Three warriors set to destroy the enemy! | Sabha Parva - Section 20 | Mahabharata In Tamil
(ஜராசந்த வத பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : ஜராசந்தனுக்கான நேரம் வந்துவிட்டதை கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்தல்; அதற்கு ஒரு திட்டத்தை வகுத்தல்; யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் அர்ஜுனனையும் பீமனையும் அனுப்பி வைக்குமாறு கோரல்; யுதிஷ்டிரன் கிருஷ்ணனைப் புகழ்தல்; யுதிஷ்டிரனிடம் விடைபெற்று கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் பீமன் ஆகியோர் மகதத்தை நோக்கிக் கிளம்புதல்…
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த மேன்மையானவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்ட யுதிஷ்டிரன், மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் நிற்கும் பீமனையும் அர்ஜுனனையும் கண்டு,(8) "ஓ அச்யுதா {கிருஷ்ணா}, எதிரிகளை அழிப்பவனே, அப்படிச் சொல்லாதே. நீயே பாண்டவர்களின் தலைவன். நாங்கள் உன்னைச் சார்ந்தே இருக்கிறோம்.(9) ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, நீ சொல்வதெல்லாம் ஞானம் கொண்ட ஆலோசனைகளே. செல்வத்தால் முதுகு காட்டப்பட்ட ஒருவனை எப்போதும் நீ வழிநடத்த மாட்டாய்.(10) உனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நான், ஜராசந்தன் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டதாகக் கருதுகிறேன். அவனால் {ஜராசந்தனால்} அடைத்து வைக்கப் பட்டுள்ள மன்னர்கள் ஏற்கனவே விடுவிக்கப் பட்டதாகக் கருதுகிறேன். ராஜசூயம் என்னால் சாதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன்.(11,12)
நீ இல்லாமல், அறம், பொருள், இன்பம் ஆகியவை பறிக்கப்பட்டு, நோயால் பீடிக்கப்பட்ட துயர் நிறைந்த மனிதன் போல நான் வாழத்துணிய மாட்டேன்.(13) பார்த்தனால் {அர்ஜுனனால்} சௌரி {கிருஷ்ணன்} இல்லாமல் வாழ முடியாது. அதே போல சௌரியாலும் பார்த்தன் இல்லாமல் வாழ முடியாது. கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் அடைய முடியாத பொருட்கள் உலகத்தில் எதுவும் இல்லை.(14) அழகிய பீமன், பெரும் பலம் கொண்ட மனிதர்களில் முதன்மையானவன் ஆவான். நீங்கள் இருவரும் {கிருஷ்ணனும் அர்ஜுனனும்} அவனுடன் இருக்கும்போது, பெரும் புகழ் பெற்ற அவனால் {பீமனால்}, எதைத்தான் சாதிக்க முடியாது?(15) சரியாக வழிநடத்தப்பட்ட துருப்புகள் எப்போதும் அருமையான பணியையே செய்யும். தலைவன் இல்லாத படை மந்தமானது என்று ஞானமுள்ளோரால் சொல்லப்படுகிறது. எனவே படைகள் எப்போதும் அனுபவம் வாய்ந்த தளபதிகளாலேயே வழிநடத்தப்பட வேண்டும்.(16) தாழ்வாக இருக்கும் இடங்களுக்கே, ஞானமுள்ளோர் நீரை {தண்ணீர்} வழிநடத்துவர். மீனவர்கள் கூட (குளத்தில் உள்ள) நீரைத் துளைகள் மூலம் வெளியேற்றுகின்றனர். (அனுபவம் வாய்ந்த தலைவர்கள், எதிரியின் திட்டத்தில் உள்ள ஓட்டைகளையும், தாக்கக்கூடிய பகுதிகளையும் எப்போதும் கண்டுபிடித்து தங்கள் படைகளை நடத்துவர்).(17)
