Huntsman's lust on Damayanti | Vana Parva - Section 63 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
துயில் களைந்த தமயந்தி நளனில்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து அழுவது; நளனைத் தேடி காட்டில் அலையும்போது தமயந்தியை மலைப்பாம்பு வளைத்துக் கொள்வது; எங்கிருந்தோ வந்த ஒரு வேடன் தமயந்தியைக் காப்பது; தமயந்தியின் அழகைக் கண்டு மயங்கி வேடன் அவளை அடைய விரும்புவது; தமயந்தி தனது சாபத்தால் வேடனைக் கொன்றது...
பிருகதஸ்வர் சொன்னார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி நளன் சென்ற பிறகு, புத்துணர்ச்சி பெற்ற அழகான தமயந்தி, அந்தத் தனிமையான கானகத்தில் மருட்சியுடன் எழுந்தாள். ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தனது தலைவனான நிஷாதனைக் {நளனைக்} காணாததால் துயரும் வலியும் கொண்டு, பயத்தால், "ஓ தலைவா! ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதி! ஓ கணவா, என்னைக் கைவிட்டீரா? இந்தத் தனிமையான இடம் எனக்குப் பயமாக இருக்கிறது. ஓ நான் கெட்டேன், நான் தொலைந்து போனேன். ஓ சிறப்புமிக்க இளவரசே, நீர் அறம் அறிந்து உண்மை பேசுவபவர் ஆயிற்றே. அப்படியிருக்கும்போது, எனக்கு வாக்கு கொடுத்துவிட்டு, உறங்கிக் கொண்டிருந்த என்னை இக்கானகத்தில் கைவிடலாமா? உமக்காகத் தன்னை அர்ப்பணித்த உமது மனைவியை நீர் ஏன் கைவிட்டீர்? நான் உமக்கு என்ன தீங்கிழைத்தேன்? மற்றவர்கள் அல்லவா உங்களுக்கு தீங்கிழைத்தனர்?
ஓ மனிதர்களின் மன்னா {நளரே}, லோகபாலர்களின் முன்னிலையில் நீர் என்னிடம் பேசிய வார்த்தைகளுக்கு உண்மையாக நீர் நடந்து கொள்வதே தகும். ஓ மனிதர்களில் காளையே {நளரே}, மனிதர்கள் அவர்களுக்குக் குறித்த நேரத்தில்தான் மரணிப்பார்கள் என்பதால்தான் நீர் கைவிட்டபிறகும் உமது மனைவி வாழ்கிறாள்.
ஓ மனிதர்களில் காளையே, இந்த கேலி போதும்! ஓ கட்டுப்படுத்தப்பட முடியாதவரே {நளரே}, நான் பயங்கரமான அச்சத்தில் இருக்கிறேன். ஓ தலைவா, உம்மை வெளிக்காட்டும். நான் உம்மைக் காண்கிறேன்! ஓ மன்னா {நளரே}, நான் உம்மைக் காண்கிறேன்! ஓ நிஷாதரே {நளரே}, நீர் அந்தப் புதர்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது தெரிகிறது. ஏன் எனக்கு மறுமொழி கூறமலிருக்கிறீர்? ஓ பெரும் மன்னா {நளரே}, புலம்பிக்கொண்டிருக்கும் என்னை இந்த அவலநிலையில் கண்டும், ஓ மன்னா நீர் என்னை அணுகி ஆறுதல் கூறாமல் இருந்து கொடூரமான செயலைச் செய்கின்றீர். நான் எனக்காகக் கவலைப்படவில்லை, எதற்காகவும் கவலைப்படவில்லை. ஓ மன்னா {நளரே}, நீர் எப்படி தனிமையில் நாட்களைக் கடத்துவீர் என்றே நான் கவலைகொள்கிறேன். மாலைப்பொழுதில் பசியாலும், தாகத்தாலும், களைப்பாலும் ஒடுக்கப்பட்டு, மரத்திற்கடியில் இருக்கும்போது, என்னைக் காணாமல் எப்படி நீர் இருந்து கொள்வீர்?" என்று உரக்கக் கதறினாள்.
பெருத்த வேதனையுடனும், எரியும் துயருடனும் இருந்த தமயந்தி, துன்பத்துடன் அழுதுகொண்டே அங்கும் இங்கும் ஓடினாள். இப்போது அந்த ஆதரவற்ற இளவரசி எழுந்தாள், இப்போது மயங்கி கீழே மூழ்கினாள். இப்போது பயத்தால் சுருங்கினாள். இப்போது அழுது சத்தமாக ஒப்பாரி வைத்தாள். கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த பீமனின் மகள் {தமயந்தி}, கடுந்துயரத்தால் எரிந்து, நீண்ட பெருமூச்சுகளை விட்டபடி, மயங்கிய நிலையில் அழுது, "எதன் {being = பூதம்} சாபத்தால் பீடிக்கப்பட்ட நிஷாதர் இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறாரோ, அது {அந்தப் பூதம்} எங்களை விட அதிக துன்பத்தைத் தாங்கட்டும். பாவமற்ற இதயம் கொண்ட நளருக்கு இந்த நிலையைக் கொடுத்த அந்தத் தீயது {தீய பூதம்}, இதைவிட அதிகமான தீங்குகளைக் கொண்ட மோசமான வாழ்வை வாழட்டும்." என்று சொன்னாள். அந்த ஒப்பற்ற மன்னின் {நளனின்} பட்டத்து ராணி இப்படியே புலம்பியபடி, இரைதேடும் விலங்குகள் வசிக்கும் அந்தக் காடுகளில் தனது தலைவனைத் தேடத் தொடங்கினாள். அந்த பீமனின் மகள் {தமயந்தி} அழுதுகொண்டே அங்குமிங்கும் அலைந்து, பைத்தியக்காரி போல, "ஐயோ! ஐயோ! ஓ மன்னா!" என்று கதறினாள். பெண் கடற்புறா {குரரி பறவை} போல சத்தமாக அழுது, துயரடைந்து, தொடர்ச்சியாக இடைவிடாத பரிதாபகரமான ஒப்பாரியிட்டபடி ஒரு பெரும் உருவம் கொண்ட பாம்பின் அருகில் வந்தாள்.
