Sunday, April 15, 2018

பூனையும், எலியும் – நட்பும், பகையும்! - சாந்திபர்வம் பகுதி – 138

Cat and mouse – Friendship and Enemity! | Shanti-Parva-Section-138| Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 08)


பதிவின் சுருக்கம் : ஆபத்துக் காலத்தில் எவ்வாறு எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்குப் பூனை மற்றும் எலியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக்குலத்தின் காளையே, எதிர்காலத்திற்குத் தேவையானதைத் தருவதும் {அடைவதும்}, அவசர காலங்களை எதிர்கொள்வதுமான நுண்ணறிவே எங்கும் மேலானது, அதே வேளையில், காலதாமதம் அழிவையே கொண்டு வரும் என்று நீர் சொல்கிறீர்.(1) ஓ! பாட்டா, சாத்திரங்களை நன்கறிந்தவனும், அறம் மற்றும் பொருளை நன்கு அறிந்தவனுமான மன்னன், எந்த மேன்மையான நுண்ணறிவின் துணையுடன் இருந்தால், பல எதிரிகளால் சூழப்படும்போதும் கலங்காமல் இருப்பான் என்பதைக் கேட்க விரும்புகிறேன்.(2) ஓ! குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, இதையே நான் கேட்கிறேன். இது குறித்து உரையாடுவதே உமக்குத் தகும்.(3) ஒரு மன்னன் பல எதிரிகளால் தாக்கப்படும்போது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளவற்றுக்கு இசைவாக அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்த அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(4) ஒரு மன்னன் துயரில் வீழும்போது, கடந்த காலத்தில் அவனது செயல்களால் தூண்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான எதிரிகள், அவனுக்கு எதிராகப் படையெடுத்து அவனை வெல்ல முனைவார்கள்.(5)


பலவீனனும், தனியொருவனுமான மன்னன், அணிதிரண்டிருக்கும் பலமிக்க மன்னர்களால் அனைத்துப் பக்கங்களில் இருந்து அறைகூவியழைக்கப்படும்போது எவ்வாறு தன் தலையை உயர்த்த முடியும்?(6) அத்தகைய நேரங்களில் ஒரு மன்னன் நண்பர்களையும், பகைவர்களையும் எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?((7) நண்பர்களுக்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டவர்கள் அவனுடைய எதிரிகளாகும்போது, ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைய என்ன செய்ய வேண்டும்?(8) அவன் எவனிடம் போரிட வேண்டும்? எவனிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அவன் பலவானாகவே இருப்பினும், எதிரிகளுக்கு மத்தியில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?(9) ஓ! எதிரிகளை எரிப்பவரே, அரச கடமைகளைச் செயல்படுத்துவது தொடர்பான அனைத்துக் கேள்விகளிலும் இதையே நான் உயர்ந்ததாகக் கருதுகிறேன். இந்தக் கேள்விக்கான பதிலைக் கேட்கக்கூடியவர்கள் சிலரே, பதிலளிக்கவோ, உண்மையில் உறுதியான பற்று கொண்டவரும், அனைத்து உணர்வுகளையும் கட்டுப்படுத்தியவருமான சந்தனுவின் மகன் பீஷ்மரைத் தவிர வேறு யாருமில்லை. ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, இதைக் குறித்துச் சிந்தித்து, என்னுடன் உரையாடுவீராக” என்று கேட்டான்.(11)

பீஷ்மர், “ஓ! யுதிஷ்டிரா, உனக்குத் தகுந்த கேள்வியே இஃது. இதற்கான பதில் பேரின்பம் நிறைந்ததாகும். ஓ! மகனே, ஓ! பாரதா, துன்ப காலங்களில் {ஆபத்துக் காலங்களில்} நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவையும், பொதுவாக அறியப்படாதவையுமான கடமைகள் அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக.(12) ஓர் எதிரி நண்பனாகக் கூடும், ஒரு நண்பனும் எதிரியாகக் கூடும். சூழ்நிலைகளின் தொகையால் உண்டாகும் மனிதச் செயற்பாடுகளின் போக்கு, மிக மிக நிச்சயமற்றதாகும்.(13) எனவே, எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதைப் பொறுத்தவரையில், காலம் மற்றும் இடத்துக்குத் தகுந்த தேவைகளில் அவசிய கவனத்தைச் செலுத்தி, ஒருவன் தன் எதிரிகளை நம்ப வேண்டும், அல்லது போரிட வேண்டும்.(14) ஒருவன் தன்னால் செய்ய முடிந்ததில் சிறந்ததை வெளிப்படுத்தி, நலம் நாடும் விருப்பம் கொண்ட நுண்ணறிவு மிக்கவர்கள் மற்றும் அறிவுமிக்கவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். ஓ! பாரதா, ஒருவன் தன் உயிரைக் காத்துக் கொள்ள முடியாத போது, எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(15) எதிரிகளுடன் ஒருபோதும் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளாத மூட மனிதன், ஒருபோதும் எதையும் வெல்லவோ, பிற முயற்சிகளின் எந்தக் கனிகளையும் அடையவோ மாட்டான்.(16) மேலும், சூழ்நிலைகளை முழுமையாகக் கருத்தில் கொண்டு எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, நண்பர்களிடம் சச்சரவில் ஈடுபடுபவன் பெரும் கனிகளை அடைவதில் வெல்கிறான்.(17) இது தொடர்பாக ஓர் ஆலமரத்தினடியில் ஒரு பூனைக்கும், எலிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது”.(18)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஒரு பெரிய காட்டுக்கு மத்தியில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. பல வகைக் கொடிகளால் மறைக்கப்பட்டிருந்த அது, பல்வேறு வகைப் பறவைகளுக்கான ஓய்விடமாக இருந்தது.(19) அனைத்துத் திசைகளிலும் பரந்து விரிந்த எண்ணற்ற கிளைகளுடன் கூடிய பெரும் தண்டை {நடுமரத்தை} அது கொண்டிருந்தது. காண்பதற்கு இனிமையான அதன் நிழல் பெரும் புத்தணர்வை அளிப்பதாக இருந்தது. அது காட்டின் மத்தியில் நின்று கொண்டிருந்தது, மேலும் பல்வேறு இனங்களைச் சார்ந்த விலங்குகளும் அதில் வாழ்ந்து வந்தன.(20) பலிதன் என்ற பெயருடையதும், பெரும் ஞானம் கொண்டதுமான ஓர் எலி, அந்த மரத்தினடியில் நூற்றுக்கணக்கான வாயில்களைக் கொண்ட ஒரு பொந்தை அமைத்து வாழ்ந்து வந்தது.(21) லோமசன் என்ற பெயரைக் கொண்ட ஒரு பூனை, அந்த மரத்தின் கிளைகளில் தினமும் பெரும் எண்ணிக்கையிலான பறவைகளை விழுங்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.(22) சில காலம் கழித்து, அந்தக் காட்டு வந்த சண்டாளன் ஒருவன், தனக்கென அங்கே ஒரு குடிலைக் கட்டிக் கொண்டான். அவன், ஒவ்வொரு மாலைப்பொழுதிலும் சூரியன் மறைந்த பிறகு தனது கண்ணிகளை {உயிரினங்களைச் சிக்க வைக்கும் பொறிகளை} பரப்பினான். உண்மையில் தோல் இழைகளால் அமைக்கப்பட்ட தன் வலைகளைப் விரித்துவிட்டு, இரவை மகிழ்ச்சியாக உறங்கிக் கழித்து, நாளின் விடியலில் அந்த இடத்திற்கு மீண்டும் வந்தான்.(24) ஒவ்வோர் இரவிலும் பல்வேறு வகை விலங்குகள் அவனது கண்ணிகளில் சிக்கன. ஒரு நாள், ஒரு கணக் கவனக்குறைவால் பூனை அந்தக் கண்ணியில் சிக்க நேர்ந்தது.(25)ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, எலியான பலிதன், எக்காலத்திலும் எலிகளினத்தின் எதிரியும், தனது பகைவனுமாக இருந்த பூனை அந்த வலையில் அகப்பட்டதும், பொந்தைவிட்டு வெளியே வந்து, அச்சமில்லாமல் திரியத் தொடங்கியது.(26) உணவைத் தேடி நம்பிக்கையுடன் காட்டில் திரிந்து வந்த அந்த எலி, சிறிது நேரம் கழித்து (அந்தச் சண்டாளன் கண்ணியாகப் பரப்பி வைத்திருந்த) இறைச்சியைக் கண்டது.(27) அந்தக் கண்ணியிடம் சென்ற அந்தச் சிறு விலங்கு {எலி} அந்த இறைச்சியை உண்ணத் தொடங்கியது. மனத்திற்குள் சிரித்துக் கொண்டே, ஆதரவற்ற நிலையில் வலையில் சிக்கியிருக்கும் தன் எதிரியைத் தாண்டிச் சென்றது.(28) இறைச்சி உண்ணும் நோக்கத்தில், தனக்கு வரவிருக்கும் ஆபத்தை அது கவனிக்கவில்லை. அந்த இடத்திற்கு வந்திருந்த ஒரு பயங்கரமான எதிரியின் மேல் திடீரென அது தன் கண்களைச் செலுத்தியது(29) அந்த எதிரியானது, அமைதியற்றதும், தாமிரக் கண்களைக் கொண்டதும், ஹரிதன் என்ற பெயரைக் கொண்டதுமான கீரிப்பிள்ளையேயன்றி வேறேதும் அல்ல. பாதாளப் பொந்துகளில் வாழும் அதன் உடல், நாணல் மலருக்கு ஒப்பானதாக இருந்தது.(30)

