The sorrow of Yuthishthira | Adi Parva - Section 152 | Mahabharata In Tamil
(ஜதுக்கிரகப் பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : வாரணவத மக்கள் பாண்டவர்கள் இறந்ததாகக் கருதியது; திருதராஷ்டிரனுக்கு செய்தியைச் சொல்லியனுப்பிய மக்கள்; பாண்டவர்களுக்கு நீர்க்கடன் செலுத்தச் சொன்ன திருதராஷ்டிரன்; யுதிஷ்டிரன் அடைந்த துயரம்...
The sorrow of Yuthishthira Adi Parva - Section 152 | Mahabharata In Tamil |
அவர்கள், "பாண்டவர்களின் அழிவுக்காகப் பாவியான துரியோதனன் ஏற்படுத்திய திட்டமே இஃது என்பது நிச்சயம்.(3) திருதராஷ்டிரனுக்குத் தெரிந்தே பாண்டுவின் வாரிசுகளைத் துரியோதனன் கொன்றிருக்கிறான் என்ற சிறு சந்தேகமும் எழுகிறது. இல்லையென்றால் அவ்விளவரசன் தனது தந்தையால் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.(4) சந்தனுவின் மைந்தன் பீஷ்மர், துரோணர், விதுரன், கிருபர் மற்றும் மற்ற கௌரவர்கள் ஆகியோர், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்ய வில்லை என்ற சிறு சந்தேகமும் எழுகிறது.(5) சரி இனி, "உனது பெரும் விருப்பம் ஈடேறியது! நீ பாண்டவர்களை எரித்துவிட்டாய்" என்று திருதராஷ்டிரனுக்குச் சொல்லி அனுப்புவோம்" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.(6)
அப்போது, பாண்டவர்களை அடையாளம் காணச் சிலரை அனுப்பினர். அவர்கள் அந்த அப்பாவி நிஷாதப் பெண்மணியும், அவளது ஐந்து மகன்களும் எரிந்து கிடப்பதைக் கண்டனர்.(7) விதுரனால் அனுப்பப்பட்ட சுரங்க நிபுணன் {கனகன்}, எவரும் அறியாவண்ணம், சாம்பலை அகற்றி, அவன் தோண்டியிருந்த சுரங்கக் குழியில் அவற்றைப் போட்டு அதை மறைத்தான்.(8) அந்நகரக் குடிமக்கள், பாண்டவர்களும், (துரியோதனனின்) அமைச்சன் புரோசனனும் எரிந்து போய் இறந்ததாகத் திருதராஷ்டிரனுக்குச் சொல்லியனுப்பினர்.(9) பாண்டவர்கள் இறந்த தீய செய்தியைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் பெரும் துயர் கொண்டு அழுதான்.(10)
அவன் {திருதராஷ்டிரன்}, "இந்த வீர மைந்தர்கள் தங்கள் தாயுடன் எரிந்து போனதால், பெரும் புகழ் கொண்டவனும் எனது தம்பியுமான மன்னன் பாண்டு, இன்றுதான் இறந்து போனான். இது நிச்சயம்.(11) மக்களே, வேகமாக வாரணாவதம் சென்று அவ்வீரர்களுக்கும் {பாண்டவர்களுக்கும்}, குந்திபோஜனின் மகளுக்கும் {குந்திக்கும்} ஈமச்சடங்குகளைச் செய்யுங்கள்.(12) அவர்களது எலும்புகளைக் கொணர்ந்து அதற்குத் தகுந்த சடங்குகளைச் செய்யுங்கள். அவர்களது நன்மைக்கான எல்லாச் செயல்களையும் செய்யுங்கள். எரிந்து போனவர்களின் நண்பர்களும் உறவினர்களும் அங்கே செல்லட்டும்.(13) பாண்டவர்களுக்காகவும், குந்திக்காகவும் இச்சூழலில் செய்ய வேண்டிய நற்கருமங்கள் அனைத்தும் தொடங்கட்டும்" என்றான்.(14)
உறவினர்களால் சூழப்பட்ட அம்பிகையின் மைந்தன் திருதராஷ்டிரன், இதைச் சொல்லிவிட்டுப் பாண்டுவின் மகன்களுக்கு நீர்க்கடன் செலுத்தினான்.(15) அனைவரும் சோகத்தால் தாக்குண்டு சத்தமாக, "ஓ! யுதிஷ்டிரா, ஓ! குரு குலத்தின் இளவரசா!" என்று கதறி அழுதனர். அதே வேளையில் மற்றவர்கள், “ஓ! பீமா!,(16) ஓ! பல்குனா!" என்றும், வேறு சிலர், “ஓ! இரட்டையர்களே!, ஓ! குந்தி!" என்றும் கதறி அழுது தங்கள் நீர்க்கடன்களைச் செலுத்தினர்.(17) பாண்டவர்களுக்காக அந்நாட்டுக் குடிமக்கள் அழுதனர், ஆனால், உண்மையை அறிந்திருந்ததால், விதுரன் அதிகமாக அழவில்லை[1].(18)
[1] கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில் பீஷ்மர் மிகவும் துக்கமடைந்ததாகவும், பாண்டவர்களுக்காகக் கதறி அழுததாகவும், அவரைத் தேற்றுவதற்காக விதுரன், பாண்டவர்கள் உயிரோடிருக்கும் செய்தியை அவருக்குச் சொன்னதாகவும், பீஷ்மர் விதுரனைப் பாராட்டுவதாகவும் செய்திகள் இருக்கின்றன.
அதேவேளையில், பெரும் பலம் வாய்ந்த பாண்டவர்கள், தங்கள் தாயுடன் சேர்ந்து ஆறு பேராக வாரணாவத நகரத்தை விட்டு அகன்று கங்கைக் கரைக்கு வந்தனர்.(19) படகோட்டியின் கரபலத்தாலும், நதியின் வேகமான ஓட்டத்தாலும், சாதகமாக வீசிய காற்றினாலும், விரைவாகக் கங்கையின் மறுகரையை அடைந்தனர்.(20) அவர்கள் அப்படகை விடுத்து, இருட்டில் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் தங்கள் வழியைக் கண்டுபிடித்துத் தென்திசையில் முன்னேறிச் சென்றனர்.(21) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் துன்பத்திற்கிடையில் கடைசியாக அவர்கள் அடர்ந்த கானகத்தை அடைந்தனர். அவர்கள் களைத்துப் போய், தாகத்தால் நாவறண்டு இருந்தனர். உறக்கம் அவர்களது கண்களை ஒவ்வொரு நொடியும் மூடியது.(22) பின்பு யுதிஷ்டிரன், வலிமைமிக்கவனான பீமசேனனிடம் "இதைவிட வலி நிறைந்தது என்ன இருக்க முடியும்? நாம் இப்போது ஆழ்ந்த கானகத்திற்குள் இருக்கிறோம். நமக்குத் திசைகள் தெரியவில்லை. மேற்கொண்டு நகரவும் முடியவில்லை.(23) பாவி புரோசனன் இறந்துவிட்டானா? இல்லையா? என்பதும் நமக்குத் தெரியவில்லை. நாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் எப்படி இந்த ஆபத்துகளிலிருந்து தப்பப் போகிறோம்?(24) ஓ! பாரதா {பீமா}, முன்பு போலவே எங்களைச் சுமந்து கொண்டு முன்னேறுவாயாக. நம்மில் நீயே பலவானும், காற்றைப் போல் வேகமாக நகர்பவனும் ஆவாய்" என்றான்.(25)
யுதிஷ்டிரனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டவனும், பெரும் பலம் வாய்ந்தவனுமான பீமசேனன், குந்தியையும், அவனது சகோதரர்களையும் தூக்கிக் கொண்டு, வேகமாக நடந்து முன்னேறிச் சென்றான்.(26)
ஆதிபர்வம் பகுதி 152ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |