Snakes tongue divided into twain! | Adi Parva - Section 34 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 22)
பதிவின் சுருக்கம் : கருடனிடம் நட்பு கொண்ட இந்திரன்; தன் பலத்தைச் சொன்ன கருடன்; பாம்புகளைத் தன் உணவாகக் கேட்ட கருடன்; பாம்புகளிடம் அமுதத்தைக் காட்டிய கருடன்; அமுதத்தைக் கவர்ந்தான் இந்திரன்; பாம்புகளின் நாவுகள் பிளந்தன...
சௌதி தொடர்ந்தார், "அதன் பின்பு கருடன், "ஓ புரந்தரா! {இந்திரா}, நீ விரும்புவது போலவே உனக்கும் எனக்குமான இடையில் நட்பு உண்டாகட்டும். எனது பலம் தாங்க முடியாதது என்பதை அறிந்து கொள்வாயாக.(1) ஓ ஆயிரம் வேள்வி செய்தவனே! தன் பலத்தைத் தானே உயர்வாகப் பேசுவதை நல்லவர்கள் அனுமதிக்க மாட்டார்கள், தங்கள் பெருமையையும் பேச மாட்டார்கள்.(2) ஓ நண்பனே! காரணமில்லாத தற்பெருமை சரியானதல்ல என்றாலும், நீ நண்பனாகிவிட்டுக் கேட்டபடியால், உனக்குப் பதிலளிக்கிறேன்.(3) ஓ சக்ரா! {இந்திரா}, மலைகளுடனும், கானகங்களுடனும் பெருங்கடல்களின் நீருடனும் இருக்கும் இந்த முழுப் பூமியை, அதன் மேல் நீ இருப்பினும் எனது இறகு ஒன்றைக் கொண்டே என்னால் சுமக்க முடியும்.(4) அனைத்து உலகங்களையும், அதனுள் இருக்கும் அசைவன, அசையாதன ஆகியவற்றையும் ஒன்றாகச் சேர்த்தாலும் அனைத்தையும் சோர்வில்லாமல், எனது பலத்தால் நான் சுமக்க முடியும் என்பதை நீ அறிந்து கொள்வாயாக" என்றான்."(5)
