The law of inheritance! | Anusasana-Parva-Section-47 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 47)
பதிவின் சுருக்கம் : பலவர்ணப் பெண்களிடம் பிறந்த மகன்களுக்குத் தந்தையின் உடைமைகளையும், செல்வங்களையும் எவ்வாறு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "சாத்திரங்கள் அனைத்தின் விதிகளையும் நீர் முழுமையாக அறிந்திருக்கிறீர். மன்னர்களின் கடமைகளை அறிந்தவர்களில் முதன்மையானவர் நீர். ஐயங்களை விலக்குவதில் பெரியவர் என்று உலகம் முழுவதும் நீர் கொண்டாடப்படுகிறீர்.(1) ஓ! பாட்டா, எனக்கோர் ஐயம் இருக்கிறது அஃதை எனக்கு விளக்கிச் சொல்வீராக. என் மனத்தில் எழுந்திருக்கும் இந்த ஐயத்தைப் பொறுத்தவரையில், நான் வேறு எந்த மனிதனிடமும் அதற்கான தீர்வைக் கேட்க மாட்டேன்.(2) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, கடமை மற்றும் அறத்தின் பாதையில் நடக்க விரும்பும் ஒரு மனிதனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எனக்கு விளக்கிச் சொல்வீராக.(3) ஓ! பாட்டா, ஒரு பிராமணன், தன் வகையைச் சேர்ந்த ஒருத்தி, க்ஷத்திரியரில் ஒருத்தி, வைசியரில் ஒருத்தி மற்றும் அந்தப் பிராமணன் கலவி இன்பத்தில் ஈடுபட விரும்பினால் சூத்ரரில் ஒருத்தி என நான்கு மனைவிகளை அவன் கொள்ளலாம் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(4) ஓ! குருக்களில் சிறந்தவரே, அந்த மகன்களில் எவன் தந்தையின் செல்வத்தை மரபுரிமையாகப் பெறத் தகுந்தவன் என்பதை ஒருவன் பின் ஒருவராக எனக்குச் சொல்வீராக.(5) ஓ! பாட்டா, அவர்களில் எவரெவர், தங்கள் தந்தைவழி செல்வத்தில் எவ்வளவு பங்கை எடுத்துக் கொள்ளலாம்? அவர்களுக்கு மத்தியில் தந்தை வழி உடைமைகளை எவ்வாறு பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிராமணர், க்ஷத்திரியர் மற்றும் வைசியர் ஆகிய மூவரும் மறுபிறப்பாள வகையினராகக் கருதப்படுகின்றனர். ஓ! யுதிஷ்டிரா, இந்த மூன்று வகைகளில் {வர்ணங்களில்} திருமணம் செய்து கொள்வதே பிராமணனின் கடமை என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(7) ஓ! எதிரிகளை எரிப்பவனே, ஒரு பிராமணன், பிழையான தீர்மானம், அல்லது பேராசை, அல்லது காமம் ஆகியவற்றால் சூத்திரரில் ஒருத்தியை மனைவியைக் கொள்கிறான். எனினும், சாத்திரங்களின் படி அத்தகைய மனைவியை ஏற்க அவன் தகுந்தவனல்ல.(8) ஒரு பிராமணன், ஒரு சூத்திரப் பெண்ணைப் படுக்கைக்கு இட்டுச் செல்வதன் மூலம், மறுமையில் இழிந்த கதியை அடைகிறான். அத்தகைய செயலைச் செய்த அவன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி பாவக்கழிப்பை {பரிகாரத்தைச்} செய்ய வேண்டும்.(9) ஓ! யுதிஷ்டிரா, அந்தப் பிராமணன் அத்தகைய ஒரு செயலின் விளைவால் சந்ததியைப் பெற்றிருந்தால், அந்தப் பாவக்கழிப்பு இரண்டு மடங்கு கனமானதாக, அல்லது கடுமையானதாக இருக்க வேண்டும். ஓ! பாரதா, (தந்தைவழி) செல்வத்தை (வெவ்வேறு மனைவிகளின் பிள்ளைகளுக்கு மத்தியில்) எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பதை இப்போது நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(10)
முதலிடத்தில், ஒரு பிராமணி மனைவியிடம் பிறந்த மகனானவன், தன் தந்தையின் செல்வத்திலிருந்து நற்குறிகளைக் கொண்ட ஒரு காளையையும், சிறந்த தேர், அல்லது வாகனத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.(11) ஓ!யுதிஷ்டிரா, அதன் பிறகு அந்தப் பிராமணரிடம் எஞ்சியிருக்கும் உடைமைகளைச் சமமான பத்து பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். பிராமணி மனைவி மூலம் பிறந்த மகன், தன் தந்தைவழி செல்வத்தில் அத்தகைய நான்கு பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்.(12) க்ஷத்திரிய மனைவியிடம் பிறந்த மகன் பிராமண நிலையைக் கொண்டவன் என்பதில் ஐயமில்லை. எனினும், தன் தாயின் மூலம் உண்டான வேறுபாட்டின் விளைவாக அவன் பத்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட உடைமையில், மூன்று பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்.(13) மூன்றாவது வகையான வைசிய சாதியைச் சார்ந்த மனைவிக்குப் பிராமணத் தந்தையின் மூலம் பிறந்த மகன், அந்தத் தந்தையின் உடைமையில் எஞ்சியிருக்கும் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்.(14) பிராமணத் தந்தை மூலம் சூத்திர மனைவிக்குப் பிறந்த மகனை வாரிசாகக் கருத முடியாது என்பதால், அவன் தன் தந்தையின் செல்வத்தில் எந்தப் பகுதியையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்லப்படுகிறது. எனினும், சூத்திர மனைவிக்குப் பிறந்த மகனுக்குத் தந்தை வழி செல்வத்தில் சிறிதளவேனும் கொடுக்க வேண்டும் என்பதால், எஞ்சியிருக்கும் ஒரு பகுதியைக் கருணையின் அடிப்படையில் அவனுக்குக் கொடுக்கலாம்.(15)
ஒரு பிராமணனின் செல்வம் இவ்வகையிலேயே பத்து பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும். ஒரே தாய்க்கு, அல்லது ஒரே வகைத் தாய்மாருக்குப் பிறந்த மகன்கள் அனைவரும் தங்களுக்குரிய பகுதியைத் தங்களுக்குள் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.(16) சூத்திர மனைவிக்குப் பிறந்த மகன், (பிராமணர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் சாத்திரங்கள் மற்றும் கடமைகளில்) திறமற்றவனாக இருப்பதன் விளைவால் அவனைப் பிராமண நிலை கொண்டவன் என்று கருத முடியாது. உயர்ந்த மூன்று வகையைச் சார்ந்த மனைவிகளுக்குப் பிறந்த பிள்ளைகள் மட்டுமே பிராமண நிலை கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டும்.(17) நான்கு வகைகள் {வர்ணங்கள்} மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது, ஐந்தாவதாக வேறேதும் பட்டியலிடப்படுவதில்லை. சூத்திர மனைவியின் மகன், தன் தந்தையின் செல்வத்தில் (மேற்சொன்ன வகையில் பிறருக்கு ஒதுக்கிவிட்டு எஞ்சியிருக்கும்) பத்தாவது பகுதியை எடுத்துக் கொள்ளலாம்.(18) எனினும், அவனுடைய தந்தை அஃதை அவனுக்குக் கொடுத்தால் மட்டுமே அவன் எடுத்துக் கொள்ள வேண்டும். அவனது தந்தை அஃதை அவனுக்குக் கொடுக்காதிருந்தால் அவன் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஓ! பாரதா, தந்தையின் செல்வத்தில் சிறு பகுதியாவது சூத்திர மனைவியின் மகனுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை.(19) கருணையானது உயர்ந்த அறங்களில் ஒன்றாகும். கருணையின் மூலமே சூத்திர மனைவியின் மகனுக்கு ஏதாவது கொடுக்கப்படுகிறது. கருணை எழுவதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், இதயப்பூர்வமான அறமாக அஃது எப்போதும் புண்ணியத்தையே உண்டாக்கும்.(20)
ஓ! பாரதா, ஒரு தந்தைக்கு (பிற வகைகளை {வர்ணங்களைச்} சார்ந்த மனைவிகள் மூலம்) பிள்ளைகள் இருந்தாலும், அல்லது (அத்தகைய மனைவிகள் மூலம்) இல்லாவிட்டாலும், சூத்திர மனைவியின் மகனுக்கு, தந்தையின் செல்வத்தில் பத்தில் ஒரு பகுதிக்கு மேல் எதுவும் கொடுக்கப்படக்கூடாது.(21) ஒரு பிராமணன், தன்னையும், தன் குடும்பத்தையும் மூன்று வருடங்கள் பராமரித்துக் கொள்ளக்கூடிய அளவுக்குச் செல்வத்தைக் கொண்டிருந்தால், அவன் அந்தச் செல்வத்தைக் கொண்டு வேள்விகளைச் செய்ய வேண்டும். ஒரு பிராமணன் ஏதுமில்லாமல் ஒருபோதும் செல்வமீட்டக்கூடாது[1].(22) ஒரு கணவன் தன் மனைவியிடம் கொடுக்க வேண்டிய உயர்ந்த தொகை (நடைமுறையில் நிலவும் நாணய முறையின்படி {பண வகையின்படி}) மூவாயிரம் நாணயங்கள் ஆகும். கணவன் மனைவிக்குக் கொடுக்கும் இந்தச் செல்வத்தை அவள் தான் விரும்பியவாறு செலவு செய்யலாம்.(23) கணவன், பிள்ளையில்லாமல் இறந்து போனால், அவனுடைய மனைவி அவனுடைய செல்வம் அனைத்தையும் அனுபவிக்கலாம். (எனினும், அவள் அவற்றில் எந்த ஒரு பகுதியையும் விற்கவோ, கொடுக்கவோ கூடாது). மனைவியானவள் (கணவன் அறியாமல்) ஒருபோதும் கணவனின் செல்வத்தில் எந்தப் பகுதியையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.(24) ஓ! யுதிஷ்டிரா, ஒரு பிராமணி மனைவி, தன் தந்தையிடம் இருந்து எந்தக் கொடையை அடைந்திருந்தாலும், மகளும் மகனைப் போன்றவளே என்பதால், (அவளது மரணத்திற்குப் பிறகு) அதை மகள் எடுத்துக் கொள்ளலாம்.(25) ஓ! மன்னா, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, மகளானவள் ஒரு மகனுக்கு இணையானவளாகவே சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கிறாள். ஓ! பாரதக் குலத்தின் காளையே, மரபுரிமை சட்டமும் {சொத்துரிமை சட்டமும்} அவ்வாறே விதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவன், செல்வத்தைப் பிரித்தல் மற்றும் கொடுத்தல் குறித்த இந்த விதிகளை நினைவுகூர்ந்து ஒருபோதும் பயனில்லாமல் செல்வத்தை ஈட்டக்கூடாது" என்றார் {பீஷ்மர்}.(26)
[1] "அஃதாவது, அவன் சேமித்து வைப்பதற்காக ஈட்டக் கூடாது. வேள்விகளில் செலவளிக்கவும், கொடையளிக்கவும், தன்னையும், தன் குடும்பத்தையும் பராமரித்துக் கொள்ளவும் அவன் ஈட்டலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "சூத்திரப் பெண்ணிடம், பிராமணத் தந்தையின் மூலம் பிறந்த மகன், எந்தச் செல்வத்திற்கும் உரிமையில்லாதவனாகச் சாத்திரங்களால் அறிவிக்கப்பட்டிருந்தால், வேறு எந்த விதிவிலக்கின் மூலம் தந்தைவழி உடைமையில் பத்தில் ஒரு பகுதி அவனுக்குக் கொடுக்கப்படுகிறது?(27) ஒரு பிராமணி மனைவிக்கு, ஒரு பிராமணன் மூலம் பிறந்த மகன் ஒரு பிராமணனே என்பது கேள்விக்கப்பாற்பட்டது. க்ஷத்திரிய மனைவி, மற்றும் வைசிய மனைவி ஆகியோருக்கு ஒரு பிராமணக் கணவன் மூலம் பிறந்த ஒருவனும் பிராமண நிலையைக் கொண்டவனாகிறான்.(28) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, அத்தகைய மகன்கள் தங்கள் தந்தைவழி செல்வத்தை ஏன் சமமற்ற வகையில் பகிர்ந்து கொள்கிறார்கள்? மறுபிறப்பாளர்கள் என்ற பெயரில் சமமான உரிமை பெற்ற மூன்று உயர்ந்த வகைகளைச் சார்ந்த தாய்மாருக்குப் பிறந்ததால் அவர்கள் அனைவரும் பிராமணர்கள் என்று நீர் சொன்னீர்" என்று கேட்டான்.(29)
பீஷ்மர், "ஓ! பகைவர்களை எரிப்பவனே, இவ்வுலகத்தில் உள்ள மனைவிகள் அனைவரும் தாரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். அந்தப் பெயர் அனைவருக்கும் பயன்படுத்தப்பட்டாலும், இந்தப் பெரும் வேறுபாடு காணப்படுகிறது.(30) மூன்று பிற வகைகளைச் சேர்ந்த மூன்று மனைவிகளை மணந்து கொண்ட பிறகு, ஒரு பிராமணன் அவர்கள் அனைவருக்கும் இறுதியாக ஒரு பிராமணி மனைவியைக் கொண்டால், அவளே மனைவிகள் அனைவரின் மத்தியில் முதல்வியாகவும், பெரும் மதிப்புக்குத் தகுந்தவளாகவும் கருதப்படுவாள். உண்மையில், சக மனைவியர் அனைவருக்கும் மத்தியிலும் அவளே முதன்மையானவளாகக் கருதத்தக்கவளாவாள்.(31) கணவனுக்கான நீராடல், மேனி அலங்காரங்கள், பல் துலக்குதல், கண்களுக்கு மையிடுதல் போன்றவற்றிற்குத் தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் அவளது அறையிலேயே வைக்கப்பட வேண்டும். ஹவ்யம், கவ்யம் மற்றும் அறச்செயல்கள் செய்யக் கணவனுக்குத் தேவைப்படும் வேறு அனைத்தும் அவளது அறையிலேயே வைக்கப்பட வேண்டும்.(32) அந்தப் பிராமணி மனைவி வீட்டில் இருந்தால், கணவனின் தேவைகளைக் கவனிக்கும் உரிமை வேறு எந்த மனைவிக்கும் கிடையாது. ஓ!யுதிஷ்டிரா, பிராமணி மனைவியே கணவனுக்கு இச்செயல்களில் துணைபுரிய வேண்டும்.(33) கணவனின் மனைவிகள் அனைவரிலும், முதல்வியாகக் கருதப்படுவதால், கணவனின் உணவு, பானம், மலர்மாலைகள், ஆடைகள், ஆபரணங்கள் ஆகிய இவை அனைத்தும் பிராமணி மனைவியால் கணவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(34) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, மனுவால் விதிக்கப்பட்ட சாத்திர விதிகள் இதுவே. ஓ! ஏகாதிபதி, இதுவே நித்திய நடைமுறையின் போக்காகக் காணப்படுகிறது.(35)
ஓ! யுதிஷ்டிரா, ஒரு பிராமணன், காமத்தால் வழிநடத்தப்பட்டு, வேறு வகையில் நடந்து கொண்டால் அவன் பிராமணர்களுக்கு மத்தியில் சண்டாளனாகக் கருதப்படுவான்[2].(36) க்ஷத்திரிய மனைவிக்குப் பிறந்த மகன், பிராமணி மனைவிக்குப் பிறந்த மகனின் நிலைக்கு இணையாகவே சொல்லப்படுகிறான். பிறப்பு வகையைப் பொறுத்தவரையில், க்ஷத்திரியரைவிடப் பிராமணி மேன்மையானவளாக இருப்பதன் விளைவால் பிராமண மனைவியின் மகனிடம் ஒரு வேறுபாடு உண்டு.(37) பிறவியின் அடிப்படையில் ஒரு க்ஷத்திரியரை ஒரு பிராமணிக்கு இணையாகக் கருதப்பட முடியாது. எனவே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பிராமணி மனைவிக்குப் பிறந்த மகனே, க்ஷத்திரிய மனைவிக்குப் பிறந்த மகனை விட முதல்வனும், மேன்மையானவனுமாவான்.(38) பிறவியின் அடிப்படையில் க்ஷத்திரியர் பிராமணிக்கு இணையாக இல்லாததால், ஓ! யுதிஷ்டிரா, பிராமணி மனைவியின் மகன் தன் தந்தையின் உடைமைகளில் சிறந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக் கொள்வான்.(39) அதே போலவே, பிறப்பின் அடிப்படையில் வைசியரை, க்ஷத்திரியருக்கு இணையாகக் கருத முடியாது. ஓ! யுதிஷ்டிரா, செழிப்பு, அரசு, கருவூலம் ஆகியவை க்ஷத்திரியரைச் சார்ந்தவை.(40)
[2] "அதாவது, பிராமணன், வேறு எந்த மனைவியிடமும் அன்பினால் வழிநடத்தப்பட்டு, தன் வகையைச் சார்ந்த மனைவியை அலட்சியம் செய்து, பிற வகையினருக்கு முன்னுரிமை காட்டினால் அவன் பிராமணர்களில் சண்டாளனாகக் கருதத்தகுந்த நிலையை ஈட்டுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவை அனைத்தும் க்ஷத்திரியருக்காக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! மன்னா, கடல்களைக் கச்சையாகக் கொண்ட மொத்த பூமியும் அவனுக்குச் சொந்தமானவையே. தன் வகைக்கான கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு க்ஷத்திரியன் பெரிய செல்வாக்கை ஈட்டுகிறான்.(41) அரச செங்கோலானது அவனால் ஏந்தப்படுகிறது. ஓ! மன்னா, க்ஷத்திரியரில்லாமல் பாதுகாப்புக் கிடையாது. பிராமணர்கள் தேவர்களுக்கும் தேவர்களாக இருப்பதால் அவர்கள் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாவர்.(42) முனிவர்களால் விதிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றும் க்ஷத்திரியர்கள், உரிய சடங்குகளுடன் பிராமணர்களை வழிபட வேண்டும். இதுவே நித்திய வழக்கமாகும்.(43) கள்வர் முதலியோரால் பேராசையுடன் விரும்பப்படும் அனைத்து மனிதர்களின் உடைமைகளும் தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் க்ஷத்திரியர்களால் பாதுகாக்கப்படுகிறது. உண்மையில், மக்களுக்குச் சொந்தமான செல்வம், மனைவிகள் மற்றும் பற உடைமைகள் ஒவ்வொன்றும் க்ஷத்திரியரால் பாதுகாக்கப்படவில்லையெனில் அபகரிக்கப்படும்.(44) மன்னனாக இருக்கும் க்ஷத்திரியன், அனைத்து வகையினரையும் பாதுகாப்பவன், அல்லது மீட்பவனாகிறான். எனவே, க்ஷத்திரிய மனைவியின் மகன், வைசிய மனைவிக்குப் பிறந்தவனைவிட மேன்மையானவனாகக் கருதப்படுவான் என்பதில் ஐயமில்லை. இதன் காரணமாகத் தந்தையின் உடைமையில் க்ஷத்திரிய மனைவியின் மகனானவன், வைசியத் தாய்க்குப்பிறந்த மகனைவிடப் பெரிய பங்கை எடுத்துக் கொள்ளலாம்" என்றார் {பீஷ்மர்}.(45)
யுதிஷ்டிரன், "பிராமணர்களுக்கும் பொருந்தும் விதிகளை முறையாகச் சொன்னீர். எனினும், பிறருக்குப் பொருந்தும் விதிகள் என்னென்ன?" என்று கேட்டான்.(46)
பீஷ்மர், "ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, க்ஷத்திரியன் இரண்டு மனைவிகளைக் கொள்ளலாம் என விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு க்ஷத்திரியன் சூத்திர வகையிலிருந்து மூன்றாம் மனைவியைக் கொள்ளலாம். அத்தகைய நடைமுறை வழக்கத்தில் இருப்பது உண்மையென்றாலும், சாத்திரங்களால் அஃது ஏற்கப்படவில்லை.(47) ஓ! யுதிஷ்டிரா, ஒரு க்ஷத்திரியனுக்கான மனைவிகளின் வகை இவ்வாறு இருக்க வேண்டும். ஓ! மன்னா, ஒரு க்ஷத்திரியனின் உடைமை எட்டு பங்குகளாகப் பிரிக்கபட வேண்டும்.(48) க்ஷத்திரிய மனைவியின் மகன் தந்தையின் உடைமையில் அத்தகைய பங்குகளில் நான்கை எடுத்துக் கொள்ளலாம். வைசிய மனைவியின் மகன் அத்தகைய பங்குகளில் மூன்றை எடுத்துக் கொள்ளலாம்.(49) எஞ்சியுள்ள ஒரு பங்கு, அல்லது எட்டாவது பங்கை சூத்திர மனைவியின் மகன் எடுத்துக் கொள்ளலாம். எனினும், சூத்திர மனைவியின் மகன் தந்தை கொடுத்தால் மட்டுமே எடுத்துக்கொள்ளலாமே அன்றி வேறு வகையில் எடுத்துக் கொள்ளக்கூடாது.(50)
வைசியனுக்கு ஒரே ஒரு மனைவி மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது. சூத்திர வகையில் இருந்து இரண்டாம் மனைவியைக் கொள்ளலாம். அத்தகைய நடைமுறை வழக்கத்தில் இருப்பது உண்மையென்றாலும், சாத்திரங்களால் அஃது ஏற்கப்படவில்லை.(51) ஒரு வைசியனுக்கு, வைசியரில் ஒருத்தி, சூத்திரரில் ஒருத்திய என இரு மனைவிகள் இருந்தால், அவர்களுக்கு இடையிலான நிலையில் வேறுபாடு இருக்கும்.(52) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஒரு வைசியனின் செல்வமானது ஐந்து பங்குகளாகப் பிரிக்கப்பட வேண்டும். ஓ! மன்னா, ஒரு வைசியனுக்குத் தன் வகையைச் சார்ந்த மனைவியின் மூலமான மகன்கள் மற்றும் தாழ்ந்த வகையைச் சார்ந்தவளுடைய மகன்கள் குறித்தும், அவனுடைய பிள்ளைகளுக்கு மத்தியில் அவனது செல்வம் பிரிக்கப்பட வேண்டிய வகைக் குறித்தும் நான் இப்போது சொல்லப் போகிறேன்.(53) வைசிய மனைவிக்குப் பிறந்த மகன் தன் தந்தையின் செல்வத்தில் அத்தகைய பங்குகளில் நான்கை எடுத்துக் கொள்ளலாம். ஓ! பாரதா, ஐந்தாம் பங்கானது சூத்திர மனைவிக்குப் பிறந்த மகனைச் சார்ந்தது எனச் சொல்லப்படுகிறது.(54) எனினும், அத்தகைய மகன் தன் தந்தை கொடுக்கும்போதே எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை அவனுக்குக் கொடுக்காதவரை அவன் எதையும் எடுக்கக் கூடாது. மூன்று உயர்ந்த வகையினரிலும், சூத்திர மனைவியால் பெறப்பட்ட மகன், தந்தையின் செல்வத்தில் எந்தப் பங்குக்கும் உரிமையற்றவனாகவே எப்போதும் கருதப்பட வேண்டும்.(55)
ஒரு சூத்திரன் தன் வகையைச் சார்ந்த ஒரே ஒரு மனைவியை மட்டுமே கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அவன் மற்றொரு மனைவியைக் கொள்ளக் கூடாது. அத்தகைய மனைவியானவள் மூலம் அவன் நூறு மகன்களையே பெற்றிருந்தாலும், அவன் விட்டுச் செல்லும் செல்வத்தை அவர்கள் அனைவரும் சமமாகவே பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.(56)
பிற வகையினரைப் பொறுத்தவரையில், கணவனின் சொந்த வகையில் கொள்ளப்பட்ட மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் தங்கள் தந்தையின் செல்வத்தைத் தங்களுக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.(57) மூத்த மகனானவன், தன் தந்தையின் சிறந்த பொருட்களில் தன் தம்பிகள் ஒவ்வொருவரையும்விட ஒரு பங்கு அதிகமாகப் பெறுவதால், அவனுடைய பங்கானது பிற மகன்கள் ஒவ்வொருவரையும் விட அதிகமானதாக இருக்கும். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, இதுவே சுயம்புவால் அறிவிக்கப்பட்ட மரபுரிமை {சொத்துரிமை / வாரிசுரிமைச்} சட்டமாகும்.(58) ஓ! மன்னா, கணவனின் சொந்த வகையிலேயே கொள்ளப்பட்ட மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் அனைவருக்கும் மத்தியில் மற்றொரு வேறுபாடு இருக்கிறது. திருமணம் செய்து கொள்வதில், மூத்தவன் எப்போதும் இளைவர்களை முந்த வேண்டும்.(59) மனைவிகள் தங்கள் பிறப்பு வகையின் அடிப்படையில் சமமாகவும், பிள்ளைகள், தங்கள் தாய்மாரின் நிலையைப் பொறுத்தவரையில் சமமாகவும் இருக்கையில், முதலில் பிறந்த மகனானவன், தன் தம்பிகள் ஒவ்வொருவரையும் விட ஒரு பங்கு அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து வரும் மகன், மதிப்பில் அடுத்ததாக இருக்கும் பங்கைக் கொள்ள வேண்டும். அதே வேளையில், அனைவரிலும் இளைய மகன், இளையவனுக்கு உரிய பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும்[3].(60) இவ்வாறு, அனைத்து வகை மனைவிகளுக்கும் மத்தியில், கணவனின் வகையையே சார்ந்த மனைவிகள் முதல்விகளாகக் கருதப்படுகிறார்கள். மரீசியின் மகனான பெரும் முனிவர் காசியபரால் இதுவே தீர்மானிக்கப்பட்டது[4]" என்றார் {பீஷ்மர்}.(61)