எலியின் மணத்தால் அந்த இடத்திற்கு இழுத்துவரப்பட்ட அந்த விலங்கு {கீரி}, தன் இரையை விழுங்குவதற்காகப் பெரும் வேகத்தில் அங்கே வந்தது. அது தன் தலையை உயர்த்தி இடுப்பை நிமிர்த்தி நின்று, தன் கடைவாயை நாவால் நனைத்துக் கொண்டிருந்தது.(31) அதே நேரத்தில் அந்த எலி, அந்த மரப்பொந்துகளில் வாழ்ந்து வரும் மற்றொரு எதிரியானது அந்த ஆலமரத்தின் கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டது. இரவு உலாவியும், கூரிய அலகைக் கொண்டதும், சந்திரகன் என்ற பெயரைக் கொண்டதுமான அஃது ஓர் ஆந்தையாகும்.(32) கீரி மற்றும் ஆந்தை ஆகிய இரண்டின் பார்வைக்குத் தான் இலக்காகியிருப்பதைக் கண்ட எலியானது, பேரச்சத்துடன் இந்த வகையில் சிந்திக்கத் தொடங்கியது:(33) ”அனைத்துப் பக்கங்களிலும் அச்சம் இருக்கும்போதும், காலனே முகத்துக்கு நேராக என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதுமான இத்தகைய பேராபாத்துக் காலத்தில், தன் நன்மையை விரும்பும் ஒருவன் எவ்வாறு செயல்பட வேண்டும்?” என்று நினைத்தது.(34)

அனைத்துப் பக்கங்களிலும் ஆபத்தால் சூழப்பட்டு, அனைத்துத் திசைகளிலும் அச்சத்தைக் கண்ட அந்த எலியானது, தன் பாதுகாப்புக்கான அச்சத்தால் நிறைந்து, ஒரு பெரும் தீர்மானத்தைச் செய்தது:(35) “ஒருவன் நூற்றுக்கணக்கான வழிமுறைகளைக் கொண்டு, எண்ணற்ற ஆபத்துகளை விரட்டி, தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தற்போது அனைத்துப் பக்கங்களிலும் ஆபத்து என்னைச் சூழ்ந்துள்ளது.(36) போதுமான முன்னெச்சரிக்கையின்றி இந்தக் கண்ணியில் இருந்து நான் தரைக்குச் சென்றால், கீரியானவன் நிச்சயம் என்னைப் பிடித்து விழுங்கிவிடுவான். இந்தக் கண்ணியிலேயே நான் இருந்தாலோ, இந்த ஆந்தையானவன் என்னை நிச்சயம் பிடித்துவிடுவான். பூனையானவன் வலையில் இருந்து விடுபடுவதில் வென்றால், அவனும் நிச்சயம் என்னை விழுங்கிவிடுவான்.(37) எனினும், நம்மைப் போன்ற நுண்ணறிவு மிக்க ஒருவன், தன் அறிவை இழப்பது முறையாகாது. எனவே, உரிய வழிமுறைகள் மற்றும் நுண்ணறிவின் துணை கொண்டு, என் உயிரைப் பாதுகாப்பதற்கான சிறந்த முயற்சியை நான் செய்வேன்.(38) நுண்ணறிவு மற்றும் ஞானத்தைக் கொண்டவனும், கொள்கையறிவியலை அறிந்தவனுமான ஒருவன், தன்னை அச்சுறுத்தும் ஆபத்து எவ்வளவு பெரியதாக, பயங்கரமானதாக இருந்தாலும், ஒருபோதும் அதில் மூழ்கிப்போக மாட்டான்.(39) எனினும் தற்போது, இந்தப் பூனையானவனைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் நான் காணவில்லை. அவன் என் எதிரிதான். ஆனால் அவனும் துயரில் இருக்கிறான். நான் அவனுக்குச் செய்ய இருக்கும் தொண்டு மிகப் பெரியதாகும்.(40)

மூன்று எதிரிகளால் இரையாக்கப்பட முயலப்படும் நான் இப்போது என் உயிரைக் காத்துக் கொள்ள எவ்வாறு செயல்பட வேண்டும்? அந்த எதிரிகளில் ஒருவனான பூனையின் பாதுகாப்பையே இப்போது நான் நாட வேண்டும்.(41) இந்த மூவரிடம் இருந்தும் நான் தப்பும் வகையில், கொள்கை அறிவியலின் துணைகொண்டும், என் நுண்ணறிவைப் பயன்படுத்தியும், பூனையின் நன்மைக்கான ஆலோசனையை அவனிடம் கூறப் போகிறேன்.(42) பூனையே என் மிகப் பெரும் எதிரியாக இருந்தாலும், இப்போது அவன் வீழ்ந்திருக்கும் துயரானது மிகப் பெரியதாகும். இந்த மூட விலங்கைத் தனது நன்மைக்கான காரியங்களைப் புரிந்து கொள்ள வைக்க முடியுமா என்று நான் முயற்சிக்கப்போகிறேன். இத்தகைய துயரில் வீழ்ந்திருக்கும் அவன், என்னுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.(43) பலவானால் பீடிக்கப்படும் ஒருவன், எதிரியுடன் கூட அமைதியை ஏற்படுத்திக் கொள்ளலாம். துயரில் வீழ்ந்து தன் உயிருக்கான பாதுகாப்பை நாடும் ஒருவனுடைய நடத்தை இவ்வாறே இருக்க வேண்டும் என்று கொள்கை அறிவியலின் ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.(44) மூடனை நண்பனாகக் கொண்டிருப்பதைவிட, கல்விமானை எதிரியாகக் கொண்டிருப்பதே சிறந்தது. என்னைப் பொறுத்தவரையில், என் உயிரானது என் எதிரியான அந்தப் பூனையிடமே மொத்தமாக இருக்கிறது.(45) நான் இப்போது அந்தப் பூனையானவனிடம், அவனுடைய விடுதலையைக் குறித்துப் பேச வேண்டும். ஒருவேளை இந்தக் கணத்தில், பூனையை நுண்ணறிவுமிக்க, கல்விமானான எதிரியாகக் கொள்வதில் எந்தப் பிழையுமில்லை” என்று தீர்மானித்தது. இவ்வாறே எதிரிகளால் சூழப்பட்ட அந்த எலி சிந்தித்துக் கொண்டிருந்தது.(46)

பொருள் அறிவியலையும், எப்போதும் போரிடத் தீர்மானிக்க வேண்டும், எப்போது அமைதியை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை நன்கறிந்ததுமான எலி, இவ்வாறு சிந்தித்து, அந்தப் பூனையிடம் மென்மையாக,(47) “ஓ! பூனையே, நான் நட்பால் உன்னிடம் பேசுகிறேன். நீ உயிருடன் இருக்கிறாயா? நீ வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் நம் இருவரின் நன்மையையும் விரும்புகிறேன்.(48) ஓ இனிமையானவனே, நீ எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. நீ மகிழ்ச்சியுடன் வாழ்வாய். உண்மையில், நீ என்னைக் கொல்லாமல் இருந்தால், நான் உன்னை மீட்பேன்.(49) நீ தப்பிக்கவும், நான் பெரும் நன்மையை அடையவும், ஒரு சிறந்த தகுமுறை இருப்பதாக எனக்குத் தெரிகிறது.(50)

உனக்காகவும், எனக்காகவும் மெய்யுறுதியுடன் சிந்தித்து, நம்மிருவருக்கும் நன்மையைச் செய்யும் தகுமுறை ஒன்றை நான் கண்டடைந்திருக்கிறேன்.(51) கீரி மற்றும் ஆந்தை ஆகிய இருவரும், தீய நோக்கத்துடன் காத்திருக்கின்றனர். ஓ! பூனையே, அவ்விருவரும் என்னைத் தாக்காத மட்டுமே என் உயிர் பாதுகாப்புடன் இருக்கும்.(52) அந்த மரத்தின் கிளையில் இருக்கும் இழிந்த ஆந்தையானவன், அமைதியற்ற பார்வையுடனும், பயங்கர அலறல்களுடனும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் நான் பேரச்சத்துடன் இருக்கிறேன்.(53) நல்லோரைப் பொறுத்தவரையில் எட்டு அடி {நடையடி} கொண்டதே நட்பு[1]. ஞானம் கொண்டவனாக நீ என் நண்பனாவாய். நான் உன்னிடம் நண்பனாக நடந்து கொள்வேன். உனக்கு இப்போது எந்த அச்சமும் தேவையில்லை.(54) ஓ! பூனையே என் உதவி இல்லாமல் உன்னால் இந்த வலையைக் கிழிக்க முடியாது. எனினும், நீ என்னைக் கொல்லாதிருந்தால், உனக்குத் தொண்டாற்ற நானே வலையை அறுப்பேன்.(55)

