கங்கையில் படகில் மொட்டை தலை விக்ரம் சீனிவாசனுடன் நான் |
கண் பசியும், செவிப்பசியும் ஆறிய பின்னர் வயிற்றுப் பசி ஆரம்பித்து விட்டது. அறையில் இருந்து கிளம்பி, திரு.ஜெயவேலன் அவர்கள் முன்பே பார்த்து வைத்திருந்த ஒரு ஓட்டலுக்குச் சென்றோம். "ஏங்க, தமிழ்நாட்டு மீல்சும் இங்க கிடைக்குங்க" என்றார் ஜெயவேலன். இருப்பினும் அனைவரும் ரொட்டியும் பன்னீரும் ஆர்டர் செய்தோம். தென்னிந்திய உணவு வகைகளைத் தினமும் உண்கிறோம். வட இந்தியாவில் மக்களின் உணவு முறை எப்படி இருக்கிறது, சுவை எப்படி இருக்கிறது என்று அறிய இது ஒரு சந்தப்பமல்லவா? எண்ணெய் இல்லாமல் நெருப்பில் சுட்ட ரொட்டியைக் கொடுத்தார்கள். நினைத்தது போல் அல்ல நன்றாகத்தான் இருந்தது. உண்டு முடித்து எங்களுக்குத் தேவையான சில பொருட்களைக் கடைத்தெருவில் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம்.
திரு.ஜெயவேலன் |
மகாபாரத மொழியாக்கம் தடைபட்டுவிடக்கூடாதே என்பதற்காகத் திரு.ஜெயவேலன் அவர்கள் தனது மடிக்கணினியை எடுத்து வந்திருந்தார். திரு.ஜெகதீஷ் அவர்கள் இண்டர்நெட்டுக்குத் தேவையான டாங்கிளை (Dongle) எடுத்து வந்திருந்தார். நான் பழைய கோப்புகளை எல்லாம் பென் டிரைவில் {Pen Drive} எடுத்துச் சென்றிருந்தேன். திரு.ஜெயவேலன் அவர்கள் தனது மடிக்கணினியைக் கொடுத்தார். சிறிது நேரம் முயன்று பார்த்தேன். மனம் ஒன்றவில்லை. மடிக்கணினியிலும் சார்ஜ் குறைவாக இருந்து. சரி என்று அதைச் சார்ஜில் வைத்து விட்டு சிறிது நேரம் நண்பர்கள் விவாதித்தோம். திரு.ஜெயவேலன் மற்றும் திரு.விக்ரம் சீனிவாசன் ஆகியோர் பேசிக்கொண்டே உறங்கிவிட்டனர். ஆர்.கே.கமலக்கண்ணன் அவர்கள் அறைக்கு வெளியில் படுத்துவிட்டார். வெப்பம் அதிகமாக இருந்தது. நானும் அவருடன் வெளியிலேயே படுத்துக் கொண்டேன். சென்னையைப் போன்றே அங்கும் வெப்பம்தான். வெளியில் சற்றுக் குளுமையாக இருந்தது. அன்று கண்ட காட்சிகளை மனதில் அசைபோட்டபடியே உறங்கிப் போனேன்.
8ம் தேதி காலை 6.00 மணி இருக்கும். அனைவரும் விழித்துவிட்டோம். காபி குடிக்கலாம் என்றெண்ணி நண்பர்கள் காஞ்சி சங்கர மடத்திலிருந்து கீழே இறங்கி வந்தோம். "ஏங்க இங்க லுங்கி {கைலி} கட்டக்கூடாதுங்க" என்றார் மடத்திற்குச் சம்பந்தமான ஒருவர். இரவு படுப்பதற்கு வசதியாக வேட்டியில் இருந்து கைலிக்கு மாறியிருந்தேன். சட்டையை மட்டும் அணிந்து கொண்டு மறதியாக அப்படியே கீழே இறங்கி வந்துவிட்டேன். மீண்டும் மேலே சென்று வேட்டி அணிந்து வந்தேன். இப்படிச் சுட்டிக்காட்டப்படுவது இது இரண்டாவது முறை. ஆயிரம் கவலைகளை இந்த மறதி மறக்கச் செய்தாலும், அவசியமான சிலதை மறக்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது.
