Krishna met Jarasandha! | Sabha Parva - Section 21 | Mahabharata In Tamil
(ஜராசந்த வத பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு அந்த நகரத்தின் பெருமையை எடுத்துச் சொல்வது; கிருஷ்ணன் பீமன் அர்ஜுனன் ஆகியோர் மகத நகருக்குள் நுழைவது; ஒரு மலைச்சிகரத்தைத் தங்கள் கணைளால் உடைப்பது; முறையற்ற வாசல் வழியாக ஜராசந்தனை அணுகுவது; ஜராசந்தன் அவர்களுக்கு மரியாதை செய்வது; ஸ்நாதக பிராமணர்கள் யார் என்பதை கிருஷ்ணன் ஜராசந்தனுக்குத் தெரிவிப்பது; கிருஷ்ணன் ஜராசந்தனை பகைவன் என்று சொல்வது…
[1] இந்தக் கதையை ஆதிபர்வம் 104 பகுதியில் படிக்கலாம்
ஓ பார்த்தா {அர்ஜுனா}! கௌதமரின் வசிப்பிடத்திற்கு அருகில் இருக்கும், காண்பதற்கினிய அரச மரங்களையும், அழகான லோத்திர மரங்களையும் பார்.(8) பழங்காலத்தில் அங்கே எதிரிகளைக் கொல்லும் அர்ப்புதன், சக்ரவாபின், சுவஸ்திகன் ஆகிய நாகர்களும், மணி என்ற சிறந்த நாகனும் வசித்தனர்.(9) மகதர்களின் நாடு பஞ்சத்துக்கு ஆட்படக்கூடாது என்பது அந்த மனுவின் ஆணையே. கௌசிகரும் மணிமத்தும் {மணிமானும்} கூட இந்த நாட்டுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்[2].(10) காண்பதற்கினியதும், தாக்குதலுக்கு அசைந்து கொடுக்காததுமான இப்படிப்பட்ட நகரத்தைக் கொண்டிருக்கும் ஜராசந்தன், மற்ற ஏகாதிபதிகளைப் போல அல்லாமல், தனது நோக்கங்களின் கனியை அடையத் தீவிரமாக முயல்கிறான். இருப்பினும், நாம் அவனை {ஜராசந்தனைக்} கொன்று அவனது செருக்கைத் தணிப்போம்" என்றான் {கிருஷ்ணன்}.(11)
[2] கும்பகோணம் பதிப்பில், கிருஷ்ணன் சொல்வதாக இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு: "பாண்டரம், விபுலம், வாராகம், சைத்யகம், மாதங்கம் எனும் இவ்வைந்து சிறந்த பர்வதங்களிலும் ஸகலஸித்தர்களின் கிருஹங்களும், மஹாத்மாக்களான ஸந்யாஸிகள் ரிஷிகள் இவர்களின் ஆச்ரமங்களும், விருஷபன், தமாலன், மஹாவீர்யன் என்னும் நாகர்களுடைய கிருஹங்களும், கந்தர்வர்கள், ராக்ஷஸர்களின் வீடுகளும் இருக்கின்றன. கக்ஷீவானென்னும் முனியின் தவப்பெருமையினால் தபோதங்கள் என்று பெயர் பெற்ற புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் ஸித்ததீர்த்தங்களெனவும் சொல்லப்படுகின்றன. மணிமானென்னும் நாகனைக் கண்டமாத்திரத்தினாலேயே மனிதன் க்ஷேமத்தையும், ஸுகத்தையும் அடைவான். இப்படி நாற்புறங்களிலும் வெல்லமுடியாத அழகிய நகரத்தையடைந்ததுதான் ஜராஸந்தன் ஒப்பற்ற காரிய ஸித்தியை நினைக்கிறான். நாம் இப்போது ஸமீபத்தில் போய் அவன் கர்வத்தை போக்கிவிடுவோம்" என்றிருக்கிறது.
