Nala went nude | Vana Parva - Section 61 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
நளன் சூதில் தோற்று, வனத்திற்குச் செல்வது; பசியால் வாடுவது; ஆடைகளை இழப்பது; தனது மனைவியான தமயந்தியை தெற்கு நோக்கிச் செல்லுமாறு சொல்வது; தமயந்தி மறுப்பது...
பிருகதஸ்வர் சொன்னார், " வார்ஷ்ணேயன் {தேரோட்டி} சென்ற பிறகு, நீதிமானான நளனிடமிருந்து நாட்டையும் எஞ்சியிருந்த செல்வங்களையும் வென்றான் புஷ்கரன். ஓ மன்னா {யுதிஷ்டிரா} தனது நாட்டை இழந்த நளனிடம், புஷ்கரன் சிரித்துக் கொண்டே, "விளையாட்டு தொடரட்டும். ஆனால் இப்போது உன்னிடம் பந்தயப்பொருள் என்ன இருக்கிறது. தமயந்தி மட்டுமே இருக்கிறாள்; மற்ற யாவையும் நான் வென்றுவிட்டேன். நல்லது என்று நீ விரும்பினால், தமயந்தியை இப்போது பந்தயப் பொருளாக வை" என்றான்.
புஷ்கரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த அறம்சார்ந்த மன்னன் {நளன்}, கோபத்தால் தனது இதயம் வெடித்துவிடுவது போல உணர்ந்து, ஒரு வார்த்தையும் பேசாதிருந்தான். மனம் நொந்து புஷ்கரனைப் பார்த்த பெரும் புகழ்வாய்ந்த மன்னன் {நளன்}, தனது உடலில் இருந்த அனைத்து ஆபரணங்களையும் கழற்றினான். ஒற்றையாடையில் உடலை மூடி, அனைத்து செல்வங்களையும் துறந்து, நண்பர்களின் துயரத்தைப் பெருக்கும்வகையில், வெளியேறினான் மன்னன் {நளன்}. அவன் அப்படி வெளியேறும்போதும், தமயந்தியும், ஒற்றையாடை உடுத்தி, அவன் பின்னால் தொடர்ந்து சென்றாள்.
புறநகருக்கு வந்த நளன் அங்கே தனது மனைவியுடன் மூன்று இரவுகள் தங்கினான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நளன் மீது கவனம் செலுத்தும் எவனும் கொல்லப்படுவான் என்று நகரம் முழுவதும் பிகடனம் செய்தான் புஷ்கரன். புஷ்கரனின் இவ்வார்த்தைகளாலும், நளன் மீது அவன் {புஷ்கரன்} கொண்டிருந்த விரோத மனப்பான்மையை அறிந்ததாலும், ஓ யுதிஷ்டிரா, அக்குடிமக்கள் அவனுக்கு எந்த விருந்தோம்பலையும் செய்யவில்லை. அவன் விருந்தோம்பலுக்குத் தகுந்தவன் என்றாலும் அவனை யாரும் கருதிப் பார்க்காததால், நளன் நகரத்திற்கு வெளியே புறநகரில் நீரை மட்டும் உண்டு மூன்று இரவுகளைக் கழித்தான். பசியால் துன்புற்ற அம்மன்னன் {நளன்}, பழங்களையும், கிழங்குகளையும் தேடிச் சென்றான். தமயந்தியும் அவனைப் பின்தொடர்ந்தாள்.
பட்டினியால் துயரம் கொண்ட நளன், பல நாட்களுக்குப் பிறகு தங்க நிறத்தாலான சிறகுகள் கொண்ட சில பறவைகளைக் கண்டான். பிறகு அந்த நிஷாதர்களின் பலம் வாய்ந்த தலைவன் {நளன்} தனக்குள்ளேயே, "இவையே {பறவைகளே} எனது இன்றைய உணவும் செல்வமும் ஆகும்" என்று நினைத்து, தான் அணிந்திருந்த ஆடையைக் கொண்டு அவற்றை மூடினான். அப்போது அந்தப் பறவைகள் வானத்தில் எழுந்தன. துயரத்துடன் நிர்வாணமகாக தரையைப் பார்த்துக் கொண்டு நின்ற நளனைக் கண்டு அந்த விண்ணதிகாரிகள் {பறவைகள்}, "ஓ சிறுபுத்தி கொண்டவனே {நளனே}, நாங்களே அந்தப் பகடைக்காய்கள். ஆடைகளுடன் கூட நீ செல்லக்கூடாது என்று விரும்பிய நாங்கள், உனது உடையை எடுத்துச் செல்லவே வந்தோம்" என்றன.
தான் ஆடையற்றிருப்பதையும், பகடைகள் (தனது ஆடையுடன்) சென்றுவிட்டதையும் அறிந்த அறம்சார்ந்த நளன், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தமயந்தியிடம், "ஓ களங்கமற்றவளே, நான் யாருடைய கோபத்தால் எனது நாட்டை இழந்தேனோ, யாருடைய ஆதிக்கத்தால் துயரத்திற்கும் பசிக்கும் ஆளானேனோ, யாரால் நிஷாதர்களிடம் இருந்து விருந்தோம்பலையும் வாழ்வாதாரத்தையும் நான் பெறமுடியவில்லையோ, ஓ மருட்சியுடையவளே {தமயந்தி}, அவை பறவைகளின் உரு கொண்டு எனது ஆடைகளை எடுத்துச் சென்றுவிட்டன. இந்தக் கடும் விபத்தில் வீழ்ந்து, துயரத்தால் பீடிக்கப்பட்டு, உணர்வுகளற்று இருக்கும் நான் உனக்குத் தலைவனாக இருக்கிறேன். ஆகையால், உனது நன்மைக்காக நான் பேசும் வார்த்தைகளைக் கேள்.
இந்தப் பல சாலைகள், அவந்தி தென்னக நாடுகளுக்கு வழிகாட்டுகின்றன. அவந்தி நகரத்தையும் ரிக்ஷவான் என்ற மலையையும் தாண்டிப் போகின்றன. இதுவே விந்தியம் என்று அழைக்கப்படும் பெரும் மலை, {இது} கடலைநோக்கி ஓடும் இந்த பயோஷ்ணி ஆறு, இங்கே துறவிகளின் ஆசிரமங்களும், பலதரப்பட்ட கனிகளும், கிழங்குகளும் இருக்கின்றன. இந்தச் சாலை விதரப்ப நாட்டுக்கு செல்கிறது. அந்தச் சாலை கோசல நாட்டிற்கு செல்கிறது. தெற்கே செல்லும் இந்த சாலைகளுக்கு அப்பால் தென்னகம் {தென்நாடு} இருக்கிறது" என்றான். இப்படி பீமனின் மகளிடம் {தமயந்தியிடம்} பேசிய துயர் நிறைந்த நளன், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தமயந்தியிடம் திரும்பத் திரும்ப இந்த வார்த்தைகளைப் பேசினான்.
அதன்பிறகு துயரத்தால் நிறைந்து, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் தமயந்தி அந்த நிஷாதனிடம் {நளனிடம்} பரிதாபகரமாக, "ஓ மன்னா, உமது நோக்கத்தை நினைத்து எனது இதயம் நடுங்குகிறது, எனது உறுப்புகள் அனைத்தும் தளர்கின்றன. நீர் உமது நாட்டை இழந்து, செல்வங்களை இழந்து, ஆடையற்று, பசியால் தேய்ந்து, சிரமப்படும் போது, உம்மை இந்தத் தனிமையான கானகத்தில் எப்படி விட்டுச் செல்வேன்? ஆழ்ந்த கானகத்தில், களைப்புடனும், பசியால் பீடிக்கப்பட்டும், உமது பழைய அருளை நினைவுகூரும் போது, ஓ பெரும் ஏகாதிபதியே {நளரே}, நான் உமது களைப்பை நீக்கி ஆறுதலளிப்பேன். ஒவ்வொரு துயருக்கும் மனைவிக்கு இணையான மருந்து வேறில்லை என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். ஓ நளரே, அந்த உண்மையைத் தான் நான் உம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்றாள் {தமயந்தி}.
தனது ராணியின் {தமயந்தியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட நளன், "ஓ கொடியிடையுடைய தமயந்தி, எல்லாம் நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. துயரத்தில் இருக்கும் மனிதனுக்கு மனைவிக்கு இணையான நட்போ மருந்தோ கிடையாதுதான். நான் உன்னைக் கைவிட முயலவில்லை. ஆகையால், ஓ மருட்சியுடையவளே, உனக்கு ஏன் இந்த அச்சம்? ஓ களங்கமற்றவளே, நான் என்னைக் கைவிட்டாலும் விடுவேனே, உன்னைக் கைவிடேன்" என்றான்.
பிறகு தமயந்தி, "ஓ பெரும் பலம்வாய்ந்த மன்னா {நளரே}, நீர் என்னைக் கைவிட நினைக்கவில்லை என்றால், விதரப்ப நாட்டிற்குச் செல்லும் வழியை நீர் எனக்கு ஏன் சுட்டிக்காட்டுகிறீர்? ஓ மன்னா {நளரே}, நீர் என்னைக் கைவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன். ஆனால், ஓ பூமியின் தலைவா, உமது மனம் தடுமாறுவதைக் கருத்தில் கொண்டே நீர் என்னைக் கைவிடுவீர் என எண்ணுகிறேன். ஓ மனிதர்களில் சிறந்தவரே, நீர் அவ்வழியை எனக்குத் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டுவதால், ஓ தேவர்களைப் போன்றவரே {நளரே}, எனது துயரத்தை அதிகரிக்கிறீர். எனது உறவினர்களிடம் நான் செல்ல வேண்டும் என்பது உமது நோக்கமாக இருந்தால், அது உமக்கு திருப்தியை அளிக்கும் என்றால், நாம் இருவரும் சேர்ந்தே விதரப்ப்ப நாட்டிற்கு செல்வோம். ஓ மரியாதைகள் கொடுப்பவரே, அங்கே விதர்ப்ப நாட்டு மன்னர் நம்மை மரியாதையுடன் வரவேற்பார். அவரால் மதிக்கப்பட்டு, ஓ மன்னா, நீர் நமது இல்லத்தில் மகிழ்ச்சியாக வாழலாம்" என்றாள் {தமயந்தி}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.