திரு.ஜெகதீஷ் அவர்களும் இளைய மகன் ஆகாஷீம் |
சென்னையில் இருந்து புறப்படுவதற்கு முன் "காசிக்குச் செல்கிறோம்". "அதுவும் வியாசர் இருந்த இடத்திற்குச் செல்கிறோம்". ஆகையால் "அச்செடுத்து வைத்திருக்கும் முழு மஹாபாரதத்தை எடுத்து வர வேண்டும்" என்று எண்ணியிருந்தேன். வியாசரின் பாதங்களிலும், கங்கையின் கரையிலும் வைத்து எடுத்து வர வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. கடைசி நேரத்தில் அதை மறந்து வந்துவிட்டேன். ரயில் ஏறியதும் அது நினைவுக்கு வரவே சற்றுக் கவலையாக இருந்தது. ஆனால் ஆர்.கே. அவர்கள் அவருக்கு நான் கொடுத்திருந்த ஒரு பிரதியை (ஆதி பர்வத்தின் இரண்டாவது புத்தகத்தை) ரயிலில் படிப்பதற்காக எடுத்து வந்திருந்தார். நிம்மதியடைந்தேன்.
சொல்லவந்ததை விட்டு, எங்கேயோ சென்று விட்டேன். பிறகு, அனைவரும் சென்று காபி அருந்தினோம். காலையிலேயே கடைத்தெரு பரப்பரப்பாக இருந்தது. நானும் திரு.விக்ரம் சீனிவாசன் அவர்களும் வேண்டுதலுக்காக் தாடி மீசை வளர்த்திருந்தோம். அந்தக் கடனை முடிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். அந்நேரத்தில் காஞ்சி சங்கர மடத்திற்கு எதிரே ஒரு நாவிதர் வந்தார். அவரை அழைத்துக் கொண்டு கங்கைக் கரைக்குச் சென்று நான் எனது வேண்டுதலின் படி மீசை தாடியை மழித்துக் கொண்டேன், பின்பு திரு.விக்ரம் சீனிவாசன் அவர்கள் அவரது வேண்டுதலின் படி மொட்டை அடித்துக் கொண்டார். ஆர்கே அவர்களும், திரு.பிரதீஷும் தங்கள் தினசரி சவரத்தை முடித்துக் கொண்டார்கள். நாவிதர் கூலியாக வெறும் ரூ.110 வாங்கினார். பின்பு அறைக்குச் சென்று குளித்து முடித்து அன்றைய பயணத்திற்குத் தயாரானோம். அறைக்குச் சூடான இட்லி வந்தது. உண்டு முடித்ததும் காஞ்சி மடத்துக்குக் கீழே காஞ்சி மடத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகோட்டி தயாராக இருந்தார்.
காசியின் கங்கை கரையில் உள்ள 64 படித்துறைகளில் சில. |
காஞ்சி மடத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வழிகாட்டியான படகோட்டி |
எங்கள் தந்தை ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில், அத்திக்குளம் கிராமத்தில் உள்ள ஒரு சிறு கிணற்றில் இக்கரையில் இருந்து அக்கரை சென்று திரும்புவது வரை மட்டுமே எனக்கு நீச்சல் தெரியும். அக்கிணற்றில் கூட மேலிருந்து கீழே குதிப்பதென்றால் பயம்தான். ஆகையால் பொறுமையாகக் கீழ இறங்கி, பக்தியுடன் கங்கையில் மூழ்கினேன். எழுந்ததும் சூரியனைத் தரிசித்து வணங்கினேன். அறிந்தும் அறியாமலும் நான் செய்த பாவங்களைக் கழுவி கொள்வதாக மனதார உருவகித்தேன்.
எங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் யாருக்கும் 16வது நாள் காரியம் செய்வதோடு சரி. எங்கள் சாதி வழக்கப்படி அந்தணர்களை எங்களில் யாரும் அணுகுவதில்லை. திருமணம் கூடக் குலப்பெரியவர்கள் தாலி எடுத்துக் கொடுக்க, அதை வாங்கித் தான் மணமகன் மணமகளின் கழுத்தில் கட்டுவார். மந்திரங்கள் ஏதும் இருக்காது. அதனால் பிதுர்க்காரியங்கள் எதுவும் எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை யாருக்கும் நியமப்படி செய்தது கிடையாது. எனக்கும் அம்மரபை மீறத் துணிவில்லை. ஆகையால், எங்கள் குடும்பத்தில் இறந்து போன உறவினர்கள், குறிப்பாக என் தாய், தாய்மாமாக்கள், என் தந்தையைப் பெற்ற தாய் தந்தை, என் தாயைப் பெற்ற தாய் தந்தை ஆகியோருக்கு நானே மனதார இறைவனைத் தியானித்து நீர்க்கடன் செலுத்தினேன்.
மனதாரச் சரியாகக் கடன்களைச் செய்த பின்னர்ப் படகைப் பார்த்தேன். ஜெயவேலன் அவர்கள் படகில் இருந்து கங்கைக்குள் பாய்ந்தார். பின்பு சிறிது நேரம் நண்பர்கள் சேர்ந்து நீர் விளையாடினோம். நீச்சல் தெரிந்தவர்கள் சிறிது தூரம் நீந்தி சென்று வந்தார்கள். நானும், ஆர்.கே.கமலக்கண்ணன் அவர்களும் மட்டும் ஓரமாக நின்று மீண்டும் மீண்டும் கங்கையில் மூழ்கி எழுந்தோம். நீரை விட்டு எழும்ப மனதேயில்லை. நேரம் அனுமதியளிக்காததால் அனைவரும் உடனே கரையேறினோம்.
படகோட்டி ஒரு வழிகாட்டியை {Guide} எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த வழிகாட்டிக்கு தமிழ் பேசத் தெரியவில்லை. ஆனால் பேசுவதைப் புரிந்து கொண்டார். எங்களுடன் விக்ரம் சீனிவாசன் இருந்தது பெரும் உதவியாக இருந்தது. அந்த வழிகாட்டி என்ன சொன்னாரோ அதை எங்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்னார். அந்த வழிகாட்டி எங்களைக் காசி விசாலாட்சி கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவில் சிறிதாகத் தான் இருந்தது. கோயிலுக்குச் செல்லும் வழிகளும் குறுகலாகவே இருந்தன. தமிழகக் கிராமங்களில் கடவு என்று சொல்வார்களே அவ்வளவே அந்த வழிகள் இருந்தன. கோவிலுக்குள் தமிழில் கல்வெட்டு வைத்திருந்தார்கள். கல்வெட்டில் வரும் செய்தி என்னவென்றால்- காசி விசாலாட்சியின் கருவறை கண்டவர்களுக்கு இனி வேறொரு கருவறை காணாத பாக்கியம் உண்டாகும். அடுத்த பிறவி என்பதே இருக்காது. வேறு ஒரு கருவறை புகமாட்டார்கள். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.அம்மனைத் தரிசித்த பிறகு மீண்டும் படகை நோக்கி படித்துறையில் இறங்கினோம்.
மீண்டும் சிறிது தூரம் படகில் பயணித்தோம். படகு லலிதா காட்டைத் {Lalitha Ghat} தாண்டி சென்று மணிகர்ணிகா குண்டம் இருக்கும் வாயிலின் அருகே நின்றது. இங்கும் குளிக்க வேண்டுமென்றால் குளித்துக் கொள்ளுங்கள் என்றார் படகோட்டி, ஆனால் நேரத்தைக் கருதி அனைவரும் கோவிலுக்குச் செல்லலாம் என்றோம். படித்துறையில் ஏறியதும் எங்கள் வரவேற்றது பிணம் எரிக்கும் விறகுகளைச் சேகரித்து வைத்திருந்த காப்பகமே. அதைச் சிறிது தாண்டியதும் கிழக்கை நோக்கினால் கங்கை தெரியும் அளவு இடம் இருந்தது. அதன் ஊடே பார்த்தபோது பல பிணங்கள் எரிந்து கொண்டிருதன. அதுதான் மணிகர்ணீகா குண்டம் போல வழிகாட்டி எங்களைக் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குக் கடவுச்சந்துகள் போன்றிருந்த பாதையிலேயே அழைத்துச் சென்றார். வெளியே இருந்து பார்த்தால் அங்கு ஒரு கோயில் இருப்பதே தெரியாது. அப்படித்தான் காசி விஸ்வநாதர் ஆலயம் இருக்கிறது. அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தது. கைபேசிகள் மற்றும் எந்தப் பொருளையும் கோவிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்றார்கள். கோவிலுக்கு வெளியே பொருட்களைப் பாதுகாக்க என்று ஒரு காப்பகம் இருந்தது. அனைவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை அங்குக் கொடுத்துவிட்டு, தரிசனத்திற்கான வரிசையில் நின்றோம்.
காசி விஸ்வநாதர் கோயிலின் கருவறை விமானம் |
கோவிலுக்கு வெளியில் இருந்தே வரிசைதான். மேலும் கோவிலுக்குள் நுழைந்தும் கூட வரிசை பரமபத பாம்பு போல வளைந்து வளைந்து சென்றது. வரிசையில் நின்றபடியே கோவில் கோபுரத்தைக் கண்டேன். அவ்வாலயத்தில் மூன்று தங்க கோபுரங்கள் இருந்தன. அனுமனின் பிரதிநிதிகளான குரங்குகள் அங்கு இருந்தன. வரிசையில் ஊர்ந்து ஊர்ந்து கடைசியில் விஸ்வநாதரைத் தரிசித்தோம். லிங்கம் நமது கோவில்களில் உள்ளதுபோல அல்ல, மிகச் சிறியதாக இருந்தது. கர்ப்பக்கிரகம் எல்லாம் இல்லை. அனைவரும் விஸ்வநாதரை அருகில் சென்று தொட்டே வணங்கினர். எனக்குத் தொடுவதற்கு மனமில்லை. விஸ்வநாதரின் பாதம் பணிவது போல, சற்று தள்ளியே கை வைத்து வணங்கினேன்.
காசி விஸ்வநாதர் {லிங்க வடிவில் காட்சிதருகிறார்} |
விஸ்வநாதர் இருக்கும் இடத்தைவிட்டு வெளியே வந்ததும் வரிசை கிடையாது. அனைவரும் ஒரு இடத்தில் கூடி நின்றோம். ஆர்.கே. அவர்கள் "சரி காசி விஸ்வநாதர் எங்க இருக்காரு" என்று கேட்டார். "சார், இப்ப நீங்க பார்த்தவர்தான் காசி விஸ்வநாதர்" என்றேன் நான். "என்ன சார் சொல்லியிருக்கக்கூடாதா, எனக்குத் தெரியாம போயிடுச்சே. கடமைக்குக் கும்பிட்டுட்டு வந்துட்டேனே சார்" என்று வருந்தினார். மாலையில் நேரம் கிடைத்தால் நாம் திரும்பவும் வந்து தரிசிக்கலாம் என்று இருவரும் தீர்மானம் செய்து கொண்டோம். ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும், காப்பhம் வந்து, அங்கு வைத்திருந்த பொருட்களைப் பெற்றுக் கொண்டோம். அந்தச் சந்தில் நிற்பதற்குக்கூட இடமில்லை. போலீசாரும் "சீக்கிரம், சீக்கிரம்" என்று அவர்கள் மொழியில் அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.
அன்னபூரணி அம்மன் |
பிறகு வழிகாட்டி எங்களை அன்னப்பூரணி அம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். வியாசருக்கு அமுதம் படைத்த அம்மன் இந்த அன்னப்பூரணி அம்மன். உலகோர் அனைவரும் அன்னமில்லாமல் வாடாதவாறு அருள்பாலிக்கும் அந்த அன்னப்பூரணியை அனைவரும் வணங்கினோம். கோவிலை விட்டு வெளியே வந்ததும். வழிகாட்டி அருகில் இருந்த ஒரு அனுமன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அவர் எங்களை ஒரு அந்தணர் முன்பு நிறுத்தி குடும்ப விருத்திக்குப் பூஜை செய்து, பிராமண போஜனம் செய்யச் சொன்னார். அந்த அந்தணர் ஒரு குடும்பம் சார்பாக பிராமணர் ஒருவருக்கு அன்னதானம் செய்ய ரூ.400/- என்றார். நாங்கள் அனைவரும் அதை மறுத்துவிட்டோம். நான் கையில் இருந்த இருபது ரூபாயை மட்டும் கொடுத்தேன். அந்த அந்தணர் எனது மகன்களின் பெயரைக் கேட்டார். நான் சொன்னேன். அவரும் ஏதோ மந்திரங்களைச் சொல்லி என்னைக் கிளம்புமாறு சைகை செய்தார். பிறகு எங்கள் குழுவில் இருந்தவர்களும் அதே போலச் செய்தனர்.
பிறகு அந்த வழிகாட்டி எங்களை ஒரு சிறு முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த முருகன் மீசையுடன் இருந்தார். முருகனை நான் மீசையுடன் கண்டதில்லை. இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அந்தக் கோவிலை விட்டு வெளியே வந்து சிறிது தூரம் நடந்ததும், மணிகர்ணிகா குண்டத்திற்கு அருகிலேயே இருக்கும் ஒரு நாராயணன் கோவிலுக்கு வழிகாட்டி எங்களை அழைத்துச் சென்றார். அதுவும் சிறு கோவில்தான். உள்ளே நுழையும்போதே பரவசமாக இருந்தது. கூட்டமே இல்லை. நாங்கள் மட்டும்தான் இருந்தோம். அமைதியாகச் சிறிது நேரம் பெருமாள் முன்பு தியானத்தில் நின்று திரும்பிப் பார்த்தால், இரு பெண்மணிகள் கோவிலுக்குள்ளேயே குடிநீர் தானம் செய்து கொண்டிருந்தார்கள். அனைவரும் நீரை வாங்கிப் பருகி விட்டு கோவிலை விட்டு வெளியே வந்தோம்.
பிறகு அந்த வழிகாட்டி எங்களை ஒரு சிறு முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த முருகன் மீசையுடன் இருந்தார். முருகனை நான் மீசையுடன் கண்டதில்லை. இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அந்தக் கோவிலை விட்டு வெளியே வந்து சிறிது தூரம் நடந்ததும், மணிகர்ணிகா குண்டத்திற்கு அருகிலேயே இருக்கும் ஒரு நாராயணன் கோவிலுக்கு வழிகாட்டி எங்களை அழைத்துச் சென்றார். அதுவும் சிறு கோவில்தான். உள்ளே நுழையும்போதே பரவசமாக இருந்தது. கூட்டமே இல்லை. நாங்கள் மட்டும்தான் இருந்தோம். அமைதியாகச் சிறிது நேரம் பெருமாள் முன்பு தியானத்தில் நின்று திரும்பிப் பார்த்தால், இரு பெண்மணிகள் கோவிலுக்குள்ளேயே குடிநீர் தானம் செய்து கொண்டிருந்தார்கள். அனைவரும் நீரை வாங்கிப் பருகி விட்டு கோவிலை விட்டு வெளியே வந்தோம்.
மதிய நேரமாகிவிட்டது. உணவருந்துவதற்காக மீண்டும் மடத்திற்குத் திரும்ப வேண்டும். ஆகவே, படகோட்டி எங்களை அனுமான் காட்டிற்கே {Hanuman Ghat} திரும்ப அழைத்துச் சென்றார். படகைவிட்டு இறங்கி அனைவரும் படித்துறையில் ஏறிக் கொண்டிருந்தோம். படித்துறையின் உச்சியில் இடது ஓரத்தில் ஒரு மரத்தின் அடியில் ஒரு சாமியார் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி சிறு கூட்டம் நின்று கொண்டிருந்தது. அவர் அருகே ஒரு வெளிநாட்டுக்காரர் அமர்ந்திருந்தார். இக்காட்சி எங்களில் பலரை ஈர்த்தது. அங்கேயே நின்று என்ன நடக்கிறது என்று பார்த்தோம். எங்களுடன் வந்திருந்த பெண்களும் குழந்தைகளும் அறைக்குச் சென்றுவிட்டனர். நான், விக்ரம் சீனிவாசன், திரு.ஜெகதீஷ், திரு.ஜெயவேலன், பிரதீஷ் ஆகியோர் மட்டும் அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். ஆர்.கே. கூட அதில் விருப்பம் இல்லாமல் அறைக்குச் சென்றுவிட்டார்.
அந்தச் சாமியாரின் அருகில் நல்ல விலையுயர்ந்த ஒரு ஜோடி செருப்பு இருந்தது. அதன் அருகில் ஒரு வெள்ளைக்காரர் அடக்கத்துடன் அமர்ந்திருந்தார். சாமியார் மடியில் இருந்து ஒரு கவரை எடுத்து, அதில் இருந்த ஒரு பொடியை எடுத்துக் கசக்கினார். அதற்குள் அவரது உதவியாளர் போல இருந்த ஒருவர், புகை கக்கிக் கொண்டிருந்த ஒரு சில்லத்தை {Chillum} அந்தச் சாமியாரிடம் நீட்டினார். அந்தச் சில்லத்தின் முடிவில் ஒரு கைக்குட்டையை வைத்து மூடி, வாயில் வைத்து நீண்டு இழுப்பு இழுத்தார் சாமியார். இரண்டு மூன்று முறை அப்படிச் செய்து விட்டு, அருகில் இருந்த அந்த வெள்ளைக்காரரிடம் கொடுத்தார். பவ்யமாக அதைப் பெற்றுக் கொண்ட அந்த வெள்ளைக்காரரும் சாமியார் செய்ததைப் போலவே செய்தார். "கஞ்சா சார்" என்றார் விக்ரம் சீனிவாசன்.
(தொடரும்…)
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.