பாஞ்சாலி சபதம்
பாரதி-செல்லம்மா |
பிரம ஸ்துதி நொண்டிச்சிந்து
ஓமெனப் பெரியோர் கள் -- என்றும்
ஓதுவ தாய், வினை மோதுவ தாய்,
தீமைகள் மாய்ப்பது வாய், -- துயர்
தேய்ப்பது வாய், நலம் வாய்ப்பது வாய்,
நாமமும் உருவும் அற்றே -- மனம்
நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,
ஆமெனும் பொருளனைத் தாய், -- வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய். 1
-
நின்றிடும் பிரமம் என் பார்; -- அந்த
நிர்மலப் பொருளினை நினைத்திடு வேன்,
நன்றுசெய் தவம்யோ கம் -- சிவ
ஞானமும் பக்தியும் நணுகிட வே,
வென்றிகொள் சிவசக்தி -- எனை
மேவுற வேஇருள் சாவுற வே,
இன்றமிழ் நூலிதுதான் -- புகழ்
ஏய்ந்தினி தாயென்றும் இலகிடவே. 2
சரஸ்வதி வணக்கம்
வெள்ளைக் கமலத்திலே -- அவள்
வீற்றிருப் பாள், புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான் -- நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,
பு{[மு-ப.]: மாய்ப்பதுவாய்ப் -- பவந்}
கள்ளைக் கடலமு தை -- நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத்திலே -- எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள். 3
வேதத் திருவிழி யாள், -- அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே -- நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்கமெனுஞ் -- செவி
வாய்ந்தநற் றுணிவெனுந் தோடணிந் தாள்,
போதமென் நாசியி னாள், -- நலம்
பொங்குபல் சாத்திர வாயுடை யாள். 4
கற்பனைத் தேனித ழாள், -- சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,
சிற்ப முதற்கலை கள் -- பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,
சொற்படு நயமறி வார் -- இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்
விற்பனத் தமிழ்ப்புல வோர் -- அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்: 5
வாணியைச் சரண்புகுந் தேன்; -- அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள், -- நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,
பூணியல் மார்பகத் தாள், -- ஐவர்
பூவை, திரௌபதி புகழ்க்கதையை
மாணியல் தமிழ்ப்பாட்டால் -- நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே. 6
[குறிப்பு]: ‘வேதத் திருவிழியாள்’ எனத் தொடங்கும் பாடல்
கையெழுத்துப் பிரதியில் அடிக்கப்பட்டுள்ளதாகக்
கவிமணி குறித்துள்ளார்.
பு{[மு-ப.]: ‘சீதக் கதிர் மதியா -- நுதல்’
‘சேர்ந்த தோரூகவண் குழலுடையாள்’
‘வாக் குத வுவளெனத் திட மிகுந்தேன்’}
முதலாவது-அழைப்புச் சருக்கம்
ஹஸ்தினாபுரம்
அத்தின புரமுண்டாம்; -- இவ்
வவனியி லேயதற் கிணையிலை யாம்;
பத்தியில் வீதிக ளாம்; -- வெள்ளைப்
பனிவரை போற்பல மாளிகை யாம்;
முத்தொளிர் மாடங்க ளாம்; -- எங்கும்
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைக ளாம்;
நத்தியல் வாவிக ளாம்; -- அங்கு
நாடு மிரதிநிகர் தேவிக ளாம்; 7
அந்தணர் வீதிக ளாம்; -- மறை
யாதிக ளாம்கலைச் சோதிக ளாம்;
செந்தழல் வேள்விக ளாம்; -- மிகச்
சீர்பெறுஞ் சாத்திரக் கேள்விக ளாம்;
மந்திர கீதங்க ளாம்; -- தர்க்க
வாதங்க ளாம்;தவ நீதங்க ளாம்;
சிந்தையி லறமுண் டாம்; -- எனிற்
சேர்ந்திடுங் கலிசெயும் மறமுமுண்டாம். 8
மெய்த்தவர் பலருண் டாம்; -- வெறும்
வேடங்கள் பூண்டவர் பலருமுண் டாம்;
உய்த்திடு சிவஞா னம் -- கனிந்
தோர்ந்திடு மேலவர் பலருண் டாம்;
பொய்த்தவித் திரசா லம் -- நிகர்
பூசையும் கிரியையும் புலைநடை யும்
கைத்திடு பொய்ம்மொழி யும் -- கொண்டு
கண்மயக் காற்பிழைப் போர்பல ராம். 9
பு{[மு-ப.]: ‘சிந்தையி லறமு முண்டாம்’}
மாலைகள் புரண்டசை யும் -- பெரு
வரையெனத் திரண்டவன் தோளுடை யார்,
வேலையும் வாளினை யும் -- நெடு
வில்லையுந் தண்டையும் விரும்பிடு வார்,
காலையும் மாலையி லும் -- பகை
காய்ந்திடு தொழில்பல பழகிவெம் போர்
நூலையும் தேர்ச்சி கொள் வோர், -- கரி்
நூறினைத் தனிநின்று நொறுக்கவல் லார். 10
ஆரிய வேல்மற வர், -- புவி
யாளுமொர் கடுந்தொழில் இனிதுணர்ந் தோர்,
சீரியல் மதிமுகத் தார் -- மணித்
தேனித ழமுதென நுகர்ந்திடு வார்
வேரியங் கள்ளருந்தி -- எங்கும்
வெம்மத யானைகள் எனத்திரி வார்,
பாரினில் இந்திரர் போல் -- வளர்
பார்த்திவர் வீதிகள் பாடுவ மே. 11
நல்லிசை முழக்கங்க ளாம்; -- பல
நாட்டிய மாதர்தம் பழக்கங்க ளாம்;
தொல்லிசைக் காவியங்கள் -- அருந்
தொழிலுணர் சிற்பர்செய் ஓவியங்கள்
கொல்லிசை வாரணங் கள் -- கடுங்
குதிரைக ளொடுபெருந் தேர்களுண் டாம்;
மல்லிசை போர்களுண் டாம்; -- திரள்
வாய்ந்திவை பார்த்திடு வோர்களுண் டாம். 12
எண்ணரு கனிவகை யும் -- இவை
இலகிநல் லொளிதரும் பணிவகை யும்,
தண்ணறுஞ் சாந்தங்க ளும் -- மலர்த்
தார்களும் மலர்விழிக் காந்தங்க ளும்
பு{[மு-ப.]: நொறுக்க வல்லோர்.
யானை களெனத் திரிவோர்.}
சுண்ணமும் நறும்புகை யும் -- சுரர்
துய்ப்பதற்கு குரியபல் பண்டங்க ளும்
உண்ணநற் கனிவகை யும் -- களி
யுவகையும் கேளியும் ஓங்கினவே. 13
சிவனுடை நண்பன் என் பார், -- வட
திசைக்கதி பதியள கேசன் என் பார்,
அவனுடைப் பெருஞ்செல் வம் -- இவர்
ஆவணந் தொறும்புகுந் திருப்பது வாம்;
தவனுடை வணிகர்க ளும் -- பல
தரனுடைத் தொழில்செயும் மாசன மும்
எவனுடைப் பயமுமிலா -- தினிது
இருந்திடுந் தன்மையது எழில் நகரே. 14
துரியோதனன் சபை
கன்னங் கரியது வாய் -- அகல்
காட்சிய தாய்மிகு மாட்சிய தாய்
துன்னற் கினியது வாய் -- நல்ல
சுவைதரும் நீருடை யமுனையெனும்
வன்னத் திருநதி யின் -- பொன்
மருங்கிடைத் திகழ்ந்தஅம் மணிநகரில்,
மன்னவர் தங்கோ மான் -- புகழ்
வாளர வக்கொடி யுயர்த்துநின் றான். 15
துரியோ தனப்பெய ரான், -- நெஞ்சத்
துணிவுடை யான், முடி பணிவறி யான்,
‘கரியோ ராயிரத் தின் -- வலி
காட்டிடு வான்’ என்றக் கவிஞர்பி ரான்
பெரியோன் வேதமுனி -- அன்று
பேசிடும் படிதிகழ் தோள்வலி யோன்,
உரியோர் தாமெனினும் -- பகைக்
குரியோர் தமக்குவெந் தீயனை யான், 16
தந்தைசொல் நெறிப்படி யே, -- இந்தத்
தடந்தோள் மன்னவன் அரசிருந் தான்.
மந்திர முணர்பெரி யோர் -- பலர்
வாய்த்திருந் தார் அவன் சபைதனிலே,
அந்தமில் புகழுடை யான், -- அந்த
ஆரிய வீட்டுமன், அறம் அறிந் தோன்.
வந்தனை பெறுங்குர வோர் -- பழ
மறைக்குல மறவர்கள் இருவரொ டே, 17
மெய்ந்நெறி யுணர்விது ரன் -- இனி
வேறுபல் அமைச்சரும் விளங்கிநின் றார்;
பொய்ந்நெறித் தம்பிய ரும் -- அந்தப்
புலைநடைச் சகுனியும் புறமிருந்தார்;
மைந்நெறி வான்கொடை யான், -- உயர்
மானமும் வீரமும் மதியுமு ளோன்,
உய்ந்நெறி யறியா தான் -- இறைக்கு
உயிர்நிகர் கன்னனும் உடனிருந் தான். 18
துரியோதனும் திருதராஷ்டிரனும் |
வேறு
எண்ணி லாத பொருளின் குவையும்
யாங்கணுஞ் செலுஞ் சக்கர மாண்பும்
மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர்
வார் கடற்பெருஞ் சேனையு மாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று
வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரி தாட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர். 19
வேறு
‘பாண்டவர் முடியுயர்த்தே -- இந்தப்
பார்மிசை யுலவிடு நாள்வரை, நான்
ஆண்டதொர் அரசா மோ? -- எனது
ஆண்மையும் புகழுமொர் பொருளா மோ?
காண்டகு வில்லுடை யோன் -- அந்தக்
காளை யருச்சுனன் கண்களிலும்
மாண்டகு திறல்வீ மன் -- தட
மார்பிலும் எனதிகழ் வரைந்துள தே! 20
‘பாரத நாட்டிலுள்ள -- முடிப்
பார்த்திவர் யார்க்கு மொர் பதியென்றே
நாரதன் முதன்முனிவோர் -- வந்து
நாட்டிடத் தருமன் அவ் வேள்விசெய் தான்;
சோரனவ் வெதுகுலத் தான் -- சொலும்
சூழ்ச்சியும் தம்பியர் தோள்வலி யும்
வீரமி லாத்தரு மன் -- தனை
வேந்தர்தம் முதலென விதித்தன வே. 21
‘ஆயிரம் முடிவேந் தர் -- பதி
னாயிர மாயிரங் குறுநிலத் தார்
மாயிருந் திறைகொணர்ந் தே -- அங்கு
வைத்ததொர் வரிசையை மறந்திட வோ?
தூயிழை யாடைக ளும் -- மணித்
தொடையலும் பொன்னுமொர் தொகைப்படு மோ?
சேயிழை மடவா ரும் -- பரித்
தேர்களும் கொடுத்தவர் சிறுதொகை யோ? 22
‘ஆணிப்பொற் கலசங்க ளும் -- ரவி
யன்னநல் வயிரத்தின் மகுடங்க ளும்
மாணிக்கக் குவியல்க ளும் -- பச்சை
மரகதத் திரளும் நன் முத்துக்க ளும்
பூணிட்ட திருமணி தாம் -- பல
புதுப்புது வகைகளிற் பொலிவன வும்
காணிக்கை யாக்கொணர்ந் தார்; -- அந்தக்
காட்சியை மறப்பதும் எளிதா மோ? 23
பு{[மு-ப.]: ‘வில்லுடையோன் -- ஒருக்’
‘முதலென மிலைந்தனவே’}
‘நால்வகைப் பசும்பொன் னும் -- ஒரு
நாலா யிரவகைப் பணக்குவை யும்
வேல்வகை வில்வகையும் -- அம்பு
விதங்களும் தூணியும் வாள்வகையும்
சூல்வகை தடிவகையும் -- பல
தொனிசெயும் பறைகளும் கொணர்ந்துவைத் தே,
பால்வளர் மன்னவர் தாம் -- அங்குப்
பணிந்ததை என்னுளம் மறந்திடு மோ? 24
‘கிழவியர் தபசியர் போல் -- பழங்
கிளிக்கதை படிப்பவன், பொறுமையென் றும்
பழவினை முடிவென் றும் -- சொலிப்
பதுங்கி நிற்போன், மறத் தன்மையி லான்,
வழவழத் தருமனுக் கோ -- இந்த
மாநில மன்னவர் தலைமைதந் தார்?
முழவினைக் கொடிகொண் டான் -- புவி
முழுதையுந் தனியே குடிகொண் டான். 25
‘தம்பியர் தோள்வலி யால் -- இவன்
சக்கர வர்த்தியென் றுயர்ந்தது வும்,
வெம்பிடு மதகரி யான் -- புகழ்
வேள்விசெய் தந்நிலை முழக்கிய தும்,
அம்புவி மன்னரெ லாம் -- இவன்
ஆணைதம் சிரத்தினில் அணிந்தவ ராய்
நம்பரும் பெருஞ்செல் வம் -- இவன்
நலங்கிளர் சபையினில் பொழிந்தது வும் 26
‘எப்படிப் பொறுத்திடு வேன்? -- இவன்
இளமையின் வளமைகள் அறியே னோ?
குப்பை கொலோமுத்தும்? -- அந்தக்
குரைகடல் நிலத்தவர் கொணர்ந்துபெய் தார்;
சிப்பியும் பவளங்க ளும் -- ஒளி்
திரண்டவெண் சங்கத்தின் குவியல்க ளும்
ஒப்பில்வை டூரியமும் -- கொடுத்து
ஒதுங்கிநின்றார் இவன் ஒருவனுக் கே. 27
பு{[மு-ப.]: செய் தப்பத முழக்கியதும்.}
‘மலைநா டுடையமன் னர் -- பல
மான்கொணர்ந் தார், புதுத் தேன்கொணர்ந் தார்,
கொலைநால் வாய்கொணர்ந் தார், -- மலைக்
குதிரையும் பன்றியும் கொணர்ந்துதந் தார்;
கலைமான் கொம்புக ளும் -- பெருங்
களிறுடைத் தந்தமும் கவரிக ளும்
விலையார் தோல்வகை யும் -- கொண்டு
மேலும்பொன் வைத்தங்கு வணங்கிநின் றார். 28
‘செந்நிறத் தோல், கருந் தோல், -- அந்தத்
திருவளர் கதலியின் தோலுட னே
வெந்நிறப் புலித்தோல் கள், -- பல
வேழங்கள் ஆடுகள் இவற்றுடைத் தோல்,
பன்னிற மயிருடைகள், -- விலை
பகரரும் பறவைகள், விலங்கினங் கள்,
பொன்னிறப் பாஞ்சாலி -- மகிழ்
பூத்திடும் சந்தனம் அகில்வகை கள், 29
‘ஏலங் கருப் பூரம் -- நறும்
இலவங்கம் பாக்குநற் சாதி வகை,
கோலம் பெறக்கொணர்ந்தே -- அவர்
கொட்டிநின்றார், கரம் கட்டிநின்றார்;
மேலுந் தலத்திலு ளார் -- பல
வேந்தர் அப் பாண்டவர் விழைந்திடவே
ஓலந் தரக்கொணர்ந்தே -- வைத்த
தொவ்வொன்றும் என்மனத் துறைந்தது வே. 30
‘மாலைகள் பொன்னும்முத் தும் -- மணி
வகைகளிற் புனைந்தவும் கொணர்ந்துபெய் தார்;
சேலைகள் நூறுவன் னம் -- பல
சித்திரத் தொழில்வகை சேர்ந்தன வாய்
பு{[மு-ப.]: தலத்திலுளார்}
சாலவும் பொன்னிழைத் தே -- தெய்வத்
தையலர் விழைவன பலர்கொணர்ந் தார்;
கோலநற் பட்டுக்க ளின் -- வகை
கூறுவதோ? எண்ணில் ஏறுவ தோ? 31
‘கழல்களும் கடகங்க ளும் -- மணிக்
கவசமும் மகுடமும் கணக்கில வாம்;
நிழல் நிறப் பரிபல வும் -- செந்
நிறத்தன பலவும்வெண் ணிறம்பல வும்
தழல் நிறம் மேகநிறம் -- விண்ணில்
சாரும் இந்திரவில்லை நேரு நிறம்
அழகிய கிளிவயிற்றின் -- வண்ணம்
ஆர்ந்தன வாய்ப்பணி சேர்ந்தன வாய் 32
‘காற்றெனச் செல்வன வாய், -- இவை
கடிதுகைத் திடுந்திறன் மறவரொடே,
போற்றிய கையின ராய்ப் -- பல
புரவலர் கொணர்ந்து அவன் சபைபுகுந் தார்.
சீற்றவன் போர்யானை -- மன்னர்
சேர்த்தவை பலபல மந்தையுண்டாம்;
ஆற்றல் மிலேச்சமன் னர் -- தொலை
அரபியர் ஒட்டைகள் கொணர்ந்துதந் தார். 33
‘தென்றிசைச் சாவக மாம் -- பெருந்
தீவுதொட்டேவட திசையத னில்
நின்றிடும் புகழ்ச்சீ னம் -- வரை
நேர்ந்திடும் பலபல நாட்டின ரும்,
வென்றிகொள் தருமனுக் கே, -- அவன்
வேள்வியில் பெரும்புகழ் விளையும்வண்ணம்,
நன்றுபல் (பொருள்) கொணர்ந் தார்; -- புவி
நாயகன் யுதிட்டிரன் எனவுணர்ந் தார். 34
‘ஆடுகள் சிலர்கொணர்ந் தார்; -- பலர்
ஆயிர மாயிரம் பசுக்கொணர்ந் தார்;
மாடுகள் பூட்டின வாய்ப் -- பல
வகைப்படு தானியம் சுமந்தன வாய்
பு{[குறிப்பு]: ‘பொருள்’ என்ற சொல் ஊகித்துக் கொண்டது}
ஈடுறு வண்டிகொண்டே -- பலர்
எய்தினர்; கரும்புகள் பலர்கொணர்ந்தார்;
நாடுறு தயிலவகை -- நறு
நானத்தின் பொருள்பலர் கொணர்ந்துதந் தார்; 35
‘நெய்க்குடம் கொண்டுவந்தார், -- மறை
நியமங்கொள் பார்ப்பனர் மகத்தினுக் கே;
மொய்க்குமின் கள்வகைகள் -- கொண்டு
மோதினர் அரசினம் மகிழ்வுற வே;
தைக்குநற் குப்பாயம், -- செம்பொற்
சால்வைகள், போர்வைகள், கம்பளங் கள் --
கைக்குமட் டினுந்தா னோ -- அவை
காண்பவர் விழிகட்கும் அடங்குப வோ? 36
‘தந்தத்தில் கட்டில்க ளும், -- நல்ல
தந்தத்தில் பல்லக்கும், வாகன மும்,
தந்தத்தின் பிடிவா ளும், -- அந்தத்
தந்தத்திலே சிற்பத் தொழில்வகை யும்,
தந்தத்தி லாதன மும், -- பின்னும்
தமனிய மணிகளில் இவையனைத் தும்
தந்தத்தைக் கணக்கிட வோ? -- முழுத்
தரணியின் திருவும் இத் தருமனுக் கோ?’ 37
வேறு
என்றிவ் வாறு பலபல எண்ணி
ஏழை யாகி இரங்குத லுற்றான்,
வன்றி றத்தொரு கல்லெனு நெஞ்சன்,
வானம் வீழினும் அஞ்சுத இல்லான்,
குன்றமொன்று குழைவுற் றிளகிக்
குழம்பு பட்டழி வெய்திடும் வண்ணம்
கன்று பூதலத் துள்ளுறை வெம்மை
காய்ந்தெழுந்து வெளிப்படல் போல. 38
நெஞ்சத் துள்ளோர் பொறாமை யெனுந்தீ
நீள்வதால் உள்ளம் நெக்குரு கிப்போய்,
மஞ்சன் ஆண்மை மறந்திண்மை மானம்
வன்மை யாவும் மறந்தன னாகிப்
பஞ்சை யாமொரு பெண்மகள் போலும்
பாலர் போலும் பரிதவிப் பானாய்க்
கொஞ்ச நேரத்திற் பாதகத் தோடு
கூடியே உற வெய்திநின் றானால். 39
யாது நேரினும் எவ்வகை யானும்
யாது போயினும் பாண்டவர் வாழ்வைத்
தீது செய்து மடித்திட எண்ணிச்
செய்கை யொன்றறி யான்திகைப் பெய்திச்
சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட
துட்ட மாமனைத் தான்சர ணெய்தி,
‘ஏது செய்வம்’ எனச்சொல்லி நைந்தான்,
எண்ணத் துள்ளன யாவும் உரைத்தே. 40
மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த
மாம கத்தினில் வந்து பொழிந்த
சொன்னம் பூண்மணி முத்திவை கண்டும்
தோற்றங் கண்டும் மதிப்பினைக் கண்டும்
என்ன பட்டது தன்னுளம் என்றே
ஈன மாமன் அறிந்திடும் வண்ணம்
முன்னம் தான் நெஞ்சிற் கூறிய வெல்லாம்
மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான். 41
துரியோதனன் சகுனியிடம் சொல்வது
வேறு
‘உலகு தொடங்கிய நாள்முத லாகநஞ் சாதியில் -- புகழ்
ஓங்கிநின் றாரித் தருமனைப் போலெவர்? -- மாம னே!
இலகு புகழ்மனு வாதி முதுவர்க்கும், மாமனே! -- பொருள்
ஏற்றமும் மாட்சியும் இப்படி யுண்டுகொல்? -- மாம னே!
கலைக ளுணர்ந்தநல் வேதியப் பாவலர் செய்தவாம் -- பழங்
கற்பனைக் காவியம் பற்பல கற்றனை, -- மாம னே!
பலகடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் -- சொல்லப்
பார்த்ததுண் டோ? கதை கேட்டதுண் டோ? புகல், மாமனே! 42
‘எதனை யுலகில் மறப்பினும், யானினி, மாமனே! -- இவர்
யாகத்தை என்றும் மறந்திட லென்பதொன் றேது காண்?
விதமுறச் சொன்னபொருட் குவை யும்பெரி தில்லைகாண்; -- அந்த
வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பலவுண்டே;
இதனை யெலாமவ் விழியற்ற தந்தையின் பாற்சென்றே -- சொல்லி,
இங்கிவர் மீதவ னும்பகை எய்திடச் செய்கு வாய்
மிதமிகு மன்பவர் மீதுகொண் டானவன் கேட்கவே, -- அந்த
வேள்விகண் டென்னுயிர் புண்படுஞ் செய்தி விளம்பு வாய். 43
‘கண்ணைப் பறிக்கும் அழகுடை யாரிள மங்கையர் -- பல
காமரு பொன்மணிப் பூண்க ளணிந்தவர் தம்மை யே
பு{[மு-ப.]: ‘யெய்திடச் செய்தியால்’}
மண்ணைப் புரக்கும் புரவலர் தாமந்த வேள்வியில் -- கொண்டு
வாழ்த்தி யளித்தனர் பாண்டவர்க் கே, எங்கள் -- மாம னே!
எண்ணைப் பழிக்குந் தொகையுடை யாரிள மஞ்சரைப் -- பலர்
ஈந்தனர் மன்னரிவர்தமக்குத்தொண் டியற்ற வே;
விண்ணைப் பிளக்குந் தொனியுடைச் சங்குகள் ஊதினார்; -- தெய்வ
வேதியர் மந்திரத் தோடுபல் வாழ்த்துக்கள் ஓதி னார். 44
‘நாரதன் தானும் அவ்வேதவியாசனும் ஆங்ஙனே -- பலர்
நானிங் குரைத்தற் கரியபெருமை முனிவரும்
மாரத வீரர் அப் பாண்டவர் வேள்விக்கு வந்ததும், -- வந்து
மாமறை யாசிகள் கூறிப் பெரும்புகழ் தந்த தும்,
வீரர்தம் போரின் அரிய நற் சாத்திர வாதங்கள் -- பல
விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீச வே
சார மறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும், -- நல்ல
தங்க மழைபொழிந் தாங்கவர்க்கே மகிழ் தந்த தும், 45
‘விப்பிர ராதிய நால்வரு ணத்தவர் துய்ப்பவே -- நல்
விருந்து செயலில் அளவற்ற பொன்செல விட்டதும்,
‘இப்பி றவிக்குள் இவையொத்த வேள்வி விருந்துகள் -- புவி
எங்கணும் நான்கண்ட தில்லை’ எனத்தொனி பட்ட தும்,
தப்பின்றி யேநல் விருந்தினர் யாருக்குந் தகுதிகள் -- கண்டு
தக்கசன் மானம் அளித்து வரிசைகள் இட்டதும்,
செப்புக நீயவ் விழியற்ற தந்தைக்கு; “நின்மகன் -- இந்தச்
செல்வம் பெறாவிடில் செத்திடு வான்” என்றும் செப்பு வாய். 46
‘அண்ணன் மைந்தன் அவனிக் குரியவன் யானன்றோ? -- அவர்
அடியவ ராகியெமைப் பற்றி நிற்றல் விதியன் றோ?
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர்தந்தார்? -- அந்தப்
பாண்ட வர்நமைப் புல்லென எண்ணுதல் பார்த்தை யோ?
கண்ண னுக்கு முதல்உப சாரங்கள் காட்டினார்; -- சென்று
கண்ணி லாத்தந்தைக் கிச்செய லின்பொருள் காட்டு வாய்;
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ் வாறு முதற்பட்டான்? -- என்றன்
மாமனேஅவ னம்மில் உயர்ந்த வகைசொல் வாய். 47
‘சந்திரன்குலத் தேபிறந் தோர்தந் தலைவன்யான் -- என்று
சகமெ லாஞ்சொலும் வார்த்தைமெய் யோவெறுஞ் சாலமோ?
தந்திரத்தொழில் ஒன்றுண ரும்சிறு வேந்தனை -- இவர்
தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ?
மந்தி ரத்திலச் சேதியர் மன்னனை மாய்த்திட்டார்; -- ஐய!
மாம கத்தில் அதிதியைக் கொல்ல மரபுண்டோ?
இந்தி ரத்துவம் பெற்றிவர் வாழும் நெறிநன்றே! -- இதை
எண்ணி எண்ணிஎன் நெஞ்சு கொதிக்குது, மாமனே. 48
‘சதிசெய் தார்க்குச் சதிசெயல் வேண்டும் என் மாமனே! -- இவர்
தாமென் அன்பன் சராசந்தனுக்குமுன் எவ்வகை
விதிசெய் தார்? அதை என்றும் என்உள்ளம் மறக்குமோ? -- இந்த
மேதினி யோர்கள் மறந்துவிட்டார், இஃதோர் விந்தையே.
நிதிசெய் தாரைப் பணிகுவர் மானிடர், மாமனே! -- எந்த
நெறியி னாலது செய்யினும், நாயென நீள்புவி
துதிசெய் தேயடி நக்குதல் கண்டனை, மாமனே! -- வெறுஞ்
சொல்லுக் கேயற நூல்கள் உரைக்கும் துணிவெலாம். 49
வேறு
‘பொற்றடந் தேரொன்று வாலிகன் கொண்டு விடுத்ததும், -- அதில்
பொற்கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும்,
உற்றதோர் தம்பிக்குத் தென்னவன் மார்பணி தந்ததும், -- ஒளி
யோங்கிய மாலையம் மாகதன் தான்கொண்டு வந்த தும்,
பற்றல ரஞ்சும் பெரும்புக ழேக லவியனே -- செம்பொற்
பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்த தும்
முற்றிடு மஞ்சனத் திற்குப் பலபல தீர்த்தங்கள் -- மிகு
மொய்ம்புடை யான் அவ் அவந்தியர் மன்னவன் சேர்த்ததும், 50
‘மஞ்சன நீர்தவ வேதவியாசன் பொழிந்ததும், -- பல
வைதிகர் கூடிநன் மந்திர வாழ்த்து மொழிந்த தும்,
குஞ்சரச் சாத்தகி வெண்குடை தாங்கிட, வீமனும் -- இளங்
கொற்றவ னும்பொற் சிவிறிகள் வீச, இரட்டை யர்
அஞ்சுவர் போலங்கு நின்று கவரி இரட்டவே, -- கடல்
ஆளு மொருவன் கொடுத்ததொர் தெய்விகச் சங்கி னில்
வஞ்சகன் கண்ணன் தவசிமுறுங் கங்கை நீர்கொண்டு -- திரு
மஞ்சன மாட்டும்அப் போதில் எவரும் மகிழ்ந்த தும் 51
‘மூச்சை யடைத்த தடா! சபை தன்னில் விழுந்து நான் -- அங்கு
மூர்ச்சை யடைந்தது கண்டனையே! என்றன் மாமனே!
ஏச்சையும் அங்கவர் கொண்ட நகைப்பையும் எண்ணுவாய்; -- அந்த
ஏந்திழை யாளும் எனைச்சிரித் தாளிதை எண்ணு வாய்;
பேச்சை வளர்த்துப் பயனொன்று மில்லை, என் மாமனே! -- அவர்
பேற்றை அழிக்கஉபாயஞ்சொல்வாய், என்றன் மாமனே!
தீச்செயல் நற்செயல் ஏதெனிம் னும்ஒன்று செய்து, நாம் -- அவர்
செல்வங் கவர்ந்த வரைவிட வேண்டும் தெருவிலே. 52
சகுனியின் சதி
வேறு
என்று சுயோதனன் கூறியே -- நெஞ்சம்
ஈர்ந்திடக் கண்ட சகுனிதான்; -- ‘அட!
இன்று தருகுவன் வெற்றியே; -- இதற்கு
இத்தனை வீண்சொல் வளர்ப்பதேன்? -- இனி
ஒன்றுரைப் பேன் நல் உபாயந்தான்; -- அதை
ஊன்றிக் கருத்தொடு கேட்பையால்; -- ஒரு
மன்று புனைந்திடச் செய்திநீ, -- தெய்வ
மண்டப மொத்த நலங்கொண்டே; 53
‘மண்டபங் காண வருவிரென் -- றந்த
மன்னவர் தம்மை வரவழைத் -- தங்கு
கொண்ட கருத்தை முடிப்பவே -- மெல்லக்
கூட்டிவன் சூது பொரச்செய்வோம்; -- அந்த
வண்டரை நாழிகை யொன்றிலே -- தங்கள்
வான்பொருள் யாவையும் தோற்றுனைப் -- பணி
தொண்ட ரெனச்செய் திடுவன்யான், -- என் றன்
சூதின் வலிமை அறிவைநீ. 54
வெஞ்சமர் செய்திடு வோமெனில் -- அதில்
வெற்றியும் தோல்வியும் யார்கண்டார்? -- அந்தப்
பஞ்சவர் வீரம் பெரிதுகாண்! -- ஒரு
பார்த்தன்கை வில்லுக் கெதிருண்டோ? -- உன்றன்
நெஞ்சத்திற் சூதை யிகழ்ச்சியாக் -- கொள்ள
நீதமில்லை, முன்னைப் பார்த்திவர் -- தொகை
கொஞ்ச மிலைப்பெருஞ் சூதினால் -- வெற்றி
கொண்டு பகையை அழித்துளோர். 55
‘நாடும் குடிகளும் செல்வமும் -- எண்ணி,
நானிலத் தோர்கொடும் போர்செய்வார்; -- அன்றி
ஓடுங் குருதியைத் தேக்கவோ? -- தமர்
ஊன்குவை கண்டு களிக்கவோ? -- அந்த
நாடும் குடிகளும் செல்வமும் -- ஒரு
நாழிகைப் போதினில் சூதினால் -- வெல்லக்
கூடு மெனிற்பிறி தெண்ணலேன்? -- என்றன்
கொள்கை இது’வெனக் கூறினான். 56
இங்கிது கேட்ட சுயோதனன் -- ‘மிக
இங்கிதம் சொல்லினை, மாமனே!’ -- என்று
சங்கிலிப் பொன்னின் மணியிட்ட -- ஒளித்
தாமம் சகுனிக்குச் சூட்டினான்; -- பின்னர்,
‘எங்கும் புவிமிசை உன்னைப்போல் -- எனக்
கில்லை இனியது சொல்லுவோர்’ -- என்று
பொங்கும் உவகையின் மார்புறக் -- கட்டிப்
பூரித்து விம்மித் தழுவினான். 57
சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்
மற்றதன் பின்னர் இருவரும் -- அரு
மந்திரக் கேள்வி உடையவன் -- பெருங்
கொற்றவர் கோன்திரி தரட்டிரன் -- சபை
கூடி வணங்கி இருந்தனர்; -- அருள்
அற்ற சகுனியும் சொல்லுவான்: -- ‘ஐய,
ஆண்டகை நின்மகன் செய்திகேள்; -- உடல்
வற்றித் துரும்பொத் திருக்கின்றான்; -- உயிர்
வாழ்வை முழுதும் வெறுக்கின்றான்; 58
‘உண்ப சுவையின்றி உண்கின்றான்; -- பின்
உடுப்ப திகழ உடுக்கின்றான்; -- பழ
நண்பர்க ளோடுற வெய்திடான்; -- இள
நாரியரைச் சிந்தை செய்திடான்; -- பிள்ளை
கண்பசலை கொண்டு போயினான்; -- இதன்
காரணம் யாதென்று கேட்பையால்; -- உயர்
திண்பரு மத்தடந் தோளினாய்!’ -- என்று
தீய சகுனியும் செப்பினான். 59
தந்தையும் இவ்வுரை கேட்டதால் -- உளம்
சாலவும் குன்றி வருந்தியே, -- ‘என்றன்
மைந்த! நினக்கு வருத்தமேன்? -- இவன்
வார்த்தையி லேதும் பொருளுண்டோ? -- நினக்கு
எந்த விதத்துங் குறையுண்டோ? -- நினை
யாரும் எதிர்த்திடு வாருண்டோ? -- நின்றன்
சிந்தையில் எண்ணும் பொருளெலாம் -- கணந்
தேடிக் கொடுப்பவர் இல்லையோ? 60
‘இன்னமு தொத்த உணவுகள், -- அந்த
இந்திரன் வெஃ குறும் ஆடைகள், -- பலர்
சொன்ன பணிசெயும் மன்னவர், -- வருந்
துன்பந் தவிர்க்கும் அமைச்சர்கள், -- மிக
நன்னலங் கொண்ட குடிபடை, -- இந்த
நானில மெங்கும் பெரும்புகழ் -- மிஞ்சி
மன்னும்அப் பாண்டவச் சோதரர் -- இவை
வாய்ந்தும் உனக்குத் துயருண்டோ?’ 61
தந்தை வசனஞ் செவியுற்றே -- கொடி
சர்ப்பத்தைக் கொண்டதொர் கோமகன்
வெந்தழல் போலச் சினங்கொண்டே -- தன்னை
மீறிப் பலசொல் விளம்பினான்; -- இவன்
\பு{[மு-ப.]: ‘கொண்ட குடிவகை’}
மந்த மதிகொண்டு சொல்வதை -- அந்த
மாமன் திறித்துரை செய்குவான்: -- ‘ஐய,
சிந்தை வெதுப்பத்தி னாலிவன் -- சொலும்
சீற்ற மொழிகள் பொறுப்பையால். 62
‘தன்னுளத் துள்ள குறையெலாம் -- நின்றன்
சந்நிதி யிற்சென்று சொல்லிட -- முதல்
என்னைப் பணித்தனன்; யானிவன் -- றனை
இங்கு வலியக் கொணர்ந்திட்டேன்; -- பிள்ளை
நன்னய மேசிந்தை செய்கின்றான்; -- எனில்
நன்கு மொழிவ தறிந்திலன்; -- நெஞ்சைத்
தின்னுங் கொடுந்தழல் கொண்டவர் -- சொல்லுஞ்
செய்தி தெளிய உரைப்பரோ? 63
‘நீபெற்ற புத்திரனே யன்றோ? -- மன்னர்
நீதி யியல்பில் அறிகின்றான்; -- ஒரு
தீபத்தில் சென்று கொளுத்திய -- பந்தம்
தேசு குறைய எரியுமோ? -- செல்வத்
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் -- மன்னர்
சாத்திரத் தேமுதற் சூத்திரம்; -- பின்னும்
ஆபத் தரசர்க்கு வேறுண்டோ -- தம்மில்
அன்னியர் செல்வம் மிகுதல்போல்? 64
‘வேள்வியில் அன்றந்தப் பாண்டவர் -- நமை
வேண்டுமட் டுங்குறை செய்தனர்; -- ஒரு
கேள்வி யிலாதுன் மகன்றனைப் -- பலர்
கேலிசெய் தேநகைத் தார், கண்டாய்! -- புவி
ஆள்வினை முன்னவர்க் கின்றியே -- புகழ்
ஆர்ந்திளை யோரது கொள்வதைப் -- பற்றி
வாள்விழி மாதரும் நம்மையே -- கய
மக்களென் றெண்ணி நகைத்திட்டார். 65
‘ஆயிரம் யானை வலிகொண்டான் -- உந்தன்
ஆண்டகை மைந்த னிவன், கண்டாய்! -- இந்த
மாயிரு ஞாலத் துயர்ந்ததாம் -- மதி
வான்குலத் திற்கு முதல்வனாம்; -- ஒளி
ஞாயிறு நிற்பவும் மின்மினி -- தன்னை
நாடித் தொழுதிடுந் தன்மைபோல், -- அவர்
வேயிருந்தூ துமொர் கண்ணனை -- அந்த
வேள்வியில் சால உயர்த்தினார். 66
‘ஐயநின் மைந்தனுக் கில்லைகாண் -- அவர்
அர்க்கியம் முற்படத் தந்ததே; -- இந்த
வையகத் தார்வியப் பெய்தவே, -- புவி
மன்னவர் சேர்ந்த சபைதனில் -- மிக
நொய்யதொர் கண்ணனுக் காற்றினார்; -- மன்னர்
நொந்து மனங்குன்றிப் போயினர்; -- பணி
செய்யவும் கேலிகள் கேட்கவும் -- உன்றன்
சேயினை வைத்தனர் பாண்டவர். 67
‘பாண்டவர் செல்வம் விழைகின்றான்; -- புவிப்
பாரத்தை வேண்டிக் குழைகின்றான்; -- மிக
நீண்ட மகிதலம் முற்றிலும் -- உங்கள்
நேமி செலும்புகழ் கேட்கின்றான்; -- குலம்
பூண்ட பெருமை கெடாதவா -- றெண்ணிப்
பொங்குகின் றான் நலம் வேட்கின்றான்; -- மைந்தன்
ஆண்டகைக் கிஃது தகுமன்றோ? -- இல்லை
யாமெனில் வையம் நகுமன்றோ? 68
‘நித்தங் கடலினிற் கொண்டுபோய் -- நல்ல
நீரை அளவின்றிக் கொட்டுமாம் -- உயர்
வித்தகர் போற்றிடுங் கங்கையா -- றது
வீணிற் பொருளை யழிப்பதோ? -- ஒரு
சத்த மிலாநடுக் காட்டினில் -- புனல்
தங்கிநிற் குங்குளம் ஒன்றுண் டாம்; -- அது
வைத்ததன் நீரைப் பிறர்கொளா -- வகை
வாரடைப் பாசியில் மூடியே. 69
‘சூரிய வெப்பம் படாமலே -- மரம்
சூழ்ந்த மலையடிக் கீழ்ப்பட்டே -- முடை
நீரினை நித்தலும் காக்குமாம்; -- இந்த
நீள்சுனை போல்வர் பலருண்டே? -- எனில்
\பு{[பா-ம்.] “மூழ்கியே”}
ஆரியர் செல்வம் வளர்தற்கே -- நெறி
ஆயிரம் நித்தம் புதியன -- கண்டு
வாரிப் பழம்பொருள் எற்றுவார்; -- இந்த
வண்மையும் நீயறி யாததோ?’ 70
திரிதராட்டிரன் பதில் கூறுதல்
கள்ளச் சகுனியும் இங்ஙனே -- பல
கற்பனை சொல்லித் தன் உள்ளத்தின் -- பொருள
கொள்ளப் பகட்டுதல் கேட்டபின் -- பெருங்
கோபத்தோ டேதிரி தாட்டிரன், -- ‘அட,
பிள்ளையை நாசம் புரியவே -- ஒரு
பேயென நீவந்து தோன்றினாய்; -- பெரு
வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமோ? -- இள
வேந்தரை நாம்வெல்ல லாகுமோ? 71
‘சோதரர் தம்முட் பகையுண்டோ? -- ஒரு
சுற்றத்திலே பெருஞ் செற்றமோ? -- நம்மில்
ஆதரங் கொண்டவ ரல்லரோ? -- முன்னர்
ஆயிரம் சூழ்ச்சி இவன்செய் தும் -- அந்தச்
சீதரன் தண்ணரு ளாலுமோர் -- பெருஞ்
சீலத்தி னாலும் புயவலி -- கொண்டும்
யாதொரு தீங்கும் இலாமலே -- பிழைத்
தெண்ணருங் கீர்த்திபெற் றாரன்றோ? 72
‘பிள்ளைப் பருவந் தொடங்கியே -- இந்தப்
பிச்சன் அவர்க்குப் பெரும்பகை -- செய்து
கொள்ளப் படாத பெரும்பழி -- யன்றி்க்
கொண்டதொர் நன்மை சிறிதுண்டோ? -- நெஞ்சில்
எள்ளத் தகுந்த பகைமையோ? -- அவர்
யார்க்கும் இளைத்த வகையுண்டோ? -- வெறும்
நொள்ளைக் கதைகள் கதைக்கிறாய், -- பழ
நூலின் பொருளைச் சிதைக்கிறாய். 73
‘மன்னவர் நீதி சொலவந்தாய்; -- பகை
மாமலை யைச்சிறு மட்குடம் -- கொள்ளச்
சொன்னதொர் நூல்சற்றுக் காட்டுவாய்! -- விண்ணில்
சூரியன் போல் நிகரின்றியே -- புகழ்
துன்னப் புவிச்சக்க ராதிபம் -- உடற்
சோதரர் தாங்கொண் டிருப்பவும், -- தந்தை
என்னக் கருதி அவரெனைப் -- பணிந்து
என்சொற் கடங்கி நடப்பவும், 74
‘முன்னை இவன்செய்த தீதெலாம் -- அவர்
முற்றும் மறந்தவ ராகியே, -- தன்னைத்
தின்ன வருமொர் தவளையைக் -- கண்டு்
சிங்கஞ் சிரித்தருள் செய்தல்போல் -- துணை
யென்ன இவனை மதிப்பவும் -- அவர்
ஏற்றத்தைக் கண்டும் அஞ்சாமலே -- (நின்றன்
சின்ன மதியினை என்சொல்வேன்!) பகை
செய்திட எண்ணிப் பிதற்றினாய். 75
‘ஒப்பில் வலிமை யுடையதாந் -- துணை
யோடு பகைத்தல் உறுதியோ? -- நம்மைத்
தப்பிழைத் தாரந்த வேள்வியில் -- என்று
சாலம் எவரிடஞ் செய்கிறாய்? -- மயல்
அப்பி விழிதடு மாறியே -- இவன்
அங்கு மிங்கும்விழுந் தாடல்கண்டு -- அந்தத்
துப்பிதழ் மைத்துனி தான்சிரித் -- திடில்
தோஷ மிதில்மிக வந்ததோ? 76
‘தவறி விழுபவர் தம்மையே -- பெற்ற
தாயுஞ் சிரித்தல் மரபன் றோ? -- எனில்
இவனைத் துணைவர் சிரித்ததோர் -- செயல்
எண்ணரும் பாதக மாகுமோ? -- மனக்
கவலை வளர்த்திடல் வேண்டுவோர் -- ஒரு
காரணங் காணுதல் கஷ்டமோ? -- வெறும்
அவல மொழிகள் அளப்பதேன்? -- தொழில்
ஆயிர முண்டவை செய்குவீர். 77
‘சின்னஞ் சிறிய வயதிலே -- இவன்
தீமை அவர்க்குத் தொடங்கினான் -- அவர்
என்னரும் புத்திரன் என்றெண்ணித் -- தங்கள்
யாகத் திவனைத் தலைக்கொண்டு -- பசும்
பொன்னை நிறைத்ததொர் பையினை -- ‘மனம்
போலச் செலவிடு வாய் என்றே -- தந்து
மன்னவர் காண இவனுக்கே -- தம்முள்
மாண்பு கொடுத்தன ரல்லரோ? 78
‘கண்ணனுக் கேமுதல் அர்க்கியம் -- அவர்
காட்டினர் என்று பழித்தனை! -- எனில்
நண்ணும் விருந்தினர்க் கன்றியே -- நம்முள்
நாமுப சாரங்கள் செய்வதோ -- உறவு
அண்ணனும் தம்பியும் ஆதலால் -- அவர்
அன்னிய மாநமைக் கொண்டிலர்; -- முகில்
வண்ணன் அதிதியர் தம்முளே -- முதல்
மாண்புடை யானெனக் கொண்டனர்; 79
‘கண்ணனுக் கேயது சாலுமென்று -- உயர்
கங்கை மகன்சொலச் செய்தனர்; -- இதைப்
பண்ணரும் பாவமென் றெண்ணினால் -- அதன்
பார மவர்தமைச் சாருமோ? -- பின்னும்
கண்ணனை எதெனக் கொண்டனை? -- “அவன்
காலிற் சிறிதுக ளொப்பவர் -- நிலத்
தெண்ணரும் மன்னவர் தம்முளே -- பிறர்
யாரு மிலை”யெனல் காணுவாய். 80
‘“ஆதிப் பரம்பொருள் நாரணன், -- தெளி
வாகிய பாற்கடல் மீதி லே -- நல்ல
சோதிப் பணாமுடி யாயிரம் -- கொண்ட
தொல்லறி வென்னுமொர் பாம்பின் மேல் -- ஒரு
போதத் துயில்கொளும் நாயகன், -- கலை
போந்து புவிமிசைத் தோன்றினான் -- இந்தச்
சீதக் குவளை விழியினான்” -- என்று
செப்புவர் உண்மை தெளிந்தவர். 81
‘நானெனும் ஆணவந் தள்ளலும் -- இந்த
ஞாலத்தைத் தானெனக் கொள்ளலும் -- பர
மோன நிலையின் நடத்தலும் -- ஒரு
மூவகைக் காலங் கடத்தலும் -- நடு
வான கருமங்கள் செய்தலும் -- உயிர்
யாவிற்கும் நல்லருள் பெய்தலும் -- பிறர்
ஊனைச் சிதைத்திடும் போதினும் -- தனது
உள்ளம் அருளின் நெகுதலும், 82
‘ஆயிரங் கால முயற்சியால் -- பெற
லாவர் இப் பேறுகள் ஞானியர்; -- இவை
தாயின் வயிற்றில் பிறந்தன்றே -- தமைச்
சார்ந்து விளங்கப் பெறுவரேல், -- இந்த
மாயிரு ஞாலம் அவர்தமைத் -- தெய்வ
மாண்புடை யாரென்று போற்றுங்காண்! -- ஒரு
பேயினை வேதம் உணர்த்தல்போல் -- கண்ணன்
பெற்றி உனக்கெவர் பேசுவார்?’ 83
துரியோதனன் சினங் கொள்ளுதல்
வேறு
வெற்றி வேற்கைப் பரதர்தங் கோமான்,
மேன்மை கொண்ட விழியகத் துள்ளோன்,
பெற்றி மிக்க விதுர னறிவைப்
பின்னும் மற்றொரு கண்ணெனக் கொண்டோன்,
முற்று ணர்திரி தராட்டிரன் என்போன்
மூடப் பிள்ளைக்கு மாமன்சொல் வார்த்தை
எற்றி நல்ல வழக்குரை செய்தே
ஏன்ற வாறு நயங்கள் புகட்ட, 84
கொல்லும் நோய்க்கு மருந்துசெய் போழ்தில்
கூடும் வெம்மைய தாய்ப்பிணக் குற்றே
தொல்லுணர்வின் மருத்துவன் தன்னைச்
சோர்வுறுத்துதல் போல், ஒரு தந்தை
பு{[பாட பேதம்]: “னகுதலும்”}
சொல்லும் வார்த்தையி லேதெரு ளாதான்,
தோமி ழைப்பதி லோர்மதி யுள்ளான்,
கல்லும் ஒப்பிடத் தந்தை விளக்கும்
கட்டு ரைக்குக் கடுஞ்சின முற்றான். 85
துரியோதனன் தீ மொழி
வேறு
பாம்பைக் கொடியென் றுயர்த்தவன் -- அந்தப்
பாம்பெனச் சீறி மொழிகுவான்: -- ‘அட!
தாம்பெற்ற மைந்தர்க்குத் தீதுசெய் -- திடும்
தந்தையர் பார்மிசை உண்டுகொல்? -- கெட்ட
வேம்பு நிகரிவ னுக்குநான் -- சுவை
மிக்க சருக்கரை பாண்டவர்; -- அவர்
தீம்பு செய்தாலும் புகழ்கின்றான், -- திருத்
தேடினும் என்னை இகழ்கின்றான். 86
“மன்னர்க்கு நீதி யொருவகை -- பிற
மாந்தர்க்கு நீதிமற் றோர்வகை” -- என்று
சொன்ன வியாழ முனிவனை -- இவன்
சுத்த மடையனென் றெண்ணியே, -- மற்றும்
என்னென்ன வோகதை சொல்கிறான், -- உற
வென்றும் நட்பென்றும் கதைக்கிறான், -- அவர்
சின்ன முறச்செய வேதிறங் -- கெட்ட
செத்தையென் றென்னை நினைக்கிறான்; 87
‘இந்திர போகங்க ளென்கிறான், -- உண
வின்பமு மாதரி னின்பமும். -- இவன
மந்திரமும் படை மாட்சியும் -- கொண்டு
வாழ்வதை விட்டிங்கு வீணி லே -- பிறர்
செந்திருவைக் கண்டு வெம்பியே -- உளம்
தேம்புதல் பேதைமை என்கிறான்; -- மன்னர்
தந்திரந் தேர்ந்தவர் தம்மிலே -- எங்கள்
தந்தையை ஒப்பவர் இல்லை, காண்! 88
‘மாதர்தம் இன்பம் எனக்கென்றான், -- புவி
மண்டலத் தாட்சி அவர்க்கென்றான்; -- நல்ல
சாதமும் நெய்யும் எனக்கென்றான், எங்கும்
சாற்றிடுங் கீர்த்தி அவர்க்கென்றான்; -- அட!
ஆதர விங்ஙனம் பிள்ளைமேல் -- வைக்கும்
அப்பன் உலகினில் வேறுண்டோ? -- உயிர்ச்
சோதரர் பாண்டவர், தந்தைநீ -- குறை
சொல்ல இனியிட மேதையா! 89
‘சொல்லின் நயங்கள் அறிந்திலேன், -- உனைச்
சொல்லினில் வெல்ல விரும்பிலேன்; -- கருங்
கல்லிடை நாருரிப் பாருண்டோ? -- நினைக்
காரணங் காட்டுத லாகுமோ? -- என்னைக்
கொல்லினும் வேறெது செய்யினும், -- நெஞ்சில்
கொண்ட கருத்தை விடுகிலேன்; -- அந்தப்
புல்லிய பாண்டவர் மேம்படக் -- கண்டு
போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன்; 90
‘வாது நின்னோடு தொடுக்கிலேன்; -- ஒரு
வார்த்தை மட்டுஞ்சொலக் கேட்பையால்: -- ஒரு
தீது நமக்கு வாராமலே -- வெற்றி
சேர்வதற் கோர்வழி யுண்டு, காண்! -- களிச்
சூதுக் கவரை யழைத்தெலாம் -- அதில்
தோற்றிடு மாறு புரியலாம்; -- இதற்
கேதுந் தடைகள்சொல் லாமலே -- என
தெண்ணத்தை நீகொளல் வேண்டுமால்.’ 91
திரிதராட்டிரன் பதில்
வேறு
திரிதராட் டிரன்செவியில் -- இந்தத்
தீமொழி புகுதலுந் திகைத்து விட்டான்;
‘பெரிதாத் துயர்கொணர்ந் தாய்; -- கொடும்
பேயெனப் பிள்ளைகள் பெற்றுவிட்டேன்;
அரிதாக் குதல்போலே -- அமர்
ஆங்கவ ரொடுபொரல் அவலடம் என்றேன்;
நரிதாக் குதல்போலாம் -- இந்த
நாணமில் செயலினை நாடுவனோ? 92
‘ஆரியர் செய்வாரோ? -- இந்த
ஆண்மை யிலாச்செயல் எண்ணுவரோ?
பாரினில் பிறருடைமை -- வெஃகும்
பதரினைப் போலொரு பதருண் டோ?
பேரியற் செல்வங்களும் -- இசைப்
பெருமையும் எய்திட விரும்புதியேல்,
காரியம் இதுவாமோ? -- என்றன்
காளையன் றோ? இது கருதலடா! 93
‘வீரனுக் கேயிசைவார் -- திரு
மேதினி எனுமிரு மனைவியர்தாம்;
ஆரமர் தமரல்லார் -- மி்சை
ஆற்றிநல் வெற்றியில் ஓங்குதியேல்,
பாரத நாட்டினிலே -- அந்தப்
பாண்டவ ரெனப்புகழ் படைத்திடுவாய்;
சோரர்தம் மகனோநீ? -- உயர்
சோமன்ற னொருகுலத் தோன்றலன்றோ? 94
‘தம்மொரு கருமத்திலே -- நித்தம்
தளர்வறு முயற்சி, மற்றோர்பொருளை
இம்மியுங் கருதாமை, -- சார்ந்
திருப்பவர் தமைநன்கு காத்திடுதல் --
இம்மையில் இவற்றினையே -- செல்வத்
திலக்கணம் என்றனர் மூதறிஞர்.
அம்ம, இங்கிதனையெலாம் -- நீ
அறிந்திலை யோ? பிழை யாற்றல் நன்றோ? 95
‘நின்னுடைத் தோளனையார் -- இள
நிருபரைச் சிதைத்திட நினைப்பாயோ?
என்னுடை யுயிரன்றோ? -- எனை
எண்ணி இக் கொள்கையை நீக்குதியால்!
பொன்னுடை மார்பகத்தார் -- இளம்
பொற்கொடி மாதரைக் களிப்பதினும்
இன்னும்பல் இன்பத்தினும் -- உளம்
இசையவிட் டேஇதை மறந்திட்டா.’ 96
துரியோதனன் பதில்
வேறு
தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே,
தாரி சைந்த நெடுவரைத் தோளான்:
‘எந்தை’ நின்னொடு வாதிடல் வேண்டேன்
என்று பன்முறை கூறியும் கேளாய்;
வந்த காரியங் கேட்டி; மற்றாங்குன்
வார்த்தை யின்றிஅப் பாண்டவர் வாரார்;
இந்த வார்த்தை உரைத்து விடாயேல்,
இங்கு நின்முன் என் ஆவி இறுப்பேன். 97
‘மதித மக்கென் றிலாதவர் கோடி
வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும்
பதியுஞ் சாத்திரத் துள்ளுறை காணார்,
பானைத் தேனில் அகப்பையைப் போல்வார்;
துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச்
சுருதி யாமெனக் கொண்டனை நீதான்;
அதிக மோகம் அவனுளங் கொண்டான்
ஐவர் மீதில்இங் கெம்மை வெறுப்பான். 98
‘தலைவன் அங்கு பிறர்கையில் பொம்மை;
சார்ந்து நிற்பவர்க் குய்ந்நெறி யுண்டோ?
உலைவ லால், திரி தாட்டிர வர்க்கத்
துள்ள வர்க்கு நலமென்ப தில்லை;
நிலையி லாதன செல்வமும் மாண்பும்
நித்தம் தேடி வருந்த லிலாமே
“விலையி லாநிதி கொண்டனம்” என்றே
மெய்கு ழைந்து துயில்பவர் மூடர். 99
‘பழைய வானிதி போதுமென் றெண்ணிப்
பாங்கு காத்திடு மன்னவர் வாழ்வை
விழையும் அன்னியர் ஓர்கணத் துற்றே
வென்ற ழிக்கும் விதிஅறி யாயோ?
குழைத லென்பது மன்னவர்க் கில்லை;
கூடக் கூடப்பின் கூட்டுதல் வேண்டும்;
பிழைஒன் றேஅர சர்க்குண்டு, கண்டாய்:
பிறரைத் தாழ்த்து வதிற்சலிப் பெய்தல். 100
வேறு
‘வெல்வதெங் குலத்தொழிலாம்; -- எந்த
விதத்தினில் இசையினும் தவறிலைகாண்!
நல்வழி தீயவழி -- என
நாமதிற் சோதனை செயத்தகு மோ?
செல்வழி யாவினுமே -- பகை
தீர்த்திடல் சாலுமென் றனர்பெரியோர்;
கொல்வது தான்படையோ? -- பகை
குமைப்பன யாவும்நற் படையலவோ? 101
வேறு
‘சுற்றத் தாரிவர் என்றனை ஐயா!
தோற்றத் தாலும் பிறவியி னாலும்,
பற்றலா ரென்றும் நண்பர்க ளென்றும்
பார்ப்ப தில்லை உலகினில் யாரும்;
மற்றெத் தாலும் பகையுறல் இல்லை;
வடிவினில் இல்லை, அளவினில் இல்லை;
உற்ற துன்பத்தி னாற்பகை உண்டாம்,
ஓர்தொழில் பயில் வார்தமக் குள்ளே. 102
பூமித் தெய்வம் விழுங்கிடுங் கண்டாய்
புரவ லர்பகை காய்கிலர் தம்மை.
நாமிப் பூதலத் தேகுறை வெய்த
நாளும் பாண்டவர் ஏறுகின் றாரால்.
நேமி மன்னர் பகைசிறி தென்றே
நினைவ யர்ந்திருப் பாரெனில், நோய்போல்,
சாமி, அந்தப் பகைமிக லுற்றே
சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய். 103
‘போர்செய் வோமெனில் நீதடுக்கின்றாய்;
புவியினோரும் பழிபல சொல்வார்;
தார்செய் தோளினம் பாண்டவர் தம்மைச்
சமரில் வெல்வதும் ஆங்கெளி தன்றாம்;
யார்செய் புண்ணியத் தோநமக் குற்றான்
எங்க ளாருயிர் போன்றஇம் மாமன்;
நேர்செய் சூதினில் வென்று தருவான்;
நீதித் தர்மனும் சூதில்அன் புள்ளோன். 104
‘பகைவர் வாழ்வினில் இன்புறு வாயோ?
பாரதர்க்கு முடிமணி யன்னாய்!
புகையும் என்றன் உளத்தினை வீறில்
புன்சொற் கூறி அவித்திட லாமோ?
நகைசெய் தார்தமை நாளை நகைப்போம்;
நமரிப் பாண்டவர் என்னில் இஃதாலே
மிகையுறுந் துன்ப மேது? நம் மோடு
வேறு றாதெமைச் சார்ந்துநன் குய்வார். 105
‘ஐய, சூதிற் கவரை அழைத்தால்,
ஆடி உய்குதும்; அஃ தியற் றாயேல்,
பொய்யன் றென்னுரை; என்னியல் போர்வாய்;
பொய்ம்மை னிறென்றுஞ் சொல்லிய துண்டோ?
நைய நின்முனர் என்சிரங் கொய்தே
நானிங் காவி இறுத்திடு வேனால்;
செய்ய லாவது செய்குதி’என்றான்;
திரித ராட்டிரன் நெஞ்ச முடைந்தான். 106
திரிதராட்டிரன் சம்மதித்தல்
வேறு
‘விதிசெயும் விளைவினுக்கே -- இங்கு
வேறுசெய்வார் புவிமீ துளரோ?
மதிசெறி விதுரன் அன்றே -- இது
வருந்திறன் அறிந்துமுன் எனக்குரைத்தான்.
“அதிசயக் கொடுங் கோலம் -- விளைந்
தரசர்தங் குலத்தினை அழிக்கும்”என்றான்;
சதிசெயத் தொடங்கி விட்டாய்; -- “நின்றன்
சதியினிற் றானது விளையும்”என்றான். 107
-
‘விதி! விதி! விதி! மகனே -- இனி்
வேறெது சொல்லுவன் அடமகனே!
கதியுறுங் கால னன்றோ -- இந்தக்
கய மக னெனநினைச் சார்ந்துவிட்டான்?
கொதியுறு முளம் வேண்டா; -- நின்றன்
கொள்கையின் படிஅவர் தமைஅழைப்பேன்;
வதியுறு மனைசெல்வாய்,’ -- என்று
வழியுங்கண் ணீரொடு விடைகொடுத்தான். 108
சபா நிர்மாணம்
வேறு
மஞ்சனும் மாமனும் போயின பின்னர்,
மன்னன் வினைஞர் பலரை அழைத்தே,
‘பஞ்சவர் வேள்வியிற் கண்டது போலப்
பாங்கி னுயர்ந்ததொர் மண்டபஞ் செய்வீர்!
மிஞ்சு பொருளதற் காற்றுவன்’ என்றான்;
மிக்க உவகையொ டாங்கவர் சென்றே
கஞ்ச மலரிற் கடவுள் வியப்பக்
கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே. 109
வேறு
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும்,
வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்,
நல்ல தொழிலுணர்ந் தார்செய லென்றே
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக்
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு
காமர் மணிகள் சிலசில சேர்த்துச்
சொல்லை யிசைத்துப் பிறர்செயு மாறே
சுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார். 110
விதுரனைத் தூதுவிடல்
தம்பி விதுரனை மன்னன் அழைத்தான்;
‘தக்க பரிசுகள் கொண்டினி தேகி,
எம்பியின் மக்கள் இருந்தர சாளும்
இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால்,
“கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்
கூடிஇங் கெய்தி விருந்து களிக்க
நம்பி அழைத்தனன், கௌரவர் கோமான்
நல்லதொர் நுந்தை” எனஉரை செய்வாய். 111
‘நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும்
நன்மணி மண்டபம் செய்ததும் சொல்வாய்;
“நீடு புகழ்பெரு வேள்வியில் அந்நாள்
நேயமொ டேகித் திரும்பிய பின்னர்
பீடுறு மக்களை ஓர்முறை இங்கே
பேணி அழைத்து விருந்துக ளாற்றக்
கூடும் வயதிற் கிழவன் விரும்பிக்
கூறினன் இஃதெ”னச் சொல்லுவை கண்டாய். 112
‘பேச்சி னிடையிற் “சகுனிசொற் கேட்டே
பேயெனும் பிள்ளை கருத்தினிற் கொண்ட
தீச்செயல் இஃதெ”ன் றதையுங் குறிப்பாற்
செப்பிடு வாய்’ என மன்னவன் கூறப்
‘போச்சுது! போச்சுது பாரத நாடு!
போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்!
ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம்!
ஐய, இதனைத் தடுத்தல் அரிதோ?’ 113
என்று விதுரன் பெருந்துயர் கொண்டே
ஏங்கிப் பலசொல் இயம்பிய பின்னர்,
‘சென்று வருகுதி, தம்பி, இனிமேல்
சிந்தனை ஏதும் இதிற்செய மாட்டேன்.
வென்று படுத்தனன் வெவ்விதி என்னை;
மேலை விளைவுகள் நீஅறி யாயோ?
அன்று விதித்ததை இன்று தடுத்தல்
யார்க்கெளி’தென்றுமெய் சோர்ந்து விழுந்தான். 114
விதுரன் தூது செல்லுதல்
வேறு
அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான்;
அடவிமலை ஆறெல்லாம் கடந்துபோகித்
திண்ணமுறு தடந்தோளும் உளமும் கொண்டு
திருமலியப் பாண்டவர்தாம் அரசு செய்யும்
வண்ணமுயர் மணிநகரின் மருங்கு செல்வான்
வழியிடையே நாட்டினுறு வளங்கள் நோக்கி
எண்ணமுற லாகித்தன் இதயத்துள்ளே
இனையபல மொழிகூறி இரங்கு வானால். 115
‘நீல முடிதரித்த பலமலைசேர் நாடு,
நீரமுதம் எனப்பாய்ந்து நிரம்பும் நாடு,
கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழுங்
குளிர்காவுஞ் சோலைகளுங் குலவு நாடு,
ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல
நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்கப்
பாலடையும் நறுநெய்யும் தேனு முண்டு
பண்ணவர் போல் மக்களெலாம் பயிலும்நாடு, 116
‘அன்னங்கள் பொற்கமலத் தடத்தின் ஊர
அளிமுரலக் கிளிமழலை அரற்றக் கேட்போர்
கன்னங்கள் அமுதூறக் குயில்கள் பாடும்
காவினத்து நறுமலரின் கமழைத் தென்றல்
பொன்னங்க மணிமடவார் மாட மீது
புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச,
வன்னங்கொள் வரைத்தோளார் மகிழ, மாதர்
மையல்விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு, 117
‘பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு,
பெண்க ளெல்லாம் அரம்பையர்போல் ஒளிரும்நாடு,
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி
வேள்விஎனும் இவையெல்லாம் விளங்கு நாடு,
சோரமுதற் புன்மையெதுந் தோன்றா நாடு,
தொல்லுலகின் முடிமணிபோல் தோன்று நாடு,
பாரதர்தந் நாட்டிலே நாச மெய்தப்
பாவியேன் துணைபுரியும் பான்மை என்னே!’ 118
விதுரனை வரவேற்றல்
வேறு
விதுரன் வருஞ்செய்தி தாஞ்செவி யுற்றே,
வீறுடை ஐவர் உளமகிழ் பூத்துச்
சதுரங்க சேனை யுடன்பல பரிசும்
தாளமும் மேளமும் தாங்கொண்டு சென்றே
எதிர்கொண் டழைத்து, மணிமுடி தாழ்த்தி,
ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி,
மதுர மொழியிற் குசலங்கள் பேசி,
மன்ன னொடுந்திரு மாளிகை சேர்ந்தார். 119
குந்தி எனும்பெயர்த் தெய்வதந் தன்னைக்
கோமகன் கண்டு வணங்கிய பின்னர்,
வெந்திறல் கொண்ட துருபதன் செல்வம்
வெள்கித் தலைகுனிந் தாங்குவந் தெய்தி,
அந்தி மயங்க விசும்புடைத் தோன்றும்
ஆசைக் கதிர்மதி யன்ன முகத்தை
மந்திரந் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண்
வைத்து வணங்கி வனப்புற நின்றாள். 120
தங்கப் பதுமை எனவந்து நின்ற
தையலுக் கையன் நல் லாசிகள் கூறி
அங்கங் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர்,
ஆங்குவந் துற்ற உறவினர் நண்பர்
சிங்க மெனத்திகழ் வீரர் புலவர்
சேவகர் யாரொடுஞ் செய்திகள் பேசிப்
பொங்கு திருவின் நகர்வலம் வந்து
போழ்து கழிந்திர வாகிய பின்னர், 121
விதுரனை வரவேற்றல்
வேறு
ஐவர் தமையுந் தனிக்கொண்டு போகி,
ஆங்கொரு செம்பொன் னரங்கில் இருந்தே: --
‘மைவரைத் தோளன், பெரும்புக ழாளன்,
மாமகள் பூமகட் கோர்மண வாளன்,
மெய்வரு கேள்வி மிகுந்த புலவன்,
வேந்தர் பிரான், திரி தாட்டிரக் கோமான்
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மைச்
சீரொடு நித்தலும் வாழ்கென வாழ்த்தி, 122
‘உங்களுக் கென்னிடம் சொல்லி விடுத்தான்
ஓர்செய்தி; மற்றஃ துரைத்திடக் கேளீர்!
மங்களம் வாய்ந்தநல் இத்தி புரத்தே
வையக மீதில் இணையற்ற தாகத்
தங்கும் எழிற்பெரு மண்டபம் என்று
தம்பியர் சூழ்ந்து சமைத்தனர், கண்டீர்!
அங்கதன் விந்தை அழகினைக் காண
அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன். 123
பு{[பாட பேதம்]: ‘சிறந்திட உம்மைச்’}
‘வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து
மீண்டு பலதின மாயின வேனும்,
வாள்வைக்கும் நல்விழி மங்கையோ டேநீர்
வந்தெங்க ளூரில் மறுவிருந் தாட
நாள் வைக்கும் சோதிட ராலிது மட்டும்
நாயகன் நும்மை அழைத்திட வில்லை;
கேள்விக் கொருமி திலாதிப் னொத்தோன்
கேடற்ற மாதம் இதுவெனக் கண்டே 124
தருமபுத்திரன் பதில்
என்று விதுரன் இயம்பத் தருமன்
எண்ணங் கலங்கிச் சிலசொல் உரைப்பான்;
‘மன்று புனைந்தது கேட்டுமிச் சூதின்
வார்த்தையைக் கேட்டுமிங் கென்றன் மனத்தே
சென்று வருத்தம் உளைகின்ற தையா;
சிந்தையில் ஐயம் விளைகின்ற தையா;
நன்று நமக்கு நினைப்பவ னல்லன்;
நம்ப லரிது சுயோதனன் றன்னை. 126
‘கொல்லக் கருதிச் சுயோதனன் முன்பு
சூத்திர மான சதிபல செய்தான்;
சொல்லப் படாதவ னாலெமக் கான
துன்ப மனைத்தையும் நீஅறி யாயோ?
வெல்லக் கடவர் எவரென்ற போதும்
வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ?
தொல்லைப் படுமென் மனந்தெளி வெய்தச்
சொல்லுதி நீஒரு சூழ்ச்சிஇங்’ கென்றான். 127
விதுரன் பதில்
வேறு
விதுரனும் சொல்லுகிறான்: -- ‘இதை
விடமெனச் சான்றவர் வெகுளுவர்காண்;
சதுரெனக் கொள்ளுவரோ? -- இதன்
தாழ்மை யெலாமவர்க் குரைத்துவிட்டேன்;
இதுமிகத் தீதென்றே -- அண்ணன்
எத்தனை சொல்லியும் இளவரசன்,
மதுமிகுத் துண்டவன்போல் -- ஒரு
வார்த்தையையே பற்றிப் பிதற்றுகிறான். 128
‘கல்லெனில் இணங்கிவிடும், -- அண்ணன்
காட்டிய நீதிகள் கணக்கிலவாம்;
புல்லனிங் கவற்றையெலாம் -- உளம்
புகுத வொட்டாதுதன் மடமையினால்
சல்லியச் சூதினிலே -- மனம்
தளர்வற நின்றிடுந் தகைமைசொன்னேன்;
சொல்லிய குறிப்பறிந்தே -- நலந்
தோன்றிய வழியினைத் தொடர்க’வென்றான். 129
தருமபுத்திரன் தீர்மானம்
தருமனும் இவ்வளவில் -- உளத்
தளர்ச்சியை நீக்கியொர் உறுதிகொண்டே
பருமங் கொள் குரலினனாய் -- மொழி
பதைத்திட லின்றிஇங் கிவைஉரைப்பான்:
‘மருமங்கள் எவை செயினும், -- மதி
மருண்டவர் விருந்தறஞ் சிதைத்திடினும்,
கருமமொன் றேஉளதாம் -- நங்கள்
கடன் அதை நெறிப்படி புரிந்திடுவோம். 130
‘தந்தையும் வரப்பணிந்தான்; -- சிறு
தந்தையும் தூதுவந் ததைஉரைத்தான்;
சிந்தையொன்றினிஇல்லை’ -- எது
சேரினும் நலமெனத் தெளிந்துவிட்டேன்.
முந்தையச் சிலைராமன் -- செய்த
முடிவினை நம்மவர் மறப்பதுவோ?
நொந்தது செயமாட்டோம்; -- பழ
நூலினுக் கிணங்கிய நெறிசெல்வோம். 131
‘ஐம்பெருங் குரவோர்தாம் -- தரும்
ஆணையைக் கடப்பதும் அறநெறியோ?
வெம்பெரு மதயானை -- பரி
வியன்தேர் ஆளுட னிருதினத்தில்
பைம்பொழில் அத்திநகர் -- செலும்
பயணத்திற் குரியன புரிந்திடுவாய்,
மொய்ம்புடை விறல்வீமா!’ -- என
மொழிந்தனன் அறநெறி முழுதுணர்ந்தான். 132
வீமனுடைய வீரப்பேச்சு
வீமனும் திகைத்து விட்டான்; -- இள
விசயனை நோக்கிஇங் கிதுசொலுவான்:
‘மாமனும் மருமகனுமா -- நமை
யழித்திடக் கருதிஇவ் வழிதொடர்ந்தார்.
தாமதஞ் செய்வோமோ? -- செலத்
தகுந்தகு’ மெனஇடி யுறநகைத்தான்;
‘கோமகன் உரைப்படியே -- படை
கொண்டுசெல் வோமொரு தடையிலைகாண்! 133
‘நெடுநாட் பகைகண்டாய்; -- இந்த
நினைவினில் யான்கழித் தனபலநாள்;
கெடுநாள் வருமளவும் -- ஒரு
கிருமியை அழிப்பவர் உலகிலுண்டோ?
\பு{[மு-ப.]: ‘மழித்திட’}
படுநாட் குறிஅன்றோ -- இந்தப்
பாதகம் நினைப்பவர் நினைத்ததுதான்?
விடுநாண் கோத்திடடா! -- தம்பி,
வில்லினுக் கிரைமிக விளையுதடா. 134
‘போரிடச் செல்வமடா! மகன்
புலைமையும் தந்தையின் புலமைகளும்
யாரிடம் அவிழ்க்கின்றார்? -- இதை
எத்தனை நாள்வரை பொறுத்திருப்போம்?
பாரிடத் திவரொடுநாம் -- எனப்
பகுதியிவ் விரண்டிற்கும் காலமொன்றில்
நேரிட வாழ்வுண்டோ? -- இரு
நெருப்பினுக் கிடையினில் ஒருவிறகோ?’ 135
தருமபுத்திரன் முடிவுரை
வேறு
வீமன் உரைத்தது போலவே -- உளம்
வெம்பி நெடுவில் விசயனும் -- அங்கு
காமனும் சாமனும் ஒப்பவே -- நின்ற
காளை இளைஞர் இருவரும் -- செய்ய
தாமரைக் கண்ணன் யுதிட்டிரன் -- சொல்லைத்
தட்டிப் பணிவொடு பேசினார்; -- தவ
நேமத் தவறலும் உண்டுகாண், -- நரர்
நெஞ்சம் கொதித்திடு போழ்திலே. 136
அன்பும் பணிவும் உருக்கொண்டோர் -- அணு
வாயினும் தன்சொல் வழாதவர் -- அங்கு
வன்பு மொழிசொலக் கேட்டனன்; -- அற
மன்னவன் புன்னகை பூத்தனன்: -- ‘அட!
முன்பு சுயோதனன் செய்ததும் -- இன்று
மூண்டிருக் குங்கொடுங் கோலமும் -- இதன்
பின்பு விளைவதும் தேர்ந்துளேன்; என்னைப்
பித்தனென் றெண்ணி உரைத்திட்டீர்! 137
‘கைப்பிடி கொண்டு சுழற்றுவோன் -- தன்
கணக்கிற் சுழன்றிடும் சக்கரம்; -- அது
தப்பி மிகையுங் குறையுமாச் -- சுற்றும்
தன்மை அதற்குள தாகுமோ? -- இதை
ஒப்பிட லாகும் புவியின்மேல் -- என்றும்
உள்ள உயிர்களின் வாழ்விற்கே, -- ஒரு
செப்பிடு வித்தையைப் போலவே -- புவிச்
செய்திகள் தோன்றிடு மாயினும், 138
‘இங்கிவை யாவுந் தவறிலா -- விதி
ஏற்று நடக்குஞ் செயல்களாம்; -- முடி
வெங்கணு மின்றி எவற்றினும் -- என்றும்
ஏறி இடையின்றிச் செல்வதாம் -- ஒரு
சங்கிலி யொக்கும் விதிகண்டீர்! -- வெறுஞ்
சாத்திர மன்றிது சத்தியம்; -- நின்று
மங்கியொர் நாளில் அழிவதாம் -- நங்கள்
வாழ்க்கை இதனைக் கடந்ததோ? 139
‘தோன்றி அழிவது வாழ்க்கைதான்; -- இங்குத்
துன்பத்தொ டின்பம் வெறுமையாம் -- இவை
மூன்றில் எதுவரு மாயினும், -- களி
மூழ்கி நடத்தல் முறைகண்டீர்! -- நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தழைப்பரோ, -- துன்பம்
உற்றிடு மென்பதொர் அச்சத்தால்? -- விதி
போன்று நடக்கும் லகென் றே -- கடன்
போற்றி யொழுகுவர் சான்றவர். 140
‘சேற்றிம் உழலும் புழுவிற்கும், -- புவிச்
செல்வ முடைய அரசர்க்கும், -- பிச்சை
ஏற்றுடல் காத்திடும் ஏழைக்கும், -- உயிரை
எத்தனை உண்டவை யாவிற்கும், -- நித்தம்
ஆற்றுதற் குள்ள கடமைதான் -- முன் வந்து
தவ்வக் கணந்தொறும் நிற்குமால்; -- அது
தோற்றும் பொழுதிற் புரிகுவார் -- பல
சூழ்ந்து கடமை அழிப்பரோ? 141
‘யாவருக் கும்பொது வாயினும் -- சிறப்
பென்பர் அரசர் குலத்திற்கே -- உயர்
தேவரை யொப்பமுன்னோர்தமைத் -- தங்கள்
சிந்தையிற் கொண்டு பணிகுதல்; -- தந்தை
ஏவலை மைந்தர் புரிதற்கே -- வில்
இராமன் கதையையும் காட்டினேன்; -- புவிக்
காவலர் தம்மிற் சிறந்தநீர் -- இன்று
கர்மம் பிழைத்திடு வீர்கொலோ?’ 142
நால்வரும் சம்மதித்தல்
வேறு
என்றினைய நீதிபல தரும ராசன்
எடுத்துரைப்ப, இளைஞர்களுந் தங்கை கூப்பிக்
‘குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கைப் போலக்
குவலயத்திற் கறங்காட்டத் தோன்றி னாய் நீ!
வென்றிபெறுந் திருவடியாய், நினது சொல்லை
மீறிஒரு செயலுண்டோ? ஆண்டான் ஆணை
யன்றிஅடி யார்தமக்குக் கடன்வே றுண்டோ?
ஐயனே, பாண்டவர்தம் ஆவி நீயே! 143
‘துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின்வாய்ச்
சொல்லைமறுத் துரைத்தோமோ? நின்பா லுள்ள
அன்புமிகை எலன்றோ திருவுளத்தின்
ஆக்கினையை எதிர்த்துரைத்தோம் அறிவில் லாமல்
மன்பதையின் உளச்செயல்கள் தெளியக் காணும்
மன்னவனே! மற்றதுநீ அறியா தொன்றோ?
வன்புமொழி பொறுத்தருள்வாய், வாழி! நின்சொல்
வழிச்செல்வோம்,’ எனக்கூறி வணங்கிச் சென்றார். 144
பாண்டவர் பயணமாதல்
ஆங்கதன்பின் மூன்றாம்நாள் இளைஞ ரோடும்
அணியிழையப் பாஞ்சாலர் விளக்கி னோடும்
பாங்கினுறு பரிசனங்கள் பலவி னோடும்
படையினொடும் இசையினொடும் பயண மாகித்
தீங்கதனைக் கருதாத தருமக் கோமான்
திருநகர்விட் டகல்கின்றான் தீயோர் ஊர்க்கே!
நீங்கிஅகன் றிடலாகுந் தன்மை உண்டோ,
நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே? 145
நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
நழுவிவிழும், சிற்றெறும்பால் யானை சாகும்,
வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்,
வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்,
கிரிவகுத்த ஓடையிலே மிதந்து செல்லும்,
கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்கு மேற்காம்,
புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்
போற்றிடுவர், விதிவகுத்த போழ்தி னன்றே. 146
மாலை வர்ணனை
மாலைப்போ தாதலுமே, மன்னன் சேனை
வழியிடைஓர் பூம்பொழிலின் அமர்ந்த காலை,
சேலைப்போல் விழியாளைப் பார்த்தன் கொண்டு
சென்றாங்கோர் தனியிடத்தே பசும்புல் மேட்டில்
மேலைப்போம் பரிதியினைத் தொழுது கண்டான்;
மெல்லியலும் அவன்தொடைமேல் மெல்லச் சாய்ந்து
பாலைப்போல் மொழிபிதற்ற அவளை நோக்கிப்
பார்த்தனும்அப் பரிதிஎழில் விளக்கு கின்றான் 147
‘பாரடியோ! வானத்திற் புதுமை யெல்லாம்,
பண்மொழீ! கணந்தோறும் மாறி மாறி
ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
உவகையுற நவநவமாய் தோன்றுங் காட்சி;
யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள்கொடுத்தும் இயற்ற வல்லார்?
சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய். 148
‘கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்திஅவள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய். 149
‘அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்;
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே,
மொய்குழலாய், சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். 150
"‘அமைதியொடு பார்த்திடுவாய், மின்னே, பின்னே
அசைவுறுமோர் மின்செய்த வட்டு; முன்னே,
சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்;
தரணியிலிங் கிதுபோலோர் பசுமை உண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்;
உமைகவிதை செய்கின்றாள், எழுந்துநின்றே
உரைத்திடுவோம், “பல்லாண்டு வாழ்க” என்றே. 151
வேறு
‘பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!
என்னடி இந்த வன்னத் தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்! -- செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்! -- வெம்மைதோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்! -- பாரடி!
நீலப் பொய்கைகள்! -- அடடா, நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்
எத்தனை! -- கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ் சிகரங்கள்! -- காணடி, ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்! -- ஆஹா! எங்குநோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’ 152
வேறு
‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத்
தேர்கின்றோம்-- அவன்
எங்களறிவினைத் தூண்டி நடத்துக’
என்பதோர் -- நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழிகொண்டு
வாழ்த்தியே -- இவர்
தங்க ளினங்க ளிருந்த பொழிலிடைச்
சார்ந்தனர்; -- பின்னர்
அங்கவ் விரவு கழிந்திட, வைகறை
யாதலும், -- மன்னர்
பொங்கு கடலொத்த சேனைகளோடு
புறப்பட்டே, -- வழி
எங்குந் திகழும் இயற்கையின் காட்சியி
லின்புற்றே, -- கதிர்
மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை
வந்துற்றார். 153
வாணியை வேண்டுதல்
தெளிவுறவே அறிந்திடுதல்,
தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல
காட்டல் கண்ணீர்த்
துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவையெல்லாம்
நீஅருளும் தொழில்க ளன்றோ?
ஒளிவளருந் தமிழ்வாணீ, அடியனேற்
கிவையனைத்தும் உதவு வாயே. 154
பாண்டவர் வரவேற்பு
அத்தின மாநக ரத்தினில் வந்தனர்
ஆரியப் பாண்டவர் என்றது கேட்டலும்,
தத்தி எழுந்தன எண்ணருங் கூட்டங்கள்;
சந்திகள், வீதிகள், சாலைகள், சோலைகள் --
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர்;
இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர
இத்தின மட்டும் எனவியப் பெய்துற
எள்ளும் விழற்கிட மின்றி யிருந்தார். 155
மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர்;
வன்தடந் தோள்கொட்டி ஆர்த்தனர் மன்னவர்;
வெந்திறல் யானையும் தேரும் குதிரையும்
வீதிகள் தோறும் ஒலிமிகச் செய்தன;
பு{[மு-ப.]: ‘எங்களறிவு விளக்க முறச் செய்திடவே -- என’}
வந்தியர் பாடினர், வேசையர் ஆடினர்;
வாத்தியங் கோடி வகையின் ஒலித்தன;
செந்திரு வாழும் நகரினில் அத்தினஞ்
சேர்ந்த ஒலியைச் சிறிதென லாமோ! 156
வாலிகன் தந்ததொர் தேர்மிசை ஏறிஅம்
மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள்
நாலிய லாம்படை யோடு நகரிடை
நல்ல பவனி எழுந்த பொழுதினில்
சேலியல் கண்ணியர் பொன்விளக் கேந்திடச்
சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திடக்
கோலிய பூமழை பெய்திடத் தோரணம்
கொஞ்ச, நகரெழில் கூடிய தன்றே. 157
வேறு
மன்னவன் கோயிலிலே -- இவர்
வந்து புகுந்தனர் வரிசையொடே.
பொன்னரங் கினிலிருந்தான் -- கண்ணில்
புலவனைப் போய்நின்று போற்றியபின்,
அன்னவன் ஆசிகொண்டே -- உயர்
ஆரிய வீட்டுமன் அடிவணங்கி,
வின்னய முணர்கிருபன் -- புகழ்
வீரத் துரோணன் அங்கவன்புதல்வன் 158
மற்றுள பெரியோர்கள் -- தமை
வாழ்த்திஉள்ளன்பொடு வணங்கிநின்றார்;
கொற்றமிக் குயர்கன்னன் -- பணிக்
கொடியோன் இளையவர் சகுனியொடும்
பொற்றடந் தோள்சருவப் -- பெரும்
புகழினர் தழுவினர், மகிழ்ச்சிகொண்டார்;
நற்றவக் காந்தாரி -- முதல்
நாரியர் தமைமுறைப் படிதொழுதார். 159
குந்தியும் இளங்கொடியும் -- வந்து
கூடிய மாதர்தம்மொடுகுலவி
முந்திய கதைகள்சொல்லி -- அன்பு
மூண்டுரை யாடிப்பின் பிரிந்துவிட்டார்;
அந்தியும் புகுந்ததுவால்; -- பின்னர்
ஐவரும் உடல்வலித் தொழில்முடித்தே
சந்தியுஞ் சபங்களுஞ்செய் -- தங்கு
சாருமின் னுணவமு துண்டதன்பின், 160
சந்தன மலர்புனைந்தே, -- இளந்
தையலர் வீணைகொண் டுயிருருக்கி
விந்தைகொள் பாட்டிசைப்ப -- அதை
விழைவொடு கேட்டனர் துயில்புரிந்தார்;
வந்ததொர் துன்பத்தினை -- அங்கு
மடித்திட லன்றிப்பின் தருந்துயர்க்கே
சிந்தனை உழல்வாரோ? -- உளச்
சிதைவின்மை ஆரியர் சிறப்பன்றோ? 161
பாண்டவர் சபைக்கு வருதல்
பாணர்கள் துதிகூற -- இளம்
பகலவன் எழுமுனர்த் துயிலெழுந் தார்;
தோணலத் திணையில்லார் -- தெய்வந்
துதித்தனர்; செய்யபொற் பட்டணிந்து
பூணணிந் தாயுதங் கள் -- பல
பூண்டுபொற் சபையிடைப் போந்தனரால்;
நாணமில் கவுரவரும் -- தங்கள்
நாயக னொடுமங்கு வீற்றிருந் தார். 162
வீட்டுமன் தானிருந் தான்; -- அற
விதுரனும், பார்ப்பனக் குரவர்க ளும்,
நாட்டுமந் திரிமாரும், -- பிற
நாட்டினர் பலபல மன்னர்களும்,
பு{[மு-ப.]: ‘மந்திரி வகையும்’}
கேட்டினுக் கிரையாவான் -- மதி
கெடுந்துரி யோதனன் கிளையின ரும்,
மாட்டுறு நண்பர்களும் -- அந்த
வான்பெருஞ் சபையிடை வயங்கிநின்றார். 163
சூதுக்கு அழைத்தல்
புன்தொழிற் கவறத னில் -- இந்தப்
புவிமிசை இணையிலை எனும்புக ழான்,
நன்றறி யாச்சகுனி, -- சபை
நடுவினில் ஏறெனக் களித்திருந் தான்;
வென்றிகொள் பெருஞ்சூதர் -- அந்த
விவிஞ்சதி சித்திர சேனனுடன்
குன்றுசத் தியவிர தன் -- இதழ்
கூர்புரு மித்திரன் சயனென்பார் 164
சாலவும் அஞ்சுதரும் -- கெட்ட
சதிக்குணத் தார்பல மாயம் வல்லோர்
கோலநற் சபைதனிலே -- வந்து
கொக்கரித் தார்ப்பரித் திருந்தனரால்;
மேலவர் தமைவணங்கி -- அந்த
வெந்திறற் பாண்டவர் இளைஞர் தமை
ஆலமுற்றிடத் தழுவிச் -- செம்பொன்
ஆதனத் தமர்ந்தவப் பொழுதினிலே, 165
சொல்லுகின் றான்சகுனி: -- ‘அறத்
தோன்றல்உன் வரவினைக் காத்துளர்காண்
மல்லுறு தடந்தோளார் -- இந்த
மன்னவ ரனைவரும் நெடும்பொழு தா;
வில்லுறு போர்த்தொழி லாற் -- புவி
வென்றுதங்குலத்தினை மேம்படுத்தீர்!
வல்லுறு சூதெனும் போர் -- தனில்
வலிமைகள் பார்க்குதும் வருதி’என்றான். 166
தருமன் மறுத்தல்
தருமனங் கிவைசொல் வான் -- ‘ஐய!
சதியுறு சூதினுக் கெனைஅழைத் தாய்;
பெருமைஇங் கிதிலுண்டோ? -- அறப்
பெற்றிஉண்டோ? மறப் பீடுளதோ?
வரும்நின் மனத்துடை யாய்! -- எங்கள்
வாழ்வினை உகந்திலை எனலறி வேன்;
இருமையுங் கெடுப்பது வாம் -- இந்த
இழிதொழி லாலெமை அழித்தலுற் றாய்.’ 167
சகுனியின் ஏச்சு
கலகல வெனச்சிரித் தான் -- பழிக்
கவற்றையொர் சாத்திர மெனப்பயின் றோன்;
‘பலபல மொழிகுவ தேன்? -- உனைப்
பார்த்திவன் என்றெணி அழைத்துவிட்டேன்,
“நிலமுழு தாட்கொண் டாய் -- தனி்
நீ” எனப் பலர்சொலக் கேட்டதனால்,
சிலபொருள் விளையாட்டிற் -- செலுஞ்
செலவினுக் கழிகலை எனநினைந்தேன். 168
‘பாரத மண்டலத் தார் -- தங்கள்
பதிஒரு பிசுனனென் றறிவே னோ?
சோரமிங் கிதிலுண்டோ? -- தொழில்
சூதெனி லாடுநர் அரசரன்றோ?
மாரத வீரர்முன்னே, -- நடு
மண்டபத் தே, பட்டப் பகலினிலே,சூர சிகாமணியே, -- நின்றன்
சொத்தினைத் திருடுவ மெனுங்கருத் தோ? 169
‘அச்சமிங் கிதில்வேண்டா, -- விரைந்
தாடுவம் நெடும்பொழு தாயின தால்;
கச்சையொர் நாழிகை யா -- நல்ல
காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்!
பு{[மு-ப.]: ‘மண்டிலத்தார்’}
நிச்சயம் நீவெல் வாய்; -- வெற்றி
நினக்கியல் பாயின தறியா யோ?
நிச்சயம் நீவெல் வாய்; -- பல
நினைகுவ தேன்? களி தொடங்கு’கென்றான். 170
தருமனின் பதில்
வேறு
தோல் விலைக்குப் பசுவினைக் கொல்லும்
துட்டன் இவ்வுரை கூறுதல் கேட்டே,
நூல் விலக்கிய செய்கைக ளஞ்சும்
நோன்பி னோனுளம் நொந்திவை கூறும்:
‘தேவலப் பெயர் மாமுனி வோனும்
செய்ய கேள்வி அசிதனும் முன்னர்
காவலர்க்கு விதித்ததந் நூலிற்
கவறும் நஞ்செனக்கூறினர், கண்டாய்! 171
“வஞ்ச கத்தினில் வெற்றியை வேண்டார்,
மாயச் சூதைப் பழியெனக் கொள்வார்,
அஞ்ச லின்றிச் சமர்க்களத் தேறி்
ஆக்கும் வெற்றி அதனை மதிப்பார்,
துஞ்ச நேரினுந் தூயசொல் லன்றிச்
சொல்மி லேச்சரைப் போலென்றுஞ் சொல்லார்,
மிஞ்சு சீர்த்திகொள் பாரத நாட்டில்
மேவு மாரியர்” என்றனர் மேலோர். 172
‘ஆதலா லிந்தச் சூதினை வேண்டேன்!
ஐய, செல்வம் பெருமை இவற்றின்
காத லாலர சாற்றுவ னல்லேன்;
காழ்த்த நல்லற மோங்கவும் ஆங்கே
பு{[மு-ப.]: ‘கவறை நஞ்செனக்’
‘போலொன்றுஞ் சொல்லார்’
-- கவிமணி}
ஓத லானும் உணர்த்துத லானும்
உண்மை சான்ற கலைத்தொகை யாவும்
சாத லின்றி வளர்ந்திடு மாறும்,
சகுனி, யானர சாளுதல், கண்டாய்! 173
‘என்னை வஞ்சித்தென் செல்வத்தைக் கொள்வோர்
என்றனக் கிடர் செய்பவ ரல்லர்,
முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார்,
மூது ணர்விற் கலைத்தொகை மாய்ப்பார்,
பின்னை என்னுயிர்ப் பாரத நாட்டில்
பீடை செய்யுங் கலியை அழைப்பார்;
நின்னை மிக்க பணிவொடு கேட்பேன்:
நெஞ்சிற் கொள்கையை நீக்குதி’ என்றான். 174
சகுனி வல்லுக்கு அழைத்தல்
வேறு
‘சாத்திரம் பேசுகின் றாய்’ -- எனத்
தழல்படு விழியொடு சகுனிசொல் வான்:
‘கோத்திரக் குலமன் னர் -- பிறர்
குறைபடத் தம்புகழ் கூறுவ ரோ?
நாத்திறன் மிகஉடை யாய்! -- எனில்
நம்மவர் காத்திடும் பழவழக் கை
மாத்திர மறந்துவிட் டாய்; -- மன்னர்
வல்லினுக் கழைத்திடில் மறுப்பதுண் டோ? 175
‘தேர்ந்தவன் வென்றிடு வான்; -- தொழில்
தேர்ச்சிஇல் லாதவன் தோற்றிடு வான்;
நேர்ந்திடும் வாட்போரில் -- குத்து
நெறிஅறிந் தவன்வெலப் பிறனழி வான்;
ஓர்ந்திடு சாத்திரப் போர் -- தனில்,
உணர்ந்தவன் வென்றிட, உணரா தான்
சோர்ந்தழி வெய்திடு வான்; -- இவை
சூதென்றும் சதிஎன்றும் சொல்வா ரோ? 176
‘வல்லவன் வென்றிடு வான்; -- தொழில்
வன்மை இல்லாதவன் தோற்றிடு வான்;
நல்லவ னல்லா தான் -- என
நாணமிலார் சொலுங் கதைவேண்டா;
வல்லமர் செய்திடவே -- இந்த
மன்னர்முன்னேநினை அழைத்துவிட்டேன்;
சொல்லுக வருவதுண் டேல், -- மனத்
துணிவிலை யேலதுஞ் சொல்லு’கென்றான். 177
தருமன் இணங்குதல்
வேறு
வெய்யதான விதியை நினைந்தான்
விலக்கொ ணாதறம் என்ப துணர்ந்தோன்;
பொய்ய தாகுஞ் சிறுவழக் கொன்றைப்
புலனி லாதவர் தம்முடம் பாட்டை
ஐயன் நெஞ்சில் அறமெனக் கொண்டான்.
ஐயகோ! அந்த நாள்முத லாகத்
துய்ய சிந்தைய ரெத்தனை மக்கள்
துன்பம் இவ்வகை எய்தினர் அம்மா! 178
முன்பி ருந்ததொர் காரணத் தாலே,
மூடரே, பொய்யை மெய்என லாமோ?
முன்பெனச் சொலுங் கால மதற்கு
மூடரே, ஓர் வரையறை உண்டோ?
முன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்;
மூன்று கோடி வருடமும் முன்பே;
முன்பிருந்தெண்ணி லாது புவிமேல்
மொய்த்த மக்க ளெலாம் முனி வோரோ? 179
நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர்
நேர்ந்த தில்லை எனநினைந் தீரோ?
பார்பி றந்தது தொட்டின்று மட்டும்,
பலபலப்பல பற்பல கோடி
கார்பி றக்கும் மழைத்துளி போலே
கண்ட மக்க ளனைவருள் ளேயும்,
நீர்பி றப்பதன் முன்பு, மடமை,
நீசத் தன்மை இருந்தன வன்றோ? 180
பொய்யொ ழுக்கை அறமென்று கொண்டும்,
பொய்யர் கேலியைச் சாத்திர மென்றும்,
ஐயகோ, நங்கள் பாரத நாட்டில்
அறிவி லாரறப் பற்றுமிக் குள்ளோர்
நொய்ய ராகி அழிந்தவர் கோடி.
நூல்வகைபல தேர்ந்து தெளிந்தோன்,
மெய்யறிந்தவர் தம்மு ளுயர்ந்தோன் --
விதியினாலத் தருமனும் வீழ்ந்தான். 181
மதியி னும்விதி தான்பெரி தன்றோ?
வைய மீதுள வாகு மவற்றுள்
விதியி னும்பெரி தோர்பொரு ளுண்டோ?
மேலை நாம்செயுங் கர்ம மல்லாதே,
நதியி லுள்ள சிறுகுழி தன்னில்
நான்கு திக்கி லிருந்தும் பன்மாசு
பதியு மாறு, பிறர்செயுங் கர்மப்
பயனும் நம்மை அடைவதுண் டன்றோ? 182
சூதாடல்
வேறு
மாயச் சூதி னுக்கே -- ஐயன்
மனமிணங்கி விட்டான்;
தாய முருட்ட லானார்; -- அங்கே
சகுனி ஆர்ப்பரித்தான்;
நேய முற்ற விதுரன் -- போலே
நெறியு ளோர்க ளெல்லாம்
வாயை மூடி விட்டார்; -- தங்கள்
மதிம யங்கி விட்டார். 183
அந்த வேளை யதனில், -- ஐவர்க்
கதிபன் இஃதுரைப்பான்:
‘பந்தயங்கள் சொல்வாய்: -- சகுனி,
பரபரத்திடாதே!
விந்தை யான செல்வம் -- கொண்ட
வேந்த ரோடு நீதான்
வந்தெ திர்த்து விட்டாய்; -- எதிரே
வைக்க நிதிய முண்டோ?’ 184
தருமன் வார்த்தை கேட்டே -- துரியோ
தனனெழுந்து சொல்வான்:
‘அருமை யான செல்வம் -- என்பால்
அளவி லாத துண்டு;
ஒருமடங்கு வைத்தால் -- எதிரே
ஒன்ப தாக வைப்பேன்;
பெருமை சொல்ல வேண்டா, -- ஐயா,
பின்னடக்கு’கென்றான். 185
‘ஒருவனாடப் பணயம் -- வேறே
ஒருவன் வைப்ப துண்டோ?
தரும மாகு மோடா, -- சொல்வாய்,
தம்பி இந்த வார்த்தை?’
‘வரும மில்லை ஐயா; -- இங்கு
மாம னாடப் பணயம்
மருகன் வைக்கொணாதோ? -- இதிலே
வந்த குற்ற மேதோ?’ 186
‘பொழுதுபோக்கு தற்கே -- சூதுப்
போர்தொ டங்கு கின்றோம்;
அழுத லேனி தற்கே?’ என்றே
அங்கர் கோன் நகைத்தான்.
‘பழுதிருப்ப தெல்லாம் -- இங்கே
பார்த்திவர்க் குரைத்தேன்;
முழுது மிங்கிதற்கே -- பின்னர்
முடிவு காண்பீர்’ என்றான். 187
ஒளிசிறந்த மணியின் -- மாலை
ஒன்றை அங்கு வைத்தான்;
களிமிகுந்த பகைவன் -- எதிரே
கனதனங்கள் சொன்னான்;
விழிமைக்கு முன்னே -- மாமன்
வென்று தீர்த்து விட்டான்;
பழிஇலாத தருமன் -- பின்னும்
பந்தயங்கள் சொல்வான்: 188
‘ஆயிரங்குடம் பொன் -- வைத்தே
ஆடுவோ’மிதென்றான்;
மாயம் வல்ல மாமன் -- அதனை
வசம தாக்கி விட்டான்.
‘பாயு மாவொ ரெட்டில் -- செல்லுமே
பார மான பொற்றேர்.’
தாய முருட்ட லானார்; -- அங்கே
சகுனி வென்று விட்டான். 189
‘இளைய ரான மாதர், -- செம்பொன்
எழிலிணைந்த வடிவும்
வளைஅணிந்த தோளும் -- மாலை
மணிகுலுங்கு மார்பும்
விளையு மின்ப நூல்கள் -- தம்மில்
மிக்க தேர்ச்சி யோடு்
களைஇலங்கு முகமும் -- சாயற்
கவினும் நன்கு கொண்டோர், 190
ஆயிரக்கணக்கா -- ஐவர்க்
கடிமை செய்து வாழ்வோர்.’
தாய முருட்டலானார்; -- அந்தச்
சகுனி வென்று விட்டான்.
ஆயிரங்க ளாவார் -- செம்பொன்
அணிகள் பூண்டிருப்பார்-
தூயிழைப்பொனாடை -- சுற்றுந்
தொண்டர் தம்மை வைத்தான்; 191
சோரனங் கவற்றை -- வார்த்தை
சொல்லு முன்னர் வென்றான்.
தீர மிக்க தருமன் -- உள்ளத்
திடனழிந் திடாதே,
‘நீரை யுண்ட மேகம் -- போல
நிற்கு மாயிரங்கள்
வாரணங்கள் கண்டாய், -- போரில்
மறலி யொத்து மோதும்’ 192
என்று வைத்த பணயந் -- தன்னை
இழிஞன் வென்று விட்டான்;
வென்றி மிக்க படைகள் -- பின்னர்
வேந்தன் வைத்திழந்தான்;
நன்றிழைத்த தேர்கள் -- போரின்
நடை யுணர்ந்த பாகர்
என்றிவற்றை யெல்லாம் -- தருமன்
ஈடு வைத்திழந்தான். 193
எண்ணிலாத, கண்டீர் -- புவியில்
இணையி லாத வாகும்
வண்ணமுள்ள பரிகள் -- தம்மை
வைத்தி ழந்து விட்டான்;
நண்ணு பொற் கடாரந் -- தம்மில்
நாலு கோடி வைத்தான்;
கண்ணி ழப்பவன்போல் -- அவையோர்
கணமிழந்து விட்டான். 194
மாடிழந்து விட்டான், -- தருமன்
மந்தை மந்தையாக;
ஆடிழந்து விட்டான், -- தருமன்
ஆளி ழந்து விட்டான்;
பீடி ழந்த சகுனி -- அங்கு
பின்னுஞ் சொல்லு கின்றான்:
‘நாடி ழக்க வில்லை, -- தருமா!
நாட்டை வைத்தி’டென்றான். 195
நாட்டை வைத்தாடுதல்
வேறு
‘ஐயகோ இதை யாதெனச் சொல்வோம்?
அரச ரானவர் செய்குவ தொன்றோ?
மெய்ய தாகவொர் மண்டலத் தாட்சி
வென்று சூதினி லாளுங் கருத்தோ?
வைய மிஃது பொறுத்திடுமோ,மேல்
வான்பொறுத்திடு மோ? பழி மக்காள்!
துய்ய சீர்த்தி மதிக்குலமோ நாம்?
!’தூவென் றெள்ளி விதுரனும் சொல்வான். 196
‘பாண்ட வர்பொறை கொள்ளுவ ரேனும்,
பைந்து ழாயனும் பாஞ்சாலத் தானும்
மூண்ட வெஞ்சினத் தோடுநஞ் சூழல்
முற்றும் வேரறச் செய்குவ ரன்றோ?
ஈண்டி ருக்குங் குருகுல வேந்தர்
யார்க்கு மிஃதுரைப் பேன், குறிக் கொண்மின்:
“மாண்டு போரில் மடிந்து நரகில்
மாழ்கு தற்கு வகைசெயல் வேண்டா.” 197
‘குலமெ லாமழி வெய்திடற் கன்றோ
குத்தி ரத்துரி யோதனன் றன்னை
நலமி லாவிதி நம்மிடை வைத்தான்;
ஞால மீதி லவன்பிறந் தன்றே
அலறி யோர்நரி போற்குரைத் திட்டான்;
அஃது ணர்ந்த நிமித்திகர் “வெய்ய
கலகந் தோன்றுமிப் பாலக னாலே
காணு வீ” ரெனச் சொல்லிடக் கேட்டோம். 198
‘சூதிற் பிள்ளை கெலித்திடல் கொண்டு
சொர்க்க போகம் பெறுபவன் போலப்
பேதை நீயு முகமலர் வெய்திப்
பெட்பு மிக்குற வீற்றிருக் கின்றாய்;
மீது சென்று மலையிடைத் தேனில்
மிக்க மோகத்தி னாலொரு வேடன்
பாத மாங்கு நழுவிட மாயும்
படும லைச்சரி வுள்ளது காணான். 199
‘மற்று நீருமிச் சூதெனுங் கள்ளால்
மதிம யங்கி வருஞ்செயல் காணீர்!
முற்றுஞ் சாதி சுயோதன னாமோர்
மூடற் காக முழுகிட லாமோ?
பற்று மிக்கஇப் பாண்டவர் தம்மைப்
பாத கத்தி லழித்திடு கின்றாய்;
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே
கடலிற் காயங் கரைத்ததொப் பாமே? 200
‘வீட்டு ளேநரி யைவிடப் பாம்பை
வேண்டிப் பிள்ளை எனவளர்த் திட்டோம்:
நாட்டு ளேபுக ழோங்கிடு மாறிந்
நரியை விற்றுப் புலிகளைக் கொள்வாய்.
மோட்டுக் கூகையைக் காக்கையை விற்று
மொய்ம்பு சான்ற மயில்களைக் கொள்வாய்;
கேட்டி லேகளி யோடுசெல் வாயோ?
கேட்குங் காதும் இழந்துவிட் டாயோ? 201
‘தம்பி மக்கள் பொருள்வெஃகு வாயோ
சாதற் கான வயதினில் அண்ணே?
நம்பி நின்னை அடைந்தவ ரன்றோ?
நாத னென்றுனைக் கொண்டவ ரன்றோ?
எம்பி ரானுளங் கொள்ளுதி யாயின்
யாவுந் தான மெனக்கொடுப் பாரே!
கும்பி மாநர கத்தினி லாழ்த்துங்
கொடிய செய்கை தொடர்வதும் என்னே? 202
‘குருகு லத்தலை வன்சபைக் கண்ணே,
கொற்ற மிக்க துரோணன் கிருபன்
பெருகு சீர்த்திஅக் கங்கையின் மைந்தன்
பேதை நானும் மதிப்பிழந் தேகத்
திருகு நெஞ்சச் சகுனி ஒருவன்
செப்பு மந்திரஞ் சொல்லுதல் நன்றே!
அருகு வைக்கத் தகுதியுள் ளானோ?
அவனை வெற்பிடைப் போக்குதி அண்ணே! 203
‘நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம்
நேரு மென்று நினைத்திடல் வேண்டா.
பொறி இழந்த சகுனியின் சூதால்
புண்ணி யர்தமை மாற்றல ராக்கிச்
சிறியர் பாதகர் என்றுல கெல்லாம்
சீஎன் றேச உகந்தர சாளும்
வறிய வாழ்வை விரும்பிட லாமோ?
வாழி, சூதை நிறுத்துதி’என்றான். 204
சூதாட்டச் சருக்கம் முற்றிற்று.
****************************************************
பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகம்
பராசக்தி வணக்கம்
ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்
றமைறைத்தனன் சிற்பி,மற்றொன்
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினான், உலகினோர் தாய்நீ;
யாங்கணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்
கெண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை
இருங்கலைப் புலவனாக் குதியே. 1
சரசுவதி வணக்கம்
இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
இயல்நூலார்இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார்இயம்பு கின்றார்.
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம்இயற்கை யாயின்,
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
எனதுள்ளம் இயங்கொ ணாதோ? 2
3.மூன்றாவது: அடிமைச் சருக்கம்
விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன்
மறுமொழி சொல்லுதல்
வேறு
அறிவு சான்ற விதுரன்சொற் கேட்டான்
அழலு நெஞ்சின் அரவை உயர்த்தான்.
நெறிஉ ரைத்திடும் மேலவர் வாய்ச்சொல்
நீச ரானவர் கொள்ளுவ துண்டோ?
பொறி பறக்க விழிக ளிரண்டும்
புருவ மாங்கு துடிக்கச் சினத்தின்
வெறி தலைக்க, மதிமழுங் கிப்போய்
வேந்தன் இஃது விளம்புத லுற்றான்: 3
‘நன்றி கெட்ட விதுரா, சிறிதும்
நாண மற்ற விதுரா,
தின்ற உப்பினுக்கே நாசந்
தேடுகின்ற விதுரா,
அன்று தொட்டு நீயும் எங்கள்
அழிவு நாடுகின்றாய்;
மன்றி லுன்னை வைத்தான் எந்தை
மதியை என்னு ரைப்பேன்! 4
‘ஐவருக்கு நெஞ்சும் எங்கள்
அரண்மனைக்கு வயிறும்,
தெய்வமன் றுனக்கே, விதுரா,
செய்து விட்ட தேயோ?
மெய்வகுப்பவன்போல், பொதுவாம்
விதி உணர்ந்தவன்போல்,
ஐவர் பக்க நின்றே, -- எங்கள்
அழிவு தேடு கின்றாய். 5
மன்னர் சூழ்ந்த சபையில் -- எங்கள்
மாற்ற லார்க ளோடு
முன்னர் நாங்கள் பணையம் -- வைத்தே
முறையில் வெல்லு கின்றோம்.
என்ன குற்றங் கண்டாய்? -- தருமம்
யாருக் குரைக்க வந்தாய்?
கன்னம் வைக்கி றோமோ? -- பல்லைக்
காட்டி ஏய்க்கி றோமோ? 6
பொய்யு ரைத்து வாழ்வார், -- இதழிற்
புகழுரைத்து வாழ்வார்,
வைய மீதி லுள்ளார்; -- அவர்தம்
வழியில் வந்த துண்டோ?