பிற வகையினரைப் பொறுத்தவரையில், கணவனின் சொந்த வகையில் கொள்ளப்பட்ட மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் தங்கள் தந்தையின் செல்வத்தைத் தங்களுக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.(57) மூத்த மகனானவன், தன் தந்தையின் சிறந்த பொருட்களில் தன் தம்பிகள் ஒவ்வொருவரையும்விட ஒரு பங்கு அதிகமாகப் பெறுவதால், அவனுடைய பங்கானது பிற மகன்கள் ஒவ்வொருவரையும் விட அதிகமானதாக இருக்கும். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, இதுவே சுயம்புவால் அறிவிக்கப்பட்ட மரபுரிமை {சொத்துரிமை / வாரிசுரிமைச்} சட்டமாகும்.(58) ஓ! மன்னா, கணவனின் சொந்த வகையிலேயே கொள்ளப்பட்ட மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் அனைவருக்கும் மத்தியில் மற்றொரு வேறுபாடு இருக்கிறது. திருமணம் செய்து கொள்வதில், மூத்தவன் எப்போதும் இளைவர்களை முந்த வேண்டும்.(59) மனைவிகள் தங்கள் பிறப்பு வகையின் அடிப்படையில் சமமாகவும், பிள்ளைகள், தங்கள் தாய்மாரின் நிலையைப் பொறுத்தவரையில் சமமாகவும் இருக்கையில், முதலில் பிறந்த மகனானவன், தன் தம்பிகள் ஒவ்வொருவரையும் விட ஒரு பங்கு அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து வரும் மகன், மதிப்பில் அடுத்ததாக இருக்கும் பங்கைக் கொள்ள வேண்டும். அதே வேளையில், அனைவரிலும் இளைய மகன், இளையவனுக்கு உரிய பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும்[3].(60) இவ்வாறு, அனைத்து வகை மனைவிகளுக்கும் மத்தியில், கணவனின் வகையையே சார்ந்த மனைவிகள் முதல்விகளாகக் கருதப்படுகிறார்கள். மரீசியின் மகனான பெரும் முனிவர் காசியபரால் இதுவே தீர்மானிக்கப்பட்டது[4]" என்றார் {பீஷ்மர்}.(61)
[3] "ஒரு பிராமணன், அடுத்தடுத்து தன் வகையைச் சார்ந்த மூன்று மனைவிகளைக் கொண்டால், முதல் மனைவிக்குப் பிறந்த மகனே மூத்தவனுக்கு ஒதுக்கப்படும் பங்கைக் கொள்வான்; இரண்டாம் மனைவிக்குப் பிறந்தவன் மதிப்பில் அடுத்தப் பங்கைக் கொள்வான்; இளைய மனைவிக்குப் பிறந்தவன் இளையவருக்கு ஒதுக்கப்பட்ட பங்கைக் கொள்வான். இத்தகைய குறிப்பிட்ட பங்குகள் கொள்ளப்பட்ட பிறகு எஞ்சியிருக்கும் உடைமையானது, பிள்ளைகள் ஒவ்வொருவராலும் சமமான பங்குகளாகப் பிரித்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] கும்பகோணம் பதிப்பில், "ஒரே வர்ணத்தாரான பெண்களிடத்தில் பிறந்த பிள்ளைகளுக்கும் வேறு ஒரு விசேஷமுண்டு. அதாவது, "முன்னே சொன்ன விவாகங்களில் முன் முன் விவாகங்களின் சிறப்பினால் அந்த அந்தப் புத்ரர்களுக்கும் விசேஷமிருக்கிறது. ஒரு மனைவிக்குப் பிறந்த புத்ரர்களிலும் ஜ்யேஷ்டன் அதிகப் பாகத்தையும், நடுவானவன் அதற்குக் குறைந்த பாகத்தையும், கடைசியவன் அதற்கும் குறைவான பாகத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்பது. இவ்வாறு எல்லா ஜாதிகளிலும் அதே வர்ணத்துப் பெண்ணுக்குப் பிறந்த புத்ரன் சிறந்தவன். மரீசியின் புத்ரரான காசியப மகரிஷியும் இதைப் பெற்றி இப்படியே சொல்லியிருக்கிறான்" என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 47ல் உள்ள பகுதிகள் : 61
ஆங்கிலத்தில் | In English |