Rajdharma alias Nadijangha! | Shanti-Parva-Section-169 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 39)
பதிவின் சுருக்கம் : வேடனான இருந்த கௌதமன் என்ற பிராமணன், பெருங்கடலை நோக்கிச் சென்றது; வழியில் அவன் கண்ட அற்புதங்கள்; காட்டுக்கு மத்தியில் ஓரிடத்தில் ஓர் அழகிய ஆலமரத்தைக் கண்டது; அதன் அடியில் உறங்கியது; ராஜதர்மன் என்ற பெயரைக் கொண்ட நாரை அங்கே வந்தது; தன் வசிப்பிடத்தில் விருந்தினராக அன்றிரவு தங்குமாறு கௌதமனைக் கேட்டுக் கொண்ட தெய்வீக நாரை...
Rajdharma alias Nadijangha! | Shanti-Parva-Section-169 | Mahabharata In Tamil |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாராதா, அந்த இரவு கடந்து, அந்தப் பிராமணர்களில் சிறந்தவன் அந்த வீட்டை விட்டைச் சென்றதும், தன் வசிப்பிடத்தை விட்டு வெளியே வந்த கௌதமன், கடலை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.(1) வழியில் அவன் கடற்பயணங்களை மேற்கொள்ளும் சில வணிகர்களைக் கண்டான். அவன் {பிராமணன்} அந்த வணிகர் கூட்டத்துடன் சேர்ந்து பெருங்கடலை நோக்கிச் சென்றான்.(2) ஓ! மன்னா, அந்தப் பெரிய கூட்டம் ஒரு மலை பள்ளத்தாக்கைக் கடக்கும்போது ஒரு மதங்கொண்ட யானையால் தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைவரும் கொல்லப்பட்டனர்.(3) எவ்வாறோ பேராபத்தில் இருந்து தப்பிய அந்தப் பிராமணன் {கௌதமன்}, எங்கே செல்கிறோம் என்பதை அறியாமல் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடக்கு நோக்கி ஓடினான்.(4) {வணிகக்) கூட்டத்திடம் இருந்து பிரிந்து அந்த இடத்தில் இருந்து வெகு தொலைவுக்கு வந்த அவன், ஒரு கிம்புருஷனைப் போலக் காட்டில் தனியொருவனாகத் திரியத் தொடங்கினான்[1].(5)
[1] "கிம்புருஷன் என்பது பாதி மனிதன், பாதிக் குதிரையைக் கொண்ட உயிரினமாகும். உடல் குதிரையைப் போன்றும், முகம் மனிதனைப் போன்றுமிருக்கும் என்று நம்பப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இறுதியாகப் பெருங்கடலை நோக்கிச் செல்லும் சாலையை அடைந்த அவன், இனிமை நிறைந்ததும், பூத்துக்குலுங்கும் மரங்கள் அடர்ந்ததுமான ஒரு தெய்வீகக் காட்டை அடையும் வரை பயணித்தான்.(6) வருடம் முழுவதும் மலர்களாலும், கனிகளாலும் பூத்துக் குலுங்கும் மாமரங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. (சொர்க்கத்தின்) நந்தனத் தோப்புகளுக்கு ஒப்பான அதில், யக்ஷர்களும், கின்னரர்களும் வசித்து வந்தனர்.(7) சாலங்கள், பனைமரங்கள், தமாலங்கள் {வெள்வேல் மரங்கள்}, {அரசு, ஆல், அகில்}, கரும் கற்றாழைகள், பெரும் சந்தன மரங்கள் ஆகியவற்றால் அஃது {அந்தக் காடு} அலங்கரிக்கப்பட்டிருந்தது.(8) இனிமைநிறைந்த அந்த மேட்டுச் சமவெளியில் பல்வேறு வகைகளிலான மணங்களுடன் கூடிய நறுமணப் பொருட்களைக் கண்டான், முதன்மையான இனங்களைச் சேர்ந்த பறவைகளின் இனிய மெல்லிசைகளையும் கேட்டான்.(9) பாருண்டங்கள்[2] என்றழைக்கப்படுபவையும், மனித முகங்களுக்கு ஒப்பான முகங்களைக் கொண்டவையும், புலிங்கங்கள்[3] என்று அழைக்கப்படுபவையும், மலைப்பகுதிகள் மற்றும் கடற்பகுதிகளைச் சேர்ந்த சிறகு படைத்த பிற காற்றுவாசிகள் {பறவைகள்} அங்கே இனிமையான அதிர்குரல்களை எழுப்பிக் கொண்டிருந்தன.(10)
[2] இறைச்சி உண்ணக்கூடியதும், இரு தலைகளைக் கொண்டதுமான ஒரு தொன்ம காலப் பறவையாகும் இந்தப் பாருண்டம் என்றும்,
[3] புலிங்கங்கள் என்பன பிணந்தின்னும் பறவைகள், அவை இறைச்சி உண்ணும் பிற விலங்குகளின் வாயில் சிக்கியிருக்கும் இறைச்சித் துண்டுகளை எடுத்து உண்பவை என்றும் பிபேக்திப்ராய் தன் அடிக்குறிப்பில் தெரிவிக்கிறார்.
இயற்கை இசைக்கலைஞர்களான இந்த இனிமை நிறைந்த அழகான இசையைக் கேட்டுக் கொண்டே கௌதமன் அந்தக் காட்டின் வழியே சென்றான்.(11) ஓ! மன்னா, அப்படிச் செல்லும் வழியில் அவன், தங்க மணல்களால் மறைக்கப்பட்டதும், அழகில் சொர்க்கத்திற்கே இணையானதுமான சமதளம் கொண்டதுமான ஓர் இனிமையான இடத்தைக் கண்டான்.(12) அந்த நிலத்தில், கோளவடிவமான உச்சியைக் கொண்டதும், பெரியதுமான ஓர் அழகிய ஆல மரத்தைக் கண்டான். தாய்மரத்தோடு தொடர்ந்து சென்ற பல கிளைகளைக் கொண்ட ஆலமரமானது, அழகிலும், வடிவத்திலும் சமவெளியில் அமைக்கப்பட்ட ஒரு குடையைப் போலத் தெரிந்தது.(13) அந்த மகத்தான மரத்தின் கீழிருந்த இடமானது, பெரும் நறுமணமிக்கச் சந்தன நீரால் நனைக்கப்பட்டிருந்தது. பேரழகைக் கொண்டதும், சுற்றிலும் இனிமையான மலர்களால் சூழப்பட்டதுமான அந்த இடம், பெரும்பாட்டனின் சபையைப் போலவே காட்சியளித்துக் கொண்டிருந்தது.(14) மலர்ந்திருக்கும் மரங்கள் நிறைந்ததும், புனிதமானதும், தேவர்களின் வசிப்படத்தைப் போலத் தெரிந்ததுமான அந்த அழகான, ஒப்பற்ற இடத்தைக் கண்ட கௌதமன் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(15)
அங்கே வந்த அவன், மிகவும் நிறைவான இதயத்துடன் கீழே அமர்ந்தான். ஓ! குந்தியின் மகனே, அங்கே அவன் அமர்ந்திருந்தபோது, வனப்பும், மங்கலமும் மிக்க ஓர் இனிய தென்றலானது, ஓ! ஏகாதிபதி, பல்வேறு வகை மலர்களின் நறுமணத்தைச் சுமந்தபடியும், கௌதமனின் அங்கங்களுக்குக் குளிர்வூட்டியபடியும், தெய்வீக இன்பத்தில் அவனை நிறைத்தபடியும் அங்கே வீசத் தொடங்கியது.(16,17) நறுமணமிக்கத் தென்றலால் தாலாட்டப்பட்ட அந்தப் பிராமணன், புத்துணர்வை அடைந்தான், மேலும், அவன் உணர்ந்த இன்பத்தின் விளைவால் அவன் விரைவில் உறக்கத்திலும் வீழ்ந்தான். அதே வேளையில் சூரியன் அஸ்த மலைகளுக்குப் பின்னால் மறைந்தான்.(18) அந்த ஒளிக்கோளானவன், மேற்கிலிருக்கும் தன் அறைகளுக்குள் நுழைந்து, மாலை சந்தி ஏற்பட்ட போது, தன் இனத்தில் முதன்மையான ஒரு பறவையானவன், பிரம்மனின் உலகங்களில் இருந்து தன் இல்லமான அந்த இடத்திற்குத் திரும்பினான்.(19) நாடீஜங்கன் என்ற பெயரைக் கொண்ட அவன், அது படைப்பாளனின் {பிரம்மனின்} அன்புக்குரிய நண்பனாக இருந்தான். பெரும் ஞானம் கொண்டவனும், (தவசி) கசியபரின் மகனுமான அவன், நாரைகளின் இளவரசனாக இருந்தான்.(20) மேலும் அவன், பூமியில் ராஜதர்மன் என்ற பெயரில் பரந்து அறியப்பட்டிருந்தான். உண்மையில், அவன் பூமியில் புகழிலும், ஞானத்திலும் அனைவரையும் விஞ்சியவனாக இருந்தான். தெய்வீக கன்னிகையின் மகனும், பேரழகும், கல்வியும் கொண்டவனான அவன், காந்தியில் ஒரு தேவனுக்கு ஒப்பானவனாக இருந்தான்.(21) சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் அவன் அணிந்திருந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தெய்வீகப் பெண்ணின் பிள்ளை அழகில் சுடர்விடுபவனாகத் தெரிந்தான்.(22) அந்த இடத்திற்கு வந்த பறவையைக் கண்ட கௌதமன் ஆச்சரியத்தால் நிறைந்தான். பசியாலும், தாகத்தாலும் களைத்திருந்த அந்தப் பிராமணன், அவனைக் கொல்ல விரும்பி அந்தப் பறவையானவன் மீது தன் கண்களைச் செலுத்தத் தொடங்கினான்.(23)
ராஜதர்மன் {என்ற அந்த நாரையானவன்}, "ஓ! பிராமணரே, உமக்கு நல்வரவு. நான் கொண்ட நற்பேற்றினாலேயே இன்று நீர் என் வசிப்பிடத்திற்கு வரப் பெற்றேன். சூரியன் மறைந்துவிட்டான். மாலை சந்தியும் வந்துவிட்டது.(24) என் வசிப்பிடத்திற்கு வந்திருக்கும் நீர், இன்று என் அன்புக்குரிய சிறந்த விருந்தினராக இருக்கப் போகிறீர். சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படியான என் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு, நாளை காலையில் நீர் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம்" என்றான்.(25)
சாந்திபர்வம் பகுதி – 169ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |