Showing posts with label பயணக்கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக்கட்டுரை. Show all posts

Wednesday, May 28, 2014

கண்டேன் கங்கையை - 3 - வியாச தரிசனம்

துளசி காட் -  நான் சொல்லும் மரம் அதோ தெரிகிறது பாருங்கள். அங்குதான் 
ஹனுமான் காட் இருக்கிறது - இப்படம் இண்டர்நெட்டில் இருந்து எடுக்கப்பட்டது
அந்த வெளிநாட்டுக்காரர் தனது வேலையை முடித்ததும். அவரிடம் நாங்கள் விசாரிக்க ஆரம்பித்தோம். அப்போது ஒரு இளைஞன், வயது 25க்குள் தான் இருக்கும். துறவி போல இருந்தான். அடர்த்தியான கருகரு தாடியும் நீண்ட கேசமும் கொண்டிருந்தான். கண்கள் தெளிவுடன் வெண்மையாக, கூரான பார்வை கொண்டவனாக இருந்தான்.

நாங்கள் அந்த வெளிநாட்டுக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, "நீங்க தமிழா?" என்றார். "ஆம்" என்றார் விக்ரம் சீனிவாசன். "தமிழ்நாட்டுல எங்கேர்ந்து?" என்றான். "திருவொற்றியூர்" என்றேன் நான் பெருமிதமாக. "நான் தண்டையார்ப்பேட்டைதாங்க! தமிழ்நாடு எப்படி இருக்குது. நல்லா இருக்க மாட்டானுகளே. எல்லா வேசி பெத்த மகனுங்க {வார்த்தைகள் மாற்றப்பட்டிருக்கின்றன}. நான் அசிங்கமா பேசுறேனு நெனக்காதீங்க. நான் எங்கம்மாவையும் சேர்த்துத்தான் சொல்றேன்" என்றான்.

தமிழ்நாட்டுக்காரர்களை வேசிமக்கள் என்று சொன்ன அவன் நாவை அறுக்க வேண்டும் என்று ஏற்பட்ட கொலைவெறி, அவன் 'என் தாயையும் சேர்த்துச் சொல்கிறேன்' என்றதும், 'ஏதோ மனம் பாதிக்கப்பட்டிருக்கிறான் போல' என்று அவன் மேல் ஒரு பரிதாபம் ஏற்பட்டது. அவன் மீது ஏற்பட்ட கோபத்தாலோ என்னவோ திரு.ஜெகதீஷ் அவர்களும், திரு.ஜெவேலன் அவர்களும், "நாங்க ரூமுக்குப் போறாம்" என்று சொல்லி கிளம்பிவிட்டனர். "கல்யாணலாம் ஆயிடுச்சா? அதுக்குள்ள இப்படி ஆகி இங்க வந்துட்டீங்க? இல்ல…" என்று அந்த இளைஞனிடம் கேட்டார் சீனிவாசன். அவன், அந்த வெளிநாட்டுக்காரரிடம் இருந்து சில்லத்தை வாங்கி, ஆழமாக இழுத்து புகையை வெளியிட்டபடி, "தமிழ்நாட்டுல எல்லாம் வேசிங்க. என் கேர்ல் பிரண்ட் ஒரு ரஷ்யாக்காரி, ஒரு வாரத்துக்கு முன்னாடி ஏதோ பேசிட்டிருக்கும்போது அவள அடிச்சுப்போட்டுட்டு வந்துட்டேன். இங்க சும்மாதான் வந்தேன். மனசே கேக்கல. இப்போ அவ டில்லில ஏதோ ஒரு ஆஸ்பிட்டல்ல படுத்துருக்காளாம். அவளப்போய்ப் பாத்து, அவளையும் கூப்பிட்டுக்கு நேபால் போகணும்" என்றான்.

"மீசை, தாடி, காவி வேட்டியெல்லாம் பாத்துட்டு சாமியாரோனு நினைச்சோம்" என்றார் சீனிவாசன். "அது சும்மா வச்சிருக்கேங்க. இப்ப டில்லி போகும்போது எடுத்துடுவேன். ஷேவ் பண்ணனும்" என்றான். "இவர் எந்த நாட்டுக்காரர்னு கேட்டுட்டிருந்தோம். அதுக்குள்ள நீங்க வந்தீங்க" என்றார் சீனிவாசன். அவன் அந்த வெளிநாட்டுக்காரரிடம் நல்ல நுனிநாக்கு ஆங்கிலம் பேசினான். அந்த வெளிநாட்டுக்காரர் "இஸ்ரேல்" என்றார். "எதுக்கு இங்க வந்தாராம்?" என்று கேட்டார் சீனிவாசன், "சும்மா நம்ம நாட்ட சுத்திப்பாக்க வந்தானாம். இப்ப இங்க இவனுக்கு ரொம்பப் புடுச்சிப் போச்சாம். அவன் நாட்டுக்குப் போக மாட்டானாம்" என்றான் அந்த இளைஞன். சிறிது நேரத்தில் அந்த வெளிநாட்டுக்காரர் கிளம்பினார்.

இன்னும் ஒருவன் வந்து சாமியாரிடம் பவ்யமாக நின்றான். அவன் காலில் செருப்பு அணிந்திருப்பதைக் கண்ட அந்தச் சாமியார் கோபத்துடன் அவனை முறைத்துச் சைகை காட்டினார். அவன், தனது காலணிகளைக் கழட்டி வைத்துவிட்டு, அந்தச் சாமியாரின் முன்பு அடக்கமாக அமர்ந்தான். அந்தச் சாமியார் கஞ்சாவை ஏதோ புனிதமான பொருள் போல, சுற்றி எதையோ தெளித்து, மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டே சில்லத்தில் அடைத்தார். மீண்டும் அதே போல மூன்று முறை இழுத்துவிட்டு, பின்பு வந்தவனிடம் அதைக் கொடுத்தார்.

இணையத்தில் இருந்து எடுத்த படம்
"என்ன இப்படிப் பப்ளிக்கக் கஞ்சா அடிக்கிறீங்களே" என்று நான் அந்தத் தமிழ்ந்நாட்டுக்காரனிடம் கேட்டேன். "இது இங்க {காசியில்} லீகல்ங்க. பாருங்க எந்தப் போலீசும் புடிக்கமாட்டான். ஆனா காசி விட்டுத் தாண்டுனீங்கனா இது இல்லீகல்" என்றான். "இதோ இருக்கானே இந்தச் சாமி. இவன்லாம் சாப்பிடவே மாட்டான். கஞ்சா மட்டுந்தான்" என்றான். இருமிக்கொண்டிருந்த அந்தச் சாமியார், உடனே தனது வயிற்றை உள்ளிழுத்துக் காட்டினார். அவருக்குத் தமிழ் தெரியவில்லை. ஆனால் குறிப்புகளை வைத்துப் புரிந்து கொண்டார் போல.

"எப்போ தமிழ்நாட்டுக்கு?" என்று கேட்டோம். "அங்க நான் எதுக்குங்க வரணும். நான் அங்க வரவே மாட்டேன்" என்று சொன்ன அந்த இளைஞன் அங்கிருந்து வேகமாக நடையைக் கட்டினான்.

அதற்கு மேல் அங்கிருக்கச் சலிப்புத்தட்டவே, மீதம் இருந்த நாங்கள் மூவரும் {நான், சீனிவாசன் மற்றும் பிரதீஷ்} எங்களுக்குள் பேசியபடியே மெதுவாக மடம் இருக்கும் திக்கு நோக்கி நடந்தோம். மடத்தில் மதிய உணவு தயாராக இருந்தது. உண்டு முடித்ததும் கைக்கழுவ வெளியே வந்த போது நடிகர் எஸ்.வீ.சேகர் வந்திருப்பதாக எங்களுக்கு உணவளித்த அந்த மடத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் சொன்னார். அவர் இருந்ததாகச் சொன்ன இடத்தை நோக்கினேன். அவரது பின்புறம் தெரிந்தது. அப்படியே மேலே அறைக்குச் சென்று சற்றுச் சாய்ந்தேன். எனக்கு முன்பே திரு.ஜெகதீஷ், திரு.ஜெயவேலன், திரு.ஆர்.கே. ஆகியோர் படுத்திருந்தனர். "அடுத்து இன்னைக்கு எங்கங்க போறோம்" என்று ஜெயவேலன் அவர்களிடம் கேட்டேன். "வியாசர் கோவிலுக்குங்க" என்றார். என்முகத்தில் பரவசக்கோடுகள் விரிவதை நிச்சயம் அவர் கண்டிருப்பார் என நினைக்கிறேன்.


எஸ்.வீ.சேகருடன் திரு.சீனிவாசன்
ஆர்.கே. அவர்கள் படுத்தபடியே முழுமஹாபாரதத்தின் ஆதிபர்வத்தைப் படித்துக் கொண்டிருந்தார். "ஏங்க கோயிலுக்கு வரும்போது அத {ஆதிபர்வம் புத்தகத்தை} நிச்சயம் எடுத்துட்டு வந்துடுங்க" என்றார் திரு.ஜெயவேலன். சரி என்று தலையாட்டினார் ஆர்.கே. அப்படியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கீழே சென்ற எங்கள் குழுவின் பெண்கள் மேலே வந்து "எஸ்.வீ.சேகர் வந்திருக்கிறார். அவரோட ஒரு போட்டோ எடுத்துட்டு வந்தோம்" என்றனர். "அப்படியா" என்று கேட்ட திரு.சீனிவாசன் அவர்கள் கீழே சென்று அவருடன் புகைப்படம் எடுத்து வந்தார். எனக்குச் சிறு வயது முதலே பிரபலமானவர்கள் என்றால் அவர்களை அணுக ஒரு தயக்கம்தான். அது இப்போதும் தொடர்கிறது. எஸ்.வீ.சேகரிடம் பேச வேண்டும் என்ற ஆவல்தான். இருந்த போதிலும் ஏதோ என்னைத் தடுத்துக் கொண்டே இருந்தது. கடைசி வரை நான் போகவே இல்லை. அப்படியே சற்று நேரம் கண் அயர்ந்தோம். 4 மணி இருக்கும். "படகோட்டி வந்துட்டான்" என்ற குரல் கேட்டு எழுந்தோம். வெளியே சென்று ஆளுக்கொரு காபியைக் குடித்துவிட்டு விரைவாக மீண்டும் அறைக்கு வந்தோம்.
திரு.ஜெயவேலன், நான் மற்றும் திரு.ஜெகதீஷ்
அனைவரும் தயாராக இருந்தனர். ஹனுமான் காட்டில் {Hanuman Ghat} இருந்து மீண்டும் ஒரு கங்கைப் பயணம். காலையில் தெற்கில் இருந்து வடக்காக மற்றுமொரு மேற்கு கரைக்கே சென்றோம். ஆனால் இப்போதோ வடக்கில் இருந்து தெற்காகக் கிழக்கு கரையை நோக்கிச் சென்றோம். அதாவது முழுக் கங்கையின் அகலத்தை அப்போது கடந்தோம். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் கங்கை புதியவளாகவே தெரிந்தாள். தொடத் தொட ஆனந்தம் தான். பருகப்பருக தேவாமிர்தம் பருகிய மனக்களிப்புதான். தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்த திருப்தி. இம்முறை கங்கை நீரை ஒரு செவனப் பாட்டிலில் பிடித்து வைத்தார் திரு.சீனிவாசன். இதைப் பார்த்ததும், நானும் ஆர்கேவும் மற்றும் இரண்டு பாட்டில்களில் பிடித்துக் கொண்டோம்.

பாலத்தைப் படகு கட ந்து கொண்டிருக்கிறது
படகு ஒரு பேண்டூன் பாலத்தை அடைந்தது. அப்பாலத்தைத் தற்காலிகமாக அமைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. பல இரும்பு டேங்குகளுக்கு மேல் பாலத்தை அமைத்திருந்தார்கள். படகோட்டி அந்த டேங்குகளுக்கு இடையில் படகை எடுத்துச் செல்ல முயற்சித்தார். படகு சற்றுப் பெரியதாக இருந்ததால் பயந்தார். ஆகையால், அந்தப் பாலத்தின் அருகிலேயே கிழக்குக் கரையில் படகை நிறுத்தினார். படித்துறை ஏதும் இல்லையாகையால், படகில் இருந்து தரைக்குக் குதிக்கும் உயரம் அதிகமாக இருந்தது. மேலும் படகு நீருக்குள் நின்றதால் கால் நனையாமல் வர அனைவரும் சிரமப்பட்டோம். ஒவ்வொருவராகப் பொறுமையாகக் கரையேறி, கரைக்கு மேலே இருந்த சாலையை அடைந்தோம்.

சாலையோரம் தர்ப்பூசணி பழங்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள். அனைவரும் அங்கே நின்று தர்ப்பூசணி சாப்பிட்ட பிறகு நடக்க ஆரம்பித்தோம். அது ராம் நகர். சாலையில் வலது பக்கத்தில் மீன் விற்றுக் கொண்டிருந்தார்கள். கங்கையில் பிடித்த மீன்கள். நிறைய மீன்கள் அங்கிருந்தன. ஒவ்வொன்றும் உயிருள்ளவை. பாத்திரங்களில் நீர் நிரப்பி, அதில் உயிருடன் மீனை வைத்திருக்கிறார்கள். அனைத்தும் பெரிய பெரிய மீன்கள். அதைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் ராம் நகர் கோட்டை வந்தது. அக்கோட்டை 1750ல் கட்டியதாம். ஸ்படிகப் பாறைகள் கொண்டு முகலாய கட்டடக் கலையில் அது கட்டப்பட்டிருந்தது.

ராம் நகர் கோட்டை
கிழக்கு வாயில் கொண்ட அந்தக் கோட்டைக்குள் நுழைந்தோம். அங்கிருந்த மியூசியத்தைக் கண்டுவிட்டு, வெறு வழியாக வந்த போது விட்டத்தில் இருந்த வவ்வால்கள் எங்களை வரவேற்றன. சத்தமிடாமல் கோட்டையைக் கடந்து சென்றோம். வெளியில் கங்கை காட்சியளித்தாள். அங்கிருந்து வலப்புறத்தில் வியாசரின் கோவில் இருந்தது. அங்கு வந்ததும் தான் ஞாபகம் வந்தது, ஆர்கே "புத்தகத்தை எடுத்தது போல நினைவில்லையே". சரி நமக்குக் கொடுப்பனை இல்லை. இதைக் கேட்டு அவரை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று நினைக்கும்போதே, "ஐயோ, புக்க எடுத்துட்டு வரலீங்களா" என்று ஜெயவேலன் அவர்கள் கேட்டார். "ஐயோ மறந்துட்டேங்க" என்றார் ஆர்கே. இதில் முதல் குற்றவாளி நான்தான். சென்னையில் இருந்தே புத்தகத்தை எடுத்துச் செல்ல மறந்தேன். இப்போது கிளம்புவதற்குச் சற்று முன் சொன்னதையும் மறந்து இங்கு வந்துவிட்டேன். இப்போதெல்லாம் மறதி எனக்கு ஒரு நோயாகிவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு. இப்படி நேரும் போதுதான் மறதியைச் சபிக்கத் தோன்றுகிறது. நினைத்துப் பார்த்தால் நாங்கள் அப்போது நின்று கொண்டிருந்த இடமே சபிக்கப்பட்ட இடம்தான்.

இந்த இடத்திற்கு ஏற்பட்ட சாபத்தைக் குறித்துச் சொல்லியாக வேண்டும். ஒரு காலத்தில், வேதங்களைப் பகுத்து, பிரம்மசூத்திரம், புராணங்கள் மற்றும் பெரும் இதிகாசமான மஹாபாரதத்தை எழுதிய வியாசர் காசிக்குத் தனது சீடர்களுடன் வந்தார். அக்காலத்தில் அவர் பெரும் புகழ்வாய்ந்தவராக இருந்தார். காசி விஸ்வநாதர் அவரது குணத்தைச் சோதிக்க எண்ணங்கொண்டார். வியாசரும் அவரது சீடர்களும் உணவை இரந்து பெற சென்றனர். யாரும் அவர்களுக்குப் பிச்சையிடவில்லை. அந்த அண்ணப்பூரணியின் நகரத்தில் அவர்கள் பசியுடன் உறங்கினர். இதே நிலை ஏழு நாட்களுக்குத் தொடர்ந்தது. வியாசர் மிகுந்த கோபம் கொண்டு காசியைச் சபிக்க எண்ணங்கொண்டார்.

அவ்வேளையில் தேவி அண்ணப்பூரணி முதிர்ந்த இல்லத்தரசியாக அவர் முன்பு தோன்றினாள். சுவைமிகுந்த உணவை அவர்களுக்குப் பிச்சையாக இட்டாள். அவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். அவ்வேளையில் விஸ்வநாதர் அங்குத் தோன்றினார். காசியைச் சபிக்க எண்ணங்கொண்ட வியாசரை காசிக்குள் நுழைய தடைவிதித்தார். வியாசர் மிகவும் பணிந்து வேண்டிக் கேட்டார். அதற்குச் சிவன், அவர் {வியாசர்} கங்கையின் மறுகரையில் வாழலாம் என்று அருள் கூர்ந்தார். தேவி அண்ணப்பூரணி தனது மகன் மேல் கருணை கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாள். அதற்கிணங்கிய காசி விஸ்வநாதர் மங்களகரமான நேரங்களில் மட்டும் வியாசர் காசிக்குள் நுழையலாம் என்று தடையைத் தளர்த்தினார். இது கந்த புராணத்தின் 95வது பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. கங்கையின் கிழக்குக் கரையும் சபிக்கப்பட்டே இருந்தது. அங்கே மக்கள் யாரும் குடியமரவில்லை. இப்போதும் கிழக்குக் கரையில் அதிக மக்கள் நெருக்கம் கிடையாது.

வியாசர் கோயில் பின்னணியில் நான்
ஏமாற்றம், கவலை அனைத்தும் அந்த ஒரு நொடி மட்டும் தான் எனக்கு ஏற்படும். பிறகு சமாதானமாகிவிடுவேன். இக்குணம் எனக்கும் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நான் வளர்ந்த விதம் அதற்கு முக்கியக் காரணமாக இருக்க வேண்டும். அடுத்த நொடியே புத்தகத்தை எடுத்து வரவில்லையே என்ற கவலை பறந்தோடியது. வியாச தரிசனம் கிட்டப்போகிறது என்ற ஆவலில் இருந்த நான் நண்பர்களுடன் அக்கோவிலை நோக்கி நடந்தேன். அது ஒரு சிறு கோவில்தான். படிகள் ஏறி கோவிலுக்குள் சென்றதும் வடக்கு நோக்கிய மூன்று லிங்கங்கள் காட்சியளித்தன. ஒருவர் விஸ்வேஸ்வரர், ஒருவர் வியாசர், ஒருவர் சுகர் என்று அங்கிருந்த பூசாரி சொன்னார். மூன்று லிங்கங்களில் நடு லிங்கத்தின் அருகில் அமரக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பூசாரி இந்தியிலேயே பேசினார். அவர் பேசியது ஒன்றும் விளங்கவில்லை. பணம் வைக்கச் சொன்னார் பூசாரி. நாங்கள் வைத்த பணம் போதாது அதிகம் வேண்டும் என்றார். "நீ வாங்கினால் வாங்கிக் கொள். வாங்காவிட்டால் போ" என்று சொல்லிய திரு.ஜெகதீஷ் அவர்கள், லிங்கத்தின் அருகில் பணத்தை வைத்துவிட்டு, "ஓம் நமச்சிவாய" என்று சொல்லி எழுந்தார். நானும் பணம் வைத்து மனதார வேண்டிக் கொண்டு, வெளியே வந்து கோவிலை வலம் வந்தேன்.

கோவிலைவிட்டு வெளியே வந்து கோட்டைவாயிலின் முன்பு நின்றபடி கங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சில புகைப்படங்கள் எடுத்தோம். சிறிது நேரம் வியாசரைப் பற்றியும் மஹாபாரதத்தைப் பற்றியும் பேசினோம். மாலை மங்கியது. கங்கையின் கரையில் இருந்த கட்டிடங்களைத் தொட்டுவிடுவதைப் போலக் கதிரவன் கீழே இறங்கினான். அங்கிருந்து அனைவரும் புறப்பட்டோம்.


கங்கைக்கரைக்கு வந்து படகில் ஏறினோம். தூரத்தில் விளக்குகள் எரிந்தன. அடுத்ததாக நாங்கள் கங்கா ஆரத்தியைக் காணச் சென்றோம். படகிலிருந்தே பார்க்கலாம் என்று படகோட்டி சொன்னார். காசியில் தினமும் மாலை 6.30 மணிக்கு மேல் கங்கையை வழிபடும் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாங்கள் சென்ற 8.5.2014 அன்று ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் கங்கா ஆரத்தியில் கலந்து கொள்வதாக இருந்தது. கங்கா ஆரத்தி நடைபெறும் தசாஸ்வமேத காட்டை அடைந்தோம். அவ்வாயிலை நெருங்க நெருங்க தீபங்கள் ஒவ்வொன்றாக ஏற்றப்படுதவது தெளிவாகத் தெரிந்தது. ஆங்காங்கே சில ஆம் ஆத்மி குல்லாக்கள் தெரிந்தன. கேஜ்ரிவால் வந்து விட்டாரா என்ன என்று தெரியவில்லை. எங்கள் படகு முன்பு ஐம்பது படகுகள் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

கங்கா ஆரத்தி
நிறைய பேர் கங்கா ஆரத்தியை படகில் இருந்தபடியே பார்த்தனர். தீபங்களின் வரிசையும், அதை நேர்த்திக் கடன் செய்பவர்கள் விளக்கை வலமாகக் கொண்டு செல்லும் விதமும் காண கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒரு படகில் இருந்து மறு படகுக்குத் தாவி வியாபாரிகள் அருந்துவதற்கான நீரும் விளக்குகளும் விற்றனர். தீபமேற்றி கங்கையில் விட்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது ஐதீகம். எங்கள் குழுவில் இருந்த பெண்களும் விளக்கு வாங்கி, அதில் சுடரேற்றி கங்கையில் விட்டார்கள். எங்கள் பெண்கள் விளக்கேற்றுவதைப் பார்த்தவிட்டு கங்கையில் கரையில் செய்யப்படும் சடங்குகளைக் காணத் திரும்பினேன். ஒரு பகுதியில் நிறைய ஆம் ஆத்மி குல்லாக்கள் தெரிந்தன. அங்கு பரபரப்பாக இருந்தது. "கேஜ்ரிவால் வந்துவிட்டார் போல" என நினைத்துக் கொண்டேன். சிறிது நேரம் அங்கிருந்து பார்த்த பிறகு, மீண்டும் படகு ஹனுமான் காட்டை அடைந்தது. அங்கிருந்து மடத்துக்குச் சென்றோம். சாமியார் இருந்த மரத்தடியைப் பார்த்தேன். சிலர் அமர்ந்திருந்தார்கள். ஆனால் சாமியாரைக் காணோம்.


அறைக்குத் திரும்பி உணவு உண்ட பிறகு, திரு.ஜெயவேலன் அவர்கள் உத்தரபிரதேசத்தின் வரைபடத்தை வைத்துக் கொண்டு, "நாளைக்கு ஒரு நாள் இருக்குங்க. நைட் 11 மணிக்கு டிரெய்ன். வியாச காசி பாத்தாச்சு. நைமிசாரண்யம் பார்த்துட்டா நல்லா இருக்கும். இங்க எல்லாரும் சாரநாத் வழியில இருக்கிற கோயில்களப் பார்க்கப்போறாங்க. நீங்க மட்டும் லக்னோ போய் அங்கிருந்து நைமிசாரண்யத்தப் பாத்துட்டு, நேரா மொகல் சராய் ஸ்டேஷனுக்கு வந்துடுறீங்களா?" என்று கேட்டார். நான், "அப்படியா சொல்றீங்க, சரி!" என்றேன்.

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, May 24, 2014

கண்டேன் கங்கையை - 2 - விஸ்வநாதர் தரிசனம்

கங்கையில் படகில் மொட்டை தலை விக்ரம் சீனிவாசனுடன் நான்

கண் பசியும், செவிப்பசியும் ஆறிய பின்னர் வயிற்றுப் பசி ஆரம்பித்து விட்டது. அறையில் இருந்து கிளம்பி, திரு.ஜெயவேலன் அவர்கள் முன்பே பார்த்து வைத்திருந்த ஒரு ஓட்டலுக்குச் சென்றோம். "ஏங்க, தமிழ்நாட்டு மீல்சும் இங்க கிடைக்குங்க" என்றார் ஜெயவேலன். இருப்பினும் அனைவரும் ரொட்டியும் பன்னீரும் ஆர்டர் செய்தோம். தென்னிந்திய உணவு வகைகளைத் தினமும் உண்கிறோம். வட இந்தியாவில் மக்களின் உணவு முறை எப்படி இருக்கிறது, சுவை எப்படி இருக்கிறது என்று அறிய இது ஒரு சந்தப்பமல்லவா? எண்ணெய் இல்லாமல் நெருப்பில் சுட்ட ரொட்டியைக் கொடுத்தார்கள். நினைத்தது போல் அல்ல நன்றாகத்தான் இருந்தது. உண்டு முடித்து எங்களுக்குத் தேவையான சில பொருட்களைக் கடைத்தெருவில் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம்.

திரு.ஜெயவேலன்
மகாபாரத மொழியாக்கம் தடைபட்டுவிடக்கூடாதே என்பதற்காகத் திரு.ஜெயவேலன் அவர்கள் தனது மடிக்கணினியை எடுத்து வந்திருந்தார். திரு.ஜெகதீஷ் அவர்கள் இண்டர்நெட்டுக்குத் தேவையான டாங்கிளை (Dongle) எடுத்து வந்திருந்தார். நான் பழைய கோப்புகளை எல்லாம் பென் டிரைவில் {Pen Drive} எடுத்துச் சென்றிருந்தேன். திரு.ஜெயவேலன் அவர்கள் தனது மடிக்கணினியைக் கொடுத்தார். சிறிது நேரம் முயன்று பார்த்தேன். மனம் ஒன்றவில்லை. மடிக்கணினியிலும் சார்ஜ் குறைவாக இருந்து. சரி என்று அதைச் சார்ஜில் வைத்து விட்டு சிறிது நேரம் நண்பர்கள் விவாதித்தோம். திரு.ஜெயவேலன் மற்றும் திரு.விக்ரம் சீனிவாசன் ஆகியோர் பேசிக்கொண்டே உறங்கிவிட்டனர். ஆர்.கே.கமலக்கண்ணன் அவர்கள் அறைக்கு வெளியில் படுத்துவிட்டார். வெப்பம் அதிகமாக இருந்தது. நானும் அவருடன் வெளியிலேயே படுத்துக் கொண்டேன். சென்னையைப் போன்றே அங்கும் வெப்பம்தான். வெளியில் சற்றுக் குளுமையாக இருந்தது. அன்று கண்ட காட்சிகளை மனதில் அசைபோட்டபடியே உறங்கிப் போனேன்.

8ம் தேதி காலை 6.00 மணி இருக்கும். அனைவரும் விழித்துவிட்டோம். காபி குடிக்கலாம் என்றெண்ணி நண்பர்கள் காஞ்சி சங்கர மடத்திலிருந்து கீழே இறங்கி வந்தோம். "ஏங்க இங்க லுங்கி {கைலி} கட்டக்கூடாதுங்க" என்றார் மடத்திற்குச் சம்பந்தமான ஒருவர். இரவு படுப்பதற்கு வசதியாக வேட்டியில் இருந்து கைலிக்கு மாறியிருந்தேன். சட்டையை மட்டும் அணிந்து கொண்டு மறதியாக அப்படியே கீழே இறங்கி வந்துவிட்டேன். மீண்டும் மேலே சென்று வேட்டி அணிந்து வந்தேன். இப்படிச் சுட்டிக்காட்டப்படுவது இது இரண்டாவது முறை. ஆயிரம் கவலைகளை இந்த மறதி மறக்கச் செய்தாலும், அவசியமான சிலதை மறக்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது.

திரு.ஜெகதீஷ் அவர்களும்
இளைய மகன் ஆகாஷீம்
சென்னையில் இருந்து புறப்படுவதற்கு முன் "காசிக்குச் செல்கிறோம்". "அதுவும் வியாசர் இருந்த இடத்திற்குச் செல்கிறோம்". ஆகையால் "அச்செடுத்து வைத்திருக்கும் முழு மஹாபாரதத்தை எடுத்து வர வேண்டும்" என்று எண்ணியிருந்தேன். வியாசரின் பாதங்களிலும், கங்கையின் கரையிலும் வைத்து எடுத்து வர வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. கடைசி நேரத்தில் அதை மறந்து வந்துவிட்டேன். ரயில் ஏறியதும் அது நினைவுக்கு வரவே சற்றுக் கவலையாக இருந்தது. ஆனால் ஆர்.கே. அவர்கள் அவருக்கு நான் கொடுத்திருந்த ஒரு பிரதியை (ஆதி பர்வத்தின் இரண்டாவது புத்தகத்தை) ரயிலில் படிப்பதற்காக எடுத்து வந்திருந்தார். நிம்மதியடைந்தேன்.

சொல்லவந்ததை விட்டு, எங்கேயோ சென்று விட்டேன். பிறகு, அனைவரும் சென்று காபி அருந்தினோம். காலையிலேயே கடைத்தெரு பரப்பரப்பாக இருந்தது. நானும் திரு.விக்ரம் சீனிவாசன் அவர்களும் வேண்டுதலுக்காக் தாடி மீசை வளர்த்திருந்தோம். அந்தக் கடனை முடிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். அந்நேரத்தில் காஞ்சி சங்கர மடத்திற்கு எதிரே ஒரு நாவிதர் வந்தார். அவரை அழைத்துக் கொண்டு கங்கைக் கரைக்குச் சென்று நான் எனது வேண்டுதலின் படி மீசை தாடியை மழித்துக் கொண்டேன், பின்பு திரு.விக்ரம் சீனிவாசன் அவர்கள் அவரது வேண்டுதலின் படி மொட்டை அடித்துக் கொண்டார். ஆர்கே அவர்களும், திரு.பிரதீஷும் தங்கள் தினசரி சவரத்தை முடித்துக் கொண்டார்கள். நாவிதர் கூலியாக வெறும் ரூ.110 வாங்கினார். பின்பு அறைக்குச் சென்று குளித்து முடித்து அன்றைய பயணத்திற்குத் தயாரானோம். அறைக்குச் சூடான இட்லி வந்தது. உண்டு முடித்ததும் காஞ்சி மடத்துக்குக் கீழே காஞ்சி மடத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகோட்டி தயாராக இருந்தார்.

காசியின் கங்கை கரையில் உள்ள
64 படித்துறைகளில் சில. 
கங்கைக்குச் சென்று படகில் ஏறினோம். கங்கையின் மீது ஆனந்தமாகப் பயணித்தோம். கைகளில் கங்கை நீரைத் தொட்ட படியே பயணித்தோம். எத்தனையோ இடங்களில் படகு சவாரி செய்திருக்கிறோம். ஆனால் இந்தப் பயணம் மறக்க முடியாத ஆனந்த பயணமாக இருந்து. காரணம் கங்கை என்ற மந்திரமாகத் தான் இருக்கும். கங்கை அசுத்தமான நதி என்று பலர்கூறக் கேட்டிருக்கிறேன். வெறும் பிணங்களும் குப்பைகளும்தான் கங்கையில் மிதக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் கண்ட கங்கை சுத்தமானவளாக இருந்தாள். எனது கைகளில் அள்ளி அவளைப் பருகினேன். அமுதம் இப்படித்தான் இருக்குமோ என்று நினைக்குமளவுக்குச் சுவையாக இருந்தாள்.

காஞ்சி மடத்தினரால் ஏற்பாடு
செய்யப்பட்ட வழிகாட்டியான
படகோட்டி
படகு மீர் காட்டில் {Meer Ghat} நின்றது. "கோவிலுக்குப் போறதுக்கு முன்ன குளிக்குறவங்க குளிச்சுக்கங்க" என்றார் படகோட்டி. சங்கர மடத்துடன் இருக்கும் பழக்கத்தால் சிறிது தமிழ் பேசினார். கங்கையில் குளிப்பதற்காகவே நாங்கள் மாற்று உடை எடுத்து வந்திருந்தோம். படகை விட்டு நாங்கள் இறங்குவதற்குள் விக்ரம் சீனிவாசன் அவர்கள் படகில் இருந்து கங்கைக்குள் குதித்தார்.

எங்கள் தந்தை ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில், அத்திக்குளம் கிராமத்தில் உள்ள ஒரு சிறு கிணற்றில் இக்கரையில் இருந்து அக்கரை சென்று திரும்புவது வரை மட்டுமே எனக்கு நீச்சல் தெரியும். அக்கிணற்றில் கூட மேலிருந்து கீழே குதிப்பதென்றால் பயம்தான். ஆகையால் பொறுமையாகக் கீழ இறங்கி, பக்தியுடன் கங்கையில் மூழ்கினேன். எழுந்ததும் சூரியனைத் தரிசித்து வணங்கினேன். அறிந்தும் அறியாமலும் நான் செய்த பாவங்களைக் கழுவி கொள்வதாக மனதார உருவகித்தேன்.

எங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் யாருக்கும் 16வது நாள் காரியம் செய்வதோடு சரி. எங்கள் சாதி வழக்கப்படி அந்தணர்களை எங்களில் யாரும் அணுகுவதில்லை. திருமணம் கூடக் குலப்பெரியவர்கள் தாலி எடுத்துக் கொடுக்க, அதை வாங்கித் தான் மணமகன் மணமகளின் கழுத்தில் கட்டுவார். மந்திரங்கள் ஏதும் இருக்காது. அதனால் பிதுர்க்காரியங்கள் எதுவும் எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை யாருக்கும் நியமப்படி செய்தது கிடையாது. எனக்கும் அம்மரபை மீறத் துணிவில்லை. ஆகையால், எங்கள் குடும்பத்தில் இறந்து போன உறவினர்கள், குறிப்பாக என் தாய், தாய்மாமாக்கள், என் தந்தையைப் பெற்ற தாய் தந்தை, என் தாயைப் பெற்ற தாய் தந்தை ஆகியோருக்கு நானே மனதார இறைவனைத் தியானித்து நீர்க்கடன் செலுத்தினேன்.

மனதாரச் சரியாகக் கடன்களைச் செய்த பின்னர்ப் படகைப் பார்த்தேன். ஜெயவேலன் அவர்கள் படகில் இருந்து கங்கைக்குள் பாய்ந்தார். பின்பு சிறிது நேரம் நண்பர்கள் சேர்ந்து நீர் விளையாடினோம். நீச்சல் தெரிந்தவர்கள் சிறிது தூரம் நீந்தி சென்று வந்தார்கள். நானும், ஆர்.கே.கமலக்கண்ணன் அவர்களும் மட்டும் ஓரமாக நின்று மீண்டும் மீண்டும் கங்கையில் மூழ்கி எழுந்தோம். நீரை விட்டு எழும்ப மனதேயில்லை. நேரம் அனுமதியளிக்காததால் அனைவரும் உடனே கரையேறினோம்.


படகோட்டி ஒரு வழிகாட்டியை {Guide} எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த வழிகாட்டிக்கு தமிழ் பேசத் தெரியவில்லை. ஆனால் பேசுவதைப் புரிந்து கொண்டார். எங்களுடன் விக்ரம் சீனிவாசன் இருந்தது பெரும் உதவியாக இருந்தது. அந்த வழிகாட்டி என்ன சொன்னாரோ அதை எங்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்னார். அந்த வழிகாட்டி எங்களைக் காசி விசாலாட்சி கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவில் சிறிதாகத் தான் இருந்தது. கோயிலுக்குச் செல்லும் வழிகளும் குறுகலாகவே இருந்தன. தமிழகக் கிராமங்களில் கடவு என்று சொல்வார்களே அவ்வளவே அந்த வழிகள் இருந்தன. கோவிலுக்குள் தமிழில் கல்வெட்டு வைத்திருந்தார்கள். கல்வெட்டில் வரும் செய்தி என்னவென்றால்- காசி விசாலாட்சியின் கருவறை கண்டவர்களுக்கு இனி வேறொரு கருவறை காணாத பாக்கியம் உண்டாகும். அடுத்த பிறவி என்பதே இருக்காது. வேறு ஒரு கருவறை புகமாட்டார்கள். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.அம்மனைத் தரிசித்த பிறகு மீண்டும் படகை நோக்கி படித்துறையில் இறங்கினோம்.

மீண்டும் சிறிது தூரம் படகில் பயணித்தோம். படகு லலிதா காட்டைத் {Lalitha Ghat} தாண்டி சென்று மணிகர்ணிகா குண்டம் இருக்கும் வாயிலின் அருகே நின்றது. இங்கும் குளிக்க வேண்டுமென்றால் குளித்துக் கொள்ளுங்கள் என்றார் படகோட்டி, ஆனால் நேரத்தைக் கருதி அனைவரும் கோவிலுக்குச் செல்லலாம் என்றோம். படித்துறையில் ஏறியதும் எங்கள் வரவேற்றது பிணம் எரிக்கும் விறகுகளைச் சேகரித்து வைத்திருந்த காப்பகமே. அதைச் சிறிது தாண்டியதும் கிழக்கை நோக்கினால் கங்கை தெரியும் அளவு இடம் இருந்தது. அதன் ஊடே பார்த்தபோது பல பிணங்கள் எரிந்து கொண்டிருதன. அதுதான் மணிகர்ணீகா குண்டம் போல வழிகாட்டி எங்களைக் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குக் கடவுச்சந்துகள் போன்றிருந்த பாதையிலேயே அழைத்துச் சென்றார். வெளியே இருந்து பார்த்தால் அங்கு ஒரு கோயில் இருப்பதே தெரியாது. அப்படித்தான் காசி விஸ்வநாதர் ஆலயம் இருக்கிறது. அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தது. கைபேசிகள் மற்றும் எந்தப் பொருளையும் கோவிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்றார்கள். கோவிலுக்கு வெளியே பொருட்களைப் பாதுகாக்க என்று ஒரு காப்பகம் இருந்தது. அனைவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை அங்குக் கொடுத்துவிட்டு, தரிசனத்திற்கான வரிசையில் நின்றோம்.

காசி விஸ்வநாதர்
கோயிலின் கருவறை விமானம்
கோவிலுக்கு வெளியில் இருந்தே வரிசைதான். மேலும் கோவிலுக்குள் நுழைந்தும் கூட வரிசை பரமபத பாம்பு போல வளைந்து வளைந்து சென்றது. வரிசையில் நின்றபடியே கோவில் கோபுரத்தைக் கண்டேன். அவ்வாலயத்தில் மூன்று தங்க கோபுரங்கள் இருந்தன. அனுமனின் பிரதிநிதிகளான குரங்குகள் அங்கு இருந்தன. வரிசையில் ஊர்ந்து ஊர்ந்து கடைசியில் விஸ்வநாதரைத் தரிசித்தோம். லிங்கம் நமது கோவில்களில் உள்ளதுபோல அல்ல, மிகச் சிறியதாக இருந்தது. கர்ப்பக்கிரகம் எல்லாம் இல்லை. அனைவரும் விஸ்வநாதரை அருகில் சென்று தொட்டே வணங்கினர். எனக்குத் தொடுவதற்கு மனமில்லை. விஸ்வநாதரின் பாதம் பணிவது போல, சற்று தள்ளியே கை வைத்து வணங்கினேன்.

காசி விஸ்வநாதர்
{லிங்க வடிவில் காட்சிதருகிறார்}
விஸ்வநாதர் இருக்கும் இடத்தைவிட்டு வெளியே வந்ததும் வரிசை கிடையாது. அனைவரும் ஒரு இடத்தில் கூடி நின்றோம். ஆர்.கே. அவர்கள் "சரி காசி விஸ்வநாதர் எங்க இருக்காரு" என்று கேட்டார். "சார், இப்ப நீங்க பார்த்தவர்தான் காசி விஸ்வநாதர்" என்றேன் நான். "என்ன சார் சொல்லியிருக்கக்கூடாதா, எனக்குத் தெரியாம போயிடுச்சே. கடமைக்குக் கும்பிட்டுட்டு வந்துட்டேனே சார்" என்று வருந்தினார். மாலையில் நேரம் கிடைத்தால் நாம் திரும்பவும் வந்து தரிசிக்கலாம் என்று இருவரும் தீர்மானம் செய்து கொண்டோம். ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும், காப்பhம் வந்து, அங்கு வைத்திருந்த பொருட்களைப் பெற்றுக் கொண்டோம். அந்தச் சந்தில் நிற்பதற்குக்கூட இடமில்லை. போலீசாரும் "சீக்கிரம், சீக்கிரம்" என்று அவர்கள் மொழியில் அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.

அன்னபூரணி அம்மன்
பிறகு வழிகாட்டி எங்களை அன்னப்பூரணி அம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். வியாசருக்கு அமுதம் படைத்த அம்மன் இந்த அன்னப்பூரணி அம்மன். உலகோர் அனைவரும் அன்னமில்லாமல் வாடாதவாறு அருள்பாலிக்கும் அந்த அன்னப்பூரணியை அனைவரும் வணங்கினோம். கோவிலை விட்டு வெளியே வந்ததும். வழிகாட்டி அருகில் இருந்த ஒரு அனுமன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அவர் எங்களை ஒரு அந்தணர் முன்பு நிறுத்தி குடும்ப விருத்திக்குப் பூஜை செய்து, பிராமண போஜனம் செய்யச் சொன்னார். அந்த அந்தணர் ஒரு குடும்பம் சார்பாக பிராமணர் ஒருவருக்கு அன்னதானம் செய்ய ரூ.400/- என்றார். நாங்கள் அனைவரும் அதை மறுத்துவிட்டோம். நான் கையில் இருந்த இருபது ரூபாயை மட்டும் கொடுத்தேன்.  அந்த அந்தணர் எனது மகன்களின் பெயரைக் கேட்டார். நான் சொன்னேன். அவரும் ஏதோ மந்திரங்களைச் சொல்லி என்னைக் கிளம்புமாறு சைகை செய்தார். பிறகு எங்கள் குழுவில் இருந்தவர்களும் அதே போலச் செய்தனர்.

பிறகு அந்த வழிகாட்டி எங்களை ஒரு சிறு முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த முருகன் மீசையுடன் இருந்தார். முருகனை நான் மீசையுடன் கண்டதில்லை. இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அந்தக் கோவிலை விட்டு வெளியே வந்து சிறிது தூரம் நடந்ததும், மணிகர்ணிகா குண்டத்திற்கு அருகிலேயே இருக்கும் ஒரு நாராயணன் கோவிலுக்கு வழிகாட்டி எங்களை அழைத்துச் சென்றார். அதுவும் சிறு கோவில்தான். உள்ளே நுழையும்போதே பரவசமாக இருந்தது. கூட்டமே இல்லை. நாங்கள் மட்டும்தான் இருந்தோம். அமைதியாகச் சிறிது நேரம் பெருமாள் முன்பு தியானத்தில் நின்று திரும்பிப் பார்த்தால், இரு பெண்மணிகள் கோவிலுக்குள்ளேயே குடிநீர் தானம் செய்து கொண்டிருந்தார்கள். அனைவரும் நீரை வாங்கிப் பருகி விட்டு கோவிலை விட்டு வெளியே வந்தோம்.

மதிய நேரமாகிவிட்டது. உணவருந்துவதற்காக மீண்டும் மடத்திற்குத் திரும்ப வேண்டும். ஆகவே, படகோட்டி எங்களை அனுமான் காட்டிற்கே {Hanuman Ghat} திரும்ப அழைத்துச் சென்றார். படகைவிட்டு இறங்கி அனைவரும் படித்துறையில் ஏறிக் கொண்டிருந்தோம். படித்துறையின் உச்சியில் இடது ஓரத்தில் ஒரு மரத்தின் அடியில் ஒரு சாமியார் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி சிறு கூட்டம் நின்று கொண்டிருந்தது. அவர் அருகே ஒரு வெளிநாட்டுக்காரர் அமர்ந்திருந்தார். இக்காட்சி எங்களில் பலரை ஈர்த்தது. அங்கேயே நின்று என்ன நடக்கிறது என்று பார்த்தோம். எங்களுடன் வந்திருந்த பெண்களும் குழந்தைகளும் அறைக்குச் சென்றுவிட்டனர். நான், விக்ரம் சீனிவாசன், திரு.ஜெகதீஷ், திரு.ஜெயவேலன், பிரதீஷ் ஆகியோர் மட்டும் அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். ஆர்.கே. கூட அதில் விருப்பம் இல்லாமல் அறைக்குச் சென்றுவிட்டார்.

அந்தச் சாமியாரின் அருகில் நல்ல விலையுயர்ந்த ஒரு ஜோடி செருப்பு இருந்தது. அதன் அருகில் ஒரு வெள்ளைக்காரர் அடக்கத்துடன் அமர்ந்திருந்தார். சாமியார் மடியில் இருந்து ஒரு கவரை எடுத்து, அதில் இருந்த ஒரு பொடியை எடுத்துக் கசக்கினார். அதற்குள் அவரது உதவியாளர் போல இருந்த ஒருவர், புகை கக்கிக் கொண்டிருந்த ஒரு சில்லத்தை {Chillum} அந்தச் சாமியாரிடம் நீட்டினார். அந்தச் சில்லத்தின் முடிவில் ஒரு கைக்குட்டையை வைத்து மூடி, வாயில் வைத்து நீண்டு இழுப்பு இழுத்தார் சாமியார். இரண்டு மூன்று முறை அப்படிச் செய்து விட்டு, அருகில் இருந்த அந்த வெள்ளைக்காரரிடம் கொடுத்தார். பவ்யமாக அதைப் பெற்றுக் கொண்ட அந்த வெள்ளைக்காரரும் சாமியார் செய்ததைப் போலவே செய்தார். "கஞ்சா சார்" என்றார் விக்ரம் சீனிவாசன்.
(தொடரும்…)இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Thursday, May 22, 2014

கண்டேன் கங்கையை

ஐந்தாம் தேதி இரவு ஒரு மணிவரை கடும் வேலை. அடுத்த நாள் காலை 7 மணி அளவில் கயா எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டும். மாலையே பயணத்திற்கு வேண்டிய சில பொருட்களைக் கொள்முதல் செய்து வைத்திருந்தேன். இரவு 7 மணி முதல் 1 மணி வரை முடிக்க வேண்டிய வேலைகளை முடித்தேன். தூங்கச் செல்லும்போது மணி 2. பயணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் என் மனைவி தயார் செய்து வைத்திருந்தாள். காலை 4.30 மணிக்கு எனது மனைவியால் எழுப்பிவிடப்பட்டேன். அவசர அவசரமாகக் குளித்துக் கொண்டிருந்த போது, நண்பர் திரு.ஆர்.கே.கமலக்கண்ணன் அவர்களிடம் இருந்து தொலைபேசி.

"சார், ஏழு நாள் ஊரில் இருக்க மாட்டோம். கொத்தாரி கம்பனிக்கு ஒரு அப்ளிகேஷன் பாரம் தட்டச்சுச் செய்து அனுப்ப வேண்டும். அதை அனுப்பாமல் என்னால் காசிக்கு வர முடியாது" என்றார். "சரி பொறுங்கள்" என்று சொல்லி, குளித்து முடித்துவிட்டு, அந்த விண்ணப்பத்தைத் தட்டச்சுச் செய்து மின்னஞ்சல் அனுப்பினேன்.

திரு.ஜெகதீஷ் அவர்கள்
6.5.2014 காலை 5.30 மணிக்கு, நான், திரு.விக்ரம் சீனிவாசன், திரு.ஆர்.கே. கமலக்கண்ணன் ஆகியோர் விக்ரம் அச்சகத்தில் கூடி, தேரடியில் இருந்து எழும்பூர் செல்லும் பேருந்தில் காலை 6.00 மணிக்கு ஏறினோம். பேருந்தில் ஏறியதும் திரு.ஜெகதீஷ் அவர்களிடம் இருந்து தொலைபேசி, "என்னங்க, எல்லோரும் சரியான நேரத்துக்கு வந்துருவீங்களா?" "வந்திடுவோம். எல்லோரும் பேருந்தில் ஏறிவிட்டோம்" என்று சொன்ன எனக்குத் திரு.ஜெயவேலன் அவர்கள் ஞாபகம் வந்தது.

பேருந்து சுங்கச்சாவடியைக் கடந்து கொண்டிருந்த போது, திரு.ஜெயவேலன் அவர்களைத் தொலைபேசியில் அழைத்தேன். "என்னங்க, கிளம்பிட்டீங்களா?" என்று கேட்டேன். "இல்லை. வீட்டுலதான் இருக்கேன். இனிதான் கிளம்பணும்" என்றார். "நேரம் ஆகுதுங்க சீக்கிரம் கிளம்புங்க" என்று சொல்லி தொலைபேசியைத் துண்டித்தேன்.

ஏழு மணியளவில் எழும்பூரை அடைந்தோம். கயா எக்ஸ்பிரஸ் ஒன்பதாம் நம்பர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. நண்பர் திரு.ஜெகதீஷ் அவர்களும் அவரது குடும்பத்தாரும் எங்களுக்காகக் காத்திருந்தனர். பிறகு, நாங்கள் ஏற வேண்டிய கோச்சுக்கு சென்று ஏறினோம்.

திரு.ஜெயவேலன்
மணி 7.20. திரு.ஜெயவேலன் இன்னும் வரவில்லை. அவரை மீண்டும் தொலைபேசியில் அழைத்தேன். "என்னங்க, இன்னும் உங்களக் காணும்?". "நான் ஸ்டேஷன்குள்ள நுழஞ்சுட்டேன். என்ன பிளாட்பாரம்?" என்று கேட்டார். "நான் ஒன்பதாம் நம்பர் பிளாட்பாரம்" என்றேன். "கோச் நம்பர் என்ன?" என்று கேட்டார். "நான் S3" என்று சொன்னேன். பிறகு அவர் இணைப்பைத் துண்டித்தார்.

ஐந்து நிமிடம் கழிந்தது. இப்போது அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். "என்னங்க 9ம் நம்பர் பிளாட்பாரம் S3லதான் இருக்கேன். உங்கள யாரையும் காணோமே. என்ன சீட் நம்பர்?" என்று கேட்டார். நான் "39" என்று சொன்னேன். "இல்லையே" காணோமே" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏங்க நீங்க நல்ல உயரமாச்சே, நீங்க எங்கிருந்தாலும் எனக்குத் தெரியுமே. இருங்க பிரதீஷிடம் கொடுக்கிறேன்" என்று சொல்லி, நண்பர் பிரதீஷிடம் கொடுத்தேன். அவர், "அண்ணா, எஸ்கலேட்டர் பக்கத்திலேயே கோச் இருக்கும்ணா" என்றார். அதற்கு அவர் "சென்டிரலில் ஏதுடா எஸ்கலேட்டர்" என்று கேட்டிருக்கிறார்.

அப்போதுதான் அனைவருக்கும் தெரிந்தது. அவர் எழும்பூருக்கு வராமல் சென்டிரலுக்குச் சென்றுவிட்டார் என்று. உடனே நிலைமையைப் புரிந்து கொண்ட திரு.ஜெயவேலன் அவர்கள். ஒரு ஆட்டோவைப் பிடித்து விரைவாக எழும்பூர் வந்து மேம்பாலத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, ரயில் புறப்பட ஆரம்பித்துவிட்டது. இவ்வளவு நேரமும் தொலைபேசியைத் துண்டிக்காமல் பிரதீஷுடன் தொடர்பிலேயே இருந்தார் திருஜெயவேலன். அவர் கீழே இறங்கி வருவதற்குள் ரயில் நடைமேடையைத் தாண்டிவிட்டது.

அனைவருக்கும் பெரும் வருத்தமாக இருந்தது. "சரி, டிரெய்ன் அடுத்து எந்த ஸ்டேஷன்ல நிக்கும்?" என்று கேட்டார் திரு.ஜெகதீஷ். யாரோ ஒருவர் "ஓங்கோலில்" நிற்கும் என்றார். உடனே திரு.ஜெயவேல் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து, "அடுத்து ஓங்கோலில் நிற்குமாம். அங்க சீக்கிரமா வந்திடுங்க" என்றார்.

அரை மணி நேரம் கழித்து ஜெயவேலன் அவர்கள் தொடர்பு கொண்டு, "காரில் வேகமா வந்தாலும் ஓங்கோல்-ல டிரெயினப் பிடிக்க முடியாதுனு டிரைவருங்க சொல்றாங்க. கவலப்படாதீங்க. நான் உங்களுக்கு முன்னையே காசிக்குப் போயிடுவேன்" என்று சொன்னார்.

நாங்கள் 16 பேர் கொண்ட குழு, அதில் ஒருவர் ரெயிலைப் பிடிக்கமுடியவில்லை என்றதும் அனைவருக்கும் உற்சாகம் குறைந்தது. அதிகாலையிலேயே எழுந்து அரக்கபறக்க ஓடி வந்து ரெயிலைப் பிடித்து, கடைசி நேர பரபரப்புக்கு உள்ளானதால் அனைவரும் சிறிது களைத்துப் போனதாகத் தெரிந்தது.

ஒரு மணி நேரம் சென்றதும், "அவர் எப்படியும் வந்துவிடுவார்" என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டு மீண்டும் உற்சாகத்தை அடைந்தோம். அனைவருக்கும் RAC டிக்கெட்தான் ஆகையால், Side Seatகளில்அனைவரும் அமர்ந்திருந்தோம். 8 சீட்டுங்கள் கொண்ட எங்கள் பகுதியில் ஒரு உத்திரப் பிரதேசக் குடும்பம் அமர்ந்திருந்தது. அவர்கள் எங்களுக்குச் சிறிது ஒத்துழைப்புக் கொடுத்ததால், நான்கு பேர் ஒரு பகுதியில் அமரக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஆகையால், ஆறு பேர் சேர்ந்து சீட்டு விளையாட ஆரம்பித்தோம்.

இரண்டு நாள் ரயில் பயணமும் சீட்டு விளையாட்டு, அரட்டை, உறக்கம் என்றே கழிந்தது. வழியில் பல ரம்மியமான இடங்களின் தரிசனமும் கிடைத்தது. வழியெங்கும் மனிதர்களின் முகத்தோற்றமும் மொழியும் மாறுகிறதேயொழிய இந்தப் பரந்த பாரதப் பெருநிலம் முழுக்க ஒரே தன்மை இருப்பதை உணர முடிந்தது.

ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல் ஆகிய பகுதிகளைக் கடந்தோம். மாலை 7 மணி இருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் திரு.ஜெயவேலன் அவர்கள் தொடர்பு கொண்டு, தான் காசியை அடைந்துவிட்டதாகச் சொன்னார். ரெயிலை விட்ட உடனேயே நண்பர்களைத் தொடர்பு கொண்டு விமானத்தில் டிக்கெட் போட சொல்லி, சென்னை-டில்லி சென்று அங்கிருந்து டெல்லி-வாரணாசியை அடைந்துவிட்டதாகச் சொன்னார். நாங்கள் அனைவரும் நிம்மதி கொண்டோம்.

இரவு உணவு உண்டு உறங்கினோம். நள்ளிரவில் ரயில் நாக்பூரை அடைந்தது. இதுவரை ஹைரதாபாதைக் கடந்திராத எனக்கு நாக்பூர் ஸ்டேஷனைக் கண்டதும் ஒரு பூரிப்பு ஏற்பட்டது. நாம்  மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பே உவகையைத் தந்தது. Side Seatல் நானும் திரு.ஆர்.கே.கமலக்கண்ணன் அவர்களும் படுத்துக் கொண்டோம். நான் படுத்திருந்ததால் அவர் அமர்ந்து உறங்கினார். சிறிது நேரம் கழித்து அவரைப் படுக்க வைத்து விட்டு, நான் அமர்ந்த படியே உறங்கி வந்தேன்.

காலையில் "சாய், சாய்" என்ற குரலைக் கேட்டு விழிப்புத் தட்டியது. இரயில் இட்டார்சி {Itarsi} நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அனைவரும் எழுந்து டீ குடித்து விட்டும் மீண்டும் அரட்டையில் இறங்கினோம். நாங்கள் படித்த புத்தகங்களைக் குறித்து விவாதித்தோம். மஹாபாரதம் குறித்து விவாதித்தோம். இன்றைய அரசியல், சமூகம் எனப் பல தலைப்புகளில் விவாதித்தோம். நால்வர் கூடி விவாதிப்பது என்பது அந்த நால்வருக்கும் எவ்வளவு புதிய தகவல்களைத் தருகின்றன? ஆனால் விவாதங்களில் ஈடுபடுவதற்குத் தான் நமக்கு நேரம் கிடைப்பதில்லை.

முதல் நாளை போலவே அன்றும் சீட்டு விளையாடினோம். நாங்கள் சீட்டு விளையாடுவதைக் கண்டு அருகில் இருந்த ஒரு உத்திரப்பிரதேச இளைஞன் எங்களுடன் சீட்டு விளையாட்டில் கலந்து கொண்டான். அவனைக் கண்டு இன்னொருவன் எங்கள் அருகிலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தான். விளையாடிக் கொண்டே பேச்சுக் கொடுத்ததில் அவன், "நான் சென்னையில் தச்சு வேலை செய்கிறேன். ஆறு மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊர் செல்வேன். எங்கள் ஊரில் அவ்வளவு வேலை இருக்காது. ஊதியமும் குறைவு. சென்னையில் வேலை இல்லை என்ற நிலை இல்லை. ஊதியமும் திருப்திகரமாக இருக்கிறது" என்றான்.

அந்த இளைஞன் நண்பர்களுடன் வந்திருந்தான். திடீரென ரெயில் பெட்டியில் ஸ்குவாடு ஏறி டிக்கெட்டுகளைப் பரிசோதித்தார்கள். அப்போது அந்த இளைஞனுடன் வந்தவர்களில் இருவர் Confirm ஆகாத டிக்கெட்டுகளுடன் இருந்தது தெரிந்தது. ஆகையால் அந்த இளைஞன் Fine கட்டும்படி நேர்ந்தது. அது முதல் அவன் எங்களிடம் நெருங்கிப் பேசக் கூச்சப்பட்டான்.