பசித்திருந்த அந்தப் பெரும்பாம்பு, தனது அருகில் வந்து, தனது எல்லைக்குள் இருந்த பீமனின் மகளைத் {தமயந்தியைத்} திடீரெனப் பற்றியது. துயரம் நிறைந்து பாம்பின் சுருளுக்குள் மடிந்து இருந்த போதும் அவள் தனக்காக அழாமல் அந்த நைஷதனுக்காகவே {நளனுக்காகவே} அழுதாள். அவள், "ஓ தலைவா, இந்தக் கைவிடப்பட்ட வனத்தில் யாருடைய பாதுகாப்புமற்ற நான் இந்தப் பாம்பினால் கைப்பற்றப்பட்ட பின்பும், நீர் ஏன் என்னை நோக்கி விரைந்து வராமல் இருக்கிறீர்? ஓ நைஷதரே {நளரே}, நீர் என்னை நினைக்கும்போது இது எப்படி சரியா இருக்கும்? ஓ தலைவா, இன்று இந்தக் கானகத்தில் என்னை ஏன் கைவிட்டுச் சென்றீர்? இந்த நிலையில் இருந்து விடுபட்டு, நீர் உமது மனம், உணர்வுகள், செல்வங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெறும்போது, என்னைக் குறித்து சிந்தித்தால் உமக்கு எப்படி இருக்கும்? ஓ நைஷாதரே {நளரே}, ஓ பாவமற்றவரே, நீர் சோர்வுற்று, பசித்து, மயங்கி வரும்போது, ஓ மன்னர்களில் புலியே, உமக்கு யார் ஆறுதல் கூறுவார்?" என்று சொன்னாள்.
அவள் இப்படி அழுது கொண்டிருக்கும்போது, ஆழ்ந்த கானகத்தில் உலவிக் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட வேடன், அவளது புலம்பல்களைக் கேட்டு, அந்த இடத்திற்கு விரைந்து வந்தான். பாம்பின் சுருளுக்குள் இருந்த அந்த அகன்ற கண் கொண்டவளைக் கண்டு, அதனிடம் {பாம்பிடம்} விரைந்து, அதன் தலையைத் தனது கூரிய ஆயுதத்தால் வெட்டி எறிந்தான். அந்த ஊர்வன விலங்கை {பாம்பைச்} சாகடித்து தமயந்தியை விடுவித்தான் அந்த வேடன். அவள் உடல் மீது நீர்த்தெளித்து, அவளுக்கு உணவு கொடுத்து ஆறுதல் சொன்னான். ஓ பாரதா {யுதிஷ்டிரா} அவன் அவளிடம், "ஓ அழகிய இளம் மானின் கண்களைக் கொண்டவளே, யார் நீ? நீ ஏன் இந்த கானகத்திற்கு வந்தாய்? ஓ அழகானவளே, நீ எப்படி இந்தப் பெருந்துயரத்தில் சிக்கினாய்?" என்று கேட்டான்.
ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா} இப்படி அந்த மனிதனால் அணுகி அழைக்கப்பட்ட தமயந்தி, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அவனிடம் நடந்தது அத்தனையும் சொன்னாள். அழகிய களங்கமற்ற அங்கங்களுடனும், தேன் போன்ற இனிய பேச்சுடனும், வளைந்த இமை முடிகளுடனும், முழு நிலவைப் பிரதிபலிக்கும் முகத்துடனும், உருண்ட இடையுடனும், பருத்த மார்புகளுடனும், அரை ஆடையிலும் இருந்த அந்த அழகிய பெண்ணைக் {தமயந்தியைக்} கண்ட வேடன் ஆசையால் பீடிக்கப்பட்டான். காமதேவனால் தாக்குண்ட அந்த வேடன் வெற்றிக்குரலுடனும், மென்மையான வார்த்தைகளுடனும் அவளிடம் {தமயந்தியிடம்} ஆறுதலாகப் பேசினான்.
கற்புடைய அழகான தமயந்தி, அவனைக் கண்டு அவனது நோக்கத்தை உணர்ந்ததும், அவள் சீற்றத்துடன் கூடிய கோபத்தால் நிறைந்து, அந்தக் கோபத்தால் எரிந்து கொண்டிருந்தாள். ஆனால், அந்த தீய மனம் படைத்த இழிந்தவன் {வேடன்}, எரியும் ஆசையால் கோபமடைந்து, பலத்தைப் பயன்படுத்தினான். அவள் சுடர்விட்டெரியும் தழலென வெற்றிகொள்ள முடியாதவளாக இருந்தாள். நாட்டை இழந்து, கணவனையும் இழந்து இருந்ததால் ஏற்கனவே துயரத்தில் இருந்த தமயந்தி, சொல்ல முடியாத அந்தத் துயரத்தின் போது, "நான் நைஷதரைத் {நளரைத்} தவிர வேறு எவரையும் நினைத்தவளில்லை. ஆகையால் குறுகிய மனம் கொண்டு துரத்தும் இந்தக் இழிந்தவன், உயிரற்றவனாக விழட்டும்" என்று சபித்தாள். அவள் அப்படிச் சொன்னவுடன், அந்த வேடன், நெருப்பால் உட்கொள்ளப்பட்ட மரமென உயிரற்று தரையில் விழுந்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.