எனவே நாங்கள் அரசியல் அறிவியலை அறிந்த உலகப் புகழ் கொண்ட கோவிந்தனின் தலைமையை ஏற்கவே அனைத்துவகையிலும் முயற்சிப்போம்.(18) ஒருவரின் காரிய சாதனையை வெற்றிகரமாக முடிக்க, ஞானத்தையும் கொள்கையையும் பலமாகக் கொண்டும், காரண காரியங்களில் உள்ள அறிவோடும் நம்மை வழிநடத்தும் கிருஷ்ணனை தேரில் அமர்த்த வேண்டும்.(19) எனவே இந்தக் காரிய சாதனைக்கு, பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன், யாதவர்களில் முதன்மையான கிருஷ்ணனைத் தொடரட்டும், பீமன் அர்ஜுனனைத் தொடரட்டும். கொள்கை, நற்பேறு, மற்றும் பலம் ஆகியவையே, பராக்கிரமத்துடன் கூடிய வெற்றியைக் கொண்டு வரும்" என்றான் {யுதிஷ்டிரன்}".(20)
வைசம்பாயனர் சொன்னார், "இப்படி யுதிஷ்டிரனால் சொல்லப்பட்டதும், பெரும் சக்தி வாய்ந்த கிருஷ்ணன், அர்ஜுனன், பீமன் ஆகிய மூவரும், ஏற்கும் சொல் கொண்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆசி பெற்று, ஸ்நாதக பிராமணர்களைப் போல உடையணிந்து பிராகசித்தபடி மகத நாட்டை நோக்கிச் செல்ல ஆயத்தமானார்கள்.(21) சூரியனையும், சந்திரனையும், நெருப்பையும் போன்ற மேன்மையான சக்தியையும், உடலையும் கொண்டு, சிறைபட்டிருக்கும் தங்கள் உறவு மன்னர்களின் நிலையை நினைத்துக் கோபம் கொண்ட நெருப்பைப் போல அவர்கள் சென்றனர். போரில் தோல்வி காணாத கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் பீமனை தேர்களில் கண்ட மக்கள், அவர்கள் ஏற்கனவே காரியத்தைச் சாதித்து விட்டதாகவும், ஜராசந்தன் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டதாகவும் நினைத்தார்கள்.(22-24)
சிறப்பு மிக்க அந்த இணை (கிருஷ்ணனும் அர்ஜுனனும்), (அண்டத்தின்) அனைத்து செயல்களையும், அனைத்து உயிரினங்களிலும் உள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவற்றையும் இயக்குவதில் நிபுணர்களாவர்.(25) குரு நாட்டில் இருந்து கிளம்பி, குருஜாங்கலத்தைக் கடந்து, அழகான தாமரைத் தடாகம் ஒன்றை அடைந்தார்கள். பிறகு காலகூட மலைகளைக் கடந்து,(26) தங்கள் பெயரையே கொண்ட மலைகளில் உற்பத்தியாகும் கண்டகி, சதாநீரை (காரடோயா), சர்கரவர்தை ஆகிய ஆறுகளைக் கடந்தனர்.(27) பிறகு அவர்கள் சரயூ ஆற்றைக் கடந்து, கிழக்கு கோசலத்துக்கு வந்தனர். அந்த நாட்டையும் கடந்து மிதிலைக்குச் சென்று, அங்கிருந்து, மாலை, சர்மண்வதி,(28) கங்கை, சோணம் ஆகிய ஆறுகளையும் கடந்து அந்த மூன்று வீரர்களும் மேலும் கிழக்கு நோக்கி சென்றனர். இறுதியாக, மங்காப்புகழ் கொண்ட அந்த வீரர்கள் குசம்பத்தின் (குசம்ப நாட்டின்) இதயமான மகதத்தை அடைந்தனர்.(29) பிறகு கோரத மலைகளை அடைந்து, எப்போதும் பசுக்களாலும், செல்வங்களாலும், நீராலும் நிறைந்த, பல எண்ணிலடங்கா மரங்கள் நிற்கும் மகத நகரைக் கண்டனர்" {என்றார் வைசம்பாயனர்}.(30)
ஆங்கிலத்தில் | In English |