The authority of the question is Yudhishthira | Sabha Parva - Section 68 | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
மன்னர்களிடமும், கௌரவர்களிடமும் திரௌபதி கேள்வி கேட்பது; பீஷ்மர் பதில் உரைக்க இயலாது என்றும், இந்தக் கேள்விக்கு பதிலை யுதிஷ்டிரனே சொல்ல வேண்டும் என்றும் சொல்வது...
திரௌபதி சொன்னாள் "மனிதர்களில் மோசமானவனே, தீய மனதுடைய துச்சாசனா சற்று பொறு. உயர்ந்த கடமையான ஒரு செயலை நான் செய்ய வேண்டும். நான் இதுவரை அதைச் செய்யவில்லை. இந்தப் பாவியின் {துச்சாசனனின்} பலம் நிறைந்த கரங்களால் வலுக்கட்டாயமாக இழுக்கப்படுவதால், நான் எனது உணர்வுகளை இழந்தேன். நான் இந்த குருக்களின் சபையில் இருக்கும் மரியாதைக்குரிய பெரியோர்களை வணங்குகிறேன். இதை நான் முன்கூட்டி செய்யாததால் அது எனது தவறாகாது" என்றாள்.
வைசம்பாயனர் சொன்னார், "பாதிக்கப்பட்ட ஆதரவற்ற திரௌபதி, இப்படி நடத்தப்படுவதற்கு உரியவள் இல்லையென்றாலும், முன்பைக் காட்டிலும் அதிக பலத்துடன் இழுக்கப்பட்டு, தரையில் விழுந்து, அந்தக் குருக்களின் சபையில் இப்படி அழுதாள்.
"அந்தோ {ஐயோ}, இதற்கு முன்பு ஒரே ஒரு முறைதான், அதுவும் *சுயம்வரத்தின் போதுதான், சபையில் கூடியிருந்த மன்னர்களால் பார்க்கப்பட்டேன். அதன் பிறகு ஒரு முறை கூட நான் பார்க்கப்படவில்லை. நான் இன்று இந்தச் சபையின் முன்னால் அழைத்து வரப்பட்டிருக்கிறேன். முன்பு அரண்மனையில் இருந்தபோது காற்றும் சூரியனும் கூட கண்டிராத ஒருத்தி, ஒரு கூட்டத்தின் பார்வைக்கு வெளிப்படுத்தப்பட்டாள்.
அந்தோ, அரண்மனையில் இருந்தபோது எவளைக் காற்று தீண்டினால் கூட பாண்டுவின் மகன்களுக்கு துயரத்தைக் கொடுக்குமோ, அவளே இன்று பாண்டவர்களால் துன்பப்பட்டு, இந்தப் பாவியால் பற்றி இழுத்தவரப் பட்டிருக்கிறாள்.
அந்தோ, இந்தக் கௌரவர்கள், இந்த நிலைக்குத் தகாத தங்கள் மருமகள், அவர்கள் முன்பும் பாதிக்கப்படுவதைப் பொறுத்திருக்கின்றனர். காலங்கள் இணைப்பிலிருந்து அப்பாற்பட்டு போனதாகத் தெரிகிறது {விவரீத காலமென்று நினைக்கிறேன் என்று ம.வீ.ரா பதிப்பு சொல்கிறது}. **உயர் பிறப்பு பிறந்தும், கற்புடன் இருந்தும், நான் இந்த பொது சபைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டேன் என்பதைவிட வேறு என்ன துயரம் எனக்கு வேண்டும்? எதற்காக இந்த மன்னர்கள் அறியப்பட்டிருக்கின்றனரோ, அந்த அறம் எங்கே?
பழங்காலத்தின் மன்னர்கள், தாங்கள் மணந்த மனைவிகளை பொது சபைக்கு அழைத்து வருவதில்லை என்று கேள்விப்படுகிறோம். அந்தோ, என்றுமழியாத அந்தப் பழக்கங்களை கௌரவரிடம் இருந்து மறைந்தே போய்விட்டது. இல்லையென்றால், பாண்டவர்களின் கற்புள்ள மனைவியும், பிரிஷாதன் மகனின் {திருஷ்டத்யும்னன்} தங்கையும், வாசுதேவன் {கிருஷ்ணனின்} தோழியுமான நான், இந்தச் சபையின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டது எவ்வாறு?
