திரு.ஜெயவேலன் |
நான் எனது அறையில் கணினியின் முன்பு அமர்ந்து
கொண்டு, சபாபர்வம் முதல் பகுதியை பிளாகரில் பதிவேற்றிக் கொண்டிருந்தேன். அப்போது
வாசலில் அமர்ந்திருந்த எனது தகப்பனார் {சி.செண்பகக்குட்டி M.A.,B.Ed.- தமிழாசிரியர் ஓய்வு}, என்னைத் தேடி யாரோ
வந்திருப்பதாகக் குரல் கொடுத்தார்.
யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அவசர
அவசரமாக படத்தை இணைத்து பதிவையும் இட்டுவிட்டு, வாசலுக்கு வந்தேன். அங்கே எனது
நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் எனது தந்தையுடன் உரையாடிக் கொண்டிருந்தார். எனது
மனைவியைக் குறித்து விசாரித்தார். அவர் {எனது மனைவி} வெளியே கடைத்தெருவுக்குச்
சென்றிருப்பதாகச் சொன்னேன். பதிவுகள் குறித்து விசாரித்தார். பேசிக்கொண்டே எனது
கடைக்கு சென்றோம் {எனது வீட்டின் முன்பே இருக்கும் அரசன் வரைகலை மற்றும்
ஒளியச்சுக்கோவை மையம்}. அவர் வீட்டில் இணைய இணைப்பு வேலை செய்ய வில்லை என்றும்
கடைசி இரண்டு பதிவுகள் படிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
கடைசி
பதிவு படித்திருந்தால், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருப்பார் என்பது
எனக்கு தெரியும். ஏனென்றால் அந்தப் பதிவில் பல இடங்களில் அவர் பெயரைச்
சுட்டிக்காட்டியிருந்தேன். எப்படியெல்லாம் இந்த முழு மஹாபாரதம் வளர துணை புரிந்து
வருகிறார் என்பதையும் அதில் சொல்லியிருந்தேன். அதைப் படித்திருந்தால்,
"என்னங்க இது, இப்படியெல்லாம் போடக்கூடாதுங்க, எடுங்க… பெயரை எடுங்க" என்று
துளைத்திருப்பார். போன் வரவில்லை என்றதுமே இவர் படிக்க வில்லை என்ற சந்தேகத்துடன்
தான் இருந்தேன். இணையத் தொடர்பு பழுதாக இருப்பதாகத் தெரிவித்ததும். எனது மையத்தியில்
இருக்கும் கணினியில் பதிவைத் திறந்து காட்டினேன். அதற்குள் "உங்கள் மனைவி
வந்துவிட்டாரா பாருங்கள்", என்று கேட்டார்.
நான் வீட்டினுள் சென்று பார்த்துவிட்டு,
"இன்னும் வரவில்லை" என்று சொன்னேன். கணினியில் திறந்திருந்த பக்கத்தைப்
படித்துக் கொண்டிருந்தார். "என்னங்க இது, இந்தப் போட்டோ எப்படிங்க உங்களுக்கு
கிடைச்சது?" என்றார். நான் முகநூலில் இருந்து எடுத்ததாகச் சொன்னேன். "என்னங்க
இப்படி பண்ணீட்டீங்க. இவ்வளவு வள வளனு எழுதக்கூடாதுங்க. இத எடுங்க.. அத
எடுங்க.." என்றார். நான், எதை எடுக்க வேண்டும் அதை மொத்தமாகச் சொல்லுங்கள்,
நான் பிறகு எடுத்துக் கொள்கிறேன் என்று சமாளித்தேன்.
அதற்கு எனது மனைவி {திருமதி.லட்சுமி அரசன் M.A.}, மையத்தியின் வாசலில் வந்து நின்றார்.
வந்ததும், திரு.ஜெயவேலன் அவர்கள், "ஆதிபர்வம் 236 பகுதிகளும், முடிச்சுட்டாரு உங்க
வீட்டக்காரரு. தெரியுமா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்தார். "ஆமாம்.
தெரியும் சார்" என்று என் மனைவி சொன்னார். உடனே அவர் தனது கையில் வைத்திருந்த
ஒரு சிறு கவரை எடுத்து என் மனைவியிடம் கொடுத்தார். "என்ன சார் இது?"
என்று என் மனைவி கேட்டார்.
அதற்கு, "இது ஒரு சிறு பரிசு. உங்கள் கணவர்
இரவெல்லாம் மஹாபாரதம் எழுதுகிறேன் என்று உட்கார்ந்தாலும், உங்களது சிரமம் பாராமல்
அவருக்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தமைக்கா இந்தப் பரிசு." என்று சொன்னார். என் மனைவி வாங்க மாட்டேன் என்று எவ்வளவு முயன்றும் வலுக்கட்டாயமாகக் கொடுத்துவிட்டார்.
நான் அருகில் நின்று கொண்டிருந்தேன். அந்தக் கவரைப்
பார்த்ததும் அது பணம் என்று தெரிந்தது. "ஐயோ… என்னங்க இது, இதுவெல்லாம்
கூடாது...", என்று சொன்னேன். அவர் கடைசி வரை கேட்கமாட்டேன் என்று
நின்றுவிட்டார். சரி என்று எனது மனைவியை உள்ளே எடுத்துச் செல்ல சொன்னேன்.
அடுத்து கணினியில் திறந்திருந்த அப்பதிவை சிறிது எடிட்
செய்தோம். {அவர் பெயர் வரும் இடங்களில் நீக்கச் சொன்னதை, நான் அதைப் பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று சமாளித்துவிட்டேன்}. பிறகு கடைசிப் பதிவாக, அவர் வந்த போது அவசர அவசரமாக இட்ட சபா பர்வம்
பதிவையும் காண்பித்தேன். அவர் பிறகு வீட்டிற்கு சென்று படித்துக் கொள்வதாகச்
சொல்லிவிட்டுக் கிளம்பத் தயாரானார். பிறகு வீட்டில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டார்.
அவர் போன பிறகு எனது மனைவியிடம் இருந்த கவரை
வாங்கிப் பிரித்தேன். அதிர்ந்துவிட்டேன்… ரூ.23,600/- (ரூபாய் இருபத்து
மூவாயிரத்து அறுநூறு) அதில் இருந்தது. {மஹாபாரதத்தின் ஆதிபர்வம் பகுதிகள் மொத்தம் 236Xரூ.100=23600 ரூபாய் என்பது அவரது கணக்கு என்று பின்பு அறிந்தேன்}. ஏதோ நான் சாதாரணமாகத் தான்
எதிர்பார்த்திருந்தேன். திடீரென இவ்வளவு தொகையைப் பார்த்ததும் ஆடிப் போய்விட்டேன்.
அவர் சென்று ஒரு 15 நிமிடம் தான் இருக்கும். உடனே அவரை தொலைபேசியில் அழைத்தேன்.
"என்னங்க இது, நான் சாதாரணமா எதிர்பார்த்தேன். இவ்வளவு தொகையெல்லாம்
கொடுக்கலாமா? இப்படித் தெரிஞ்சிருந்தா வாங்கியிருக்க மாட்டேனே!" என்றேன்.
அவர், "ஏங்க, இது உங்களுக்கு இல்லீங்க. நீங்க
இரவெல்லாம் உக்காந்து பதிவு எழுதுன போது உங்களுக்கு தொல்லை குடுக்காம கஷ்டப்பட்டாங்க பாருங்க உங்க மனைவி, அவங்களுக்கு நம்ம புருஷன் வெட்டியா வேலை
பாக்கிறாரே என்ற நினைப்பு வந்துடக்கூடாது. உங்களுக்கும் நாம ஏதோ
தர்மத்துக்குத்தானே எழுதுறோம். எப்ப எழுதினா என்ன என்று ஒரு சோம்பல்
வந்துவிடக்கூடாது. அடுத்து சபா பர்வத்துக்கு இதவிட வேகமாக வேலை நடக்கணுங்க. மையத்தில் வேலை
இல்லாத போது, நீங்க வேற வேலை செய்றதுக்குப் பதில், ஒரு பதிவை மொழிபெயர்த்துடலாம்.
அதுக்கு இது ஒரு ஊக்கமாக இருக்கும். இப்ப என்னிடம் இருக்குது. அதனால கொடுத்தேன். அத
தப்பா நினைக்காதீங்க", என்றார்.
அவர் தொலைபேசியில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவதாக
அறிந்தேன். சரி நீங்கள் வீட்டுக்கு சென்றதும் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு
தொலைபேசி தொடர்பைத் துண்டித்தேன். என் வாழ்வில் பெற்ற முதல் நன்கொடை இது.
இந்தக் கலிகாலத்தில் இப்படியும் மனிதர்கள்
இருக்கத்தானே செய்கிறார்கள். இவ்வளவுக்கும், திரு.ஜெயவேலன் அவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி {போலிப் பகுத்தறிவுவாதி அல்ல}. முதல் பதிவு முதல் கடைசி பதிவு வரை திருத்தியும், புதிய படங்களை இணைத்தும், இந்த வலைப்பூவிற்குப் பெரிய சேவை செய்திருக்கிறார். இந்த வலைப்பூவில் தொடர்பு எண்களில் இரண்டாவதாக அவரது எண்ணும் கொடுக்கப்பட்டிருப்பதால், வலைப்பூ குறித்த தொலைபேசிகளை அவரே கேட்டு {முதல் எண் எனதாக இருந்தாலும், நான் மேற்கொண்டிருக்கும் பணியால் தெரியாத எண்களை நான் பெரும்பாலும் எடுப்பதில்லை.} திருத்தங்களையும் அவரே செய்து வருகிறார்.
கம்பனுக்குக் கிடைத்த சடையப்ப வள்ளலைவிட மேலாக எனக்குத்
தெரிகிறார் திரு.ஜெயவேலன் அவர்கள். ஒரு உதாரணத்திற்குத் தான் சொன்னேன். அதற்காக
கம்பனுக்கு நிகராக என்னை ஒப்பிட்டுக் கொண்டதாக யாரும் நினைக்க வேண்டாம்.
அவர் நம்பாத தெய்வங்கள் அவருக்கு பேரருளை அருள
வேண்டும் என்று பரமனைத் தியானிக்கிறேன்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
9.9.2013, திருவொற்றியூர்