே அந்த வேள்விச் செயல்பாட்டில், விற்களே விறகுகளாகின, கூரிய கணைகளே கரண்டிகளாகின, பெரும் வலிமை கொண்ட அவனது ஆன்மாவே நீர்க்காணிக்கையானது.(52) வீரமும் கோபமும் நிறைந்த அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} உரிய மந்திரங்களைச் சொல்லி, தன் ஆன்மாவையே பலியாகக் காணிக்கையளித்தான்.(53) அஸ்வத்தாமன், கடுஞ்செயல்புரிபவனான ருத்திரனைக் கடும் சடங்குகளால் துதித்து, கூப்பிய கரங்களுடன் அந்த உயர் ஆன்மத் தேவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(54)
அஸ்வத்தாமன் {ருத்ரனிடம்}, "ஓ! தேவா, அங்கிரச குலத்தில் உதித்த நான், இந்த நெருப்பில் என் ஆன்மாவை நீர்க்காணிக்கையாக ஊற்றப்போகிறேன் {ஹோமம் செய்யப் போகிறேன்}. ஓ! தலைவா, இந்தப் பலியை ஏற்பாயாக.(55) ஓ! அண்டத்தின் ஆன்மாவே, துயர்மிக்க இந்த நேரத்தில், உன்னிடம் கொண்ட பக்தியால், தியானத்தில் குவிந்த இதயத்துடன் என்னையே வேள்விப் பலியாக உனக்குக் காணிக்கையளிக்கிறேன்.(56) அனைத்து உயிரினங்களும் உன்னிலிருக்கின்றன, அனைத்து உயிரினங்களிலும் நீ இருக்கிறாய். உயர்ந்த குணங்கள் அனைத்தின் ஒருமை உன்னில் நேர்கிறது.(57) ஓ! தலைவா, அனைத்துயிர்களுக்கும் புகலிடமாய் இருப்பவனே, என் எதிரிகளை வீழ்த்த முடியாதவனாக இருப்பதால் நான் உனக்கான நீர்க்காணிக்கையாக {ஆகுதியாகக்} காத்திருக்கிறேன். ஓ! தேவா, என்னை ஏற்பாயாக" என்றான்.(58)
இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணர் மகன், அந்த வேள்விப் பீடத்தில், பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தன்னையே பலியாகக் காணிக்கையளித்து, சுடர்மிக்க நெருப்புக்குள் நுழைந்தான்.(59) அசையாமல் உயர்த்திய கரங்களுடன், தன்னையே காணிக்கையளித்த அவனைக் கண்ட தெய்வீக மஹாதேவன் {சிவன்}, சிரித்துக் கொண்டே அங்கே தோன்றி,(60) "தூய்மையான செயல்களைச் செய்யும் கிருஷ்ணன், உண்மை, தூய்மை, நேர்மை, பொறுப்புதுறப்பு, தவத்துறவு, நோன்புகள், மன்னிப்பு {பொறுமை}, அர்ப்பணிப்பு {பக்தி}, பொறுமை, எண்ணம் செயல் ஆகியவற்றால்(61) என்னை முறையாகத் துதித்திருக்கிறான். இதன் காரணமாக, கிருஷ்ணனைவிட எனது அன்புக்குரியவன் வேறு எவனும் இல்லை.(62) அவனை மதிப்பதற்காகவே, அவனது வார்த்தைகளின் படி, பாஞ்சாலர்களைக் காப்பதற்காகப் பல்வேறு வகை மாயைகளை நான் வெளிப்படுத்தினேன்.(63) பாஞ்சாலர்களைப் பாதுகாத்ததால் நான் அவனை {கிருஷ்ணனை} மதித்தேன். எனினும் அவர்கள் காலத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்வின் காலமும் தீர்ந்துவிட்டது" என்றான் {சிவன்}.(64)
உயர் ஆன்ம அஸ்வத்தாமனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன மஹாதேவன், பளபளப்பான சிறந்த வாளொன்றை அஸ்வத்தாமனிடம் கொடுத்து, அவனது உடலுக்குள் நுழைந்தான்.(65) அந்தத் தெய்வீகமானவனால் நிறைக்கப்பட்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} சக்தியில் சுடர்விட்டெரிந்தான். அந்தப் பரமனிமிருந்து பெறப்பட்ட சக்தியின் விளைவால் அவன் போரில் பெரும் பலம்மிக்கவனாக ஆனான்.(66) அவன் {அஸ்வத்தாமன்} புறப்பட்டபோது, தன் எதிரிகளின் முகாமுக்குள் நுழையும் தலைவன் மஹாதேவனைப் போலவே, கண்ணுக்குத் தெரியாத பல பூதங்களும், ராட்சசர்களும் அவனுக்கு வலப்பக்கத்திலும், இடப்பக்கத்தில் சென்றனர்" {என்றான் சஞ்சயன்}.(67)
சௌப்திக பர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 67
ஆங்கிலத்தில் | In English |