[1] “நல்ல மனிதர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு நட்பு கொள்ளக் காலமேதும் தேவையில்லை. அத்தகைய இருவர், ஏழு எட்டுகள் சேர்ந்து நடந்தாலே நண்பர்களாகி விடுவார்கள் என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

நீ இந்த மரத்தில் வாழ்ந்து வந்தாய், நானும் அதனடியில் வாழ்ந்து வந்தேன். நாமிருவரும் இங்கே நீண்ட வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். இவை யாவற்றையும் நீ அறிவாய்.(56) ஒருவராலும் நம்பப்படாதவன், ஒருவரையும் நம்பாதவன் ஆகியோரை ஞானிகள் ஒருபோதும் மெச்சுவதில்லை. இருவரும் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருப்பார்கள்.(57) இந்தக் காரணத்திற்காக, நம் இருவருக்குள்ளும் அன்பு பெருகட்டும், நம் இருவருக்குள் ஒற்றுமை ஏற்படட்டும். வாய்ப்பு கடந்த பிறகு செய்யப்படும் முயற்சியை ஞானிகள் மெச்சுவதில்லை.(58) இது போன்ற ஒரு புரிதல் நமக்குள் ஏற்படுவதற்கு இதுவே சரியான நேரம் என்பதை அறிந்து கொள்வாயாக. நீ வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் வாழ வேண்டும் என்று நீயும் விரும்ப வேண்டும்.(59) மனிதன் மரத்தை அக்கரைக்கு எடுத்துச் செல்வதையும், மரம் மனிதனை அக்கரைக்கு இட்டுச் செல்வதையும் காண்கிறோம்.(60) அதைப் போலவே, நமது உடன்படிக்கை நம்மிருவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நான் உன்னைக் காப்பேன், நீயும் என்னைக் காக்க வேண்டும்” என்றது.(61) இரண்டிற்கும் நன்மையை ஏற்படுத்துபவையும், அறிவு நிறைந்தவையும், முற்றிலும் ஏற்புடையவையுமான இவ்வார்த்தைகளைச் சொன்ன பலிதன் என்ற அந்த எலி, ஒரு பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தது.(62)

எலி சொன்னவையும், நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டவையும், அறிவு நிறைந்தவையும், மிகவும் ஏற்புடையவையுமான இந்த வார்த்தைகளைக் கேட்டதும், நல்ல கருத்து முடிவையும், முன்னறிவையும் கொண்டதுமான பூனையானது, பதிலுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னது.(63) பெரும் நுண்ணறிவைக் கொண்டதும், நாவன்மை கொண்டதுமான பூனை, தன் நிலையை நினைத்துப் பார்த்து, அவ்வார்த்தைகளைச் சொன்ன எலியைப் புகழ்ந்து, மென்மையான வார்த்தைகளைக் கொண்டு அதனிடம் பதிலுரைத்தது.(64) கூரிய பற்களைக் கொண்டதும், வைடூரியக் கற்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டதும், லோமசன் என்றழைக்கப்பட்டதுமான அந்தப் பூனை, எலியை மெதுவாகப் பார்த்துப் பின்வருமாறு பதிலளித்தது:(65) “ஓ! இனியவனே, நான் உன்னிடம் மகிழ்ச்சியடைந்தேன். நான் வாழ வேண்டும் என்று விரும்பும் நீ அருளப்பட்டிருப்பாயாக. நல்ல விளைவுகளை உண்டாக்கும் என்று நீ கருதுபவற்றை எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்வாயாக.(66) நான் நிச்சயம் பெருந்துயரில் இருக்கிறேன். நீயும் பெருந்துயரத்திலேயே இருக்கிறாய். தாமதமில்லாமல் நமக்குள் ஓர் உடன்பாடு உண்டாகட்டும்.(67) ஓ! பலமிக்கவனே, நம் காரிய நிறைவேற்றத்திற்குத் தேவையானதை வாய்ப்பு வரும்போது நான் செய்வேன். நீ என்னைக் காத்தால், உன் தொண்டு ஒன்றுமில்லாமல் போகாது.(68) நான் என்னை உன் கரங்களில் ஒப்படைக்கிறேன். நான் உன்னிடம் அர்ப்பணிப்புக் கொள்கிறேன். நான் உன்னிடம் ஒரு சீடனைப் போலக் காத்திருந்து உனக்குத் தொண்டு புரிவேன். உன் பாதுகாப்பை நாடும் நான் எப்போதும் உன் கட்டகளைகளுக்குக் கீழ்ப்படிவேன்” என்றது.(69)

இவ்வாறு சொல்லப்பட்ட பலிதன் என்ற எலி, முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் இருந்த பூனையிடம், முக்கியத்துவம் வாய்ந்தவையும், உயர்ந்த ஞானத்தைக் கொண்டவையுமான இவ்வார்த்தைகளைப் பதிலுக்குச் சொன்னது:(70) “நீ மிகவும் பெருந்தன்மையுடன் பேசினாய். உன்னைப் போன்ற ஒருவனிடம் இதை எதிர்பார்க்காமல் இருக்க முடியாது. எனக்குத் தெரிந்து நம் இருவருக்கும் நன்மையை உண்டாக்கப்போகும் தகுமுறையை உனக்கு வெளிப்படுத்துகிறேன், கேட்பாயாக.(71) நான் உன் உடலின் அடியில் பதுங்கிக் கொள்கிறேன். நான் அந்தக் கீரியிடம் பெரும் அச்சமடைந்திருக்கிறேன். நீ என்னைக் காப்பாயாக. என்னைக் கொல்லாதிருப்பாயாக. நான் உன்னைக் காப்பதற்கு இயன்றவனாவேன்.(72) அந்த ஆந்தையும் என்னை இரையாகக் கொள்ள விரும்புவதால், அந்த அற்பனிடம் இருந்தும் என்னைக் காப்பாயாக. நீ சிக்கியிருக்கும் கயிற்றை நான் அறுப்பேன். ஓ! நண்பா, உண்மையின் பேரில் நான் உறுதிகூறுகிறேன்” என்றது.(73)

அறிவுநிறைந்த, நீதிமிக்க இவ்வார்த்தைகளைக் கேட்ட லோமசன், மகிழ்ச்சியால் நிறைந்து, தன் கண்களைப் பலிதன் மேல் செலுத்தி, நல்வரவு கூறி அதனை மெச்சியது.(74) பலிதனை மெச்சிய பூனை, தன் நட்பை வெளிப்படுத்தி, ஒரு கணம் சிந்தித்து, நேரமெதையும் இழக்காமல் மகிழ்ச்சியாக,(75) “என்னிடம் விரைந்து வா. நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ என் உயிரைப் போன்ற அன்புக்குரிய நண்பனாவாய். ஓ! பெரும் ஞானியே, உன் அருளால் நான் என் உயிரைக் கிட்டத்தட்ட மீண்டும் அடைந்துவிட்டேன்.(76) என் சக்திக்குத் தக்க நான் இப்போது உனக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் சொல்வாயாக, நான் அதைச் செய்வேன். ஓ! நண்பா, நமக்குள் அமைதி நிலைக்கட்டும்.(77) ஆபத்திலிருந்து விடுபட்டதும், என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து நான் உனக்கு ஏற்புடைய, நன்மையான அனைத்தையும் செய்வேன்.(78) ஓ! இனியவனே, இத்துயரில் இருந்து விடுபட்டதும், நான் நிச்சயம் உன்னை மகிழ்ச்சிப்படுத்த முனைந்து, வழிபட்டு, உன் தொண்டுக்கான பதிலுதவியை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் செய்வேன்.(79) ஒருவன், அபரிமிதமான தொண்டுகளைப் பதிலுக்குச் செய்தாலும், முதல் முறையாகச் செய்யப்படும் நன்மைக்கு அஃது இணையாகாது. முன்னவன் தான் பெற்ற தொண்டுகளுக்காகவே அந்தத் தொண்டுகளைச் செய்கிறான். எனினும், அத்தகு நோக்கமேதும் இல்லாமல் செயல்பட்ட பின்னவனே கௌரவிக்கப்பட வேண்டும்” என்றது”.(80)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்தப் பூனைக்குத் தன்னலன்களை இவ்வாறு புரிய வைத்த அந்த எலி, தன் எதிரியின் உடலுக்கடியில் நம்பிக்கையுடன் பதுங்கியது.(81) அறிவு கொண்டதும், பூனையால் இவ்வாறு உறுதிகூறப்பட்டதுமான எலியானது, தன் தந்தை, அல்லது தாயின் மடியில் இருப்பதைப் போல அந்தப் பூனையின் மார்புக்கடியில் நம்பிக்கையுடன் தன்னைக் கிடத்திக் கொண்டது.(82) இவ்வாறு அந்தப் பூனையின் உடலுக்கடியில் பதுங்கிய எலியைக் கண்ட கீரியும், ஆந்தையும், தங்கள் இரையைப் பிடிப்பதில் நம்பிக்கையிழந்தன.(83) உண்மையில், அந்த எலிக்கும், பூனைக்குமிடையிலான நெருக்கத்தைக் கண்ட ஹரிதனும், சந்திரகனும், அச்சமடைந்து, ஆச்சரியத்தால் நிறைந்தன.(84) அவை இரண்டும் பலத்தையும், நுண்ணறிவையும் கொண்டிருந்தன. தங்கள் இரையைப் பிடிப்பதில் நுண்ணறிவுமிக்கக் கீரியும், ஆந்தையும் இரை அருகில் இருந்தாலும், எலி மற்றும் பூனைக்கிடையிலான உடன்பாட்டில் இருந்து அவற்றைப் பிரிக்க இயலாது என்பதை உணர்ந்தன.(85) உண்மையில், அந்தப் பூனையும் எலியும் தங்கள் தகுமரபின் முடிவுகளை நிறைவேற்றிக் கொள்ள ஏதுவாக, கீரியும், ஆந்தையும் அந்த இடத்தைவிட்டு அகன்று தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பின.(86)

அதன்பிறகு, காலம் மற்றும் இடத்தின் தேவைகளை அறிந்த பலிதன் என்ற எலி, பூனையின் உடலுக்கடியில் கிடந்து கொண்டே, அந்தக் கயிற்றின் இழைகளை மெதுவாக அறுக்கத் தொடங்கி, தன் வேலையை முடிக்கச் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது.(87) தன்னைச் சுற்றியிருக்கும் இழைகளால் துயரடைந்த பூனை, கயிற்றை மெதுவாக அறுத்துக் கொண்டிருக்கும் எலியிடம் பொறுமையை இழந்து கொண்டிருந்தது.(88) எலி மெதுவாக வேலை செய்வதைக் கண்ட பூனை, அப்பணியை முடிப்பதில் அதை விரைவுப்படுத்த விரும்பி,(89) “ஓ! இனியவனே, நீ உன் பணியை எவ்வாறு விரைவாகச் செய்யாமல் இருக்கிறாய்? உன் நோக்கம் நிறைவேறியதும் இப்போது நீ என்னை அலட்சியம் செய்கிறாயா? ஓ! எதிரிகளைக் கொல்பவனே, இந்த இழைகளை வேகமாக அறுப்பாயாக. விரைவில் வேடன் இங்கே வந்துவிடுவான்” என்றது.(90)

பொறுமையிழந்த பூனையால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நுண்ணறிவைக் கொண்டதுமான எலி, அதிக ஞானம் இல்லாததாகத் தெரிந்த அந்தப் பூனையிடம், தன்னலம் நிறைந்த இந்த நன்மையான வார்த்தைகளைச் சொன்னது:(81) “ஓ! இனியவனே, அமைதியாகக் காத்திருப்பாயாக. வேகம் தேவையில்லை. அச்சங்கள் அனைத்தையும் விரட்டுவாயாக. காலத்தின் தேவைகளை நாம் அறிவோம். காலமெதையும் நாம் வீணாக்கவில்லை.(92) முறையற்ற காலத்தில் தொடங்கப்பட்ட செயல் நிறைவடையும்போது ஒருபோதும் பொருளை ஈட்டித்தராது. மறுபுறம், முறையான காலத்தில் தொடங்கப்பட்ட செயலோ, எப்போதும் அற்புதக் கனிகளை உண்டாக்கும்.(93) முறையற்ற காலத்தில் நீ விடுபட்டால், நான் உன்னிடம் பேரச்சத்துடன் நிற்க வேண்டியிருக்கும். எனவே, முறையான காலத்திற்காகக் காத்திருப்பாயாக. ஓ! நண்பா, பொறுமையிழக்காதே.(94) ஆயுதங்களுடன் கூடிய வேடன் இந்த இடத்திற்கு வருவதை நான் கண்டதும், நம் இருவருக்கும் அச்சத்தைக் கொடுக்கும் அந்தக் கணத்தில் நான் இந்த இழைகளை அறுத்துவிடுவேன்.(95) அப்போது விடுபடும் நீ மரத்தின் மீது ஏறுவாய். அந்நேரத்தில், உன் உயிரின் பாதுகாப்பைத் தவிர நீ வேறு எதைக் குறித்தும் சிந்திக்கமாட்டாய்.(96) ஓ! லோமசா, நீ அச்சத்துடன் அவ்வாறு தப்பி ஓடும்போது, நான் என் பொந்துக்குள் நுழைவேன், நீயும் மரத்தின் மீது ஏறிவிடுவாய்” என்றது.(97)

எலியால் சொல்லப்பட்டவையும், தனக்கு நன்மையானவையுமான வார்த்தைகளைக் கேட்டதும், நுண்ணறிவு மற்றும் நாவன்மையைக் கொண்டதும், தன் உயிரைக் காத்துக் கொள்வதில் பொறுமையிழந்ததுமான பூனை, பின் வரும் வார்த்தைகளால் அந்த எலிக்குப் பதிலுரைத்தது. உண்மையில், உடன்பாட்டில் தனக்குரிய பங்கை வேகமாகவும், முறையாகவும் செய்த பூனை, தன் பங்கை விரைவாகச் செய்யாத எலியிடம்,(99) “நான் உன்னைப் பேராபத்தில் இருந்து கணிசமான அளவில் உடனடியாகக் காத்தேன். ஐயோ, நேர்மையானவர்கள் தங்கள் நண்பர்களின் காரியத்தை இவ்வழியில் ஒருபோதும் செய்யமாட்டார்கள். அதைச் செய்யும்போது மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், {தாங்கள் செய்யும்போது} அதை வேறுவகையிலேயே செய்கிறார்கள்.(100) நீ எனக்கு நன்மையானதை மிக வேகமாகச் செய்ய வேண்டும். ஓ! பெரும் ஞானியே, நம்மிருவருக்கும் நன்மை ஏற்படும் வகையில் இன்னும் சற்று {விரைவாக} முயற்சிப்பாயாக.(101) மறுபுறம், நம் பழைய பகைமையை நினைத்துக் கொண்டு காலத்தைப் போக்குவாயெனில், ஓ! தீய அற்பனே, அந்த உன் செயலின் விளைவால், உன் வாழ்வு காலத்தையே நீ குறுக்கிக் கொள்வாய்[2].(102) நான் இதற்கு முன்பு அறியாமல் உனக்குத் தீங்கேதும் செய்திருந்தால், அதை நீ உன் நினைவில் கொள்ளாதே. நான் உன்னிடம் மன்னிப்பைக் கோருகிறேன். என்னிடம் நிறைவு கொள்வாயாக” என்றது.(103)

[2] “அறம் வாழ்வை அதிகரிக்கும். பாவமும், தீய குணமும் அஃதை எப்போதும் குறுக்கவே செய்யும். இது கிட்டத்தட்ட இந்து சாத்திரங்களில் எங்கும் விதிக்கப்பட்டிருக்கிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பூனை இவ்வார்த்தைகளைச் சொன்னதும், நுண்ணறிவும், ஞானமும், சாத்திர அறிவும் கொண்ட எலியானது, அதனிடம் இந்தச் சிறந்த வார்த்தைகளைச் சொன்னது:(104) “ஓ! பூனையே, நீ உன் நோக்கத்தின் முன்னேற்றத்தைக் குறித்துக் கேட்கிறாய். எனினும் நான், என் நோக்கங்களுக்கு இசைவானதைச் சொல்கிறேன், கேட்பாயாக.(105) எந்த நட்பில் அச்சம் உண்டோ, எதில் அச்சத்தை விலக்கமுடியாதோ, பாம்பின் நச்சுப் பற்களிடம் இருந்து (பாம்பாட்டியின்) கையைக் காத்துக் கொள்வதைப் போலப் பெரும் எச்சரிக்கையுடன் {அந்த நட்பு} கையாளப்பட வேண்டும்.(106) பலமிக்க ஒருவனிடம் உடன்பாடு கொண்ட ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவில்லையெனில், அந்த உடன்பாடு நன்மைக்குப் பதிலாகத் தீங்கை உண்டாக்கக்கூடும்.(107) ஒருவரும் ஒருவருக்கும் நண்பனுமில்லை; ஒருவரும் ஒருவருக்கும் நலம்விரும்பியுமில்லை; காரிய நோக்கங்களுக்காக மட்டுமே நண்பர்களோ, எதிரிகளோ உண்டாகிறார்கள்.(108) பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் தங்கள் வகையைச் சேர்ந்த காட்டு யானைகளைப் பிடிப்பதைப் போலவே காரியங்களே காரியங்களைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், ஒரு செயலை நிறைவேற்றிய பிறகு, அந்தச் செயலைச் செய்தவன் அரிதாகவே மதிக்கப்படுகிறான். இதன் காரணமாக, ஏதாவதொன்றை மிச்சம் வைத்தே அனைத்துச் செயல்களும் செய்யப்பட வேண்டும்.(109) நான் உன்னை விடுவிக்கும்போது, வேடனிடம் கொண்ட அச்சத்தால் பீடிக்கப்படும் நீ, என்னைப் பிடிக்க நினைக்காமல் உன் உயிரைக் காத்துக் கொள்ளவே தப்பி ஓடுவாய். இன்னும் ஒன்றுதான் {ஓர் இழைதான்} அறுக்கப்படாமல் மிச்சம் இருக்கிறது. அதை நான் வேகமாக அறுத்துவிடுவேன். ஓ! லோமசா, ஆறுதலடைவாயாக” என்றது.(111)