கௌரவர்களே, நான், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மணந்த மனைவி, இம்மன்னன் {யுதிஷ்டிரன்} பிறந்த அதே புகழ்பெற்ற {க்ஷத்திரிய} குலத்திலேயே நானும் பிறந்தேன். நான் பணிப்பெண்ணா? அல்லது வேறா என்று இப்போது எனக்குச் சொல்லுங்கள். நான் உங்கள் பதிலை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன். குருக்களின் பெயரை அழிக்க வந்த இந்தப் பாதகன் என்னைக் கடுமையாகத் துன்புறுத்துகிறான். கௌரவர்களே, இனிமேலும் என்னால் தாங்க முடியாது. மன்னர்களே, நான் வெல்லப்பட்டேனா, வெல்லப்படவில்லையா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அது என்னவாக இருப்பினும் நான் உங்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்" என்றாள் {திரௌபதி}.
இந்த வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர், "ஓ அருளப்பட்டவளே, அறத்தின் பாதை நுட்பமானது என்று நான் ஏற்கனவே சொன்னேன். இந்த உலகத்தின் சிறந்த ஞானியும் அதை {அறத்தைப்} புரிந்து கொள்வதில் எப்போதும் தோல்வியுறுகிறான். உலகத்தில் பலம் வாய்ந்த மனிதன் எதை அறம் என்று நினைக்கிறானோ, உண்மை வேறாக இருப்பினும், அதையே மற்றவர்களும் அறமாகக் கருதுகின்றனர். ஆனால், பலவீனமான மனிதன் எதை அறமாகக் கருதுகிறானோ அது உயர்ந்த அறமாக இருப்பினும், அதை எள்ளளவும் கருத மாட்டார்கள். ஈடுபட்டிருக்கும் விஷயத்தின் முக்கியத்துவத்தாலும், அதன் சிக்கல் மற்றும் நுட்பமான தன்மையாலும், நீ கேட்கும் கேள்விக்குத் தீர்மானமான பதிலை என்னால் சொல்ல இயலவில்லை.
இருப்பினும், அனைத்துக் குருக்களும் பேராசைக்கும் முட்டாள்தனத்துக்கும் அடிமையாகிவிட்டார்கள் என்பது நிச்சயம். நமது குலத்தின் அழிவு வெகு தூரத்தில் இல்லை. ஓ அருளப்பட்டவளே {திரௌபதியே}, நீ மருமகளாக நுழைந்திருக்கும் குடும்பம் எப்படிப்பட்டதெனில், அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள், எவ்வளவுதான் துன்பத்தால் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் அறத்திலிருந்தும் நெறிகளிலிருந்தும் வழுவுவதில்லை. ஓ பாஞ்சால இளவரசி {திரௌபதி}, நீ இவ்வளவு துயரப்படும்போதும், உனது பார்வை அறத்திலும் அறநெறியிலும் நிறைத்திக்கும் உனது நடத்தை உனக்கு தகுதியுடையதே. அறநெறிகளை அறிந்த துரோணர் மற்றும் இங்கிருக்கும் பல முதியவர்கள், தங்கள் தலையைத் தொங்கப் போட்டு இறந்தவர்கள் போல உயிரற்ற உடலாக அமர்ந்திருக்கின்றனர். இருப்பினும், இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் அதிகாரம் உடையவன் யுதிஷ்டிரன் என்றே எனக்குத் தெரிகிறது. நீ வெல்லப்பட்டாயா வெல்லப்படவில்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவன் அவனே {யுதிஷ்டிரனே}", என்றார் {பீஷ்மர்}.
********************************************************************
********************************************************************
மேலும் விவரங்களுக்கு பார்க்க:
சுயம்வர அரங்கிற்கு வந்தாள் திரௌபதி! - ஆதிபர்வம் பகுதி 187
**உயர் பிறப்பு பிறந்தும்,
பார்க்க:
திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 169
![]() |
![]() |
![]() |