செய்யொணாத செய்வார் -- தம்மைச்
சீருறுத்த நாடி,
ஐய, நீஎ ழுந்தால் -- அறிஞர்
அவல மெய்தி டாரோ? 7
அன்பிலாத பெண்ணுக்கு -- இதமே
ஆயிரங்கள் செய்தும்,
முன்பின் எண்ணு வாளோ? -- தருணம்
மூண்ட போது கழிவாள்.
வன்புரைத்தல் வேண்டா, -- எங்கள்
வலிபொறுத்தல் வேண்டா,
இன்ப மெங்க ணுண்டோ, -- அங்கே
ஏகி’டென்று ரைத்தான். 8
விதுரன் சொல்வது
வேறு
நன்றாகும் நெறியறியா மன்னன் அங்கு
நான்குதிசை அரசர்சபை நடுவே, தன்னைக்
கொன்றாலும் ஒப்பாக வடுச்சொற் கூறிக்
குமைவதனில் அணுவளவுங் குழப்ப மெய்தான்;
‘சென்றாலும் இருந்தாலு இனிஎன் னேடா?
செய்கைநெறி அறியாத சிறியாய், நின்னைப்
பொன்றாத வழிசெய்ய முயன்று பார்த்தேன்;
பொல்லாத விதிபுன்னைப் புறங்கண் டானால்! 9
‘கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும்
கருங்கல்லில் விடந்தோய்த்த நெஞ்சுங் கொண்டோர்
படுஞ்செய்தி தோன்றுமுனே படுவர் கண்டாய்.
“பால்போலும் தேன்போலும் இனிய சொல்லோர்
இடும்பைக்கு வழிசொல்வார்; நன்மை காண்பார்
இளகுமொழி கூறார்” என் றினைத்தே தானும், --
நெடும்பச்சை மரம்போலே வளர்ந்து விட்டாய் --
நினக்கெவரும் கூறியவரில்லை கொல்லோ? 10
‘நலங்கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா
நரபதி, நின் அவைக்களத்தே அமைச்ச ராக
வலங்கொண்ட மன்னரொடு பார்ப்பார் தம்மை
வைத்திருத்தல் சிறிதேனுந் தகாது கண்டாய்.
சிலங்கைப்பொற் கச்சணிந்த வேசை மாதர்
சிறுமைக்குத் தலைகொடுத்த தொண்டர், மற்றுங்
குலங்கெட்ட புலைநீசர், முடவர், பித்தர்,
கோமகனே, நினக்குரிய அமைச்சர் கண்டாய்! 11
‘சென்றாலும் நின்றாலும் இனிஎன் னேடா?
செப்புவன நினக்கெனநான் செப்பி னேனோ?
மன்றார நிறைந்திருக்கும் மன்னர், பார்ப்பார்,
மதியில்லா மூத்தோனும் அறியச் சொன்னேன்.
இன்றோடு முடிகுவதோ? வருவ தெல்லாம்
யானறிவேன், வீட்டுமனும் அறிவான், கண்டாய்.
வென்றான்உள் ஆசையெலாம் யோகி யாகி
வீட்டுமனும் ஒன்றுரையா திருக்கின்றானே. 12
‘விதிவழிநன் குணர்ந்திடினும், பேதை யேன்யான்
வெள்ளைமன முடைமையினால், மகனே, நின்றன்
சதிவழியைத் தடுத்துரைகள் சொல்லப் போந்தேன்.
சரி, சரிஇங் கேதுரைத்தும் பயனொன் றில்லை.
மதிவழியே செல்லு’கென விதுரன் கூறி
வாய்மூடித் தலைகுனிந்தே இருக்கை கொண்டான்.
பதிவுறுவோம் புவியிலெனக் கலிம கிழ்ந்தான்,
பாரதப்போர் வருமென்று தேவ ரார்த்தார். 13
சூது மீட்டும் தொடங்குதல்
வேறு
காயு ருட்ட லானார் -- சூதுக்
களிதொடங்க லானார்
மாய முள்ள சகுனி -- பின்னும்
வார்த்தை சொல்லுகின்றான்: --
‘நீஅழித்த தெல்லாம் -- பின்னும்
நின்னிடத்து மீளும்.
ஓய்வடைந்திடாதே, -- தருமா!
ஊக்க மெய்து’ கென்றான். 14
கோயிற் பூசை செய்வோர் -- சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன் -- வீட்டை
வைத்திழத்தல் போலும்,
ஆயிரங்க ளான -- நீதி
யவைஉ ணர்ந்த தருமண்
தேயம் வைத்திழந்தான்; -- சிச்சீ!
சிறியர் செய்கை செய்தான். 15
‘நாட்டு மாந்த ரெல்லாம் -- தம்போல்
நரர்களென்று கருதார்;
ஆட்டு மந்தை யாமென்’ -- றுலகை
அரச ரெண்ணி விட்டார்.
காட்டு முண்மை நூல்கள் -- பலதாங்
காட்டினார்க ளேனும்,
நாட்டு ராஜ நீதி -- மனிதர்
நன்கு செய்ய வில்லை. 16
ஓரஞ் செய்திடாமே, -- தருமத்
துறுதி கொன்றிடாமே,
சோரஞ் செய்திடாமே, -- பிறரைத்
துயரில் வீழ்த்திடாமே,
ஊரை யாளு முறைமை -- உலகில்
ஓர்புறத்து மில்லை.
சார மற்ற வார்த்தை! -- மேலே
சரிதை சொல்லு கின்றோம். 17
சகுனி சொல்வது
வேறு‘செல்வம்முற் றிழந்துவிட்டாய்; -- தருமா,
தேசமுங் குடிகளுஞ் சேர்த்திழந்தாய்.
பல்வளம் நிறைபுவிக்கே -- தருமன்
பார்த்திவன் என்பதினிப் பழங்கதைகாண்!
சொல்வதொர் பொருள்கேளாய்; -- இன்னுஞ்
சூழ்ந்தொரு பணயம்வைத் தாடுதியேல்,
வெல்வதற் கிடமுண் டாம்; -- ஆங்கவ்
வெற்றியி லனைத்தையும் மீட்டிடலாம். 18
‘எல்லா மிழந்த பின்னர் -- நின்றன்
இளைஞரும் நீரும்மற் றெதிற்பிழைப்பீர்?
பொல்லா விளையாட்டில் -- பிச்சை
புகநினை விடுவதை விரும்புகிலோம்.
வல்லார் நினதிளைஞர் -- சூதில்
வைத்திடத் தகுந்தவர் பணயமென்றே;
சொல்லால் உளம் வருந்தேல்; -- வைத்துத்
தோற்றதை மீட்’டென்று சகுனிசொன்னான். 19
வேறு
கருணனும்சிரித்தான்; -- சபையோர்
கண்ணின் நீரு திர்த்தார்.
இருள் நிறைந்த நெஞ்சன் -- களவே
இன்ப மென்று கொண்டான்,
அரவு யர்த்த வேந்தன் -- உவகை
ஆர்த்தெழுந்து சொல்வான்;
‘பரவு நாட்டை யெல்லாம் -- எதிரே
பணய மாக வைப்போம். 20
‘தம்பி மாரை வைத்தே -- ஆடித்
தருமன் வென்று விட்டால்,
முன்பு மாமன் வென்ற -- பொருளை
முழுதும் மீண்ட ளிப்போம்.
நம்பி வேலை செய்வோம்; -- தருமா,
நாடி ழந்த பின்னர்,
அம்பி னொத்த விழியாள் -- உங்கள்
ஐவருக்கு முரியாள் -- 21
‘அவள் இழ்ந்திடாளோ? -- அந்த
ஆயன் பேசுவானோ?
கவலை தீர்த்து வைப்போம்; -- மேலே
களிநடக்கு’ கென்றான்.
இவள வான பின்னும் -- இளைஞர்
ஏதும் வார்த்தை சொல்லார்,
துவளும் நெஞ்சினாராய் -- வதனம்
தொங்க வீற்றிருந்தார். 22
வீமன் மூச்சு விட்டான் -- முழையில்
வெய்ய நாகம் போலே;
காம னொத்த பார்த்தன் -- வதனக்
களைஇ ழந்து விட்டான்;
நேம மிக்க நகுலன், -- ஐயோ!
நினைவயர்ந்து விட்டான்;
ஊமை போலிருந்தான் -- பின்னோன்
உண்மை முற்றுணர்ந்தான். 23
கங்கை மைந்தனங்கே -- நெஞ்சம்
கனலுறத்து டித்தான்;
பொங்கு வெஞ்சினத்தால் -- அரசர்
புகை யுயிர்த்திருந்தார்;
அங்கம் நொந்து விட்டான், -- விதுரன்
அவல மெய்தி விட்டான்,
சிங்க மைந்தை நாய்கள் -- கொல்லுஞ்
செய்தி காண லுற்றே. 24
சகாதேவனைப் பந்தயம் கூறுதல்
வேறு
எப்பொழு தும்பிர மத்திலே -- சிந்தை
ஏற்றி உலகமொ ராடல்போல் -- எண்ணித்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும் -- வகை
தானுணர்ந் தான்ஸக தேவனாம் -- எங்கும்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் -- வைத்தல்
உன்னித் தருமன் பணயமென்று -- அங்குச்
செப்பினன் காயை உருட்டினார் -- அங்குத்
தீய சகுனி கெலித்திட்டான். 25
நகுலனை இழத்தல்
நகுலனை வைத்தும் இழந்திட்டான்; -- அங்கு
நள்ளிருட் கண்ணொரு சிற்றொளி -- வந்து
புகுவது போலவன் புந்தியில் -- ‘என்ன
புன்மை செய்தோம்?’ என எண்ணினான்-- அவ்வெண்ணம்
மிகுவதன் முன்பு சகுனியும் -- ‘ஐய,
வேறொரு தாயிற் பிறந்தவர் -- வைக்கத்
தகுவரென்றிந்தச் சிறுவரை -- வைத்துத்
தாயத்தி லேஇழந் திட்டனை. 26
‘திண்ணிய வீமனும் பார்த்தனும் -- குந்தி
தேவியின் மக்களுனையொத்தே -- நின்னிற்
கண்ணியம் மிக்கவர் என்றவர் -- தமைக்
காட்டுதற் கஞ்சினை போலும்நீ?’ -- என்று
புண்ணியம் மிக்க தருமனை -- அந்தப்
புல்லன் வினவிய போதினில், -- தர்மன்
துண்ணென வெஞ்சின மெய்தியே -- ‘அட,
சூதில் அரசிழந் தேகினும், 27
பார்த்தனை இழத்தல்
தர்மன் சொல்வது
‘எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம்; -- ஐவர்
எண்ணத்தில், ஆவியில் ஒன்றுகாண். -- இவர்
பங்கமுற் றேபிரி வெய்துவார் -- என்று
பாதகச் சிந்தனை கொள்கிறாய்; -- அட,
சிங்க மறவர் தமக்குள்ளே -- வில்லுத்
தேர்ச்சியி லேநிக ரற்றவன், -- எண்ணில்
இங்குப் புவித்தலம் ஏழையும் -- விலை
யீடெனக் கொள்ளத் தகாதவன், 28
‘கண்ணனுக் காருயிர்த் தோழனாம் -- எங்கள்
கண்ணிலுஞ் சால இனியவன்,
வண்ணமும் திண்மையும் சோதியும் -- பெற்று
வானத் தமரரைப் போன்றவன், -- அவன்
எண்ணரு நற்குணஞ் சான்றவன், -- புக
ழேறும் விஜயன் பணயங்காண்! -- பொய்யில்
பண்ணிய காயை உருட்டுவாய்’ -- என்று
பார்த்திவன் விம்மி உரைத்திட்டான். 29
மாயத்தை யேஉரு வாக்கிய -- அந்த
மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே -- கெட்ட
தாயத்தைக் கையினில் பற்றினான்; -- பின்பு
சாற்றி விருத்தமங் கொன்றையே -- கையில்
தாய முருட்டி விழுத்தினான்; -- அவன்
சாற்றிய தேவந்து வீழ்ந்ததால். -- வெறும்
ஈயத்தைப் பொன்னென்று காட்டுவார் -- மன்னர்
இப்புவி மீதுள ராமன்றோ? 30
வீமனை இழத்தல்
கொக்கரித் தார்த்து முழங்கியே -- களி
கூடிச் சகுனியுஞ் சொல்லுவான்: -- ‘எட்டுத்
திக்கனைத்தும்வென்ற பார்த்தனை -- வென்று
தீர்த்தனம் வீமனைக் கூ’றென்றான். -- தர்மன்
தக்கது செய்தல் மறந்தனன், -- உளஞ்
சார்ந்திடு வெஞ்சின வெள்ளத்தில் -- எங்கும்
அக்கரை இக்கரை காண்கிலன், -- அறத்
தண்ணல் இதனை உரைக்கின்றான்: 31
‘ஐவர் தமக்கொர் தலைவனை, -- எங்கள்
ஆட்சிக்கு வேர்வலி அஃதினை, -- ஒரு
தெய்வம்முன் னேநின் றெதிர்ப்பினும் -- நின்று
சீறி அடிக்குந் திறலனை, -- நெடுங்
கைவளர் யானை பலவற்றின் -- வலி
காட்டும் பெரும்புகழ் வீமனை, -- உங்கள்
பொய்வளர் சூதினில் வைத்திட்டேன் -- வென்று
போ!’ என் றுரைத்தனன் பொங்கியே. 32
போரினில் யானை விழக்கண்ட -- பல
பூதங்கள் நாய்நரி காகங்கள் -- புலை
ஒரி கழுகென் றிவையெலாம் -- தம
துள்ளங் களிகொண்டு விம்மல்போல், -- மிகச்
சீரிய வீமனைச் சூதினில் -- அந்தத்
தீயர் விழுந்திடக் காணலும் -- நின்று
மார்பிலுந் தோளிலுங் கொட்டினார் -- களி
மண்டிக் குதித்தெழுந் தாடுவார். 33
தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்
மன்னவர், தம்மை மறந்துபோய், -- வெறி
வாய்ந்த திருடரை யொத்தனர். -- அங்கு
சின்னச் சகுனி சிரிப்புடன் -- இன்னும்
‘செப்புக பந்தயம்வே’றென்றான். -- இவன்
தன்னை மறந்தவ னாதலால் -- தன்னைத்
தான் பணயமென வைத்தனன். -- பின்பு
முன்னைக் கதையன்றி வேறுண்டோ? -- அந்த
மோசச் சகுனி கெலித்தனன். 34
துரியோதனன் சொல்வது
பொங்கி யெழுந்து சுயோதனன் -- அங்கு
பூதல மன்னர்க்குச் சொல்லுவான்: -- ‘ஒளி
மங்கி யழிந்தனர் பாண்டவர் -- புவி
மண்டலம் நம்ம தினிக்கண்டீர். -- இவர்
சங்கை யிலாத நிதியெலாம் -- நம்மைச்
சார்ந்தது; வாழ்த்துதிர் மன்னர்காள்! -- இதை
எங்கும் பறையறை வாயடா -- தம்பி!’
என்றது கேட்டுச் சகுனிதான், 35
சகுனி சொல்வது
‘புண்ணிடைக் கோல்கொண்டு குத்துதல் -- நின்னைப்போன்றவர் செய்யத் தகுவதோ? -- இரு
கண்ணி லினியவ ராமென்றே -- இந்தக்
காளையர் தம்மைஇங் குந்தைதான் -- நெஞ்சில்
எண்ணி யிருப்ப தறிகுவாய்; -- இவர்
யார்? நின்றன் சோதர ரல்லரோ? -- களி
நண்ணித் தொடங்கிய சூதன்றோ? -- இவர்
நாணுறச் செய்வது நேர்மையோ? 36
‘இன்னும் பணயம்வைத் தாடுவோம்; -- வெற்றி
இன்னும் இவர்பெற லாகுங்காண்.
பொன்னுங் குடிகளுந் தேசமும் -- பெற்றுப்
பொற்பொடு போதற் கிடமுண்டாம்; -- ஒளி
மின்னும் அமுதமும் போன்றவள் -- இவர்
மேவிடு தேவியை வைத்திட்டால், அவள்
துன்னும் அதிட்ட முடையவள் -- இவர்
தோற்ற தனைத்தையும் மீட்டலாம்.’ 37
என்றந்த மாமன் உரைப்பவே -- வளர்
இன்பம் மனத்தி லுடையனாய் -- ‘மிக
நன்றுநன்’றென்று சுயோதனன் -- சிறு
நாயொன்று தேன்கல சத்தினை -- எண்ணித்
துன்று முகவையில் வெற்றுநா -- வினைத்
தோய்த்துச் சுவைத்து மகிழ்தல்போல் -- அவன்
ஒன்றுரை யாம லிருந்திட்டான் -- அழி
வுற்ற துலகத் தறமெலாம். 38
4.நான்காவது துகிலுரிதற் சருக்கம்
திரௌபதியை இழத்தல்
பாவியர் சபைதனிலே, -- புகழ்ப்
பாஞ்சால நாட்டினர் தவப்பயனை,
ஆவியில் இனியவளை, -- உயிர்த்
தணிசுமந் துலவிடு செய்யமுதை,
ஓவியம் நிகர்த்தவளை, -- அரு
ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத்
தேவியை, நிலத்திருவை, -- எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத்தை, 39
படிமிசை இசையுற வே -- நடை
பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடியைக்
கடிகமழ் மின்னுருவை, -- ஒரு
கமனியக் கனவினைக் காதலினை,
வடிவுறு பேரழகை, -- இன்ப
வளத்தினைச் சூதினில் பணயம் என்றே
கொடியவர் அவைக்களத்தில் -- அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான். 40
வேறு
வேள்விப் பொருளினையே -- புலை நாயின்முன்
மென்றிட வைப்பவர்போல்,
நீள்விட்டப் பொன்மாளிகை -- கட்டிப் பேயினை
நேர்ந்து குடியேற்றல் போல்,
ஆள்விற்றுப் பொன்வாங்கியே -- செய்த பூணையோர்
ஆந்தைக்குப் பூட்டுதல்போல், --
கேள்விக் கொருவரில்லை -- உயிர்த்தேவியைக்
கீழ்மக்கட் காளாக்கினான். 41
செருப்புக்கு தோல்வேண்டியே, -- இங்குக் கொல்வரோ
செல்வக் குழந்தையினை?
விருப்புற்ற சூதினுக்கே -- ஒத்த பந்தயம்
மெய்த்தவப் பாஞ்சாலியோ?
ஒருப்பட்டுப் போனவுடன், -- கெட்ட மாமனும்
உன்னியத் தாயங்கொண்டே
இருப்பகடை போடென்றான், -- பொய்மைக் காய்களும்
இருப்பகடை போட்டவே. 42
திரௌபதி சூதில் வசமானதுபற்றிக் கௌரவர்
கொண்ட மகிழ்ச்சி
திக்குக் குலுங்கிடவே -- எழுந்தாடுமாம்
தீயவர் கூட்டமெல்லாம்.
தக்குத்தக் கென்றேஅவர் -- குதித்தாடுவார்
தம்மிரு தோள்கொட்டுவார்.
ஒக்குந் தருமனுக்கே -- இஃதென்பர் ‘ஓ!
ஓ!’ வென் றிரைந்திடுவார்;
கக் கக்கென் றேநகைப்பார் -- ‘துரியோதனா,
கட்டிக்கொள் எம்மை’என்பார். 43
மாமனைத் ‘தூக்கா’ யென்பார்; -- அந்த மாமன்மேல்
மாலை பலவீசுவார்.
‘சேமத் திரவியங்கள் -- பலநாடுகள்
சேர்ந்ததி லொன்றுமில்லை;
காமத் திரவியமாம் -- இந்தப்பெண்ணையும்
கைவச மாகச்செய்தான்;
மாமனொர் தெய்வ’மென்பார்; ‘துரியோதனன்
வாழ்க’வென் றார்த்திடுவார். 44
துரியோதனன் சொல்வது
நின்று துரியோதனன் -- அந்த மாமனை
நெஞ்சொடு சேரக் கட்டி,
‘என்துயர் தீர்த்தாயடா -- உயிர் மாமனே,
ஏளனந் தீர்த்துவிட்டாய்.
அன்று நகைத்தாளடா; -- உயிர் மாமனே,
அவளைஎன் ஆளாக்கினாய்
என்றும் மறவேனடா, -- உயிர் மாமனே,
என்ன கைம்மாறு செய்வேன்! 45
‘ஆசை தணித்தாயடா, -- உயிர் மாமனே,
ஆவியைக் காத்தாயடா.
பூசை புரிவோமடா, -- உயிர் மாமனே,
பொங்க லுனக்கிடுவோம்.
நாச மடைந்ததடா -- நெடுநாட்பகை,
நாமினி வாழ்ந்தோமடா!
பேசவுந் தோன்றுதில்லை; -- உயிர் மாமனே,
பேரின்பங் கூட்டிவிட்டாய்.’ 46
என்று பலசொல்லுவான், -- துரியோதனன்
எண்ணிஎண்ணிக்குதிப்பான்;
குன்று குதிப்பதுபோல் -- துரியோதனன்
கொட்டிக் குதித்தாடுவான்.
மன்று குழப்பமுற்றே, -- அவர் யாவரும்
வகைதொகை யொன்றுமின்றி
அன்று புரிந்ததெல்லாம் -- என்றன் பாட்டிலே
ஆக்கல் எளிதாகுமோ? 47
திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு
அழைத்து வரச் சொல்லியதுபற்றி
ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்
வேறு
தருமம் அழிவெய்தச் சத்தியமும் பொய்யாக,
பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மண்ணாக,
வானத்துத் தேவர் வயிற்றிலே தீப்பாய,
மோன முனிவர் முறைகெட்டுத் தாமயங்க,
வேதம் பொருளின்றி வெற்றுரையே யாகிவிட,
நாதம் குலைந்து நடுமையின்றிப் பாழாக,
கந்தருவ ரெல்லாங் களையிழக்கச் சித்தர்முதல்
அந்தரத்து வாழ்வோ ரனைவோரும் பித்துறவே,
நான்முகனார் நாவடைக்க, நாமகட்குப் புத்திகெட,
வான்முகிலைப் போன்றதொரு வண்ணத் திருமாலும்
அறிதுயில்போய் மற்றாங்கே ஆழ்ந்ததுயி லெய்திவிட
செறிதருநற் சீரழகு செல்வமெலாந் தானாகுஞ்
சீதேவி தன்வதனம் செம்மைபோய்க் காரடைய,
மாதேவன் யோகம் மதிமயக்க மாகிவிட, --
வாலை, உமாதேவி, மாகாளி, வீறுடையாள்,
மூலமா சக்தி, ஒரு மூவிலைவேல் கையேற்றாள்,
மாயை தொலைக்கும் மஹாமாயை தானாவாள்,
பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள்,
சிங்கத்தி லேறிச் சிரிப்பால் உலகழிப்பாள்.