பயங்கர ஆபத்தில் இருந்த அந்த எலியும், பூனையும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, படிப்படியாக இரவு தேய்ந்தது. எனினும், பூனையின் இதயத்தில் பேரச்சம் ஊடுருவியது.(112) இறுதியாகக் காலை விடிந்ததும், பரிகன் என்ற பெயரைக் கொண்ட அந்தச் சண்டாளன் காட்சியில் தோன்றினான். அவனுடைய முகத்தோற்றம் பயங்கரமானதாக இருந்தது. அவனுடைய தலைமுடி கருப்பும், பழுப்புமாக இருந்து. அவனது இடை மிக அகண்டதாகவும், அவனுடைய குணங்கள் மிகக் கடுமையானவையாகவும் இருந்தன. காதிலிருந்து காதுவரை நீண்டிருந்த வாயையும், நீண்ட காதுகளையும் கொண்டிருந்த அவன் அருவருப்பான வடிவத்தைக் கொண்டிருந்தான். ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, நாய்க்கூட்டத்தின் துணையுடன் இருந்தவனும், இரக்கமற்றவனாகத் தெரிந்தவனுமான அந்த மனிதன் காட்சியில் தோன்றினான்.(113,114)

யம தூதனுக்கு ஒப்பான அவனைக் கண்ட பூனை அச்சத்தால் நிறைந்தது. அச்சமடைந்த அது {பூனை எலியிடம்} பலிதனிடம், “நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டது. எலியானது பூனையைப் பற்றி எஞ்சியிருந்த அந்த ஓர் இழையை மிக வேகமாக அறுத்தது. அந்தச் சுருக்கிலிருந்து {கயிற்றிலிருந்து} விடுபட்ட பூனை வேகமாக ஓடிச்சென்று ஆலமரத்தில் ஏறிக் கொண்டது.(116) ஆபத்தான சூழ்நிலையில் இருந்தும், ஒரு பயங்கரமான எதிரியின் முன்னிலையில் இருந்தும் விடுபட்ட பலிதனும், வேகமாகத் தப்பி ஓடி தன் பொந்துக்குள் புகுந்து கொண்டது. அதே வேளையில் லோமசனும் அந்த உயர்ந்த மரத்தில் ஏறியிருந்தது.(117) அனைத்தையும் கண்ட வேடன், தன் வலையை எடுத்தான். நம்பிக்கையிழந்த அவன் வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.(118) ஓ! பாரதக் குலத்தின் காளையே, உண்மையில் அந்தச் சண்டாளன் தன் வசிப்பிடத்திற்கே திரும்பிவிட்டான். பேராபத்தில் இருந்து விடுபட்டு, மிகுந்த மதிப்புமிக்கத் தன் இன்னுயிரைத் திரும்பவும் அடைந்த பூனை, அந்த மரக்கிளைகளில் இருந்து கொண்டு, பொந்துக்குள் இருந்த எலியான பலிதனிடம்,(119) “என்னிடம் ஏதும் உரையாடாமல் நீ திடீரென ஓடிவிட்டாய். நான் எந்தத் தீய நோக்கமும் கொண்டிருப்பதாக நீ ஐயுறவில்லை என நான் நம்புகிறேன். நான் நிச்சயம் நன்றியுடையவனாக இருப்பேன், நீ எனக்குப் பெருந்தொண்டைச் செய்திருக்கிறாய்.(120) என்னில் நம்பிக்கையை ஊட்டி, எனக்கு உயிரையும் கொடுத்த நீ, நண்பர்களாக நட்பின் இனிமையை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் என்னை ஏன் அணுகாமல் இருக்கிறாய்?(121)

நண்பர்களிடம் நட்பு பூண்ட பிறகு, அவர்களை மறப்பவன் தீயவனாகக் கருதப்படுகிறான். ஆபத்து மற்றும் தேவைக்கான அவசியம் உள்ள நேரங்களில் அவன் நண்பர்களை அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(122) ஓ! நண்பா, நான் உன்னால் கௌரவிக்கப்பட்டு, உன் சக்தியில் சிறந்ததைக் கொண்டு உன்னால் அளிக்கப்பட்ட தொண்டையும் அடைந்தேன். உன் நண்பனாகியிருக்கும் இந்த எளியோனின் தோழமையில் நீ இன்புற்றிருப்பதே உனக்குத் தகும்.(123) ஆசான்களை வழிபடும் சீடர்களைப் போலவே, எனக்கிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் உன்னைக் கௌரவித்து வழிபடுவார்கள்.(124) நானும் கூட என் நண்பர்கள் மற்றும் சொந்தங்களுடன் சேர்ந்து உன்னை வழிப்பட்டிருப்பேன். நன்றியறிதலையுடைய எவன்தான், தனக்கு உயிரைக் கொடுத்தவனை வழிபடாமல் இருப்பான்?(125)

நீ என் உடல் மற்றும் இல்லத்தின் தலைவனாக இருப்பாயாக. என் செல்வத்தையும், உடைமைகள் அனைத்தையும் பயன்படுத்துபவனாக நீ இருப்பாயாக.(126) என் மதிப்பிற்குரிய ஆலோசகனாய் இருந்து, ஒரு தந்தையைப் போல நீ என்னை ஆட்சி செய்வாயாக. என் உயிரின் மீது ஆணையாகச் சொல்கிறேன் எங்களிடம் இருந்து உனக்கு அச்சமேதும் ஏற்படாது.(127) நுண்ணறிவில் நீ உசனஸே {சுக்கிராச்சரியரே} ஆவாய். உன் அறிவின் ஆற்றலால் நீ எங்களை வென்றுவிட்டாய். கொள்கை பலம் கொண்ட நீ எங்களுக்கு உயிரை அளித்திருக்கிறாய்” என்றது.(128)

பூனையால் இந்த ஆறுதல் வார்த்தைகள் சொல்லப்பட்டதும், உயர்ந்த நன்மையை உண்டாக்கும் அனைத்தையும் அறிந்த எலியானது, தனக்கு நன்மை விளைவிக்கும் இனிய சொற்களை மறுமொழியாகக் கூறியது:(129) “ஓ! லோசமசா, நீ சொன்னதனைத்தையும் நான் கேட்டேன். எனக்குத் தோன்றுவதை நான் சொல்கிறேன், இப்போது கேட்பாயாக.(130) நண்பர்கள் நன்கு சோதிக்கப்பட வேண்டும். எதிரிகளும் நன்கு ஆய்வு செய்யப்பட வேண்டும். இவ்வுலகில், கூரிய நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் இதுபோன்றதொரு பணி கடினமானது என்று கல்விமான்களாலேயே கூடக் கருதப்படுகிறது.(131) நண்பர்கள் எதிரிகளின் தோற்றத்திலும், எதிரிகள் நண்பர்களின் தோற்றத்திலும் இருப்பார்கள். நட்பின் உடன்பாடுகள் ஏற்படுத்தப்படும்போது, ஒரு தரப்பு உண்மையில் காமமும் {ஆசையும்}, கோபமும் கொண்டிருக்கிறதா என்பதை மற்றொரு தரப்பு புரிந்து கொள்வது மிகக் கடினமானதாகும்.(132)எதிரியென்ற எவரும் இல்லை. நண்பர்களென்ற எவரும் இருப்பில் இல்லை. சூழ்நிலைகளின் சக்தியே நண்பர்களையும், எதிரிகளையும் உண்டாக்குகிறது.(133) ஒருவன், மற்றொருவன் உயிரோடிருக்கும் வரை தன் காரியங்கள் உறுதியாக நடக்கும், அவன் இல்லாமல் போனால் அவை ஆபத்துக்குள்ளாகும் என்று நினைத்தால், அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டு, தனது காரியங்களுக்கு எந்தப் பாதகமும் ஏற்படாத வரை அவனை அவ்வாறே கருதிக் கொண்டிருப்பான்.(134) எந்த நிலையும், நட்பு, அல்லது பகை என்ற பெயரை நிரந்தரமாகக் கொள்ளத் தக்கது கிடையாது {நட்பும், பகையும் நிரந்தரமானதல்ல}. காரியம் மற்றும் ஆதாயம் கருதியே நண்பர்களும், பகைவர்களும் எழுகிறார்கள்.(135) காலத்தின் போக்கில் நட்பும் பகையாக மாறுகிறது. ஒரு பகைவனும் நண்பனாகிறான். தன்னலம் பெரும் சக்திவாய்ந்ததாகும்.(136) எவன், கொள்கைக் கருத்துகளில் எந்தக் கவனமும் செலுத்தாமல், குருட்டுத்தனமாக நண்பர்களிடம் நம்பிக்கை வைத்து, எப்போதும் எதிரிகளை நம்பாமல் இருக்கிறானோ, அவன் தன் உயிரைப் பாதுகாப்பற்றதாகக் காண்பான் {அவனுடைய உயிர் நிலையானதல்ல}.(137) எவன் கொள்கைக் கருத்துகள் அனைத்தையும் அலட்சியம் செய்து நண்பர்களிடமோ, பகைவர்களிடமோ அன்புப்பிணைப்பைத் தன் இதயத்தில் நிலைக்கச் செய்கிறானோ, அவன் நிலையில்லாத புத்தியுள்ளவனாகக் கருதப்படுவான்.(138) நம்பத்தகாதவனிடம் ஒருவன் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது, அதேபோல, நம்பத்தகுந்தவனையும் மிக அதிகமாக நம்பிவிடக்கூடாது. குருட்டு நம்பிக்கையால் எழும் ஆபத்தானது (அத்தகைய நம்பிக்கையை வைத்திருக்கும்) ஒருவனுடைய வேரையே அறுத்துவிடும்.(139)

