The fight between Indra and Arjuna! | Adi Parva - Section 229 | Mahabharata In Tamil
(காண்டவ தாஹ பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : இந்திரனுக்கும் அர்ஜுனனுக்கு நடந்த மோதல்; இந்திரன் அர்ஜுனனை நினைவை இழக்கச் செய்தது; தக்ஷகன் மனைவியின் தந்திரம்; இந்திரன் தனது நண்பனின் மகனைக் காக்க நினைப்பது; தக்ஷகன் மகன் தப்பிப்பது; நாகர்கள், கருடர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோருடன் கிருஷ்ணனும் அர்ஜுனனும் மோதியது; தேவர்கள் அனைவரும் சேர்ந்து கிருஷ்ணனுடன் அர்ஜுனனுடனும் மோதியது; தேவர்கள் இந்திரனிடம் தஞ்சம் புகுந்தது; இந்திரன் மீண்டும் தாக்கியது...
வைசம்பாயனர் சொன்னார், "பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்}, அற்புதமான ஆயுதங்களை அழைத்து, இந்திரனால் உண்டாகப்பட்ட மழையைத் தடுத்தான்.(1) உயர் ஆன்ம அர்ஜுனன், சந்திரன் மூடுபனியால் சுற்று வட்டாரத்தை மறைப்பதைப் போலத் தனது ஆயுதங்களால் காண்டவ வனத்தை மறைத்தான்.(2) அந்தக் கானகத்திற்கு மேலிருந்த வானம் இப்படி அர்ஜுனனின் கணைகளால் மறைக்கப்பட்ட பிறகு, கீழே இருந்த எந்த உயிரினத்தாலும் தப்ப முடியவில்லை.(3) அந்தக் கானகம் அப்படி எரிந்து கொண்டிருக்கும்போது, நாகர்கள் தலைவனான தக்ஷகன் அந்த இடத்தில் இல்லை. அவன் அந்த நேரத்தில் குருக்ஷேத்திரக் களத்திற்குச் சென்றிருந்தான்.(4)