சிங்கத்தி லேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்
நோவுங் கொலையும் நுவலொணாப் பீடைகளும்
சாவுஞ் சலிப்புமெனத் தான்பல் கணமுடையாள்,
கடாவெருமை யேறுங் கருநிறத்துக் காலனார்
இடாது பணிசெய்ய இலங்கு மஹாராணி,
மங்களம் செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி
துங்கமுறு கல்வியெனச் சூழும் பலகணத்தாள்,
ஆக்கந்தா னாவாள், அழிவு நிலையாவாள்,
போக்குவர வெய்தும் புதுமை யெலாந் தானாவாள்,
மாறிமாறிப்பின்னும் மாறிமாறிப்பின்னும்
மாறிமா றிப்போம் வழக்கமே தானாவாள்,
ஆதிபராசக்தி -- அவள்நெஞ்சம் வன்மையுறச்,
சோதிக் கதிர்விடுக்கும் சூரியனாந் தெய்வத்தின்
முகத்தே இருள்படர,
துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது
மூடப் புலைமையினோன்,
அகத்தே இருளுடையான், ஆரியரின் வேறானோன்,
துரியோ தனனும் சுறுக்கெனவே தான்திரும்பி
அரியோன் விதுர னவனுக் குரைசெய்வான்:
‘செல்வாய், விதுராநீ சிந்தித் திருப்பதேன்?
வில்வா ணுதலினாள், மிக்க எழிலுடையாள்,
முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவிமகள்,
இன்னேநாம் சூதில் எடுத்த விலைமகள்பால்
சென்று விளைவெல்லாஞ் செவ்வனே தானுணர்த்தி,
“மன்றி னிடையுள்ளான் நின் மைத்துனன் நின் ஓர்தலைவன்
நின்னை அழைக்கிறான் நீள்மனையில் ஏவலுக்கே”
என்ன உரைத்தவளை இங்குகொணர்வாய்’ என்றான்.
விதுரன் சொல்வது
துரியோ தனன்இச் சுடுசொற்கள் கூறிடவும்,
பெரியோன் விதுரன் பெரிதுஞ் சினங்கொண்டு,
‘மூட மகனே, மொழியொணா வார்த்தையினைக்
கேடுவரஅறியாய், கீழ்மையினாற் சொல்லிவிட்டாய்.
புள்ளிச் சிறுமான் புலியைப்போய்ப் பாய்வதுபோல்,
பிள்ளைத் தவளை பெரும்பாம்பை மோதுதல்போல்,
ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய்.
தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகின்றாய்;
நின்னுடைய நன்மைக்கிந் நீதியெலாஞ் சொல்கிறேன்.
என்னுடைய சொல்வேறு எவர்பொருட்டும் இல்லையடா!
பாண்டவர்தாம் நாளைப் பழியிதனைத் தீர்த்திடுவார்,
மாண்டு தரைமேல், மகனே, கிடப்பாய்நீ.
தன்னழிவு நாடுந் தறுகண்மை என்னேடா?
முன்னமொரு வேனன் முடிந்தகதை கேட்டிலையோ?
நல்லோர் தமதுள்ளம் நையச் செயல்செய்தான்
பொல்லாத வேனன், புழுவைப்போல் மாய்ந்திட்டான்.
நெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மைஎனக் கொண்டாயோ?
மஞ்சனே, அச்சொல் மருமத்தே பாய்வதன்றோ?
கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்துவிடும்;
பட்டார்தம் நெஞ்சிற் பலநாள் அகலாது.
வெந்நரகு சேர்த்துவிடும், வித்தை தடுத்துவிடும்,
மன்னவனே, நொந்தார் மனஞ்சுடவே சொல்லுஞ்சொல்.
சொல்லி விட்டேன்; பின்னொருகால் சொல்லேன், கவுரவர்காள்!
புல்லியர்கட் கின்பம் புவித்தலத்தில் வாராது.
பேராசை கொண்டு பிழைச்செயல்கள் செய்கின்றீர்!
வாராத வன்கொடுமை மாவிபத்து வந்துவிடும்,
பாண்டவர்தம் பாதம் பணிந்தவர்பாற் கொண்டதெலாம்
மீண்டவர்க்கே ஈந்துவிட்டு, விநயமுடன்,
“ஆண்டவரே, யாங்கள் அறியாமை யால்செய்த
நீண்ட பழிஇதனை நீர்பொறுப்பீர்” என்றுரைத்து,
மற்றவரைத் தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர்.
குற்றந் தவிர்க்கும் நெறிஇதனைக் கொள்ளீரேல்,
மாபா ரதப்போர் வரும்; நீர் அழிந்திடுவீர்,
பூபால ரேஎன்றப் புண்ணியனுங் கூறினான்.
சொல்லிதனைக் கேட்டுத் துரியோதன மூடன்,
வல்லிடிபோல் ‘சீச்சி! மடையா, கெடுகநீ
எப்போதும் எம்மைச் சபித்தல் இயல்புனக்கே.
இப்போதுன் சொல்லை எவருஞ் செவிக்கொளார்.
யாரடா, தேர்ப்பாகன்! நீபோய்க் கணமிரண்டில்
“பாரதர்க்கு வேந்தன் பணித்தான்” எனக்கூறிப்
பாண்டவர்தந் தேவிதனைப் பார்வேந்தர் மன்றினிலே
ஈண்டழைத்து வா’என் றியம்பினான். ஆங்கேதேர்ப் பாகன் விரைந்துபோய்ப் பாஞ்சாலி வாழ்மனையில்
சோகம் ததும்பித் துடித்த குரலுடனே,
‘அம்மனே போற்றி! அறங்காப்பாய், தாள்போற்றி!
வெம்மை யுடைய விதியால் யுதிட்டிரனார்
மாமன் சகுனியொடு மாயச் சூதாடியதில்,
பூமி யிழந்து பொருளிழந்து தம்பியரைத்
தோற்றுத் தமது சுதந்திரமும் வைத்திழந்தார்.
சாற்றிப் பணயமெனத் தாயே உனைவைத்தார்.
சொல்லவுமே நாவு துணியவில்லை; தோற்றிட்டார்.
எல்லாருங் கூடி யிருக்கும் சபைதனிலே,
நின்னை அழைத்துவர நேமித்தான் எம்மரசன்’
என்ன உரைத்திடலும், ‘யார்சொன்ன வார்த்தையடா!
சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா? யார்பணியால்
என்னை அழைக்கின்றாய்?’ என்றாள். அதற்கவனும்
‘மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால்’ என்றிட்டான்
. ‘நல்லது; நீ சென்று நடந்தகதை கேட்டு வா.
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்
என்னைமுன்னே கூறி இழந்தாரா? தம்மையே
முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா?
சென்று சபையில்இச் செய்தி தெரிந்துவா,
என்றவளுங் கூறி, இவன்போகியபின்னர்,
தன்னந் தனியே தவிக்கும் மனத்தாளாய்,
வன்னங் குலைந்து மலர்விழிகள் நீர்சொரிய,
உள்ளத்தை அச்சம் உலைஉறுத்தப் பேய்கண்ட
பிள்ளையென வீற்றிருந்தாள். பின்னந்தத் தேர்ப்பாகன்
மன்னன் சபைசென்று, ‘வாள்வேந்தே! ஆங்கந்தப்
பொன்னரசி தாள்பணிந்து “போதருவீர்” என்றிட்டேன்.
“என்னைமுதல் வைத்திழந்தபின்பு தன்னைஎன்
மன்னர் இழந்தாரா? மாறித் தமைத்தோற்ற
பின்னரெனைத் தோற்றாரா?” என்றேநும் பேரவையை
மின்னற் கொடியார் வினவிவரத் தாம்பணித்தார்.
வந்துவிட்டேன்’ என்றுரைத்தான். மாண்புயர்ந்த பாண்டவர்தாம்
நொந்துபோ யொன்றும் நுவலா திருந்து விட்டார்.
மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்னரெலாம்
முற்றும் உரைஇழந்து மூங்கையர்போல் வீற்றிருந்தார். 48
விதுரன் சொல்வது
துரியோ தனன்இச் சுடுசொற்கள் கூறிடவும்,
பெரியோன் விதுரன் பெரிதுஞ் சினங்கொண்டு,
‘மூட மகனே, மொழியொணா வார்த்தையினைக்
கேடுவரஅறியாய், கீழ்மையினாற் சொல்லிவிட்டாய்.
புள்ளிச் சிறுமான் புலியைப்போய்ப் பாய்வதுபோல்,
பிள்ளைத் தவளை பெரும்பாம்பை மோதுதல்போல்,
ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய்.
தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகின்றாய்;
நின்னுடைய நன்மைக்கிந் நீதியெலாஞ் சொல்கிறேன்.
என்னுடைய சொல்வேறு எவர்பொருட்டும் இல்லையடா!
பாண்டவர்தாம் நாளைப் பழியிதனைத் தீர்த்திடுவார்,
மாண்டு தரைமேல், மகனே, கிடப்பாய்நீ.
தன்னழிவு நாடுந் தறுகண்மை என்னேடா?
முன்னமொரு வேனன் முடிந்தகதை கேட்டிலையோ?
நல்லோர் தமதுள்ளம் நையச் செயல்செய்தான்
பொல்லாத வேனன், புழுவைப்போல் மாய்ந்திட்டான்.
நெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மைஎனக் கொண்டாயோ?
மஞ்சனே, அச்சொல் மருமத்தே பாய்வதன்றோ?
கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்துவிடும்;
பட்டார்தம் நெஞ்சிற் பலநாள் அகலாது.
வெந்நரகு சேர்த்துவிடும், வித்தை தடுத்துவிடும்,
மன்னவனே, நொந்தார் மனஞ்சுடவே சொல்லுஞ்சொல்.
சொல்லி விட்டேன்; பின்னொருகால் சொல்லேன், கவுரவர்காள்!
புல்லியர்கட் கின்பம் புவித்தலத்தில் வாராது.
பேராசை கொண்டு பிழைச்செயல்கள் செய்கின்றீர்!
வாராத வன்கொடுமை மாவிபத்து வந்துவிடும்,
பாண்டவர்தம் பாதம் பணிந்தவர்பாற் கொண்டதெலாம்
மீண்டவர்க்கே ஈந்துவிட்டு, விநயமுடன்,
“ஆண்டவரே, யாங்கள் அறியாமை யால்செய்த
நீண்ட பழிஇதனை நீர்பொறுப்பீர்” என்றுரைத்து,
மற்றவரைத் தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர்.
குற்றந் தவிர்க்கும் நெறிஇதனைக் கொள்ளீரேல்,
மாபா ரதப்போர் வரும்; நீர் அழிந்திடுவீர்,
பூபால ரேஎன்றப் புண்ணியனுங் கூறினான்.
சொல்லிதனைக் கேட்டுத் துரியோதன மூடன்,
வல்லிடிபோல் ‘சீச்சி! மடையா, கெடுகநீ
எப்போதும் எம்மைச் சபித்தல் இயல்புனக்கே.
இப்போதுன் சொல்லை எவருஞ் செவிக்கொளார்.
யாரடா, தேர்ப்பாகன்! நீபோய்க் கணமிரண்டில்
“பாரதர்க்கு வேந்தன் பணித்தான்” எனக்கூறிப்
பாண்டவர்தந் தேவிதனைப் பார்வேந்தர் மன்றினிலே
ஈண்டழைத்து வா’என் றியம்பினான். ஆங்கேதேர்ப் பாகன் விரைந்துபோய்ப் பாஞ்சாலி வாழ்மனையில்
சோகம் ததும்பித் துடித்த குரலுடனே,
‘அம்மனே போற்றி! அறங்காப்பாய், தாள்போற்றி!
வெம்மை யுடைய விதியால் யுதிட்டிரனார்
மாமன் சகுனியொடு மாயச் சூதாடியதில்,
பூமி யிழந்து பொருளிழந்து தம்பியரைத்
தோற்றுத் தமது சுதந்திரமும் வைத்திழந்தார்.
சாற்றிப் பணயமெனத் தாயே உனைவைத்தார்.
சொல்லவுமே நாவு துணியவில்லை; தோற்றிட்டார்.
எல்லாருங் கூடி யிருக்கும் சபைதனிலே,
நின்னை அழைத்துவர நேமித்தான் எம்மரசன்’
என்ன உரைத்திடலும், ‘யார்சொன்ன வார்த்தையடா!
சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா? யார்பணியால்
என்னை அழைக்கின்றாய்?’ என்றாள். அதற்கவனும்
‘மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால்’ என்றிட்டான்
. ‘நல்லது; நீ சென்று நடந்தகதை கேட்டு வா.
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்
என்னைமுன்னே கூறி இழந்தாரா? தம்மையே
முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா?
சென்று சபையில்இச் செய்தி தெரிந்துவா,
என்றவளுங் கூறி, இவன்போகியபின்னர்,
தன்னந் தனியே தவிக்கும் மனத்தாளாய்,
வன்னங் குலைந்து மலர்விழிகள் நீர்சொரிய,
உள்ளத்தை அச்சம் உலைஉறுத்தப் பேய்கண்ட
பிள்ளையென வீற்றிருந்தாள். பின்னந்தத் தேர்ப்பாகன்
மன்னன் சபைசென்று, ‘வாள்வேந்தே! ஆங்கந்தப்
பொன்னரசி தாள்பணிந்து “போதருவீர்” என்றிட்டேன்.
“என்னைமுதல் வைத்திழந்தபின்பு தன்னைஎன்
மன்னர் இழந்தாரா? மாறித் தமைத்தோற்ற
பின்னரெனைத் தோற்றாரா?” என்றேநும் பேரவையை
மின்னற் கொடியார் வினவிவரத் தாம்பணித்தார்.
வந்துவிட்டேன்’ என்றுரைத்தான். மாண்புயர்ந்த பாண்டவர்தாம்
நொந்துபோ யொன்றும் நுவலா திருந்து விட்டார்.
மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்னரெலாம்
முற்றும் உரைஇழந்து மூங்கையர்போல் வீற்றிருந்தார். 48
துரியோதனன் சொல்வது
வேறு
உள்ளந் துடித்துச் சுயோதனன் -- சினம்
ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான்: -- ‘அட ,
பிள்ளைக் கதைகள் விரிக்கிறாய். -- என்றன்
பெற்றி யறிந்திலை போலும், நீ! -- அந்தக்
கள்ளக் கரிய விழியினாள் -- அவள்
கல்லிகள் கொண்டிங்கு வந்தனை! -- அவள்
கிள்ளை மொழியின் நலத்தையே! -- இங்கு
கேட்க விரும்புமென் னுள்ளமே. 49
‘வேண்டிய கேள்விகள் கேட்கலாம், -- சொல்ல
வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம், -- மன்னர்
நீண்ட பெருஞ்சபை தன்னிலே -- அவள்
நேரிடவே வந்த பின்புதான். -- சிறு
கூண்டிற் பறவையு மல்லளே? -- ஐவர்
கூட்டு மனைவிக்கு நாணமேன்? -- சினம்
மூண்டு கடுஞ்செயல் செய்யுமுன் -- அந்த
மொய்குழ லாளைஇங் கிட்டுவா. 50
‘மன்னன் அழைத்தனன் என்றுநீ -- சொல்ல
மாறியவ ளொன்று சொல்வதோ? -- உன்னைச்
சின்னமுறச் செய்கு வேனடா! -- கணஞ்
சென்றவளைக் கொணர்வாய்’என்றான். -- அவன்
சொன்ன மொழியினைப் பாகன்போய் -- அந்தத்
தோகைமுன் கூறி வணங்கினான். -- அவள்
இன்னல் விளைந்திவை கூறுவாள் -- ‘தம்பி,
என்றனை வீணில் அழைப்பதேன்? 51
திரௌபதி சொல்லுதல்
'நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் -- என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை. -- புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின், -- என்னை
சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர்; -- புவி
தாங்குந் துருபதன் கன்னிநான். -- நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால், -- பின்பு
தார முடைமை அவர்க்குண்டோ! 52
'கௌரவ வேந்தர் சபைதன்னில் -- அறங்
கண்டவர் யாவரும் இல்லையோ? -- மன்னர்
சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே -- அங்கு
சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ? -- புகழ்
ஒவ்வுற வாய்ந்த குருக்களும் -- கல்வி
ஓங்கிய மன்னருஞ் சூதிலே -- செல்வம்
வவ்வுறத் தாங்கண் டிருந்தனர்; என்றன்
மான மழிவதும் காண்பரோ? 53
'இன்பமுந் துன்பமும் பூமியின் -- மிசை
யார்க்கும் வருவது கண்டனம்; -- எனில்
மன்பதை காக்கும் அரசர்தாம் -- அற
மாட்சியைக் கொன்று களிப்பரோ? -- அதை
அன்புந் தவமுஞ் சிறந்துளார் -- தலை
யந்தணர் கண்டு களிப்பரோ? -- அவர்
முன்பென் வினாவினை மீட்டும்போய்ச் -- சொல்லி
முற்றுந் தெளிவுறக் கேட்டுவா? 54
என்றந்தப் பாண்டவர் தேவியும் -- சொல்ல,
என்செய்வன் ஏழையப் பாகனே? -- 'என்னைக்
கொன்றுவிட் டாலும் பெரிதில்லை. -- இவள்
கூறும் வினாவிற் கவர்விடை -- தரி
னன்றி இவளை மறுமுறை -- வந்து
அழைத்திட நானங் கிசைந்திடேன்? -- (என)
நன்று மனத்திடைக் கொண்டவன் -- சபை
நண்ணி நிகழ்ந்தது கூறினான். 55
?மாத விடாயி லிருக்கிறாள் -- அந்த
மாதர? கென்பதுங் கூறினான். -- கெட்ட
பாதகன் நெஞ்சம் இளகிடான் -- நின்ற
பாண்டவர் தம் முகம் நோக்கினான்; -- அவர்
பு{[குறிப்பு]: 'என்றன்' என்று ஒரு தனிச்
சொல் ஊகித்துக் கொள்ளலாம்
என்கிறார் கவிமணி. 'ஏன்' என்பது
முதற்பதிப்பிலில்லை; ஊகித்துக் கொண்ட பாடம்.}
பேதுற்று நிற்பது கண்டனன். -- மற்றும்
பேரவை தன்னில் ஒருவரும் -- இவன்
தீதுற்ற சிந்தை தடுக்கவே -- உள்ளத்
திண்மை யிலாதங் கிருந்தனர். 56
பாகனை மீட்டுஞ் சினத்துடன் -- அவன்
பார்த்திடி போலுரை செய்கின்றான்: -- 'பின்னும்
ஏகி நமதுளங் கூறடா! -- அவள்
ஏழு கணத்தில் வரச்செய்வாய்! -- உன்னைச்
சாக மிதித்திடு வேனடா!? -- என்று
தார்மன்னன் சொல்லிடப் பாகனும் -- மன்னன்
வேகந் தனைப்பொருள் செய்திடான் -- அங்கு
வீற்றிருந் தோர்தமை நோக்கியே, 57
'சீறும் அரசனுக் கேழையேன் -- பிழை
செய்ததுண்டோ? அங்குத் தேவியார் -- தமை
நூறு தரஞ்சென் றழைப்பினும், -- அவர்
நுங்களைக் கேட்கத் திருப்புவார்; -- அவர்
ஆறுதல் கொள்ள ஒருமொழி -- சொல்லில்,
அக்கண மேசென் றழைக்கிறேன்; -- மன்னன்
கூறும் பணிசெய வல்லன்யான்; -- அந்தக்
கோதை வராவிடில் என்செய்வேன்?' 58
துரியோதனன் சொல்வது
பாகன் உரைத்தது கேட்டனன் -- பெரும்
பாம்புக் கொடியவன் சொல்கிறான்: -- ‘அவன்
பாகன் அழைக்க வருகிலள்; -- இந்தப்
பையலும் வீமனை அஞ்சியே -- பல
வாகத் திகைப்புற்று நின்றனன்; -- இவன்
அச்சத்தைப் பின்பு குறைக்கிறேன், -- ‘தம்பீ!
போகக் கடவைஇப் போதங்கே; -- இங்க
பொற்றொடி யோடும் வருகநீ! 59
5.ஐந்தாவது சபதச் சருக்கம்
துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல்
துகிலுரிதல் சருக்கம் முற்றிற்று.