வைசம்பாயனர் சொன்னார், "இப்படிப் பேசிச்சென்ற அபரிமிதமான சக்தி படைத்த இரண்டு பாண்டவர்களும் விருஷ்ணிகுலத்தவனுமான {கிருஷ்ணனுமான} பங்காளிகள், மகத நகரத்திற்குள் நுழைந்தனர்.(12) பிறகு அவர்கள் தாக்குதலுக்கு வளைந்து கொடுக்காத நகரமான மகிழ்ச்சியான நால்வகை குடிமக்களும் நிறைந்த, விழாக்களுக்குப் பஞ்சமில்லாத கிரிவ்ராஜ நகரத்தை அணுகினர்.(13) அந்த நகரத்தின் வாயிலை வந்தடைந்த அந்தப் பங்காளிகள் (அந்த வாயிலைக் கடந்து செல்லாமல்) பிருஹத்ரதன் குலத்தாராலும், அந்நாட்டு குடிமக்களாலும் வழிபடப்பட்டு, அவர்கள் பார்த்துப் பார்த்து ஆனந்தமடையும் சைத்யக மலையின் சிகரங்களைத் தங்கள் கணைகளால் துளைக்க தொடங்கினர்.(14,15) பிருஹத்ரதன், அங்கேதான் ரிஷபன் என்ற மனித ஊனுண்ணியை கொன்று, அந்தப் பெரும் விலங்கின் {ரிஷபனின்} தோலைக் கொண்டு மூன்று பெரிய பேரிகைகளைத் தனது நகரத்தில் செய்து வைத்தான். அந்தப் பேரிகைகளை ஒரு முறை அடித்தாலே, அதன் ஒலி ஒரு மாத காலத்திற்கு நிலைத்திருக்கும். தெய்வீக மலர்களால் மூடியிருந்த அந்த பேரிகைகள் தொடர்ந்து இனிமையான ஒலியை எழுப்பி வந்த இடமும், மகதர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியதுமான சைத்யக மலைச்சிகரத்தை அந்தப் பங்காளிகள் உடைத்தெறிந்தனர். ஜராசந்தனைக் கொல்ல விரும்பிய அவர்களின் செயல்கள் அனைத்தும், எதிரியின் தலையில் தங்கள் காலை வைப்பது போல இருந்தன.(16-19) அசைக்க முடியாததும், பெரியதும், உயரமானதும், பழமையாதும், கொண்டாடப்பட்டதும், மலர்களாலும் நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த மலைச்சிகரத்தை தங்கள் உறுதியான பலம் வாய்ந்த கரங்களால் உடைத்து எறிந்தனர். பிறகு மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அந்த நகரத்திற்குள் நுழைந்தனர்.(20,21)
அந்த நகரத்தில் வாழ்ந்த கல்விமான்களான பிராமணர்கள் தீய சகுனங்களைக் கண்டு ஜராசந்தனிடம் சொன்னார்கள்.(22) புரோகிதர், மன்னனை யானையின் மீது அமர்த்தி, ஊதுவத்தி ஏற்றிச் சுற்றிப் போட்டனர். பேராற்றல் கொண்ட ஜராசந்தனும், தீ சகுனங்களால் ஏற்படும் விளைவுகளை விரட்ட, சரியான நோன்புகள் கொண்ட வேள்விக்கு ஏற்பாடு செய்தான்.(23) அதே வேளையில் ஓ பாரதா {ஜனமேஜயா}, வெறுங்கையாலோ, ஆயுதங்களற்றோ ஜராசந்தனுடன் போர் புரிய விரும்பிய அந்தப் பங்காளிகள், ஸ்நாதக பிராமணர்களின் வேடத்தில் அந்த நகரத்திற்குள் நுழைந்தனர்.(24) அழகிய மலர்கள், பொருட்கள், மனிதனின் ஆசைக்குகந்த அனைத்து வகை பொருட்களுடன் கூடிய அழகான கடைகளை அவர்கள் அங்கே கண்டனர்.(25) மனிதர்களில் சிறந்தவர்களான கிருஷ்ணன், பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோர், அந்தக் கடைகளைக் கண்டபடியே பொது வழி சாலையில் நடந்து சென்றனர். பெரும் பலம் கொண்ட அவர்கள், மலர் வியாபாரிகளிடம் இருந்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த பூ மாலைகளைப் பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டனர்.