Nala deserted Damayanti | Vana Parva - Section 62 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
நளன் தமயந்திக்கு ஆறுதல் கூறி உறங்க வைத்த்து; அவளிடம் இருந்து பாதி ஆடையை வெட்டி எடுத்துக் கொண்டு, அவளைக் கைவிட்டுச் சென்றது...
நளன் சொன்னான், "நிச்சயமாக உனது தந்தையின் நாடு என்னுடையது போன்றதே. ஆனால், இப்போது கடைநிலையில் இருக்கும் நான் எந்தக் காரணம் கொண்டும் அங்கு செல்ல மாட்டேன். முன்பொரு காலத்தில் உனது இன்பத்தை அதிகரிக்க நான் அங்கு மகிழ்ச்சியுடன் தோன்றினேன். துன்பத்துடன் இருக்கும் நான், இப்போது உன் வருத்தத்தை அதிகரிக்கும்படி அங்கு எப்படிச் செல்வேன்?" என்று கேட்டான்.
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "{தனது மனைவியின்} பாதி உடையால் தன்னை மறைத்துக் கொண்டிருந்த மன்னன் நளன், தமயந்தியிடம் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி அவளுக்கு ஆறுதல் கூறினான். ஒரே ஆடையை உடுத்தியிருந்த இருவரும், அங்குமிங்கும் அலைந்து திரிந்து, பசி மற்றும் தாகத்தால் களைப்படைந்து, கடைசியாக பயணிகளுக்கான ஒரு மண்டபத்தை {சத்திரத்தை} அடைந்தனர்.
அந்த இடத்திற்கு வந்த நிஷாதர்களின் மன்னன் {நளன்}, விதரப்ப்ப நாட்டு இளவரசியுடன் {தமயந்தியுடன்} கீழே வெறுந்தரையில் அமர்ந்தான். தூசி படிந்து அழுக்கடைந்த மெலிந்த ஒரே துணியை அவர்கள் இருவரும் அணிந்திருந்தனர். பெரும் களைப்பால் அந்தத் தரையிலேயே தமயந்தியுடன் அவன் தூங்கிவிட்டான். பெரும் துக்கத்தோடு இருந்த, அனைத்து நற்குறிகளையும் கொண்டு, அப்பாவியாகவும், மென்மையானவளாகவும் இருந்த தமயந்தி, திடீரென ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினாள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அப்படி அவள் நளனுடன் உறங்கிக் கொண்டிருந்த போது, இதயமும் மனமும் கலக்கமடைந்திருந்ததால், நளனால் முன்பு போல அமைதியாகத் தூங்க முடியவில்லை.
நாடிழந்து, நண்பர்களை இழந்து, கானகத்தில் துயர்வாழ்வு வாழ்வதைத் தனக்குள் எண்ணி, "எனது இந்தச் செயலால் என்ன பயன் ஏற்படும்? அப்படிச் செயல்படவில்லையென்றால் என்ன பயன் ஏற்படும்? இப்போது மரணம்தான் எனக்குச் சிறந்ததா? அல்லது நான் எனது மனைவியைக் கைவிட வேண்டுமா? என்னிடம் உண்மையான அர்ப்பணிப்புடன் இருக்கும் அவள், இந்தப் பெரும் துன்பத்தை எனக்காகவே அனுபவிக்கிறாள். என்னிடம் இருந்து பிரிந்தால், அவள் தனது உறவினர்களிடம் செல்ல வாய்ப்பிருக்கிறது. என்மீது கொண்ட அர்ப்பணிப்பால், என்னுடனேயே அவள் தங்கினால், சந்தேகமற அவளைத் துயர் கவ்வும். ஆனால், நான் அவளைக் கைவிட்டால், அவளைத் துயர் கவ்வுவது சந்தேகத்திற்குரியதே. மறுபுறம். அவள் சிலகாலம் மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பும் சாத்தியமில்லாதது இல்லை" என்று நினைத்தான். இதேயே திரும்பத் திரும்ப எண்ணி, திரும்பத் திரும்ப ஆலோசனை செய்து முடிவாக, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தமயந்தியைக் கைவிடுவதே சிறந்த வழி என்று தீர்மானித்தான்.
அவன் {நளன்} மேலும், "உயர்ந்த புகழும், நற்பேறும், தனது கணவனான என்னிடம் அர்ப்பணிப்பும் கொண்ட அவளுக்கு {தமயந்திக்கு}, அவளது சக்தியின் காரணமாக, அவளது வழியில் யாரும் தீங்கை ஏற்படுத்திவிடமுடியாது." என்றும் நினைத்தான். இப்படியே, தமயந்தியுடன் தங்கியிருந்தபோது, தீய கலியால் தாக்குதலுக்குள்ளான அவனது மனம், அவளைக் கைவிடத் தீர்மானித்தது. தனக்கு ஆடையில்லாதிருப்பதையும், அவளுக்கும் ஒரே ஆடையே இருப்பதையும் சிந்தித்து, தனக்காக அதில் ஒரு பகுதியை அடைய, தமயந்தியின் ஆடையைப் பாதியாக வெட்ட எண்ணம் கொண்டான்.
அதன் பிறகு அவன், "எனது அன்புக்குரியவள் {தமயந்தி} காணாமல் {அறியாமல்}, இந்த ஆடையை எப்படிப் பிரிப்பது?" என்று எண்ணினான். இப்படி எண்ணிய அந்த அரசன் நளன் அந்த மண்டபத்தில் மேலும் கீழுமாக நடந்தான். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அங்குமிங்குமாக நடந்த போது, உறையற்ற ஒரு அழகான வாள் அந்த மண்டபத்தில் கீழே கிடப்பதைக் கண்டான். அந்த எதிரிகளை ஒடுக்குபவன், அந்த வாளைக் கொண்டு, அந்தத் துணியின் ஒரு பாதியை வெட்டி எடுத்து, அந்தக் கருவியை {வாளை} வீசி எறிந்து, உணர்வற்று உணங்கிக்கொண்டிருந்த விதரப்ப்பனின் மகளை {தமயந்தியை} விட்டு {கைவிட்டு} வெளியேறினான்.
ஆனால் அவனது இதயத்திடம் தோற்ற நிஷாதர்களின் மன்னன் {நளன்} மீண்டும் மண்டபத்திற்குத் திரும்பிவந்து, தமயந்தியைக் {மீண்டும்} கண்டு, கண்ணீர்விட்டு அழுதான். அவன், "ஐயோ! வாயுத்தேவனோ, சூரியனோ இதற்கு முன்னால் கண்டிராத எனது அன்பானவள், இன்று கேவலமாக வெறுந்தரையில் படுத்து உறங்குகிறாளே. வெட்டப்பட்ட ஆடையுடன், கவனம் சிதறிக் கிடப்பவள் போல இருக்கும் இந்த பிரகாசமான புன்னகை கொண்ட அழகானவள், விழித்தெழும்போது எவ்வாறு நடந்து கொள்வாள்? தனது தலைவனுக்கு {எனக்கு} தன்னை அர்ப்பணித்திருக்கும் பீமனின் இந்த அழகான மகள் {தமயந்தி}, என்னைப் பிரிந்து, விலங்குகளும், பாம்புகளும் வசிக்கும் இந்த ஆழ்ந்த கானகத்தில் எப்படி பயணம் செய்வாள்? ஓ அருளப்பட்டவளே, ஆதித்தியர்களும், வசுக்களும், மருதர்களுடன் கூடிய அசுவினி இரட்டையர்களும் உன்னைக் காக்கட்டும். உனது அறமே உனக்குச் சிறந்த பாதுகாவலாக இருக்கும்" என்று சொன்னான்.
பூமியில் ஒப்பற்ற அழகுடைய தனது அன்பான மனைவியைப் பார்த்து இப்படிச் சொன்ன நளன், கலியால் அறிவிழந்து அங்கிருந்து செல்ல முற்பட்டான். கலியால் ஒரு பக்கமும், காதலால் ஒரு பக்கமும் இழுக்கப்பட்ட மன்னன் நளன், மீண்டும் மீண்டும் புறப்பட்டு, மீண்டும் மீண்டும் மண்டபத்திற்குத் திரும்பினான். அந்த இழிவடைந்த மன்னனின் இதயம் இரண்டாகப் பிளந்திருந்தது போலத் தோன்றியது. ஊஞ்சல் போல அவன் மண்டபத்தை விட்டு வெளியேயும் உள்ளேயும் திரும்பித் திரும்பி நடந்தான். நீண்ட நேரம் பரிதாபகரமாக அழுது, கலியால் உணர்விழந்து வாயடைந்து போன நளன், தூங்கிக் கொண்டிருக்கும் தனது மனைவியைக் கைவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். கலியின் தொடுதலால் அறிவிழந்து, தனித்த காட்டில் தனது மனைவியைத் தனியாக விட்டு, தனது நடத்தையைக் குறித்து எண்ணி துயரத்துடன் சென்றுவிட்டான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.