இவ்வுரை கேட்டதுச் சாதனன் -- அண்ணன்
இச்சையை மெச்சி எழுந்தனன். -- இவன்
செவ்வி சிறிது புகலுவோம். -- இவன்
தீமையில் அண்ணனை வென்றவன்; -- கல்வி
எவ்வள வேனுமி லாதவன்; -- கள்ளும்
ஈரக் கறியும் விரும்புவோன்; -- பிற
தெவ்வர் இவன்றனை அஞ்சுவார்; -- தன்னைச்
சேர்ந்தவர் பேயென் றொதுங்குவார்; 60
புத்தி விவேகமில் லாதவன்; -- புலி
போல உடல்வலி கொண்டவன்; -- கரை
தத்தி வழியுஞ் செருக்கினால் -- கள்ளின்
சார்பின்றி யேவெறி சான்றவன்; -- அவ
சக்தி வழிபற்றி நின்றவன்; -- சிவ
சக்தி நெறிஉண ராதவன்; -- இன்பம்
நத்தி மறங்கள் இழைப்பவன்; -- என்றும்
நல்லவர் கேண்மை விலக்கினோன்; 61
அண்ண னொருவனை யன்றியே -- புவி
அத்தனைக் குந்தலை யாயினோம் -- என்னும்
எண்ணந் தனதிடைக் கொண்டவன்; -- அண்ணன்
ஏது சொன்னாலும் மறுத்திடான்; -- அருட்
பு{[பாட பேதம்]: ‘ஈரற்கறியும்’}
-- கவிமணி
கண்ணழி வெய்திய பாதகன் -- ‘அந்தக்
காரிகை தன்னை அழைத்துவா’ என்றவ்
வண்ண னுரைத்திடல் கேட்டனன்; -- நல்ல
தாமென் றுறுமி எழுந்தனன். 62
பாண்டவர் தேவி யிருந்ததோர் -- மணிப்
பைங்கதிர் மாளிகை சார்ந்தனன்; -- அங்கு
நீண்ட துயரில் குலைந்துபோய் -- நின்ற
நேரிழை மாதினைக் கண்டனன்; -- அவள்
தீண்டலை யெண்ணி ஒதுங்கினாள்; -- ‘அடி,
செல்வ தெங்கே’யென் றிரைந்திட்டான். -- ‘இவன்
ஆண்டகை யற்ற புலைய’னென்று -- அவள்
அச்ச மிலாதெதிர் நோக்கியே, 63
திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்
‘தேவர் புவிமிசைப் பாண்டவர்; -- அவர்
தேவி, துருபதன் கன்னிநான்; -- இதை
யாவரும் இற்றை வரையினும், -- தம்பி,
என்முன் மறந்தவரில்லைகாண். -- தம்பி
காவ லிழந்த மதிகொண்டாய்; -- இங்குக்
கட்டுத் தவறி மொழிகிறாய். -- தம்பி,
நீவந்த செய்தி விரைவிலே -- சொல்லி
நீங்குக’ என்றனள் பெண்கொடி. 64
‘பாண்டவர் தேவியு மல்லைநீ; -- புகழ்ப்
பாஞ்சாலத் தான்மக ளல்லைநீ; -- புவி
யாண்டருள் வேந்தர் தலைவனாம் -- எங்கள்
அண்ணனுக் கேயடி மைச்சிநீ. -- மன்னர்
நீண்ட சபைதனிற் சூதிலே -- எங்கள்
நேசச் சகுனியோ டாடியங்கு -- உன்னைத
தூண்டும் பணய மெனவைத்தான் -- இன்று
தோற்றுவிட்டான் தருமேந்திரன். 65
‘ஆடி விலைப்பட்ட தாதி நீ; -- உன்னை
ஆள்பவன் அண்ணன் சுயோதனன். -- “மன்னர்
கூடி யிருக்குஞ் சபையிலே -- உன்னைக்
கூட்டி வரு”கென்று மன்னவன் -- சொல்ல
ஓடிவந் தேனிது செய்திகாண். -- இனி
ஒன்றுஞ்சொலா தென்னொ டேகுவாய். -- அந்தப்
பேடி மகனொரு பாகன்பாற் -- சொன்ன
பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே.’ 66
வேறு
துச்சா தனனிதனைச் சொல்லினான். பாஞ்சாலி: --
‘அச்சா, கேள். மாதவிலக் காதலா லோராடை
தன்னி லிருக்கிறேன். தார்வேந்தர் பொற்சபைமுன்
என்னை யழைத்தல் இயல்பில்லை. அன்றியுமே,
சோதரர்தந் தேவிதனைச் சூதில் வசமாக்கி,
ஆதரவு நீக்கி, அருமை குலைத்திடுதல்,
மன்னர் குலத்து மரபோகாண்? அண்ணன்பால்
என்னிலைமை கூறிடுவாய், ஏகுகநீ’ என்றிட்டாள்.
கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன்
பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக்
கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான்.
‘ஐயகோ’ வென்றே யலறி யுணர்வற்றுப்
பாண்டவர்தந் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர,
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான். வழிநெடுக, மொய்த்தவராய்,
‘என்ன கொடுமையிது’வென்று பார்த்திருந்தார்.
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள். விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கேபோய்க் ‘கோ’வென் றலறினாள்.
சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்
விம்மியழுதாள்: -- ‘விதியோ கணவரே,
அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை
வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ்செய்து,
பாதகர்முன் இந்நால் பரிசழிதல் காண்பீரோ?’
என்றாள். விஜயனுடன் ஏறுதிறல் வீமனுமே
குன்றா மணித்தோள் குறிப்புடனே நோக்கினார்.
தருமனும் மற்றாங்கே தலைகுனிந்து நின்றிட்டான்.
பொருமியவள் பின்னும் புலம்புவாள்: -- ‘வான்சபையில்
கேள்வி பலவுடையோர், கேடிலா நல்லிசையோர்,
வேள்வி தவங்கள் மிகப்புரிந்த வேதியர்கள்,
மேலோரிருக்கின்றீர். வெஞ்சினமேன் கொள்கிலரோ?
வேலோ ரெனையுடைய வேந்தர் பிணிப்புண்டார்.
இங்கிவர்மேற் குற்றம் இயம்ப வழியில்லை.
மங்கியதோர் புன்மதியாய்! மன்னர் சபைதனிலே
என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய்.
நின்னை யெவரும் “நிறுத்தடா” என்பதிலர்.
என் செய்கேன்?’ என்றே இரைந்தழுதாள். பாண்டவரை
மின்செய் கதிர்விழியால் வெந்நோக்கு நோக்கினாள்.
மற்றவர் தாம்முன்போல் வாயிழந்து சீர்குன்றிப்
பற்றைகள்போல் நிற்பதனைப் பார்த்து, வெறிகொண்டு்
‘தாதியடி தாதி!’ யெனத் துச்சாதனன் அவளைத்
தீதுரைகள் கூறினான். கர்ணன் சிரித்திட்டான்.
சகுனி புகழ்ந்தான். சபையினோர்? வீற்றிருந்தார்!
தகுதியுயர் வீட்டுமனுஞ் சொல்கின்றான்: ‘தையலே,
வீட்டுமாசாரியன் சொல்வது
சூதாடி நின்னை யுதிட்டிரனே தோற்றுவிட்டான்.
வாதாடி நீயவன்றன் செய்கை மறுக்கின்றாய்.
சூதிலே வல்லான் சகுனி. தொழில்வலியால்,
மாதரசே, நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான்.
மற்றிதனி லுன்னையொரு பந்தயமா வைத்ததே
குற்றமென்று சொல்லுகிறாய். கோமகளே, பண்டையுக
வேதமுனிவர் விதிப்படி, நீ சொல்லுவது
நீதமெனக் கூடும்; நெடுங்காலச் செய்தியது!
ஆணொடுபெண் முற்றும் நிகரெனவே அந்நாளில்
பேணிவந்தார். பின்னாளில் இஃது பெயர்ந்துபோய்,
இப்பொழுதை நூல்களினை யெண்ணுங்கால், ஆடவருக்
கொப்பில்லை மாதர். ஒருவன்தன் தாரத்தை
விற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம்.
முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை.
தன்னை யடிமையென விற்றபின் னுந்தருமன்
நின்னை யடிமையெனக் கொள்வதற்கு நீதியுண்டு.
செல்லு நெறியறியார் செய்கையிங்குப் பார்த்திடிலோ,
கல்லும் நடுங்கும், விலங்குகளும் கண்புதைக்கும்,
செய்கை அநீதியென்று தேர்ந்தாலும், சாத்திரந்தான்
வைகு நெறியும் வழக்கமும்நீ கேட்பதனால்,
ஆங்கவையும் நின்சார்பி லாகா வகையுரைத்தேன்.
தீங்கு தடுக்குந் திறமிலேன்’ என்றந்த
மேலோன் தலைகவிழ்ந்தான். மெல்லியளுஞ் சொல்லுகிறாள்: --
திரௌபதி சொல்வது
‘சாலநன்கு கூறினீர் ஐயா, தருமநெறி
பண்டோர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால்
கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின், கூட்டமுற
மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே,
செந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத்திடுங்கால்
“தக்கதுநீர் செய்தீர்; தருமத்துக் கிச்செய்கை
ஒக்கும்” எனக் கூறி உகந்தனராம் சாத்திரிமார்!
பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்.
மாய முணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ?
மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?
பெண்டிர் தமையுடையீர்! பெண்க ளுடன்பிறந்தீர்!
பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ?
கண்பார்க்க வேண்டும்!’ என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
அம்புபட்ட மான்போல் அழுது துடிதுடித்தாள்.
வம்பு மலர்க்கூந்தல் மண்மேற் புரண்டுவிழத்
தேவி கரைந்திடுதல் கண்டே, சிலமொழிகள்
பாவி துச்சாதனனும் பாங்கிழந்து கூறினான். 67
வேறு
ஆடை குலைவுற்று நிற்கிறாள்; -- அவள்
ஆவென் றழுது துடிக்கிறாள். -- வெறும்
மாடு நிகர்த்த துச்சாதனன் -- அவள்
மைக்குழல் பற்றி யிழுக்கிறான். -- இந்தப
பீடையை நோக்கினன் வீமனும், -- கரை
மீறி எழுந்தது வெஞ்சினம்; -- துயர்
கூடித் தருமனை நோக்கியே, -- அவன்
கூறிய வார்த்தைகள் கேட்டீரா? 68
வீமன் சொல்வது
வேறு
‘சூதர் மனைகளிலே -- அண்ணே!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே -- அங்கோர்
தொண்டச்சி போவதில்லை. 69
‘ஏது கருதிவைத்தாய்? -- அண்ணே,
யாரைப் பணயம்வைத்தாய்?
மாதர் குலவிளக்கை -- அன்பே
வாய்ந்த வடிவழகை. 70
‘பூமி யரசரெல்லாங் -- கண்டே
போற்ற விளங்குகிறான்,
சாமி, புகழினுக்கே -- வெம்போர்ச்
சண்டனப் பாஞ்சாலன். 71
‘அவன் சுடர்மகளை, -- அண்ணே,
ஆடி யிழந்துவிட்டாய்.
தவறு செய்துவிட்டாய்; -- அண்ணே,
தருமங் கொன்றுவிட்டாய். 72
‘சோரத்திற் கொண்டதில்லை; -- அண்ணே
, சூதிற் படைத்ததில்லை.
வீரத்தினாற் படைத்தோம்; -- வெம்போர்
வெற்றியினாற் படைத்தோம்; 73
‘சக்கரவர்த்தி யென்றே -- மேலாந்
தன்மை படைத் திருந்தோம்;
பொக்கென ஓர்கணத்தே -- எல்லாம்
போகத் தொலைத்துவிட்டாய். 74
‘நாட்டையெல்லாந் தொலைத்தாய்; -- அண்ணே,
நாங்கள் பொறுத்திருந்தோம்.
மீட்டும் எமையடிமை -- செய்தாய்,
மேலும் பொறுத்திருந்தோம். 75
‘துருபதன் மகளைத் -- திட்டத்
துய்ந னுடற்பிறப்பை, --
இருபகடை யென்றாய், -- ஐயோ!
இவர்க் கடிமையென்றாய்! 76
‘இதுபொறுப்ப தில்லை, -- தம்பி!
எரிதழல் கொண்டுவா.
கதிரை வைத்திழந்தான் -- அண்ணன்
கையை எரித்திடுவோம்.’ 77
அர்ஜுனன் சொல்வது
வேறு
எனவீமன் சகதேவ னிடத்தே சொன்னான்.
இதைக்கேட்டு வில்விஜயன் எதிர்த்துச் சொல்வான்:
‘மனமாரச் சொன்னாயோ? வீமா! என்ன
வார்த்தை சொன்னாய்? எங்குசொன்னாய்? யாவர் முன்னே?
கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக்
களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்;
சினமான தீஅறிவைப் புகைத்த லாலே,
திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய். 78
‘“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம்மறு படிவெல்லும்” எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
. தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனுஉண்டு காண்டீவம் அதன்பேர்’ என்றான். 79
விகர்ணன் சொல்வது
அண்ணனுக்குத் திறல்வீமன் வணங்கி நின்றான்.
அப்போது விகர்ணனெழுந் தவைமுன் சொல்வான்:
‘பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன
பேச்சதனை நான்கொள்ளேன். பெண்டிர் தம்மை
எண்ணமதில் விலங்கெனவே கணவரெண்ணி
ஏதெனிலுஞ் செய்திடலாம் என்றான் பாட்டன்.
வண்ணமுயர் வேதநெறி மாறிப் பின்னாள்
வழங்குவதிந் நெறிஎன்றான்; வழுவே சொன்னான். 80
‘எந்தையர்தாம் மனைவியரை விற்ப துண்டோ?
இதுகாறும் அரசியரைச் சூதிற் தோற்ற
விந்தையைநீர் கேட்ட துண்டோ? விலைமாதர்க்கு
விதித்ததையே பிற்கால நீதிக்காரர்
சொந்தமெனச் சாத்திரத்தில் புகுத்தி விட்டார்!
சொல்லளவேதானாலும், வழக்கந் தன்னில்
இந்தவிதஞ் செய்வதில்லை; சூதர் வீட்டில்
ஏவற்பெண் பணயமில்லை என்றுங் கேட்டோம். 81
‘“தன்னையிவன் இழந்தடிமை யான பின்னர்த்
தாரமெது? வீடேது? தாத னானா
பின்னையுமோர் உளடைமை உண்டோ?” என்றுநம்மைப்
பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால்.
மன்னர்களே, களிப்பதுதான் சூதென் றாலும்
மனுநீதி துறந்திங்கே வலிய பாவந்
தன்னைஇரு விழிபார்க்க வாய்பே சீரோ?
தாத்தனே, நீதிஇது தகுமோ?’ என்றான். 82
இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார்;
எழுந்திட்டார் சிலவேந்தர்; இரைச்ச லிட்டார்;
‘ஒவ்வாது சகுனிசெயுங் கொடுமை’ என்பார்;
‘ஒருநாளும் உலகிதனை மறக்கா’ தென்பார்;
‘எவ்வாறு புகைந்தாலும் புகைந்து போவீர்;
ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா.
செவ்வானம் படர்ந்தாற்போல் இரத்தம் பாயச்
செருக்களத்தே தீருமடா பழியிஃ’தென்பார். 83
கர்ணன் பதில்
வேறு
விகருணன் சொல்லைக் கேட்டு
வில்லிசைக் கர்ணன் சொல்வான்: --
‘தகுமடா, சிறியாய், நின்சொல்.
தாரணி வேந்தர் யாரும்
புகுவது நன்றன் றெண்ணி
வாய்புதைத் திருந்தார், நீதான்
மிகுமுரை சொல்லி விட்டாய்.
விரகிலாய்! புலனு மில்லாய்! 84
பெண்ணிவள் தூண்ட லெண்ணிப்
பசுமையால் பிதற்றுகின்றாய்;
எண்ணிலா துரைக்க லுற்றாய்;
இவளைநாம் வென்ற தாலே
நண்ணிடும் பாவ மென்றாய்,
நாணிலாய்! பொறையு மில்லாய்!
கண்ணிய நிலைமை யோராய்;
நீதிநீ காண்ப துண்டோ? 85
மார்பிலே துணியைத் தாங்கும்
வழக்கங்கீ ழடியார்க் கில்லை.
சீரிய மகளு மல்லள்;
ஐவரைக் கலந்த தேவி.
யாரடா, பணியாள்! வாராய்;
பாண்டவர் மார்பி லேந்தும்
சீரையுங் களைவாய்; தையல்
சேலையுங் களைவாய்’ என்றான். 86
இவ்வுரை கேட்டா ரைவர்;
பணிமக்க ளேவா முன்னந்
தெவ்வர்கண் டஞ்சு மார்பைத்
திறந்தனர், துணியைப் போட்டார்.
நவ்வியைப் போன்ற கண்ணாள்,
ஞானசுந்தரிபாஞ்சாலி
‘எவ்வழி உய்வோ’ மென்றே
தியங்கினாள், இணைக்கை கோத்தாள். 87
திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை
வேறு
துச்சா தனன்எழுந்தே -- அன்னை
துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்.
‘அச்சோ தேவர்களே!’ -- என்று
அலறியவ் விதுரனுந் தரைசாய்ந்தான்.
பிச்சேறி யவனைப்போல் -- அந்தப்
பேயனுந் துகிலினை உரிகையிலே,
உட்சோதி யிற்கலந்தாள்; -- அன்னை
உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள். 88
‘ஹரி, ஹரி, ஹரி என்றாள்; -- கண்ணா!
அபய மபயமுனக் கபயமென்றாள்.
கரியினுக் கருள்புரிந்தே -- அன்று
கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்,
கரியநன்னிற முடையாய், -- அன்று
காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!
பெரியதொர் பொருளாவாய், -- கண்ணா!
பேசரும் பழமறைப் பொருளாவாய்! 89
‘சக்கர மேந்திநின்றாய், -- கண்ணா!
சார்ங்கமென் றொருவில்லைக் கரத்துடையாய்!
அட்சரப் பொருளாவாய், -- கண்ணா!
அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய், -- கண்ணா!
தொண்டர்கண்ணீர்களைத் துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக்காப்பாய், -- அந்தச்
சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய். 90
‘வானத்துள் வானாவாய்; -- தீ
மண்நீர் காற்றினில் அவையாவாய்;
மோனத்துள் வீழ்ந்திருப்பார் -- தவ
முனிவர்தம் அகத்தினி லொளிர்தருவாய்!
கானத்துப் பொய்கையிலே -- தனிக்
கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து ஸ்ரீ தேவி, -- அவள்
தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பாய்! 91
‘ஆதியி லாதியப்பா, -- கண்ணா!
அறிவினைக் கடந்தவிண் ணகப்பொருளே,
சோதிக்குச் சோதியப்பா, -- என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!
மாதிக்கு வெளியினிலே -- நடு
வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!
சுடர்ப்பொருளே பேரடற்பொருளே! 92
‘“கம்பத்தி லுள்ளானோ? -- அடா!
காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செய்யுமூடா” -- என்று
மகன்மிசை யுறுமியத் தூணுதைத்தான்,
செம்பவிர் குழலுடையான், -- அந்தத்
தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!
நம்பிநின் னடிதொழுதேன்; -- என்னை
நாணழியா திங்குக் காத்தருள்வாய். 93
‘வாக்கினுக் கீசனையும் -- நின்றன்
வாக்கினி லசைத்திடும் வலிமையினாய்,
ஆக்கினை கரத்துடையாய், -- என்றன்
அன்புடை எந்தை, என் னருட்கடலே,
நோக்கினிற் கதிருடையாய், -- இங்கு
நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்,
தேக்குநல் வானமுதே! -- இங்கு
சிற்றிடை யாச்சியில் வெண்ணெஉண்டாய்! 94
‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!
மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே -- சரண்.
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.
பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல
புண்ணிய வாணர்தம் புகழினைப்போல்,
தையலர் கருணையைப்போல், -- கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல், 95
பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,
கண்ணபிரா னருளால், -- தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!
எண்ணத்தி லடங்காவே; -- அவை
எத்தனை எத்தனை நிறத்தனவோ! 96
பொன்னிழை பட்டிழையும் -- பல
புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்,
சென்னியிற் கைகுவித்தாள் -- அவள்
செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே,
முன்னிய ஹரிநாமம் -- தன்னில்
மூளுநற் பயனுல கறிந்திடவே,
துன்னிய துகிற்கூட்டம் -- கண்டு
தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான். 97
தேவர்கள் பூச்சொரிந்தார் -- ‘ஓம்
ஜெயஜெய பாரத சக்தி!’ என்றே.
ஆவலோ டெழுந்துநின்று -- முன்னை
ஆரிய வீட்டுமன் கைதொழுதான்.
சாவடி மறவரெல்லாம் ‘ஓம்
சக்திசக்திசக்தி’ என்று கரங்குவித்தார்.
காவலின் நெறிபிழைத்தான், -- கொடி
கடியர வுடையவன் தலைகவிழ்ந்தான். 98
வீமன் செய்த சபதம்
வேறு
வீமனெழுந்துரை செய்வான்; -- ‘இங்கு
விண்ணவ ராணை, பராசக்தி யாணை;
தாமரைப் பூவினில் வந்தான் -- மறை
சாற்றிய தேவன் திருக்கழ லாணை;
மாமகளைக் கொண்ட தேவன் -- எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன்பதத் தாணை;
காமனைக் கண்ணழ லாலே -- சுட்டுக்
காலனை வென்றவன் பொன்னடி மீதில் 99
‘ஆணையிட் டிஃதுரை செய்வேன்: -- இந்த
ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை,
பேணும் பெருங்கன லொத்தாள் -- எங்கள்
பெண்டு திரௌபதியைத் தொடைமீதில்
பு{[பாட பேதம்]: ‘மூளு நற்’
-- கவிமணி}
நாணின்றி “வந்திரு” என்றான் -- இந்த
நாய்மக னாந்துரி யோதனன் றன்னை,
மாணற்ற மன்னர்கண் முன்னே, -- என்றன்
வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே, 100
‘தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன் -- தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்; -- அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்.
நடைபெறுங் காண்பி ருலகீர்! -- இது
நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா!
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை, -- இது
சாதனை செய்க, பராசக்தி!’ என்றான். 101
அர்ஜுனன் சபதம்
பார்த்த னெழுந்துரை செய்வான்: -- ‘இந்தப்
பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்.
தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு -- எங்கள்
சீரிய நண்பன் கண்ணன்கழலாணை;
கார்த்தடங் கண்ணிஎந்தேவி -- அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய், -- ஹே!
பூதலமே! அந்தப் போதினில்’ என்றான். 102
பாஞ்சாலி சபதம்
தேவி திரௌபதி சொல்வாள் -- ‘ஓம்,
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவிதுச் சாதனன் செந்நீர், -- அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து -- குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன்யான்; -- இது
செய்யுமுன்னேமுடியே’னென் றுரைத்தாள். 103
ஓமென் றுரைத்தனர் தேவர்; -- ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
பூமி யதிர்ச்சி உண்டாச்சு. -- விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று.
சாமி தருமன் புவிக்கே -- என்று
சாட்சி யுரைத்தன பூதங்க ளைந்தும்.
நாமுங் கதையை முடித்தோம். -- இந்த
நானில முற்றும்நல்லின்பத்தில் வாழ்க. 104