தந்தை, தாய், மகன், தாய்மாமன், சகோதரியின் மகன், பிற உறவினர்கள், சொந்தக்காரர்கள் ஆகியோர் அனைவரும் காரியம் மற்றும் ஆதாயத்தாலேயே வழிநடத்தப்படுகிறார்கள்.(140) அன்புக்குரிய மகன் வீழ்ந்துவிட்டால் அவனைத் தந்தையும், தாயும் கைவிடுவதைக் காண்கிறோம்[3]. மக்கள் தன்னலத்தையே {தன் காரியங்களையே} கவனிக்கிறார்கள் {தங்களையே பாதுகாத்துக் கொள்கிறார்கள்}. தன்னலத்தில் {சுயகாரியங்களின்} உச்சவினையை {பலாபலனைப்} பார்.(141) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஆபத்திலிருந்து விடுபட்டவுடன் எவன் தன் எதிரியின் மகிழ்ச்சிக்கான வழிமுறைகளை நாடுகிறானோ அவன் தப்புவது மிகக் கடினமானதாகும்(142) நீ மரத்தின் உச்சியில் இருந்து இந்த இடத்திற்கு வந்தாய். இங்கே விரிக்கப்பட்டிருந்த வலையை இயல்பான {பொதுவான} உன் புத்தியைக் கொண்டு உன்னால் உறுதி செய்து கொள்ள முடியவிலை. (143) இயல்பான புத்தியைக் கொண்ட ஒருவன், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறுகிறான். அவனால் எவ்வாறு பிறரைப் பாதுகாக்க முடியும்? அத்தகைய ஒருவன், தன் செயல்பாடுகள் அனைத்தையும் கெடுத்துக் கொள்வான் என்பதில் ஐயமில்லை.(144) நான் உனக்கு மிக அன்பானவன் என்ற இனிய வார்த்தைகளை நீ எனக்குக் கூறுகிறாய். எனினும், ஓ! நண்பா, என் தரப்பில் இருக்கும் காரணங்களையும் கேட்பாயாக.(145)

[3] “அஃதாவது, அறமற்ற நடைமுறைகளுக்காகக் குலத்தில் இருந்து நீக்கப்பட்டால்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்கள். கும்பகோணம் பதிப்பில், “தாயும், தந்தையும், பிரியனான புத்திரனையும் பதிதனாயிருந்தால் தள்ளிவிடுகிறார்கள்” என்றிருக்கிறது.

போதுமான காரணத்தாலேயே ஒருவன் அன்புக்குரியவனாகிறான். உயிரினங்களைக் கொண்ட இந்த மொத்த உலகமும், (ஒரு வடிவத்திலாவது, அல்லது வேறு வடிவத்திலாவது) ஆதாய விருப்பத்தாலேயே நகர்கிறது {செயல்படுகிறது}. ஒருவன் (காரணமில்லாமல்) மற்றொருவரின் அன்புக்குரியவனாக {நண்பனாக} ஆக மாட்டான்.(146) உடன்பிறந்தோர் இருவருக்கிடையில் உள்ள நட்பு, கணவன் மனைவிக்கிடையில் உள்ள அன்பு ஆகியவையும் காரியம் சார்ந்ததே. ஏதாவதொரு தன்னல நோக்கமில்லாமல், எவருக்கும் இடையில் உள்ள எந்த வகை அன்பையும் நான் அறிந்ததில்லை {காரணமில்லாத / ஆதாயமில்லாத அன்பை நான் அறிந்ததில்லை}.(147) உடன் பிறந்தோர், அல்லது கணவன் மனைவி ஆகியோர் சச்சரவு செய்த பிறகு, இயற்கையான அன்பின் மூலம், மீண்டும் ஒன்றுசேர்வதைப் போலக் காணப்படும் நிலையானது, ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்களிடம் காணப்படுவதில்லை.(148) ஒருவனுடைய வள்ளன்மையாலேயே {கொடைப் பண்பாலேயே} மற்றொருவனுக்கு அன்புக்குரியவனாகிறான். மற்றொருவன் அவனுடைய இனிய சொற்களுக்காக அன்புக்குரியவனாகிறான். மூன்றாமவன் அறச்செயல்களின் விளைவாக அவ்வாறு ஆகிறான். பொதுவாகவே ஒருவன் தான் தொண்டாற்றும் காரியத்திற்காகவே அன்புக்குரியவனாகிறான்.(149) நமக்கிடையிலான அன்பு போதுமான காரணத்தினாலேயே எழுந்தது. அந்தக் காரணம் இப்போதும் நீடிக்கவில்லை. மறுபுறம், போதுமான காரணத்தினாலேயே நமக்கிடையிலான அந்த அன்பும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.(150)

நான் கேட்கிறேன், நீ என்னை உன் இரையாக்கிக் கொள்ள விரும்புவதைத் தவிர, உனக்கு நான் அன்புக்குரியவனாக இருக்க வேறு என்ன காரணமிருக்கிறது? நான் இதை மறந்துவிடமாட்டேன் என்பதை நீ அறிய வேண்டும்.(151) காலமானது காரணங்களைக் கெடுக்கும் {மாறச் செய்யும்}. நீ உன் தன்னலத்தையே {காரியத்தையே} நாடுகிறாய். எனினும், ஞானம் கொண்ட பிறரும் தங்கள் காரியங்களையே புரிந்து கொள்வார்கள். இந்த உலகம் ஞானிகளின் எடுத்துக்காட்டையே சார்ந்திருக்கிறது. கல்விமானும், தன்னலங்களை {தன் காரியங்களைப்} புரிந்து கொள்ளத் தகுந்தவனான ஒருவனிடம் நீ இத்தகைய வார்த்தைகளைப் பேசக்கூடாது.(152) நீ பலமிக்கவன். நீ என்னிடம் அன்பு காட்டும் இந்தக் காலம் சரியானது அல்ல. எனினும், என் காரியங்களால் வழிநடத்தப்படும் நான், நிலையற்றவையான அமைதி {நட்பு} மற்றும் போர் {பகை} ஆகியவற்றில் உறுதியுடன் இருக்கிறேன்.(153) எந்தச் சூழ்நிலையில் அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும், அல்லது போர் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பன மேகங்கள் தங்கள் வடிவை மாற்றிக் கொள்வதைப் போலவே விரைவில் மாற்றமடைகின்றன. இந்த நாளில் நீ என் எதிரியாக இருந்தாய். அதுபோலவே இந்த நாளிலேயே நீ எனக்கு நண்பனாகவும் இருந்தாய். மீண்டும் இந்த நாளிலேயே என் எதிரியாகிவிட்டாய். உயிரினங்கள் இயங்கும் கருத்துகளின் இயல்பை {பொதுத்தன்மையைப்} பார்.(154) நட்புக்கு ஒரு காரணம் இருந்தவரை நம்மிடையே அஃது இருந்தது. காலத்தைச் சார்ந்திருக்கும் அந்தக் காரணம் இப்போது கடந்து சென்று விட்டது. அஃது இல்லாததால், அந்த நட்பும் கடந்து சென்றுவிட்டது.(155)

இயற்கையாகவே நீ என் எதிரியாவாய். சூழ்நிலையின் காரணமாக நீ என் நண்பனானாய். அந்த நிலை இப்போது கடந்து சென்றுவிட்டது. இயற்கையான பழைய பகைமை நிலையே இப்போது திரும்பியிருக்கிறது.(156) இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள கொள்கைவிதிகளை முற்றாக நான் அறிந்திருக்கிறேன்; எனக்குச் சொல்: எனக்காக விரிக்கப்பட்டிருக்கும் வலையில், உனக்காக நான் ஏன் நுழைய வேண்டும்?(157) உன் பலத்தின் மூலம் பேராபத்தில் இருந்து நான் விடுபட்டேன். என் பலத்தால் அதேபோன்ற ஆபத்தில் இருந்து நீயும் விடுபட்டாய். இருவரும் ஒருவருக்கொருவர் தொண்டாற்றிக் கொண்டோம். நாம் மீண்டும் நட்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டிய எந்தத் தேவையும் {அவசியமும்} இல்லை.(158) ஓ! இனியவனே, உன் நோக்கம் நிறைவடைந்தது. நான் கொண்ட நோக்கமும் நிறைவடைந்தது. நீ என்னை உன் உணவாக்கிக் கொள்வதைத் தவிர வேறு எந்தத் தேவையும் இப்போது உனக்கில்லை.(159) நான் உன் உணவாக இருக்கிறேன். நீ உண்பவனாக இருக்கிறாய். நான் பலவீனன், நீயோ பலவான். இணையில்லாத நிலையில் நாம் இருக்கையில், நமக்குள் ஒற்றுமையான நட்பு இருக்க முடியாது.(160)

நான் உன் ஞானத்தைப் புரிந்து கொள்கிறேன். வலையில் இருந்து மீட்கப்பட்டதும், நீ என்னை எளிதாக உணவாக்கிக் கொள்ளலாம் என்பதாலேயே நீ என்னைப் புகழ்கிறாய்.(161) நீ உணவைத் தேடியே வலையில் சிக்கினாய். அதிலிருந்து விடுபட்டுவிட்டாய். நீ இப்போது பசியின் கொடுமையை உணர்வாய். சாத்திரக் கல்வியில் இருந்து எழும் அந்த ஞானத்தைக் கொண்டு, நீ என்னை இன்று உண்ணவே முயல்வாய்.(162) நீ பசித்திருக்கிறாய் என்பதை நான் அறிவேன். இப்போது நீ உணவு உண்ண வேண்டிய நேரம் என்பதையும் நான் அறிவேன். என் மீது உன் கண்களைச் செலுத்தும் நீ, உன் இரையையே தேடிக் கொண்டிருக்கிறாய்.(163) உனக்கு மகன்களும், மனைவியரும் இருக்கின்றனர். இருப்பினும், என்னுடன் நட்பு கொள்ளவும், என்னை அன்புடன் நடத்தவும், எனக்குத் தொண்டுகள் செய்யவும் நீ விரும்புகிறாய். ஓ! நண்பா, இந்தக் கோரிக்கைக்கு இணங்க இயலாதவனாக நான் இருக்கிறேன்.(164) உன்னுடன் என்னைக் காணும் உன் அன்பு மனைவியும், அன்புக்குரிய பிள்ளைகளும் உற்சாகத்துடன் என்னை உண்ண மாட்டார்களா?(165) எனவே, நான் உன்னுடன் நட்பாக இருக்க முடியாது. இந்த ஒற்றுமைக்கான எந்தக் காரணமும் இப்போது இல்லை. உண்மையில், நீ என் நல்ல அலுவல்களை மறக்கவில்லையென்றால், எனக்கு நன்மையானதை நினைத்து ஆறுதலடைவாயாக.(166)

ஞானம் கொண்ட எவன்தான், அறப்புகழ் இல்லாதவனும் {நீதிக்காகத் தனித்துத் தெரியாதவனும்}, பசிக்கொடுமையில் இருப்பவனும், இரைதேடிக் கொண்டிருப்பவனுமான ஒரு பலமிக்க எதிரியின் கீழ் தன்னை நிறுத்திக் கொள்வான்?(167) மகிழ்ச்சியாக இருப்பாயாக, நான் உன்னைவிட்டுத் தற்போது செல்கிறேன். தொலைவில் இருந்து உன்னைக் கண்டாலே நான் அச்சத்தால் நிறைகிறேன். ஓ! லோமசா, என்னால் உன்னோடு சேர முடியாது, உன் முயற்சிகளைக் கைவிடுவாயாக.(168) நான் உனக்குத் தொண்டு செய்திருக்கிறேன் என்று நீ நினைப்பாயானால், நம்பிக்கையுடனோ, கவனமில்லாமலோ நான் உலவ நேர்கையில் நட்பின் விதிகளைப் பின்பற்றுவாயாக. அதுவே உனது செய்நன்றியாக இருக்கும்.(169) பலமும், சக்தியும் கொண்ட ஒருவனின் அருகில் வசிப்பது ஒருபோதும் மெச்சப்படுவதில்லை. ஏற்கனவே இருந்த ஆபத்து கடந்து விட்டாலும், என்னைவிடப் பலமிக்கவனைக் குறித்த அச்சத்துடனேயே நான் இருக்க வேண்டும்.(170)

(குறிப்பிடப்பட்ட) உன் காரியங்களைச் செய்ய நீ முயலவில்லையெனில், நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் என் உயிரைத் தவிர நிச்சயம் உனக்கு அனைத்தையும் கொடுப்பேன்.(171) ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தன் பிள்ளைகள், நாடு, ஆபரணங்கள் மற்றும் செல்வம் ஆகியவற்றையும் கைவிடலாம். ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தன்னிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யலாம்.(172) ஒருவன் தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக எதிரிக்குக் கொடுக்கும் அனைத்து செல்வத்தையும் அவன் உயிரோடு இருந்தால் மீட்டுக் கொள்ளலாம்.(173) செல்வத்தைக் கொடுப்பது போல ஒருவன் உயிரைக் கொடுப்பது விரும்பத்தக்கதல்ல. உண்மையில், நான் ஏற்கனவே சொன்னதுபோல், ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தன் மனைவியரையும், செல்வத்தையும் கைவிடலாம்.(174) தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருப்பவர்கள், சீரிய ஆலோசனை மற்றும் ஆய்வுக்குப் பிறகு தங்கள் செயல்கள் அனைத்தையும் செய்பவர்கள் ஆகியோர் தங்கள் செயல்களின் விளைவால் ஒருபோதும் ஆபத்தை அடைய மாட்டார்கள்.(175) பலவீனர்கள், பெரும் பலம் கொண்டவனை எப்போதும் ஓர் எதிரியாகவே அறிவார்கள். சாத்திரங்களின் உண்மைகளில் உறுதியாக இருக்கும் அவர்களது அறிவு ஒருபோதும் தன் உறுதியை இழப்பதில்லை” என்றது {எலியான பலிதன்}.(176)

இவ்வாறு எலியான பலிதனின் வன்மையான கடிந்துரைக்கு ஆளான அந்தப் பூனை, நாணத்தால் வெட்கமடைந்து, பின்வரும் வார்த்தைகளை அந்த எலியிடம் சொன்னது.(177) லோமசன் {என்ற அந்தப் பூனை எலியிடம்}, “உண்மையில், உன் மேல் ஆணையாகச் சொல்கிறேன், நண்பனுக்குத் தீங்கிழைத்தல் மிகவும் நிந்திக்கத்தக்கது என்பது என் கணிப்பு. நான் உன் ஞானத்தை அறிவேன். நீ என் நன்மையில் அர்ப்பணிப்புடன் இருப்பதையும் நான் அறிவேன்.(178) பொருளறிவியலால் வழிநடத்தப்படும் நீ, உனக்கும் எனக்கும் இடையில் அத்துமீறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று சொல்லியிருக்கிறாய். எனினும், ஓ! நல்ல நண்பனே, நான் எவ்வாறு இல்லையோ அவ்வாறு இருப்பதாக எடுத்துக் கொள்வது உனக்குத் தகாது.(179) எனக்கு நீ உயிரை அளித்ததன் விளைவால் நான் உன்னிடம் பெரும் நட்புணர்வை வளர்க்கிறேன். மேலும் நான் கடமைகளையும் அறிந்திருக்கிறேன். நான் பிறரின் தகுதிகளை மெச்சுபவனுமாவேன். நான் அடைந்த தொண்டுகளுக்குப் பெரிதும் நன்றியுடன் இருக்கிறேன்.(180) நண்பர்களின் தொண்டில் நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். மேலும், குறிப்பாக உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டிருக்கிறேன். இந்தக் காரணங்களுக்காக, ஓ! நல்ல நண்பனே, நீ என்னுடன் மீண்டும் சேர்வதே உனக்குத் தகும்.(181) நீ ஆணையிட்டால், என் உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய நான் என் உயிரையே உனக்காகத் தருவேன். கல்வியும், ஞானமும் கொண்டவர்கள், இத்தகைய மனோநிலை கொண்ட எங்களிடம் நம்பிக்கை வைக்கப் போதிய அளவுக்குக் காரணங்களைக் காண்கிறார்கள். ஓ! அறநெறியின் உண்மைகளை அறிந்தவனே, என்னைப் பொறுத்தவரையில் நீ எந்த ஐயத்தையும் வளர்த்துக் கொள்வது உனக்குத் தகாது” என்றது.(182)

பூனையால் இவ்வாறு சொல்லப்பட்ட எலி, சற்றே சிந்தித்து, பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வார்த்தைகளை அதனிடம் {பூனையிடம்} சொன்னது.(183) “நீ மிகவும் நல்லவனாக இருக்கிறாய். நீ சொன்னதனைத்தையும் கேட்ட நான், உன்னிடம் கேட்டதிலிருந்து மகிழ்ச்சியை அடைகிறேன். எனினும், அவை யாவற்றிற்காகவும் கூட நான் உன்னை நம்ப முடியாது. இத்தகைய துதிகளாலோ, பெரும் செல்வத்தைக் கொடைகளாகக் கொடுப்பதாலோ, என்னை மீண்டும் உன்னுடன் சேர வைப்பது உனக்குச் சாத்தியப்படாது.(184) ஓ! நண்பா, ஞானம் கொண்டவர்கள், போதிய காரணம் ஏதும் இல்லாதபோது, ஓர் எதிரியின் சக்தியின் கீழ் தங்களை ஒருபோதும் நிறுத்திக் கொள்ள மாட்டார்கள் என்று உனக்கு நான் சொல்கிறேன்.(185) இருவரும் எதிரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது, ஒரு பலவீனன், ஒரு பலவானுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, (அந்தப் பொது ஆபத்துக் கடந்ததும்) கொள்கைகளைக் கருத்தில் கொண்டு கவனமாக நடந்து கொள்ள வேண்டும். தன் நோக்கம் நிறைவேறியதும், இருவரில் பலவீனன், மீண்டும் அந்தப் பலவானிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது.(186)

நம்பத்தகாதவனை ஒருவன் ஒருபோதும் நம்பக்கூடாது. அதே போல, நம்பத்தகுதவனிடமும் ஒருவன் குருட்டு நம்பிக்கையை வைத்துவிடக்கூடாது. ஒருவன் பிறரை தன்னிடம் நம்பிக்கைகொள்ளச் செய்வதற்காக எப்போதும் முயற்சிக்க வேண்டும். எனினும், அவன் எதிரிகளிடம் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது.(187) இந்தக் காரணங்களாலேயே ஒருவன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடைமைகள், பிள்ளைகள் மற்றும் மதிப்புமிக்க அனைத்தும் அவன் உயிரோடு உள்ளவரையே இருக்கும்.(188) சுருங்கச் சொல்லின், நம்பிக்கையின்மையே கொள்கை ஆய்வுகள் அனைத்தின் உயர்ந்த உண்மையாகும். இந்தக் காரணத்தால், அனைவரின் நம்பிக்கையின்மையும், பெரும் நன்மையை உண்டாக்க வல்லவையே.(189) எவ்வளவுதான் பலவீனமானவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் எதிரிகளிடம் நம்பிக்கை வைக்கவில்லையெனில், எதிரி பலவானாக இருந்தாலும், அவர்களைத் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(190) ஓ! பூனையே, என்னைப் போன்ற ஒருவன், எப்போதும் உன்னைப் போன்றவர்களிடம் இருந்து தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும். நீயும் கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் அந்தச் சண்டாளனிடம் இருந்து உன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வாயாக” என்றது.(191)எலி இவ்வாறு பேசிய போது, வேடனைக் குறித்து அச்சமடைந்த அந்தப் பூனை, மரத்தின் கிளையை விட்டு அகன்று, பெரும் வேகத்துடன் தப்பி ஓடியது.(192) இவ்வாறு தன் அறிவின் சக்தியை வெளிப்படுத்தியதும், சாத்திரங்களின் உண்மைகளை அறிந்ததும், ஞானத்தைக் கொண்டதும், எலியுமான அந்தப் பலிதன், மற்றொரு பொந்துக்குள் நுழைந்தது”.(193)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறே ஞானம் கொண்ட பலிதன் என்ற எலி, பலவீனமாகவும், தனியனாகவும் இருந்தாலும், பலமிக்கப் பல எதிரிகளைக் கலங்கடிப்பதில் வென்றது.(194) நுண்ணறிவும், கல்வியும் கொண்ட ஒருவன், ஒரு பலமிக்க எதிரியிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்வான். அந்த எலியும் பூனையும், தங்கள் ஒவ்வொருவரின் தொண்டைச் சார்ந்து தாங்கள் தப்பிப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொண்டன.(195) க்ஷத்திரியக் கடமைகளின் போக்கை இவ்வாறே பெரும் நீளத்தில் நான் உனக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(196) ஒருவருக்கொருவர் பகை கொண்ட இருவர் தங்களுக்குள் அமைதியை ஏற்படுத்திக் கொண்டால், ஒவ்வொருவரும் பிறரின் மிகைப் பாய்ச்சலை {வஞ்சனையைத்} தங்கள் இதயத்தில் கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.(197) அத்தகைய வழக்கில் ஞானம் கொண்டவன், தன் அறிவின் சக்தியால் அடுத்தவனை மீறி {வஞ்சித்து} வெற்றியடைவான். மறுபுறம், ஞானமற்றவனோ, தன் கவனக்குறைவின் விளைவால் ஞானியால் மீறப்படுவான் {வஞ்சிக்கப்படுவான்}.(198) எனவே, அச்சத்தில் உள்ள ஒருவன், அச்சமில்லாதவனைப் போலத் தெரிவது அவசியம், அதே வேளையில் பிறரை நம்பாத ஒருவன், நம்பிக்கை நிறைந்தவனாகவும் தெரிய வேண்டும். இத்தகைய கவனத்துடன் செயல்படுபவன், ஒருபோதும் பிறழமாட்டான், அல்லது பிறண்டாலும் ஒருபோதும் அழிவடையமாட்டான்.(199) அதற்கான நேரம் வரும்போதும், ஒருவன் பகைவனுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அதே போல நேரம் வரும்போது, நண்பனுடனும் ஒருவன் போர் தொடுக்க வேண்டும். ஓ மன்னா, ஒருவன் இவ்வாறு தன்னை நடத்திக் கொள்ள வேண்டும் என்று அமைதி (மற்றும் போரின்) கருத்துகளை அறிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.(200)

ஓ! ஏகாதிபதி, இஃதை அறிந்து கொண்டும், சாத்திர உண்மைகளை மனத்தில் கொண்டும் ஒருவன், தன் புலன்கள் அனைத்தாலும், எந்தக் கவனக் குறைவும் இல்லாமல், அச்சத்திற்கான காரணம் வருவதற்கு முன்பே அச்சத்திலிருக்கும் ஒருவனைப் போலச் செயல்பட வேண்டும்.(201) அச்சத்திற்கான காரணம் உண்மையில் வருவதற்கு முன்பே ஒருவன் அச்சத்திலிருப்பவனைப் போலச் செயல்பட்டு எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய அச்சமும், கவனமும், அறிவுக்கூர்மைக்கு வழிவகுக்கும்.(202) அச்சத்திற்கான காரணம் வருமுன்பே அச்சத்திலிருக்கும் மனிதனைப் போலச் செயல்படும் ஒருவன், அந்தக் காரணம் உண்மையில் வரும்போது ஒருபோதும் அச்சத்தால் நிறைய மாட்டான். எனினும், அச்சமில்லாமல் எப்போதும் செயல்படும் ஒருவனுடைய அச்சத்தின் மூலம் பேரச்சம் எழுவதும் காணப்படுகிறது.(203) “ஒருபோதும் அச்சத்தை வளர்த்துக் கொள்ளாதே” என்ற ஆலோசனை எவருக்கும் வழங்கப்படக்கூடாது. தன் பலவீனத்தை உணர்ந்து அச்சமடையும் ஒருவன் எப்போதும் ஞானிகள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளை நாட வேண்டும்.(204) இந்தக் காரணங்களுக்காக ஒருவன் அச்சத்திலிருக்கும்போது, அச்சமில்லாதவனாகவும், (பிறரை) நம்பாதபோது, நம்பிக்கை நிறைந்தவனாகவும் தெரிய வேண்டும். ஒருவன், முக்கியமான செயல்களை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், பிறரிடம் பொய்மையுடன் நடந்து கொள்ளக்கூடாது.(205)

அந்தக் கதையில் இருந்து உயர்ந்த அறிவை அடைந்தும், நண்பனுக்கும், எதிரிக்குமிடையிலான வேறுபாட்டை அறிந்து கொண்டும், உரிய நேரத்தில் போரையும், அமைதியையும் ஏற்படுத்திக் கொண்டால், நீ ஆபத்திலிருக்கும்போது, தப்புவதற்கான வழிமுறைகளைக் கண்டடைவாய்.(207) பொதுவான ஆபத்தில் பலவானுடன் அமைதியை ஏற்படுத்திக்கொள்ளும் நீ, (அந்தப் பொது ஆபத்து கடந்து சென்றதும்), எதிரியுடன் சேரும் காரியத்தில் உரிய ஆலோசனைகளுக்குப் பிறகே செயல்பட வேண்டும். உண்மையில் உன் நோக்கத்தை அடைந்த பிறகு, நீ உன் எதிரியை மீண்டும் நம்பக்கூடாது.(208) ஓ! மன்னா, இந்தக் கொள்கையின் பாதை, மூன்று தொகுப்புகளுக்கும் (அறம், பொருள் மற்றும் இன்பத்திற்கும்) இசைவானதாகும். இந்தச் சுருதியால் வழிநடத்தப்படும் நீ, மீண்டும் உன் குடிமக்களைப் பாதுகாத்துச் செழிப்பை அடைவாயாக.(209) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, உன் செயல்கள் அனைத்திலும் பிராமணர்களின் தோழமையை எப்போதும் நாடுவாயாக. பிராமணர்கள், இம்மையிலும், மறுமையிலும் நன்மையின் பேரூற்றாக இருப்பார்கள்.(210) அவர்களே கடமை மற்றும் அறநெறிகளின் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். ஓ! பலமிக்கவனே, அவர்கள் எப்போதும் நன்றியுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வழிபடப்பட்டால், நிச்சயம் அவர்கள் நன்மையையே செய்வார்கள். எனவே, ஓ! மன்னா, நீ எப்போதும் அவர்களை வழிபட வேண்டும்.(211) ஓ! மன்னா, அப்போது நீ, உன் நாடு, பெரும் நன்மை, புகழ், சாதனைகள், உரிய வரிசையிலான வாரிசுகள் ஆகியவற்றை முறையாக அடைவாய்.(212) ஒரு மன்னன், எலி மற்றும் பூனைக்கிடையில் நடந்ததும், சிறந்த வார்த்தைகளில் சொல்லப்பட்டதும், நுண்ணுறிவைக் கூர்மைப்படுத்துவதுமான இந்த வரலாற்றில் தன் கண்களைச் செலுத்தியே தன் எதிரிகளின் மத்தியில் தன் நடத்தையை எப்போதும் அமைத்துக் கொள்ள வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(213)

சாந்திபர்வம் பகுதி – 138ல் உள்ள சுலோகங்கள் : 213

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்