Bhima set fire to the palace | Adi Parva - Section 150 | Mahabharata In Tamil
(ஜதுக்கிரகப் பர்வம் - 8)
பதிவின் சுருக்கம் : மக்களுக்கு விருந்து படைத்த குந்தி; ஐந்து மகன்களுடன் அவ்வீட்டுக்கு வந்த வேடுவச்சி குடிமயக்கத்தில் உணர்விழந்து உறங்கியது; மாளிகைக்குத் தீயிட்ட பீமன்; சகோதரர்களையும், தாயையும் தூக்கிக் கொண்டு ஓடிய பீமன்...
Bhima set fire to the palace Adi Parva - Section 150 | Mahabharata In Tamil |
Adi Parva - Section 150 | Mahabharata In Tamil |
அப்போது பீமன், அந்த வீட்டில் புரோசனன் உறங்கிக் கொண்டிருந்த பகுதியில் தீயை மூட்டினான். அதன்பிறகு அந்தப் பாண்டுவின் மைந்தன் {பீமன்}, அந்த அரக்கு வீட்டின் கதவுகளுக்குத் தீ மூட்டினான்.(10) அந்த மாளிகையைச் சுற்றிலும் பல இடங்களில் தீ மூட்டினான். அந்த வீட்டின் பல இடங்களில் தீப்பற்றியதைக் கண்டு மனநிறைவு கொண்ட பிறகு,(11) அந்த எதிரிகளைத் தண்டிக்கும் பாண்டுவின் மைந்தர்கள் {பாண்டவர்கள்} தங்கள் நேரத்தை வீணாக்காமல் சுரங்கப் பாதைக்குள் நுழைந்தனர். பிறகு அந்த நெருப்பின் வெப்பமும், உறுமலும் உக்கிரமடைந்து அந்நகர மக்களை எழுப்பியது. வீடு எரிவதைக் கண்ட அந்த நகரத்துக் குடிமக்கள் கவலை நிறைந்த முகங்களுடன்,(12,13) "அந்தத் தீய ஆன்மா கொண்ட பாவி (புரோசனன்), துரியோதனனின் கட்டளையின் பேரில், தனது முதலாளியின் உறவினர்கள் அழிவுக்காகவே இவ்வீட்டைக் கட்டியிருக்கிறான். நிச்சயமாக அவனே இதற்குத் தீ மூட்டியிருக்கிறான். ச்சீ... ச்சீ.. எவ்வளவு வஞ்சனை கொண்ட இதயத்தைப் பெற்றவனாக இருந்திருக்கிறான் இந்தத் திருதராஷ்டிரன்.(14) பாவங்களற்ற பாண்டுவின் வாரிசுகளை எதிரிகளாகக் கருதி, அவன்தான் அவர்களை எரித்துவிட்டான்!(15) ஐயமடையாதவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான அந்த அப்பாவி இளவரசர்களை, எரித்த தீய ஆன்மா கொண்ட அந்தப் பாவியையும் (புரோசனனையும்), விதி எரித்துக் கொன்றுவிட்டது" என்றனர்.(16)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "வாரணாவதத்தின் குடிமக்கள் இப்படி (பாண்டவர்களின் விதியை நினைத்து) ஒப்பாரி வைத்தழுது, அன்று இரவு முழுவதும் அவ்வீட்டைச் சூழ்ந்து கொண்டு காத்திருந்தனர்.(17) இருப்பினும், பாண்டவர்கள் தங்கள் தாயை அழைத்துக் கொண்டு அந்தச் சுரங்க வழியிலிருந்து வெளிவந்து, யாரும் அறியாத வண்ணம் விரைவாக ஓடினர்.(18) ஆனால், தூக்கக் கலக்கத்தாலும், பயத்தாலும் தங்கள் தாயுடனிருந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களால் விரைவாக முன்னேற முடியவில்லை.(19)
ஓ! ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பயங்கரமான ஆற்றலும், துரிதமான இயக்கமும் கொண்ட பீமசேனன், அந்த இருளில் தனது சகோதரர்கள் அனைவரையும், தனது தாயையும் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.(20) அவன், தனது தாயைத் தோளிலும், இரட்டையர்களைத் தனது பக்கங்களிலும் {இடுப்பிலும்}, யுதிஷ்டிரனையும், அர்ஜுனனையும் தனது இரு கரங்களிலும் தூக்கிக் கொண்டான். பெரும் சக்தியும், பலமும், காற்றைப் போன்ற வேகமும் கொண்ட விருகோதரன், எதிர்பட்ட மரங்களைத் தனது மார்பால் ஒடித்துக் கொண்டும், பூமியைத் தனது பாதச்சுவடுகளால் ஆழமாகத் துளைத்துக் கொண்டும் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(21,22)
ஆதிபர்வம் பகுதி 150ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |