Our elder brother is our lord | Sabha Parva - Section 69 | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
திரௌபதியின் கேள்விகளுக்கு அச்சபை பதில் சொல்லாததுது; துரியோதனன், திரௌபதியிடம் தனது கணவன்மார்கள் யுதிஷ்டிரனைத் தங்கள் தலைவன் இல்லை என்று சொல்லட்டும், உன்னை அடிமை வாழ்வில் இருந்து விடுவிக்கிறேன் என்று கூறல்; பீமன் யுதிஷ்டிரன் எங்கள் தலைவனே என்று கூறல்...
வைசம்பாயனர் சொன்னார் "துரியோதனன் மீதிருந்த பயத்தால், பெண் விரலடிப்பான் பறவை {Female Osprey} போல, பாவமாக அழுதுகொண்டு திரும்பத் திரும்பக் கோரிக்கை வைத்த திரௌபதியைக் கண்டும், அந்தச் சபையில் இருந்த மன்னர்கள் யாரும் நன்மையாகவோ தீமையாகவோ ஒரு வார்த்தையும் பேசவில்லை. அந்த மன்னர்களும், அவர்களின் மகன்களும் பேரன்களும் அமைதியாக இருப்பதைக் கண்ட திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்}, மெல்லச் சிரித்து, பாஞ்சால மன்னன் {துருபதன்} மகளிடம் {திரௌபதியிடம்}, "ஓ யக்ஞசேனி, நீ கேட்டிருக்கும் கேள்வி உனது கணவர்களான பெரும் பலம் வாய்ந்த பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரைச் சார்ந்து இருக்கிறது. அவர்களே {பாண்டவர்களே} உனது கேள்விக்கு பதிலளிக்கட்டும்.
![]() |
English : OspreyScientific Name : Pandion haliaetusவிரலடிப்பான் பறவை |
ஓ பாஞ்சாலி, அவர்கள் {பாண்டவர்கள்} உனக்காக, இந்த மதிப்பு மிக்க மனிதர்களின் முன்னிலையில் யுதிஷ்டிரன் தங்கள் தலைவன் இல்லை எனத் தீர்மானித்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பொய்யனாக ஆக்கட்டும். பிறகு நீ இந்த அடிமை நிலையில் இருந்து விடுவிக்கப்படுவாய். தர்மனின் இந்த சிறப்புமிகுந்த மகன் {யுதிஷ்டிரன்}, எப்போதும் அறம் சார்ந்து இருப்பவன். இந்திரனைப் போல இருக்கும் அவனே {யுதிஷ்டிரனே} உனக்குத் தான் தலைவனா இல்லையா என்று தீர்மானிக்கட்டும். அவனது {யுதிஷ்டிரனது} வார்த்தைகளைக் கொண்டு, நீ பாண்டவர்களையோ அல்லது எங்களையோ தாமதமில்லாமல் ஏற்றுக் கொள். உண்மையில், இந்தச் சபையில் இருக்கும் கௌரவர்கள் அனைவரும் உனது துயரம் எனும் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றனர். பேறிலிகளான உனது கணவர்களைக் கண்டு, பெருந்தன்மையுடன் இருக்கும் அவர்களால் {சபையோர்களால்} உனது கேள்விக்கு பதிலளிக்க இயலவில்லை" என்றான் {துரியோதனன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "குரு மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு, அந்த சபையில் இருந்தவர்கள் சத்தமாகப் பாராட்டினார்கள். அங்கீகரிக்கும் வகையில் கூச்சலிட்டு, தங்கள் கண் மற்றும் உதட்டு அசைவுகளால் ஒருவருக்கொருவர் குறிப்பால் பேசிக்கொண்டனர். மேலும், அவர்களில் சிலரிடம் இருந்து "ஓ", "ஐயோ" என்ற குரல்கள் கேட்டன. மகிழ்ச்சிகரமான துரியோதனனின் வார்த்தைகளால், அங்கிருந்த (அவனைச் சார்ந்த) கௌரவர்கள், மிக மகிழ்ச்சியடைந்தனர். அந்த மன்னர்கள் தங்கள் முகங்களை அறத்தின் விதிகளை அறிந்த யுதிஷ்டிரன் பக்கம் திருப்பி, அவன் {யுதிஷ்டிரன்} என்ன சொல்லப்போகிறான் என்று ஆவலாகப் பார்த்தனர். அந்த சபையில் இருந்த அனைவரும், போர்க்களத்தில் தோற்காத பாண்டுவின் மகனான அர்ஜுனன் என்ன சொல்வான் என்றும், பீமசேனன் என்ன சொல்வான் என்றும், இரட்டையர்கள் என்ன சொல்வார்கள் என்றும் கேட்க ஆவலாக இருந்தனர். அங்கே கேட்ட பல குரல்களின் ஹூங்காரம் நின்றதும், பீமசேனன், சந்தனம் பூசிய தனது பலம்வாய்ந்த நன்கு அமைந்த கரங்களை ஆட்டி, "எங்கள் அண்ணனாகிய இந்த நீதிமானான உயர் ஆன்ம மன்னன் யுதிஷ்டிரன், எங்களுக்கு தலைவனாக இல்லையெனில், நாங்கள் இந்த குருக்கள் குலத்தை (இவை அனைத்திற்காகவும்) மன்னித்திருக்கவே மாட்டோம். எங்களது எல்லா அறம் மற்றும் தவத்தகுதிகள் அனைத்திற்கும், ஏன் எங்கள் உயிர்களுக்கும் கூட அவரே {யுதிஷ்டிரரே} தலைவர். அவர் தான் வெல்லப்பட்டதாகக் கருதினால், நாங்கள் வெல்லப்பட்டவர்களே. அது அப்படியில்லையெனில், இந்தப் பூமியைத் தங்கள் பாதங்களால் தொடும் எந்த உயிரினமும், பாஞ்சால இளவரசியின் கூந்தலைத் தொட்ட பிறகு, என்னிடம் இருந்து உயிருடன் தப்ப முடியாது. அறத்தின் முடிச்சுகளால் கட்டப்பட்டு, எங்கள் அண்ணன் {யுதிஷ்டிரன்} மீதிருக்கும் மரியாதையாலும், அமைதியாக இருக்குமாறு அர்ஜுனன் தொடர்ந்து கேட்டுக் கொள்வதாலும், நான் எந்தப் பயங்கரத்தையும் செய்யவில்லை. எனினும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் கட்டளையிட்டால், சிறு விலங்குகளை சிங்கம் கொல்வதைப் போல, வாளின் வேலையை எனது அறைகளால் {Slaps} செய்து, திருதராஷ்டிரரின் இந்தக் கேடுகெட்ட மகன்களைக் கொல்வேன்" என்றான் {பீமன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைப் பேசிய பீமனிடம், பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோர், "ஓ பீமா, பொறுத்திரு. எல்லாம் உன்னால் சாத்தியமாகும்" என்றனர்.
*********************************************************************
குறிப்பு:
பகடை ஆட்டம் : இரண்டு பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள்.
பகடை ஆட்டம் நடைபெற்றபோது
யுதிஷ்டிரனுக்கு வயது :76
பீமனுக்கு வயது :75
அர்ஜுனனுக்கு வயது :74
நகுல சகாதேவர்களுகு :73
துரியோதனனுக்கு வயது :75
கர்ணனுக்கு வயது :92
கிருஷ்ணனுக்கு வயது :74
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
மஹாபாரதம் - கால அட்டவணை - 1
மஹாபாரதம் - கால அட்டவணை - 2
*********************************************************************
குறிப்பு:
பகடை ஆட்டம் : இரண்டு பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள்.
பகடை ஆட்டம் நடைபெற்றபோது
யுதிஷ்டிரனுக்கு வயது :76
பீமனுக்கு வயது :75
அர்ஜுனனுக்கு வயது :74
நகுல சகாதேவர்களுகு :73
துரியோதனனுக்கு வயது :75
கர்ணனுக்கு வயது :92
கிருஷ்ணனுக்கு வயது :74
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
மஹாபாரதம் - கால அட்டவணை - 1
மஹாபாரதம் - கால அட்டவணை - 2
![]() |
![]() |
![]() |