(26) பல வகை நிறங்களிலான ஆடைகளை உடுத்தி, பூமாலைகளைத் தரித்துக் கொண்டு, காதில் குண்டலங்களுடன் இருந்த அந்த வீரர்கள், மாட்டு மந்தையைக் காணும் இமாலய சிங்கங்களென பெரும் புத்திகூர்மை கொண்ட ஜராசந்தனின் வசிப்பிடத்தைக் கண்டு அதனுள் நுழைந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, சந்தனம் பூசப்பட்ட அந்த வீரர்களின் கரங்கள், சால மரத்தைப் போல இருந்தன. மரங்களைப் போன்ற கழுத்துகளையும், அகன்ற மார்புகளையும் கொண்டு, யானைகளைப் போல இருந்த அந்த வீரர்களைக் கண்ட மகத நாட்டு மக்கள் பெரிதும் வியப்படைந்தனர்(27-29). அந்த மனிதர்களில் காளைகள், மக்களால் நிறைந்த மூன்று வாயில்களைக் கடந்து, பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் மன்னனை அணுகினர்.(30) விரைவாக எழுந்த ஜராசந்தன், அவர்களுக்கு கால் கழுவ நீரும், தேனும் மற்ற பிற பொருட்களுடன் கூடிய அர்க்கியத்தையும் கொடுத்து அவர்களைக் கௌரவித்தான். அந்தப் பெரும் மன்னன் அவர்களைப் பார்த்து, "உங்கள் வரவு நல்வரவாகட்டும்!" என்றான்.(31,32)
ஓ ஜனமேஜயா, இதைக் கேட்ட பார்த்தனும் {அர்ஜுனனும்} பீமனும் அமைதியாக நின்றனர். அந்த ஏகாதிபதியிடம் {ஜராசந்தனிடம்} கிருஷ்ணன், "ஓ மன்னர்களின் மன்னா, இவர்கள் இருவரும் {பீமனும் அர்ஜுனனும்} நோன்பு காக்கின்றனர். எனவே அவர்கள் பேச மாட்டார்கள்.(33) அவர்கள் இன்று நள்ளிரவு வரை பேசமாட்டார்கள். அதன்பிறகே அவர்கள் பேசுவார்கள்!" என்றான். அந்த மன்னன் தனது விருந்தினர்களுக்கு {கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன்}, வேள்வி அரங்கில் ஓர் இடம் கொடுத்து தங்க வைத்து, தனது தனி அறைக்குள் ஓய்ந்திருக்கச் சென்றான்.(34) நடு இரவு வந்ததும், பிராமண உடையில் இருந்த தனது விருந்தினர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான் {ஜராசந்தன்}. ஸ்நாதக பிராமணர்கள் வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால், உடனே அது நள்ளிரவாக இருந்தாலும் அவர்களை வந்து சந்திப்பது அந்த மன்னன் {ஜராசந்தன்} ஏற்றிருக்கும் நோன்பாகும்.(35,36)
அந்த மன்னர்களில் சிறந்தவன் {ஜராசந்தன்}, தனது விருந்தினர்களின் விசித்திரமான ஆடைகளைக் கண்டு மிகவும் வியப்படைந்தான். இருப்பினும், அவர்களுக்காக மதிப்புடன் காத்திருந்தான் {அவர்களுக்குப் பணிவிடை செய்தான்}.(37) மறுபுறம், ஓ பாரத குலத்தில் சிறந்தவனே, அந்த மனிதக்காளைகள், எதிரிகளைக் கொல்பவர்கள், ஜராசந்தனைக் கண்டு,(38) "ஓ மன்னா, சிரமமில்லாமல் முக்தி அடைவாயாக." என்றனர். ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதியிடம் இதைச் சொல்லி, ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.(39) ஓ மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, பிராமண வேடத்தில் இருந்த பாண்டுவின் மகன்களிடமும் {பீமன் மற்றும் அர்ஜுனனிடமும்} யாதவ குலத்தவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, ஜராசந்தன், "இருக்கைகளில் அமருங்கள்" என்றான்.(40) அந்த மனிதக்காளைகள் பெரும் வேள்வியை நடத்தும் மூன்று புரோகிதர்கள் போல அமர்ந்து அழகாக இருந்தனர்.(41)
ஓ குரு குலத்தவனே {ஜனமேஜயா} வாய்மைக்கு உறுதியாகத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மன்னன் ஜராசந்தன், தனது விருந்தினர்களின் வேடத்தை உணர்ந்து அவர்களிடம், "இந்த முழு உலகத்திலும் உள்ள ஸ்நாதக நோன்பை கடைப்பிடிக்கும் பிராமணர்கள், மலர்களையும், மாலைகளையும், நறுமணப் பொருட்களையும் தங்கள் மேனியில் தரிப்பதில்லை என்பதை நான் அறிவேன். எனவே, மலர்களால் உங்களை அலங்கரித்துக் கொண்டு, கைகளில் வில்நாணிழுக்கும் வடுக்களை {காயங்களைப்} பெற்றிருக்கும் நீங்கள் யார்?(42,43) வண்ண ஆடைகள் உடுத்தி, காலமற்ற காலத்தில் மலர்களால் அலகரித்துக் கொண்டு, பிராமண சக்தியுடன் இருக்கும் நீங்கள் உங்களை நான் பிராமணர்கள் என்று எண்ண வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்கள். வாய்மையே மன்னர்களையும் அலங்கரிக்கிறது.(44) அரசகோபத்தின் அச்சமில்லாமல் சைத்யக மலைச்சிகரத்தை உடைத்து, மாற்றுருவத்தில், முறையற்ற வாயில் வழியாக ஏன் வந்தீர்கள்?(45) பிராமணனின் சக்தி அவனது வாக்கிலேயே இருக்கிறது (செயலில் அல்ல). உங்கள் இந்தக் காரியங்கள், நீங்கள் காட்டிக்கொள்ளும் குலத்திற்கு ஏற்புடையவை அல்ல. எனவே உங்கள் நோக்கம் என்ன என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள்.(46) முறையற்ற வழியில் இங்கே வந்தும், நான் கொடுத்த மரியாதையை ஏன் நீங்கள் ஏற்கவில்லை? நீங்கள் என்னிடம் வந்த நோக்கம் என்ன?" என்றான் {ஜராசந்தன்}.(47)
மன்னனால் இப்படிச் சொல்லப்பட்டதும், பேச்சில் வல்லவனான உயர் ஆன்ம கிருஷ்ணன் அந்த ஏகாதிபதியிடம் {ஜராசந்தனிடம்} மரணக் குரலுடன் அமைதியாகப் பேசினான்.(48)
கிருஷ்ணன், "ஓ மன்னா, எங்களை ஸ்நாதக பிராமணர்கள் என்று அறிவாயாக. ஓ ஏகாதிபதி {ஜராசந்தா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய அனைவரும் ஸ்நாதக நோன்பை நோற்கத் தகுதியுடையவர்களே.(49) இந்த நோன்பு குறிப்பிட்ட மற்றும் பொதுவான விதிகளை (பலவற்றை) உள்ளடக்கியது. இந்த நோன்பை குறிப்பிட்ட விதிகளுடன் பின்பற்றும் க்ஷத்திரியன் செழிப்பை அடைகிறான்.(50) எனவே, நாங்கள் எங்களை மலர்களால் அலங்கரித்திருக்கிறோம். ஓ மன்னா {ஜராசந்தா}, மேலும் க்ஷத்திரியர்கள் தங்கள் சக்தியைக் கரங்களால் வெளிப்படுத்துவாரேயன்றி பேச்சால் அல்ல. எனவே, ஓ பிருஹத்ரதனின் மகனே {ஜராசந்தா}, க்ஷத்திரியர்களால் சொல்லப்படும் வார்த்தைகள் ஆற்றல்மிக்கவை அல்ல.(51) ஓ ஏகாதிபதி {ஜராசந்தா}, படைத்தவன் {பிரம்மன்} தனது சொந்த சக்தியையே க்ஷத்திரியனின் கரங்களில் வைத்திருக்கிறான். நீ அதைக் காண வேண்டும் என்று விரும்பினால், நிச்சயம் அதை நீ இன்று காணலாம்.(52) பகைவனின் வசிப்பிடத்தை முறையற்ற வழியில் அடைய வேண்டும் என்பதும், நண்பனின் வசிப்பிடத்தை முறையான வழியில் அடைய வேண்டும் என்பதும் விதிக்கப்பட்டிருக்கும் விதிகளே ஆகும்.(53) ஒரு காரியத்தை சாதிப்பதற்காக பகைவனின் வசிப்பிடத்தை அடைந்தால், அவன் எங்களுக்குச் செய்யும் வழிபாடுகளை ஏற்கக்கூடாது என்பதும் நாங்கள் கொண்டிருக்கும் நிலைத்த நோன்பே" என்றான் {கிருஷ்ணான்}.(54)
ஆங்கிலத்தில் | In English |