The law of inheritance! | Anusasana-Parva-Section-47 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 47)
பதிவின் சுருக்கம் : பலவர்ணப் பெண்களிடம் பிறந்த மகன்களுக்குத் தந்தையின் உடைமைகளையும், செல்வங்களையும் எவ்வாறு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "சாத்திரங்கள் அனைத்தின் விதிகளையும் நீர் முழுமையாக அறிந்திருக்கிறீர். மன்னர்களின் கடமைகளை அறிந்தவர்களில் முதன்மையானவர் நீர். ஐயங்களை விலக்குவதில் பெரியவர் என்று உலகம் முழுவதும் நீர் கொண்டாடப்படுகிறீர்.(1) ஓ! பாட்டா, எனக்கோர் ஐயம் இருக்கிறது அஃதை எனக்கு விளக்கிச் சொல்வீராக. என் மனத்தில் எழுந்திருக்கும் இந்த ஐயத்தைப் பொறுத்தவரையில், நான் வேறு எந்த மனிதனிடமும் அதற்கான தீர்வைக் கேட்க மாட்டேன்.(2) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, கடமை மற்றும் அறத்தின் பாதையில் நடக்க விரும்பும் ஒரு மனிதனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எனக்கு விளக்கிச் சொல்வீராக.(3) ஓ! பாட்டா, ஒரு பிராமணன், தன் வகையைச் சேர்ந்த ஒருத்தி, க்ஷத்திரியரில் ஒருத்தி, வைசியரில் ஒருத்தி மற்றும் அந்தப் பிராமணன் கலவி இன்பத்தில் ஈடுபட விரும்பினால் சூத்ரரில் ஒருத்தி என நான்கு மனைவிகளை அவன் கொள்ளலாம் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(4) ஓ! குருக்களில் சிறந்தவரே, அந்த மகன்களில் எவன் தந்தையின் செல்வத்தை மரபுரிமையாகப் பெறத் தகுந்தவன் என்பதை ஒருவன் பின் ஒருவராக எனக்குச் சொல்வீராக.(5) ஓ! பாட்டா, அவர்களில் எவரெவர், தங்கள் தந்தைவழி செல்வத்தில் எவ்வளவு பங்கை எடுத்துக் கொள்ளலாம்? அவர்களுக்கு மத்தியில் தந்தை வழி உடைமைகளை எவ்வாறு பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(6)