சீட்டு விளையாட்டு, அரட்டை, உணவு, உறக்கம் என்றே அன்றும் கழிந்தது. இரவு ஏழு மணியளவில் மொகல்சராய் {Mugal Sarai} இரயில் நிலையத்தை அடைந்தோம். வாரணாசிக்கு அருகாமையில் இருக்கும் இரயில் நிலையம் அது. அங்கே இறங்கினோம். வாரணாசிக்கு எப்படிச் செல்வது என ரயில் நிலையத்தில் விசாரித்தோம். வாரணாசிக்குச் செல்லும் ரயில் சிறிது நேரத்தில் வந்துவிடும். அதில் செல்லலாம் என்று அவர்கள் அறிவுறுத்தினர். திரு.ஜெகதீஷ் அவர்கள் ரயில் டிக்கெட் எடுத்துவந்தார். ரயில் வருவதற்கு வெகு தாமதமானது. சரி வெளியே சென்று ஆட்டோ பேசி பார்க்கலாம் என்று திரு.விக்ரம் சீனிவாசன் சென்றார். ஒரு ஆட்டோ டிரைவரிடம் பேசி மூன்று ஆட்டோக்கள் புக் செய்து அதில் சென்றோம்.

மொகல்சராயில் {Mugal Sarai} இருந்து ஆட்டோவில் செல்லும் போது நான் கவனித்தது மோடிக்கு இருந்த வரவேற்பையும் பாஜகவின் செல்வாக்கையும் தான். எங்குத் திரும்பினாலும் மோடி மற்றும் பாஜக. வழியில் பல திருமணக் கொண்டாட்டங்களையும் கண்டோம். தமிழ்நாட்டில் உள்ளது போல இல்லாமல், தெருக்களில் நடைபெறும் திருமணக் கொண்டாட்ட ஆட்டங்களில் மகளிரும் பங்கு பெறுகின்றனர்.

வழியெங்கும் இருள். எந்தத் தெருவிளக்கும் எரியவில்லை. அந்தச் சாலை ஒரு நெடுஞ்சாலையைப் போலத் தான் இருந்தது. ஆனால் அச்சாலைகள் பள்ளமும் மேடுமாக கரடுமுரடாக இருந்தது. அதைக் காரிருள் மூடியிருந்தது.

வாரணாசியை நெருங்குமுன் ஆட்டோ ஒரு பாலத்தைக் கடந்தது. "இதுதான் கங்கை" என்றார் ஆட்டோக்காரர். அப்போது ஏற்பட்ட பரவசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பாலத்தைக் கடந்த பிறகும் கண்கள் காணும் வரை கங்கையை எட்டிப் பார்த்தபடியே வந்தேன். கங்கையைக் கடந்து வரும்போது ஆர்.கே.அவர்கள் "பாருங்க சார். பட்டுத்துணியால் மூடி பிணத்தை எடுத்து வருகிறார்கள்" என்றார். ஆனால் நான் பார்ப்பதற்குள் அக்கூட்டம் மறைந்து போனது. அதே போல மற்றுமொரு இடத்தில் திரு.ஜெகதீஷ் அவர்கள் "பிணத்தை எடுத்துச் செல்கிறார்கள்" என்றார் அதையும் என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது "காசியில் இறக்க வேண்டும்" என்ற மக்களின் நம்பிக்கையைக் குறித்துப் பேசிய படியும் கடைத்தெருக்களை நோட்டம்விட்டபடியும் ஆட்டோவில் பயணித்தோம்.

பயணத்தை ஏற்பாடு செய்திருந்த திருமதி.சுதா அவர்கள் நாங்கள் தங்குவதற்காகச் சங்கரமடத்தில் ரூம் புக் செய்திருந்தார்கள். ஆகவே சங்கரமடத்திற்கு வழிகேட்டபடியே பயணித்தோம். திரும்பினால் சங்கர மடம் அருகே திரு.ஜெயவேலன் அவர்கள் எங்களை வரவேற்றபடி நின்று கொண்டிருந்தார். "என்னங்க இது. தாடியும், மீசையுமா?" என்றார். நான் வேண்டுதல் என்றேன். திருமதி.சுதா அவர்கள் சங்கர மடத்தில் பேசி அறைகளை உறுதி செய்வதற்குள் நான், திரு.ஜெயவேலன், திரு.ஜெகதீஷ், திரு.விக்ரம்சீனிவாசன், திரு.ஆர்.கே. திரு.பிரதீஷ் ஆகியோர் காபி குடிப்பதற்காகச் சென்றோம். மண் குவளையில் காப்பிக் கொடுத்தார்கள். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சிறு மண் குடுவையில் காபி என்றால் ரூ.10, பெரிய குடுவையில் என்றால் ரூ.30/ ஆம்.

அதற்குள் அறைகள் உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வரவே உடனே அறைக்குச் சென்று எங்கள் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, சோர்வு களைய ஒரு குளியலைப் போட்டு, பேண்டில் இருந்து கைலிக்கு மாறினேன். இரவு நேரத்திலேயே கங்கையைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் எங்கள் குழுவில் இருந்த ஆண்கள் அனைவரும் கிளம்பினோம். மடத்தை விட்டு வெளியே வந்த போது, ஒருவர் இங்கே கைலி அணியக்கூடாது என்றார். ஆகவே உடனே அறைக்குச் சென்று வேட்டி கட்டி கொண்டு வந்தேன்.

நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே அனுமான் காட்டும் {Hanuman Ghat}, ஹரிச்சந்திரன் காட்டும் (Harichandra Ghat_வாயில்கள்) இருந்தன. அனுமான் காட் {Hanuman Ghat} வழியாகப் படித்துறையில் இறங்கினோம். கங்கையை அருகிலேயே கண்டோம். "கண்டேன், கண்டேன் கண்டேன்!! கண்ணுக்கினியன கண்டேன், தொண்டீர் எல்லோரும் வாரீர்" என்று எனக்குக் கூவத்தோன்றியது. கங்கையில் நீராட வேண்டும் என்ற ஆசை. ஆனால் இரவில் நீர்நிலைகளில் நீராடக்கூடாது என்று மகாபாரதத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. ஆகையால் அவ்வாசையைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அனுமான் காட்டில் இருந்து ஹரிச்சந்திரன் காட்டுக்குச் சென்றோம். பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. "நான் கடவுள்" திரைப்படத்தில் கண்டது போல அக்காட்சி இருந்தது. அவ்வளவு பிணங்கள் அங்கு எரிகின்றன ஆனால் துர்நாற்றம் என்பது கிஞ்சிற்றும்  இல்லை.உண்மை.

ஹரிச்சந்திரன் காட்டைத் தாண்டி நடந்து கொண்டிருந்த போது திரு.ஜெயவேல் அவர்கள் சொன்னார், "நேற்றே வந்துவிட்டேனா, என்ன செய்வது என்றே தெரியவில்லை. இன்று முழுவதும். இங்கே இருந்து நடந்தபடியே எல்லாப் படித்துறைக்கும் {மொத்தம் உள்ள 64 படித்துறைக்கும்} போய்ப் பாத்துட்டு வந்துட்டேன்" என்றார். "புண்ணியம் செய்தவர் ஐயா நீங்கள்" என்று நான் நினைத்துக் கொண்டேன்.

குமரகுருபரர் தங்கியிருந்த இடம் என்று சொல்லப்பட்ட இடத்திற்கு வந்ததும் சற்று நின்று கங்கையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நவநாகரிக அந்தணர் அங்கே வந்தார். அவரது மீசை "குரு" திரைப்படத்தில் வரும் கமலின் மீசை போல இருந்தது. ஆள் நல்ல வெளுப்பு, அட்சரச் சுத்தமாகத் தமிழ் பேசினார். உதட்டுக்குக் கீழே கருவண்டு போல முடியை மழிக்காமல் வைத்திருந்தார். வாயோரம் புகையிலை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆளைப் பார்த்தல் அந்தணர் என்று சொல்ல முடியாது, நவநாகரிக வியாபாரி போல இருந்தார்.

நாங்கள் தமிழ் பேசுவதையும், குமரகுருபரர் குறித்துப் பேசுவதையும் கேட்டு நின்ற அவர், "நீங்க தமிழ்நாடா? தமிழ்நாட்டுல எங்க?" என்று கேட்டார். நாங்கள் விவரங்களைக் கூறினோம். அவர் எங்களுக்குக் காசியின் பெருமையையும், சில வரலாற்றுக் குறிப்புகளையும் சொல்லிவிட்டு, தான் நீராடப் போவதாகச் சொன்னார். எங்கள் குழுவில் யாரோ ஒருவர் "இரவில் நீராடலாமா?" என்று கேட்டார். அதற்கு அவர், "காசியில் நவக்கிரகங்களும் சக்தியை இழக்கின்றன. ஆகையால் இங்கு அதுபோன்றெல்லாம் நினைக்க வேண்டியதில்லை" என்று சொன்னார். இருப்பினும் நாங்கள் நீராடாமலேயே அறைக்குத் திரும்பினோம்.

(தொடரும்...)

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top